சங்கரபாண்டி பனிமலரின் கழுத்தில் வலுக் கட்டாயமாக தாலி கட்ட முயன்றான்.
மலரோ அருகில் இருந்த குத்து விளக்கால் அவன் தலையிலேயே அடித்து விட்டாள்.
அடித்ததில் தலையை பிடித்து கொண்டு சரிந்தவன் சற்று சுதாரித்து மலரை பிடிக்க , அவளோ அவனது குரல்வளையை இறுக்கி பிடித்திருந்தாள்.
அவனோ தலையை பிடிக்கவா இல்லை, அவளது கையை விலக்கவா, என்று புரிந்திடாமல் கழுத்தை நெரித்த நெரியில் விழி பிதுங்கி நிற்க அந்த இரு பெண்களும் மலரை இழுக்க , அவளோ வெறித்தனமாக பிடித்திருக்க , சங்கரனும் , முத்துலெட்சுமியும் இழுக்க ஓடி வர மலர் ஆங்காரமாக கத்தினாள்.
சிவா அரக்க பரக்க ஓடி வந்தவன் கதவை பட்டென்று திறக்க, அவன் கண்ட காட்சியில் உறைந்தேப் போனான்.
அவன் வந்ததை கண்டு கொண்டவள் “சக்தி “என்று அலற, அவனோ சுயம் பெற்று அவளிடம் ஓடி வந்தவன் ,அந்த இரு பெண்களையும் தள்ளி விட்டான்.
“டேய் வெளியே போடா… மலர் நீ இப்ப மாப்பிள்ளையை விடப் போறியா இல்லையா” என்று சங்கரன் கத்த, அவளோ எரிச்சலாக அவரை பார்த்து விட்டு .,”சக்தி ” என்றாள்.
“பனி மா நீ அவனை விடு… நான் பார்த்துக்கிறேன்” என்றதும் அவளோ “சக்தி என் முந்தானையில் இருக்க தாலியை எடுத்து “என்றதும்
“பனி…!! “என்று சிவா சுருதி குறைந்த குரலில் அழைக்க
அவளோ “சொன்னதை செய் சக்தி, இல்ல இனி உனக்கு இந்த பனிமலர் இல்லை “என்றாள் அழுத்தமாக.
பனிமலரின் சேலை முந்தானையில் இருந்து தாலியை எடுத்தவன் அப்படியே நிற்க .,”அதை என் கழுத்தில் கட்டு சக்தி…. ஐயரே மந்திரத்தை சொல்லுங்க”என்றதும் ஐயரோ தன்னிச்சையாக மந்திரத்தை சொல்ல மலரோ அதுவரைக்குமே சங்கரபாண்டியின் கழுத்தைப் பிடித்து இருந்தவள் விடவே இல்லை.
அதற்குள் சிவாவின் பெற்றோர் , செண்பகவல்லிஆச்சி ,
பொன்னர் ,வெற்றி ,வீரமலை ,என ஒரு பட்டாளமே வந்து விட்டது.
பொன்னுசாமி ஓடி வந்தவர் .,”ஆயா விடுடா, விடுடா இனிமே நாங்க பார்த்துக்கிறோம் டா நீ விடு பொருவே “என்று கெஞ்சவும் அவனை விடுவித்தாள்.
சங்கரபாண்டி மயங்கி சரிந்திட ,கவுன்சிலர் ராஜேந்திரனின் மனைவி அவனை தண்ணீர் தெளித்து எழுப்பி கொண்டிருந்தார்.
“வெற்றி போலீசுக்கு ஃபோன் பண்ணுய்யா…” என்றவர் சங்கரனிடம் திரும்பி.,”இதுக்கு தான் நீ பம்மிக்கிட்டு அலைஞ்சியா ம்ம்ம்…. நீயெல்லாம் ஒரு அப்பன்… அந்தப் புள்ளைக்கு இதுவரை ஏதாவது நல்லது கெட்டது செஞ்சிருப்பியா நீ… இப்ப இந்த கல்யாணத்தை மட்டும் எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு பண்ண வந்த… “என்று பொன்னுசாமி திட்ட ,
சங்கரனோ அப்போதும் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளாது.,”என்ன நான் நல்லது கெட்டது செய்யலையா மலரு கூட நான் இல்லையே தவிர … மலர் படிப்பு, காதுகுத்து, ருதுவானது , எல்லாத்துக்கும் நான் தானே பணம் தந்தேன். ” என்று சொல்ல முத்துலெட்சுமிக்கு முகம் வெளிறியது.
“எதெ எது…?நீ பணம் தந்தியா… நல்லா தந்திருப்பியே நீயி.,நீயும் தந்திருப்ப , உன் பொண்டாட்டியும் தர விட்டு இருக்கும்… இதுவரை மலர் படிச்சது, வளர்ந்தது எல்லாம் செண்பகவல்லி அத்தையோட உழைப்பில் தான்… ஒரு பைசா உன் கிட்ட இருந்து அவங்க வாங்க கிடையாது தெரிஞ்சுக்க. உன் பொண்டாட்டி ,உன் வீட்டில் என்னப் பண்றான்னு கூட தெரியாமல் இத்தனை வருஷம் வாழ்ந்த உன் மேல எனக்கு பரிதாபம் தான் வருது… வேற என்னத்த சொல்றது நான்..? “என்றதும்… சங்கரனோ அடிபட்ட பார்வை பார்த்தார் முத்துலெட்சுமியை.
முத்துலெட்சுமியோ .,”என்ன என்னைப் பார்க்குறிங்க…!! நான் எதுக்கு எவளோ பெத்த புள்ளைக்கு பணம் தரணும்… இந்த வீட்டில் உங்க உழைப்பு மட்டும் கிடையாது என் நிர்வாகத் திறமையும் கலந்திருக்கு அதனால இங்க இருக்கிற பணத்தை யாருக்கு தரணும் யாருக்கு தரக் கூடாது ன்னு நான் தான் முடிவு பண்ணுவேன் “என்றார் திமிராக.
“ச்சே நீயெல்லாம் ஒரு பொம்பளை” என்று திட்டி விட்டு .,”மலரு ஆயா நீ வாடா போகலாம்… டேய் சிவா பிள்ளையை கூட்டிக்கிட்டு வாடா , வந்து கோவில்ல தாலி கட்டு… இனி அவ உன் பொண்டாட்டியா, என் வூட்டு மருமவளா தான் இருக்கணும்… அப்புறம் எவன் வர்றான்னு நானும் பார்க்கிறேன்… “என்று சித்திரை செல்வி சொல்ல, அவனோ சற்று தயங்கியபடி “ம்மா… நான் இப்ப எப்படிம்மா ??”என மலர் பேசியதை மனதில் வைத்து கொண்டு சொல்ல மலருக்கு ஒரு புறம் மகிழ்வாக இருந்தது. தன் பேச்சை இவ்வளவு தூரம் மதிக்கிறானே என்ற கர்வம் அவளிடத்தில்.
முத்து லெட்சுமி வேகமாக.,”ம்ம்ம் ம்ம்ம் தாலி கட்டுப்பா… நீ தாலி கட்டு…. ஏய் மலர் நான் சொன்ன மாதிரியே ஒண்ணுமில்லாத வெறும்பய வெட்டிப்பயலை தான் டி நீ கட்டிக்கப் போற “என்று ஆங்காரமாக சொல்லியவரை அழுத்தமாக பார்த்து விட்டு.,”நான் அன்னைக்கு சொன்னதை தான் இன்னைக்கும் சொல்றேன்… ஒண்ணு அவனை பெரிய ஆளா ஆக்கிட்டு கட்டிப்பேன், இல்லையா கல்யாணம் பண்ணிக்கிட்டு பெரிய ஆளா மாத்துவேன்… இது என் சவால் உன் கிட்ட “என்றாள்.
“நீ பேசுடி பேசு …. என்னைக்கும் வெறும் பய பேச்சு அம்பலத்தில் ஏறாதுடி… இருக்கிறவங்க பேச்சு தான் சபைக்கு ஏறும்”என்றவர்., “இப்ப நீ இருக்கியே அந்த வீடு அதை காலிப் பண்ணிட்டு போற… என்ன முழிக்குறவ…? அது என் பேருல இருக்கு… அப்புறம் ஏன் இத்தனை நாளும் உன்னை அங்க விட்டு வச்சேன் னு பார்த்தியா… உன்னால இவருக்கு கவுன்சிலர் பதவி கிடைக்கும் னு தான்…. அது மட்டுமில்லாமல் நான் அந்த வீட்டை பெருசா எடுத்துக்கலை ஆனா இப்ப எடுத்துக்க தோணுது…. என் கனவே பலிக்காத போது நான் ஏன் அந்த வீட்டை விட்டு கொடுக்கணும்?”என்றார் முத்துலெட்சுமி.
மலருக்கு அந்த வீடு தனக்கு சொந்தமில்லைனு எனும் போதே கண்ணீர் வந்து விட்டது… இத்தனை பெரிய சொத்துக்களை விட்டு கொடுத்தவளால் அந்த வீட்டை விட்டு தர இயலவில்லை… எதுவும் பேசிடவும் இயலவில்லை அவளால்.
ஆனால் முத்து லெட்சுமியே அதற்கும் வழி வகுத்தார்.
“அது உங்க ஆத்தா இருந்த வீடு இல்ல… ம்ம்ம்… சரி போனா போவுது எனக்கு இவ்வளவு சொத்துக்களையும் விட்டு தந்திருக்கியே , அதனால நானும் உனக்கு ஒரு வாய்ப்பு தரேன்… உனக்கு அந்த வீடு வேணும்னா அஞ்சு லட்ச ரூபாயை கொடுத்துட்டு அந்த வீட்டை எடுத்துக்க… அதையும் நீ தரக் கூடாது… இந்தா நிற்கிறானே வெட்டிப்பய… அவனை சம்பாதிச்சு தர சொல்லு, அப்புறம் நான் அந்த வீட்டை உனக்கு தரேன்… நல்லா நெனப்பு வச்சுக்க ஒரு ரூபாயா இருந்தாலும் அவன் தான் சம்பாதிச்சு தான் கொடுக்கணும் சம்மதம் என்றால் அந்த வீடு உனக்கு இல்லாட்டி வழக்கம் போல நாடோடியா மறுபடியும் தூத்துக்குடி போ இல்ல எங்க வேணா போடி”என கொஞ்சமும் இரக்கமின்றி பேசினார் முத்துலெட்சுமி.
சங்கரன் ஏதோ சொல்ல வரும் முன்பே அவரை பார்வையால் அடக்கியவர்… “இதோப் பாருங்க நீங்க இதுக்கு தடை சொல்றதா இருந்தா நானும் என் மகளும் எங்க சாவுக்கு காரணம் நீங்க தான்னு எழுதி வச்சுட்டு சாவோம்”என்றார். சங்கரன் அடுத்து வாயை திறக்கவில்லை.
பொன்னரோ.,”நீ என்ன ம்மா என் பேத்திக்கு வீடு தர்றது… என் பேரில் இருக்கிற அத்தனையும் அவளுக்கு தான் அதுல அரண்மனை மாதிரி வீடு கட்டி தந்துட்டு போறேன்… நீ வா பொருவே, இந்த வூட்ல இதுக்கு மேல நாம இருந்தா நமக்கு தான் அசிங்கம் “என மலரை அழைத்தார்.
சிவாவோ மலர் கையைப் பிடித்தவன்… “இல்ல தாத்தா அது என் பொண்டாட்டியோட அம்மா வாழ்ந்த வீடு, என் பனி அங்க இத்தனை நாளும் இருந்த வீடு, அதை யாருக்கும் நான் விட்டுத் தர மாட்டேன்… என் சொந்த உழைப்பு ல தானே வாங்கணும் வாங்குறேன்… வாங்கித் தந்துட்டு நான் அவளோட அதே வீட்டில் வாழ்ந்துக்கிறேன் “என்றான் அதிரடியாக.
மலர் பெருமை பொங்க அவன் முகம் பார்த்தவள் முத்துலெட்சுமியிடம் திரும்பி “எண்ணி ரெண்டே வருஷம்… அந்த வீடு என் கையில்”என்று விட்டு சிவாவின் கையை பிடித்துக் கொண்டு வெளியேறினாள்.
வெற்றி வேகமாக.,”பாட்டா இவனை என்ன பண்றது??” என்று கேட்க ,
“அந்த நாய் இனிமே கண்ணுல தென்பட்டா எளநி சீவுற மாதிரி அவன் கழுத்தை சீவிட வேண்டியது தான் யா… இந்த உயிர்பிச்சை கூட என் பேத்தி பேரு ஊருக்குள்ள கெட்டுப் போயிடக் கூடாதுன்னு தான் யா இல்ல… இப்ப இருக்கிற வெறிக்கு இவனை கழுத்தறுத்து போட்டுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்… விட்டுடு அந்த நாயை…. டேய் இதான் கடைசி உனக்கு, இனிமே மலரு பக்கம் தலையை வைக்கிறதை பார்த்தேன்… நீ தொலைஞ்ச “என்று மிரட்டி விட்டு சென்றார் பொன்னர்.
சங்கரபாண்டிக்கு அடி வாங்கிய மயக்கம் கிறுகிறுப்பை உண்டாக்க, அதோடு தட்டு தடுமாறி எழுந்து சங்கரனிடம் சென்றவன்… “நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது எனக்கு இப்ப கல்யாணம் நடந்தாகணும்… “என்றான் பொன்னரின் பேச்சை பொருட்படுத்தாது .
அவரோ.,” மலர் தான் ஒத்துக்காம போயிடுச்சே “என்று புரியாமல் கேட்டார்.
சங்கரபாண்டி சற்றும் யோசித்திடாது அங்கே இதுவரை நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வடிவரசியை கை காட்டினான்.
ஏனெனில் நேற்று வந்தவனின் பார்வையில் பட்ட வடிவரசியை இரண்டாவதாக திருமணம் முடிக்க எண்ணி இருந்தவன் தானே… மலர் அளவுக்கு இல்லையென்றாலும் வடிவரசியும் வடிவமான அழகி தான்… நிறத்திலும் தேக செழுமையிலும் … அந்த வனப்பு சங்கரபாண்டிக்கு ஈர்ப்பை தந்திட மலரை திருமணம் முடித்து விட்டு சில மாதங்களுக்கு பிறகு சங்கரனுக்கு மேலும் பதவி ஆசையை தூண்டி விட்டு இவளையும் திருமணம் செய்து தரும்படி கேட்டு கொள்ளலாம் இல்லையென்றால் வேறு வழியில் அடைந்து கொள்வோம் என்று திட்டம் தீட்டியிருந்தான்.
மலரோடு திருமணம் நடப்பது பலிக்காத நிலையில் அடுத்த குறியாக வடிவரசியை தேர்ந்தெடுத்து இருந்தான் கயவனவன்.
“வடிவரசியை திருமணம் செய்து கொள்கிறேன் “என சங்கரபாண்டி கூறியதில் சங்கரனுக்கு முகம் மலர்ந்திட முத்துலெட்சுமிக்கு இப்போது தான் பயம் வந்தது.
ஏனெனில் சங்கரபாண்டியின் தோரணை கொஞ்சம் அவனது நடவடிக்கை பற்றிய சந்தேகம் எழுந்திருந்தது.
அதனாலேயே தன் மகளை சங்கரபாண்டிக்கு திருமணம் செய்து தர யோசித்திட அவனோ,” அத்தை அவளை அழைச்சுட்டு வந்து உட்கார வை…”என்று கவுன்சிலர் ராஜேந்திரன் மனைவியிடம் கட்டளை இட்டு விட்டு வடிவரசியிடம் திரும்பியவன் .,”இந்தாருல… நான் பார்க்க தான் கரடு முரடான ஆளா தெரிவேன் ஆனா உன்னை மகாராணி போல வாழ வைப்பேன்…. அந்த பவுசு வாழ்க்கை உங்க அக்காளுக்கு கொடுத்து வைக்கலை, உனக்கு அந்த வாய்ப்பை தரேன் என்னை கட்டிக்கிடுதியா சொல்லு இப்பவே சொத்து முழுசும் உன் பேர்ல எழுதி வச்சிடுதேன் “என்றதும் தாய் மகள் இருவரின் முகமும் பிரகாசமடைந்தது.
சங்கரபாண்டி முகத்தை கழுவி விட்டு வந்தவன் காயத்திற்கு மஞ்சள் பத்து போட்டு விட்டு வந்து வடிவரசியின் கழுத்தில் தாலி கட்டினான்.
மனதிலோ .,”இப்ப உன் தங்கச்சி புருஷனா உன் வீட்டு மாப்பிள்ளையா வந்துட்டேன் ல என்னைக்கு இருந்தாலும் உன்னை அடையாம விட மாட்டேன் ல சண்டிராணி… “என்ற சபதமெடுத்து அமர்ந்திருந்தான் அக்னிகுண்டத்தின் முன்பு.
பாவம் வடிவரசியின் குணம் தெரியாமல் போனது அவன் செய்த தவறு… அதை வெகு விரைவில் உணர்ந்திடுவான் அவன்.
வடிவரசியோ வேறு ஒரு நினைவில் இருந்தாள். “உன்னை விட பணக்கார மாப்பிள்ளையா நல்ல அழகான மாப்பிள்ளையாகவே கல்யாணம் பண்ணிட்டேன் டி….. இனி எவளும் அந்தஸ்தில் என் கிட்ட கூட நிற்க முடியாது”என்ற கர்வத்துடன் இருந்தாள் அவள்.
சொத்துக்களை விட சொந்தங்கள் பெரிதென அவள் உணரும் நாளும் ஒரு நாள் வந்திடும் என்பதை அறியாது காலம் போட்ட கணக்கில் தானாய் சிக்கி இருந்தாள் வடிவரசி.
*******
சிவாவுடன் வெளியே வந்த மலரும் மற்றவர்களும், மீண்டும் மண்டபத்தின் முன்பாக உள்ள கோவிலுக்கு சென்றனர்.
பொன்னரோ… “சக்தி இன்னும் நல்ல நேரம் முடியலை… அந்த மகமாயி முன்னால நீ மலருக்கு தாலி கட்டு… இனி நடக்கிறது நல்லதா நடக்கட்டும்… எனக்கு அந்த பயலுக மேல நம்பிக்கை இல்லை திரும்ப வந்து பிரச்னை பண்ணா நல்லா இருக்காது… என் பேத்திக்கு நீ தொணையா இருப்பன்ற நம்பிக்கையில் கேட்கிறேன் என் பேத்தியை ஏத்துக்க சாமி” என்று சொல்ல சிவா மனம் பதை பதைத்து போனான்.
“தாத்தா நீ ஏன் இப்படி எல்லாம் பேசுற…. என்னைக்கு இருந்தாலும் பனி தான் என் பொண்டாட்டி… ஆனா அவ சொல்றதை கேட்கணும் இல்லையா…!!” என்று தயங்கினான்.
“எய்யா… நீ கல்யாணம் பண்ணிக்க ப்பா அப்புறம் வேலைக்கு போய் அந்த வீட்டை மீட்டுக்கலாம்”என்று கருப்பசாமியும் சொல்ல… மலரோ அதுவரை அமைதியாக இருந்தவள்
“உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு சக்தி… கண்டிப்பா நீ சொன்னதை செய்வ…. நான் நம்புறேன்… “தன்னை திருமணம்
செய்து கொள்ளும்படி சொல்லாமல் சொன்னாள் பனிமலர்.
“சரி கல்யாணம் பண்ணிக்கிறேன்
ஆனா நான் என்னைக்கு அந்த வீட்டை வாங்கித் தரேனோ அப்ப தான் நான் வாழ்க்கையை ஆரம்பிப்பேன்
இதுக்கு சம்மதம் னா கல்யாணம் பண்ணிக்கிறேன் “என்று சொல்ல அனைவரும் மலர் சிவா திருமணம்
நடந்தால் போதும் என்ற மனநிலையில் சரி என்று சம்மதித்தனர் .
“வீரமலை நீ போய் மரகதத்து கிட்ட வெவரம் சொல்லி அவங்களையும் கோவிலுக்கு வரச் சொல்லு சரியா “என்று பொன்னுசாமி சொல்ல வீரமலை விரைந்து சென்றான்.
மரகதத்திடம் விஷயத்தை சொல்லவும் மற்றவர்களையும் அழைத்து கொண்டு அம்மன் கோவிலுக்கு விரைந்தனர். இவர்கள் வருவதற்குள் வெற்றி பூக்கடைக்கு சென்று மாலை வாங்கி வந்து விட்டான். கோவில் பூசாரி சிவாவின் கையில் இருந்த மாங்கல்யத்தை வாங்கி அம்மன் பாதத்தில் வைத்து வேண்டி விட்டு கொண்டு வந்தார்.
அனைவரும் வந்து விட்டனர்.
“என்னங்க திடீர் னு இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கீங்க ???”என்று மரகதம் கேட்க
பொன்னுசாமியோ.,”எல்லாம் நல்லதுக்கு தான் மரகதம்… கல்யாணம் முடிஞ்சதும் எல்லாம் சொல்றேன்”என்றார்.
செண்பகவல்லி ஆச்சிக்கு மனம் குளிர்ந்து போனது.
“என் ராசாத்தி இனி உனக்கு எல்லாம் நல்லது தாம் ல நடக்கும்… பேராண்டி தெம்பா தாலியை கட்டுல… “என்றார் சிலாகிப்பாக
“அட்சதை எல்லாம் ரெடி தானே… கொண்டு வா… சிவா ரெண்டு பேரும் மாலை மாத்திக்கங்க… மலரு நீ மாலையை போடு “என்றதும் கண்கள் நீர் சுரக்க சிவசக்தியின் கழுத்தில் மாலையை அணிவித்தாள்.
சிவாவும் மாலை போடவும் அடுத்து மாங்கல்யத்தை எடுத்து கொடுத்தார் பூசாரி.வெகு நாட்களுக்கு பிறகு தன் மனம் கவர்ந்தவளின் முகம் பார்க்க மலரோ மெலிதாய் புன்னகைத்தாள்.
இருவரின் விழிகளும் பரஸ்பரமாக கலந்தது.
“மாப்ள அப்புறம் பார்க்கலாம் தாலியை கட்டுய்யா”என்று வெற்றி சொல்ல சிரிப்புடன், மங்
களநாணை வெண்ணிற மேனியாளின் பட்டு தாமரை கழுத்தில் கட்ட , பனிமலர் திருமதி சிவசக்திபாலனாக மாறிப் போனாள்.
சிவசக்திபாலன் ,பனிமலர் திருமணம் சில சொந்தங்கள் முன்னிலையில் நடந்தாலும் அனைவரின் மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன் நடந்து முடிந்தது..