சங்கரபாண்டிக்  கவுன்சிலருடன் வந்திறங்கிட சங்கரன் அவர்களை தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக வரவேற்றார்.

சங்கரபாண்டி புன்னகை முகத்துடன் அமர்ந்திருக்க,  சங்கரனே முதலில் பேசினார்.

“அய்யா என்ன விஷயமா வந்திருக்கீங்க.. முக்கியமான விஷயம் இல்லாம இருக்காது அதனால தான் கேட்டேன்”என்றதும் கவுன்சிலர் ராஜேந்திரன் சங்கரபாண்டியை ஒரு பார்வை பார்த்துவிட்டு பேச்சை துவங்கினார்.

“தம்பி பேரு சங்கரபாண்டி … தூத்துக்குடி கருங்குளம் பக்கத்தில் இருக்காரு… தூத்துக்குடி துறைமுகத்தில் டெண்டர் எல்லாம் எடுத்திருக்காரு , ஊருக்குள்ள நல்ல வசதியான ஆளுக… ஒரு வகையில் நமக்கு சொந்தக்காரர் அதாவது என் பங்காளி மகன் … தூத்துகுடியில் நாலு மெக்கானிக் செட்டு இருக்கு சொந்தமா நாலு வீடு மீன்பண்ணை எல்லாம் இருக்கு… உன் மக மலரு இருக்குது இல்லையா,  அதை தூத்துக்குடி உடன்குடி பஸ் ஸ்டாண்டில் பார்த்திருப்பாரு போல புள்ளையை ரொம்ப பிடிச்சு போயிருக்கு… மலரு கிட்டயே விருப்பத்தை சொல்லி கல்யாணத்திற்கு சம்மதம் கேட்டு இருக்கார். ஆனா பாருங்க உங்க மக விருப்பம் இல்லை னு சொல்லிடுச்சாம்… சரி வீட்டு பெரியவங்கள மதிக்கிற பொண்ணு அதனால சொல்லி இருக்கும் என்று நான் தான் நேரில் போய் பொண்ணை பெத்தவங்க கிட்ட பேசி பார்க்கலாம் னு வரவழைச்சேன்… பையனுக்கு யாரும் கிடையாது… நம்ம கிட்ட வந்து என் கல்யாணத்தை நீங்க தான் பெரியப்பா முன்ன நின்னு நடத்தி வைக்கனும் னு சொல்லிடுச்சு சரி யார் என்னனு விசாரிச்சா அது நீயா போச்சு அட நம்ம வார்டு மெம்பரு சங்கரன் பொண்ணு தானா னு நான் யோசிக்கவே இல்லை நேரா இங்க கூட்டிட்டு வந்துட்டேன்”என்று பேச்சை முடித்துக் கொண்டார் ராஜேந்திரன்.

முத்துலெட்சுமிக்கு கோபத்தில் முகம் சிவந்து போனது. மனமோ வெந்தணலாக காந்தியது.

இவளுக்கு மட்டும் எங்கிருந்து தான் வருவானுகளோ பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன் பரண் மேல பார்த்தேன் னு நான் பெத்ததும் ஊர் சுத்திட்டு தான் இருக்குது… ஆனா ஒரு நாளாவது இப்படியாப்பட்ட பணம் காசு வச்சிருக்கவன் வந்து பொண்ணு கேட்டு இருக்கானா எல்லாம் அன்னாடங்காய்ச்சியா வந்து பொண்ணு கேட்டு நிற்குது… . அது சரி நான் பெத்ததுக்கு என்னை மாதிரி சமத்தா இருக்கு…’என்று உள்ளூர நொடித்து கொண்டவர் வெளியே சிரித்து வைத்தார்.

“என்னம்மா தங்கச்சி ஏதாவது சொல்லு…??” என்று கேட்க,  முத்துலெட்சுமி முகத்தை இயல்பாக்கி கொண்டு .,”பெரியவங்க நீங்களே அந்த பையனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வர்றீங்க னா நல்லப் பையனா தான் இருக்கணும் ஆனா பாருங்க நாங்க ஏற்கனவே ஒரு இடத்தில் மலருக்கு பேசி முடிச்சுட்டோம் பையன் உள்ளூர் தான் ஒரு வகையில் சொந்தம்… “என்று சங்கரபாண்டியை வெட்டி விடுவதில் குறியாக இருந்தார் முத்துலெட்சுமி.

ராஜேந்திரனோ .,”பேசி தானே மா முடிச்சு இருக்கீங்க நிச்சயம் எதுவும் பண்ணிடலையே… அட பொண்ணுக்கு மாப்ளைய பிடிக்கலைனு சொல்லி வெட்டி விடுங்கமா… இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணத்தை நடத்தி முடிச்சிடலாம் ஏதாவது பிரச்சினை வந்தா நான் பார்த்துக்கிறேன்… ஏன் சொல்றேன்னா… பையன் நல்ல பையன் ஒரே ஆளு… ஏகப்பட்ட சொத்து அத்தனைக்கும் உங்க மக தான் உரிமைப்பட்டவளா இருப்பா… மகாராணி மாதிரி வாழலாம்…. பாண்டி உங்க மக மேல உசுரா இருக்காப்ல இல்லாட்டி இவ்வளவு தூரம் வரமாட்டாப்ள … அதை விட ஒரு முக்கியமான விஷயம் என் அக்கா பொண்ணே இருக்கு இப்ப ம்ம்ம் னு சொன்னா கூட கட்டி வச்சிடுவேன் …. தம்பிக்கு உங்க மக மேல தான் இஷ்டம் நான் என்ன செய்ய… அதிர்ஷ்டம் ஒரு தடவை தான் கதவைத் தட்டும் பார்த்துக்கிடுங்க… அது மட்டும் இல்ல சங்கரா… நான் இந்த தடவை எம்எல்ஏ எலக்சன் ல நிக்க போறேன் தலைவர் எனக்கு தான் சீட்டுனு அடிச்சு சொல்லிட்டாரு… அதனால கவுன்சிலர் பதவிக்கு நான் உன் பேரை பரிந்துரை பண்ணலாம் னு இருக்கேன்… தம்பி நல்லா செலவு பண்ணி உன்ன ஜெயிக்க வச்சிடுவாப்ள….நீ என்ன சொல்ற உன் முடிவை சொல்லு “என்றார்.

சங்கரன் யோசித்தபடி அமர்ந்திருக்க… “இந்தாருங்க மாமா நான் ஆளு பார்க்க தான் கொஞ்சம் அய்யனார் கணக்கா இருப்பேன்…. ஆனா உள்ளுக்குள்ள குழந்தை மாதிரி… மலரை பார்த்ததும் எங்கம்மாள மாதிரியே இருந்துச்சி பொண்ணு கேட்டு வந்துட்டேன்… நீங்க மலரை எனக்கு கட்டி வெச்சியள் னா எங்க ஆத்தா கணக்கா பார்த்துக்குவேன்… . நீங்க என்ன சொல்லுதீய…?? ரெண்டு ல ஒண்ணு சொல்லுக… ?? அத விட்டுட்டு அவன் பொண்ணு கேட்டான் , இவன் பொண்ணு கேட்டான் னு,  எவனுக்காவது கட்டி வைக்க நினைச்சீக அப்புறம் நான் மலரை தூக்கிட்டு போய் கிட்டே இருப்பேன்… என்ன பதில் சொல்றாகனு கேட்டு வாங்க பெரியப்பு ஆமா மலரு எங்கன இருக்குதா …”என்றபடி ஒரு அறைக்குள் போக முத்துலெட்சுமி வேகமாக.,” மலரு ஸ்கூலுக்கு போயிருக்குது”என்றார்.

“அரண்மனையாட்டம் வீடு வச்சுகிட்டு இம்புட்டு சொத்து பத்து வச்சுகிட்டு என் வருங்கால பொஞ்சாதியை எதுக்கு வேலைக்கு அனுப்புதீக… ஒருத்தன் கிட்ட கை கட்டி சம்பளம் வாங்குத அளவுக்கு மலரு ஒண்ணும் குறைஞ்சு போயிடலை… நான் அவளுக்கு ஒரு ஸ்கூலே கட்டி குடுப்பேன் யோசிக்காம தட்டை மாத்துங்க…. பெரியம்மா தட்டை மாத்துங்க…. இன்னைக்கே நிச்சயம் பண்ணிட்டு போறோம் இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணத்தை முடிச்சு என் பொஞ்சாதியா கூட்டிட்டு போகனும் ல…. “என்றவனை பீதியாக பார்த்தார் சங்கரன்.

“தம்பி அவசரப்பட்டா எப்படி மலரு வரட்டும் நான் பேசி உங்களுக்கு முடிவு சொல்றேன்…. “என்றதும் ராஜேந்திரனும் அதையே கூற சரி என்று சம்மதித்தான் சங்கரபாண்டி.

வந்தவர்கள் அனைவரும் தட்டை மாற்றி விட்டே கிளம்பினர். முத்துலெட்சுமிக்கே சங்கரபாண்டியின் பேச்சு பயத்தை வரவழைத்திருந்தது.

சங்கரன் அமைதியாக அமர்ந்திருந்தவர்.,” நான் தோட்டத்துக்கு போயிட்டு வரேன் என தோளில் துண்டை போட்டுக் கொண்டு கிளம்பினார்.

வண்டியில் சென்று கொண்டிருந்த சங்கரபாண்டியிடம் தொணதொணத்தார் ராஜேந்திரன்.

“ஏம்ல உனக்கு புத்தி கெட்டுப் போயிடுச்சா… .போயும் போயும் அவன் வூட்ல பொண்ணெடுக்க சொல்லுத… . ஏம்ல உனக்கென்ன குறைச்சலுனு இங்க பொண்ணு கேட்குற… தூத்துகுடியில் இல்லாத பொண்ணையா இங்க கண்டுவுட்ட… அதான் அந்த எம்எல்ஏ மவளை கட்டி தரேன் னு சொல்லுதாம் ல அப்புறம் ஏன் இங்க வந்து என் சீவனை வாங்குத… உன் அப்பனுக்கு தெரிஞ்சா என்னை பொளி போட்டுப்புடுவாம்ல… . இதுல வேற அவன் உசுரோட இல்ல னு பொய் சொல்ல வச்சுபுட்ட… அப்படி என்ன ஊர் ல இல்லாத பேரழகியா அவ !!!”என்றவுடன் வண்டியை சட்டென ப்ரேக் போட்டு நிறுத்த ராஜேந்திரன் முன்னாடி இருந்த பேனட்டில் இடித்து கொண்டார்.

“ஏலே பாண்டி என்னை கொண்டு(கொன்னு) கிண்டுப்புடாத ல நான் இன்னும் எம்பி ஆகனும்…. “என்று நெற்றியை தேய்த்தபடி கத்தினார் ராஜேந்திரன்.

“அவ பேரழகி தான் அதோட திமிரும் ஜாஸ்தி என்னையவே ஜெயிலுக்கு அனுப்பி வச்சவ அதுக்கு பழி வாங்க வேண்டாம் அவளை கட்டி வாழவா நான் பொண்ணு கேட்டேன்…. . அவ திமிரை அடக்கி என் வூட்ல வேலைக்காரியா ஆக்கிக்க தான் இந்த கல்யாணம் …கடைசி வரை எனக்கு பொஞ்சாதியா இருந்து எந்த சொகத்தையும் அனுபவிக்காமையே அவ சாவணும்… மொறைப்படி கல்யாணம் பண்ணிக்க ஆசை இருந்தால் நான் ஏன் உன்னை கூட்டிட்டு வரேன் எங்கப்பனை இல்ல கூட்டிட்டு வந்திருப்பேன்…. பேசாம வாயா நீ எம்எல்ஏ ஆவ நான் தான் பணத்தை இறைக்கனும்”என்று சங்கரபாண்டி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

முத்துலெட்சுமிக்கு பொறாமைத்தீ கொழுந்து விட்டு எரிந்தது . இத்தனை வசதி படைத்தவன் தன் மகளை கேட்டிடாமல் போயும் போயும் மலரை திருமணம் செய்து கொள்ள கேட்கிறானே என்ற ஆத்திரம் தீயாக எரிய, சங்கரனோ தோட்டத்திற்கு போய் வந்தவர் முத்துலெட்சுமியின் பொறாமைத்தீக்கு எண்ணை ஊற்றுவது போல தன் முடிவை கூறினார்.

“முத்து… தனஞ்செயன் வடிவரசியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் னு சொல்லிட்டான் இல்லையா அதை சாக்கா வச்சு நாம ரெண்டு கல்யாணத்தையும் நிறுத்திட்டு சங்கரபாண்டிக்கு மலரை பேசி முடிப்போம் இதை விட நல்ல இடமா பார்த்து இல்லையா சங்கரபாண்டி பங்காளி யாராவது வசதி உள்ளவனா பார்த்து நம்ம அரசிக்கு பேசி முடிக்கலாம்…” என்றார் சங்கரன்.

“அப்போ ஒரே மாதிரி வசதி கொண்ட இடத்தில் மலரை தரனுமா ???”என்று முத்துலெட்சுமி யோசித்து கொண்டிருக்க சங்கரன் அவரது யோசனைக்கு தடை போட்டார்.

“நீ யோசிக்காத முத்து இது நமக்கு நல்ல வாய்ப்பு …. அந்த சங்கரபாண்டி நல்ல வசதியானவன் அதுவுமில்லாமல் அரசியல் செல்வாக்கு எல்லாம் இருக்குது… . அந்த ராஜேந்திரனை எம்எல்ஏ ஆக்கும் போது பொண்ணு குடுத்த எனக்கு செய்யாம விட்டுடுவானா ??”என எதிர்காலத்தை எண்ணி பேசியவரின் கண்கள் பிரகாசித்தது.

“நிஜமாகவே உங்களை எம்எல்ஏ ஆக்கிடுவானா அப்போ நான் எம்எல்ஏ பொண்டாட்டியா வலம் வருவேனா !!!”என்ற முத்துலெட்சுமிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. 

“நிஜம் தான் முத்து ஆனா அதுக்கு இந்த வரனை கல்யாணம் செய்துக்க மலரு சம்மதிக்கனும் …. நான் மலரை போய் பார்த்து பேசிட்டு வரேன்…”என்றார் சங்கரன்.

“அட அங்க உங்க அத்தை இருப்பாங்க ஏதாவது பேசி குழப்பி விட்டுடுவாங்க நீங்க மலரை இங்க வர சொல்லுங்க நான் பேசி சம்மதிக்க வைக்கிறேன்”என்று புது திட்டம் ஒன்றை தீட்டினார் முத்துலெட்சுமி.

“அதுவும் சரிதான்… அத்தை ஏதாவது பேசி குளறுபடி பண்ணிடுவாங்க”என்றவர் தன் வீட்டு வேலைக்காரனை அனுப்பி மலரை அழைத்து வரும்படி கூறினார்.

மலரை அழைக்க சென்றவன் திரும்பி வந்தான் அவள் பள்ளி சென்றிருக்கிறாள் என்று…

இன்னும் ஒரு வாரம் பள்ளி இருக்கிறது… .அதன் பிறகு காலாண்டு தேர்வு விடுமுறை வந்து விடும்… மலர் பள்ளி முடிந்து வீடு வந்து சேர்ந்தாள்.

“ஆச்சி என்னதிது தண்ணி மதியமும் வரலையா… ??ஏன் இப்படி பண்ணுதானுவ??”என்று முனகியபடி ஒரு கப் தண்ணீரில் முகம் கழுவி வந்தாள்.

“ஏட்டி அவன் நடு ராத்திரியில் தண்ணி விடுதானாம்…. பக்கத்து வீட்டு ராசலெட்சுமி சொன்னா… . கண் முழிச்சு தேன் பிடிக்கணும்ல…” என்று ஆச்சி சொல்லி விட .,”வேற வழி… புடிக்குதேன்… . நாம பாட்டுக்கு செவனேன்னு தூத்துக்குடியில நல்லா சொகுசா இருந்தோம் இங்க வந்து குடிக்க பொழங்கனு தண்ணிக்கு அல்லாடுதோம்…. சரி ஆச்சி நான் போய் பெரியம்மா வூட்ல இருந்து தண்ணி கொண்டாரேன் “என முந்தானையை இழுத்து சொருகி கொண்டு போக ,செண்பகவல்லியோ.,” வேணாம் ல ரவைக்கு புடிச்சுக்கிடலாம் நீ செத்தோடம் உட்காரு…. மதியம் ஆக்குனது இருக்கு அதே நமக்கு போதும் ல முடிஞ்சா அந்த கருவேப்பிலை கொத்தமல்லியை வச்சு துவையல் அரைச்சுடு ல போதும்…”என்றார்.

“சரி ஆச்சி நான் குடத்தை எல்லாம் வெளக்கி வச்சுட்டு பாட்டனை தோட்டத்துல போய் பார்த்து விட்டு வரேன்…. “என்றவள் சடுதியில் வேலையை முடித்து விட்டு தோட்டத்திற்கு கிளம்பினாள். 

பொன்னன் தோட்டத்தில் இருந்த களைகளை பிடுங்கி கொண்டிருக்க போகும் வழியில் எதிர்பட்டான் சிவசக்திபாலன்.

அவனைக் கண்டும் காணாது சென்றவளை கரம் பற்றி தடுத்தவன் .,”இப்ப எதுக்கு என் கிட்ட பேச மாட்டேன் னு அடம் பிடிச்சுக்கிட்டு இருக்க … நான் என்ன பண்ணேன் சொல்லி திட்டவாவது செய் அதை விட்டுட்டு இப்படி பேசாம போட்டு படுத்தாதடி ராத்திரி படுத்தா கூட தூக்கம் வர மாட்டேங்கிது..”என்றான்.

“கையை விடு சக்தி… .”.என தன் கரத்தை விடுவிக்க முயல அவனோ கையை இறுக்கமாக பிடித்து கொண்டான்.

“பனி ஏன் இப்படி பண்ற???”

“நான் ஒண்ணும் செய்யலை நீ கையை விடு வலிக்குது “என வலியால் முகம் சுருக்கினாள்.

அவள் முகம் மாறுவதைக் கண்டவன் கையை விடுவித்திட .,

மனதில் மகிழ்ந்தவள் “ஒரே ஒரு விஷயம் சக்தி , நான் லேசா முகம் சுருக்கினா கூட உன்னால தாங்க முடியலை ஆனா என் மனசு ரணமாகற அளவுக்கு வலியை தர்ற… நீ பண்ற வேலை எல்லாம் எனக்கு வலியை தான் தருது , புரிஞ்சு நடந்துக்கோ அவ்வளவு தான் சொல்வேன் நான்…. புரிஞ்சு நடந்துக்கோ … உன் அப்பா அம்மா திட்டுற அளவுக்கு வச்சுக்காத “என கூறி விட்டு நடந்தவள் மீண்டும் திரும்பி அவனை பார்த்தபடி நின்றிருந்தாள்.

வேகமாக அவளருகில் ஓடி வந்தவன்.,”என்ன பனி ??”என்று கேட்க.,”ஒண்ணும் இல்ல வீட்டுக்கு போ”என்று விட்டு தன் பாட்டாவை பார்க்க சென்றாள்.

சிவசக்திக்கு தான் அவள் ஏன் அப்படி சொன்னாள் என்று புரியவில்லை அங்கிருந்து போய் விட்டான்.

நடு இரவில் குடி தண்ணீர் வந்தது மலர் குடத்தை எடுத்து கொண்டு வர சக்தி அவனது அம்மாவிடம் சண்டையிட்டு கொண்டிருந்தான்.

“ஏம்மா வீட்டுல ஒரு சின்ன பையன் இருந்தா உடனே கடைக்கு போடா… ரேஷனுக்கு போடா… தண்ணி புடிடா னு ஏதாவது வேலை வாங்கிட்டே இருப்பியே நான் மட்டுமா தண்ணி குடிக்கிறேன் எல்லாரும் தானே குடிக்கிறிங்க அவனையும் வர சொல்லு”என்று தனஞ்செயனையும் எழுப்பி விட்டான்.

“டேய் பேசாம போடா காலையில் இருந்து வயக்காட்டுல மருந்தடிச்சுட்டு வந்திருக்கேன் நீ நல்லா தின்னுட்டு ஊரு சுத்திக்கிட்டு பேசுறான் பேச்சு ரெண்டு கொடம் தண்ணி பிடிக்க முடியாதோ தொரைக்கு போடா போய் தண்ணி பிடிச்சிட்டு வாடா … “என போர்வையை போர்த்தி படுத்துறங்கி விட்டான்.

“இருடி உனக்கு உப்பு தண்ணியை வைக்கிறேன்… ம்மா கொடத்தை கொண்டு வா இப்பவே எவ்வளவு கும்பல் நிக்குதோ தெரியலை”என்று சலித்துக் கொண்டு குடத்தை வாங்கி கொண்டு வெளியே வந்தான் மலர் சற்று தள்ளி நின்று கொண்டிருந்தாள்.

“ஹை நம்மாளு நிக்குது… எதுக்கு நிக்கிறா?? ஒரு வேளை யாரும் வருவாங்களோ??”என தானாக பேசியபடி அவளருகில் சென்றான்.

“என்ன சத்தம் போட்டுட்டு இருந்த… . முடியாம தானே ஹெல்ப் கேட்கிறாங்க செய்றதுக்கு என்ன…?? வா போகலாம்”என்று முன்னால் நடக்க, அவனோ அவசரமாக.,”பனி எனக்காகவா வெயிட் பண்ண… .?? நிசமாவா !!”என்றான்.

“நிஜமா தான்  “என்று சொல்ல .,

“அச்சோ என்னால நம்ப முடியலையே “என்று துள்ளி குதித்தவன் சுற்றி முற்றி பார்த்து விட்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டு அங்கிருந்து ஓடியவன் சற்று தள்ளி நின்று .,”சாரி சாரி ரொம்ப நாள் ஆசை அதான் தந்துட்டேன் பனி அடிச்சுடாத”என்றான் கன்னத்தை பிடித்து கொண்டு…

“உன்னை எல்லாம் என்ன பண்றது இங்க நின்னா அடி விழும் ஓடிப் போயிடு “என்றதும்.,”அதெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாங்கிக்கிறேன் இப்ப தண்ணி பிடிக்க இடம் போடுறேன் மெதுவா நடந்து வா “என்று ஓடி விட்டான்.

அவனது முதல் இதழ் ஒற்றலில் லயித்தவள் ,சட்டென சுயம் பெற்று., “ஹேய் இருட்டில் பார்த்து போ ..!!”என்று சத்தம் போட  சட்டென திரும்பி வந்தான்.

“என்ன ஆச்சு…?”

“அது சும்மா தான்…   ஏன் பனி பேச மாட்டேங்கிற…!! ” பாவமாக கேட்டான்.

“அதற்கு பதில் வேணும் னா இப்போ போய் தண்ணி பிடிச்சு வை வந்து சொல்றேன்… “என்று சொல்ல,  “போடி அழுத்தக்காரி” என்றவன் மீண்டும் ஒரு இதழ் ஒற்றலை தந்து விட்டு ஓடியேப் போனான்.

“இவனை என்ன தான் பண்றதோ… இவன் மேல கோபமும் பட முடியலை சிரிக்கவும் முடியலை”என்று புலம்பியபடி செல்ல தண்ணீர் பிடிக்கும் இடத்தில் ஒரு நூறு குடங்களுக்கு பக்கமாக காத்து கிடந்தது.

“அச்சோ இத்தனை குடம் இருக்கே தண்ணி பிடிக்க முடியுமா.. ???”என்று தளர்ந்தவளை பார்த்து “நீ போய் உட்காரு நான் பிடிச்சு தரேன்”என்று குடத்தை வாங்கி கொண்டு சென்றான்.

ஒரு மணி நேரம் கடந்த பின்னும் கூட்டம் குறையவில்லை… ஆனால் தண்ணீர் நின்று போனது. காலி குடங்களுடன் திரும்பி வந்தான் சிவா.

“என்னா மாப்ள தூக்கத்தை கெடுத்துக்கிட்டு வந்தா தண்ணியும் நின்னு போச்சு… வீட்டுக்கு போனா எங்கம்மா வெளக்கமாத்தோட நிக்கும்… “என வீரமலை புலம்பிட

வெற்றியோ.,”ஏன் டா நாம என்ன வேணும்னா தண்ணி புடிக்காம போறோம்… அது நின்னு போச்சு அதுக்கு என்ன பண்ண முடியும் “என்று முன்னால் நடந்தான்.

“பனி தண்ணி நின்றுச்சு நாளைக்கு டேங்க் தண்ணி வாங்கிப்போம் வா “என்று அழைத்து செல்ல.,”நீ குடத்தை குடு நாளைக்கு நான் சீக்கிரம் போகணும் அடுத்த தெருவில் தண்ணி வரும் பிடிச்சிட்டு வரேன்”என வம்படியாக வாங்கி கொண்டு போக….” இவ ஒருத்தி டா டேய் நீங்க போங்கடா நான் தண்ணி புடிச்சு குடுத்துட்டே வரேன்”என அவளோடு நடந்தான். 

அங்கேயும் தண்ணீர் கிடைக்கவில்லை ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.

“நீ கொடத்தை வச்சுட்டு ஸ்கூலுக்கு போ நான் தண்ணி வாங்கி வைக்கிறேன் “என்று விட்டு தன் வீட்டுக்கு செல்ல.,”ஒண்ணும் வேணாம் நானே புடிச்சுக்கிறேன் “என்று தன் வீட்டிற்கு சென்றாள். 

“ஸ்ஸ்ஸப்பா முடியலை எதுக்கு கோவப்படுறான்னு தெரிய மாட்டேங்கிதே கடவுளே “என அங்கிருந்து சென்றான்.

மறுநாள் காலையில் மலர் பள்ளிக்கு சென்று விட கருப்பசாமியையும், சித்திரைசெல்வியையும் வீட்டிற்கு வர சொல்லி இருந்தார் சங்கரன்.

முத்துலெட்சுமியே பேச்சை துவங்கினார் .

“இந்தா பாரு செல்வி நீங்க தான் வந்து உன் மூத்தப் பையன் என் மகளை கட்டிக்க மாட்டேன் னு சொல்லிட்டான்னு சொன்னீங்க அதனால நாங்களும் ஒரு முடிவுக்கு வந்துட்டோம்… இந்த சம்மந்தம் ஒத்து வராது.. நீங்க உங்க பையனுக்கு வேற இடம் பார்த்துக்கங்க… நாங்களும் வேற இடத்தில சம்மந்தம் பண்ணிக்கிறோம்”என்றார் நேரடியாக.

“அண்ணி தனா தானே வேண்டாம் னு சொன்னான் சிவா சொல்லலையே… .மலரை எங்க வீட்டுக்கு மருமகளா அழைச்சுட்டு போக எங்களுக்கு சம்மதம் “என்று சித்திரைசெல்வி சொல்ல சங்கரன் அவசரமாக.,”இதோப் பாரு மா அதெல்லாம் ஒத்து வராது…. நீங்க வேற இடம் பார்த்துக்கங்க நீங்க போகலாம் “என்று இரு கைகளை கூப்பினார்.

“அது இல்ல ண்ணா”என்று செல்வி இழுக்க, முத்துலெட்சுமி கோபமாக .,”செல்வி ஒரு தடவை சொன்னா புரிஞ்சுகிட்டு கிளம்புற வழியைப் பாருங்க… சும்மா தொண தொணன்னுட்டு “என்றார். 

செல்விக்கு கோபம் வந்தாலும் மகனுக்காக மீண்டும் ஏதோ சொல்ல வாயெடுக்க, கருப்பசாமி அவரை தடுத்து.,”ஏய் எழுந்து வாடி இந்த பொண்ணை விட்டா வேற பொண்ணா கிடைக்காது…. என்னவோ பெருசா பேசுறாங்க இதோப் பாரு மச்சான் என் மூத்த மகனுக்கு வடிவை பிடிக்கலை… அதனால தான் வந்து நாங்க பேசினோம் நாளைக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு புடிக்கலைனு பிரிஞ்சுட்டா அது நமக்கு தான் அசிங்கம் னு இவ்வளவு தூரம் சொல்லி பேசி புரிய வைக்க வந்தோம்….. ஆனா நீங்க என்னவோ உறவே வேண்டாங்கிற மாதிரி பேசுறீக.. உங்க மகளுக்கு எங்க வேணும் னாலும் மாப்ள பாருங்க எங்களுக்கு என்ன என் மவனுகளுக்கு பொண்ணா கிடைக்காது “என்று தன் மனைவியை அழைத்து கொண்டு சென்றார் கருப்பசாமி.

                                                  

….. தொடரும்.