சூரியா தனஞ்செயனிடம் திருமணம் ஏற்பாடு செய்ததற்கான வாழ்த்துக்களை கூறிட , அவனோ கடுப்பாக திட்டி விட்டு ,அவளை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதி அளித்து விட்டு செல்ல ,அதை வடிவரசி கேட்டிருந்தாள்.
சூரியா தனா சென்ற திசையை பார்த்து கொண்டிருந்தாள்.
வடிவரசி இவர்களது உரையாடலை கேட்டிருந்தவள் கள்ளப் புன்னகை ஒன்றை சிந்தியபடி “ஓஓஓ சூப்பர் நமக்கு என்டர்டெயின்மென்ட் இருக்கு “என்று சிரித்தபடி தன் தாயை காண சென்றாள்.
“மம்மி மம்மி. “என்று கத்தி அழைத்தபடி உள்ளே சென்று முத்துலெட்சுமியை அணைத்து கொண்டவள்.,”நீங்க சொல்ற மாதிரி நான் தனா மாமாவையே கல்யாணம் செய்துக்கிறேன் உங்களை எதிர்த்து எதுவும் செய்ய மாட்டேன்”என்று சொல்ல முத்துலெட்சுமிக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
தன் மகளை அணைத்தபடி .,”இப்ப தான் டா நீ சமத்து .”என்று செல்லம் கொஞ்சி விடுவிக்க வடிவரசி மனதிலோ வேறு எண்ணம் ஓடியது.
முத்து லெட்சுமி சென்றதும் தனக்கு தானே பேசிக் கொண்டாள்.
“மம்மி நான் அந்த மலரை கூட விட்டுடுவேன். ஆனா அந்த சூரியாவை. பழி தீர்க்காம விட மாட்டேன்.சூர்யா ஸ்கூல்ல நீ என்ன எல்லாம் செஞ்சியோ, அதுக்கு மொத்தமா நான் இப்போ பழி வாங்கப் போறேன் டி. உன் குரூப் பசங்க. உன் பேச்சைக் கேட்டு தானே என்னை இக்னோர் பண்ணானுக. என்னம்மோ நீ தான் பெரிய உலக அழகி மாதிரி. உன் பின்னாடி தானே சுத்துனானுக. இப்போ நீ ஆசைப்பட்டவனை நான் கல்யாணம் பண்ணிக்க போறேன். ஒவ்வொரு தடவையும் அவனை நான் குத்திக் காட்டிப் பேசும் போது. நீ கண்ணீர் விடுவ பாரு அது தான் டி எனக்கு வேணும். “ஆங்காரமாக சிரித்தாள் வடிவரசி.
தனஞ்செயன் வீட்டிற்கு சென்றிட அங்கே செல்வி மதிய உணவை அவனுக்கு எடுத்து வைத்தார்.
“அவனை காலையில இருந்து காணோம்டா தம்பி. அப்பா காட்டுக்கு போயிருக்காக .”என்றதும் , தனாவோ சாப்பாட்டை வாயில் வைத்து கொண்டு. “ஏன் மா அவங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க போறோம்’னு முன்னாடியே சொல்ல மாட்டிங்களா.? எனக்கு வடிவரசியை கட்டிக்க விருப்பம் இல்லை. இந்த சம்பந்தம் வேண்டாம்’னு சொல்லிடுங்க “என்றான்.
“என்னயா சொல்ற நீ. சாதகப் பொருத்தம் எல்லாம் பார்த்தாச்சு பூ வச்சாச்சு இப்ப போய் பிடிக்கலைனு சொல்லிட்டு. ஏன் அந்த புள்ளைக்கு என்ன குறைச்சலாம் அழகா லட்சணமா தானே இருக்கா.” என்று படபடத்தார் சித்திரை செல்வி.
“ம்மா அழகா இருந்தா போதுமா.? சரி அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு. எனக்கு பிடிக்கலை நான் வடிவரசியை கட்டிக்க மாட்டேன். முதல்ல மலரை தானே பொண்ணு’னு சொன்னீங்க, அப்புறம் சூரியா வந்து சொல்லி தான் தெரியும் பொண்ணு மலர் இல்லை வடிவரசி’னு.” என்றதும் செல்வியின் மனதில் ஒரு வேளை தனாவுக்கு மலரை பிடித்திருக்கிறதோ என்றெண்ணினார். அதை அவனிடத்தில் கேட்டும் விட்டார்.
“ஏன் தம்பி ஒரு வேளை மலரை கட்டிக்க தான் உனக்கு இஷ்டமா!?”எனும் போதே சிவா உள்ளே வந்தான்.
தனாவோ அதற்கு பதில் அளிக்காது. “ம்மா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் அவ்வளவு தான் நான் அடுத்த வாரம் ஊருக்கு கிளம்புறேன் “என்று எழுந்து செல்ல முற்பட
“கடவுளே பூ வச்ச பொறவு இப்படி சொல்றானே? நான் பொண்ணு வீட்டுக்காரவுகளுக்கு என்ன பதிலை சொல்லுவேன்? “என புலம்பியபடி இருந்தார் சித்திரை செல்வி.
சிவா வந்தவன் “ம்மா ஏன் மா இப்படி புலம்பி தள்ளுற. டேய் !! ஏன் டா உனக்கு என்ன ஆச்சு.?? ஏன் இப்படி பேசுற? “என்றான் தன் ஆடையை மாற்றியபடி
“நான் நாளைக்கு ஊருக்கு கிளம்புறேன்”என வெறுப்புடன் பேசி விட்டு தனா செல்லவும், சிவாவிற்கோ மலரை திருமணம் செய்ய மறுத்ததால் இப்படி இருக்கிறானோ என்று தோன்றியது.
‘ஒரு வேளை இவன் மலரை விரும்புகிறானோ ‘என்றெல்லாம் எண்ணம் உதித்தது. வேகமாக தன் தமயனை காண சென்றான்.
“டேய் நில்றா. அட நில்லுடாங்கிறேன் “என்று தனாவின் கையை பிடித்து கொள்ள, அவனோ “ப்ப்ச் இப்ப என்ன டா உனக்கு.? என் மனசை மாத்த வந்தியா.? நான் ஊருக்குப் போறது போறது தான் யார் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். “என்றான்.
“அப்பாடி நீ ஊருக்குப் போறது தான்டா எனக்கு நல்லது நீ நிஜமாகவே கிளம்பு இங்க என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கிறேன்”என்றதும், தம்பியை அணைத்து கொண்டு .,”நிஜமாவா டா தேங்க்ஸ் டா எனக்கு அந்த வடிவரசியை பிடிக்கலைடா. உனக்கும் அந்த புள்ள வேணாம்டா. அதுக்கு நீ மலரை கட்டிக்கிறேன்’னு சொல்றியா நான் சந்தோஷமா இந்த கல்யாணத்தை நடத்த விடுறேன்”என சொல்ல சிவாவிற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
தன் மகிழ்ச்சியை வாய் விட்டே கேட்டு விட்டான்.
“அப்போ உனக்கு மலர் மேல விருப்பம் இல்லையா???”என்று கேட்க அவனோ.,” டேய் நான் சூரியாவை இல்ல விரும்புறேன். சின்ன வயசுல இருந்தே அவளை தான் எனக்கு பிடிக்கும். என்ன வாய் விட்டு வெளிப்படையாக சொன்னதில்லை அவ்வளவு தான் !!”என்றான் தனஞ்செயன்.
“அப்பாடா “என்றிருந்தது சிவாவிற்கு.
ஆனாலும் ஒரு குழப்பம்,” சூர்யாவை விரும்புறவன் எதுக்கு டா மலரை பொண்ணு பார்க்க வந்த.? சூரியாவை கட்டிக்கிறேன்னு சொல்லி இருந்தா அப்பா பொன்னுசாமி மாமன் வீட்டுக்கு போயிருப்பாரு. நானும் அப்படியே மலரை கட்டிக் குடுங்கனு கேட்டு இருப்பேன். இப்ப இங்க போய் இடியாப்ப சிக்கல் ஆக்கி வச்சிருக்க “என்று திட்ட
“எனக்கென்னடா தெரியும் அவங்கக்குள்ள சண்டைனு. எல்லாம் ஒண்ணா தான் இருப்பாங்க அங்ஙன பொதுவுல வச்சு சூரியாவை பிடிச்சிருக்கு னு சொன்னா யாராலையும் எதுவும் செய்ய முடியாது னு நினைச்சேன் அங்கே போன பிறகு தான் தெரியும் பொன்னு மாமன் வீட்டோட முத்து அத்தை தகராறு பண்ணி இருக்கறது என்றவன் அதெல்லாம் விடு நான் ஊருக்கு போறேன் இங்கருந்தா அந்த வடிவரசியை கட்டிக்க சொல்வாங்க” என்றான் சலிப்பாக.
“டேய் அப்புறம் ஏன் டா நீ ஊருக்குப் போகணும். ? உனக்கு சூர்யா கூட கல்யாணம் நடக்கும் நீ பாட்டுக்கு அமைதியா இரு. உங்க கல்யாணம் நடக்க நான் பொறுப்பு, வடிவரசி கூட ஏற்பாடு பண்ண கல்யாணம் அப்படியே இருக்கட்டும்.” என்றவனிடம்
சற்று பயத்துடனேயே .,”டேய் ஏதாவது ஏடாகூடமாக நடந்திடப் போகுதுடா வேணாம்டா நாம முறைப்படி சொல்லியே விலகிடுவோம்”என்றான் தனஞ்செயன்.
“சரி இரு யோசிக்கலாம் அதுக்குள்ள ஊருக்கு போறேன் னு ஏன் குதிக்கிற ??”என்று கேட்க
தனஞ்செயனோ கடுப்பாக.,”பின்ன என்ன டா..? யார் பொண்ணுனு சொல்லாம அழைச்சுட்டு போய் வடிவரசியை தான் கட்டனும்னா எப்படி டா?. அந்த புள்ள கொணம் தெரியாம அம்மா எதையாவது பேசிட்டு கெடக்கு. பூ வச்சாச்சாம் அதுக்காக கல்யாணம் பண்ணிக்க முடியுமா. ?”என்றான்.
“சரி விடு அதான் என் கிட்ட சொல்லிட்ட இல்ல, அப்புறம் என்ன மெது மெதுவாக இந்த விஷயத்தை ஓபன் பண்ணுவோம். என்ன முகூர்த்த தேதியா நெருங்கிடுச்சு இப்ப. சரி அதெல்லாம் விடு நம்ம ஆளு ரெண்டு பேரையும் தனியா கூப்பிட்டு பேசணும். ஏதாவது ஐடியா சொல்லு நீ கூப்டா அந்த சன் ஃப்ளவர் வருமா? வந்தா எப்படியாவது என் டீச்சரையும் வரவழைச்சுடு. நானா கூப்டேன் நாலு வார்த்தை பேசுறதையும் கட் பண்ணிடுவா “என்று கெஞ்சினான் சிவா.
“சூரியா வருமான்னு தெரியலை இருந்தாலும் கேட்டுப் பார்க்கிறேன் “என்று சொல்ல மிகச் சரியாக மலர் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருக்க, சிவா அவ்வளவு தான் அண்ணன் பேசியது ஒரு புறமிருக்க, மனங்கவர்ந்தவளின் பின்னால் வண்டியை எடுத்து கொண்டு சென்று விட்டான் .
மலரின் அருகில் நிறுத்தியவன் .,”டீச்சரம்மா மணப்பாறைக்கு தான் போறேன் .வந்தா ஸ்கூல் ல இறக்கி விட்டுடுவேன்” என்றவனை ஒரு பார்வை பார்த்து விட்டு நடந்தாள்
“இப்போ தான் பேசி முடிச்சாச்சே அப்புறம் கூட வர மாட்டியா. ???”பாவமாக கேட்டான்.
“பேசி தான் முடிச்சு இருக்காங்க இன்னும் கல்யாணம் முடியலை. ஒரு வழியாக நான் தான் பொண்ணுனு உன் மூளைக்கு எட்டிடுச்சு போல.” என்று கிண்டல் செய்தாள்.
அவன் சிரித்துக் கொண்டே “ம்ம்ம். எட்டிடுச்சு எட்டிடுச்சு. சரி வண்டியில் வரலாம் இல்ல.”
“வர மாட்டேன் னு தெரிஞ்சும் ஏன் கேட்கிற சக்தி.? இன்னைக்கு எங்கேயும் ஊர் சுத்த போக வேண்டிய வேலை இல்லையா.??” என்றாள்.
“ஹலோ டீச்சரம்மா நாங்களும் பொறுப்பா வேலைக்கு போவோம். இந்த கல்யாணம் மட்டும் முடியட்டும் அப்புறம் தெரியும்”என்று சிரித்திட., அதே நேரத்தில் பேருந்தும் வந்திட சிவாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு படிகட்டில் ஏறினாள்.
“போயிட்டு வரேன்’னு சொல்லலாம். நாங்க எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டோம். “என்றவனுக்கு ஒரு சென்டி மீட்டர் புன்னகை பரிசாய் கிடைத்தது. அவனின் இதழ்களோ உள்ளிருக்கும் முத்துப் பற்கள் தெரியச் சிரித்தது. இதில் நாணம் வேறு குடி கொள்ள பின்னந்தலையை அழுந்த கோதி சிரித்தான்.
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டவளோ மெல்லிய குரலில் .,”மூன்று மணிக்கு எல்லாம் வந்திடுவேன்”என்றாள்.
போதாதா நம் நாயகனுக்கு மதிய உணவிற்கு கூட போகாமல் பேருந்து நிலையத்தை குத்தகை எடுத்து விட்டான்.
நண்பர்கள் அரக்க பரக்க ஓடி வந்தனர்.
“ஏன் டா என்னடா இங்க வந்து உட்கார்ந்துட்ட . மலரை பார்க்கவா. ??”
“மூணு மணிக்கு வந்திடுவேன் னு சொன்னா, அதான் வெயிட் பண்றேன் டா. ஆமா மச்சான் நீங்க என்ன இந்த பக்கம்.வேலை எதுவும் இல்லை.” என்று கேட்டவனை நாலு அடி போட்டு விட்டு .,”ஒபாமா கூட ஒரு அர்ஜன்ட் மீட்டிங் இருக்கு போறோம் வர்றிங்களா சார் “என கிண்டல் செய்தான் வெற்றி.
“என்னடா நக்கலா. ??”
“பின்ன என்ன டா நாங்க நீ இல்லாமல் என்னைக்கு தனியா இருந்தோம்”
“இல்லடா லவ்வர்ஸ் ரெண்டு பேரும் தனியா பேசப் போறோம் இடையில நீங்க இருந்தா சரி வருமா? “என்று சொல்ல வெற்றியோ.,”அடேய் நல்லவனே இதெல்லாம் ரொம்ப ஓவர் டா அந்த புள்ள உன் கிட்ட தனியா பேசுதாக்கும். அது சாதாரணமாக கூட உன் கிட்ட பேச மாட்டேங்கிது இதுல தனியா பேசுறாராம் சாரு. போடா போக்கத்தவனே. சரி வா சாப்பிட்டு வந்து உட்காருவோம்”என எதிரில் உள்ள சிறு உணவு கடைக்கு அழைத்து சென்றனர் நண்பர்கள்.
கொத்து பரோட்டாவையும் ஆம்லேட்டையும் ஆர்டர் செய்து விட்டு அரட்டை அடிக்க உணவும் வந்து சேர்ந்தது.
“ஏலேய் வீரமலை உங்க அப்பன் அங்க குருணை மருந்தை குடிச்சிட்டு கெடக்கானாம் டா. நீ என்ன டா இங்க உட்கார்ந்து இருக்க ஓடுடா “என்று பெரியவர் ஒருவர் தகவல் சொல்ல இலையில் போட்ட உணவை அப்படியே போட்டு விட்டு அரக்க பரக்க ஓடினர் நண்பர்கள்.
வீரமலை தோட்டத்தில் போர் போடப்பட்டிருந்த இடத்தில் புழுதி மண் குவியலாக இருக்க அதில் கிடந்த வீரமலையின் தந்தையை அவசரமாக அவசர ஊர்தியில் ஏற்றினர் ஊர்க்காரர்கள்.
வீரமலை கண்ணீருடன் வேகமாக அவசர ஊர்தியில் ஏறிட
சிவாவோ “மாப்ள பயப்படாம போ .நாங்க பின்னாலேயே வர்றோம் டா. ஒண்ணும் பயப்படாத. மாமனுக்கு எதுவும் ஆகாது “என வண்டியை கிளப்பி விட்டு தாங்களும் இரு சக்கர வாகனத்தில் பறந்தனர் மணப்பாறைக்கு.
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வீரமலையின் தந்தை அனுமதிக்கப்பட, காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
வீரமலை அழுகையும் புலம்பலுமாக நின்றிருக்க. வெற்றி சிவா இருவரும் வந்து விட்டனர்.
“இதுக்கு தான் மாப்ள அவர் கிட்ட தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன் விவசாயமும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் னு. சொல்ல சொல்ல கேட்காம கரும்பை போட்டு விட்டு மெனக்கெட்டு இருந்த தண்ணியை பாய்ச்சி கடைசியில் காசுக்கு வாங்கி தண்ணி பாய்ச்சுனோம் டா. நம்ம கிழக்கு தெருவில் உள்ள முனியப்பன் மகன் கிட்ட தான் தண்ணிலாரி வர வச்சு தண்ணி பாய்ச்சினேன். கடைசியில் கரும்பு டன்னுக்கு நாங்க வச்ச விலையை விட கவர்மென்ட் குறைச்சலாக தான் டா நிர்ணயம் பண்ணி இருக்காங்க. நான் நேத்தே சொன்னேன் பரவாயில்லை விடுப்பான்னு. என் கிட்ட கடுப்படிச்சாரு . இப்ப இந்த மாதிரி ஒரு வேலையை பண்ணிட்டாருடா. “என்றவன் கண்களை துடைத்து விட்டு. “மச்சான் ஒண்ணும் ஆகாது இல்ல. நெஞ்சு பதை பதைக்குது டா. அவர் திட்டிக்கிட்டே இருந்தாலும் என்னை தேடாம இருக்க மாட்டாரு. இப்ப இப்ப. பயமா இருக்கு டா “என்று கதறியவனை அணைத்தபடி “ஒண்ணும் ஆகாது மாப்ள அதான் சரியான நேரத்துக்கு கொண்டு வந்து சேர்த்துட்டோம் இல்ல. காப்பாத்திடலாம் “என்று ஆறுதல் அளித்தான் சிவா.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அதீத கதறலுடன் ஒருவரை தூக்கி கொண்டு ஒரு இளம்பெண்ணும் பத்து பதினைந்து வயதில் இரு பெண் குழந்தைகளும் அரக்க பரக்க வெளியேறினர்.
வீரமலைக்கு நெஞ்சு அடைத்தது. அந்த குடும்பத்தின் பின்னால் சென்ற உறவினர்களோ .,”இப்படி பிஞ்சு புள்ளைகளை விட்டுட்டு தற்கொலை பண்ணிக்கிட்டானே படுபாவி. . கரும்பு லோனு வாங்கி அடைக்க முடியலைனு தற்கொலை பண்ணிக்கிட்டார்”என்று கூடுதல் தகவலை செவிலியர் சொல்லிட வீரமலையின் அம்மா பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்து விட்டார்.
“அத்த ஒண்ணும் ஆவாது அத்த மாமாவை காப்பாத்திடலாம். ஆஸ்பத்திரியில் இப்படி கத்தாத அத்த அப்புறம் உள்ள விட மாட்டாங்க”என்று சிவா கூறினான்.
வீரமலையின் தந்தைக்கு அவசர சிகிச்சை அளித்திட அவரது குடலை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
சில மணி நேரம் கழித்து மருத்துவர் வெளியே வந்ததும் “அந்த மருந்து குடிச்சவர் கூட வந்தது யார் உள்ள வாங்க “என்று அழைத்தபடி தனது அறைக்கு சென்றார்.
“இருடா மச்சான் நான் போய் கேட்டுட்டு வரேன் நீ இரு. வெற்றி வா போகலாம்” என்று மருத்துவரின் அறைக்கு சென்றனர் .
“இன்னும் கொஞ்சம் தாமதமாக கொண்டு வந்திருந்தாலும் காப்பாத்தி இருக்க முடியாது. மருந்தை எல்லாம் வெளியே எடுத்தாச்சு . ஆனாலும் குடலு வெந்து போச்சு. . இன்னும் ரெண்டு நாளைக்கு இங்கேயே வச்சு பாருங்க. புண் ஆறுற வரை பார்த்துக்கிட்டு அப்புறம் அழைச்சுட்டு போகலாம். அவருக்கு ஆயுசு கெட்டி பயப்படாதீங்க சில மருந்துகள் எழுதி தரேன் கரெக்டா வாங்கிட்டு வந்து நர்ஸ் கிட்ட தந்தா அவங்களே சரியா தந்திடுவாங்க “என்றார்.
“ரொம்ப நன்றி சார். “என இருவரும் வெளியே வர அதற்குள் வீரமலை திகிலடைந்தது போல நின்றிருந்தான்.
“டேய் ஒண்ணும் ஆகலைடா மாமாவை காப்பாத்தியாச்சு. இன்னும் ரெண்டு நாளைக்கு ஐசியூ வில் இருக்கணுமாம் அவ்வளவு தான் டா நாம சரியான நேரத்திற்கு கூட்டிட்டு வந்ததால பொழைச்சுக்கிட்டாரு. “என்று சமாதானம் செய்தான் சிவா.
அவனது அம்மாவிற்கு அப்போது தான் உயிரே வந்தது. அழுகையும் நின்றது.
ஊர்க்காரர்கள் எல்லாம் வந்து பார்த்து விட்டு வீரமலைக்கு அறிவுரை கூறி சென்றனர்.
“இது இன்னும் எத்தனை காலத்துக்கு தொடரப் போகுதோ தெரியலை. . மழை மாரி பேஞ்சா தானே தீர்வு கிடைக்கும். இந்த அரசாங்கத்தை சொல்லியும் ஒண்ணும் ஆகப் போறது இல்ல. நம்ம விதியை நாமளே நொந்துக்க வேண்டியது தான்.” என்று அலுத்துக் கொண்டனர்.
அன்று இரவு வெற்றியும், சிவாவும் ,வீரமலைக்கு துணையாக தங்கிக் கொண்டனர்.
இங்கே மலரோ,’ ஏன் சிவா பேருந்து நிலையத்தில் இல்லை.?’ என்று குழம்பி போய் இருக்க , செண்பகவல்லி தான் அவளிடம் பொதுவாக ., “இந்த வீரமலை பயலோட அப்பன் குருணை மருந்தை குடிச்சிபுட்டானாம்ல. மணப்பாறை ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடினானுவ. இப்ப தான் உன் அத்தை வந்து தகவல் சொன்னா. இளந்தாரி பயலுவ வெரசுனு தூக்கி போனதால உசுரை காவந்து பண்ணிட்டானுவல.. பொழைச்சுட்டானாம் வீரமலை அப்பன். எவ்வளவு வெசனமிருந்தா அப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பான் அவன். ம்ம்ம். காலையில ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடலாம்ல மலரு. நம்ம பய அங்க இருக்கியானாம். செத்த ஒரு ஓட்டம் போயிட்டு வந்துடலாம். என்னல நானே பேசிட்டு இருக்கேன் நீ கிலி பிடிச்சா மாதிரி உட்கார்ந்து இருக்க.ஏம்ல எழுந்திரு”என்றதும் சுயம் வந்தவள்.,” போவோம் ஆச்சி.” என்று விட்டு ஆச்சிக்கு மட்டும் சாப்பாட்டை போட்டு விட்டு அமைதியாக படுத்து விட சூரியா வேகமாக ஓடி வந்தாள்.
“அக்கா. ..மலரக்கா எங்க இருக்க.??”
“ஏம்ல சூரியா கத்துத என்னல விஷயம்.?”என்றபடி வெளியே வந்தவளை கைப்பிடித்து அழைத்து “சிவா மாமா ஃபோன் பண்ணி இருக்காரு உன் கிட்ட பேசனுமாம் .”என்றதும் வாங்கி விட்டு சூர்யாவை பார்க்க .,”சரி நான் கிளம்புறேன் காலையில் வந்து ஃபோனை வாங்கிக்கவா ??”என்றதும் சிரித்தபடியே ,”இருல ஒரு நிமிஷம் “என்று விட்டு சிவாவிடம் வேகமாக தனது எண்ணை கூறி விட்டு .,”இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க நான் பேசுறேன்”என இணைப்பை துண்டித்து விட்டு சூரியாவிடம் கைபேசியை கொடுத்தாள்.
அவன் உடனே அழைத்து விட்டான்.
“என்ன விஷயம். ??”என்றதும் வீரமலை தந்தையை பற்றி கூறி விட்டு “அதான் பஸ் ஸ்டாண்ட் வரலை பனி. . கோவமா? “பதமாக வினவினான்.
“இல்ல பரவாயில்லை நான் ஒண்ணும் எதிர்பார்க்கலை சரி அவங்க எப்படி இருக்காங்க .? இனி எந்த பிரச்சினையும் இல்லையே. . காலையில் நானும் ஆச்சியும் வந்து பார்க்கிறோம் “என்று சொல்ல அவனோ.,”நல்லா இருக்கார் ஆனா இன்னும் ஐசியூ வில் தான் இருக்காங்க. சாப்டிங்களா டீச்சர். ?” என்றதும் சிரித்தபடி.,”ம்ம்ம் “என்று பதில் அளித்தாள் .
“குரலை பார்த்தா சாப்டா மாதிரி தெரியலையே . இல்லாட்டி சவுண்ட் பலமா இல்ல வரும். “உண்மையைக் கேட்டு விட பனிமலர் மறைக்க இயலாது உண்மையை கூறி விட்டாள் இன்னும் சாப்பிடவில்லை என்று.
“டீச்சரம்மா ஏற்கனவே சோளத்தட்டை மாதிரி குச்சியா இருக்கீங்க. கல்யாணத்தில் அப்புறம் பந்தகாலில் தாலி கட்டிட போறேன்”என கிண்டல் செய்தான்.
“அடி விழும்”என்றவளிடம் பேச்சை வளர்க்க ஆயிரம் இருந்தது அவனுக்கு. ஆனால் அவளோ ஓரிரு வார்த்தை பேசிட பாவமாக கேட்டான்.
“ஏன் டீச்சர் என் கிட்ட பேச உங்களுக்கு ஒரு விஷயமும் இல்லையா என்ன.? ஏதாவது பேசு பனி. “கெஞ்சுதலாக கேட்க மலர் சிரித்தபடி.,”ம்ம்ம் நிறைய பேசலாம். அதற்கான நேரம் வரும் போது.. நிறைய பேசுவேன் அப்போ தயவு செய்து பேசாத’னு சொல்லப் போற “என்றாள்.
“அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன். இப்பவே மனசுக்குள்ள குளிரடிக்குது. இதுக்கு மேல நீ பேசிட்டே இருந்தா நான் உறைநிலைக்கு போயிடுவேன். “என்று சிரித்தான்.
“அடேங்கப்பா சமூக சேவகருக்கு ஐஸ் வைக்க எல்லாம் தெரிஞ்சிருக்கு .!!”
“சேவகருக்கு ஐஸ் வைக்க மட்டுமா தெரியும். இன்னும் என்னன்னெவோ தெரியும் அதை எல்லாம் சொன்னா டீச்சர் அடிக்க வந்துட்டீங்கன்னா அதான் அடக்கி வாசிக்கிறேன்” என்றான் பதவிசாக.
“புரிஞ்சா சரி “என்றாள் சிரிப்புடன்
“சாப்டியா சக்தி. !!”
“இன்னும் இல்லை வீரமலை மருந்து வாங்கப் போயிருக்கான் வந்ததும் போகனும்.நீ சாப்பிடு இதோ வந்துட்டானுக “
“சரி நான் வச்சிடுறேன் “என்றிட ,”இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே.?”
“சார் போய் தூங்குங்க.” என சிரிக்க “அதானே பார்த்தேன்” என்று விட்டு , மெதுவாக .,”போடி “என்றான்.
இருவரும் பேசி கொள்ள நிறைய இருந்த போதும் , நாகரீகம் கருதி இணைப்பை துண்டித்து விட்டாள் மலர்.
சிவா தனது கைபேசியில் இருந்த அவளின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்து கொண்டு மருத்துவமனையின் தூணில் சாய்ந்திருந்தான் சிரித்த முகத்துடன்.
மலரும் அதே நிலையில் படுத்தவள் நிம்மதியாக உறங்கிட.
காலைப்பொழுது ரம்மியமாக விடிந்
தது. சொன்னது போலவே மணப்பாறைக்கு சென்று வீரமலையின் தந்தையை பார்த்து விட்டு வந்தனர்.
ஒரு வாரத்தில் வீரமலை தந்தையை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அழைத்து வர இங்கே தனஞ்செயன் அவசரகதியில் முத்துலெட்சுமியையும் சங்கரனையும் சந்திக்க வந்திருந்தான்.