சிவசக்திபாலன் மலரிடம் தன் காதலை கடிதம் மூலம் தெரிவித்தவன்,’ அவள் முடிவை முளைப்பாரி ஊர்வலம் முடிந்ததும் பதில் சொல்ல வேண்டும் ‘என்றான்.
கடிதத்தை பிரித்தவளுக்கு ஒரு புறம் சிரிப்பு ,மறுபுறம் கோபமும் வந்தது.
மலர் கடிதத்தை எடுத்து கொண்டு அமைதியாக சென்று விட்டாள்.
திருவிழா மஞ்சள் நீராட்டு விழா துவங்க ஊர் இளம் பெண்கள் தன் முறை மாமன் மீது மஞ்சள் நீர் ஊற்றிட அலைந்தனர். புதிதாக மணமான தம்பதிகளும் இவ்விளையாட்டில் ஈடுபட சிவா மலரைத் தேடி அவள் இருக்கும் தெரு வழியே பல முறை சென்று வந்து விட்டான். ஆனால் அவளை தான் காணவில்லை .
சூரியாவிடம் கேட்கலாம் என்றால் அவளும் சிவாவின் கண்களுக்கு தென்படவில்லை .
“எங்க தான் போயிருப்பாங்க நானும் சல்லடையா சலிக்கிறேன் சிக்க மாட்டேங்கிதுகளே .”என்று நொந்தபடி வீட்டிற்கு செல்ல அங்கே தான் அவனுக்கு விஷயமே தெரிந்தது.
“ஏம்மா இன்னுமா காயம் சரியாகாம இருந்திருக்கும்”என்றவனிடம் செல்வியோ .,”வயசானவங்கடா அதான் இவ்வளவு நாள் ஆகி போச்சு. நீ சாப்பிட்டு. உன் தங்கச்சியை கடைவீதிக்கு கூட்டிட்டு போ. வந்ததிலிருந்து எங்கேயும் போகவே இல்லை அவ “என்க
“ம்மா அதெல்லாம் நீ கூட்டிட்டு போ. என் கிட்ட எங்க இருக்கு காசு?,நானே பெட்ரோல் போட காசில்லாம திரியிறேன் நீ வேற. இதுக்கு தான் நீ பாசமா சோறு போட்டியா. அட போம்மா “என்று கை கழுவி விட்டு சென்றான்.
“ஊட்ல ஒரு வேலை கேட்குதா? தடிமாடு மாதிரியே திரிய வேண்டியது . வரட்டும் பெரியவன் கிட்ட சொல்லி இவனையும் கொண்டு போய் துபாய் ல போட சொல்றேன்”என்றபடி தட்டை எடுத்த செல்வியை பார்த்து பாக்யா விடாது சிரித்தாள்.
“இப்ப உனக்கு என்ன சிரிப்பு வேண்டி கெடக்கு, போடி போய் தாவணி பாவாடையை கட்டிட்டு வா கடைவீதிக்கு போவோம் “என்றார் செல்வி.
“இல்ல நீ உன் பெரிய மவனை அனுப்பினதுக்கே இன்னும் அழுதுட்டு கெடக்குற, இதுல நீ சின்ன அண்ணனை அனுப்புறியா .அட போமா காமெடி பண்ணிக்கிட்டு. “என்றவள் எழுந்து சென்றாள் கடைவீதிக்கு செல்ல கிளம்புவதற்காக.
“அது என்னவோ உண்மை தான் சின்னவன் என் காலடியிலேயே சுத்தி சுத்தி வருவான் என்ன பண்ண போ “என்று விட்டு தானும் கிளம்பினார்.
இங்கே மணப்பாறையில் செண்பகவல்லிக்கு கட்டை பிரித்து விட்டனர். காயம் வெகுவாக ஆறி இருந்தது .
“இனிமேல் கட்டு எல்லாம் போட வேண்டாம் மா. நல்லா ஆறிப் போச்சு காயம். இனிமே இந்த ஆயின்மெண்ட் மட்டும் போடுங்க போதும். சில மாத்திரை எழுதி தரேன் கன்டினியூவா கொடுங்க “என மருத்துவர் மலரிடம் கூறிட அவளும் சரி என்றாள்.
பொன்னுசாமியும் ,தினகரனும் சாப்பிட்டு விட்டு பின்னர் செல்லலாம் என்று சொல்ல சூரியாவும் வம்பு செய்து மலரை சம்மதிக்க வைத்தாள்.
“மலரு இது சின்ன கடை தான். நாலு டேபிள் தான் இருக்கும் ஆனா கும்பல் இருந்துகிட்டே இருக்கும். நான் இங்க வரும் போது எல்லாம் பிரியாணி இங்க தான் சாப்பிடுறது. சரியான டேஸ்டா இருக்கும். சாப்பிட்டு பாரு “என தினகரன் சொல்லிட அனைவரும் சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்து உண்டனர்.
“சரி தான் என் பேரனுக்கு ரசனை எல்லாம் பிரமாதம் தான். வரப் போறவ தான் பாவம் உன் ருசி அறிஞ்சு சமைச்சு போடனும்”என்றார்.
“அம்மாயி அதெல்லாம் நான் பார்த்துப்பேன். ரூம்ல நான் தானே சமைக்கிறேன் பின்ன பொண்டாட்டிக்கு சமைச்சு போடமாட்டேனா?” என்றவனை சிரிப்புடன் பார்த்தவர் .,”ஏல பேராண்டி நீ பொழைச்சுக்குவ மருமகனே சீக்கிரம் பொண்ணு பார்த்துடுங்க இந்த கடுத்தம் (தடவை ) கல்யாணத்தை முடிச்சு வெளிநாட்டுக்கு அனுப்பலாம்”என்று சொல்ல பொன்னுசாமியோ .,”அது சரி அத்த. வூட்ல ரெண்டு பொருவை கல்யாண வயசுல வச்சுகிட்டு பயலுக்கு கண்ணாலம் பண்ணா அவ்வளவு தான் ஊரு ஏளனமா பேசிப்புடாது. நீங்க வேற. “என்றார் .
“அதுவும் சரிதான். ஏம்ல மலரு உனக்கு தான் மொதோ மாப்ள தேடனும். எந்த சீமராசா வாய்ச்சிருக்கானோ உன் கிட்ட பாடு பட “என்றதும் மலர் நினைவில் அனுமதி இல்லாமல் வந்து போனான் சிவா .
“ஏ ஆச்சி உனக்கு. நான் வேலைக்கு போன பொறவு தான் கல்யாணம் பண்ணிப்பேன். போ ஆச்சி “என்றதும் பொன்னுசாமி கவலையாக “வயசு ஆவுதுல பொருவே. வெரசா மாப்ள பார்க்கலாம். நாம ஏன் தள்ளி போடனும். ஏன் உன் அப்பன் தான் மாப்ள பார்க்கணுமா என்ன??”என்று சற்று ஆற்றாமையாக கேட்டதும் பனிமலருக்கு கோபம் வந்து விட்டது.
“ஏன் பெரியப்பா இப்படி எல்லாம் பேசுறீங்க. நான் என்ன வேற வூட்டு பொண்ணா .இல்ல நீங்க தான் அப்படி நெனக்கியளா?. அப்படி இருந்தா சொல்லுங்க பெரியப்பா நாங்க ரெண்டு பேரும் தூத்துக்குடிக்கே போயிடுதோம். ஏன் எங்களால உங்களுக்கு வீண் சிரமம் “என்றாள்.
“அட பொருவே ஒரு வார்த்தை சொன்னதும் எம்புட்டு கோபம் வருது உனக்கு. இப்ப சொல்றேன் உனக்கு நான் தான் மாப்ள பார்ப்பேன். நீ அப்ப மாத்தி பேசக் கூடாது”என்று சொன்னதும் மலரோ வேகமாக.,”நீங்க ஒரு கழுதையை பார்த்து கட்டிக்க சொன்னாலும் நான் கட்டிக்கிறேன் போதுமா”என்றாள் சிரிப்புடன்.
தினகரனோ”யப்பா அது தான் சொல்லுதுனு கழுதை கிழுதையை பார்த்துடாதப்பா “என்றான்.
“அண்ணே கிண்டல் பண்ணாதீங்க. ஆனாலும் உனக்கு சேட்டை ஜாஸ்தி “என்று மலர் சொல்ல., கலகலவென்று சிரித்தவன் .,”சரி வாங்க கிளம்பலாம். சூர்யா சாயங்காலம் நீயும் மலரும் கடை வீதிக்கு போயிட்டு வாங்க “என்றபடி எழுந்தான்.
ஆச்சியை வீட்டில் விட்டு விட்டு சற்று ஓய்வெடுத்த மலர் சூர்யாவுடன் கடை வீதிக்கு கிளம்பினாள் .
சற்று பொழுது மங்கி இரவு நேரம் துவங்கிய வேளையில் கோவிலருகே இருந்த கடைவீதி ஜொலி ஜொலித்தது.
சூரியாவின் தோழிகளுடன் இணைந்து கொண்ட மலர் கடைவீதியை சுற்றி வர, சிவா அவளை கண்டு கொண்டான்.
வெற்றி வீரமலையுடன் வந்தவன்.,”பங்கு எனக்கு அந்த கடையில் சின்ன சில்ற வேலை இருக்கு இந்தா வந்திடுறேன்”என்று நகர்ந்து மலரை நோக்கி சென்றான்.
“ஓய் ஜில்லு .”என்றவன் விசிலடிக்க அவனது விசில் காற்றோடு கரைந்தது. அவனை கண்டு கொள்ளாமல் வளையலை பார்த்து கொண்டிருந்தாள் மலர். மனதில் சிரித்துக் கொண்டிருந்தாள்.
சூரியா தன் தோழிகளுடன் நெயில் பாலிஷை தேடிக் கொண்டிருந்தாள்.
“ஓய் கூப்டா காதுல விழுகாதா. சொல்லு என்ன முடிவு பண்ணி இருக்க. ??”
“எதை பத்தி.?? என்றாள் வளையலிலிருந்து கண் எடுக்காமல்
“ப்ப்ச் லெட்டர் தந்தேனே அதை பத்தி தான். சீக்கிரம் ஒரு முடிவை சொல்றது .சொன்னா வந்து பொண்ணு கேட்பேன் எங்கண்ணன் கல்யாணத்தோட சேர்த்து நம்ம கல்யாணத்தையும் முடிச்சிடலாம். “என்று சொன்னவனை முறைத்து விட்டு .,”எனக்கு விருப்பம் இல்லை என்னை தொந்தரவு செய்யாத நல்ல விதமாக சொல்லும் போதே ஓடிரு. இல்ல என் கிட்ட வீணா அடி வாங்கிடுவ “என்று மிரட்டி விட்டு நகர சிவாவும் பின்னாலேயே சென்றான்.
“மலரு நில்லு, ப்ப்ச் நில்லு மலரு. ஏய் நில்லுடி.!”என்றதும் கோபத்துடன் திரும்பியவள் .,”இதோப்பாரு. டி காபினு போட்டு பேசின பையன்னு கூட பார்க்க மாட்டேன். சப்புனு ஒண்ணு விட்ருவேன் தெரியுதால. போல அந்தாண்ட. ஏதாவது புதுசா ஒரு பொண்ணை கண்டா ஒரு பேப்பரை தூக்கிட்டு வந்திட வேண்டியது. ஜீவனை வாங்குறானுக. “என்று திட்டி விட்டு போய் விட்டாள்.
‘ஏதேய் அடிப்பியா செஞ்சாலும் செய்வா டீச்சரம்மா நம்ம மனசுல இருக்கிறதை வாயாலையே சொல்லி இருக்கனுமோ லெட்டர் வேலைக்காகலை ‘ என தலையாட்டியபடி நின்றிருந்தான்.
“பெரிய பல்பு போல. ஏன் பங்கு உனக்கு இந்த வேண்டாத வேலை “என்றபடி வந்து நின்றான் வீரமலை.
“ப்ப்ச் நீ வேற ஆரம்பிக்காத . இந்த அழகானப் பொண்ணுங்களுக்கே திமிர் ஜாஸ்தி பங்கு. நம்மளை அலைய விடாம செலக்ட் பண்ண மாட்டாளுங்க. இது தானே பர்ஸ்ட் டைம். பார்ப்போம் நாம எல்லாம் கஜினி முகமது மாதிரி திரும்ப திரும்ப ட்ரை பண்ணுவோம் னு தெரியலை. இவளை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணலை நான் சிவனேஷ் இல்லடா. என் பேரை பழையபடி சிவசக்திபாலன் னு மாத்தி வச்சுக்கிறேன்”என்றவன் மனதில் .,’அச்சோ இவளை நம்பி சபதம் எல்லாம் போட்டோமே சரி வருமா. ‘என்று மனதில் புலம்பினான்.
“ரைட்டு அப்ப இனிமே உன்னை நான் சிவசக்திபாலன் சிவசக்திபாலன் னு தான் கூப்பிட போறேன். “என்று வெற்றி நக்கலடித்தான்.
********
திருவிழா முடிந்திருந்தது. மலர் சூரியாவின் பள்ளிக்கு வேலைக்கு செல்ல துவங்கியிருந்தாள். சூரியாவிற்கு பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்க. திருச்சியில் ஒரு கல்லூரியில் பி.காம் சேர்ந்திருந்தாள்.
வடிவரசிக்கு இந்த முறை மூன்று பாடத்தில் போயிருந்தது. இதற்கு மேலும் படிக்க முடியாது என்றவள் கணினி வகுப்பில் சேர்த்து விடும்படி கூற சங்கரன் வேண்டாம் வீட்டில் இருந்து வீட்டு வேலைகளை கற்றுக் கொள்ளும்படி கூறினார்.
“ஏன் அவ படிக்க கூடாது அவ கேட்கிற படிப்பில் சேர்த்து விடுங்க. வீட்டு வேலை செய்ய இங்க ஆளா இல்ல”என்றவர் சற்று தாமதித்து “இல்ல உங்க மூத்த மகளோட அதிகமாக படிச்சிடுவா னு பொறாமையில் செய்ய மாட்டேங்கிறிங்களா ??”என்று வன்மமாக கேட்க சங்கரன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
சொன்னபடியே கணினி வகுப்பில் வடிவரசியை சேர்த்து விட்டார்.
போகின்ற இரண்டு மணி நேர வகுப்பிற்கு புது ஸ்கூட்டி, புது மொபைல் ,எல்லாம் வாங்கியாயிற்று. பகட்டாய் போய் வந்தாள் வடிவரசி.
இடையிடையே சிவாவை கண்டு நாணி கோணி சிரித்து விட்டு பேசி செல்வாள். சிவா ஏற்கனவே மலர் தன் காதலை ஏற்காததால் கடுப்பில் அலைந்து கொண்டிருந்தான்.
இவர்கள் இவ்வாறென்றால் சத்தமின்றி இரு காதல் வளர்ந்து கொண்டிருந்தது.
நாட்கள் அழகாய் சென்றிட., சிவா தனது காதலை மலருக்கு உணர்த்தும் முயற்சியில் இறங்கி இருந்தான்.
ஆனால் அவள் தான் கண்டு கொள்ளாமல் இருந்தாள்.
தன் மாணவர்களுடன் மலர் மணப்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கி நடக்க எதிரே வண்டியில் தன் நண்பன் வெற்றியுடன் வந்த சிவா இறங்கி அவளை வழி மறித்தான்.
“இந்தா டீச்சரம்மா நீ லவ் பண்ணுவியா மாட்டியா. நான் உன்னை அப்படி லவ் பண்றேன். ஆமா. இன்னைக்கு ஒரு பதில் சொல்லிட்டு தான் போற”என்று வழியை விடாமல் நின்றான் சிவா.
“உனக்கு பல தடவை சொல்லியாச்சு என் பின்னாடி அலையாத. நான் தூத்துக்குடி காரில, கைய கால கட்டி கடல்ல தூக்கி போட்டு போய்கிட்டே இருப்பேன் ஆமா. வழியை விட்டு தள்ளி நில்லுல . வாங்க பிள்ளைகளா போகலாம். “என்று சிலுப்பி கொண்டு தன் மாணவர்களுடன் சென்றாள்.
“இவளை கரெக்ட் பண்றது எப்படினு தெரியலையே. ” என்று நெற்றியை நீவியபடி நிற்க ,வெற்றி அவன் தோள் மீது கையைப் போட்டபடி “ஏன் டா நம்மூர் ல தான் உனக்கு ஆஃபர் அதிகமாச்சே அதுல ஒண்ண பிடிச்சு கட்டுறது. டீச்சரே தான் வேணுமா.அதுவும் அந்த வடிவரசி உன்னை தான் பார்க்குது “வெற்றி கேட்க.
“டேய் நான் என்ன லவ் பண்ண ஆள் கிடைக்காமலா அலையிறேன் .போடா இந்த பிரேமம் படம் பார்த்தியா அதுல வர்ற டேவிட் ஜார்ஜுக்கு ஒரு மலர் டீச்சர் னா இந்த சிவாக்கு ஒரு பனிமலர். அவ பேரை கேட்டதுமே கருத்தம்பட்டியே குளுகுளு னு ஆயிடுச்சு பாரு டா. நாளையில் இருந்து சொட்டரு போடனும்.”என்று நெட்டி முறித்தவனை முறைத்து விட்டு. வெற்றி கிண்டல் செய்தான்.
“டேய் அதுல மலர் டீச்சர் அவக அத்தை பையனை கட்டிக்கும். ஜார்ஜை மறந்து போயிடும். அந்த டீச்சர் அவனை லவ்வாவது பண்ணுச்சு. ஆனா இது. அந்த பொண்ணு பேரு தான் டா பனிமலர். பேச்சு எரிமலையாவுள்ள இருக்கு. நீ எல்லாம் டீச்சருக்கு செட் ஆவியா. அது படிப்பென்ன நம்ம ரேஞ்சு என்ன. அட போடா. வெறும் வீதியில் வெள்ளை மாளிகை கட்டிக்கிட்டு.”நண்பனை வாரினான் வெற்றி.
“நீயெல்லாம் கிண்டல் பண்ற அளவுக்கு நான் ஆயிட்டேன் இல்ல, என்ன பண்றது எல்லாம் இந்த டீச்சர்னால வர்ற வினை”என்று சலித்து கொண்டான்.
சிவாவின் வீட்டில் அவன் பெற்றோர் பேசிக் கொண்டிருந்தனர்.
“ஏங்க வர்ற வெள்ளிக்கிழமை பொண்ணு கேட்க போகலாம் . தனா ஊருக்கு போறதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடனும். அந்த மலர் புள்ள அவ்வளவு அம்சமா இருக்கா. நல்ல பொறுமை தனாவுக்கு ஏத்த பொண்ணு டீச்சருக்கு படிச்சிருக்கு வேலைக்கு போகுது அப்புறம் என்ன போய் பேசலாம். தனாவுக்கு முடிச்சிட்டு அடுத்து நம்ம பாக்யாவுக்கு தான் மாப்ள தேடனும்.” என்றார் செல்வி.
“சரி செல்வி போய் பேசலாம். ஆனா முத்துலெட்சுமிக்கு ரெண்டு பிள்ளைகளையும் இங்கேயே குடுக்க ஆசையாம் தகவல் கேள்வி பட்டேன். எப்படி சின்னவன், பெரியவன் ரெண்டு பேருக்கும் ஓரே மேடையில கல்யாணத்தை முடிச்சிடுவோமா என்ன செய்யலாம் னு சொல்லு.?நமக்கும் ஒரே செலவா போயிடும். அப்புறம் பாக்யா கல்யாணத்துக்கு தனா இன்னும் ரெண்டு வருஷம் துபாய்ல வேலை பார்த்தா போதும். சின்னவனையும் அனுப்பி வைக்கலாம். இங்க இருந்தா சுத்தப்பட மாட்டானுவ. ரெண்டு வருஷம் கழிச்சு வந்ததும் நம்ம நெலத்தை வித்துட்டு ஒரு மளிகை கடை அது மாதிரி வச்சு தரலாம் வையம்பட்டில ஒண்ணு மணப்பாறையில ஒண்ணுனு வச்சு குடும்பத்தை ஓட்டட்டும். இப்ப இருக்கிற சூழ்நிலைக்கு வெள்ளாமை விடனும்னா அது ஆகற காரியம் இல்ல. குடிக்கவே தண்ணி சிக்க மாட்டேங்கிது. இந்த பொட்டல் ல இருந்துகிட்டு. நடுராத்திரியில் தண்ணிக்கு அலையிற சோலி நம்ம பிள்ளையளுக்கு வேண்டாம். எங்கனயாவது நல்ல வசதியான இடத்தில் வீடு கட்டி இருந்துட்டு போகட்டும். என்னப்பா சரிதானே !!”என்று தந்தையிடமும் ஒரு வார்த்தை கேட்டு கொண்டார் கருப்பசாமி.
“எல்லாம் சரி தான் ஆனா வெள்ளாமை காட்டை விக்கலாம் னு சொல்றியே அதான் நெஞ்சடைக்கிற மாதிரி இருக்கு. உன் அம்மாவை நான் கட்டிக்கிட்ட போது என் கிட்ட ஒரு வீடு மட்டும் தான். அவ வந்து. அடுத்தவங்க தோட்டங்காட்டுல வேலை பார்த்து வெம்பாடு பட்டு குடும்பத்தை சிக்கனமா நடத்தி அந்த காலத்தில் நாலாயிரம் ரூபாய் போட்டு வாங்குன நெலம் அது. அதை விக்க சொல்றது தான் மனசுக்கு ஒப்பலை. என் உசுரு இருக்கிற வரைக்குமாச்சு அந்த நெலத்தை விக்காதடா தம்பி. நான் கண்ணு மூடுன பொறவு என்னமோ பண்ணிக்கங்க. நான் முழிச்சு பார்க்க போறதில்லை. வடக்கு தெசை போனவன் திரும்பி வந்து கேட்கவும் போறதில்லை. அந்த நெலத்துல என் பொண்டாட்டி காளியம்மா இருக்கிறா. அவ கட்டை தான் சுடுகாட்டுல இருக்கும் ஆனா உசுரு அங்கனக்குள்ள தான் சுத்துது .”என்றார் தன் இடுங்கிய கண்களில் வழிந்த நீரை துடைத்தபடி.
சிவா தன் பாட்டன் பேசும் போது வந்திருந்தவன் அனைத்தையும் கேட்டு விட்டு உள்ளே நுழைந்தான்.
“இப்ப என்னத்துக்கு அழுவுற. உன் பொண்டாட்டி பாடுபட்டு வாங்குன நெலத்தை விக்க எல்லாம் மாட்டாக. சும்மா கண்ணு கலங்கிட்டு. யப்பா .எதுக்கு இந்த பேச்சை அவர் கிட்ட பேசுறீங்க. பாட்டா இதை புடி, யம்மா சோத்தை போடு”என்று ஆளுக்கு ஒரு வேலையை கொடுத்து விட்டு கைகால் கழுவ சென்றான்.
தனது கண் கண்ணாடியை துடைத்து விட்டு பேரன் வாங்கி வந்திருந்த பொட்டலத்தை பிரித்தார். சுட சுட இருந்தது சுண்டல் இன்னொரு பொட்டலத்தில் சுருட்டும் ,பட்டணம் பொடியும் .அதை மகனுக்கும் மருமகளுக்கும் தெரியாமல் இடுப்பில் மறைத்து வைத்தார் வேலுத்தம்பி.
பேரனோடு பொழுதோடு வம்பு வளர்த்தாலும் தனக்கு வேண்டியதை அவனிடம் தான் கேட்பார் வேலுத்தம்பி.
சுருட்டு குடிக்கவில்லை என்றால் காலைக்கடனை முடித்திட இயலாது அந்த பெரிய மனிதரால். அதே போல பட்டணம் பொடி. மணப்பாறைக்கு சென்றால் அவருக்கு வாங்கி வந்து விடுவான் சிவா .
“ஆமா டா நீ வெட்டியா ஊர் சுத்திட்டு திரியுற வயலும் தண்ணி இல்லாம காஞ்சு கெடக்கு உன் அண்ணன் துபாயில போய் அந்த பாலைவன வெயில்ல உழைச்சு சம்பாதிச்சு கொட்டுறான் அதனால பகுமானமா கஞ்சி குடிக்கிறோம். நாளைக்கு அவனுக்கு கல்யாணம் காட்சி பண்ணிட்டா அப்புறம் எங்களுக்கு கஞ்சி ஊத்துறது யாரு? நிலத்தை வித்து ஏதாவது முதலீடு செஞ்சா உட்கார்ந்து திங்கலாம் “என்று நீட்டி முழக்கினார்.
“வேலை கிடைச்சு போக மாட்டேன்னு சொல்றாய்ங்களா ஏதாவது பேசனும் னு பேசிக்கிட்டு. ம்மா சோத்தைப் போடுமா. தண்ணி வந்தா விவசாயம் பண்ண மாட்டேன்னா சொல்றேன்” என்றவன் தட்டில் இருந்த சோற்றை பிசைந்து கொண்டிருந்தான்.
“பேச்செல்லாம் வக்கனையா தான் பேசுற ஆனா ஒரு மாட்டை புடிச்சு கட்டுடானா கேட்க மாட்ட” என மீண்டும் கருப்பசாமி ஆரம்பிக்க
வேலுத்தம்பி காதை குடைந்தபடி,” வந்தவனை சாப்பிட விடுய்யா அவன் பொறுப்பா வந்திடுவான் அதெல்லாம்” என்று மகனை அதட்டினார்.
சிவாவோ பெயருக்கு கொறித்து விட்டு எழுந்து கொள்ள பெற்றவளுக்கு தான் மனம் தாளவில்லை.
“யய்யா சிவா இது என்ன மூணு வயசு பய சாப்பிடுற மாதிரி சாப்பிடுற. உனக்கு பிடிக்கும்னு தானே மாங்காய் கத்தரிக்காய் போட்டு சாம்பார் வச்சேன். இப்படி சாப்டா எப்படிய்யா.?? “நொடித்து கொண்ட தாயிடம் சலித்தபடி.,”ப்ப்ச் பசிக்கலம்மா”என்று சொல்லி விட்டு சென்றான்.
“அடேய் கஞ்சியை ஒழுங்கா குடிச்சிட்டு போடா இல்லாட்டி உங்க அம்மாவுக்கு சோறு எறங்காது “என்று கருப்பசாமி சொன்னதும்,” எல்லாம் சாப்டாச்சு சாப்டாச்சு” என்றவன் போய் விட்டான்.
மனதிலோ “சோறே எறங்க மாட்டேங்கிது . உள்ள ஒருத்தி கெடந்து அனத்துறா . ச்சே நல்லா பிடிச்சுச்சு அவ மேல கிறுக்கு.” என மனதில் வரித்த மலரை வஞ்சியபடி வெளியேறினான்.
அவன் போகும் வழியில் ஒருவன் பாக்கெட்டில் போட்டு வைத்திருந்த செடிகளை தூக்கி கொண்டு நடந்தான்.
“எண்ணே. அட முருகு அண்ணே ஏன் இப்படி தூக்கிட்டு போற? வா நான் கொண்டு போய் விடுறேன் .”என ஏற்றிக் கொண்டவன். “எதுக்குண்ணே இவ்வளவு சிரமப்படுற . செடி நட்டு வளர்த்து அது ஏதாவது பிரயோசனம் உண்டா. இந்த செடி வளர தண்ணி கூட இல்ல நம்ம ஊர் ல “என்றான் சிவா.
அவரோ சிரிப்புடன். “ஏதோ நம்மளால முடிஞ்சது சிவா. பொறந்ததுக்கு பிரயோசனமா இந்த பூமிக்கு ஏதாவது நல்லது செஞ்சுட்டு போவோமே. நான் வைக்கிற மரத்துல நாலு தழைஞ்சு நம்ம பேரை சொல்லிடாது . அது போதும் நமக்கு. அட இந்த செடிகளை நட்ட பிறகு காயுதேன்னு பாவம் பார்த்தாவது மழையை கொடுக்கட்டுமே அந்த கடவுள். “என்றார் முருகன்.
“உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா. ஏண்ணே இதுவரை எத்தனை மரம் நட்டு இருப்ப. அண்ணி ஒண்ணும் சொல்லாதா உன்னை ??”கேட்டபடி வண்டியை ஓட்டினான்.
“அவ திட்டுவா தான். அவ திட்டுறதுக்கு எல்லாம் இதை விட முடியுமா என்ன இந்தா இந்த இடம் தான். நிறுத்து நிறுத்து”என்று சொல்லவும் சிவா வண்டியை நிறுத்தினான்.
“ரொம்ப நன்றி சிவா !!”என்று தன் வேலையை துவங்க , அங்கே மலர் தன் மாணவர்களுடன் நின்றாள்.
“முருகண்ணே ஏன் இவ்வளவு நேரம் ஆச்சு. சரி வாங்க பசங்க எல்லாம் குழி பறிச்சு வச்சுட்டானுக. பிள்ளைங்க தண்ணி கொண்டு வந்திடுச்சு “என்று நகர சிவாவுக்கு மலரைக் கண்டதும் முகத்தில் பல்ப் எரிந்தது.
“முருகண்ணே இரு, நானும் உதவி பண்றேன் “என்றபடி பாக்கெட் செடிகளை சுமந்து வந்தான்.
“டீச்சருக்கு பொதுநல சேவை செய்ய புடிக்குமோ. ??”என்று கேட்க அவள் பதில் தந்த பாடு தான் இல்லை.
“சரி லவ் பண்ண வேண்டாம் சாதாரணமாவாச்சும் பேசலாம் இல்ல. ஒரு சொந்தக்காரனா நினைச்சு. அது கூட பேச கூடாதோ “என்று முணுமுணுத்தவன் அவள் செடியை நடவும் தண்ணீரை ஊற்றினான்.
“பேசாம என்ன. சார் ஊர் சுத்தாம ஒழுங்கா இருந்தா பேசுறதுக்கு என்ன பேசலாமே.!! “என்றபடி அடுத்த செடியை எடுத்தாள்.
“நீ மட்டும் உன்னைகட்டிக்க சம்மதம் மாமானு ஒரு வார்த்தை சொல்லு நாளையில் இருந்து பொறுப்பா மாறிடுறேன்”என்றான்.
அவள் பதில் பேசாமல் சென்று விட்டாள்.
இதை வடிவரசி நின்று பார்த்து விட்டு வீட்டுக்கு சென்றவள் கோபமாக அருகிலிருந்த ஜாடியை தூக்கிப் போட்டு உடைத்தாள்.