மலருக்கு புடவை எடுக்க பணம் கொடுத்தவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.  

மறுநாள் காலையில் சித்திரை செல்வியுடன் புடவை, நகை ,எடுக்க கிளம்பினர். 

சிவா இளைஞர்களுடன் தூர் வாரும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தான்.  

கடைக்கு சென்றிருந்தவர்கள் முகூர்த்த பட்டு எடுத்து முடித்ததும் மற்றவர்களுக்கு எடுக்கும் போதே தனஞ்செயனுக்கு சிவா அழைத்தான். 

“தனா எந்த கடையில இருக்கீங்க… ??” 

“சுமங்கலி ல டா… “

“சரி நான் வரேன் எந்த செக்ஷன் ??”

“புடவை செக்ஷன் ல தான் ஆமா வரலைனு சொன்ன”என்றவனிற்கு பதில் சொல்ல தான் அவன் இணைப்பில் இல்லை. 

“வச்சுட்டான் டா “என்று விட்டு தனக்கு சட்டை எடுக்க சென்று விட்டான். 

எத்தனை வேகத்தில் வந்தானோ ஜவுளிக்கடையில் வந்து வண்டியை நிறுத்தினான். 

மலர் புடவையை எடுத்து கொண்டிருக்க, சிவா வந்ததும் “அண்ணா அந்த அரக்கு கலரை எடுங்க “என்றான். 

அவன் வந்ததை கண்டு கொண்டவள் சிரிப்புடன் .,”வரலைனு யாரோ சொன்னாங்க…”என்றாள். 

“அதெல்லாம் அப்படி தான் சொல்வேன் அதுக்காக பொண்டாட்டிக்கு மொத மொத சேலை எடுக்க நான் வராமலா ??”என்றவன்.,”அண்ணா அந்த அரக்கு கலர் ல வேற டிசைன் காட்டுங்க அண்ணா “என்று புடவையில் கவனம் செலுத்தியவன் மலரை பார்க்கவில்லை. 

“ரொம்ப பண்ணாதீங்க சமூக சேவகரே “என்று முணுமுணுத்தவளிடம் “ஓய் என் தவத்தை கலைக்காதடி பொண்டாட்டி அப்புறம் ஏடாகூடமாக ஏதாவது பண்ணிடப் போறேன்… “என்றான். 

“என்னப் பண்ணுவீங்களாம்… ??”

“யாருக்கு தெரியும்.. ஒரு ஆர்வத்துல அண்ணனுக்கு கல்யாணம் நடக்கப்போற அதே மண்டபத்தில் நமக்கு கல்யாணம் நடந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல… நீ வேற அடிக்கடி வந்து ஒரு நல்லப் பையனோட மனசை கலைக்கப் பார்க்கிற “என்றான் அவளின் முகத்தை பார்த்திடாமல். 

“சரி பொழைச்சு போ இனிமே உன் முன்னாடி வரலை நல்லப் பையன் மனசை கெடுக்க விரும்பலை.. “என்று சொல்லி விட்டு நகர, சிவா மலருக்கான புடவையை எடுத்து கொடுத்து விட்டு கிளம்பி விட்டான். 

“என்னல மைனரு வந்துட்டு போயிட்டாரு போல “என்று செண்பகவல்லி கிண்டல் செய்திட” நீ சும்மா இரு ஆச்சி “என்று சிரித்து விட்டு சிவாவிற்கு சட்டையை எடுத்தாள்.  

திருமணத்திற்கு தேவையான அனைத்து ஆடைகளும் நகையும் எடுத்து விட்டு கிளம்ப தினகரனோ பாக்யாவிற்கு புடவை எடுக்க சொல்லி மலரிடம் கேட்டான்.

“அண்ணா நீ நடத்து நடத்து… வா எடுப்போம்… கூடிய சீக்கிரம் உனக்கு சம்மந்தம் பேசணும் போலவே… “என்று கிண்டல் செய்தபடி புடவையை எடுத்தாள். 

“ஹலோ மேடம் உங்க கல்யாணம் முடிஞ்சதும் தான் நான் பாக்யாவை பொண்ணு கேட்க போறேன் “என்றான் தினகரன். 

“அப்போ ரெண்டு மூணு வருஷம் ஆகும் னு சொல்லு”என்றாள்.

“ரெண்டு மூணு வருஷமா தாங்காது தாயே நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க அண்ணன் பாவமில்லையா..!!” என்றவனிடம் .,”பாவம் தான் நான் என்ன செய்வேன் உங்க மச்சான் ஒரு முடிவோட இருக்கார் “என்றாள். 

மச்சானை ஒரு வழி ஆக்கிட வேண்டியது தான் என்று சிரித்தபடி தன்னவளுக்கு புடவையை எடுத்து வைத்து கொண்டான். 

இங்கே தனஞ்செயனுக்கு சூரியாவை அழைத்து வராத கோபம் வேறு…  செல்வி  சமாதானம் செய்ய அவனோ யம்மா எந்த காலத்தில் இருக்க நீ போ  அவ மட்டும் புடவை பிடிக்கலைனு சொல்லட்டும் அப்புறம் பாரு என்று கடிந்து கொண்டான். 

அதான் டிவி பொட்டி மாதிரி கைல வச்சிருக்கியேல அதுல படம் பிடிச்சு காட்டு அவ பார்த்துக்கிடட்டும் என்று செண்பகவல்லி ஆச்சி சொல்ல அவனோ கடுப்பாக அட போ ஆச்சி அவ வச்சிருக்கிறதே தீப்பெட்டி சைஸ் செல் நான் எங்கே போட்டோ புடிச்சு அனுப்புறது என்றான். 

மாப்ள நீ இப்படி சொல்லுவ னு தெரியும் டா சூரியா கிட்ட என் செல்லை தந்துட்டு வந்திருக்கேன் நீ கூப்பிடு பேசும் என்றான் தினகரன். 

இதுக்கு தான் மலையேறப் போனாலும் மச்சான் தயவு வேணுங்கிறது பாரு என்ன வேலை பார்த்திருக்கான்னு நீ போய் உன் பொண்டாட்டிக்கு புடிச்ச பொடவையா எடுல என்று ஆச்சி சொல்ல தனா அங்கிருந்தால் தானே உடனே கிளம்பி விட்டான் சூரியாவிற்கு அலைபேசியில் அழைப்பதற்காக 

துணிகளை ஒரு வழியாக எடுத்துக் கொண்டு மூன்று மணிக்கு மீனாட்சி பவனில் மதிய உணவருந்திக் கொண்டிருந்தனர். 

அண்ணா சூர்யாவிற்கு சாப்பாடு வாங்கிட்டு அப்படியே அவருக்கு வெஜ் பிரியாணியும் ஒரு பாதாம்பால் சூடா வாங்கிடு என்று கிசுகிசுத்தாள். 

ம்ம்ம் சரி டா என்று இருவருக்கும் வாங்கி விட சித்திரை செல்வி மனநிறைவுடன் மலரைப் பார்த்து கொண்டிருந்தார்.

என்ன அத்தை… 

இல்ல மலரு நான் வீட்டில் சாப்பாடு வச்சுட்டு வந்தேன்… புளிசாதம் தான்… திட்டுவான் னு பயந்துட்டே தான் வச்சேன்… இப்ப கூட நெனச்சேன்.. ஏதாவது வாங்கிட்டு போகலாம் னு அதுக்குள்ள நீயே வாங்கிட்ட…  இந்த அக்கறை ஒண்ணு போதும் மா என் மவன் சந்தோஷமா இருப்பான்… நீ பார்த்துக்குவ நம்பிக்கை வந்திடுச்சு என்றார். 

மலர் புன்னகைத்தாள். 

அனைவரும் கிளம்பி விட்டனர். 

சக்தி எங்கே இருக்க… 

ஆத்துவாரியில பனி ஏன் வரட்டுமா…  சாப்டியா 

நாங்க பக்கத்தில் வந்துட்டோம் நீ அங்கேயே இரு வரேன்… என்றவள் இடையில் இறங்கிக் கொண்டாள். 

மீண்டும் அவனுக்கு அழைத்தவள் புங்க மரத்தடியில் நிற்கிறேன் வா… சொன்னதும் வந்து விட்டான் .

ம்ம்ம் வரேன் என்றவன் சற்று நேரத்தில் வந்து விட அவனிடம் உணவுப் பொட்டலத்தை திணித்து விட்டு…  

பாதாம் பால் சூடா இருக்கு சாப்பிட்டதும் குடிச்சிடு… என்றாள். 

டீச்சரம்மா எனக்காகவா …

ம்ம்ம் இல்ல இதோ அங்க தொங்கிட்டு இருக்கே அந்த வௌவாலுக்கு வாங்கிட்டு வந்தேன்… 

ஓய் நக்கலா… 

சாப்பிட்டு வேலையைப் பாரு சமூக சேவை எல்லாம் தூள் பறக்குது… சாப்பிட மறந்துட்டு கூட வேலை பார்க்குறீங்க போல… 

பொண்டாட்டி இது போல வகை வகையா செஞ்சு தருவானு தான்… திரும்பியவாறு பதில் கூறினான். 

ம்ம்ம்…  ம்ம்ம்…  சாப்பிட்டு வீட்டுக்கு போ … என்றவள் நடக்க துவங்க ஒரு நிமிஷம் இரு பனி என்றவன் தனது வண்டியை நோக்கி ஓடியவன் உணவு பையை வண்டியிலேயே மாட்டி விட்டு வந்தான். 

ஏறி உட்கார் கொண்டு போய் விடுறேன் என ஸ்டார்ட் செய்ய மறுப்பேதும் தெரிவித்திடாது ஏறி அமர்ந்து கொண்டாள்.

தோளைப் பிடிச்சுக்கலாம் இல்ல…  என்று நமட்டு சிரிப்புடன் கேட்க

பிடிக்கிற உயிலை வரும் போது தானே பிடிச்சுப்போம் இப்போ கிளம்பு இல்ல இறங்கிப்பேன் என்றாள் வேகமாக. 

போடி அழுத்தக்காரி என்று விட்டு வண்டியை ஓட்டியவன்  வீட்டில் இறக்கி விட்டான். 

ஃபோன் பண்ணு.. என்றவன் கிளம்பினான். 

ம்ம்ம் சீக்கிரம் சாப்பிடு என்று விட்டு உள்ளே சென்றாள்.

நாட்கள் கடக்க காட்டாறை தூர் வாரும் பணி வெற்றி கரமாக நடந்து முடிந்தது. சீமைக்கருவேல மரங்களை அகற்றிய இடத்தில் வேறு வேறு செடிகளை நட்டு வைத்தனர். 

அதற்கு தண்ணீர் ஊற்றும் பணியை பள்ளி மாணவர்களும் கூடவே முருகனும் சிவா மற்றும் அவனது நண்பர்களும் எடுத்துக் கொண்டனர். 

“டேய் செடி வைக்கிறது முக்கியமில்லை… அதை வாட விடாம தண்ணி விடணும்… பார்த்துக்கங்க.. “என்றான் சிவா. 

“அதெல்லாம் சரியா செய்வோம் ண்ணே நீ சொன்னதை செஞ்சுபுடு இந்த தடவை கபடி போட்டி நம்ம ஊர் ல வச்சிடு அவ்வளவு தான் “என்று சிறுவர்கள் கூறவும்.,”சொன்ன சொல்லை தவற மாட்டான் இந்த சிவனேஸ் பார்த்துக்க”என்றிட சிறுவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.  

சிறுமிகளோ “சிவாண்ணே நாங்களும் வேலை பார்த்து இருக்கோம் எங்களுக்கு எதுவும் கிடையாதா ?”என்று கேட்க… 

“தாய்க்குலங்களுக்கு இல்லாததா… உங்களுக்கும் கபடி போட்டி ,கோகோ ,எல்லாம் உண்டு… பயலுகளுக்கு எவ்வளவு உரிமை தர்றோமோ அதே சமமான உரிமை உங்களுக்கும் உண்டு “என்று உறுதி கொடுத்தான் சிவசக்திபாலன். 

சூரியா தனஞ்செயன் திருமண வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க வடிவரசி சத்தமின்றி மாயமாகியிருந்தாள்.  

அவளது அறையில் ஒரு கடிதம் மட்டும் இருந்தது. 

“மம்மி இனிமே உங்க பேச்சை நான் கேட்கிறதா இல்ல எனக்கு பிடிச்ச வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத்து கொண்டேன்… எனக்காக நீங்க வச்சிருந்த நகை பணம் எல்லாம் எடுத்துக் கொண்டேன்”என்று எழுதி இருந்தாள். 

முத்துலெட்சுமிக்கு நெஞ்சை அடைப்பது போல இருந்தது.