அத்தியாயம்-04

பனிமலரிடம் வம்பு செய்தவன் அன்றிரவே அவளது வீட்டின் பின்புறம் புகுந்திருந்தான். 

செண்பகம் அதே நேரத்தில் வெளியே வருவதற்காகக் கதவை திறக்க,அவனோ அரவமின்றி பூனை போல உள்ளே நுழைந்து விட்டான். பாயில் படுத்திருந்த பனிமலரின் அருகில் செல்ல அவள் உறக்கத்தின் பிடியில் இருந்தாள்.

 அவளை தொடுவதற்காக கையை எடுத்து சென்றவன் போர்த்தியிருந்த போர்வையை விலக்கவும் செண்பகவல்லி ஆச்சி உள்ளே வரவும் சரியாக இருந்தது. சட்டென்று சமையலறைக்குள் நுழைந்து விட்டான். 

“மலரு கொஞ்சம் தண்ணி குடுத்தா. மலரு “என்று சத்தமிடவும் ஆச்சியின் குரலில் கண் விழித்தவள்.,” ஏ ஆச்சி தலைமாட்டு கிட்ட தானே வச்சேன் தீர்ந்துடுச்சா.? இரு எடுத்து தாரேன்” என சமையல் அறை நோக்கி மலர் செல்லவும் வந்தவனுக்கு முகம் மலர்ந்தது . ‘இங்கேயே அவளை ஒரு வழி ஆக்கிடுவோம்’ என மனதில் கறுவியவன்., பாயும் புலியென தயாராய் நின்றான்.  

பித்தளை தவலையில் இருந்து தண்ணீரை சொம்பில் எடுத்தவளுக்கு ஏனோ அரிசி பானை அருகில் ஏதோ அசைவது போல தோன்றியது. பார்வையை கூர்மையாக்கிப் பார்த்தவள், உணர்ந்து கொண்டாள் அங்கே ஏதோ இருக்கிறது என்று. அவளின் கூர்ந்த பார்வையை உணர்ந்தவன் கண்டு கொண்டான் அவள் தன்னை கண்டு பிடித்து விட்டாள் என்று. இதை விட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது என்றெண்ணி சடுதியில் அவளின் கையை பிடிக்க பாய்ந்தவனின் கையை அரிவாள் மனையில் கிழித்து ஒரே தள்ளாக தள்ளி விட்டு மின் விளக்கை உயிர்ப்பித்தாள். 

“ஆஆஆஆ ஸ்ஸ்ஸ்.” என்று வலியை கூட கத்தி அழ முடியாமல் முனகியபடி நிற்க

 ” எவம்ல அது. என் வூட்ல நுழைஞ்சது..எம்புட்டு தைரியம் இருந்தால் உள்ள வருவ களவாங்க வந்தியோ.? “என்றவள் அவன் முகத்தை காண விழைந்து தனது ஆச்சியையும் துணைக்கு அழைத்தாள். 

“ஆச்சி எவனோ திருடன் புகுந்துட்டான் பழனியக்காவை கூப்டு “என அவனை நெருங்க அவனோ சுதாரித்து எழுந்தவன் மலரின் கரங்களை பிடிக்க .,”ஏலேய் நீயா உனக்கு எம்புட்டு நெஞ்சழுத்தம், வீட்டுக்குள்ள வர்ற தைரியம் வந்திடுச்சா ?? “என விழிகளை உருட்டி பார்த்தவள் நின்றிருந்த கோலம் அவன் மனதுக்குள் பயப்பந்தை உருள செய்தது. 

அள்ளி முடிந்த கொண்டையும் கையில் அரிவாள் மனையுடன் காளி ரூபத்தில் நின்றிருந்தாள்.  

சட்டென பாய்ந்தவன் அவளை பிடித்து இழுத்து அரிவாள்மனையை தூக்கி எறிய அது ஓடி வந்த செண்பகத்தின் மீது பட்டது.  

“அம்மா” என்ற அலறலுடன் செண்பகம் விழுந்து விட மலரோ “ஆச்சி!! “என கத்தியபடி திமிறிக் கொண்டு நிற்க 

“ஏட்டி என்னை பார்த்தா கோட்டிபய மாதிரி தெரியுதா.? அரிவாமனையை தூக்கினா பெரிய சண்டி ராணியா நீயி.. உன்னை கட்டிக்கிட்டு அப்புறம் சாந்தி முகூர்த்தம் நடத்த நினைச்சேன் ஆனா உன் திமிருக்கு என் ஆம்பளைத்தனத்தை காட்டிட்டு அப்புறம் தாலி கட்டுறேன் டி என் சீனிசேவு. “என்று அவளை இறுக்கியணைத்து முத்தமிட போக அவனை திமிறியபடியே பின்னால் தள்ளியவள் அவன் மீதே விழுந்தாள். அவன் சுதாரிப்பதற்குள் எழுந்து கொண்டவள் மீண்டும் கீழே கிடந்த சொம்பை தூக்கி அடித்தாள். 

“ஆஆஆஆ.” என்று கத்தியவன் வெறி கொண்டு எழுந்திருக்க அதற்குள் அக்கம் பக்கத்தினர் வந்து விட்டனர்.  

ஆண்கள் நால்வர் அவனை புரட்டி எடுக்க ,மலரோ ஆச்சியிடம் ஓடினாள்.

“ஆச்சி ஆச்சி எழுந்திரியேன் அச்சோ ரத்தம் வருதே. “என தான் உடுத்தியிருந்த நைட்டியில் துடைத்து விட்டவள் அவரை நிமிர்த்தி அமர வைத்து தண்ணீரை புகட்டினாள். கீழே விழுந்ததில் கை உடைந்திருந்தது செண்பகத்திற்கு.

பழனியம்மாவோ .,”மலரு எழுந்திரு ஆஸ்பத்திரி போயிருவோம் ரத்தம் நிக்காம வருது. இவன் எங்கிருந்துடி நொழைஞ்சான். திருட்டு பய. இங்கன என்ன இருக்குதுனு களவாங்க வந்தான் இவன்.” என்று திட்டியவளிடம் எப்படி சொல்வது அவன் களவாட வரவில்லை தன் கற்பை சூறையாட வந்தானென்று.  

 வந்தவனை போலீஸில் ஒப்படைப்பதற்காக பிடித்து வைத்திருக்க அவனோ திமிறிக் கொண்டு தப்பித்தால் போதுமென்று ஓடிப் போகும் போதே கத்தினான். .,” ஏய் என்னைக்கிருந்தாலும் நான் உங்கழுத்துல தாலி கட்டல என் பேரு சங்கரபாண்டி இல்லடி. ” என்று உறும., அப்போது தான் அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது வந்தவன் திருடனல்ல பொறுக்கி என்று. 

“ஏ மலரு இவன் தானே உன்னை அடிக்கடி வம்பு பண்ணி ஜெயிலுக்கு போனவன்.?”என பழனியம்மாளுக்கு அப்போது தான் நினைவே வந்தது. அதற்குள் கார் வந்து விட செண்பகத்தை அந்த நேரத்தில் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

பழனியம்மாளுக்கு சங்கரபாண்டி கத்தி விட்டு போனதே நினைவில் வந்தது. செண்பகத்திற்கு கையில் கட்டு போட்டு நெற்றி காயத்திற்கும் கட்டு போட்டிருந்தனர். வலி தாங்க முடியாமல் கத்தவும், அவர் உறங்குவதற்காக ஊசி போட்டு இருந்தனர். 

மலர் தன் ஆச்சியை பார்த்தபடியே அமர்ந்திருக்க, பழனியம்மாளுக்கு தான் கவலையாக இருந்தது மலரின் நிலையை நினைத்து.

தன் கணவரிடம் வந்தவர் .,”அந்த பாண்டி பய எப்ப வேணும்னாலும் இவளை தூக்கிட்டு போயிடுவான்யா, நாம பேசாம இவ பெரியம்மா கிட்ட சொல்ல வேண்டியது தான். எத்தனை நாளைக்கு அக்கம் பக்கத்தில் வந்து காப்பாத்துவாக.? வயசு பொண்ணை தனியா விட்டுட்டு எப்படி தான் நிம்மதியா இருக்காங்களோ” என்று கவலை கொண்டார். 

“காலையில வெவரத்தை சொல்லி வர சொல்லுவோம். சொந்த பந்தத்து கூட இருந்தா அது ஒரு மாதிரி தான் “என்றார் பழனியம்மாளின் கணவரும். 

சொன்னது போலவே பொன்னுசாமிக்கு அழைத்து விபரத்தை கூறினர். 

“நாங்க உடனே கிளம்பி வர்றோம் “என்று விட்டு காருக்கு சொல்லி அனுப்பினர். 

**********

சிவசக்தி தனது நண்பன் வெற்றிவேலுடன் அரட்டை அடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் . வீரமலை காட்டிற்கு தண்ணீர் பாய்ச்ச சென்று விட்டதால் இன்று வெற்றிவேல் சிக்கி இருந்தான் அவனிடம். 

“இந்த பெருசுகளே இப்படி தான் மாப்ள,காடு காடுனு காட்டை பிடிச்சு தொங்குதுங்க. கெரகம் அவங்க தொங்கறதுக்காகவாவது தண்ணி வரலாம். ஆனா என்ன பண்ண? தண்ணி வரலையே. ஏற்கனவே பொன்னுசாமி மாமன் போர் போடும் போதே தண்ணி வரலை. அதை பார்த்தாவது செவனே னு இருக்காங்களா இந்தா நேத்து நல்லான் பெரியப்பா வூட்ல போரு போட்டு அதுவும் போச்சு. தண்ணி வரலையாம் .. ” சிவசக்திபாலன் சொல்ல அவனது நண்பன் அதை ஆமோதித்தான். 

“அட தண்ணி வருது தண்ணி வருது னு ஒரு இடம் பாக்கி இல்லாமல் ஓட்டை போடுறாங்க. வந்தபாட்டை தான் காணலை. ஒரு நாள் இல்ல ஒரு நாள் பூமித்தாய் கோபமா எழுந்து என்னை விட்டு தொலைங்கடா லகடபாண்டிகளானு கத்த போகுது. பாவம் “என்றான் நண்பன் வெற்றிவேல். 

“அடேய் ஊர் வெட்டி நாயம் பேசினது போதும், போய் ரேஷன் கடையில மண்ணெண்ணெய் ஊத்துறாங்களாம் போய் வாங்கிட்டு வா.இந்த வெட்டிவேரு கூட சுத்துறதே பொழப்பா வச்சுக்கிட்டு.. போடா போய் வாங்கியா.. இல்லாட்டி ரவைக்கு கஞ்சி கெடையாது. ” சிவாவின் தாய் வந்து கத்த. 

“ஏன்த்த எங்கப்பன் பழனிமலை முருகனுக்கு நேந்துகிட்டு வெற்றிவேல் னு பேரு வச்சா நீ வெட்டிவேரு னு கூப்பிடுற. என் அருமை பெருமை தெரியாமலே வளர்ந்து நிற்கிற போ. நான் எல்லாம் இந்த கருத்தம்பட்டிக்கு வீஓ இல்ல இந்த திருச்சி மாவட்ட கலெக்டராகவோ ஆக வேண்டிய ஆளு.. என்னைப் போய்.. ஹே. ஹே.. என்ன போய். என்ன மச்சான் உன் அம்மாவை இப்படி வளர்த்துருக்க . “சலிப்பாய் கேட்டவன் முதுகில் ஒன்று சுரீரென விழுந்தது.  

அங்கே அவனது அன்னை தோசை கரண்டியுடன் நின்றிருந்தார். “உனக்கு எல்லாம் வெளக்கமாறு னு பேரு வச்சிருக்கனும் தெரியாத்தனமா வெற்றிவேலுனு வச்சுட்டார் என் புருஷன். அவர் வெளிநாட்டு ல சம்பாதிச்சு அனுப்புறதை முழுசும் ஊர் சுத்தியே கரைக்க புள்ள பெத்து வச்சிருக்கேன் நானு. போடா போய் மண்ணெண்ணெய் வாங்கிட்டு வா.. இல்ல அவனுக்காவது ரவைக்குத் தான் கஞ்சி கிடையாது உனக்கு இந்த வாரத்துக்கே கஞ்சி கிடையாது..” எரிமலையாய் பொங்கி விட்டு திரும்ப வெற்றிவேலை தேடி பொன்னுசாமி வந்தார்.  

“ஏன் டா வெற்றி ஃபோன் போட்டா எடுக்க மாட்ட. உன்னை எங்க எல்லாம் தேடி வர வேண்டியது இருக்கு. சரி சரி காரை எடுத்துக்கிட்டு வா தூத்துக்குடி வரைக்கும் போகணும். என் அத்தை கீழ விழுந்திடுச்சாம்.. அதை கூட்டிட்டு வரணும்.”. என்றார். 

“பெரியப்பூ. நான் ஒத்த ஆளா அவ்வளவு தூரம் ஓட்ட முடியாது. துணைக்கு ஆள் இருந்தா பரவாயில்லை” என்றிட பொன்னுசாமியோ.,” ஏன் நம்ம மாப்ள சத்தி வண்டி ஓட்டுறவன் தானே அவனையும் கூட்டிட்டு வா. ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஓட்டிட்டு வந்திடுவீங்க. ஏன் மாப்ள வேலை ஒண்ணும் இல்லையே .” கேட்டவரிடம் கொஞ்சம் கெத்தாக “வேலை எல்லாம் இருக்கு மாமா. ஏதோ பெரியவங்க சொல்றீங்க அதனால வரேன். டேய் வெற்றி வண்டியை எடுத்துட்டு வாடா.” என்றான்.  

வெற்றி மெதுவாக.. ” .மாப்ள கெத்தா ..ரைட்டு விடு “என தனது டாடா சுமோவை எடுத்து கொண்டு வந்தான். 

“ம்மா நீ போய் மண்ணெண்ணெய் வாங்கிட்டு வந்திடு நான் பொன்னுசாமி மாமன் கூட சில்ற வேலையா தூத்துக்குடி வரைக்கும் போயிட்டு வரேன்” என சுமோவில் ஏறி கிளம்பி விட்டான். 

அன்று மாலையே தூத்துக்குடி வந்து விட்டனர். மலர் வாரியலை கொண்டு வாயிலை பெருக்கி விட்டு கோலமிட சுமோ வந்து நின்றது. 

 முதலில் இறங்கியது சிவசக்தி தான் . நெட்டி முறித்து வாயிலை பார்த்திட தாவணி அணிந்து பாவாடையை தரையில் படாமல் தூக்கி செருகி இருந்தாள் மலர்.  

யாரென்று இவள் பார்க்க அவனோ ஆவென பார்த்திருந்தான். பொன்னுசாமி இறங்கியதும் முகம் மலர்ந்தவள் .,”வாங்க பெரியப்பா “என்று தன்னை சரி செய்து கொண்டு வந்தாள் வாசலுக்கு .

“என்ன ஆச்சு பொருவே எப்படி கீழே விழுந்தாங்க?? “என்று கேட்டபடி உள்ளே நுழைய, சிவா காரில் சாய்ந்தபடி மலரை பார்த்திருந்தான் அதற்குள் பழனியம்மாள் வந்து விட்டார்.  

“வாங்க வாங்க!!” என வரவேற்று விட்டு .,”மலரு நீ போய் காபி போடு. நீங்க தான் மலரு பெரியம்மாவா” என மலரின் பெரியம்மா மரகதவள்ளியிடம் கேட்க .,”ஆமாம் “என்றார். 

“நீங்க செத்தோடம் என் வூட்டுக்கு வந்துட்டு போங்க கொஞ்சம் பேசணும்” என்று விட்டு .,”மலரு. நான் அவுகளை வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு வரேன் நீ காபியை அங்க கொண்டு வா. ” என கையோடு அழைத்து சென்று முதல் நாள் நடந்த அனைத்தையும் கூறி முடித்தார்.

“அவனே ரௌடிப்பய. எத்தனை நாளைக்கு வயசுப் பொண்ணை பாதுகாக்க முடியும். அதுவும் வயசான காலத்தில் அவங்க என்ன பண்ணுவாங்க. நான் சொல்றேனு கோவிச்சுக்காதீங்க .. அவளுக்கும் வயசு 23 ஆவுது ஒரு கல்யாணம் காட்சி பண்ணி வைக்க கூடாதா. அட ரொம்ப விமரிசையா வேணாமுங்க ஒரு நல்ல பையனை பார்த்து எளிமையா நடத்துங்களேன். அவ தாத்தா வந்தாலும் நான் விஷயத்தை சொல்லுவேன் அவரும் உடம்பு சரியில்லாம கெடக்குறார். ஏதாவது பண்ணுங்க இல்ல உங்க கூடவாவது அழைச்சுட்டு போய் வச்சுக்கங்க “என்றார் அக்கறையாக. 

“சரிங்க இப்பவே அழைச்சுட்டு போறோம்.. பெத்தவன் சரியா இருந்தா ஏன் இப்படி நடக்குது. நாங்க கூட்டிட்டு போனா சண்டைக்கு வந்திடுவாங்க அதான் யோசிக்க வேண்டியதா இருந்ததது . இனிமே பார்த்துக்கிறேன் ” என்று பொன்னுசாமி சம்மதித்தார். 

வெளியே மலர் வெற்றிக்கும் சிவசக்திக்கும் டீயை கொடுக்க அவனோ .,”ஏன் மாப்ள உன் தங்கச்சி வீட்டுக்குள்ள எல்லாம் கூப்பிடாதா. ஊர்ல இருந்து வந்திருக்கோம் கண்டுக்காம போனா எப்படி. ?? “என்றான்.

மலர் அவனை கண்டு கொள்ளாமல் பொன்னுசாமிக்கு டீயை கொடுக்க சென்றாள். 

வெற்றி சிரித்து கொண்டே .,”தொப்பி தொப்பி” என்றான். 

“அடங்குடா.” என்றவன் ., ‘அல்லிராணி கண்டுக்கிறாளா பாரு.. ஒரு வேளை நம்மளை அடையாளம் தெரியலையோ. ??’மனதில் குழம்பினான். 

இங்கே மலரிடம் .,”ஆயா தேவையான துணிமணிகளை மட்டும் எடுத்து வை.. இன்னொரு நாள் வந்து சாமான் எல்லாம் எடுத்துக்கலாம். இனி இங்கே இருக்க வேண்டாம் உங்க அப்பாவை சமாளிக்கிறது என் பொறுப்பு ..புரிஞ்சுதா மறு பேச்சுப் பேசவே கூடாது ஆயா நீ எடுத்து வை “என்றார். 

“சரி பெரியப்பா. காலையில் கிளம்பிடலாம் ஸ்கூல் பிரின்சிபல் வீடு பக்கம் தான் நான் நேரத்திலேயே சர்டிபிகேட் சம்பளம் எல்லாம் வாங்கிட்டு வரேன் கிளம்பலாம் “என்க சட்டென நினைவு வந்தவளாய் “பெரியம்மா சூரியா தனியா இருப்பாளா ??” என கேட்டிட” அவ ஸ்கூல்ல டூருக்கு போயிருக்கா மலரு. நாம காலையில போவோம் ஏங்க வெற்றி பய கிட்ட கேளுங்க காலையில வரை இருக்க முடியுமானு “என்றார் மரகதம். 

“இந்தா கேட்கிறேன் மா.” பொன்னுசாமி வெற்றியிடம் வந்து கேட்க அவனும் ,”சரி “என்று சம்மதித்தான். 

சிவசக்திபாலன் முகத்தில் பல்ப் எரிந்தது. ” ஈஈஈஈ ” என்று சிரித்தவன் மலரிடம் பேசலாம் என்று நினைத்தான். 

இரவு உணவை மலருடன் இணைந்து மரகதமும் செய்திட செண்பகத்திற்கு உணவை ஊட்டி முடித்தவள் பொன்னுசாமியையும் ,வெற்றி சக்தி, இருவரையும் சாப்பிட அழைத்தாள். 

மூவரும் அமர சிவசக்தியோ.,” என்ன மாமா உங்க மக கோழி அடிச்சிருக்கா..?இல்ல மீன் குழம்பா??” என்று கேட்க மலரோ “முருங்கைக்காய் சாம்பார் ” என்று பரிமாறினாள். 

‘சரி நம்ம ஆளு சமைச்சது குறை சொல்லாம சாப்பிடுவோம்.’ என சாப்பிட்டவன். ‘ ஆஹா சூப்பர் நல்லா தான் யா வச்சிருக்கா.. பிரமாதம்’என்று மனதில் பாராட்டியபடி சாப்பிட்டு முடித்தான்.  

“பெரியப்பா திண்ணையில ஃபேன் எடுத்து வைக்கிறேன் படுத்துக்கிடுங்க “என பாத்திரங்களை சுத்தம் செய்ய எடுத்து சென்றாள். 

பின்னாலேயே கை கழுவ சென்றவன் “சாப்பாடு பிரமாதம். எங்கம்மா இப்படி தான் குழம்பு வைக்கும்.. ” என்று விட்டு உள்ளே வந்தான்.  

சொன்னபடியே ஃபேனை எடுத்து வைத்து விட்டு மரகதத்துடன் வந்து படுத்து விட்டாள். 

“மாப்ள நான் காருக்குள்ளேயே படுக்கிறேன் நீ இங்கேயே படு.” என வெற்றி காருக்குள் சென்று படுத்தான். பொன்னுசாமி கட்டிலில் படுத்து விட சிவா திண்ணையில் படுத்து விட்டான்.  

நடு இரவில் கொசு கடித்திட புரண்டு புரண்டு படுத்தவனுக்கு தூக்கம் எட்டா கனியாகி விட்டது.  

“என்னடா இது இவ்வளவு கொசு கடிக்கிது. எப்படி தூங்குறது. சரி இழுத்து போர்த்தி படுப்போம்” என மீண்டும் உறங்க மலர் தண்ணீர் அருந்த எழுந்தவள் கொசுவர்த்தி சுருளை வைத்து விட்டு சென்றாள். 

அதன் வாசனையில் கண் விழித்தவன் கொசுவர்த்தி சுருளை பார்த்து விட்டு சிரிப்புடன் உறங்கிப் போனான். 

மறுநாள் காலையில் மலர் சர்டிபிகேட் ,சம்பளம் எல்லாம் வாங்கி வந்த பிறகு செண்பகவல்லியை அழைத்து கொண்டு பழனியம்மாளிடம் விடை பெற்றுக் கிளம்பினாள். முதல் நாளே பழனியம்மாளின் கணவர் டெம்போவிற்கு சொல்லி வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் ஏற்றி கொண்டு மணப்பாறை கிளம்பினர். மலரின் தந்தையிடம் விஷயத்தை கூறி விட அவர் முத்துலெட்சுமியிடம் சொல்ல அவரோ முறைத்துக் கொண்டு அலைந்தார். 

“இதோப் பாருங்க ஏதோ உங்க பொண்ணு மட்டும் னா சரி உங்க மாமியாரை எல்லாம் தங்க வைக்க முடியாது. இருக்கிற ஒண்ணையே பார்க்க முடியலை இதுல கை உடைஞ்சது கால் உடைஞ்சது எல்லாம் வச்சு சவட்டனை பண்ண முடியாது. “என்றார். 

“சரிம்மா. நான் இந்த விஷயத்தை நறுக்கு தெறிச்சா மாதிரி சொல்லிடுறேன் விடு இதுக்கு போய் கோவப்பட்டுகிட்டு மலரு இங்க வந்து தங்கினா போதும் அது தங்கலைனா அப்பா சொத்து முழுதும் மலர் பேருக்கு எழுதி வச்சிடுவாரு பார்த்துக்க “என்றார் சங்கரன். என்ன சொன்னால் தன் மனைவி அமைதியாக இருப்பாரோ அதை கூறினார் சங்கரன். 

இருந்தாலும் முத்து லெட்சுமி மனம் ஆறவில்லை. எங்கே மலரை கொண்டு வந்து நிரந்தரமாக தங்க வைத்திடுவாரோ என்ற பயம் தான் காரணம். இருப்பினும் சொத்து போய்விடுமோ என்ற பயமும் இருந்தது சம்மதித்தார். 

கார் பயணத்தில் பனிமலரை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்த்து கொண்டிருந்தான் சிவசக்திபாலன். அவனை முறைத்தபடி திரும்பி கொள்ள சக்தி சிரித்துக் கொண்டே வண்டியில் பாடலை ஓட விட்டான்.  

வெள்ளாவி வச்சு தான் வெளுத்தாங்களா இல்லை வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா. . 

தனுஷ் பாடியதை இவன் முணுமுணுத்தான்.  

‘இவனைத் தான் வெளுக்கணும் பண்ணுற அழிச்சாட்டியத்துக்கு’ என்று வெற்றி முனக பனிமலர் எதையும் கண்டு கொள்ளவில்லை.

வீட்டிற்கு வந்ததும் நேரே பொன்னுசாமி வீட்டிற்கு சென்று விட்டனர். இரண்டு நாட்களாய் பனிமலர் அங்கேயே தான் இருந்தாள் இடையில் அவளது பாட்டாவை மட்டும் பார்த்துச் செல்ல முத்துலெட்சுமிக்கு நிம்மதியாக இருந்தது.  

ஆனால் சங்கரனோ தன் மகள் எப்படி தம்பியின் வீட்டில் இருக்கலாம் என்று சண்டையிட ஆரம்பித்து விட்டார். அவருக்கு இந்த சந்தர்ப்பத்தை விட்டால் எங்கே தன் மகளை நிரந்தரமாக வீட்டிற்குள் விடாமல் போயிடுவார்களோ என்ற அச்சத்தில் சண்டை இழுத்து விட்டார். மலரோ தன் ஆச்சியை விட்டு வர முடியாது என்று தீர்க்கமாக உரைத்திட்டாள்.  

“அவ தான் வரலைங்கிறாளே ஏன் கட்டாயப் படுத்துறிங்க. “என்ற முத்துலெட்சுமியை முறைத்தபடி., “என் மக என் வூட்ல தான் இருக்கும் .. என் மவளுக்கு சோறு போட வக்கில்லாமயா கெடக்கேன் மலரு நீ வா போவோம் “என்க., 

 அவளோ “ஆச்சியை விட்டு எங்கேயும் வர முடியாது. என்னை வளர்த்தவங்களை விட்டுட்டு எல்லாம் வர முடியாது . இப்ப என்ன உங்களுக்கு நாங்க இங்க இருக்க கூடாது அவ்வளவு தானே? நானும் ஆச்சியும் தனியா வீடு எடுத்து தங்கிக்கிறோம்… பெரியப்பா பழைய வீடு சும்மா தானே கெடக்கு சாவி தர சொல்லுங்க நான் ஆச்சியோடு அங்க போயிக்கிறேன்.”.என்றாள். 

பொன்னுசாமிக்கு மனம் ஒப்பவே இல்லை. மனதினுள் சங்கரனை திட்டிக் கொண்டிருந்தார். 

பனிமலர் தன் ஆச்சியை அழைத்து கொண்டு தன் அம்மா வாழ்ந்த பழைய வீட்டிற்கு குடி வந்தாள். அதற்குள் வெற்றியிடம் மலரை பற்றிய விஷயங்களை எல்லாம் தெரிந்து கொண்டான் சிவசக்தி .

“ஏன் மாப்ள இத்தனை நாளும் நாம இங்க தான் இருந்தோம் இந்த விஷயம் நமக்கு தெரியலையே.. கடைசியில் நமக்கு மொறைப் பொண்ணா அவ . அதான் மொறைச்சுக்கிட்டே திரிஞ்சுருக்கா அது தெரியலை பாரு நமக்கு “என்றான். 

“டேய் வேணாம் டா அந்த பொண்ணு பார்த்தா நல்ல புள்ளையா தெரியுது. நீ சைட் அடிக்கிறன்னு அது மனசை கெடுத்து வைக்காத ,உனக்கு கட்டப் போறது அந்த புள்ளயோட தங்கச்சி வடிவரசியை தான். அவ அம்மாவை பத்தி உனக்கு நல்லா தெரியும் “என்று எச்சரித்தான் வெற்றி. 

“ஏன் சைட் அடிச்சா என்ன தப்பு ஏன் நல்ல பிள்ளையை சைட் அடிக்க கூடாது னு இருக்கா என்ன..? நான் சொன்னேனா அந்த வடிவரசி புள்ளய கட்டிக்கிறேன் னு போடா.. அவளுக்கு வேற வேலை இல்லை” என சக்தி கூறி விட்டு நகர்ந்தான். 

இவன் அடங்க மாட்டான் டீச்சர்‌ என்னைக்காவது வச்சு மிதிக்க போகுது என்று புலம்பியபடி வெற்றி அதன் பிறகு கண்டுகொள்ளவில்லை.

**********

மலர் மணப்பாறைக்கு வந்து ஒரு வாரம் முடிந்து இருந்தது. ஊர் திருவிழாவிற்கு வேண்டி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி ஆரம்பித்தது. வெளி நாட்டில் இருந்து சூரியாவின் அண்ணன் தினகரனும், சிவாவின் அண்ணன் தனஞ்செயனும் வந்திருந்தனர். வெற்றியின் தந்தைக்கு விடுமுறை கிடைக்காததால் வரவில்லை. மூவருமே துபாயில் தான் இருந்தனர். 

சிவசக்தியின் தங்கை பாக்யாவும் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தாள். திருச்சியில் பிரபலமான கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். 

இந்நிலையில் சூரியா படிக்கும் பள்ளியிலேயே மலர் ஆசிரியை வேலைக்காக நேர்காணல் சென்று விட்டு அங்கே தேர்வாகியிருந்தாள்.

… தொடரும்