மயங்கி சரிந்த காஞ்சனாதேவி கண்விழித்த உடனே கேட்டது வான்முகிலனை பற்றித்தான்.
“என் முகிலனுக்கு என்ன ஆச்சு? அவன் நல்லா இருக்கானில்ல”
“அவனுக்கு ஒண்ணுமில்லமா போன் பண்ணி பேசிட்டோம். அவன் நல்லா இருக்கான். நாளைக்கு வந்துடுவான்” என்றாள் சந்திரமதி.
அழுதிருப்பாள் போலும், கவலையை அடக்கிக் கொண்டு அன்னைக்கு ஆறுதல் சொல்வது காஞ்சனாதேவிக்கு புரிந்ததோ என்னவோ “இல்ல நீ பொய் சொல்லுற, என்னமோ ஆகிருச்சு. நீ முதல்ல முகிலனுக்கு போன போடு” கட்டிலை விட்டு இறங்க முயன்று முடியாமல் சோர்வில் தளர்ந்தமர்ந்தாள்.
“அதான் அம்மா சொல்லுறாங்கல்ல போன போட்டு கொடேன்” என்ற அக்காவை முயன்ற மட்டும் முறைத்த சந்திரமதி
“இல்ல இல்ல எனக்கு இப்போவே முகிலன் கிட்ட பேசணும். நீ போன் போடு” என்று மூத்தமகளை ஏவினாள் காஞ்சனாதேவி.
இதுதான் சந்தர்ப்பம் என்று தம்பியை உடனே அலைபேசியில் அழைத்தாள் சாருமதி.
பாக்யஸ்ரீயும், வான்முகிலனும் தான் சென்னை வருவதாக இருந்தார்கள். வான்முகிலன் சந்திக்க வேண்டிய நபர் விமானத்தை தவற விட்டதாகவும், அவர் இன்றிரவுதான் டில்லி வருவதாகவும் அலைபேசி வழியாக தகவல் தர, வான்முகிலன் நாளை சென்னை செல்லலாமே என்று பாக்யஸ்ரீயிடம் மன்றாடினான்.
“முடியாது முகிலா… நாளைக்கு மதியம் எனக்கு க்ளாஸ் இருக்கு. நீங்க ஈவ்னிங் தான் பிளைட்டே புக் பண்ணுவீங்க. என்னால க்ளாஸ் எல்லாம் கட் பண்ண முடியாது. என் புருஷன் ஒரு சிட்ரிக் ஆபிசர்” படிப்புக்கு அவன் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றான் என்று அவனையே கிண்டல் செய்தாள்.
“சரி போ… உன் பின்னாலையே நானும் வந்துடுறேன். என்ன உன் பின்னாலயே அலைய வைக்கணும் எங்குறது தானே உன் ஆச” இவனும் சிரித்தான்.
பாக்யஸ்ரீயை கடைசியாக பார்க்கப் போவது இந்த தருணம் தான் என்று அறியாமல் அவள் விடைபெறும் வரையில் அவளை கொஞ்சி கொஞ்சியே வழியனுப்பி வைத்திருந்தான்.
விபத்து நடந்ததை அறிந்த உடனே வான்முகிலனின் பி.ஏ ராம் அவனை அலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தான்.
“சார் சார் எங்க இருக்கிறீங்க? நல்லா இருக்கிறீங்களா?”
“என்ன ராம் என்னமோ நான் செத்து போனது போல பதறுற?” அறையில் இருந்து வேலையை பார்த்துக் கொண்டிருந்ததால் நடந்த விமான விபத்தை பற்றி வான்முகிலனுக்கு தெரியவில்லை.
திருமணத்துக்கு முன் வான்முகிலன் ராமை அழைத்துக் கொண்டுதான் வெளியூருக்கு செல்வான். திருமணத்துக்கு பின் பாக்யஸ்ரீயோடு நேரம் செலவிட வேண்டும் என்று அவளை அழைத்து செல்வதால் தங்களுக்கு இடைஞ்சலாக ராம் வேண்டாம் என்று அவனை அழைத்து செல்லாமல் இருந்தான்.
டில்லி பயணமும் அவ்வாறானதே. பாக்யஸ்ரீயை வழியனுப்பி வைத்தவன் அவள் தரையிறங்கியதும் அழைப்பாள் என்று வேலைகளை செய்தவாறு காத்திருக்க, அழைத்ததோ ராம்.
“உங்க குரலை கேட்ட பிறகுதான் உசுரே வந்தது” வான்முகிலன் நல்லா இருக்கின்றான் என்றால் அவனோடு தானே பாக்யஸ்ரீயும் இருப்பாள் என்ற நிம்மதியில் தான் ராம் பேசிக் கொண்டிருந்தான்.
“டேய் என்னடா என்னென்னமோ சொல்லுற? என்ன விஷயம்?” முகிலன் புரியாமல் கேட்க,
“உங்களுக்கு ஆயிசு கெட்டி சார். இல்லனா இன்னக்கி நீங்க டில்லி பிளைட்ல இருந்திருப்பீங்களே. டில்லில இருந்து வந்த சென்னை பிளைட் க்ராஸ் ஆகிருச்சு” என்றதும் தான் தாமதம்
“வாட்” என்று அதிர்ந்து எழுந்தே விட்டான் வான்முகிலன்.
“டேய் விளையாடாத….”
“என்னாச்சு சார்?”
“ஸ்ரீ… ஸ்ரீ… அந்த பிளைட்லதான் சென்னைக்கு போனா…” அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் பதறியவன் ராம் மீண்டும் அழைக்கவே சுயநினைவுக்கு வந்தான்.
“பேசேஞ்சர்ஸுக்கு எந்த பிரச்சினையும் இல்லையே. இரு நான் ஸ்ரீக்கு பேசுறேன்” என்றவன் ராமின் அலைபேசி தொடர்பை துண்டித்து பாக்யஸ்ரீயை அழைத்தான்.
அவள் அலைபேசியோ தொடர்புகொள்ள முடியவில்லை என்ற கணினிக்குரலை மீண்டும், மீண்டும் வான்முகிலனின் செவிக்கு சேதி சொல்ல அவன் பதட்டம் அதிகமானது.
உடனே சென்னை செல்ல வேண்டும் என்று விமானநிலையம் சென்றால் தற்பொழுது எந்த விமானமும் சென்னைக்கு செல்லாது என்ற தகவல் தான் கிடைத்தது. வேறு வழியில்லை டில்லியிலிருந்து மதுரை சென்று மதுரையிலிருந்து தரை வழி பயணம் செய்யலாமென்று முடிவு செய்தான்.
விமானம் ஏறும் முன் ராமுக்கு தகவல் கூறியவன் அலைபேசியை அனைத்திருந்தான்.
பாக்யஸ்ரீயின் சிந்தனையில் இருந்தவனுக்கு வீட்டாரின் சிந்தனை வரவே இல்லை. விபத்தை பற்றி அறிந்து அவர்கள் எவ்வாறு துடித்துப் போவார்கள் என்று சிந்திக்கும் மனநிலையில் அவனில்லை. அவன் மனைவிக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்ற சிந்தனை மட்டும் தான் அவனுள் ஓடிக் கொண்டிருந்தது.
“ஹலோ எக்ஸ்கியூஸ் மீ சார் மதுரை போய் சேர எத்தனை மணியாகும்?” பக்கவாட்டில் அமர்ந்திருந்த பெண் அழைக்கவும் பாக்யஸ்ரீயின் சிந்தனையிலிருந்து விடுபட்டவன் அவளை திரும்பிப் பார்த்தான்.
தனியாக செல்கிறாள் போலும், பதட்டமாக இருந்தாள். “முன்ன பின்ன பிளைட்டுல போனதில்லையோ?” என்ற சிந்தனை அவன் மனதில் மின்னலடித்து சென்றது.
“ஹலோ சார் உங்களைத்தான்” என்றாள் அவள்.
சுடிதார் அணிந்து பொட்டு வைத்திருந்தாள். தமிழ் பெண்ணா? தமிழ் பேசத் தெரிந்த பெண்ணா? ஆராய்ச்சியோடு அவளை பார்த்தவன் “த்ரீ ஹவர்ஸ்” என்றான்.
“இப்போ மணி ஏழு. பத்து மணியாகுமா? அப்போ மதுரைல இருந்து சென்னை போக… சார் உங்களைத்தான்” தனக்குள் பேசியவள் மீண்டும் முகிலனையே கேள்வி கேட்டாள்.
இதனை பேர் இருக்க இவளுக்கு நான் தான் கிடைத்தேனா? என்று கோபம் கொஞ்சம் எட்டிப் பார்த்தது. அவள் அருகில் இரண்டு முதியவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை தொல்லை செய்யாமல் அவள் இவனை அழைத்திருக்கின்றாள்.
சீட் பெல்ட்டை கழற்றாமல் அமர்ந்திருந்த வித்திலையே இது அவளுக்கு முதல் விமானப் பயணம் என்று தெளிவாக புரிந்தது. பெல்ட்டை அணிந்திருந்தமையால் முன்னாடியோ, பின்னாடியோ இருந்தவர்களிடம் பேச முடியாமல் தன்னிடம் பேசுகிறாள் என்று புரிய அந்த சூழ்நிலையிலும் வான்முகிலனின் உதடுகள் மெலிதாக புன்முறுவல் செய்தன.
“வாய்க்கு ஒரு பூட்டு போட்டு விட்டிருந்தா நான் நிம்மதியா இருந்திருப்பேன்” என்று நினைத்தவன் அவள் சென்னை செல்ல வேண்டும் என்றதால் ஒருவேளை விபத்தில் அவளது உறவினர்களும் சிக்கியிருப்பார்களோ என்றெண்ணி “சென்னைக்கு எந்த பிளைட்டும் இருக்காது ட்ரைன் இல்லனா டாக்சி புடிச்சி தான் போகணும்” என்றான்.
“டாக்சில தனியா அவ்வளவு தூரம் நைட் போறது சேப் இல்ல. ஏர்போட்டுல இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு எவ்வளவு தூரம் இருக்கும்? ஸ்டேஷன் போக வண்டி கிடைக்குமா? இந்த நைட்ல தனியா போறது சேப்பா? அப்படியே போனாலும் சென்னைக்கு ட்ரைன் இருக்குமா?” தனக்குள்ளையே புலம்பியவள் “பொறுமையா காலைலயே வந்திருக்கலாம்” என்று கூறிக் கொண்டாள்.
அவரவர்களுக்கு அவரவர்களின் பிரச்சினை என்றெண்ணியவன் அவள் அடுத்து எதுவும் கேட்கும் முன் கண் மூடி தூங்குவது போல் பாசாங்கு செய்யலானான்.
யாரென்றே தெரியாத அவளுக்கு பயந்து கண் மூடியவன் தூங்கியும் போனான்.
விமானம் தரையிறங்கியதும். ராம் ஏற்பாடு செய்ததாக கூறிய டாக்சியை தேடி வந்து சேர்ந்தான்.
வரும் பொழுதே அனைத்து வைத்திருந்த அலைபேசியை உயிர்ப்பிக்க, ஏகப்பட்ட மிஸ் கால்ஸ் வந்திருந்தது.
வீட்டிலிருந்து பல அழைப்புகள் வந்திருப்பதை பார்த்த பின் தான் வீட்டு ஞாபகமே வந்தது.
வீட்டுக்கு அழைக்கலாமென்று இவன் நினைக்க “சார் நீங்க சென்னைக்கா போறீங்க? உங்க கூட நானும் வரேன். டாக்சி காச பாதியா கொடுத்துடுறேன்” முகிலன் திரும்பி யார் என்று பார்க்கும் முன்பே பயணப்பொதியை ஓட்டுனரிடம் கொடுத்தவள் வண்டியில் ஏறி அமர்ந்திருந்தாள்.
விமானத்தில் சற்று நேரத்துக்கு முன் சந்தித்த பெண். அவள் பெயர் கூட தெரியவில்லை. வண்டியை விட்டு இறங்கு என்று அவளிடம் சண்டை போட முகிலனுக்கு நேரமில்லை. அவன் விட்டுச் சென்றால் அவள் தனியாகத்தான் சென்னை செல்ல வேண்டும் என்பதும் முகிலனுக்கு புரிய, அமைதியாக வண்டியில் அமர்ந்தவன், ராமை தொடர்பு கொண்டு சென்னை நிலவரைத்தை அறிந்து கொண்டதோடு, புதிய தகவல் ஏதும் இருந்தால் தனக்கு அறியத்தருமாறு கூறினான்.
“சார் உங்களுக்கு பசிக்கலையா? மணி வேற பத்த தாண்டிருச்சு” அவள் பேச ஆரம்பிக்க முகிலனின் அலைபேசி அடித்தது. பேசியது சந்திரமதிதான். ராமிடம் பேசி விட்டு வீட்டுக்கு அழைக்கலாமென்று இவன் நினைக்க சந்திரமதியே அழைத்திருந்தாள்.
இவன் ஹலோ என்றெல்லாம் சொல்லவில்லை “நான் நல்லா இருக்கேன். எனக்கு ஒண்ணுமில்ல. மதுரை வந்துட்டேன். இப்போ மதுரைல இருந்து டக்சில சென்னை வந்துகிட்டு இருக்கேன்” என்று சந்திரமதியின் வயிற்றில் பாலை வார்த்தான்.
“உன் போனு வேற இவ்வளவு நேரம் வேல செய்யாம இருந்ததே. உன் குரலை கேட்ட பிறகுதான் நிம்மதியாக இருக்கு. டீவி நிவ்ஸ்ல என்னென்னமோ சொல்லுறாங்கடா” குடும்பத்தார் எவ்வளவு அச்சப்பட்டிருப்பார்கள் என்று சந்திரமதியின் குரலில்லையே தெரிந்தது.
“சரி நீ பதட்டப்படாம இரு நான் வந்துகிட்டே இருக்கேன்” என்றான்.
“இந்த நேரத்துல நீ எதுக்கு வரணும்? ஆமா பாக்யா எங்க? அவளுக்கு என்ன ஆச்சு?” பாக்யா தம்பியின் அருகில் இருந்திருந்தால் அவன் வீட்டுக்கு விரைய அவசியமில்லை. அது மட்டுமா? வீட்டார் அச்சப்படுவார்கள் என்று வீட்டுக்கு அவளே அழைத்து பேசியிருப்பாளே.
“அக்கா பதட்டப்படாத. ஸ்ரீ அந்த பிளைட்ல தான் போனா. அவ போன் கூட வேல செய்யல. நான் வரேன். மாமா மாமா ஏர்போர்ட்ல தானே இருப்பாரு. மாமா போன் பண்ணாரா?அங்க நிலவரம் என்ன?”
“ஐயோ என் புருஷனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே. அவரை மறந்துட்டேன்” வான்முகிலனின் தொடர்பை துண்டித்திருந்தாள் சந்திரமதி.
சந்திரமதியின் அழைப்பு துண்டிக்கப்பட்ட உடன் மீண்டும் முகிலனின் அலைபேசி அடித்தது. அழைத்தது பாக்யஸ்ரீயின் தந்தை சதாசிவம்.
என்ன பதில் சொல்வான்? சமாதானப்படுத்த முடியாதே. “ஸ்ரீக்கு நாளை மதியம் க்ளாஸ் இருக்கு என்று அந்த பிளைட்ல போனா மாமா. அவளுக்கு ஒன்னும் ஆகியிருக்காது. நான் வந்துகிட்டே இருக்கேன்”
“என்ன மாப்புள சொல்லுறீங்க? ஐயோ என் பொம்மு” கதற ஆரம்பித்தவர் “நான் இப்போவே சென்னைக்கு கிளம்பி வரேன்” என்று அவரும் அலைபேசியை அனைத்து விட்டார்.
சென்னையுள்ள நிலவரம் என்னவென்று அலைபேசி வழியாக தனக்கு தெரிந்தவர்கள் எல்லாருக்கும் அழைத்து பேசியவாறே வந்த வான்முகிலனின் அலைபேசி பாட்டரி கூட தூங்க முயல, தன்னிடமிருந்த பவர்பேங்கின் மூலம் உயிர் கொடுத்து பேசலானான்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இந்த மாதிரியான நேரத்தில் எவ்வளவு உதவும் என்பது சட்டென்று மனதில் தோன்றி மறைய மீண்டும் அவன் அலைபேசி அடித்தது. அழைத்தது அவன் அன்னை காஞ்சனாதேவி.
வான்முகிலனையே பார்த்திருந்தவள் “யார்டா இவன் போன் கூடவே குடும்பம் நடாத்துறான். எனக்கு பசி உயிர் போகுது” என்று முறைத்தாள்.
“முகிலா உனக்கு ஒண்ணுமில்லையே நல்லாதானே இருக்க?” காஞ்சனாதேவி பதட்டத்தோடு பேச அன்னை கேட்டல் பாக்யாவை பற்றி கூறாமல் இருக்க முடியாதே, கூறினால் அன்னைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று முகிலன் பதற அவன் கைபேசியை அவள் கைப்பற்றியிருந்தாள்.
முகிலன் கோபமாக அலைபேசியை பறிக்க முயல அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்தவள் “பாக்யா தூங்குறாங்க. உங்க பையன் நல்லாத்தான் இருக்காரு. நான் அவரோட லாயர். அவர் போன் பேசி பேசியே டயர்டாகிட்டாரு. இன்னும் சாப்பிட கூட இல்லை. எனக்கு வேற செம்ம பசி. ஏதாச்சும் ரோட்டு கடைய பார்த்து வண்டிய நிறுத்த சொல்லுங்க. சாப்பிட்டுட்டு பொறுமையா வரோம்” என்றவள் அலைபேசியை முகிலனிடம் கொடுத்தாள்.
அவள் என்னவோ பசி தாங்க முடியாமல் தான் பேசியிருந்தாள். அதுவே காஞ்சனாதேவியை அமைதிப்படுத்தியிருந்தது.
அவள் நெஞ்சில் கை வைத்ததும் அதிர்ந்து பேச்சற்று நின்றிருந்தான் முகிலன். “எந்த பிரச்சினையுமில்லையே. நான் வேற சும்மா பயந்துட்டேன். முதல்ல சாப்பிடுப்பா… பாக்யா பசி தாங்க மாட்டா” புன்னகைத்தவாறு காஞ்சனாதேவி அலைபேசியை அனைத்து விட முகிலன் நிம்மதிப்பெருமூச்சு விட்டதோடு அவளை நன்றியோடு பார்த்தும் வைத்தான்.
ஓட்டுனரிடம் வண்டியை ஏதாவது ஒரு இடத்தில் சாப்பிட நிறுத்துமாறு கூறியவனின் நினைவில் வந்து நின்றாள் பாக்யஸ்ரீ.
“எங்க போனீங்க? எவ்வளவு நேரம் உங்களுக்காக காத்துகிட்டு நிக்கிறதாம்? இனிமே நைட்ல லேட்டா வராதீங்க. வர்றதா இருந்தா வெளியவே சாப்பிட்டு வந்துடுங்க. என்னால சாப்பிடாம உங்களுக்காக காத்துகிட்டு இருக்க முடியாது” கோபமாக திட்டியவாறே முகிலனுக்கு உணவை ஊட்டிவிடுபவள் அவளும் உண்பாள்.
“நீ இன்னும் சாப்பிடலையா?” என்று இவன் அவளுக்கு ஊட்டிவிடுவான்.
“நான் எப்பயோ சாப்பிட்டேன். இது சும்மா” என்று அவன் கொடுத்ததை சாப்பிடுவாள்.
அவள் காத்திருக்க முடியாது என்று திட்டுவது, சாப்பிட்டேன் என்று சொல்வது எல்லாம் பொய். அவனோடு நேரம் செலவிட வேண்டும், அதற்கு அவன் நேரங்காலத்தோடு வீடு வர வேண்டும். சின்ன சின்ன சண்டைகள் போட வேண்டும் அதற்காகத்தான் திட்டுகிறாள்.
“உனக்கு கோபப்படுறது போல நடிக்கக் கூட தெரியல” அவள் புடவை முத்தியல் கையை துடைத்தவாறு கிண்டல் செய்வான் முகிலன்.
“சார் சார் இறங்கி வாங்க சாப்பிடலாம்” நிலஞ்சனா கதவை திறந்து இறங்கி நின்று முகிலனை அழைத்தாள்.
“என்ன?” சிந்தனையில் இருந்து மீண்டவன் வண்டி ரோட்டுக் கடையருகே நிற்பதை பார்த்து “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டு வந்துடுங்க ஐம் கெட்டிங் லேட்” கையிலிருந்த வாட்ச்சை வேறு தட்டிக் காட்டினான்.
“சரியான பஞ்சுவாலிட்டிக்கு பொறந்த பைத்தியமா இருப்பான் போல. பசிக்கு தானே சாப்பிட முடியும். பறந்துகிட்டா சாப்பிட முடியும். பிளைட் க்ரஷ் ஆகிருச்சு. நடந்தத மாத்த முடியுமா? ரெஸ்கிவ் டீம் இந்நேரத்துக்கு அவங்க வேலைய பார்க்க ஆரம்பிச்சிருப்பாரு. என்னமோ இவரு போய் தான் எல்லாரையும் காப்பாத்தணும் போல என்னமா பில்டப்பு” முகிலனை மனதுக்குள்ளேயே திட்டித் தீர்த்தவாறு வயிறை நிரப்பலானாள் நிலஞ்சனா.
பத்துநிமிடங்கள் கூட ஆகவில்லை வண்டியின் ஹார்ன் அடிக்கவே “வரேன் வரேன்” என்று முணுமுணுத்தவாறே வந்து வண்டியில் ஏறி அமர்ந்தாள்.
நிலஞ்சனாவுக்கு முகிலனின் நிலைமை புரிகிறதா? அவளது குணமே இப்படித்தானா? பிரச்சினை என்று வரும் பொழுது பதட்டப்படாமல் இவளால் எவ்வாறு செயல்பட முடிகிறது? அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லையோ? அதனால் பதட்டப்படாமல் இருக்கின்றாளா? முகிலன் யாரோ, எவனோ தானே அவன் பிரச்சினைக்கு இவள் எதற்காக பதட்டப்பட வேண்டும் என்று நினைக்கின்றாளா? தெரியவில்லை.
வண்டி கிளம்ப ஆரம்பித்ததும் நேரத்தின் முக்கியத்துவத்தை பற்றி நிலஞ்சனாவுக்கு பாடம் நடாத்தலானான் முகிலன்.
“எனக்கு சோறு முக்கியம் சார்” என்று அவன் மூக்கை உடைத்தவள் கண்களை மூடி தூங்க ஆரம்பித்தாள்.
“யாரு இவ?” என்று அவளை பார்த்தவன் அடுத்து பேசும் முன் அவன் அலைபேசி அடித்தது. அதை இயக்கி காதில் வைத்து பேச ஆரம்பித்தவன் நிலஞ்சனாவை மறந்து போனான்.
முகிலன் அலைபேசியை விட மாட்டான் என்று அறிந்ததால் காதுக்கு ஹெட்செட்டை மாட்டியவாறு தூங்கியிருந்தாள் நிலஞ்சனா.
சூரியன் கிழக்கில் விழிக்கும் பொழுது சென்னையை வந்தடைந்தான் வான்முகிலன். சென்னை வந்ததும் வான்முகிலனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. பாக்கியஸ்ரீக்கு எதுவும் ஆகியிருக்காது சிறு காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பாள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தான்.
ராமை அழைத்து ஸ்ரீயை பற்றி தகவல் எதுவும் கிடைத்ததா என்று விசாரித்தான்.
“விமான நிலையத்துல இருந்தவங்க எல்லாரையும் மருத்துமனைகள்ல சேர்த்துட்டாங்க. சொந்தபந்தங்க எங்க இருக்காங்க என்று தெரியாம ஆளாளுக்கு தேடிகிட்டு இருக்காங்க சார். நான் ஜீ.எச்ல மேடம் இருக்காங்களா என்று பார்த்துட்டு இப்போ விமலா ஹாஸ்பிடல் வந்துட்டேன்” என்றான்.
வண்டியை விமலா மருத்துவமனைக்கு விட சொன்னவன் அருகில் கூட செல்ல முடியாதபடி கூட்டம் நிரம்பி வழியவே பணத்தைக் கொடுத்து இறங்க அங்கே ஓடி வந்தான் ராம்.
நிலஞ்சனாவை அவள் சொல்லுமிடத்தில் இறக்கி விடச் சொல்லி விட்டு மருத்துவமனைக்கு ராமோடு விரைந்தான் வான்முகிலன்.
“எங்க போகணும் என்று சொன்னா இறக்கி விடலாம். இந்தம்மா தான் தூங்குறாங்களே” என்ன செய்வது என்று தூங்கும் நிலாஞ்சனாவை பார்த்த ஓட்டுநர் வண்டியை கிளப்பினார்.
மருத்துவமனைக்குள் சென்ற பின்தான் விபத்தின் விபரீதம் வான்முகிலனுக்கு புலப்பட்டது.
விமான விபத்து சாதாரண விபத்தாக அவனுக்கு தெரியவில்லை. பார்க்குமிடமெல்லாம் பிணங்கள். அடையாளம் காண்பதே சிரமமாக இருந்தது.
விபத்து நடந்தது என்று ராம்தான் முகிலனுக்கு அலைபேசி வழியாக தகவல் கூறியிருந்தான். தொலைக்காட்ச்சி செய்திகள் எதுவும் பாராமல் தான் விமானம் ஏறியிருந்தான். அலைபேசியிலாவது பார்த்திருக்கலாம். விமானம் தரையிறங்கியதிலிருந்து அழைப்புக்கள் வந்தவண்ணம் இருக்க செய்தியை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.
பிணங்களை பார்க்கும் பொழுது மனதுக்குள் அச்சம் பரவி உடல் குளிரெடுக்க ஆரம்பித்ததை அவனே உணர்ந்தான்.
“ராம் விபத்துல எத்தனை பேர் உயிர் தப்பினாங்க?” உயிர் தப்பியவர்களுள் தன்னுடைய ஸ்ரீ இருந்துட்டு மாட்டாளா? என்ற ஏக்கம் பிணங்களை பார்க்கும் பொழுது ஏற்படவே கேட்டான் வான்முகிலன்.
“நூறு பேர் கூட உயிர் தப்பலனு சொல்லுறாங்க. நிறைய பேர் பிணங்களை பார்த்து அடையாளம் கண்டுகொள்ள முடியலைன்னா தான் உசுரோட இருக்கிறதா தேடுறாங்க” என்று ராம் சொல்ல கொஞ்சம்நஞ்சம் இருந்த நம்பிக்கையும் சிதைய முகிலனின் கால்கள் அங்கேயே நின்றன.
“சார்…”
“போன்ல பேசும் போது இதப்பத்தி ஏன் சொல்லல”
“விமான விபத்த பத்தி டீவி நிவ்ஸ்ல சொன்னதுக்கே மக்கள் கூட்டம் கூட்டமா படையெடுத்துட்டாங்க. இதுல இத்தனை பிணம் விழுந்திருக்கு என்றா சென்னை முழுக்க மக்கள் வெல்லம் தான். அதனால நிவ்ஸ்ல சொல்லாம மறச்சிட்டாங்க. ஜி.எச் போன பிறகுதான் எனக்கே தெரியும்” என்றான் ராம்.
உயிரோடு இருந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அனைவரையும் பார்த்து அவர்களுள் பாக்யஸ்ரீ இல்லையென்றதும் உடைந்து அழ ஆரம்பித்தான் வான்முகிலன்.
நிலஞ்சனா கண்விழிக்கும் பொழுது ஓட்டுநர் ஒரு ரோட்டுக்கடையில் வண்டியை நிறுத்தி டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
இவள் பார்ப்பதை கண்டு அருகில் ஓடி வந்தவர் “மேடம் டீ சாப்பிடுறீங்களா?” என்று கேட்டார்.
அவரை பார்த்து புன்னகையோடு தலையசைத்து மறுத்தவள் காலை வணக்கமும் வைத்தாள்.
எங்கே செல்ல வேண்டும் என்று கூறியவள் இறங்கும் பொழுது பணம் கொடுக்க, வான்முகிலன் கொடுத்து விட்டதாக ஓட்டுநர் கூறி அவளது பயணப்பொதிகளை எடுத்துக் கொடுத்தார்.
“பார்டா… பேர் கூட தெரியல. எங்க இருக்கார் என்றும் தெரியல. டாக்சி காச எப்படி கொடுப்பேன்” முணுமுணுத்தவாறு ஓட்டுநர் இறக்கிவிட்ட வீட்டு வாசலில் நின்று அழைப்புமணியை அழுத்தினாள் நிலஞ்சனா.
நன்றாக விடிந்திருக்க, சொந்தபந்தங்கள் பூதவுடலை பெற்றுக் கொண்டு பலபேர் சொந்த ஊரை பார்த்து கிளம்பியிருக்க, இன்னும் சிலர் அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் தினரிக் கொண்டிருந்தனர்.
முகிலனுக்கு முன்னாடியே சதாசிவம் சென்னை வந்து விட்டார் ஜி.எச் போய் கொண்டிருப்பதாக அலைபேசி வழியாக தகவல் கூற, ராமும் அங்குதான் இருக்கின்றான் என்று முகிலன் கூறியிருந்தான்.
ராம் விமலா மருத்துவமனையில் இருப்பதாக கூறியதும் முகிலன் இங்கு வந்து விட்டான். இங்கு வந்த பின் அவனுக்கு வேறு எந்த சிந்தனையும் வரவில்லை. ஏன் அலைபேசி அழைப்புகள் கூட வரவில்லையே.
“மாமா ஸ்ரீய பத்தி ஏதாவது தகவல் கிடைச்சதா?” வழியனுப்பி வைத்த தனக்கு தகவல் தெரியவில்லையே என்று வான்முகிலன் கதற,
அவன் தோளில் கைவைத்த சதாசிவம் “பொம்மு அங்க இருக்கா மாப்புள” என்று ஒரு திசையில் கைகாட்ட முகிலன் புது சக்தி உடம்பில் பாய்ந்தது போல் அப்பக்கம் விரைந்தான்.
அவன் கண்ட காட்ச்சி விரைந்த அவன் நடையை தளிர செய்து நடைபிணமாக்கியது. அவன் மனைவி பாக்யஸ்ரீ ஸ்ட்ரெச்சரில் கிடத்தப்பட்டிருந்தாள்.
வான்முகிலன் பாக்யஸ்ரீயை உயிரோடு இருப்பவர்களுக்கு மத்தியில் தேடிக்கொண்டிருந்தான் என்றால், சதாசிவமோ நிலைமையை அறிந்து மகளை பிணங்களுக்கு மத்தியில் தேடிக்கொண்டிருந்தார். பாதி முகம் எறிந்த நிலையிலும் பாக்யஸ்ரீயை சரியாக அடையாளம் கண்டு கொண்டிருந்தவர் அழுது, ஓய்ந்த பின்தான் முகிலனுக்கு தகவல் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே தோன்றியது.
“தப்பு பண்ணிட்டேன் ஸ்ரீ உன்ன தனியா அனுப்பி தப்பு பண்ணிட்டேன் ஸ்ரீ. நீ போகணும் என்று சொன்னப்போ நான் உன்ன தடுத்திருக்கணும். இல்ல. இல்ல. நானும் உன் கூடவே வந்திருக்கணும். இப்படி என்ன தனியா விட்டு போய்ட்டியே. நம்ம பாப்பா… ஐயோ” பாக்யஸ்ரீயை கட்டிக் கொண்டு முகிலன் கதற அவன் வீட்டார் அனைவருமே அங்கு வந்து சேர்ந்தனர்.
பாக்யஸ்ரீ கர்ப்பமாக இருந்தது முகிலன் சொன்னதில்தான் அனைவருமே அறிந்து கொண்டனர். அவளோடு குடும்ப வாரிசும் தொலைந்து போனதில் இரட்டிப்பு துயரத்தில் அவளுக்காக இறுதி சடங்குகளை செய்யலாயினர்.