ஆழ் நீலக் கடலும், மேகங்கள் காணாத நீல வானும் தூரத்தே ஏதோ ஒரு புள்ளியில் இணையும் இடம் கரு நீலக் கோடு போல தெரிந்தது. பளீர் வெள்ளை மணலில் நட்டு வைத்திருந்த வண்ணக் குடையின் கீழே, இருவர் சாய்ந்து படுக்கும் வகையில் அமைந்திருந்த இருக்கையில் சாய்ந்திருந்தான் அரவிந்த்.
நீச்சல் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்திருக்க உடற்பயிற்சியில்  வார்த்தெடுத்த தேகம் அங்கிருந்த சில பெண்களின் கவனத்தைக் கவர்ந்துகொண்டிருந்தது. ஆனால் அரவிந்தின் கவனத்தில் அது பதிந்ததுபோலத் தெரியவில்லை. அவன் அந்த காலை நேர இளம் கதிரவனின் மிதமான சூட்டை உள்வாங்கியபடி உடல் தளர்த்தி படுத்திருந்தான்.  அருகில்  அமர்ந்திருந்த இருந்த ரஞ்சியும் அவனை ரசித்துக்கொண்டிருந்த பெண்களில் ஒருத்தியாக அவன் அகன்ற மார்பை பார்ப்பதும், பின் பார்வையை கடலுக்கு மாற்றுவதுமாக இருந்தாள்.
கண் மூடி படுத்திருக்கும் அரவிந்த் கவனிக்கவில்லை என்று நினைத்து மீண்டும் பார்வை அவன் மார்பை வருடிய நேரம், அவனது கை ஒன்று அவள் கன்னம் பிடித்தது.
“என்ன ரஞ்சி, பார்க்க பிடிச்சிருந்தா பார்க்க வேண்டியதுதானே. எதுக்கு பார்வையை திருப்பற?”, கண்ணைத் திறந்து பார்த்தவன், ஒற்றைப் புருவம் தூக்கி நமட்டுச் சிரிப்புடன் கேட்க, பிடிபட்ட ரஞ்சி திருதிருத்தாள்.
முகம் சற்று வெட்கம் பூச, அவன் கையை தன் கை கொண்டு விடுவித்தவள், “இல்லை… அதெல்லாம் இல்லை… சும்மா…”, இழுத்தாள்.
இந்த நெருக்கம் புதிது. மூன்று நான்கு மாதங்களாக நண்பர்களாகப் பழக்கம், மெல்ல மெல்ல மனதை அவன்புறம் இழந்து கொண்டிருக்கிறோம் என்று அவளுக்கும் புரிந்தது. நேற்று ஆட் ஷூட் முடியும் தருவாயில் அரவிந்த் வந்தது எதிர்பாராத மகிழ்ச்சி. அதிலிருந்து நடந்தது எல்லாமே கனவு போல இருந்தது ரஞ்சிக்கு. ஆட் ஃபிலிம் எடுக்க வந்தவர்களோடு செல்வாவும் விடைபெற, ரஞ்சி அரவிந்துடன் இன்னும் மூன்று நாட்கள் இங்கே மாலத்தீவுகளில் தங்கியிருக்கப்போகிறாள்.
சிரித்து பேசி இரவு உணவை முடித்தவள் அவனோடு அறைக்கு செல்ல, அதன் பின் நடந்ததெல்லாம் நினைத்து நினைத்து ரசித்து சுவைக்க வேண்டிய நினைவுகள், உணர்வுகள்.  மனம் முழுக்க அரவிந்த் நிறைந்திருக்க, விரும்பியே, மிக மிக இயல்பாய் அவனோடு ஒன்றிப்போனாள்.
“ரஞ்சி”, என்று அவள் கவனத்தைக் கலைத்தது அரவிந்தின் குரல்.
பெண்ணின் செம்மை பூசிய முகமும், மயங்கிக் கிறங்கும் விழிகளையும் பார்த்தவனுக்கும் அந்த கிறக்கம் தொற்றிக்கொள்ள, “ரஞ்சி… ரூமுக்கு போலாமா?”, என்றான் சற்று கரகரத்த குரலில்.
“ஹ… இல்ல இல்ல…  இப்பதானே வந்தோம்..”, அவசரமாக மறுத்தாள் ரஞ்சி.
“உன் கண்ணும் முகமும் ஒன்னு சொல்லுது, நீ வேற சொல்லுற… என்ன ஓடுது உனக்குள்ள?”
நீச்சலுடையின் மேல், மெலிதான ஒரு அங்கியை போட்டிருந்தவளின் வலது தோளிலிருந்து மெல்ல ஒரு விரல் கொண்டு  தீண்டியபடியே கை முழுதும் பவனி வர, ரஞ்சி நெளிந்தாள்.
“அரூ… ப்ளீஸ்… அது.. நான் வேற நினைச்சிட்டு இருந்தேன்…”
“ஓ… என்ன நினைச்சிட்டு இருந்த?”
“உங்க… மார் மேல தலையை வெச்சுக்கவா ? கொஞ்ச நேரம்?”, ரஞ்சி கேட்கவும், சற்று முழித்தவன்,  கையை விரித்து, “ அதுக்கு எதுக்கு இவ்வளவு யோசனை? வா.”, என்றான்.
அரவிந்தை ஒட்டிப் படுத்து, அவன் மார்பில் தலையை ஒரு புறமாக சாய்த்தவள், சற்று முன்னும் பின்னுமாக  லேசாகஅசைந்து, பின் ஓரிடத்தில் நிலைத்தாள். இடது கை கொண்டு லேசாக அவளை அணைத்தவன், மெல்ல அவள் தலை உச்சியில் முத்தம் ஒன்றை பதித்தான்.
லேசாக முகம் திருப்பி, அவன் மார்பின் மத்தியில் இருந்த முடிகளுக்குள் மூக்கை தேய்த்து அந்த சாக்கில் ஒரு முத்தமும் வைத்தாள் ரஞ்சி.
“ஏய்… என்ன பண்ற… ? இப்படியெல்லாம் பண்ணா, ரூமுக்கு போலாமான்னு கேட்டுகிட்டு இருக்க மாட்டேன்… தூக்கிட்டு போய்கிட்டே இருப்பேன்.”, சிரிப்பினூடே அரவிந்த் சொல்ல,
“இல்ல இல்ல… சமத்தா இருக்கேன். கொஞ்சம் நேரம்.”, மீண்டும் படுத்துக்கொண்டாள். அவனது இதயத் துடிப்பு சீராகக் கேட்டது. அந்த ஒலி அவளை அமைதிப்படுத்தியது. எத்தனை வருடங்களுக்கு அப்பறம் கேட்கிறாள் இத்தனை நெருக்கத்தில் இதயத்தின் ஓசையை.
அவளையும் மீறி கண்ணிலிருந்து ஒரு சொட்டு நீர் இறங்கி அவன் மார்பை நனைக்க, “ரஞ்சி… ரஞ்சி பேபி… என்ன… ?, அவளை நிமிர்த்தப் பார்த்தான் அரவிந்த்.
“ஒன்னுமில்ல அரூ… கொஞ்சம் நேரம் இப்படியே இருந்துக்கறேன் ப்ளீஸ்…”
“எவ்வளவு நேரம் வேணும்னாலும் இருந்துக்கோமா… ஆனா ஏன் அழற? என்னாச்சு?”, படுத்த வாக்கிலேயே முகம் நிமிர்த்திப் பார்க்கும் அவளை கேள்வியாய் நோக்கினான்.
“அது… அப்பா ஞாபகம் அரூ. சின்ன வயசிலர்ந்து, அவர் மார் மேல போட்டு தூங்க வைப்பார். அவரோட ஹார்ட்பீட் கேட்டுட்டே தூங்குவேன். வளர்ந்தப்பறம் கூட நான் எப்ப டிஸ்டர்ப்டா இருந்தாலும், அவர் மேல சாஞ்சிகிட்டு அவர் மார் முடியோட விளையாடிட்டே அப்பா ஹார்ட் பீட் கேட்டா ரிலாக்ஸ் ஆகிருவேன். அம்மா  கூட போட்டி போடுவேன், நாந்தான் அப்பா மேல சாஞ்சிப்பேன், நீ போன்னு அவங்களை வெறுப்பேத்துவேன்.”, சற்று நிறுத்தியவள்,
“அவங்க இரண்டு பேரும் கடைசியா கிளம்பி ஆஃபிஸ் போன அன்னிக்கு முதல் நாள் நைட் கூட டீவில படம் பார்க்கும்போது நான் தான் சாஞ்சிப்பேன்னு அடம் பண்ணினேன். கொஞ்ச நேரத்துலயே என் ஃப்ரெண்டு கூப்பிடவும் போன் பேச போயிட்டேன். அதுதான் நான் கடைசியா கேட்கப்போற அப்பாவோட ஹார்ட் பீட்டுன்னு தெரிஞ்சிருந்தா அவரை விட்டு நகர்ந்திருக்கவே மாட்டேன்.
மறுனாள் அப்பா அம்மாவை பார்த்தப்போ, இரண்டு பேருக்குமே இதயம் துடிக்கலை. நான் காது வெச்சு ஒரு வாட்டியாவது அந்த சத்தம் கேட்க தேடினேன்…ஆனா…சில்லுன்னு கட்டையா இருந்தாங்க.”, அவள் குரல் வலியில் தாழ,
அதுவரையிலும் கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு அதற்கு மேல் தாளவில்லை.  “ஷ்… ரஞ்சிமா…வேணாம்… இப்ப எதுக்கு அதெல்லாம் நினைக்கற…”, லேசாய் அணைத்திருந்தவன் சற்றே இறுக்கினான்.
“எனக்கு பதினாறு வயசிருக்கும்போது கடைசியா கேட்டது. பத்து வருஷத்துக்கப்பறம், இப்பதான் கேட்கறேன் அரூ.  இதுவரைக்கும் அப்படி யார்கிட்டயும் தோணினதேயில்லை. அப்பா மாதிரியே உங்களுக்கும் பெரிய செஸ்ட், கொஞ்சம் முடி, அதுதான் பார்த்துகிட்டே இருந்தேன். எப்படி கேட்கறதுன்னு ஒரு தயக்கம்.”, தலை நிமிர்த்தி அரவிந்தைப் பார்த்தாள்.
“சில்லி… எங்கிட்ட எப்பவும் தயக்கம் வேணாம். ஸ்பீக் யுவர் மைண்ட். உனக்கு இது சந்தோஷத்தைக் குடுக்கும்னா, அது எனக்கும் சந்தோஷம்தான். படு. உனக்கு வேணுங்கற வரை கேட்டுகிட்டேயிரு.”, அவள் தலையை மறு கையால் லேசாக கோதிவிட, அவனின் கைகளுக்குள் பாதுகாப்பாய் உணர்ந்தவள், அரவிந்தின் இதயத்தின் ஓசை தந்த தாலாட்டில் அப்படியே உறங்கிப்போனாள்.