Advertisement

“இப்போ  சொல்லு ஜனா எங்க..? எதுக்கு அவன் மேல திருட்டு பழி போட பேங்க் மேனேஜர்கிட்ட பேசின..?” அழுத்தமாக விசாரிக்க, பசுபதி முழித்தான்.

தேவேந்திரன் ஜனகனுடன் கடையில் இருந்த நேரம் தான் மேனேஜர் போன் செய்து உடனே சந்திக்க கேட்டார். இவர் காரணம் கேட்க, “உங்க மாப்பிள்ளை விஷயமா தான், அவருக்கு ஏதோ நடக்க போகுது, சீக்கிரம் வாங்க..” என்று வைத்துவிட, தேவேந்திரன் சின்ன மகளை வீட்டில் விட்டு மேனேஜர் சொன்ன இடத்துக்கு சென்றார்.

அங்கு மேனேஜருடன், வேறு ஒருவரும் இருந்தார். “இது எங்க ரெஜினல் மேனேஜர்.. எங்களுக்கு காலையில் இருந்து நிறைய பிரஷர், ஜனகன் மேல பணம் கையாடல் பண்ணிட்டான்னு கேஸ் பைல் பண்ண சொல்லி..” என, தேவேந்திரன் அதிர்ந்து போனார்.

“என்னங்க சொல்றீங்க..?” என,

“உண்மை சார்.. நாங்க மறுக்க கேட்காம திரும்ப திரும்ப தொல்லை. இன்னைக்கு மதியம் ஆளுங்க பேங்குக்கே வந்துட்டாங்க, இன்னைக்கு தானே அவனுக்கு கடைசி நாள், கலெக்ஷ்ன் பணத்தை ஜனகன் எடுத்துட்டான்னு போலீஸ் கம்பளைண்ட் பண்ணுங்கன்னு மிரட்டல், நான் முடியாது, பேங்க் ரிபெயூட்டிஷன் பாதிக்கப்படும், பெரிய லாஸ் ஆகும், சிசிடிவி இருக்கு, மாட்டிப்பேன்னு சொல்லி அனுப்பி வைச்சுட்டேன்,  ஆனாலும் அவங்க பார்வை, எங்களுக்கு என்னமோ சந்தேகமா இருக்கு,  நீங்க ஜனகனை கொஞ்சம் சேஃப் பண்ணிக்கோங்க.. நாங்களும் போலீஸ்ல அன்அபிஷியலா ஒரு கம்பளைண்ட் கொடுத்து தான் உங்களை வரச்சொன்னோம்..” என்றனர்.

தேவேந்திரன் இதனை  எதிர்பார்க்கவில்லை. அமர்ந்து யோசிக்கவும் நேரமில்லை. முதலில் ஜனாவை கண்ணில் பார்த்துவிட வேண்டும் என்று பரபரக்க ஆரம்பித்துவிட்டது. மகளுக்கும், அவனுக்கும் விடாமல்  போனில் அழைத்து கொண்டே கிளம்பி வந்தார். வழியில் ஒரு ஆக்சிடன்ட், இவர் சுத்தி வருவதற்குள்  ஜனகன் ஆளே காணவில்லை. சென்ற தடம் தெரியவில்லை. மகளை விட்ட அடுத்த வெகு சில நிமிடங்களில் மாயமாகி இருந்தான்.

தேவேந்திரனுக்கு சந்தேகமே இல்லாமல் மாமனாரை வர சொல்லி பசுபதியை தேடி வந்துவிட்டார். இவன் நடுஇரவு ஆகியும் தெரியாது என சாதிக்க, அவன் வழியில் சென்றே அவனை விசாரித்தார். உள்ளுக்குள் அவ்வளவு கோவம்.  முறுக்கிய கைகளை அடக்கி கேட்க, “சத்தியமா எனக்கு தெரியாது..” பசுபதி இப்போதும் அதையே சொல்ல,

“என்னடா பொறுமையா பேசலாம்ன்னா பார்த்தா ஓவர் ஆட்டம்   காட்டுற..” தேவேந்திரன் கை அவரின் மூக்கில் இறங்கித்தான் விட்டது. இரத்தம் ஒழுக வலியில் கத்தினாலும் அதையே தான் சொன்னான் பசுபதி.

தேவேந்திரன் புருவம் சுருக்க, “நிலம் வேற யாருக்கோ மாற போகுதுன்னு கேள்விப்பட்டேன், அப்போ அவன் தானே, அந்தாள் பேரை சொல்லு, உன் பசங்களை விட்டுடுறேன்..” என்றார்.

பசுபதி முகத்தில் கலவரம். “அது.. அதுவும் எனக்கு தெரி..” தேவேந்திரன் திரும்பி பார்க்க, அவரின் மகனை காரில் இருந்து இறக்கி கீழே போட்டனர். ஐயோ என் மகன் என்று பசுபதி கத்த, சரமாரியாக அடி அங்கு விழுந்தது.

“சொல்லிடுறேன்.. சொல்லிடுறேன்.. தீனதயாளன்..”

“தீனதயாளன்னா.. இந்த *** கட்சியோட தலைவர் தானே..” தேவேந்திரன் அண்ணன் கண்களை விரித்து கேட்க,

“அது மட்டும் இல்லைண்ணா.. அவர் ஒரு இண்டஸ்ட்ரியலிஸ்ட்..” என்றார் தேவேந்திரன்.

“அவர்.. அவர் எதுக்கு என் மகனை..?” வேலய்யன் மிரண்டு போய் கேட்டார்.

“அந்த நிலம்.. அந்த நிலம் அவருக்கு தான் போக போகுது..” பசுபதி சொன்னான்.

“மாமா, அண்ணா கிளம்பலாம்.. அந்தாளை பார்க்கணும்..” தேவேந்திரன் உடனே கிளம்ப போக,

“அவரை உங்களால பார்க்க முடியாது, அவர் இப்போ நம்ம நாட்டிலே இல்லை..” என்றான் பசுபதி.

“அப்போ நீ எங்களோடே இரு.. எப்படி பார்க்க முடியாம போகுதுன்னு நாங்க பார்க்கிறோம்..”  என்று அவனையும் தூக்கி காரில் போட்டு கொண்டு சென்றனர்.

தீனதயாளனின் சொந்த ஊரும்  மதுரை தான். அங்குள்ள வீட்டிற்கு, ஆபிஸிற்கு, தொழில் நடக்கும் இடத்திற்கு என்று  ஒரு இடம் விடாமல் அலைய, எங்கும் கேட் கூட திறக்கப்படவில்லை.

தேவேந்திரன் தன் செல்வாக்கை பயன்படுத்த அது அங்கும் ஒன்றுமே இல்லாமல் போனது. பதிலாக இவருக்கு தான் புத்தி சொன்னார்கள். “அவரோட டிமாண்ட் என்னன்னு பார்த்து செஞ்சிடுங்க, பொல்லாத மனுஷன் அவர்..” என்று.

பொழுது விடிந்து பொழுது சாய்ந்து,  ஒரு நாள் முடிந்து போனது.  செக்கியூரிட்டிகள் தவிர யாரையும் பார்க்க முடியவில்லை. “நீ கேஸ்  போட போறது தெரிஞ்சு தான் தூக்கியிருப்பாங்க, உன்னால தான் இதெல்லாம்..” வேலய்யனை சாடினான் பசுபதி. வீட்டில் ராஜலக்ஷ்மிக்கு விஷயம் தெரிந்து அவர் வேறு அங்கு அழுது கரைந்தார்.

திருமண வேலைகள் என்று ஒன்றும் நடக்கவில்லை. உறவுகள் வர ஆரம்பிக்க, என்ன செய்வது என்று வீட்டினர் முழித்தனர். தேவேந்திரன் அவரின் அண்ணாவை வீட்டிற்கு அனுப்பி அங்குள்ள நிலைமையை சமாளிக்க சொன்னார். இரண்டாம் நாள் மாலை ஆனது. துரும்பும் அசையவில்லை. ஒரே முன்னேற்றமாக தேவேந்திரனின் விடா முயற்சியில், தீனதயாளனின் மகன் தர்ஷனை  பிடித்தனர்.

அவன்  பட்டும் படாமல் பேச, உடைந்து போன வேலய்யன், “உங்களுக்கு என்ன அந்த நிலம் தானே வேணும், எடுத்துக்கோங்க, நான் இனி அந்த சொத்து பத்தி பேசவே மாட்டேன், தலையிட மாட்டேன், கேஸ்ன்னு போக மாட்டேன், என் மகனை விட்டுட சொல்லுங்க..” என்று அவன் காலிலே விழுக போய்விட்டார்.

“மாமா..” என்று தேவேந்திரன் பதறி அவரை பிடிக்க, வேலய்யன் மாப்பிள்ளையை அணைத்து கொண்டு கதறிவிட்டார். அந்த தர்ஷனோ  அசராமல் நின்றவன், “என் அப்பா வந்ததுக்கு அப்பறம் வந்து பேசுங்க, இப்போ இடத்தை காலி பண்ணுங்க..” என்றான்.

“அய்யா  நான் தான் அதுல தலையிட மாட்டேன்னு சொல்லிட்டேன் இல்லை, என் மகனை விட்டுடுங்க, அவனுக்கு இன்னும் ஒரு நாள்ல கல்யாணம்..”

“அதுக்கு என்ன பண்ண முடியும்..?  முதல்ல பையன் கைக்கு வந்து சேரதை பாருங்கன்னா கல்யாணம், கருமாதின்னு..”

“டேய்..” தேவேந்திரன் ஆத்திரத்துடன் அவனை அடிக்க பாய்ந்தார். கார்ட்ஸ் நொடியில் தேவேந்திரனை தடுத்து அவனுக்கு அரணாக மாறிவிட்டனர்.

தர்ஷன் திமிராக சட்டையை தூக்கி விட்டவன், “நீங்க என்னதான் தலைகீழா நின்னு தண்ணீர் குடிச்சாலும் எங்க அப்பா சொல்லாம உங்க மகன் தலை முடியை கூட நீங்க பார்க்க முடியாது, வந்துட்டாங்க நிலத்தை கொடுத்துடுறேன் எடுத்துக்கோங்கன்னு, உங்களுக்கு அந்த ஆப்ஷன் வேற இருக்கிற மாதிரி, கிழவன் நீ கொடுத்து நாங்க எடுத்துக்கணுமா, எங்களுக்கு வேணும்னா அது எங்களுது தான், உன் சம்மதத்தை யாரும் இங்க வேண்டலை.. இடத்தை காலி பண்ணு..” என்று கார்ட்ஸ் புடைசூழ கிளம்பிவிட்டான்.

இவர்களிடம் சிக்கி மகன் நிலை என்னவோ..? நினைத்த நொடி வேலய்யன் மயக்கத்திற்கு சென்றுவிட்டார். தேவேந்திரன் அவரை தூக்கி கொண்டு மருத்துவமனை ஓடினார். சத்து குறைவு என்று ட்ரிப்ஸ் ஏத்தினர். ஓய்வில் இருக்க வேண்டும் என்றனர். வீட்டினர் அழுது கொண்டு ஓடி வந்தனர்.

தேவேந்திரன் நம்பிக்கை குறைந்து இடிந்து அமர்ந்துவிட்டார். அவரின் செல்வாக்கு எல்லாம் இந்த மாவட்டத்திற்குள் தான் அடங்கும். பசுபதியை கட்டம் கட்டி தூக்கியவரால் தீனதயாளன் அருகில் கூட செல்ல முடியவில்லை. நேஷனல் லெவல் செல்வாக்குள்ள மனிதர். பார்க்கவே தவம் கிடக்க வேண்டும் போல. பணம், அதிகாரம் எல்லாம் அவரின் விரல் நுனியில். அரசியல், ஆட்சி எல்லாம் அவருக்கருகில்.

இந்த மனிதரிடம் சிக்கி ஜனாவின் நிலை. நெஞ்சடைத்தது தேவேந்திரனுக்கு. ஓய்ந்து அமர்ந்துவிட, வீட்டினர் அவரை கேள்விகளால் துளைத்தெடுத்தனர். “வந்திடுவான்.. பத்திரமா வந்திடுவான்..” இது மட்டுமே சொல்ல முடிந்தது. நடப்பதை சொல்லி அவர்களையும் கலங்க வைக்க வேண்டுமா..?

“என்ன நடக்குது, சொல்லுங்கண்ணா, நாங்க எதாவது செய்றோம்..” என்று ஜனாவின் மற்ற மூன்று மச்சான்கள் கேட்டு கொண்டிருக்க, ராஜலக்ஷ்மி கணவருக்கு பக்கத்தில் இன்னொரு படுக்கைக்கு தயாராக இருந்தார்.

“ஒருநாள் தான் இருக்கு கல்யாணத்துக்கு, என்ன பண்ணலாம்..?” அவரின் அண்ணா கேட்டார்.

“எனக்கும் தெரியலண்ணா..” தேவேந்திரன் தோள் சாய்ந்திருக்கும் மகளை பார்த்தார். மகள் அழுகையில் தோள் நனைந்து கொண்டிருந்தது. இரண்டு நாளைக்கே அவள் மட்டுமில்லை மொத்த வீட்டினரும் ஓய்ந்து போயிருந்தனர்.

அண்ணனோ, “நடக்க வாய்ப்பிருக்குமா..? சொந்தக்காரங்களுக்கு சொல்லிடலாம்ன்னு..” என, வாய்ப்பு இருப்பதாக அவருக்கு தெரியவில்லை.

‘இப்போ கல்யாணமா முக்கியம், மாமாவை கண்ணுல பார்த்துட்டா போதுமே..’ பொம்மி அழுகை கூடியது. தேவேந்திரனுக்கும் அது தான் தோன்றியது. இருக்கும் நிலையில் திருமணம் நிற்பதை விட ஜனா நல்லபடியே கைக்கு வந்து சேருவது தான் முக்கியம்.

ஏதோ முடிவெடுத்தவராய் முகத்தை துடைத்து கொண்டவர், “சொல்லிடுங்க ண்ணா.. பார்த்துக்கலாம்..” என்றார்.

வேறு வழி இல்லை. அது தான் கடைசி வாய்ப்பு. அழும் மகளை மனைவியிடம் ஒப்படைத்தவர் கிளம்பிவிட்டார். “எங்க தேவா..?” அண்ணா பின்னால் வர,

“நமக்கு ஒரு வாய்ப்பு இருக்குண்ணா.. அவரை பார்க்க தான் போறேன்..” என்றார்.

“யாரு தேவா..?” அவர் புரியாமல் பார்க்க, தேவேந்திரன் பதில் இல்லாமல் கார் எடுத்து சென்றார்.

ஒரே துறை ஆட்கள். எங்களுக்கு உதவி செய்ய ஒத்து கொள்வார்களா..? உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை. நண்பர் ஒருமுறை பிரச்சனையில் மாட்டிக்கொண்ட நேரம் உதவியது அவர்கள் தான். தேவேந்திரன் இப்போது அந்த நண்பரையும் பிடித்து காரில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

ஜனா எங்கடா இருக்க..? காரை விரட்டினார் மனிதர்.

ஜனாவோ அங்கு இதுநாள் வரை.. இந்த இருபத்தைந்து வருடமாக  உணராத ஒன்றை, அனுபவிக்காத ஒன்றை அனுபவித்து கொண்டிருந்தான்.

Advertisement