காவியத் தலைவன் – 3

‘சார்… இதை சாப்பிடுங்க… அதை சாப்பிடுங்க…’ என்ற ஏகபோக வரவேற்பில் விவேக்கின் முகம் வெளியில் கடுகடுப்பைக் காட்டிக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் ஏனோ அப்படியொரு குதூகலம்.

அடுத்து என்ன என்று அவனுக்கு அத்தனை ஆர்வமும், சுவாரஸ்யமும்.

தன்னை ஏய்த்து வேலை வாங்கப் பார்த்த பிரதாபனை தன்னால் எதிர்க்க முடியவில்லை, ஆனால், அவன் திட்டத்தைத் தவிடுபொடியாக்க ஆள் இருக்கிறது என்கிற சந்தோசம்.

அடுத்து என்ன என்று அவன் ஆவலாகக் காத்திருந்த எதிர்பார்ப்பைப் பொய் ஆக்காமல், கொஞ்ச நேரத்தில் அந்த வீட்டில் இளவட்டங்களின் கூட்டம் நிறைந்தது.

சத்யேந்திரன் வருபவர்களை உபசரிப்பதும் மாடிக்கு அழைத்துச் செல்வதும் கண்ணில் பட, விவேக்கின் விழிகள் தன்னை மீறிச் சில நொடிகள் ஒளிர்ந்து விட்டது. ஆனால், அந்த கூட்டத்திலிருந்த ஒரே ஒரு பெண்ணைப் பார்த்து மட்டும் அவனது புருவங்கள் யோசனையாகச் சுருங்கியது. எங்கேயோ பார்த்த முகம். சட்டென்று நினைவில் வேறு வர மறுத்தது.

தென்னரசு அவன் அருகே வந்து, “சார் ஒரு நிமிஷம்…” என்று அவனைத் தனியாக அழைத்துச் சென்றவன், “ஏதாவது சொல்லணுமா சார்? “ என்றான் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்து.

கூட்டத்தைக் கண்டு அவனின் கண்கள் ஒளிர்ந்ததையும் தென்னரசு பார்த்தான். வந்தவர்களின் முகம் பார்த்துவிட்டு யோசனையாக விழிகள் சுருங்கியதையும் கண்டுகொண்டான்.

விவேக்கிற்கே சரியாக விளங்காத போது அவன் என்னவென்று சொல்வான், “ம்ம்… இல்லை…” என லேசாக தடுமாறியவாறு தொடங்கியவன், மற்ற காவலர்கள் தன்னை கவனிக்கக் கூடும் என உணர்ந்து, சற்று நிமிர்ந்து நின்றான். தன் கைகள் இரண்டையும் பின்னால் கட்டிக்கொண்டு குரலை செருமி, “இல்லை… எதுவும் இல்லை… ஆனா ஏதாவது இருந்தா கண்டிப்பா உங்ககிட்ட சொல்லுவேன்” என்று விரைப்பாக நின்றபடியே அவர்கள் பக்கம் இருப்பவன் போலப் பேச,

அவன் பாவனைக்கும் பேச்சுக்கும் சுத்தமாகச் சம்பந்தம் இல்லை. அதிலும் ஏதாவது இருந்தால் கண்டிப்பாகச் சொல்வேன் என்று அவன் சொன்னதில் அவனுடைய மனநிலை என்னவென்று தென்னரசுக்கு புரிவது போல இருந்தது.

மெல்ல விவேக்குடன் வந்த மற்ற காவலர்களைப் பார்த்தான். அவனுக்கு விவேக்கின் விரைப்புக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று அனுமானிக்க முடிந்தது.

குரலை செருமிவிட்டு, “திடீர்ன்னு கெஸ்ட் வந்துட்டாங்க. அவங்களுக்கு என்ன வேணும்ன்னு பார்த்துட்டு, அப்படியே நான் சார் என்ன செய்யறார்ன்னும் பார்க்கிறேன். உங்க டியூட்டியை பார்க்கணுமே நீங்க…” என தென்னரசு வெகு இலகுவாகச் சொல்ல,

விவேக்கிற்கு அவன் தன்னை கண்டுகொண்டான் என புரிந்து விட்டது. அதே போலி விறைப்புடன் கண்கள் மட்டும் சிரிக்க, “நாங்க அதுவரை வெயிட் செய்யறோம்” என சொல்லி வந்து மற்ற காவலர்களோடு நின்று கொண்டான்.

மேலே சென்ற தென்னரசு, ஏற்கனவே தாரா அவர்களோடு கலந்து நிற்பதைக் கவனித்து விட்டு திருப்தியானவன், சத்யாவை தனியே அழைத்து, “சரி மேலே எல்லாரும் இருக்காதீங்க. கோ டவுன்…” என்க, இது அண்ணனின் ஏரியா எனப் புரிந்தவனும் அனைவரோடும் கீழே சென்று விட்டான். விருந்தாளிகளுக்கான உபசரிப்பு தொடங்கியது.

தென்னரசு தாரா தங்கியிருந்த இரு அறைகளையும் நன்றாக அலசினான். அவள் இருந்த தடயம் எங்கும் இல்லை. அவளுடைய ஒரு சிறிய ட்ராவல் பேக் மட்டுமே இருந்தது. அதை எடுத்து யாரும் அறியா வண்ணம் மறைத்து வைத்துவிட்டு கீழே வந்து விட்டான்.

சரியாக அந்நேரம் ஆதீஸ்வரனின் அழைப்பு வர, “கம்மிங் சார்…” என்று அவன் இருந்த அறைக்குள்ளே சென்றான்.

“அப்சர்வ் செஞ்சியா?” என்று ஆதி கேட்க,

“சார்… பேக் கிரவுண்ட் கிளியர். அண்ட் இங்கே எந்த பிராப்லம் செய்ய வந்த மாதிரியும் தெரியலை…” என்று தாராவைப் பற்றிச் சொன்னவன், “ஒன் மோர் திங்…” என்க,

“இன்ஸ்பெக்டர் விவேக் தானே?” என்றிருந்தான் ஆதி.

எப்பொழுதும் போல அவனது நுண்ணறிவில் வியந்து போனவன், “எஸ் சார்…” என்றான் ஆச்சரியமாக.

கூடவே தென்னரசு, “சீக்கிரம் நம்ம வழிக்கு வந்துடுவான்…” என்றும் சொல்ல,

மறுப்பாகத் தலையசைத்து, “அல்ரெடி வந்துட்டான்” என்றான் ஆதி.

சிறு புன்னகையுடன், “தட்ஸ் கிரேட் சார்…” என்றவன், “சார் மேலே எல்லாம் கிளியர்… சர்ச் பண்ண சொல்லலாம்…” என்றும் சொல்ல, சிறு தலையசைவுடன் ஆதி வெளியே வந்தவன், “இன்ஸ்பெக்டர் சார்…” என்று குரல் கொடுத்தான்.

விவேக் அவனிடம் செல்ல, “வீட்டுல சர்ச் பண்ணிக் கண்டுபிடிக்கிற அளவுக்கு எந்த பாமும் யாரும் வைக்கலை போல… ஸ்டில் டூ யூ வாண்ட் டு சர்ச்?” என்று போலி வியப்புடன் கேள்வி கேட்க, “இட்ஸ் அவர் டியூட்டி சார்…” என்றான் அவனும் வேறு வழியில்லாததால்.

“ஓகே புரசீட்…” என்று தோளைக் குலுக்கிவிட்டு நகர, அங்கிருந்த இளவட்டங்கள் எல்லாம் இவனது ஆளுமையான தோற்றத்தையும் பேச்சையும் தான் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் துளியும் கண்டுகொள்ளாது, ஏன் வரவேற்பாய் கூட ஒரு புன்னகை செய்யாது விறுவிறுவென மாடியை நோக்கிச் சென்று விட்டான்.

சத்யாவிற்கு கனிகா தன் அண்ணனைப் பார்த்த பிறகும் அமைதியாக இருப்பது ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் நட்பு தொடங்கிய காலத்திலிருந்து கனிகாவிற்கு ஆதியின் புராணம் தான். அவனைப் பற்றியே தான் கேட்டுக்கொண்டே இருப்பாள். அவனின் நேர்மை அவளுக்கு மிகவும் பிடிக்கும் என அடிக்கடி சொல்வாள். எவ்வளவு போல்ட்டா இருக்காங்க என்று சிலாகித்துக் கொண்டே இருப்பாள். இந்த சின்ன வயசுல இவ்வளவு உயரம்… ஹப்பா எனக்கு இன்ஸ்பிரேஷனே அவர்தான் தெரியுமா என்று புகழ்வாள். அவனை இன்ட்ரோ செய்து வைக்கச் சொல்லி நச்சரிப்பாள். அப்படிப்பட்டவள் இன்று ஆதியை நேரில் பார்த்த பிறகும் அமைதியாக இருந்தது அவனுக்கு ஆச்சரியம் தான். அவளிடம் அதை ரகசியமாகக் கேட்க வேறு செய்ய,

“நான் அவரை பார்த்து மெய்மறந்து போயிட்டேன் சத்து. இன்னும் மயங்கி கீழே விழாம இருக்கிறதே ஆச்சரியம் தான்… அந்தளவுக்கு சந்தோசமாவும் படபடப்பாவும் இருக்கு… இன்னைக்கு எனக்கு இவ்வளவு தான் தாங்கும். இன்னைக்கே அவர்கிட்ட பேசினா நான் அவ்வளவு தான். அந்த ஷாக் இன்னொரு நாள்… ரொம்ப ரொம்ப தேங்க்ஸ், அவரை என் கண்ணுல காட்டினதுக்கு…” என்று கனிகா சொல்ல, சிரிப்புடன் அவளின் ஆர்ப்பாட்டத்தைக் கேட்டுக் கொண்டாலும், அவளின் பேச்சில் என்னவோ குறைவது போல சத்யாவிற்குத் தோன்றியது. ஆனால், என்னவென்று தான் பிடிபடவில்லை.

ஆதீஸ்வரன் மாடி ஏறியபோது அவனைத் தொடர்ந்து ஏறிய இரு காவலர்கள் வீட்டை அலசத் தொடங்கினர். மாடி முழுவதும் பெரும்பாலும் இவன் ராஜ்ஜியம் தான்! அங்கே அனாவசியமாக யார் வருவதும் இவனுக்குப் பிடிக்காது. இவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக அங்கிருந்த சோபாவில் கண்மூடி அமர்ந்து கொண்டான்.

காவலர்கள் எதைத் தேட என்று கூட தெரியாமல் வீடு முழுவதும் தேட, என்ன தேடியும் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்று ஆதி மீது கொண்ட உறுதியுடன் மற்றவர்கள் பார்வைக்குத் தேடுவது போலத் தீவிர பாவனை காட்டிக் கொண்டிருந்தான் விவேக்.

அனைத்தையும் தேடி முடித்து விட்டு மாடியில் ஆதியைத் தேடி வந்த விவேக், “சார் சந்தேக படும்படியா எதுவும் கிடைக்கலை… நாங்க காவலுக்கு ரெண்டு பேர் உங்க கூடவே இருக்கோம்?” என்று சொல்ல, “அதெல்லாம் வேணாம் விடுங்க… இங்க ஆளுங்க இருக்காங்க… ஏதாவது வேணும்ன்னா நானே கூப்பிடறேன்…” என்று மறுத்து அனுப்பி விட்டான்.

அவர்களும் அமைதியாக அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.

ஆதி இன்னமும் அங்கேயே சோபாவில் அமர்ந்திருந்தான். அவனுக்கு இந்த சத்தம், ஆர்ப்பரிப்பு எல்லாம் சுத்தமாகப் பிடிக்காது. சத்யாவின் நண்பர்கள் கிளம்புவதற்காகக் காத்திருந்தான். தம்பியிடம் அவனுக்குக் கொஞ்சம் பேச வேண்டி இருந்தது.

விழி மூடி சோபாவில் தலையை பின்னால் சாய்த்து அமர்ந்திருந்தவனின் செவிகளில் மெலிதாக கொலுசொலி. நொடிகள் கடக்கக் கடக்க அந்த கொலுசொலியின் சத்தம் கூடிக்கொண்டே சென்றது. அந்த ஒலியினை வைத்து தன்னை நோக்கி யாரோ வருவதை ஊகித்தவனுக்கு, அவனது உடல் விரைத்தது, ‘யார் தந்த தைரியம் இது?’ என்று.

“சாரே…” என்றோர் மெல்லிய குரல்.

எரிச்சலாக வந்தது ஆதீஸ்வரனுக்கு. விழிகளை வேண்டுமென்றே திறக்கவில்லை.

“என்னே திட்டிதறுக்கறது சார். குறைச்சு சம்சாரிக்கணும் பிளீஸ்” என்று ‘என்னை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களிடம் பேச வேண்டும்’ என கெஞ்சலாகக் கேட்ட தாராவின் குரலில் நடுக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது.

பட்டென்று விழிகளைத் திறந்தான். விழிகளில் செவ்வரி ஓடிட, முகம் இறுகி, அவளை உறுத்து விழித்தவனின் பார்வையில் அவளுக்கு உள்ளுக்குள் நடுக்கம் ஓடியது.

பயத்தில் முகம் வெளிறி, எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டு அவன் பார்வையை எதிர்கொண்டவளுக்கு வியர்க்கத் தொடங்கி விட்டது. இதயம் தம் தம் என அடிக்க, கால்கள் லேசாகத் தள்ளாடுவதைப் போல உணர்ந்தவள் கையை பிடிமானத்திற்காக அருகில் இருந்த சோபாவில் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

“எந்தா சம்சாரிக்கணும்?” என்று கேட்டு கோபமாக எழுந்தவன், “முதல்ல யாரை கேட்டு மேலே வந்த நீ? என் ரூமில் நீ தங்குனதுல முழுக்க முழுக்க தப்பு எல்லாம் என் தம்பி மேலே தான். அதுனால உன்னை ஒன்னும் சொல்லாம விட்டா… அப்படியே ஓடி போறதை விட்டுட்டு எவ்வளவு தைரியமா என் பர்மிஷன் இல்லாம என்கிட்ட பேச வருவ?” என்று அவளருகே சென்று அதட்ட,

அவ்வளவு தான்! தாராவுக்கு படபடப்பு கூடி, தள்ளாடி மயங்கிச் சரியலானாள்.

ஆதி சற்று தள்ளி நின்றிருந்தால் கீழேயே விழுந்திருப்பாளோ என்னவோ! இவன் அருகில் சென்று மிரட்ட சோபாவை பிடிமானத்திற்காகப் பிடித்திருந்த காரணத்தினால் மயங்கி முன்னோக்கி இவன் மீதே சரிந்து விட, ஆதியின் தேகம் அவள் பூவுடலைத் தாங்கியதும் இறுகியது.

தள்ளி விட்டுவிட்டுச் செல்லக் கூடியவன் தான். ஆனாலும் இன்று என்னவோ அவனைத் தடுக்க, அவளை விலக்கித் தள்ளாத தன் செயல் மீதும் எரிச்சல் தான் வந்தது.

அவளின் ஒரு பகுதி உடல் முழுவதும் தன்மீது படர்ந்திருக்கும்படி சாய்ந்திருக்க, வேறு வழியின்றி அவளை மெதுவாக நகர்த்தி சோபாவில் கீழே விட்டவன், எதிர்பாராமல் அவனும் சோபாவில் அவளருகே சரிந்து விட்டான். தன் தோளில் சாய்ந்தபடி தொய்ந்து போயிருந்த தாராவை மெல்ல நகர்த்தி சோபாவில் சாய்த்து விட்டு, அவளை விட்டு விலகி எழுந்து நின்றான்.

வாடி, வதங்கி தொய்ந்து போய் படுத்திருந்த பெண்ணவளை ஆராய்ச்சியாக சில நொடிகள் பார்த்திருப்பான். பிறகு தலையை உலுக்கிக்கொண்டு அங்கிருந்த நீரை எடுத்து அவள் முகத்தில் வேகமாக அடித்தான்.

புருவங்களை சுருக்கி, முகத்தை மட்டும் லேசாக அசைத்தவளுக்கு இன்னமும் விழிப்பு வரவில்லை. சலிப்புடன், இன்னுமொருமுறை கை நிறைய நீரை ஊற்றி வேகமாக அடிக்க, முகத்தை வெகு நேரம் சுருக்கி விட்டு, கஷ்டப்பட்டு விழிகளைத் திறந்து பார்த்தாள்.

எதிரில் ஒற்றைக் கையை இடுப்பில் தாங்கியபடி அவளை உறுத்து விழித்தபடி ஆதீஸ்வரன்.

அவளுக்கு உடல் எல்லாம் வெடவெடுத்தது. தெளிந்த மயக்கம் மீண்டும் வரும் போல ஆகிவிட்டது.

அவளின் நடுக்கத்தைப் புரிந்து கொண்டவன் ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றிவிட்டு, “என்ன சொல்ல வந்த?” என்றான் பொறுமையைக் கையில் எடுத்தவனாய். அவள் தோற்றத்தைப் பார்த்து அவன் மனம் இரக்கம் கொண்டிருக்க வேண்டும்.

திருதிருவென சில நொடிகள் விழித்தவள், அவன் பார்வை தன்னிலே இருப்பது புரிந்து, “அது… சாரே… அது…” என்க, அவளின் திக்கலில் அவனுக்கு வந்த பொறுமையும் பறந்து விடும் போலானது.

ஆதியின் முகம் சலிப்பையும் அதிருப்தியையும் அப்பட்டமாகக் காட்ட, வேகமாக, “சாரே ஒ… ஒரு சகாயம்… நான் இன்னு… மாத்… மாத்திரம் இவ்விட நிக்கிட்டே…” என்று தாரா அவ்வரசமாகத் திக்கித்திணறிக் கெஞ்சல் குரலில் கேட்கவும், ஒன்றும் பேசாமல் அவளையே பார்த்திருந்தான்.

அப்பொழுதே மலையாளத்தில் பேசிக்கொண்டிருக்கிறோமே என்று சுதாரித்து, “எ… எனக்கு வேற போக்கிடம் இல்லை சார். வெளிய எனக்கு ஆபத்து வரலாம்…” என்றாள் கண்ணீர் குரலில் எதையோ நினைத்து நடுங்கியவளாக. அவளிடம் பொய்மை இருப்பது போன்று ஆதிக்கு தோன்றவில்லை.

அவன் எதுவும் பேசாமல் இருப்பதைக் கண்டு, “இன்னைக்கு ஒருநாள் மட்டும் சார். நாளைக்கு விடிய காலையில எனக்கு பிளைட். அப்ப நான் கிளம்பிடுவேன்” என்றவள் அவனை நம்ப வைக்க, தன் கைப்பேசியில் இருக்கும் பிளைட் டிக்கெட் எல்லாம் எடுத்து அவனிடம் காட்டினாள். அவளால் எழுந்து நிற்கவே முடியவில்லை. அத்தனை சோர்வோடு இருக்கிறாள் என்று அவளின் முகத்தைப் பார்த்தே தெரிந்தது.

தாரா அதை எல்லாம் காட்ட வேண்டிய அவசியமே இல்லாமல் அவளின் முக பாவனையிலும், உடல்மொழியிலுமே அவனுக்கு அவள்மேல் நம்பிக்கை வந்திருந்தது.

என்ன அந்த நம்பிக்கை இன்னும் சற்று நேரத்தில் சுக்கு நூறாக உடைய காத்திருந்தது.

காலையிலிருந்து யார் பார்வையிலும் படாமல் இவளை விரட்ட வேண்டும் என்று இவன் அத்தனை மெனக்கெட்டிருக்க, இப்பொழுது இவனிடமே வந்து இங்குத் தங்கிக்கொள்ள ஒப்புதல் கேட்டு நிற்கிறாள்.

என்னவோ அவளின் முகத்தைப் பார்த்து அவனுக்கு மறுப்பு சொல்ல மனம் வரவில்லை. அபயம் என்று வந்தவர்களை எப்படி மறுப்பது? அவன் மனம் ஊசலாடிக் கொண்டிருந்த நேரம்,

“எனக்கு வேற வழி தெரியலை சார். இங்கே இருந்தா கண்டிப்பா பாதுகாப்பா இருப்பேன்… இன்னைக்கு மாத்திரம் சார்…” என்ற அவளின் கெஞ்சலில், அவளுடைய பிரச்சினை என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவனின் மனம் தன் இயல்பை மீறி பரபரத்தது.

இன்னும் ஓரிரு நொடிகளில் தாராவுக்கு சாதகமாக ஆதி பேசி இருப்பானோ என்னவோ… அதற்குள் அவனுடைய கைப்பேசி அவனைக் கலைத்திருந்தது.

பாட்டி அழகாண்டாளிடம் இருந்து அழைப்பு. அவனுடைய வேலைப்பளு அவருக்கு நன்றாக தெரியும். அவன் அழைப்பிற்காகக் காத்திருப்பாரே தவிர, அவராக எல்லாம் அழைக்கவே மாட்டார். இன்று அழைத்திருக்கவும், என்ன பிரச்சினையோ என்று தோன்ற, பதற்றத்தோடு அழைப்பை ஏற்றான்.

“என்ன ஆச்சு பாட்டி?” பதற்றம் குறையாமல் ஆதி கேட்க,

“எங்க இருக்க?” இவன் பதற்றத்திற்கு முற்றிலும் எதிர்ப்பதமாக முழு நிதானத்துடன் அவர் கேட்டார்.

அவன் புருவங்கள் முடிச்சிட்டது. “என்ன ஆச்சு பாட்டி?” என்றான் அவனும் நிதானமாக.

“இந்துஜா உனக்காகத் தான் காத்திட்டு இருக்கான்னு உனக்குத் தெரியும்?” இந்த பேச்சை அவர் எடுத்தே பல நாட்கள் ஆயிற்று. இன்று மீண்டும் எடுத்தது அவனுக்கு சலிப்பைத் தான் தந்தது.

“என் முடிவை பலமுறை சொல்லிட்டேன் பாட்டி…” என்றான் அழுத்தமாக.

தாராவிற்கு என்ன சோர்வோ தெரியவில்லை. மீண்டும் அவள் விழிகள் தாமாக சொருகிக் கொண்டது. அவளைக் கீழே போகச் சொல்லலாம் என்று அவளை நோக்கி திரும்பியவன், அவளின் மயங்கிய தோற்றத்தைக் கண்டு யோசனையானான்.

“எனக்கு புரியலை… இந்துஜா கலெக்டர். நல்ல பண்பான பொண்ணும் கூட… அவகிட்ட என்ன குறைன்னு இன்னொரு பொண்ணை பார்த்திருக்க நீ?” என்று சலிப்பாகக் கேட்டவர்,

பின் ஒரு பெருமூச்சுடன், “எனக்கும் வயசு காத்துட்டு இருக்கலை ஆதி. இப்ப என்னோட ஆசை உன் கல்யாணத்தை கண்ணார பார்த்துட்டா போதும். அது இந்துஜா கூட இருந்தாலும் சரி, இல்லை உனக்கு பிடிச்ச பொண்ணு கூட இருந்தாலும் சரி…” என்று சொல்ல,

“என்ன உளறிட்டு இருக்கீங்க பாட்டி?” என சீறினான் அவன். பிடித்த பெண்ணாம் பிடித்த பெண் என அவன் மனம் உறுமியது.

அவன் சீற்றத்தைக் கண்டு கொள்ளாமல், “ஆதி…” என்று அதட்டினார் அவர். “உன்கூட இருக்க பொண்ணு யாரு?” என்று கோபமாகக் கேட்க,

இவளை எப்படி பாட்டிக்குத் தெரியும் என்ற யோசனையோடே, அவன் அமைதி காக்க, “அந்த பொண்ணு யாருன்னு கேட்டேன்…” என்றார் மீண்டும் அழுத்தமாக. சத்யாவின் காதல் கதையை இழுக்காமல் எப்படி இவளை அறிமுகம் செய்வது என அவன் தடுமாறிய ஓரிரு நொடியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய ஆண்டாள்,

“இந்த போட்டோக்களை எனக்கு அனுப்பினவங்க வெளிய லீக் பண்ண எவ்வளவு நேரம் ஆகும் ஆதி? உனக்கு பொண்ணுங்க விஷயத்துல இருக்க நல்ல பேரு சரிஞ்சுடாதா? உன்னோட பேரில் கரும்புள்ளி விழறது நல்லாவா இருக்கும்?” என ஆண்டாள் கோபமாகக் கத்த,

என்ன போட்டோ? பாட்டி என்ன சொல்கிறார்? எனப் புரியாமல் குழம்பியவன், பிரதாபன் சொன்னது போலவே பெண்கள் விஷயத்தில் இருக்கும் நல்ல பேர் எனப் பாட்டி சொல்வதில் என்னவோ நெருடியது.

“நீங்க பேசறது எனக்கு ஒன்னுமே புரியலை பாட்டி?” என பதிலுக்கு ஆதியும் பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னான்.

“நான் உனக்கு அனுப்பி இருக்கிற போட்டோக்களை பார்த்துட்டு கூப்பிடு…” என அவரும் கோபமாகக் கத்திவிட்டு அழைப்பை துண்டித்திருக்க, அழைப்பைத் துண்டித்தவன், தனக்கு வந்த புகைப்படங்களைப் பார்த்து ரத்த அழுத்தம் தாறுமாறாக எகிற நின்றிருந்தான்.