பூஜிதா நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட ஆதிக்குள் பெரும் பிரளயம். பெற்றோரைக் கொலை செய்தது வீரராகவன் என்கிற அதிர்விலிருந்தே அவன் இன்னும் மீளவில்லை. இப்பொழுது இரு வீட்டுப் பிள்ளைகளை மாற்றி வைத்து தங்கள் குடும்பத்திற்கு பெரும் அநியாயம் இழைத்திருக்கும் விஷயத்தை எப்படி அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியும்?
‘அப்படியானால், பெற்றோரை இழந்த பிறகு சத்யா மட்டுமே உலகம், அவன் நலம் மட்டுமே பிரதானம் என இத்தனை ஆண்டுகளாகக் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்த எனக்கு அவன் உறவில்லையா? அவனிடம் இனி நான் உரிமை கொண்டாட முடியாதா?’ என்ற எண்ணம் எழும்போதே ஆதியின் நெஞ்சுக்குள் ஆயிரம் ஊசிகள் ஒரே சமயத்தில் துளைத்ததைப் போல வேதனையை உணர்ந்தான். அதன் வலி அவனது உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரிவர்த்தனை செய்யப்படுவதைப் போலத் தோன்ற வலி நிறைந்த முகத்துடன் விழிகளை அழுந்த மூடி சீட்டில் தலை சாய்த்துக் கொண்டான்.
இனி அவன் என்ன செய்வான்? சொந்த தம்பி யார் என்று தேடிப் போக வேண்டுமா என்ன? அது சத்யாவை ஒதுக்குவதற்கு அல்லவா சமனாகும்! அப்படி சத்யாவைத் தாண்டி நிஜம் என்றாலும் அவனால் இன்னொருவனைத் தம்பியாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன? அதற்கான மனதிடமும், தைரியமும் அவனுக்கு இருக்கிறதா?
இரு கைகளாலும் முகத்தை அழுத்தமாக மூடி தேய்த்து விட்டுக் கொண்டவனுக்கு எந்த சூழலிலும் சத்யாவை விட்டுக் கொடுக்க முடியாது என்பது மட்டும் ஆணித்தரமாகப் புரிந்தது.
அந்த இன்னொருவனை தேடிப் பயணிப்பது கூட தன் தம்பியின் மீது வைத்திருக்கும் பாசத்தை இழிவு படுத்துவது போலான செயல் என்று தான் ஆதி எண்ணினான். சத்யா மீது உயிராக இருக்கும் அவனுக்கு வேறு விதமாகத் தோன்றினால் தானே ஆச்சரியம்!
வெறும் அண்ணன் என்ற உறவு நிலையோடு மட்டும் வளர்ந்திருந்தாலே சத்யாவை விட்டுத் தந்திருப்பானா என்று தெரியவில்லை. இங்கு ஆதியோ அன்னையாக, தந்தையாக, வழிகாட்டியாக, ஆசானாக இருக்கையில் அவனுக்கு எப்படி ஒற்றை நொடியில் இளையவன் மீதிருக்கும் பற்று மாறி போகும்? இது ரத்த பந்தத்தையும் தாண்டிய பிணைப்பாயிற்றே!
உண்மையான தம்பி யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும், எந்த சூழலில் இருந்தாலும் ஏதோ ஓர் காரணத்திற்காக அவனுக்கு இது விதிக்கப்பட்டிருக்கிறது. அவன் வாழ்வை இத்தனை நாட்களில் இருந்தது போலவே இனியும் அவனே பார்த்துக் கொள்ளட்டும் என்ற முடிவை ஆதி எடுக்கும்போது அவனின் மனதிற்குள் என்னவோ அழுத்திப் பிசைந்தது.
அப்படி கடுமையான முடிவையும் அவ்வளவு இலகுவாக எடுத்து விட முடியவில்லை அவனால். என்றோ இழந்த பெற்றோரின் அருகாமையை அவனின் மனம் இந்த நொடி அதிகமாக தேடியது. அவர்கள் இருந்திருக்க இந்த தடுமாற்றம் குறைந்திருக்குமே என்று வெகுவாக கவலைப் பட்டான்.
ஆனாலும் வேறு வழியின்றி மனதை கல்லாக்கிக் கொண்டு தான் இந்த முடிவினை எடுத்தான். கண்முன்னே நடமாடும் அவன் கைச்சிறையில் பொத்தி பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட தம்பி அவனுக்கு அத்தனை முக்கியமாக இருந்தான்.
இப்படி ஒரு முடிவினை எடுப்பது தன்னுடன் பிறந்தவனுக்கு செய்யும் அநியாயம் என புரிந்தாலும், அவனை தேடிப் போக மனம் அலைபாய்ந்தாலும் சத்யாவைத் தாண்டிப் போகும் மனதிடமோ தைரியமோ ஏனோ அவனிடம் இல்லை.
குடும்பம் என்ற பிணைப்பின் முன்பு தான் இப்படியொரு கோழையாய் மாறி நிற்போம் என்று ஆதி ஒருநாளும் எண்ணியிருந்திருக்க மாட்டான்.
இப்பொழுது இந்த நொடி அவன் சிந்தையில் இருப்பதெல்லாம் சத்யாவை எப்படி காப்பாற்றுவது? பெற்றோரைப் பறிகொடுத்தது போல தம்பியையும் பறிகொடுத்து விடக்கூடாதே என்னும் பதற்றம் தான் அதிகமாக இருந்தது.
ஆதி பூஜிதா சொன்ன இடத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்க, பாதி வழியில் இருக்கும்போதே விவேக்கை தொடர்ந்து கொண்டிருந்த ஆட்கள் அழைத்தார்கள்.
ஒரு குறிப்பிட்ட சாலையில் நிற்பதாகவும் விவேக் சென்றிருந்த வண்டியைச் சிறு தடங்களால் தவற விட்டுவிட்டோம் என்றும் சொல்ல, ஆதியின் நெஞ்சம் பயத்திலும் பதற்றத்திலும் பன்மடங்கு வேகமாகத் துடித்தது.
“என்ன சொல்லறீங்க? மிஸ் பண்ணிட்டேன்னு எக்ஸ்கியூஸ் கேட்கறீங்க?” என ஆத்திரமாகத் தொடங்கிய ஆதி, என்ன நினைத்தானோ இழுத்துப் பிடித்த பொறுமையுடன், “விவேக் நம்பரை வெச்சு சீக்கிரமா ட்ரேஸ் செஞ்சுட்டு சொல்லுங்க” என்றான் உறுமலாக.
இப்பொழுது இன்னும் தடுமாற்றம்! விவேக் மட்டும் தனியாகப் போயிருக்கிறான். அவன் மட்டும் போய் சத்யாவைக் காப்பாற்றி விட முடியுமா என்று நெஞ்சம் பதறியது.
சத்யாவின் உயிருக்கு ஆபத்து என்கிற சூழலில் ஆதியால் எதையும் யோசிக்க முடியவில்லை. தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கி, இப்பொழுதும் இப்படியொரு கொடூரமான நிலையில் நிறுத்தி வைத்திருந்த வீரராகவன் மீது அத்தனை ஆத்திரமாக வந்தது.
என்ன நினைத்தானோ உடனேயே ரஞ்சித்துக்கு அழைத்து விட்டான். “என்ன செய்வியோ எத்தனை பேரை வேலைக்கு எடுத்துப்பியோ எனக்கு தெரியாது, இனி அந்த வீரராகவன் உயிரோட இருக்கக்கூடாது” என கர்ஜனையாகச் சொல்ல, ரஞ்சித்திற்கு ஆதியின் இந்த குரலும் பரிமாணமும் முற்றிலும் புதிது.
அவனுடைய பேக்கிரவுண்ட் வேலைகளைப் பார்ப்பது ரஞ்சித் தான் என்றாலும், அத்தனை பணபலம் இருந்தும், பதவி பலம் இருந்த போதும் கொலை செய்யும் அளவுக்கு இதுநாள் வரையிலும் ஆதி ஒரு முறையும் போனதில்லை. அதுவும் வீரராகவன் இவர்களது குடும்ப நண்பராயிற்றே தம்பியின் காதல் விவகாரத்திற்காகக் கொலை செய்யுமளவு போக மாட்டாரே என்கிற யோசனை இருந்தாலும், “வேலையை முடிச்சிட்டு கூப்பிடறேன் சார்” என வேகமாகப் பதிலளித்திருந்தான்.
பூஜிதாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் கொலை, தவறான வேலைகள் என அனாயாசயமாக செய்துவரும் செல்வாக்கு மிகுந்த தந்தையை சட்டத்தின் உதவியின் மூலம் தண்டிக்க முடியாது என்று புரிந்திருந்தவளும் ஆதியின் செய்கையை ஆட்சேபித்து ஒரு வார்த்தை மறுப்பு சொல்லவில்லை. அந்தளவிற்கு ஒரே நாளில் அத்தனை வெறுப்புகளைப் பெற்ற மகளிடமே சம்பாதித்து வைத்திருந்தார் அந்த மனிதர்.
பூஜிதா சொன்ன இடம் வரையிலும் பயணம் செய்தாலும் அங்கே சத்யாவை எப்படி கண்டுபிடிப்பது, அவனைத் தேடிப் பயணப்பட்டிருந்த விவேக்கை வேறு தவற விட்டுவிட்டார்கள் என்கிற யோசனையோடு ஆதி செய்வதறியாது இருந்த நேரம் தான், அவனது கைப்பேசிக்கு விவேக் அனுப்பி வைத்த லொகேஷன் வந்து சேர்ந்தது.
உடனேயே விவேக்கிற்கு அழைத்து, நாங்கள் வரும்வரை உள்ளே போகாதே என எச்சரிக்க நினைத்தான். ஆனால், விவேக் தகவல் அனுப்பிய கையோடு ஆபத்தைக் கண்டு அச்சப்படாமல் தன் வேலையில் இறங்கியிருந்ததால் இவனது அழைப்பை ஏற்கவில்லை. சைலென்ட்டில் மாற்றப்பட்டிருந்த அவனது கைப்பேசி அவனுக்கு ஆதியின் அழைப்பை உணர்த்த முடியாமல் தோற்றுப் போனது.
‘போனை ஏன்டா எடுக்க மாட்டேங்கற…’ என்று போனை வெறித்துப் பார்த்தவனுக்கு மனதில் ஏன் பாரமென்றே புரியவில்லை. சத்யாவிற்கு எதுவும் ஆகக்கூடாது என்று இருக்கும் துடிப்புக்கு இணையாக விவேக்கிற்கு ஒன்றும் ஆகக்கூடாது என்றும் மனம் துடித்தது. இதற்குக் காரணம் புரியாவிட்டாலும் அவனால் அவனது துடிப்பை தவிப்பை உணர முடிந்தது.
இதற்குக் காரணம் ரத்த பந்தம் என்று புரியும் நேரம் எப்படி உணர்வான்? என்ன முடிவெடுப்பான்?
விவேக் அனுப்பிய இருப்பிடத்தை அவனைத் தொடர்ந்து சென்றவர்களுக்கு அனுப்பி வைத்தவன், அனுப்பிய வேகத்தில் அழைத்து, “விவேக் தனியா போயிருக்கான். சத்யா, விவேக் ரெண்டு பேருக்கும் ஒன்னும் ஆகக்கூடாது. சீக்கிரம் அங்கே போங்க. நாங்க வந்திட்டே இருக்கோம்” என்று பரபரப்புடன் கட்டளையிட்டவனுக்கு இப்பொழுது இருவரை நினைத்தும் கவலை தொற்றிக் கொண்டது.
பூஜிதாவோடு அவ்விடம் செல்வது எந்தளவிற்குப் பாதுகாப்பானது என்ற அச்சம் எழுந்தாலும், இப்பொழுது அவளைப் பத்திரப் படுத்துவதற்கெல்லாம் நேரம் இல்லை என்பதால் அவ்விடத்திற்கு விரைந்து பயணம் செய்யச் சொன்னான்.
என்ன வேகமாகச் சென்ற போதிலும் அவ்விடம் சேர்வதற்கு இருபது நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. அந்த நேரத்திற்குள் விவேக் சத்யாவைக் காப்பாற்ற எடுத்த முயற்சியில் பலமான கத்தி குத்துடன் ரத்த வெள்ளத்தில் சரிந்திருந்தான்.
ஆதி உள்ளே நுழைந்தபோது பார்த்த காட்சி இதுதான்! பதறித் துடித்துப் போனான். “விவேக்…” என்று அவ்விடமே அதிரும்படி கத்திக்கொண்டு ஓடிச் சென்றவனுக்கு அவனது குருதியைக் காண காண நெஞ்சம் இரண்டாகப் பிளந்தது போல வேதனை! ஐயோ ஐயோ என மனம் அலறி துடிக்கச் சூழ இருந்தோர் யாருமே அவன் கண்களுக்குத் தெரியவில்லை.