தென்னரசு நெஞ்சை நிமிர்த்து கொண்டு வந்தவனைப் பார்வையால் அடக்கினான். ஆதியின் கண்ணசைவின்றி அங்கே சிறு துரும்பையும் அசைக்க விட மாட்டான் அவன்.
தயக்கத்துடன், ஆதியிடம் “நீங்க இன்னும் வீட்டுக்குள்ள கூட போகலை போல சார்…” என்றான் தென்னரசு புரியாமல்.
தலையை மட்டும் அசைத்தவன், “நம்ம ஆளுங்களை வெச்சு வீட்டை தரோவா செக் பண்ண சொல்லு…” என்று சொன்னதும்,
ஆட்களை உடனே அழைத்து அந்த வேலையைச் சொல்லி உள்ளே அனுப்பினான்.
வீட்டிற்குள் யாரும் ஆள் இறங்கியிருப்பார்கள் என்று தென்னரசுக்கு தோன்றவில்லை. அந்தளவிற்கு யாருக்கும் தைரியம் இல்லை என்று அவனுக்குத் தெரியும். இருந்தும் ஆதி சொன்னால் காரணம் இருக்கும் என்று புரிந்தவன், உடனடியாக எந்த கேள்வியும் கேட்காமல் அதைச் செயல் படுத்தினான்.
தள்ளி நின்றிருந்த இன்ஸ்பெக்டர் விவேக்கிற்கோ ஒரு மாதிரி படபடப்பாக இருந்தது. பிரதாபன் சொன்ன வேலையை முடிக்கவிட்டால், அவன் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவான். அவன் சொன்ன வேலையைச் செய்தால், இங்கு ஆதீஸ்வரன் ஒரு வழி பண்ணி விடுவான்.
முன்னேயும் போக முடியாமல், பின்வாங்கவும் முடியாமல் செய்வதறியாது நின்றிருந்தவனுக்கு உள்ளுக்குள் ஒரு நடுக்கம் இருந்து கொண்டே இருந்தது.
“சார் நீங்க ஒரு பெரிய இன்ஸ்பெக்டர்…” அவனுக்கு நினைவு படுத்தினான் ஏட்டு ராஜன்.
பல்லைக் கடித்து அவனை முறைத்த விவேக், ‘வாயில நல்லா வந்துட போகுது…’ என்று வாயை அசைத்துச் சொல்ல, ஏட்டு திருட்டு முழி முழித்து விட்டு அமைதியாகிப் போனான்.
அதற்குள் அங்கு அடித்துப் பிடித்து வந்து சேர்ந்திருந்த சத்யேந்திரன் வெளியே நின்றிருந்த காவலாளிகளையும் வாசல் அருகேயே நின்றிருந்த ஆதி மற்றும் தென்னரசுவையும் பார்த்து எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான்.
தான் அத்தனை சொல்லியும் இங்குத் தன்னை தேடி வந்திருந்த இளையவனைக் கண்ணில் அனல் தெறிக்கப் பார்த்து நின்றான் ஆதி.
அண்ணனின் கோபத்தைக் கவனிக்கும் நிலையில் எங்கு அவன் இருந்தான்?
“அண்ணா… என்ன நடக்குது இங்கே?” ஒன்றும் புரியாமல் வேகமாக அண்ணனின் அருகில் வந்து சுற்றிலும் பார்வையை சுழல விட்டவாறு பதற்றத்துடன் கேட்டான்.
சத்யாவின் பார்வையில் உள்ளே ஆட்கள் வீட்டை தேடி அலசுவதும் தென்பட, “அச்சோ… அண்ணா இவனுங்க இங்கே என்ன பண்ணறானுங்க?” என்று பதற்றத்தோடு உள்ளே ஓடினான்.
தன் சினத்தைக் கவனிக்காது, சம்பந்தம் இல்லாமல் பதறும் தம்பியின் செய்கையில் சந்தேகம் கொண்டவனாக, அவன் பின்னேயே இவனும் வீட்டிற்குள் சென்றான்.
“அரசு அண்ணா… எதுக்கு இப்ப நம்ம வீட்டை குடைஞ்சிட்டு இருக்கானுங்க… வெளிய எதுக்கு போலீஸ்…” அண்ணன் பதில் சொல்லாததால் தென்னரசுவிடம் கேட்டு நின்றான் சத்யா.
அவன் பதற்றத்தைப் பார்த்தவாறே, “சத்யா…” என்று அழுத்தமாகக் குரல் கொடுத்தான் ஆதி.
அண்ணனின் புறம் திரும்பியவனுக்குக் கால்கள் நடுக்கம் கண்டது. அவன் பார்வையில் எழுந்த பயத்தை தனக்குள்ளேயே விழுங்கிக் கொண்டே, “அண்ணா… சாரி…” என்றான் தவிப்பாக. அவன் பார்வை மாடியைத் தழுவி மீண்டும் அண்ணனிடம் வந்து நின்றது.
ஆதி தென்னரசுவை திரும்பி அழுத்தமாகப் பார்க்க, அதன் அர்த்தம் புரிந்து கொண்டவன், மற்ற ஆட்களை அழைத்துக் கொண்டு வாசலுக்குச் சென்று நின்றான்.
அனைவரும் விலகியதும், ஓடி வந்து அண்ணனின் கையை பற்றிக்கொண்டு, “சாரிண்ணா உங்களை கேட்காம, பெரிய வேலை ஒன்னு பண்ணி வெச்சுட்டேன். உங்ககிட்ட சொல்லணும்ன்னு தான் நினைச்சேன்…” என பயத்தில் பதறியபடி சொல்ல,
“ஆனா, சொல்லலை ரைட்…” என்றான் ஆதி அழுத்தமாக.
“ஐயோ… அண்ணா… அபப்டியில்லை… அது ரொம்ப சாரி…” என்ன பேச எனத் தெரியாமல் பயத்தில் உளறினான்.
“ஏற்கனவே ரொம்ப கோபத்துல இருக்கேன் என்னன்னு நேரத்தை இழுக்காம இப்ப சொல்ல முடியுமா முடியாதா?” அதட்டலாக ஆதி கேட்க,
“அண்ணா… தாரான்னு ஒரு பொண்ணு…” என மேற்கொண்டு சொல்லும் தெம்பு இல்லாமல் எச்சில் கூட்டி விழுங்கியவன், அண்ணனின் முறைப்பில், வேகமாக, “ஏதோ பிரச்சினைன்னு ஹெல்ப் கேட்டா அண்ணா… கொஞ்ச நாள் யாருக்கும் தெரியாம தங்க சேப்பான இடம் கேட்டா… அதுதான்…” என்றவனின் பார்வை மீண்டும் மாடியைத் தொட்டு மீண்டது.
ஆதிக்கு எதுவோ புரிவது போல இருந்தது. எதுவும் பேசாமல் முழுதாக சொல்லி முடி என்பது போலத் தம்பியை அழுத்தமாகப் பார்த்து நின்றான். “ரொம்ப சாரிண்ணா… நீங்க ஊருல இல்லைன்னு… இங்கே யாருக்கும் தெரியாம அவளைக் கொண்டு வந்து தங்க வெச்சுட்டு போனேன். இன்னைக்கு அவளை இங்கிருந்து கிளப்பறது தான் பிளான் ண்ணா… அதுக்குள்ள நீங்க வருவீங்கன்னு தெரியலை…” என அச்சத்துடன் சொல்லி முடிக்க,
“முட்டாள்…” என சீறியிருந்தான் ஆதி.
கண்கள் சிவக்க, முகம் இறுக அவன் நின்றிருந்த தோற்றமே உள்ளுக்குள் கிலியைக் கிளப்ப, மிரண்டு விழித்தபடி கை, கால்கள் நடுங்க செய்வதறியாது நின்றிருந்தான் சத்யேந்திரன்.
பிரதாபன் சொன்ன சொற்கள் ஆதியின் செவிக்குள் மீண்டும் ரீங்காரமிட்டது.
ஆக, சத்யா செய்த வேலை எப்படியோ அவனுக்குத் தெரிந்திருக்கிறது. அவன் இதை வைத்து எதையோ நடத்தத் திட்டம் போட்டிருக்கிறான்.
தம்பியின் மீது எழுந்த கோபத்தைப் பல்லைக் கடித்து அடக்கியவன், “அந்த பொண்ணு எங்கே?” என்றான் வார்த்தைகளில் அழுத்தத்தைக் கூட்டி.
“உங்களோட ரூமுக்கு தான் வேலையாட்கள் போக மாட்டாங்கன்னு தெரிஞ்சு…” என்று அவன் திணற,
புரிந்து கொண்டவன், “உன்னை…” என்று பல்லைக் கடித்தபடி வேகமாக ஓரெட்டு முன்னே வைக்க, பயத்தில் நடுங்கிப் போய் சத்யா நின்றிருந்தான். ஆதி தங்களைச் சுற்றி நின்றிருந்த ஆட்கள் பார்வையில் பட்டதால் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். இல்லாவிட்டால் நிச்சயம் அடித்திருப்பான்.
“சாரி ண்ணா… அந்த பொண்ணை பார்க்கப் பாவமா இருந்துச்சு…”
“மண்ணாங்கட்டி…” என்று சீறினான் ஆதி.
“என்கிட்ட ஒரு வார்த்தை கேட்காம… இந்த வீட்டுக்குள்ள… அதுவும் என் ரூமுக்குள்ள… இப்ப வெளிய நிக்கிற போலீஸ் சர்ச் பண்ணுவானுங்க அவனுங்களுக்கு என்ன பதில் சொல்லறது? யாருக்கும் தெரியாம கூப்பிட்டு வந்து விட்டேன்னு நீ சொல்லற, ஆனா ஒருத்தன் போன் பண்ணி, இதுவரைக்கும் பொண்ணுங்க விஷயத்துல சொக்கத்தங்கம்ன்னு பேரு எடுத்து இருக்கீங்க. இப்படி ஒரு அரசியல்வாதியை பார்க்கறதே கஷ்டம் தெரியுமான்னு நக்கலா சொல்லறான். அப்படின்னா என்ன அர்த்தம்ன்னு தெரியுமா?” என்று அடிக்குரலில் சீறினான்.
“அண்ணா…” என்றான் தவிப்பாக. அச்சத்தில் நா உலர்ந்து போனது அவனுக்கு. என்ன செய்ய என்று சுத்தமாக புரியவில்லை. செய்துவிட்ட தப்பு இப்பொழுது பூதாகரமாகத் தெரிந்தது.
“வெயிட்… அந்த பொண்ணுக்கு ஏன் இவ்வளவு பெரிய ஹெல்ப். அவ உன்னோட லவ்வரா?” என்று விசாரித்தான்.
கெட்டதிலும் ஒரு நல்லதாக அறைக்குள் செல்லும் முன்பே பிரதாபன் அழைத்திருந்தான்.
ஆக, இன்னும் அறைக்கு அவன் போகவே இல்லை. அவன் அறையில் பெண் இருந்தாலும், இத்தனை நாட்கள் வெளியூரில் இருந்தவன் என்பதால், அது அவனின் நடத்தையை துளியும் பாதிக்காது. கொஞ்சம் சமாளிக்க காரணம் கிடைக்கும்.
இருந்தாலும் இந்த விஷயத்தை வெளியே கசிய வைக்க, பிரதாபன் கண்டிப்பாக முயற்சி செய்வான். அப்பொழுது சரியான விதத்தில் தீர்த்து வைக்க ஒரு காரணம் வேண்டுமே அதைத் தான் இப்பொழுது யோசித்துக் கொண்டிருந்தான். அதற்காகத் தான் சத்யாவிடம் இந்த கேள்வி.
சத்யா பதறி விட்டான். “ஐயோ… அண்ணா அப்படியெல்லாம் எதுவும் இல்லை…” என வேகமாகச் சொல்ல,
ஆதி முறைத்த முறைப்பில், “நான் கனிகான்னு ஒரு பொண்ணை ஏற்கனவே காதலிக்கிறேன். தாரா கனிகாவோட சீனியர்…” என அவசரமாகச் சொன்னான். எங்கே அண்ணன் தாராவை தன் தலையில் கட்டி, தன் காதலுக்குச் சமாதி கட்டி விடுவாரோ என்ற அச்சம் அவனுக்கு!
“என்னது காதலா? அப்ப பூஜிதாவுக்கு என்ன பதில் சொல்ல போற? சரி அந்த பிரச்சினைக்கு அப்பறம் வரேன்… இப்ப இந்த பொண்ணை என்ன செய்யறது?” என குரலை அடக்கி சீறினான்.
ஐயோ அதற்குள் இப்படி நாமாகவே மாட்டிக் கொண்டோமே என் உள்ளுக்குள் உதற, “அண்ணா… தெரியாம இப்படி நடந்துடுச்சு…” என்றான் தாரா விஷயத்திற்காக.
“வாயில நல்லா வந்துட போகுது. எவ்வளவு சிக்கலை இழுத்து விட்டிருக்க நீ… எப்படி அந்த பொண்ணை கூட்டிட்டு வந்தியோ… அப்படியே இப்ப கூட்டிட்டு கிளம்பற… நான் போலீஸை ஏதாவது சொல்லி அனுப்பப் பார்க்கிறேன்” என அதட்டினான்.
“ஐயோ அண்ணா… காரை போர்ட்டிகோல நிறுத்தி, கரெண்ட் கட் பண்ணி, இன்வெர்டர் ஆப் பண்ணி, சிசிடிவியை ஆப் பண்ணி, நைட் யாரும் இல்லாத நேரத்துல தானே இதை செய்ய முடியும்” தாராவை உள்ளே கொண்டு வர செய்த முயற்சியை விளக்க, இவன் தந்த சோதனையில் நெற்றியைத் தேய்த்துக் கொண்டான் ஆதி.
இரவு வரை சமாளிக்க வேண்டும். என்ன செய்ய என்று ஒன்றும் புரியவில்லை. பிரதாபன் வேறு கண்கொத்தி பாம்பாகப் பார்த்திருப்பான். என்ன செய்ய என்ன செய்ய என்று யோசித்த ஆதிக்கு ஒரு யோசனை பளீரிட்டது.
பிரதாபன் தன்னை பெண் விஷயத்தில் மாட்டி விடப் பார்க்கிறான் என்று எண்ணியிருந்த ஆதிக்கு அவன் திட்டம் பெரியது என்று அப்பொழுது புரியவில்லை.
கீழே இத்தனை களேபரம் தன்னை கொண்டு நடக்க, இதை எதையும் அறியாதவள் போல, இழுத்துப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தாள் தாரா என்கிற தாரகேஸ்வரி.