காதல் வானவில் 34

அந்த நீளவரவேற்பறையில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு நிசப்தமாக இருந்தது.தன் தலையை தாங்கியபடி அமர்ந்திருந்தவனின் முகம் சாந்தமாக இருந்தாலும் மனதிற்குள் புயல் சுழன்றடித்துக் கொண்டிருந்தது கொண்டிருந்தது.ஒரு கரையில் அன்னையும்,மறுகரையில் தன் உயிரானவளயும் நிறுத்தியிருக்க,மனது இரண்டு பேரும் ஒன்று சேர்ந்துவிடமாட்டார்களா என்றுதான் ஏங்கி தவித்துக் கொண்டிருந்தது.அதிலும் இன்று யாருமற்றவள் போல் அவள் சென்ற காட்சி கண்களின் முன்னே வந்து வந்து செல்ல கண்கள் கலங்கி உதடு துடித்தது.

தங்களின் அறையில் இருந்து ஆனந்தன் மகனை கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.எந்த விடயத்திலும் எளிதில் கலங்காதவன் இன்று கலங்கி தவிக்கும் தோற்றம் காண சகியாமல் அறைக்குள் நுழைந்தவர் கட்டிலின் ஒரு ஓரத்தில் போய் அமைதியாக அமர்ந்து கொண்டார்.நீலவேணி கணவனை பார்த்துக் கொண்டு தான் இருந்தார் மகனை காண சென்றவர் கசங்கிய முகத்துடன் வந்தமர்ந்ததை வைத்தே வெளியில் அமர்ந்திருக்கும் மகனின் முகம் இதைவிட கசங்கி இருக்கும் என்று ஊகித்தவருக்கு மனதில் மேலும் பாரமேறிய உணர்வு.

தனது மடியில் சிறு குழந்தை போல அழுது கொண்டிருக்கும் தோழியைக் கண்ட கீர்த்திக்கு பேச்சே எழவில்லை.அழுது கொண்டே விஜயின் வீட்டில் என்ன நடந்தது என்று கூறியிருந்தாள் மிருணாளினி.அதைக் கேட்டவளுக்கு தான் மனது தாளவேயில்லை.மெல்ல அவளின் முதுகை தடவியவளுக்கு கண்முன்னே சற்று முன் மலர்ந்து சிரித்த விஜயும் அவனைக் கண்டு நாணத்துடன் சிரித்த மிருணாளினியின் முகமே மனதில் தெரிய தன் கண்களில் வழியும் விழி நீரை துடைத்தாள்.எதிரில் அமர்ந்து இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த சிதம்பரத்திடம் கண்ணை காட்டியவள் எழுந்து சமையலறை சென்று ஒரு டம்பளரில் பால் எடுத்து வந்து அவள் மறுக்க மறுக்க புகட்டிவிட்டே எழுந்தாள்.

பாலை குடித்து சிறிது நேரம் வரை அழுது கொண்டிருந்த மிருணாளினி மெல்ல உறக்கத்திற்கு சென்றாள்.அவள் நன்கு உறங்கியவுடன் சிதம்பரத்திடம்,

“ப்பா கொஞ்சம் பார்த்துக்குங்க….”என்று கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டாள். தன்னை நிலை படுத்திக் கொண்டு நேராக விஜயின் வீட்டிற்குள் நுழைந்தவள்,

“வேணிமா…..வேணிமா…..”என்று சத்தம் போட வரவேற்பறையில் அமர்ந்திருந்த விஜய் வேகாமாக எழுந்து,

“ஏய் கீதூ…..என்ன ஆச்சு…ஏன் இப்படி கத்துற….மிருணா எங்க….”என்று உடல் நடங்கியபடி கேட்க,அவனின் நிலை கண்டு கண்களில் நீர் நிறைந்தது.விபத்தாகி மருத்துவமனையில் இருந்த போது கூட இவ்வளவு தளரவில்லை அவ்வளவு தளர்ந்து போய் இருந்தான் விஜய்.அவனது கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துவிட்டவள்,

“தூங்குறா….”என்று கூறியவிட்டு மீண்டும் அந்த அறையை அலச அவள் எதிர்பார்த்த நபர் நிற்க,அவரிடம் வேகமாக வந்தவள்,

“ஏன் வேணிமா ஏன் என் மிருணா வேணாம்னு சொன்னீங்க….”என்று குற்றம்சாட்டுவது போல் கேட்க,வேணி பதில் சொல்லமுடியாமல் தவித்தார்.அவரது கண்கள் எதிரில் நின்றிருந்த மகனின் மேலே நிலைத்திருந்தது.தளரந்து போய் நின்றிருந்தான் முகத்தில் அத்தனை வெறுமை அப்பிக்கிடந்தது.அவர் தன் கேள்விக்கு பதில் கூறாமல் இருக்க அவரின் முகத்தை தன் புறமாக திருப்பியவள்,

“என்னை பாருங்க வேணிமா….என்கிட்ட பதில் சொல்லுங்க….”என்று கேட்க,என்ன பதில் கூறுவார் காலையில் இருந்த மனது இப்போது இல்லையே ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்று யோசனையிலேயே அவர் உழன்று கொண்டிருக்க இப்போது கீர்த்தி கேட்கும் கேள்வி அவரை மேலும் நிலைகுலைய வைத்தது.

“அவளுக்கு யாரும் இல்லைனு சொன்னீங்கலாம்….அப்ப நான் யாராம்….நான் இருக்கேன் அவளுக்கு….எப்படி நீங்க அவளுக்கு யாரும் இல்லைனு சொல்லாம்….”என்று கோபமாகவே கேட்டாள்.அவளுக்கு அவ்வளவு கோபம் மிருணாவை அவளின் பெற்றவர்களை வைத்து எடை போடுவது பிடிக்கவில்லை.என் மிருணாவும் அவர்களும் ஒன்றா என்று நினைத்தவளுக்கு மனது ஆறவேயில்லை.

“சொல்லுங்க வேணிமா…..ஏன் அமைதியா இருக்கீங்க….”என்று வேணியின் தோள்களை உலுக்க,

“கீதூமா….கொஞ்சம் பொறுமையா இருடா…..நீயும் அவசரபடாத….”என்று ஆனந்தன் அமைதியாக கூற,அவரை நிமிர்ந்து பார்த்தார் வேணி,அவருக்கு ஆனந்தனின் அமைதி கூட ஏதோ மனதை பிசைய தான் செய்தது.

“எப்படி ப்பா….எப்படி என்னால அமைதியா பேச முடியும் அவன பார்தீங்கலா…எப்படி இருக்கான்னு…..ஆஸ்பிட்டல்ல கூட இப்படி தளர்ந்தோ,உடைஞ்சு போயோ உட்கார்கல அவன் இப்ப…”என்று திரும்பி தன் தோழனை பார்த்தவளுக்கு மனதில் அவ்வளவு வலி,

“என்னால முடியலப்பா….இவன் இங்க இப்படினா….அங்க அவ….”என்று தோழியை நினைக்கவே முடியவில்லை.அவளின் தோள்களை அழுந்த பிடித்து அவளை தேற்றியவர்,

“கீதூ….கொஞ்சம் பொறு….”என்றுவிட்டு அவளுக்கு தண்ணீர் பருக கொடுத்தார்.அவளும் மறுக்காமல் வாங்கி குடித்தாள்.சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது.யார் முதலில் பேச்சை தொடங்குவது என்னபது போல் அமர்ந்திருக்க,கீர்த்தியின் கண்கள் விஜயை தேடியது அதை உணர்ந்த ஆனந்தன்,

“அவன் அப்பவே போயிட்டான்….மிருணாவை பார்க்க….”என்று கூற கீர்த்தனாவின் முகத்தில் மிதமான புன்னகை.இப்போது சற்று தெளிந்திருந்தாள்.

“சொல்லுங்க வேணிமா….ஏன் அப்படி சொன்னீங்க….”என்று கீர்த்தி மீண்டும் ஆரம்பிக்க,எதிர்பக்கம் அமைதி மட்டும் பதிலாக வர அவள் நிமிர்ந்து ஆனந்தனை நோக்கினாள்.அவரோ கண்களை மூடிதிறந்தவர் மெல்ல வேணியின் அருகில் சென்று அவரின் தோள்களை தொட அதற்காகவே காத்திருந்தது போல் வேணி உடைந்து அழுதுவிட்டார்.இப்போது கீர்த்திக்கு குற்றவுணர்வாகி போனது தான் அவசரபட்டுவிட்டோமோ என்று அவள் தவிப்புடன்,

“வேணிமா….வேணிமா அழாதீங்க….ப்ளீஸ்….அப்புறம் நானும் அழுவேன்…..”என்று கண்கள் கலங்க கூறினாள்.அவளின் தலையை ஆதரவாக தடவினார் ஆனந்தன்.சற்று நேரம் மனைவியை அழவிட்டார்,பின் வேணியே தெளிந்து,

“நான் இப்ப என்ன செய்யட்டும்….”என்று கேட்க,ஆனந்தனுக்கு நன்கு புரிந்தது அவர் இன்னும் முழுதாக இதில் சம்மதிக்கவில்லை என்று அதனால்,

“வேணிமா நீ இதை பத்தி யோசிக்கிறத விடு….உனக்கு இந்த விஷயத்தில விருப்பம் இல்லைனா விடு…நாங்க வற்புறுத்தமாட்டோம்….”என்று கூற அவரை புரியாத பார்வை பார்த்த வேணி,

“என்ன சொல்லுரீங்க…..ஆனா விஜய்….அவனுக்கு…..அவனோட விருப்பம்…..”என்று சந்தேகமாக கேட்க,இப்போது நீண்ட மூச்சொன்றை இழுத்துவிட்டவர் மேலும் தொடர்ந்தார்,

“இங்க பாரு வேணிமா….உனக்கு பிடிச்ச மாதிரி தான் பொண்ணு வேணும்னா நாம அவன் விருப்பத்தை கேட்கவே கூடாது….இல்லை அவனுக்கு விருப்பபடி நாம விட்டுகொடுக்கனும்….ஆனா வேணிமா திருமணம் அப்படிங்கிறது இருமணங்களின் இணைவு தான் இதை நான் உனக்கு சொல்லி தெரியவேண்டியது இல்லை….நீ தான் யோசிக்கனும்….”என்று கூறிவிட்டு அவர் கீர்த்திக்கு கண்காட்டி விட்டு சென்றுவிட்டார்.கீர்த்தியை வெளியில் அழைத்தவர்,

“கீதூமா….விடு அவளே யோசிக்கட்டும்….அப்ப தான் அவளே புரிச்சுப்பா….”என்று கூறினார்.கீர்த்திக்கும் அவர் கூறுவது தான் சரியெனபட அவளும் அமைதியாக சென்றாள்.

இங்கு கீர்த்தியின் வீட்டிற்கு வேகமாக வந்த விஜய் பார்த்தது வரவேற்பறை சோபாவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மிருணாளினியை தான்.வேகமாக அவளை நெருங்கியவன் அவளின் முகத்தில் படர்ந்திருந்த கூந்தலை ஒதுக்கிவிட அழுதழுது முகம் வீங்கி உறங்கியிருந்தாள் மிருணாளினி.மெல்ல அவளின் கன்னங்களை வருடிவிட்டவன் நீண்ட மூச்சை வெளிவிட்டு அவளை தன் இருகரங்களிலும் ஏந்தி கீர்த்தியின் அறையில் படுக்க வைத்தான்.முன்உச்சியில் அழுந்த முத்தமிட்டவன்,

“அவ்வளவு சீக்கரமா உன்னை விடுறதா இல்லை…..எனக்கும்,நம்ம காதலுக்கும் நீ செஞ்ச வேலைக்கு பரிசு தரவேண்டாம்…..உனக்கு இருக்குடீ….”என்று பற்கள் கடித்து கூறிவிட்டு வேகமாக அறையில் இருந்து வெளியில் சென்றுவிட்டான்.அவ்வளவு கடுமை அவனது முகத்தில்.

கீர்த்தியின் வீட்டில் இருந்து வெளிவரும் நேரம் கீர்த்தனா வீட்டிற்குள் நுழைந்தாள்.

“என்னடா பார்த்தாச்சா….”என்று சிரித்துக் கொண்டு கேட்க,

“ம்ம்ம்…..தூக்கமாத்திரை கொடுத்தியா….”என்று கேட்க,கீர்த்தி ஆம் என்னும் விதமாக தலையாட்டிவிட்டு,

“ம்ம்….ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தா அதான்……”என்று கூற,

“ப்ச்….புரியுது….இது அவளே தேடிக்கிட்டது….”என்று இறுக்கமாக கூற,கீர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை அவள் விஜயை கூர்ந்து கவனித்துவிட்டு,

“டேய் நீயும் அவளை ரொம்ப நோகடிக்காத….அவ தாங்கமாட்டா….”என்று அவனின் குணமறிந்து கூற,

“நோகடிக்கிறேன்…..நான்….”என்றவன்,”போடி…..போ….உன் பெஸ்டியை கவனி…..”என்று பேசிக் கொண்டிருக்க வருண் வந்தான்.கீர்த்தி அவனை பார்க்க அவனோ நேராக விஜயிடம் வந்து அவன் காதில் ஏதோ கூற,

“சரி வெயிட் பண்ணு நானும் வரேன்….”என்று கூறிவிட்டு அவன் வீட்டிற்கு சென்றான்.

“டேய்….என்ன இரண்டு பேரும் ஏதோ ரகசியம் பேசுரீங்க சொல்லுங்க…..”என்று வருணிடம் கேட்க,

“அதுவா பட்டுகுட்டி…..”என்றுவிட்டு வெட்கம் வந்தது போல காலால் தரையில் கோலம் போட அவனை ஏதோ வேற்று கிரகவாசி போல பார்த்த கீர்த்தனா,

“ஓய்….இப்ப நீ என்ன பண்ணுற….”

“சீசீ….போடி….”என்று மேலும் வெட்க பட,அதை கண்டவள் கோபத்துடன் அவனின் புஜங்களில் தன் தளிர் கரங்களால் அடித்து,

“டேய்….நீ வெட்கம் எல்லாம் படாத….என்னால பார்க்க முடியலை…..”என்று அழுவது போல் கூற,

“ஹா…..ஹா….”என்று சிரித்து அவளின் இடை வளைத்து முன்உச்சியில் தன் அதரங்களை பதித்தவன்,

“நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் கீதூ….”என்று கூற அவனை விநோதமாக பாரக்க,

“உனக்கு இப்ப சொன்னா புரியாது…கொஞ்சம் பொறுமையா இரு….”என்று கூறவிட்டு நகரவும் விஜய் வீட்டில் இருந்து வெளியில் வரவும் சரியாக இருந்தது.களைத்து,தளர்ந்து போய் இருந்தவனின் முகத்தில் இப்போது சந்தோஷ கீற்று.அதுவே அவனை இன்னும் அழகாக காட்டியது. ஒருவேலை வேணிமா திருமணத்திற்கு சம்மதித்துவிட்டாரா என்று நினைத்தவள் வேமாக விஜயிடம் சென்று,

“டேய் விஜி….என்னடா வேணிமா ஓகே சொல்லிட்டாங்கலா….”என்று ஆர்வமாக கேட்க,இல்லை என்னும் விதமாக தலையாட்டுவிட்டு வருணுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி பறந்துவிட்டான்.

“இரண்டு கேடியும் ஏதோ பிளான் போடுது நினைக்கிறேன்….ஆனா என்னு தான் தெரியலை….”என்று கீர்த்தனா தனக்குள் கூறிவிட்டு சென்றாள்.

அழகிய மாலை வேலை கீர்த்தனாவின் மாடி தோட்டத்தில் அமர்ந்திருந்தாள் மிருணாளினி.காலையில் கொந்தளித்த மனது இப்போது அமைதியாக இருந்தது.மனதில் சில விடயங்கள் புலப்படாமலும் இருந்தது.

“ஏய் மிருணா நீ இங்க இருக்கீயா…..உன்னை எங்கெல்லாம் தேடுறது….இந்தா பிடி உங்க தாத்தா லைன்ல இருக்காங்க….”என்று தன் கைபேசியை தந்தால் கீர்த்தி,மிருணாவிற்கு தாத்தா என்றவுடன் மனதில் பரபரப்பு,அதே பரபரப்புடன் கைபேசியை வாங்கியவள்,

“நீங்க எதுக்கு கீதூ நம்பருக்கு கூப்பிட்டீங்க….உங்களுக்கு அவ நம்பர் எப்படி கிடைச்சது….”என்று வரிசையாக கேள்விகளை அடுக்கி கொண்டே போக,

“மிருணாமா….ஒண்ணுவொண்ணா கேளுடா….இப்படி மொத்தமா கேட்டா நான் எப்படி பதில் சொல்ல….”என்று விஸ்வநாதன் கூற,எதிர்பக்கம் மௌனம்,

“ம்ம்ம்….ஒண்ணும் ஓரேடியா பேச வேண்டியது இல்லைனா பேசுறதே இல்லை அப்படி தான….ம்ம்ம்…..உன்னை சொல்லி தப்பில்ல….நீ முதல்ல கேட்க கேள்விக்கு பதில் நான் உன் போனுக்கு தான் ரொம்ப நேரமா டிரை பண்ணேன் நீ எடுக்கல அதான் உன் பிரண்ட் நம்பருக்கு அழைச்சேன்….நீ எவ்வளவு தூரத்தில இருந்தாலும் என் பார்வை உன்மேல இருக்கும் மிருணாமா….இது தான் உன்னோட இரண்டாவது கேள்விக்கு பதில்….”என்று கூறி அவர் மேலும் பேசுமுன்,

“சாரி….நான்…என் போன் விஜய் வீட்ல இருக்கு இருங்க….நானே உங்களுக்கு கால் பண்ணுறேன்….”என்று அவசரமாக கூறிவிட்டு போனை கட் பண்ணிவிட்டாள்.அவளுக்கு இன்னும் பயம் இருந்தது அந்த ஹர்ஷாவின் மேல் எங்கே அவனால் மற்றவர்களுக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் மனதைவிட்டு நீங்கவில்லை.அதனாலே பேச்சை கத்தரித்தாள்.

பின் வேகமாக விஜயின் வீட்டு வாசல் வரை வந்தவளுக்கு இப்போது தயக்கம் வர என்ன செய்வது என்று யோசனையுடன் நின்றாள் பின் தன்னை திடபடுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.வீடு முழுவதையும் கண்களால் அலச சமையல் அறையில் சத்தம் கேட்டது மெல்ல நடந்து அங்கு சென்றாள்.வேணி தான் சமைத்து கொண்டிருந்தார்,

“ஆ….ஆன்டி….”என்று அழைக்க ஒருநிமிடம் திடுக்கிட்டு திரும்பிய வேணி வாயிலில் வாடிய கொடி போல நின்றவளைக் கண்டு சற்று திகைத்து தான் போனார்.அழகிய முகம் இன்று ஏதோ ஒளியிழந்ததை போல் இருந்தது.அவர் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கோ எப்படி கேட்பது என்ற தயக்கம் இருந்து மீண்டும் தாத்தா அழைத்துவிடுவாரே என்று நினைத்து,

“என்னோட போன் மேல இருக்கு நான் எடுத்துக்கலாமா….”என்று கேட்க,

“ம்ம்…போய் எடுத்துக்க…”என்று ஒற்றை வார்த்தையில் பதில் தந்தார்.வேகமாக மேலே ஏறியவளுக்கு அப்போது புத்தியில் உறைத்தது இந்த அறை விஜயுடையது என்று கதவு வரை சென்றவள் தயங்கி நின்றாள்.

“அவன் வீட்ல இல்லை….”என்று வேணி குரல் கொடுக்க திடுக்கிட்டு கீழே பார்க்க அங்கு வரவேற்பறையில் இருந்து இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.ஆசுவாசத்துடன் அறைக்குள் நுழைய அங்கு அந்த அறை எங்கும் விஜயின் வாசம் அடிப்பதை போல் உணர்ந்தாள்.கண்கள் தன்போல் கலங்கியது விஜய் என்று அவனின் பெயரை கூறி மூச்சை போல இழுத்து சுவாசித்துவிட்டாள்.அவ்வளவு நிம்மதி மனதில் பின் வேகமாக தனது மொபலை தேடி எடுத்தவள்.கீழே வருவதற்காக வர அப்போது கீழே வரவேற்பறையில் பேச்சு குரல் கேட்கவும் அப்படியே நின்றுவிட்டாள்.

வீட்டிற்கு வந்தவரை வரவேற்ற வேணிக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

“என்ன வேணி இப்படி ஷாக் அடிச்சமாதிரி நிக்குற….”என்று கேட்டார் மல்லிகா.

“ஆங்….இல்லை அப்படி எல்லாம் இல்லை மல்லி….”என்று வேணி கூறிக் கொண்டிருக்க,வீட்டில் சத்தம் கேட்கவும் தனது அறையில் இருந்து வெளி வந்தார் ஆனந்தன்.அவருக்கு மல்லிகாவை தெரியவில்லை அவர் யோசனையுடன் மனைவி முகம் பார்க்க,

“இது மல்லிகா…என் கூட வேலை பார்த்தவங்க….”என்று அறிமுகபடுத்தினார்.அவரும் வணக்கம் தெரிவித்தார்.வேணிக்கு மல்லி வந்ததன் அர்த்தம் புரிந்தது.ஆனால் அது ஆனந்தனுக்கு தெரியாதே அவரிடம் இதுவரை எதுவும் பேசவில்லை.பூர்ணிமா பற்றி பேசலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் தான் அனைத்தும் நிகழ்ந்தேறிவிட்டதே என்று மனதிற்குள் நினைத்தார்.

“இவளிடம் நான் பொறுமையாக இரு என்று தானே கூறினேன் அதற்குள் என்ன அவசரம்….”என்று மல்லிகா மேல் சற்று எரிச்சலும் வந்தது.மல்லிகாவை அனுப்பி வைத்ததே பூர்ணிமா தான் என்று வேணிக்கு தெரிய வாய்ப்பில்லை தான்.

பூர்ணிமா தான் மல்லிகாவை வற்புற்த்தி அனுப்பி வைத்திருந்தாள்.அவளுக்கு தனக்கும்,விஜய்க்கும் எவ்வளவு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் நடக்க வேண்டும் என்ற எண்ணம்.அதனாலே அவரை தன் ஜாதக்கத்தை நேரிலே சென்று கொடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தாள்.மல்லிகாவிற்கும் மகளின் விருப்பத்தில் தப்பாக எதுவும் தெரியவில்லை அவளைக்கு விஜயை பிடித்துவிட்டது போல என்று நினைத்து இதோ வந்துவிட்டார்.

சற்று நேரம் அமைதி அங்கு யார் முதலில் பேச்சை தொடர்வது என்று ஒருவர் முகத்தை ஒருவர் பாரத்துக் கொண்டிருந்தனர்.மல்லிகா தான் பேச்சை முதலில் ஆரம்பித்தார்.

“வேணி…நீ கேட்டது போல என் பொண்ணோட ஜாதகம்….எடுத்துட்டு வந்திருக்கேன்….”என்றவர் வேணியின் கையில் ஒரு நோட்டை கொடுக்க வேணியோ தயங்கினார்.கணவர் இதற்கு என்ன சொல்ல போகிறார் என்று ஒரு மனது நினைக்க,மற்றொரு மனது மிருணாளினியை நினைத்தும் அவருக்கு கவலையாக இருந்தது.இதை அவள் பார்த்தாள் என்றால் என்று நினைத்தவருக்கு அவளின் சோர்ந்த முகம் மனதில் வர தன் போல அவரது தலை விஜயின் அறையை நோக்கியது.அவர் எதிர்பார்த்தது போல அவள் அறை வாயிலில் தான் நின்றிருந்தாள்.

“வேணிமா….”என்ற ஆனந்தனின் குரலில் நிகழ்வுக்கு வந்தவர் கணவரை காண,

“அவங்க கிட்டேந்து ஜாதகத்தை வாங்கு…..”என்று கூற நடுங்கும் கைகளுடன் அதை வாங்கும் சமயம் வீட்டு வாசலில் நிழலாடியது.நிமிர்ந்து பார்க்க இவர்களை கூர்ந்து பார்த்தபடி வந்து கொண்டிருந்தான் விஜய்.வேணிக்கு மூச்சே நின்றது போன்றதொரு உணர்வு.