அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்தனர் கீர்த்தியும்,வருணும்.இன்று அவர்களுக்கு நிச்சயம் நடைபெறுகிறது.இருவரும் மிகவும் எதிர்பார்த்த தருணம் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் வருண் கீர்த்தியை பார்க்க அவளோ ஏதோ போல் அமர்ந்திருந்தாள்.முகத்தில் ஒட்ட வைத்த சிரிப்புடன்.
“ஏய் என்னடி ஏன் ஒருமாதிரி இருக்க….என்ன ஆச்சு….”என்று கேட்க,
“ப்ச்….எல்லாம் இந்த மிருணா எருமையால தான் வருண்…..நேத்து நைட்டே வந்துடுறேன்னு சொன்னா….இன்னும் வரலை….போன் போட்டாலும் எடுக்க மாட்டேங்கிறா…..எங்க போய் தொலைஞ்சானு தெரியலை…..எனக்கு வர கோபத்துக்கு அவளை கொல்ல போறேன் பாரு…..”என்று பல்லை கடித்து கூறிக் கொண்டிருக்க அதற்குள் அவளின் அருகில் வந்திருந்தான் விஜய்.வருண் தான் விஜயை அழைத்திருந்தான் அவனுக்கு நன்கு தெரியும் மிருணாளினி கீர்த்தனாவிற்கு எவ்வளவு முக்கிம் என்று அவள் இல்லை என்றால் இன்றை நாள் முழுவதும் கீர்த்தியின் முகம் வாடியே இருக்கும்.
இன்று இருவருக்கும் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று தன்னவளின் முகம் ஒளியிழந்து காண்பது பிடிக்காமல் விஜயை அழைத்தான்.
“என்னடா என்ன பிரச்சனை…..”என்று முகத்தில் வேர்வை மினுக்க கேட்டான் விஜய்.தூரத்தில் இருந்தே கவனித்துவிட்டான் தோழியின் ஒளியிழந்த முகத்தை கீர்த்தியின் சிறு முகமாற்றம் கூட அவனுக்கு அத்துபடி ஏதோ சரியில்லை என்று அவன் நினைத்திருக்கும் நேரம் தான் வருண் அவனை அழைத்தது.
“ஸ்ஸ்ஸ்ஸ்…..”என்றவாறே ஒருவிரலால் தன் காதுகளை குடைந்தவன் விழிகள் மட்டும் வருணை பார்க்கவேயில்லை.ரசனை ததும்பும் முகத்துடன் எங்கோ வெறிக்க,
“இவன் என்னத்தை இப்படி வெறிச்சு பார்க்குறான்…..”என்று எண்ணியவாறே வருணும் விஜயின் பார்வை போன இடத்தை பார்க்க,அங்கு அழகிய பதுமையென நடந்து வந்து கொண்டிருந்தாள் மிருணாளினி.அழகிய பிங்க் நிற பட்டு புடவையை ஒத்தையாக பின் போட்டிருந்தாள்,காதில் முத்து பதித்த பெரிய ஜிமிக்கி,கழுத்தில் முத்து பதித்த மாலை என்று தேவதை போல் இருந்தாள்.அனைத்து அணிகலன்களும் அவளுக்கு அழகை சேர்க்க,அவளது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி மேலும் அவள் அழகுக்கு மெருகூட்டி காட்டியது.
மனநிறைந்த மகிழ்ச்சியுடன் உள்ளே வந்தவளை வன்ம்மாக பார்த்துக் கொண்டிருந்தாள் பூர்ணிமா.
“வந்துட்டா மினுக்கி….எப்படி மினுக்கிக் கிட்டு வரா பாரு…..இருடி இது தான் நீ சிரிக்கிற கடைசி சிரிப்பா இருக்கும்….உன்னை அழ வைக்கல என் பேரு பூர்ணி இல்லை….”என்று மனதிற்குள் சபித்துக் கொண்டிருந்தாள்.அவளும் இந்த ஒருவாரமாக பார்கிறாளே மிருணாளினியின் மீதான விஜயின் ரசனையான பார்வையை.அதைக் காணும் போது பூரணிக்கு பற்றிக் கொண்டு வரும்.எப்படி விஜயை அடைவது என்று சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு கடவுள் தானாக அதற்கான சந்தர்பத்தை கொடுக்கபோகிறார் என்பதை அவள் அறியவில்லை.
“என்ன பூர்ணி….ஏன் ஒருமாதிரி இருக்க…..”என்று அவளின் பக்கத்தில் அமர்ந்திருந்த அவளின் அன்னை மல்லிகா கேட்க,
“நத்திங் மாம்….”என்றாள்.வருணின் தந்தை பூர்ணாமாவின் தந்தைக்கு தூரத்து உறவு அதனால் அவர்களும் நிச்சயத்திற்கு வந்திருந்தனர்.
மண்டபத்திற்குள் நுழைந்த மிருணாளினி வேகமாக மேடை ஏறியவள் கால்கள் தன் எதிரே நின்றவனைக் கண்டு ஒருநிமிடம் தயங்கி நின்றது.வெளிர் நீல நிற சட்டை அதற்கு பொருத்தமான பேண்ட் அணிந்து அழகனாக நின்றிருந்தவனை தன் கண்களால் நிரப்பிக் கொண்டாள்.இன்னும் சில மணித்துளிகளே அவனை காண முடியும் அதன் பிறகு,தன் தலையை குலுக்கி தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.
மிருணாளினி மெல்ல மேடை ஏற அவளை பார்த்துக் கொண்டே நெருங்கி வந்து கொண்டிருந்தான் விஜய்.அதைக் கண்டவளுக்கு இதயம் தாளம் தப்பி துடித்தது.அவளை ஆழ்ந்த பார்வையுடன் நெருங்கி படிகளில் இறங்கும் நேரம்,
“ம்ம் மேடம் எப்படி தப்பிக்கலாம்னு பார்த்துக்கிட்டு இருக்க போல….அவ்வளவு சீக்கிரமெல்லாம் போக முடியாது….போ….கீதூ வெயிட் பண்றா….”என்று பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு சென்றான்.எதை சொல்கிறான் இவன் என்று குழம்பி போய் மிருணாளினி நிற்க,
“ஆங்….”என்று அவளைக் காண அவளோ தன் பக்கத்தில் வரும்மாரு அழைத்தாள்.
விஜயின் வார்த்தைகள் மிருணாளினிக்கு மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்த அதே யோசனையுடன் அவள் கீர்த்தியின் அருகில் வர,அவளின் கைகளில் ஒரு அடி வைத்த கீர்த்தனா.
“ஆஆஆ…..ஏன்டி என்னை அடிச்ச….”என்று கைகளை தேய்த்துக் கொண்டே கீர்த்தியை ஏறிட,
“ம்ம்….நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை கொல்லாம விட்டதே பெரிசு….”என்று கூற,ஒருநிமிடம் மிருணாளினிக்கு முகம் வெளிரிவிட,எங்கே தோழிக்கு தான் நாளை தான் இந்த ஊரை விட்டு செல்லவிருப்பது தெரிந்துவிட்டதோ என்று பயந்துவிட்டாள்.ஆம் நாளை விடியும் முன் சென்னையை விட்டு சென்றுவிடுவாள்.ஹர்ஷவின் பார்வை தன்னை சுற்றியே இருப்பது போல் இருக்க அவனிடம் இருந்து எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ சென்றுவிட வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறாள்.ஆனால் மனதில் ஏதோ தப்பாக நடந்துவிடுமோ என்ற பயமும் கவ்விக் கொண்டே இருக்க அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.
முதலில் விஜயின் வார்த்தைகளில் ஏதோ இருப்பது போல் யோசனையில் இருந்தவளை கீர்த்தனாவும் குழப்பிவிட்டாள்.
“என்ன என்ன சொல்லுற கீதூ…..நீ…..”என்று தயக்கத்துடன் கேட்க,
“ம்ம் சொல்லுறேன் சுரைக்காய்க்கு உப்பில்லனு….”
“என்னடி என்ன சொல்லுற….”என்று மிருணாளினி பதட்டத்துடன் கேட்க,
“ஏய் மிருணா நீ ஏன் இவ்வளவு லேட் அதை தான் இவ இப்படி கேக்குறா……”என்று வருண் மிருணாவின் முகத்தைக் கண்டு கூற,
“ஓஓஓ….”என்று தன்னை நிதானித்தாள் மிருணாளினி.அதன் பின் கீர்த்தனாவின் பக்கத்தில் நின்று அவளுக்கு தேவையானவற்றை செய்தாள்.மிருணாளினி மேடையில் இருந்தாலும் கண்கள் விஜயை தேடிக் கொண்டு தான் இருந்தன.
மிருணிளினி வந்ததிலிருந்து அவளையும்,விஜயையும் மாற்றி பார்த்துக் கொண்டிருந்தார் நீலவேணி.அழுகு தேவதை போல் இருக்கும் பெண்ணை யாருக்கு தான் பிடிக்காமல் போகும் வேணிக்கும் மிருணாளினியின் அழகில் ஒருநிமிடம் தன்னை மீறி ரசிக்க தான் செய்தார்.ஆனால் வெறும் அழகு மட்டும் போதுமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லுவார்.அவருக்கு தான் எடுத்த முடிவு சரியானது தான் என்ற அசையாத எண்ணம்.
“ஏய் வேணி தான நீ…..”என்று பரிட்சைமான குரல் பக்கத்தில் கேட்கவும் திரும்ப,அவருடன் வேலை பார்த்த மல்லிகா அமர்ந்திருந்தார்.
“ஏய் மல்லி….எப்படி இருக்க….”
“நான் நல்லா இருக்கேன் நீ….”என்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.மல்லிகா தன் கணவரை அறிமுகம் செய்ய வேணியும் ஆனந்தனை அறிமுகம் செய்தார்.இவ்வாறு இரு குடும்பமும் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களின் அருகில் வந்தாள் பூர்ணிமா.
“வா பூர்ணி….”என்று மல்லிகா அவளை தன்னுடன் அமர்த்திக் கொண்டவர்.
“வேணி இது தான் என் பொண்ணு….”என்றார். அவளும் மரியாதை நிமித்தமாக வேணிக்கு வணக்கம் வைத்தாள்.அவளுக்கு வேணி தான் விஜயின் அம்மா என்று தெரியாது.
“ஒரே பொண்ணா மல்லி….”என்று வேணி கேட்க,
“இல்லை வேணி ஒரு பையன் இருக்கான்…..இவளை விட சின்னவன் காலேஜ் படிக்கிறான்….”என்றார்.
“ம்மா….இங்க என்ன பண்ணுரீங்க…..”என்று கேட்டபடி வந்தான் விஜய்.
“வா விஜி….”என்று வேணி அழைக்க,
“ஹலோ விஜய்….இவங்க தான் உங்க அம்மா,அப்பாவா….”என்று ஆர்வமாக கேட்டால் பூர்ணிமா,பின்னே அவளே இன்று விஜயின் தாய்,தந்தையை பார்த்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.அவளுக்கு கடவுளே அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் போலும்.
“ஏய் வேணி இது தான் உன் பையனா….சின்ன வயசு போட்டல பார்த்தது….”என்று மல்லிகா கூற அவரை பார்த்து மென்மையாக புன்னகை சிந்தினான் விஜய்.அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்தபின் வேணியின் மனதில் சிறு ஆசை விழுந்தது.ஆனால் கணவரிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று நினைத்தவர் மல்லிகாவிடமும் சில விபரங்களை கேட்டுக் கொண்டார்.இதில் வேணி ஒன்றை கவனிக்க தவறிவிட்டார் இருமனங்களின் இணைப்பில் தான் வாழ்க்கை நிறைவடையும் இதில் ஒன்று தவறினாலும் வாழ்வும் தவறிவிடும்.
நிச்சியம் இனிதே முடிவடைந்தது.கீர்த்தி,வருண் முகத்தில் நிறைவான புன்னகை தங்கள் காதல் திருமண பந்தத்தில் இணைந்ததில் அதுவும் இருவீட்டாரின் மனம் நிறைந்த ஆசிர்வாதத்துடன் நடைபெற்றதில் பரம திருப்தி இருவருக்கும்.
கீர்த்தியின் கைகளை பற்றிய மிருணா,
“கீதூ….எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடி….ஹாப்பி மேரிட் லைப்…..”என்று மனம் மிகிழ்ந்து கூற,
“ஏய் லூசு….இது நிச்சியம் தான் டி….கல்யாணத்துக்கு இன்னும் நாள் இருக்கே….”என்று சிரித்துக் கொண்டே கூற,
“ம்ம்….ஆமா….நான் சும்மா சொன்னேன்….”என்று மழுப்பினாள்.ஆனால் மனதிற்குள் கீர்த்தியிடம் “சாரிடி உங்க எல்லாரையும் இனி நான் பார்ப்பேனானே தெரியலை என் வாழ்க்கையில வந்த குறுகிய கால வசந்தம் தான் நீங்க எல்லாம்…..”என்று கூறிக் கொண்டாள்.
“என்ன தான் உன் பிரச்சனை….இப்பெல்லாம் அடிக்கடி உன் நினைப்பு எல்லாம் இங்க இல்லை….ஏதாவது பிரச்சனையா…..”என்று கேட்க,அவளின் அக்கறையில் உருகிய மிருணா,
“இல்லடி…அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல…..”என்று கூற அவளை நம்பாத பார்வை பார்த்தாள் கீர்த்தி.
“போதும் என்னை பார்த்தது….வருண் உன்னை தான் பார்த்துக்கிட்டு இருக்காரு அவரை கொஞ்சம் பாருமா….”என்று அவளின் கவனத்தை திசை திருப்பிவிட்டாள் மிருணாளினி.கீர்த்தி,வருணுடன் திரும்பி பேச தொடங்கவும் யாரின் கவனத்தை கவரா வண்ணம் கீழே இறங்கிய மிருணா மீண்டும் திரும்பி மேடையில் இருந்தவர்களை பார்த்துவிட்டு திரும்ப அங்கு புன்னகை முகமாக நின்றிருந்தார் ஆனந்தன்.
“என்னமா….என்ன சொல்லுரா உன் பிரண்ட்…..”என்று கேட்க,
“ஒண்ணும் சொல்லை அங்கிள்….”என்று சிரித்த முகமாக பதில் தந்தாள்.
“ஹாய் ஆன்டி….”என்று கூப்பிட திரும்பியவர் மிருணாவைக் கண்டு சற்று திகைத்தாலும் புன்னகையுடன்,
“வா ம்மா….நல்லயிருக்கியா…..”என்று கேட்க,அதற்கு அழகான புன்னகையை பதிலாக தந்தாள்.
“ஹலோ மிஸ்.மிருணா….ஹவ் ஆர் யூ….”என்று வேணியின் பக்கத்தில் நின்ற பூர்ணிமா கேட்க,அப்போது தான் அவளைக் கண்ட மிருணாளினி மரியாதை நிமித்தமாக ஹாய் என்றாள்.
“எப்படி இருக்கீங்க ஆன்டி….”என்று மிருணா வேணி கேட்க,அவரும் நன்றாக இருப்பதாக பதில் அளித்தார்.பூர்ணிமாவுக்கு மிருணா தன்னை கண்டு கொள்ளாதது பெரும் அவமானமாக இருந்தது.திமிர் திமிர் உடபெல்லாம் திமிர் என்று மனதிற்குள் திட்டியவள் மனதில் ஒரு தீய எண்ணம் உருவாக உடனே அதனை செயல்படுத்தவும் செய்தாள்.அவளது நல்லநேரமோ என்னவோ வேணி சிறு வேலைஆக மிருணாவிடம் சொல்லிவிட்டு நகர,
“அப்புறம் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லதான் கூப்பிட்டேன்….”என்றவள் மிருணா முகத்தில் ஏதாவது மாறுதல் தெரிகிறதா என்று பார்க்க அவளின் முகத்தில் அதே அலட்சிய பாவனை மட்டுமே அதுவே பூர்ணிமாவை மேலும் தூண்டிவிட்டது.
“இன்னும் கொஞ்ச நாள்ல உங்க இன்னொரு பிரண்டுக்கும் கல்யாணம் நிச்சியம் ஆக போகுது….நீங்க இதே மாதிரி கண்டிப்பா வந்து உதவி செய்யனும்….”என்று பொடி வைத்ததை போல் பேச,மிருணா நீ முழுவதும் பேசு என்பது போல் நின்றாள்.
“என்ன மிருணா அப்படியே நிக்குறீங்க…..ஓஓஓ….சாரி எந்த பிரண்ட் நான் சொல்லல “உங்க”என்று அழுத்தமாக கூறியவள் உங்க பிரண்ட் விஜய்க்கு தான்…..பொண்ணு யாரு கேட்க மாட்டீங்களா….நான் தான்..நீங்க கண்டிப்பா எங்க கல்யாணத்துக்கு வரனும்…..”என்று கூறிவிட்டு ஏதொ சாதித்தது போல் மிருணாவை பார்த்தாள்.நீலவேணி தன் அன்னையிடம் தன் ஜாதகத்தை கேட்டுக் கொண்டிருந்தார் அதை கவனித்த பூர்ணிமாவிற்கு மனது சிறகில்லாமல் பறந்தது என்று கூற வேண்டும்.தன் திட்டம் இவ்வளவு இலகுவாக முடியும் என்று அவள் நினைக்கவில்லை.
பூர்ணிமா விஜயின் பெயரைக் கூறியவுடன் சற்று தடுமாறினாள் தான் வேகமாக தன்னை மீட்டுக் கொண்டவள் மீண்டும் சாதாணமாக நின்று கொண்டு,
“ஓஓஓ….அப்படியா தகவல் தந்ததுக்கு ரொம்ப நன்றி பூர்ணிமா…..நீங்க உங்க வேலையை பாருங்க…..”என்றுவிட்டு நகர்ந்துவிட்டாள்.பூர்ணமாவிற்கு பல்லை கடிப்பதை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியிவில்லை.மிருணாவின் நிமிர்வான பதிலில் பூர்ணிமாவிற்கு உச்சக்கட்ட எரிச்சல் உருவானது.
பூர்ணிமாவிடம் பேசிவிட்டு கீர்த்தியை காண வந்து கொண்டிருந்தவளை பற்றி இழுத்தது ஒரு கரம் அவள் என்ன என்று உணரும் முன் அவளை ஒரு அறையில் பிடித்து தள்ள பயந்தவள்,
“ஏய் யாரது….விடு விடு….”என்று கத்த,
“ஏய் கத்தா கத்தாடி…..”என்று மிக அருகில் விஜயின் குரல் கேட்க சற்று நிம்மதியுற்றவள் திரும்ப அவனின் நெஞ்சில் மோதி நின்றாள்.படபடக்கும் விழிகளுடன் அவனை ஏறிட்டவள்,
“விஜய் என்னதிது….”என்று அவனை தன்னிடம் இருந்து பிரித்தவாறே கேட்க அவனோ,
“ப்ச்…ஒருநிமிஷம் இரு…”என்றவன் அவளின் முடியில் மாட்டியிருந்த தன் சட்டை பட்டனை எடுத்துவிட்டுவிட்டு,
“என் கையை பிடிச்சு இழுத்தது நீ….இப்ப என்னவோ நான் உன்மேல விழுந்தது போல சொல்லுற….”என்று மிருணாவும் மல்லுக்கு நின்றாள்.ஏற்கனவே பூர்ணிமாவின் பேச்சில் ஏக கடுப்பில் இருந்தவளுக்கு விஜயின் பேச்சு மேலும் கோபத்தை கொடுத்தது.
“உன்னை கூப்பிட்டுகிட்டே இருந்தேன் நீ தான் கவனிக்காம போன அதான் இப்படி இழுத்து பேச வேண்டியாதா போச்சு….”
“ஓஓஓஓ…அப்படியா என்ன விஷயமா கூப்பிட்ட சொல்லு….எனக்கு வேலையிருக்கு….”என்று கடுகடுவென்று கூற,
“அப்போ எங்கையோ மேடம் கிளம்பிட்டீங்க அப்படி தான…..”
“ஆ….ஆ….ஆமா….அதுக்கு என்ன….இப்போ….”என்று திக்கிதிணறி பதில் வந்தது அவளிடம் இருந்து.அவளையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான் விஜய்.அவனின் பார்வை வீச்சு தாங்காமல்,
“ப்ச் விஜய் இப்ப உனக்கு என்ன பிரச்சனை…..சீக்கிரம் சொல்லு…..யாராவது வந்துட போறாங்க….”என்று படபடக்க,
“நீ இப்போ எங்கேயும் போக கூடாது அதை சொல்ல தான் கூப்பிட்டேன்…..”என்று அழுத்தமாக கூற,
“ஏன் நான் எங்கேயும் போகக்கூடாது…..”என்றவளுக்கு மனதில் சிறு வெளிச்சம் தன்னவனுக்கு ஏதேனும் நியாபகம் வந்துவிட்டதோ என்று. அவளின் கையை பிடித்து இழுத்து சுவற்றில் சாய்த்தவன் அவளின் இருபுறமும் கைகளை ஊன்றி நிற்க,மிருணாவிற்கு மூச்சே நின்றது போல் ஆனது,
“ஏய்….என்ன…..என்ன பண்ணுற….”என்று அவனை பிடித்து தள்ள அவனோ இறுகிய இரும்பென நின்றான்.அவனை அடித்து ஓய்ந்தவள் கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க அவனை ஏறிட்டாள்.அந்த பார்வையில் நீயும் ஏன் என்னை தவிக்க வைக்கிற என்ற செய்தி இருந்தது.அவளின் கண்ணீரை கண்டு விஜயின் மனம் சற்று இலகினாலும் முகத்தில் அதனை காட்டாமல்,
“இங்க பாரு இது என்னோட கீதூவோட பங்ஷன்….அவ சந்தோஷம் தான் எனக்கு ரொம்ப முக்கியம்….அதனால தான் செல்லுறேன்…உன்னை அவ ரொம்ப மிஸ் பண்ணுறா….நீ என்னடானா உன் இஷ்டத்துக்கு வர போற…ஒவ்வொரு தடவையும் நாங்க உன்கிட்ட வந்து கெஞ்சனுமோ…..ஒழுங்கா பங்ஷன் முடியும் வரை எங்கேயும் போகாம அவகூட இருக்குற….புரியுதா….”என்று எச்சரிப்பவன் போல கூறிவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.
மிருணாளினிக்கு மனம்,உடல் இரண்டிலும் உள்ள சக்தி எல்லாம் வடிந்தது போல் கீழே அமர்ந்தவள் தன் பாரம் அனைத்தும் கரையும் வரை அழுது தீர்த்துவிட்டாள்.சற்று முன் அவள் மனதில் ஏற்பட்ட சிறு வெளிச்சத்தையும் விஜயின் வார்த்தைகள் அனைத்துவிட்டன.அவனுக்கு தான் முக்கியம் இல்லை என்று தான் கூறிவிட்டு சென்றுவிட்டானே.ஆறவேயில்லை மனது எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தளோ தன்னை ஒருவாறு நிலைபடுத்திக் கொண்டு அந்த அறையில் இருந்து வெளி வந்தவள் யாரையும் பார்க்கும் எண்ணம் கூட இல்லாமல் விறுவிறுவென்று வெளியில் சென்றாள்.
மிருணாளினி வந்ததிலிருந்து அவளையே பார்வையால் தொடர்ந்து கொண்டு இருந்த விஜய்க்கு அவள் வெளியில் தான் செல்கிறாள் என்று தெரியவும்,
“இவளை என்னதான் செய்ய…எவ்வளவு தைரியம்…. நான் அவ்வளவு சொல்லுறேன் போறா பாரு…இருடி இதுக்கும் சேர்த்து இருக்கு….உனக்கு…..”என்று திட்டிக் கொண்டே அவளின் பின்னே வேகமாக வெளியில் வர அவள் சென்றிருந்தாள்.அவனின் நினைவுகள் அனைத்தையும் சுமந்து கொண்டு சென்றிருந்தாள்.