காலைவேளை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது அந்த மென்பொருள் நிறுவனம்.தனது மடிக்கணினியில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தான் விஜய்.மருத்துவமனையில் இருந்து வந்தவன் ஒரு வாரம் மட்டும் வீட்டில் இருந்தான்.அதற்கு மேல் அவனால் இருக்க முடியவில்லை அதனால் அலுவலகம் வந்துவிட்டான்.தனது வேலையில் ழுழ்கி இருந்த சமயம் அவனின் முன் நிழலாடியது,நிமிர்ந்து பாராமலே வந்தவனிடம்,
“நான் ஜூஸ் குடிச்சிட்டேன்…”என்ற பதிலை மட்டும் தந்துவிட்டு மீண்டும் தன் வேலையில் கவனமாகிவிட்டான்.வருணும் அவன் சொன்னதை வேணியிடம் கூறிவிட்டு தன் வேலையை தொடர்ந்தான்.வருண் நகர்ந்தவுடன் ஒரு பெரு மூச்சை இழுத்துவிட்ட விஜயின் முகத்தில் மெல்லிய புன்னகை படர்ந்தது.அவன் மீண்டும் வேலைக்கு வந்த நாளில் இருந்து இது தொடர்கிறதே.
விஜயின் மருத்துவ வாசம் முடிந்து வீட்டிற்கு வர வேணி மகனுக்கு அனைத்தும் பார்த்து பார்த்து தான் செய்தார்.கைகுழந்தையை பார்பதை போல அவர் பார்த்துக் கொள்ள விஜய்க்கு தான் தலைவேதனையாகி போனது.அவன் சாதாரணமாக தும்பினால் கூட அவர் பயந்து நடுங்கியவாரு ஓடி வர விஜயும் தனக்கு ஒன்றுமில்லை என்று கிளிப்பிள்ளைக்கு கூறுவது போல் கூறி பார்த்துவிட்டான் ஆனால் அவர் கேட்டால் தானே.
சில நேரங்களில் ஆனந்தனிடம் கூட முறையிட்டுவிட்டான் ஆனால் அவரும் அவனின் செவிசாய்க்கவில்லை.அவர் சொன்னாலும் நீலவேணி கேட்க போவதில்லை என்பது வேறு விஷயம்.இவ்வாறு வீட்டில் அவனை சிறுகபிள்ளை போல் தாங்க விஜய்க்கு ஒருபுறம் நெகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் அவர்களின் தேவையில்லாத பயத்தைக் கண்டு கோபமாகவும் வரும் இருந்தும் அதை அவர்களின் முன் காட்டமாட்டான்.
மாலை நேரத்தில் தான் கீர்த்தனாவும்,வருணும் வருவார்கள்.அவர்களுடன் சிறிது நேரம் செலவழிப்பான்.வருணிடம் மட்டும் அவன் மறந்த விடயங்களை கேட்பான்.வருண் ஒரு சிலவற்றை கூறுவான் அந்த விடயங்களையே விஜய் தனது நினைவடுக்களில் தேடி சோர்வு அடைவதை பார்த்தவன்,
“டேய் மச்சி….விடு ரொம்ப யோசிக்காத…உனக்கு தானா நியாபகம் வந்தா வரட்டும் இல்லைனா விடு….”என்று கூற அதன் பின்னே விஜய் கேட்டபதை விட்டான்.இருந்தும் அவன் மனதில் மிருணாளினி பற்றிய நினைவுகள் ஆட்டிதான் படைத்தன அதை யாரிடமும் அவன் கூற விழயவில்லை.வருணும் விஜயிடம் மிருணாளினி பற்றி எதுவும் கூறவில்லை.இவ்வாறு அவன் வீட்டில் ஒரு வாரம் மட்டுமே ஓட்ட முடிந்தது.அதற்கு மேல் முடியவில்லை ஆனந்தனிடமும்,வேணியிடமும் தான் அலுவலகம் செல்லவிருப்பதாக கூற இருவரும் ஒரு சேர மறுத்தனர்.
“என்ன விளையாடுறீயா விஜய்….இப்ப தான் உடம்பு கொஞ்சம் தேறி வந்துட்டு இருக்க அதுக்குள்ள என்ன அவசரம்….”என்று வேணி சத்தமிட,ஆன்ந்தனோ,
“என்ன விஜய் ஏன் இவ்வளவு அவசரமா வேலைக்கு போகனும்னு என்ன அவசியம்….”என்று கேட்க,இருவரையும் பார்த்து ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்துவிட்டவன்,
“ம்மா…ப்பா….எனக்கு வீட்ல சும்மாவே உக்கார்ந்து இருக்குறது கஷ்டமா இருக்கு…எனக்கு ஒரு சேஞ்ச் தேவைபடுது…அதனால தான் ப்ளீஸ்….”என்று கேட்டகவும் தாய்,தந்தை இருவருக்கும் சிறுவயது விஜய் தங்கள் கண்முன்னே வந்தது போல் இருந்தது.தங்களின் முன்னே குழந்தை போல் கேட்கும் மகனிடம் மறுக்க தோன்றாமல் அலுவலகம் செல்ல அனுமதித்தனர்.
ஆனால் அதிலும் வேணி அவனிடம் சிலபல நிபந்தனைகளை வித்தே அனுப்பினார்.அதன்படி தினமும் அவன் ஜூஸ் குடிக்க வேண்டும் மாத்திரை சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும் இதெல்லாம் சரியாக செய்கிறானா என்று கவனிக்கும் பொறுப்பு வருணிடம் சென்றது.அன்றிலிருந்து வருணின் பாடு தான் திண்டாட்டம் ஆனது.தாயும்,மகனும் அவனை பந்து போல் உருட்டி விளையாண்டு கொண்டிருக்கின்றனர்.
விஜய் தனது மடிக்கணினியில் இருந்து மீண்டும் நிமிரும் நேரம் மதியவேளையை தொட்டிருந்தது.
“டேய் விஜி…வா சாப்பிட்டு வரலாம்…நீ ரொம்ப ஓவரா தான் வேலை பார்க்க ஆரம்பிச்சிட்ட….”என்று கீர்த்தனா விஜயின் தலையை செல்லமாக தட்டி சொல்ல,அவளைக் கண்டு மென்மையாக புன்னகையை தந்தவன் உணவு உண்ண எழுந்தான்.
தன் முன் இருக்கும் உணவையே வெறித்துக் கொண்டிருந்தாள் மிருணாளினி.கண்கள் ஒளியிழந்து,முகத்தில் அளவு கடந்த சோர்வு அப்பிக் கிடந்தது.கடந்த ஒருவாரமாக அவளது வாழ்வில் நடந்த விடயங்கள் அனைத்தும் அவளை நடைபிணமாக மாற்றிவிட்டது.ஏதோ யோசனையில் அமர்ந்தவளின் முன் நிழலாட நிமிர்ந்தவள் முன் காளி அவதாரமாக நின்றாள் கீர்த்தனா.
“ஏன்டி…நீ உயிரோட தான் இருக்கியா…எத்தனை தடவை போன் போட்டேன் ஏன் எடுக்கல…”என்று அவளை திட்டியவாறே அடிக்க,மிருணாளினியோ கீர்த்தனாவின் அடிகளை அமைதியாக ஏற்றுக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“உன்னை அடிச்சு அடிச்சு….என்க்கு கை வலி வந்தது தான் மிச்சம்….எனக்கு பிரியாணி நீ தான் வாங்கி கொடுக்கனும்…..” என்று திட்டியாவாறே அமர,
“இந்த பிராயாணிக்கு தான் மச்சி இந்த பில்டப்பு….”என்று வருணின் குரல் கேட்க மிருணாளினி அதிர்ந்து திரும்பி பார்க்க அங்கு வருணுடன் விஜயும் நின்றிருந்தான்.அவனைக் கண்டவுடன் மிருணாளினிக்கு நெஞ்சம் விம்மிக் கொண்டு வர எங்கே அனைவர் முன்னும் அழுதுவிடுவோமோ என்று பயந்தவள்,
“எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு….நான் போகனும்….”என்று தட்டுதடுமாறி கூறிவிட்டு நகர,விஜயின் பார்வை தன்னை துளைப்பது தெரிந்தும் வேகமாக நகரந்துவிட்டாள்.
“ஏய் நில்லுடி….”என்று கீர்த்தனா கூறும் போது மிருணாளினி அங்கில்லை சென்றிருந்தாள்.வருணுக்கு மிருணாளினியைக் காண மனதிற்கு கஷ்டமாக தான் இருந்தது இருந்தும் இதில் அவன் ஒன்றும் செய்வதற்கில்லை.டாக்டர் வேறு விஜய்க்கு நியபகங்கள் தானாக வருவது தான் நல்லது என்று கூறியிருக்க,நீலவேணி அவனிடம் அதை பற்றி பேச்சையே யாரும் எடுக்க கூடாது என்று கட்டளையாக கூறியிருந்தார்.அதனால் வருணும் விஜயிடம் எதையும் கூறியதில்லை.
மிருணாளினி சென்ற திக்கயே பார்த்தபடி நின்றிருந்தான் விஜய்.கண்கள் ஒளியிழந்து,அழுத முகத்துடன் சென்றவளை சுற்றியே அவனின் எண்ணங்கள் பயனித்துக் கொண்டிருந்தது.அன்று மருத்துவமனையில் பார்த்தது அதன் பிறகு அவள் அவன் கண்களில் விழவில்லை.அலுவலகத்திலும் அவள் வேறு பிரிவிற்கு மாறிவிட்டதாள் அவளை காணும் வாய்ப்பும் அரிதாகியது.எப்போதும் ஒரு நிமிர்வுடனும்,அழுத்தமான முகத்துடனும் வலம் வருபவளை பார்த்தவனுக்கு இப்போது இருக்கும் மிருணாளினி மிகவும் புதிததாக தெரிந்தாள்.
“ம்ம்…சாப்பிடுடி….”என்றுகூறிவிட்டு தனது சாப்பாட்டில் கவனமானான்.
கீர்த்தனா கூறியது போல பூர்ணிமா வந்தவுடன் அவள் தான் பேசிக் கொண்டிருந்தாள் மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.
“என்ன கீர்த்தி…உங்க நிச்சயதார்த்துக்கு எங்களுக்கெல்லாம் அழைப்பு உண்டா…”என்று பூர்ணிமா கேட்க,அவள் கேட்பதிலேயே தன்னை அழைக்க வேண்டும் என்ற பொருள் மறைந்திருந்தது.ஆனால் கீர்த்தனாவிற்கு அவளின் உள்வயனங்கள் எதுவும் புரியவில்லை.
“ஓ கண்டிப்பா பூர்ணிமா…நம்ம டீம் எல்லாருக்கும் அழைப்பு உண்டு….”என்று சந்தோஷித்துக் கூற,வருணுக்கு தலையில் அடித்துக் கொள்லாம் போல் இருந்தது.
“இவள வச்சுக்கிட்டு….”என்று மனதிற்குள் மட்டுமே நொந்துகொள்ள முடிந்தது.
தனது கைபேசியில் தன்னவனின் முகத்தையே தடவிய படி இருந்தாள் மிருணாளினி.அவளின் பிறந்தநாளின் போது இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டது.விஜயின் நெஞ்சில் சாய்ந்து புன்னகை முகமாக இருந்த முதலும் கடைசி புகைப்படமும் அதுவே.
“விஜய்…என்னலா முடியல டா….கொஞ்சம் கொஞ்சமாக மொத்தமாவே என்னை இழுந்துடுவேன் போல…”என்று அவனின் புகைத்துடன் பேசிக் கொண்டிருந்தாள்.அப்போது அவளின் கைபேசிக்கு ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வர அதனை புறகணித்தாள்.ஆனால் மீண்டும் மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்து கொண்டிருக்க,
“ச்சை யாரா இருக்கும்….”என்று நினைத்துக் கொண்டு அழைப்பை ஏற்க மறு முனையில் கேட்ட குரலே அவளுக்கு சற்று கலக்கத்தை தந்திருக்க அதில் கூறப்பட்ட செய்தியில் நெஞ்சம் நடுங்க அமர்ந்துவிட்டாள்.