கீர்த்தனாவைக் கட்டிக் கொண்டு மிருணாளினி எவ்வளவு நேரம் அழுதாள் என்று அவளுக்கே தெரியாது.அழுது அழுது ஓய்ந்தவள் அவளது மடியிலேயே தூங்கியும் போனாள்.அவளின் தலையைக் கோதியைபடி இருந்த கீர்த்தனாவிற்கு மனதே ஆறவேயில்லை.தன் தோழியின் சிறுவயது காயங்களை கேட்டவளுக்கு அழுகையும்,கோபமும் வந்தது.
மிருணாளினி அழ தொடங்குவுமே வெளியில் எழுந்து சென்றிருந்தான் விஜய்.அவனுக்கு மிருணாளினியின் அழுகை ஏதோ நெஞ்சத்தை அழுத்துவதைப் போல் இருக்க அவனால் உட்கார முடியவில்லை.விஜய் எழுந்த வெளியில் வந்தவுடன் வருணும் அவனின் பின்னே வந்தான்.
“என்ன மச்சான் இப்படியும் மனுஷ ஜென்மங்க இருக்குமா….ச்ச….”என்று தன் மனதின் ஆதங்கத்தை கூறினான் வருண்.அவனுக்கு விஸ்வநாதன் மேல் ஒருமரியாதை இருந்தது ஆனால் தொழிலில் பல வெற்றிகளை பெற்றவர் குடும்ப வாழ்க்கையில் பலமாக தோற்றுவிட்டார் என்று தான் நினைத்தான்.இது நாள் வரை மிருணாளினி அமைதியை ஒருவித திமிர் தனம் என்று நினைத்து இருந்தவனுக்கு அது அப்படியில்லை என்று இப்போது தான் புரிந்தது.இவ்வாறு யோசனையில் இருந்தவனை நிகழ்வுக்கு கொண்டு வந்தது விஜயின் குரல்,
“இவங்கல்லாம் மனுஷன்களே கிடையாதுடா….மிருகம்னு கூட சொல்லமுடியாது…ஏனா அதுங்க கூட இப்படி தன் குட்டிகளை விட்டு போகாது….ச்ச விடு….நான் ஏதாவது கெட்ட வார்த்தை போட்டு தான் பேசுவேன் நல்லா இருக்காது விடு….”என்று பல்லை கடித்துக் கொண்டு கூறினான்.
“ப்ச் விடுடா….வா உள்ள போவோம்….மிருணா வேற அழுதுக்கிட்டே இருக்கா…வா….”என்று கூறி அழைத்து வந்தான்.வருணும்,விஜயும் உள்ளே வர அங்கு கீர்த்தனாவின் மடியில் தலை வைத்தபடி மிருணாளினி உறங்கியிருக்க,கீர்த்தனாவோ அவளது தலையை கோதியபடியே சுவற்றை வெறித்தபடி இருந்தாள்.
“ம்ம்…உன் பிரண்ட் வளர்ந்து இருக்கானு….அவ மிருணா கூட இருக்கும் போது தான் தெரியுது….”என்று வருண் கூற,விஜயோ அவனது முதுகில் ஒரு அடி வைத்து,
“ஒதை வாங்க போற நீ…”என்று கூற,வருணோ விஜயின் அடியில்,
“ஆஆஆஆ….டேய்…ஏன்டா நல்லா தான இருக்க…அப்பப்ப ஏன் அந்நியனா மாறிடுற….”என்று கத்த,அதற்கு விஜய் பதில் அளிக்கும் முன்,
“சரிமா எங்களை சொல்லிட்டு நீ கத்தாத…”என்று வருண் கூறினான்.
“வரு உங்களை…”என்று எந்திரிக்க முயல,
விஜய் உள்ளே வந்ததிலிருந்து குழந்தை போல் தூங்கும் மிருணாளினியை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.அந்த மாசுமறுவற்ற முகம் அதில் பாசத்திற்காக ஏங்கும் குழந்தை தனமும் அவனை அவள் பால் இழுத்துக் கொண்டு சென்றது.எங்கே கீர்த்தனா எழுந்தால் மிருணாளினி விழித்துவிடுவாளோ என்று பயந்தவன்,
“ஏய் கீதூ….பார்த்து….”என்று பதறியவாறே அருகில் வந்தவன் மிருணாவை இரு கைகளிலும் ஏந்திருந்தான்.
“ஏய் விஜி….என்ன பண்ற…”என்று கீர்த்தனா பதட்டமாக கேட்க,அவனோ பதில் ஏதும் சொல்லாமல் மிருணாவை அவளது அறையில் படுக்க வைத்தவன்,கீர்த்தனாவிடம் திரும்பி,
“எவ்வளவு நேரம் அப்படியே உக்கார்ந்து இருப்ப…நீயும் அவ பக்கத்தில படுத்துக்கோ…”என்று கூறிவிட்டு வருணை அழைத்துக்கொண்டு சென்றான்.
விடியற்காலையிலேயே விழிப்பு தட்டியது மிருணாளினிக்கு.எப்போதும் எழுந்து சோம்பல் முறித்தவளுக்கு நேற்றைய நிகழ்வுகள் அனைத்தும் படமாக விரைய தன் தலையை தட்டிக் கொண்டு வேகமாக எழ,அப்போது தான் தன் பக்கத்தில் உறங்குபவளை கண்டாள்.போர்வையை முகம் வரை போர்த்தியபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் கீர்த்தனா.
போர்வையை விலக்கி பார்த்தாள் குழந்தை தனம் மாறாத முகம்.நேற்று இவளா தன்னை தாய் போல் மடிதாங்கியது என்று நினைத்தவளுக்கு வியப்பு தான் கிட்டியது.தன் தனிமையை போக்க தனக்கு கடவுள் அனுப்பியிருக்கும் தேவதை போல் தெரிந்தாள் கீர்த்தனா.நேற்று தன்னை மடிதாங்கும் போது வெகு நாட்களுக்கு பிறகு தன் தாய் மடியை உணர்ந்தாள்.நேற்றைய இரவு தன் மனதின் பாரத்தை இறக்கியதாலோ என்னவோ மிருணாளினிக்கு மனது மிகவும் லேசாக மாறியிருந்தது.
உற்சாகத்துடன் எழுந்தவள் தன் காலை கடன்களை முடித்துக் கொண்டு வெளியில் வர கீர்த்தனா நல்ல உறக்கத்தில் இருந்தாள்.நேற்றைய அலைச்சலினால் தான் இவ்வாறு உறங்குகிறாள் என்று உணர்ந்தவள் அவளை தொந்தரவு செய்யாமல் வெளியில் வந்தாள்.
மிருணாளினி சமையல் அறையில் அனைவருக்கும் காபி கலக்கிக் கொண்டிருந்தாள்.அப்போது பின்னே அரவம் கேட்கவும் கீர்த்தி தான் எழுந்து வந்துவிட்டாள் என்று நினைத்து,
“எந்திரிச்சிட்டியா….முதல்ல பல்லை விளக்கிட்டு வா…அப்போ தான் காபி….இல்லை காபி கிடையாது….சொல்லிட்டேன்….”என்று மிரட்டல் போல் கூறினாள்.கீர்த்தனாவிற்கு எப்போதும் பெட் காபி குடிப்பது பிடிக்கும் அதனால் மிருணாளினி அவ்வாறு கூறினாள்.அவள் பேசினாலும் அவள் கைகள் தன் வேலையை செய்து கொண்டிருந்தது.
“நான் பல் விளக்கிட்டு தான் வந்தேன்…எனக்கு காபி கிடைக்குமா மேடம்…”என்று விஜய்யின் குரல் கேட்கவும்,ஒருநிமிடம் மிருணாளினியின் கைகள் தன் வேலையை நிறுத்தியது.அச்சோ விஜய் என்று தன் உதடு கடித்துக் கொண்டு திரும்ப,அங்கு சமையல் அறையின் வாயிலில் கைகளை குறுக்காக கட்டியபடி நின்றிருந்தான் விஜய்.
சந்தன நிற டிஷர்ட்,கருப்பு நிற டிராக் பேண்ட் அணிந்திருந்தான்.தலை கலைந்து கண்கள் சிவந்து இருந்தது.அதுவே கூறியது அவன் இரவு சரியாக உறங்கவில்லை என்று.மிருணா விஜயை அளவிடும் நேரம் விஜயும் அவளை அளவிட்டுக் கொண்டிருந்தான்.
கருப்பு நிற குர்த்தி,சந்தன நிற பட்டியாலா பேண்ட் அணிந்திருந்தாள்.முடியை கொண்டையிட்டு ஒற்றை கிளிப்பில் அடக்கி இருந்தாள்.நேற்று அழுது வடிந்த முகம் இன்று சற்று தெளிந்து இருந்தது.நேற்று அழுதபடி தூங்கியதன் விளைவு கன்னங்கள் இரண்டு சற்று உப்பி போயிருந்தது.அந்த சோபை முகம் கூட விஜயின் மனதிற்கு இதமாக இருந்தது.
முதலில் கீர்த்தி என்று தன்னை நினைத்து அவள் தன்னிடம் பேசியது பின் தான் என்று உணர்ந்து பின் தவறு செய்துவிட்டதை போன்று உதடு கடித்தது என்று அனைத்தையும் பார்த்தவனுக்கு மிருணாளினி தேவதை போல் தான் தெரிந்தாள்.இவ்வாறு விஜய் மிருணாளினியை பார்வையால் விழுங்கி கொண்டிருக்க அவனின் முன் கமகமக்கும் வாசனை வந்தது.
மிருணாளினி தான் காபி கலந்து அவன் முன் நீட்டியிருந்தாள்.அவளது கைகளில் இருந்து வாங்கியவன்,
“ஏய்…ஏய்….”என்று கத்தியவாறே பின்னே நகர்ந்தான்.அவனது கைகளில் இருக்கும் காபி பிடுங்க வேகமாக வந்தவள் அவன் பின்னே நகரவும் அவனின் மீதே மோதி நின்றாள்.விஜயோ ஒரு கையால் காபி கோப்பை தூக்கி பிடித்துக் கொண்டவன்,மறுகையால் அவளை இடைவளைத்து பிடித்திருந்தான்.இருவரும் தாங்கள் இருக்கும் நிலை தெரியாமல் சண்டை போட்டபடி இருக்க,
“என்னடா நடக்குது இங்க…”என்று வருணின் குரலில் தான் கலைந்தனர்.அப்போதும் ஒருவரை விட்டு ஒருவர் விலகாமல் அணைத்தவாகிலேயே இருக்க,வருணுக்கு தான் ஒருமாதிரி ஆகி போனது.தான் ஏதோ தவறான நேரத்தில் வந்துவிட்டோமோ என்று நினைத்து திரும்பினான்.அதுவரை சண்டையிட்டவர்களுக்கு வருண் திரும்பவும் தான் தாங்கள் நிற்கும் நிலை புரிய வேகமாக விலகினர்.
“சாரி…”
“சாரி…”என்று இருவரும் ஒருவருக்கு ஒருவர் கூறிக் கொகொண்டிருக்க,வருணுக்கோ இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றே புரியவில்லை.அவன் புரியாமல் இருவரையும் நோக்க,
“அது அது….நான் காபி கொடுத்தேன்…என்னை கிண்டல் பண்ணான் அதான் காபியை பிடுங்க வந்தேன்….”என்று மிருணாளினி வருணிடம் விளக்கம் கூறிக் கொண்டிருக்க விஜயோ தனக்கும் இதற்கும் எந்த சம்மதம்மும் இல்லை என்னும் விதமாக மிருணாளினி கொடுத்த காபியை சோபாவில் அமர்ந்து பருகிக்கொண்டிருந்தான்.அவளையும் சேர்த்து தான்.இதை எல்லாம் மிருணாளினி கவனித்தாளோ இல்லையோ வருண் கவனித்தான். வருண் தங்களை தவறாக நினைத்திவிடுவானோ என்று மிருணாளினி பேசிக் கொண்டிருக்க விஜயோ அவள் கொடுத்த காபியை பருகி விட்டு அவளின் கையில் திணிக்க,இப்போது மிருணா திருதிரு என்று முழித்துக் கொண்டு நின்றாள்.
அவளது நிலையைக் கண்டு நகைத்தவாறே,
“ம்ம்…காபி ரொம்ப நல்லா இருந்துச்சு…”என்றுவிட்டு போகும் போது ஒரு கண்ணை அடித்துவிட்டு சென்றான்.ஏற்கனவே திருதிருத்த மிருணாளினிக்கு இப்போது விஜயின் செயலால் சம்பித்த நிலை தான்.அவள் சிலை போல் நிற்பதை வைத்தே நண்பன் ஏதோ குறும்பாக கூறியுள்ளான் என்று நினைத்த வருண்,
“மிருணா…எனக்கு காபி கிடையாதா…”என்று பேச்சை மாற்றும் பொருட்டு கேட்க,மிருணாவோ,
“ஆங்…ஆங்….இதோ வரேன் வருண்….”என்று தடுமாற்றமாக கூறிவிட்டு சென்றாள்.மிருணா காபி கலந்து வரும் போது கீர்த்தனாவும் எழுந்து வந்திருந்தாள்.கலைந்த தலையுடன் சோபாவில் அமர்ந்தவள்,மிருணாவிடம்,
“எனக்கு காபி….”என்று கேட்க,அவளை முறைத்த மிருணா,
“போ…போ முதல்ல பல்லை விளக்குடி…எப்ப பாரு இதே வேலையா போச்சு உனக்கு….”என்று அவளை திட்டி விட்டு செல்ல,வருணோ வாயை மூடிக் கொண்டு சிரித்தான்.பின்னே சத்தமாக சிரித்தால் அவனது ராட்சசி அவனை கொன்றுவிடுவாளே என்ற முன்னெச்சரிக்கை தான்.இவ்வாறு வருண் சிரித்துக் கொண்டிருக்க அவனின் மேல் ஒரு தலையனை வந்து விழுந்தது,
“ரொம்ப சிரிக்காதீங்க…உதை வாங்குவீங்க…”என்று அவனை ஒற்றை விரல் நீட்டி எச்சரித்துவிட்டு சென்றாள் அவனின் செல்ல ராட்சசி.இவ்வாறு காலைவேளை நண்பர்கள் நால்வருக்கும் இனிமையாக கழிந்தது.பின் அனைவரும் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்க அப்போது,கீர்த்தனா,
“மிருணா…நீ ஏன் திடீர்னு சொல்லாம டெல்லி வந்த…இங்க ஏதாவது பிரச்சனையா…”என்று கேட்டாள்.விஜயும் அதை தான் கேட்க நினைத்தான் அதற்குள் கீர்த்தனா கேட்டுவிட,மிரணாளினி சற்று நேரம் தன் தட்டை வெறித்தவள் பின் தலையை உலுக்கிக் கொண்டு,
“என் அம்மா…அதாவது என்னை வளர்த்தவங்க அவங்க தவறிட்டாங்க…அதனால தான் நான் இங்க வந்தேன்…”என்று கூற அங்கு மீண்டும் ஒரு அமைதி.கீர்த்தனா ஆதரவாக மிருணாவின் கையை பிடித்து அழுத்தம் கொடுத்தாள்.அவளின் கையின் மேல் தன் கையை வைத்தவள்,
“எனக்கு அவங்கு இறந்தது கஷ்டமா இல்லை கீதூ…ஏனா அவங்க ரொம்ப நாளா ஹாஸ்பிட்டல்ல தான் இருந்தாங்க…அவங்களுக்கு கேன்சர்…ரொம்ப கஷ்டப்பட்டாங்க…போன மாசம் அவங்க நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சு…நான் இங்க வந்து அவங்களை பார்த்துட்டு தான் வந்தேன்….”என்று கூற,கீர்த்தனா,
“கீதூ….அவங்களுக்குனு குடும்பம் இருக்குடி…அவங்களுக்கு ஒரு பையன்,ஒரு பொண்ணு இருக்காங்க….அவங்க என்னை வளர்த்தாங்க அவ்வளவு தான்….எனக்கு அம்மான்ற நியாபகம் வரமா பார்த்துக்கிட்டாங்க…அவங்களுக்கு நான் கண்டிப்பா இறுதி மறியாதை கொடுத்தே ஆகனும் அதான் எனக்கு போன் வந்தவுடனே கிளம்பிட்டேன்….”என்றவள்
“சாரி…நான் அப்ப உங்களை இல்லை…என்னையே மறந்த நிலையில தான் இருந்தேன்…அதான் என்னால உங்கிட்ட பேசக்கூட முடியலை….வெரி சாரி….உங்க எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன்….”என்று உணர்ந்து கூறினாள்.
“ஏய்…மிருணா…எதுக்கு சாரி எல்லாம் கேட்டுக்கிட்டு….”என்று கீர்த்தனா கூற,மிருணா,
“இல்லை….கீதூ…நான் எப்ப இங்க வந்தாலும் என்னை வரவேற்குற ஒரே ஜீவன் அவங்க தான்….அவங்களும் என்னைவிட்டு போனதுக்கு அப்புறம் எனக்கு….எனக்கு….என்ன சொல்றதுனே தெரியலை….எனக்குனு இனி யாரும் இல்லை இல்லைனு மனசு கத்த ஆரம்பிச்சிடுச்சு…..ஒரு விரக்த்தி,கோபம்,ஆத்திரம்…எல்லாம்….என்ன செஞ்சேன் நான்…எனக்கு ஏன் இந்த நிலைமைனு எனக்கு நானே கேட்டுக்கிட்டு இருந்தேன்….”என்று கூறிவிட்டு தன் கண்களை துடைத்துக் கொண்டவள்,கீர்த்தனாவின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு,
“எப்போ உங்களை எல்லாம் பார்த்தேனோ…அப்ப தான் நான் தனியா இல்லைனு மனசு சொல்லுச்சு…அவ்வளவு சந்தோஷம் தெரியுமா….”என்று கண்களில் நீருடன் சிரித்தப்படி கூறினாள்.
“ம்க்கும்…எங்க உன்னை பார்க்க நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியுமா…”என்று கீர்த்தனா கூறிவிட்டு விஜயும்,வருணையும் பார்க்க,மிருணாளினியோ ஒருவித நமுட்டு சிரிப்புடன்,விஜயை பார்த்து அப்படியா என்னும்விதமாக கண்களை காட்ட அவனோ ஒருவித சங்கடத்துடன் நெளிந்தான்.அவனது அந்த பதட்டம் மிருணாவிற்கு ஒருவித உற்சாகத்தை தந்தது.
“ஓ…என்ன பண்ணாங்க இரண்டு பேரும்…”என்று கேட்க,அன்று நடந்த விடயங்களை அனைத்தையும் கூறினாள்.கீர்த்தனா கூற கூற வருணோ ஏதோ கதை போல் கேட்டுக் கொண்டே தன் காலை உணவை உண்டு கொண்டிருந்தான் என்றால் விஜய்க்கோ மிருணாளினி தன்னை தவறாக நினைத்துவிடுவாளோ என்று சற்று பறிதவிப்பாகவே இருந்தது.
“எவ்வளவு படுத்தி எடுத்திட்டானுங்க தெரியுமா…கடைசியா அப்பா தான் பேசி அனுப்பிவச்சாங்க….இவனுங்க கூட நான் கா விட்டுடேன் நீயும் விட்டுடு…”என்று வருணிடம் முகத்தை சுழித்து காட்ட வருண் அவளின் செயல்கள் அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தான்.விஜயோ கீர்த்தனாவை முறைத்துக் கொண்டு நின்றான்.அதை உணர்ந்த கீர்த்தனா,
“என்னடா முறைப்பு உனக்கு…இதோ இவனை விட நீ தான ஓவரா பண்ண…இப்ப என்ன முறைப்பு….”என்று அவனையும் வாரிவிட்டே சென்றாள்.விஜய்க்கோ ஏதோ முள்ளின் மேல் நிற்பது போன்ற உணர்வு அதே உணர்வுடன் திரும்பி மிருணாவின் முகம் காண அவளோ எந்த சலனமும் இல்லாமல் தன் வேலைகளை செய்ய விஜய்க்கு அவள் என்ன நினைக்கிறாள் என்றே புரியவில்லை.
கீர்த்தனா மிருணாளினியை தங்களுடனே கிளம்புமாறு கூற மிருணாளினியோ தனக்கு இங்கு சில வேலைகள் இருப்பதாகவும் அதை முடித்துவிட்டு டெல்லியை விட்டு முழுவதுமாக வரப்போவதாகவும் கூறினாள்.ஆனால் அவள் நினைத்தது போல் அவளாள் வர முடியுமா விஸ்வநாதன் அவளை அவ்வளவு எளிதாக விட்டுவிடுவாரா???என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.