“நான் கீதூவை பத்தி யோசிக்கல…மிருணாவை பத்தி யோசிக்கிறேன்…எங்க போயிருப்பா….”என்று கூற,அவனை விநோதமாக பார்த்தான் வருண்.எப்போதும் மிருணாளினியை பற்றிய பேச்சு வந்தால் அந்த இடத்தை காலி செய்துவிடுவான் விஜய்.அதுவும் இப்போது நடந்த சண்டைக்கு பின் அவனிடம் அவளை பற்றிய பேச்சுக்களே அரிது தான் அவ்வாறு இருக்க இன்று மிருணாவை பற்றி யோசிக்கிறேன் என்று விஜய் கூற அவனை சந்தேகமாக பார்த்தான்.இவ்வாறு இருவரும் இரு வேறு மனநிலையில் பார்டீ நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர்.
வருண் வண்டியை நிறுத்திவிட்டு வர விஜயோ அமைதியாக இறங்கி நின்று கொண்டான்.எப்போதும் சிரித்தமுகத்துடன் வலைய வரும் நண்பனின் முகம் இன்று மிகவும் கசங்கி இருப்பது போல் தெரிந்தது வருணுக்கு.இந்த முகவாட்டம் நிச்சயம் கீர்த்தனாவிற்காக இல்லை என்பது மட்டும் புரிந்தது.அவனே ஏதோ தெளிவற்ற நிலையில் இருப்பதால் மேலும் கிளறாமல் அமைதியானான் வருண்.
“ஹாய்….வந்துட்டீங்களா….வாங்க….”என்று அவர்களை கண்டு அழைக்க வந்தாள் பூர்ணிமா.பூர்ணிமா சாதாரண உடையிலேயே அழகியாக தெரிவாள்.இன்று பிறந்த நாளுக்கேன்று நேர்த்தியாக உடையணிந்து,அதற்கு ஏற்றார் போல் அணிகலன்கள் அணிந்து இருக்க அதுவே அவளை பேரழகியாக காட்டியது.மேலும் இன்று விஜயிடம் தன் மனதை உரைக்க இருந்த காரணத்தால் அவனது வரவை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தாள்.
வருண் பூர்ணிமாவைக் கண்டு புன்னகைக்க அவளோ விஜயை பார்த்துக் கொண்டு இருந்தாள்.விஜயோ பூர்ணிமா வந்ததை கூட உணராது தனது அலைபேசியில் மூழ்கியிருந்தான்.அவனது இடையில் ஒரு குத்துவிட்ட வருண்,பூர்ணிமாவை கண் காட்ட அப்போது தான் அவளை கவனித்த விஜய்,
“ஏய்….ஹாய்….”என்று சாதாரணமாக விசாரிக்க பூர்ணிமாவின் முகம் சுணங்கிவிட்டது.வருணுக்கு பூர்ணிமாவின் மனது சற்று புரிய தான் செய்தது.அவளுக்கு விஜயின் மீது விருப்பம் என்று ஆனால் விஜய்க்கு அவளின் மீது எந்த நாட்டமும் இருப்பதாக தெரியவில்லை.
பூர்ணிமா இருவரையும் பார்டீ நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றாள்.
“கீர்த்தனா வரலையா….”என்றாள் சந்தேகமாக,அவளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி தான் கீர்த்தனா வராததது.இருந்தும் விஜய்க்காக கேட்டாள்.
“அவளுக்கு கொஞ்சம் உடம்பு முடியலை அதான் வரலை….”என்று வருண் விளக்கம் அளித்தான்.
பார்டீயில் பூர்ணிமாவின் கல்லூரி தோழிகள் சிலரும் இருந்தனர்.விஜயும்,வருணும் வந்தவுடன் பார்டீ தொடங்கியது.கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்தாள் பூர்ணிமா.பின் அனைவரும் அவளுக்கு பரிசுகள் வழங்கிவிட்டு பேசிக் கொண்டிருந்தனர்.விஜய்க்கு தான் ஏனோ இயல்பாக அங்கு ஒன்ற முடியவில்லை.மனது முழுவதும் மிருணாளினியே ஆக்கரமித்திருந்தாள்.எங்கு சென்றிருப்பாள் ஒருவேளை டெல்லி சென்றிருப்பாளோ என்ன அவசர வேலையாக இருக்கும் ஏன் கீர்த்தனாவிடம் கூட சொல்லாமல் சென்றாள் என்று தன் நினைவுகளில் மூழ்கியிருக்க அப்போது,
“விஜய்….விஜய்….”என்று யாரோ அழைக்கும் குரல் கேட்க அதில் கலைந்தவன் பார்க்க அங்கு அழகு தேவதையாக நின்றிருந்தாள் பூர்ணிமா.
“ஹாய் பூர்ணிமா….”என்றவன் மீண்டும் ஏதோ யோசனை செய்ய துவங்கினான்.பூர்ணிமா விஜயிடம் நிற்பதைக் கண்ட வருண் சற்று தள்ளியே நின்று கொண்டான்.
“விஜய்…அது….அது வந்து….”என்று பூர்ணிமா ஏதோ தடுமாற,அவளை புரியாமல் பார்த்த விஜய்,
“என்ன பூர்ணிமா ஏன் கிட்ட ஏதாவது சொல்லனுமா….”என்று கேட்க அதற்கு ஆம் என்னும் விதமாக தலையாட்டினாள்.எப்போதும் எதையும் நேரிடையாக கேட்கும் பூர்ணிமா இன்று தன்னிடம் பேசவதற்கு கூட தயங்குவது விஜய்க்கு மனதில் எதையோ உணர்த்தியது இருந்தும் அவளே வாய் திறக்கட்டும் என்று இருந்தான்.பூர்ணிமாவும் தன் மனதை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு விஜயிடம் தன் மனதை உரைக்க போகும் நேரம் விஜயின் அலைபேசி அலறியது.
“ஒருநிமிஷம்….”என்றவன் சற்று தள்ளி சென்று அதனை உயிர்பித்து காதில் வைக்க,அந்த பக்கம் என்ன கூறப்பட்டதோ விஜய் மிகவும் பரபரப்பானான்.
“எங்கேயும் விடாதீங்க….நான் இப்ப கொஞ்ச நேரத்தில அங்க இருப்பேன்….இதோ கிளம்பிட்டேன்….”என்று கூறிவிட்டு வைத்தவன்,வருணிடம் சைகை செய்தவாறே வேகமாக பூர்ணிமாவிடம் வந்து,
“சாரி நான் கொஞ்சம் அவசரமா போகனும் பை….”என்று அவளது பதிலை கூட எதிர்பாராது செல்லிவிட்டு செல்ல,பூர்ணிமாவிற்கு மனதிற்குள் அவ்வளவு கோபம் வந்தது முயன்று தன்னை அடக்கிக்கொண்டாள்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் விஜய்,கீர்த்தனா,வருண் மூவரும் டெல்லிக்கு செல்லுவதற்காக விமானநிலையத்தில் இருந்தனர்.அதே நேரம் டெல்லியில் உள்ள உயர்ந்த குடிமக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் முன் நின்றது ஒரு ஆடிக் கார் அதில் இருந்து இறங்கினாள் மிருணாளினி கைகளில் சலைன் ஏறியதற்கான பேண்டைட் இருந்தது மிகவும் சோர்ந்து காணப்பட்டாள்.அவளது கார் உள்ளே வந்தவுடன் வேகமாக வந்த அந்த குடியிருப்பு வாட்சமேன் அவளிடம் சாவியை வாங்கிக் கொண்டு காரை பார்க் செய்ய சென்றான்.
தளர்வான நடையுடன் தனது வீட்டை அடைந்த மிருணாளினி சாவி கொண்டு அதனை திறந்து உள்ளே சென்றாள்.வழக்கம் போல் அந்த வீட்டின் வெறுமையே அவளை அழைத்தது.இது அவளுக்கு பழக்கமான ஒன்று தான் என்றாலும் இன்று மிகவும் வெறுமையாக இருப்பது போல் ஒரு உணர்வு சோர்வுடன் தன் படுக்கை அறைக்கு வந்து படுக்கையில் விழுந்தவள் வீறிட்டு அழத்தொடங்கினாள்.
அவளது கண்களில் இருந்தது கண்ணீர் அருவி போல் வந்து கொண்டிருக்க அதை தொடைக்கவோ,அவளை சமாதானபடுத்தவோ அங்கு யாரும் இல்லை.இருந்த ஒரே நேச நெஞ்சமும் இப்போது அவளிடம் இல்லை.அழுது அழுது அதே நிலையில் உறங்கியும் போயிருந்தாள் மிருணாளினி.தனக்கு யாருமே இல்லை என்று அவள் வாடி வந்தங்கி கொண்டிருக்க,அவளுக்கு எல்லாமுமாக நாங்கள் இருப்போம் என்று கூறிக் கொண்டு வந்து நின்றனர் அவளின் நண்பர்கள்.