காதல் மலருமா?

மறுமணம் அவசியமா? அதுவும் இந்த வயதில்? ஏன் இந்த வயதில் திருமணம் செய்து கொண்டால் தான் என்ன? காதோரம் நரைத்த முடிகளை பார்த்தவாரு அன்னை பேசியதை பலவாறு யோசித்துக் கொண்டிருந்தான் சசிதரன்.

மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றவன் அங்கேயே வேலையில் சேர்ந்து ஐந்து வருடங்களாக காதலித்த லிசாவை கரம் பிடித்தான். காதல் திருமணம். கை நிறைய சம்பளத்தோடு நல்ல வேலை இருக்க, கல்யாண வாழ்க்கை இனிமையாகத்தான் சென்றது. என்ன ஒன்று வீட்டார் சம்மதம் மட்டும் கிடைக்கவில்லை.

வீட்டுக்கு அழைத்தால் அன்னை ஏச்சும், பேச்சோடும் அவன் நலம் விசாரிப்பாள். தந்தைக்கு அவன் மீது கோபம். அவருக்கு புரிய வைக்கவும் இவன் நினைக்கவில்லை. அக்கா சுமதி வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக குற்றம் சொன்னாள். எப்போது வீட்டுக்கு அழைத்தாலும் லிசாவை பற்றி குறை மட்டுமே அவன் காதில் விழும்.

வெள்ளைக்காரியாகப் பிறந்தது அவள் தவறா? அவளை காதலித்தது என் தவறா? வீட்டாரின் பேச்சைக் கேட்க முடியாமல் அவன் லிசாவை அழைத்துக் கொண்டு இலங்கைக்கு செல்ல நினைக்கவில்லை.

வீட்டாரின் மனக்குமுறலோ, சாபமோ, சசிதரனின் காதல் வாழ்க்கைக்கு கண் பட்டது போல் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மூன்று வருட திருமண வாழ்க்கையோடு மணமுறிவு. வாழ்க்கையை வெறுத்தான் சசிதரன்.

வீட்டுக்கு செல்ல மனமில்லை. விவாகரத்தான சேதி அறிந்ததிலிருந்து முட்டாள்தனமாக அவன் எடுத்த முடிவால்தான் அவனுக்கு இன்று இந்த நிலைமை என்று அறிவுரையோடு, திட்டுக்களும் தாராளமாகவே அலைபேசி வழியாக அன்னையும் அக்காவும் வாரி வழங்கலாயினர். அது மட்டுமா ஊருக்கு வரும்படியும், மறுமணம் செய்து கொள்ளும்படியும் வற்புறுத்தலாயினர். அதை காதில் வாங்கி காற்றில் கலக்க விட்டான்.

இது தனக்குத் தேவைதானா? தானே அழைத்து இவர்களிடம் இந்த பேச்சு கேட்க வேண்டுமா? என்று வீட்டுக்கு அழைப்பதையே நிறுத்தி இருந்தான். வீட்டிலிருந்து மாமா விஜயன் அழைத்தால் மட்டும் ஓரிரண்டு வார்த்தை பேசி விட்டு வைப்பான்.

நாட்கள் உருண்டோட மாதங்களாகி, வருடங்களாகும் பொழுது சசிதரனுக்கு வயதும் நாற்பத்தி ஐந்தாகியிருந்தது. வாழ்க்கையை திரும்பிப் பார்த்தவனுக்கு வாழ்க்கை வெறுமையாக இருந்தது.

ஒரு நாள் வேலை விட்டு வரும் பொழுது மழையில் நனைந்தான். ஜுரம்தோடு வேலைக்கு சென்றவன் சுயநினைவில்லாமல் விழுந்ததனால், கூட இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்கள். இதுவே வீட்டில் இருந்திருந்தால் அவன் நிலைமை என்னவாகி இருக்குமோ? நினைக்கவே பயமாக இருந்தது. அன்னையின் அரவணைப்பு வேண்டும் போல் இருந்தது. அன்னையின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டால் நிம்மதியாக உறக்கம் வரும் போல் தோன்றவே அன்னையின் மடி தேடினான்.

எந்த வயதாக இருந்தால் என்ன? அன்னைக்கு பிள்ளை தானே. யோசிக்கவே இல்லை. ஊருக்கு சென்று வரலாம் என்று முடிவு செய்தவன் இலங்கைக்கு கிளம்பினான்.

கல்யாண விழா கோலம் பூண்ட வீடு சசிதரனை வரவேற்றது. அக்கா மகள் தாராவின் கல்யாணத்துக்கு வந்ததாகத்தான் அனைவரும் நினைத்தனர். தந்தையின் இறப்புக்கு கூட வராதவன் திருமணத்துக்கு வந்தானே என்று மகிழ்ந்தனர்.

பல வருடங்கள் கழித்து மகனை பார்த்த ஆனந்தத்தில் அன்பு பொங்க கண்களை ஒற்றிக்கொண்டாள் அன்னை அன்புக்கரசி.

மூத்தவள் தாராவும் இளையவள் அமலாவும் மாமா சசிதரனோடு நன்றாகத் தான் பேசினார்கள். இவனும் குடும்பம் பிள்ளைகள் என்று வாழ்ந்திருந்தால், அவர்களை விட இளம் வயதில் அவனுக்கும் பிள்ளைகள் இருந்திருப்பார்கள்.

“என்னடா இப்படி இளச்சி போய் இருக்க? சரியா சாப்பிடுறியா என்ன?” அக்கறையாக விசாரித்தாள் அன்புக்கரசி. மகனை பற்றிய கவலை அவள் குரலில் அப்பட்டமாக தெரிந்தது.

“போன வாரம் ஜுரம் வந்து ஹாஸ்பிடல்ல இருந்தேன். அதான்….” சசி சாதாரண குரலில் கூற, அன்புக்கரசியின் நெஞ்சில் மேலும் பாரம் ஏறியிருந்தது.

“ஏன்பா… இங்க நாங்க இத்தனை பேர் இருக்கும் பொழுது நீ அங்க தனியாக இருக்கணுமா? ஏதாவது ஒன்னுனா உன்ன பார்த்துக்கவும் யாரும் இல்ல. அம்மா சொன்னா கேட்பியா? கல்யாணம் பண்ணிக்க” என்றாள்.

மருத்துவமனையில் அவன் இருக்கும் பொழுது அன்னை இருந்தால் அவனைப் பார்த்துக்கொள்வாளே என்று எண்ணினானே ஒழிய, மனைவி என்ற ஒருத்தி இருந்தால் அவனை எப்படியெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாள் என்று கிஞ்சத்திற்கும் நினைத்துப் பார்க்கவில்லை. வளமை போல் அன்னை கூறியதை காதில் வாங்கி காற்றில் கலக்க விட்டான்.

ஆனால் அரசி விடுவதாக இல்லை. திருமணம் செய்து கொள்ளும்படி அவன் மனதை கரைக்க முயன்றாள். அவள் மட்டுமா? அக்கா சுமதி, மாமா விஜயன் என்று அனைவருமே அவனிடம் மறுமணத்தை பற்றியே பேசலாயினர். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். மறுமணம் செய்து கொள்ளலாமா என்று குழம்பிய மனநிலையில் இருந்த சசிதரன் அன்னையிடமே தாராவின் திருமண முடிந்த பின் பொறுமையாக பெண் பார்க்குமாறு கூறியிருந்தான்.

பொறுமையாக பெண் பார்க்க அவன் என்ன இருபத்தி எட்டு வயதிலையா இருக்கின்றான்?

மகன் மறுமணம் செய்துகொள்ள சம்மதித்து விட்டதில் மகன் விவாகர்த்தானவன் என்றாலும் குழந்தைகள் இல்லாததால் அவ்வாறான ஒரு வரனை பார்த்தவள் குறிப்பாக முதிர்கன்னிகளையே தேடலானாள்.

தாராவின் திருமணத்தின் போது ஓடியாடி வேலை பார்த்துக் கொண்டிருந்த நறுமுகையை பார்த்த சசி சுமதியிடம் யார் அவள் என்று விசாரித்தான்.

“ஓஹ்.. முகியா. அவ என் ப்ரெண்டுடா… நம்ம அமலா கூட தான் அவ பையன் பாலர் வகுப்புல இருந்து பதினோராம் வகுப்பு வரைக்கும் படிச்சான். உன் மாமாக்கு தூரத்து சொந்தமும் கூட” என்றாள் அக்கா.

அமலாவோடு அளவியபடி துறுதுறுவென்று வேலை பார்த்த பையன், அவள் மகனா? திருமணமானவளா? என்று அவன் உள்ளம் சுணங்க, அவன் கேளாமலையே சுமதி நறுமுகையின் கணவன் இப்பொழுது உயிரோடு இல்லையென்ற தகவலை கூறினாள். சசியின் உள்ளம் உவகை கொண்டதை அவன் முகமே காட்டிக் கொடுத்திருந்தது. அதை அக்கா கண்டு கொள்ளும் முன் அங்கிருந்து நழுவி விட்டான்.

சசிதரனுக்கு நறுமுகையை பிடிக்கக் காரணமே அவள் அவன் குடும்பத்தாரோடு ஒன்றிப் போனதும், அவள் மற்றவர்களோடு நடந்து கொண்ட முறையும். யார் என்று தெரியாமல் அவனையும் கவனித்துக் கொண்ட விதம் தான். எதோ ஒன்று அவனை அவள் புறம் ஈர்த்தது. அது காதலால் என்று அவன் எண்ணவில்லை. அவளை திருமணம் செய்து கொண்டால் அவன் குடும்பம் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் என்று மட்டும் நினைத்தான்.

ஆனால் திருமணத்திற்கு அவள் சம்மதிக்க வேண்டுமே!

பொதுவாக பெண்கள் மறுமணம் செய்துகொள்ள விரும்புவதில்லை. இளம் வயது, சிறு குழந்தைகள் இருப்பதை காரணம் காட்டி வீட்டார் மறுமணத்துக்கு சம்மதம் வாங்கி விடுவார்கள். இவளிடம் எவ்வாறு சம்மதம் வாங்குவது?

தாராவின் திருமணம் முடிந்து மூன்று நாட்களுக்குப் பின் வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருக்க, நறுமுகை சுமதியின் வீட்டில் மகனோடு தான் இருந்தாள்.

வரவேற்புக்கு முன் தினம் மாலை மொட்டைமாடியில் காய போட்டிருந்த துணிகளை எடுக்கவென நறுமுகை சென்றிருக்க, சசிதரனும் அவள் பின்னால் சென்றான்.

நறுமுகையே நறுமுகையே

நீயொரு நாழிகை நில்லாய்

செங்கனி ஊறிய வாய் திறந்து

நீயொரு திருமொழி சொல்லாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில்

நெற்றிதரல நீர்வடிய

கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா

அற்றைத் திங்கள் அந்நிலவில்

நெற்றிதரல நீர்வடிய

கொற்றப் பொய்கை

ஆடியவள் நீயா

திடுமென கேட்ட குரலில் திடுக்கிட்டவள் திரும்பிப் பார்க்க, அங்கே சசியின் முதுகு தான் தென்பட்டது. பின்னால் வந்தவனின் அரவம் அவளுக்கு கேட்கவில்லை. அவள் பாட்டில் வேலை செய்ய, என்ன பேசுவதென்று புரியாமல் இவன் பாட ஆரம்பித்திருந்தான்.

இவளை பார்த்து பாடுவதாக இருக்கக் கூடாதே, அதனால் மறுபக்கம் திரும்பி பாடியவன் எதேச்சையாக திரும்புவது போல் திரும்பி, அவளை பார்த்து பொய்யாய் அதிர்ந்து “நீங்க எப்போ வந்தீங்க” என்று அவளையே மிரள வைத்தான்.

“நான் வரும் பொழுது இவர் இங்கதான் இருந்தாரா? என்று குழம்பி நின்றாள் நறுமுகை.

“பன்க்ஷனுக்கு சாரி தான் கட்டுவீங்களா? நிச்சயதார்த்தத்துக்கு சிவப்பு கலர், கல்யாணத்துக்கு நீலம். வரவேற்புக்கு என்ன கலர் என்று சொன்னீங்கன்னா, நானும் மேட்சிங்கா போடலாம்ல”

சசிதரன் தனது தம்பி என்று சுமதி கூறும் பொழுதே அவன் வாழ்க்கை வரலாறையும் கூறியிருந்தாள். தான் அணியும் புடவையை இவன் எதற்காக கவனித்தான்? அவன் கேட்ட கேள்வியில் விழித்தவள் அதன் அர்த்தம் புரியாமல் அவனையே ஏறிட்டாள்.

“ஆக்சுவலி நான் கல்யாணத்துக்கு வரல. இங்க வந்தா தான் தாராக்கு கல்யாணம் என்கிறதே தெரியும். அதான் உங்ககிட்ட கேட்டேன்” என்று வாய்க்குள்ளேயே நகைத்தான்.

அவன் சொன்னதில் உண்மை இருந்தது. நிச்சயதார்தத்துக்கு சிவப்பு நிறமும், திருமணத்துக்கு நீல நிறமும், வரவேற்றுக்கு பச்சை நிறம் என்று ஆடை நிறத்தை தெரிவு செய்து தான் இருந்தனர். இவன் அவளைத்தான் கவனித்தான். அதை சூசகமாக கூறினான். சட்டென்று இப்படி எல்லாம் பேசினால் அதை அவள் எவ்வாறு எடுத்துக் கொள்வாளோ என்று இவ்வாறு விளக்கமளித்தான்.  

அவன் விளக்கமளித்ததும் ஆசுவாசமடைந்தவள் “வரவேற்பிற்கு பச்சை நிறம்” என்று நகர முயல,

“உங்களுக்கு சிவப்பு நிறம் ரொம்பவே நல்லா இருந்தது. அந்த சாரில நீங்க இன்னும் இளமையா தெரியுறீங்க” என்று புன்னகைத்தான்.

அவன் பேச்சு செல்லும் திசை அவளுக்கு பிடிக்கவில்லை “ஆமாம் மேக்கப்ல பேய் கூட தான் அழகாக இருக்கும். நான் கூட இளமையா தான் தெரிந்திருப்பேன். ஒரு பழைய நைட்டில, காலையில மூஞ்சி கழுவாமல் முகத்த பாத்தா தான் அழகாக இருக்கிறோமா? இல்லையா?” என்று தெரியும் என்றாள் இடக்காக

அவள் இவ்வாறெல்லாம் பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவள் இப்படி அவனிடம் பேச வேண்டும் என்று அவன் மனம் எதிர்பார்த்ததோ, என்னவோ அவனுக்கு பிடித்திருந்தது.

“நல்லா தான் இருக்கும். அப்படியே காபியோ, டீயோ கையோடு கொண்டு வந்து, தூங்கிக்கிட்டு இருக்கிற என்னை எழுப்பினா, பார்க்க நல்லாத்தான் இருக்கும்” அந்தக் காட்சி கண்களுக்குள் விரிந்ததை யோசிப்பவன் போல் பாவனை செய்து கண்சிமிட்டி சிரித்தான்.

அவன் எண்ணத்தை அவளுக்கு இதை விட தெளிவாகப் புரிய வைக்க முடியாது. புரிய வைத்து விட்டான். புரிந்து கொண்ட விதமாக நறுமுகையும் விழிகளில் வியப்பையும், திடுக்கிடலையும் அதிகமாகவே காட்டினாள்.

இதற்கு மேலும் அவனிடம் நின்று பேசுவது கூடாது என்று நறுமுகை கீழே செல்ல முயல, கதவை அடைத்தவாறு நின்றிருந்தான் சசி.

“நகருங்க நான் கீழே போகணும்” என்றாள்.

“நான் பேசிக்கிட்டு இருக்கிறேன்” என்றான் இவன்.

“எனக்கு உங்ககிட்ட பேச ஒன்னும்” இல்ல உடனடியாக இவளிடமிருந்து பதில் வந்தது.

எனக்கு இருக்கே. காலையில காபி கொடுப்பீங்களா? டீ கொடுப்பீங்களான்னு சொல்லவே இல்லையே” என்று குறும்பாக இவன் புன்னகைக்க, அவனை முறைத்தாள் அவள்.

“நான் விளையாட்டாக கேட்கல. எனக்கு அம்மா பொண்ணு பாக்குறாங்க. என் அக்கா பிரண்டு நீங்க. மாமாக்கு தூரத்து சொந்தமும் கூட, நீங்களே நல்ல சாய்ஸ்” என்று இவன் பேசிக்கொண்டே போக,

கைநீட்டி அவனை தடுத்தவள், மறுமணம் செய்து கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என்றாள்

அவன் எதிர்பார்த்த பதில் தானே.

“உங்க பையன் கிட்ட பேசிட்டேன். அவன் மெச்சுவாடாக யோசிக்கிறான். நீங்க மறுமணம் செய்து கொள்ள அவனுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை”

“நந்தன் கிட்ட பேசினீங்களா?” ஆச்சரியமாக அவள் இவனை பார்க்க,

“ஆமாம். அடுத்த மாசம் மேற்படிப்புக்காக அவன் வெளிநாட்டுக்கு போறானாமே, அங்க செட்டில் ஆகுறது தான் அவன் லட்சியம், கனவு என்று சொன்னான். அப்போ அம்மா என்று கேட்க, அம்மா வரமாட்டாங்க. அவங்க இஷ்டம் என்று சொன்னான். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா ஓகேவா என்று கேட்டேன். பண்ணிக்கிட்டா சந்தோஷம் என்றான்”

நறுமுகை எதையும் சுமதியிடம் கூறாவிட்டாலும், நறுமுகையின் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் சுமதிக்கு தெரியும். அக்காவிடம் இருந்து முழுவதையும் அறிந்து கொண்ட பின் சசிதரன் முதலில் பேசியதே நறுமுகையின் புதல்வன் நந்தனிடம் தான். அவன் கூறியதை நறுமுகையிடம் கூற அவள் கண்கள் கலங்கி விட்டிருந்தன.

அவள் கண்களை துடைத்து விட பரபரத்த கைகளை கஷ்டப்பட்டு கட்டுக்குள் வைத்திருந்தவன் அவள் புறம் நான்கடி எடுத்து வைத்தவாறே “தாரா கல்யாணம் முடியட்டும், நான் எங்க வீட்ல பேசலாம் என்று இருக்கிறேன். அப்படியே உங்க வீட்டுல” என்றவனை ஆயாசமாக பார்த்துவிட்டு கதவடைந்து நின்றவன் வழி விட்டதும் அமைதியாக அங்கிருந்து சென்றாள் நறுமுகை.

நறுமுகையின் வாழ்க்கையில் பிறந்தது முதல் பிரச்சினை தான். பெற்றவர்கள் யார் என்று தெரியாது. குழந்தை இல்லாமல் பல வருடங்களாக இருந்த சுந்தரேசன்-வான்மதி தம்பதிகள் இவளை தத்தெடுத்திருக்க, இவள் வந்த நேரம் அடுத்த சில மாதங்களில் வான்மதி கருவுற்று ஒரு பெண் குழந்தையையும் அடுத்த இரண்டு வருடங்களில் ஒரு ஆண் குழந்தையையும் பிரசவித்தாள்.

சொந்த பிள்ளைகள் வந்ததால் இவள் மீதி இருந்த பாசம் குறையவில்லை. மாறாக அச்சம் மேலோங்கி இருந்தது. எங்கே தத்து பிள்ளை என்று இவளை சரியாக கவனிக்காமல் விட்டு விடுவார்கள் என்று ஊரும், சொந்தபந்தங்களும் பேசி விடுவார்களோ என்ற அச்சம் அந்த தாய், தந்தையர்களை வதைக்க, நறுமுகைக்கு எல்லாம் அதிகமாக தான் செய்தார்கள். அதுவே அவளை அவர்களிடமிருந்து அந்நியமாக உணர வைத்ததை அவர்கள் உணரவில்லை.

தங்கை இன்பாவுக்கு ஒரு வரன் வந்தது. ஆனால் நறுமுகையை வைத்துக்கொண்டு இளையவளுக்கு எவ்வாறு திருமணம் செய்வது என்ற யோசனை பெரியவர்களுக்கு கவலையை கொடுக்க, நறுமுகைக்கு முதலில் திருமணம் செய்து வைக்க தீர்மானித்தனர்.

நறுமுகைக்குப் பார்த்த மாப்பிள்ளை தேவேந்திரனும் வசதியான குடும்பம் தான். அழகாகவும், பண்பானவனாகவும் இருந்தான். என்ன ஒன்று நறுமுகையை விட பத்து வயது பெரியவனாக இருந்தான். பெற்றோரின் கவலையை போக்க அவள் அதை பெரிதாக கருத்தில் கொள்ளாமல் திருமணத்துக்கு சம்மதம் கூறி விட்டாள்.

திருமணத்துக்கு பின்பு நறுமுகை படிப்பை தொடரக்கூடாது என்ற கட்டளையோடு அவளோடு வாழ ஆரம்பித்தான் தேவேந்திரன். திருமணமாகி முதல் வருடமே நந்தன் பிறந்து விட்டான்.

தேவேந்திரனுக்கு சகோதரிகளுக்குப் பின் தான் மனைவி என்ற நிலையில் வீட்டை விற்று தங்கையின் கடனை அடைத்தது கூட நறுமுகைக்கு பிறகு தான் தெரிய வந்தது. அவன் செய்யும் தொழிலிலும், குடும்ப விஷயங்களிலும் இவள் கருத்து சொல்ல முடியாது. அவர்களுக்கு இடையில் இருந்த வயது வித்தியாசம் காரணமாக அவளை குழந்தை போல் நடாத்தலானான். அவளுக்கு ஒன்றுமே தெரியாது. புரியாது என்று அவளிடம் எதையுமே அவன் கூறுவதுமில்லை. பகிர்ந்து கொள்வதுமில்லை

தனக்கு ஒரு குடும்பம் இருக்கிறதை மறந்து, அக்கா தங்கைகளின் பிரச்சினைகளை சரி செய்ய முயன்று தேவேந்திரன் தொழிலையும் சரிவர கவனிக்காமல் கடனாளியானான். நறுமுகையின் நகைகள் பறிபோயின. அதையும் அவள் கேட்கவில்லை இறுதியாக தனக்கு இந்த நிலைமை வரக் காரணமே நறுமுகை தான் என்று குற்றம் கூறினான் தேவேந்திரன்.

நந்தனுக்கு பன்னிரண்டு வயது இருக்கும் பொழுதே தேவேந்திரன் மன உளைச்சலால் மாரடைப்புக்கு உள்ளாகி இறந்து விட்டான்.

“சீதனத்தோடு தானே உன்னை தேவேந்திரனுக்கு திருமணம் செய்து கொடுத்தோம். ஏதாவது பிரச்சினை என்றால் எங்களிடம் சொல்ல மாட்டியா?” பெற்றோர்கள் அவளை கடிய,

தங்களுக்கு பணம் காய்க்கும் மரமாக இருந்த தேவேந்திரன் இறந்ததற்கு காரணமே நறுமுகை என்று தேவேந்திரனின் சகோதரிகள் நறுமுகையோடு சண்டை இடலாயினர்.

கணவன் இறந்தபின் நறுமுகை தங்கை வீட்டில் தான் வசிக்கின்றாள். தங்கை கணவனும் தங்கமானவர் தான். தம்பியிடம் கூட செலவுக்கு பணம் வாங்கக் கூடாது என்று அவளை ஒரு சகோதரியாகக் கருதி அவளுடைய செலவுகள் அனைத்தையும் தங்கை வீட்டுக்காரர் தான் பார்த்துக் கொள்கிறார். ஆனால் அவன் குடும்பத்தார் இவளுக்கு செலவு செய்வதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பார்களா? அவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று குடும்ப விழாக்களில் இவளிடம் தானே குத்தல் பேச்சுக்களை வீசுகிறார்கள்.

நந்தன் ஒன்றும் குழந்தை அல்லவே. சித்தப்பாவோடு அன்னையை சம்பந்தப்படுத்தி அவர்கள் பேசுவதை கேட்கும் பொழுது அவன் இரத்தம் கொதிக்காதா? தந்தையுடனான அன்னையின் வாழ்க்கை எவ்வாறானது என்று அவனுக்கும் தெரியும். அதனால் மறுமணத்தை பற்றி சசி கேட்ட உடன் நறுமுகையின் பாதுகாப்பை கருதி தனது சம்மதத்தை கூறி இருந்தான். அது நறுமுகைக்கு புரிந்தது.

தனக்கு இருக்கும் பிரச்சினைக்கு மறுமணம் தான் தீர்வா? ஒரு மனம் சரி என்று கூற, ஒரு தடவை பட்டது போதாதா? மீண்டும் அதே பாதையை தேர்வு செய்ய துணிந்து விட்டாயே முட்டாள் என்றது மறுமனம்.

நினைப்பதெல்லாம் நடந்து விடாதே!

என்னதான் தோழியாக, சகோதரியாக சுமதி பழகினாலும் தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததெல்லாம் அறிந்த பின், தனது தம்பி என்று வரும் பொழுது தன்னை தேர்வு செய்வாளா? நிச்சயமாக மாட்டாள் என்று தான் நறுமுகைக்கு தோன்றியது.

அவன் வீட்டார் சம்மதிக்காதது போல், அவள் வீட்டிலும் கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள். ஒரு பெண்ணாக நறுமுகையின் மனம் கலவையாக அச்சம் கொண்டது. 

சசியின் மனதில் வீணான ஆசைகளை வளர விடக்கூடாது என்று வரவேற்பு முடியும் வரையில் அவனை சந்திப்பதை தவிர்க்கலானாள் நறுமுகை. ஆனால் சசிக்கும் நந்தனுக்கும் இடையில் நல்ல தோழமையே உருவாகி இருந்தது.

“நீ முகிய பத்தி துருவித் துருவி கேட்கும் போதே நெனச்சேன் இப்படி வந்து நிற்கும் என்று” தாராவின் வரவேற்பு முடிந்து அவளை கணவனின் வீட்டில் விட்ட மறுநாளே சசிதரன் தன் விருப்பத்தை வீட்டாரிடம் கூறியிருக்க சுமதி பெரிதாக மறுப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால் அன்னையான அன்புக்கரசி விருப்பமின்மையை அப்பட்டமாகவே முகத்தில் காட்டியதோடு, நறுமுகை அவள் மகனை வளைத்து போட பார்த்தது போல் பேசினாள்.

“பார்த்து பேசுமா… அவ உன் மருமகளாக போறவ. நீயே தப்பா பேசக்கூடாது” என்றான் சசி. அவன் முடிவில் அவன் எவ்வளவு தீவிரமாக இருக்கிறான் என்று அவன் அன்னையை அழுத்தமாக கண்டித்த விதத்திலேயே சுமதியும், விஜயனும் புரிந்து கொண்டனர்.

விஜயனின் தந்தை நறுமுகையின் வீட்டில் பேச, சாம்பிராதாயமாக பெண் பார்க்க சென்றனர் இவர்கள்.

பெண் பார்க்க சென்ற பொழுது இவனோடு சென்றவர்கள் சாப்பிட்டவாறே ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, இவன் எண்ணம் முழுவதும் அவளோடு தனியாக பேசும் தருணத்தில் நிலைத்திருந்தது. அவள் சம்மதத்தை அவன் வாய் வார்த்தையாக பெற வேண்டுமே!

அவளோடு தனியாக பேசுமாறு இருவரையும் மாடிக்கு அனுப்பி வைத்தார்கள் அன்னையர்கள்.

நறுமுகையை பற்றி அக்கா சுமதி கூறியது தான் சசிதரனுக்கு தெரியும். அதைவிட ஏதாவது இருக்கிறதா என்று அவள் தான் கூற வேண்டும். அவன் வாழ்க்கையிலும் யாரிடமும் கூறாத அத்தியாயம் ஒன்று இருக்கிறது. யாரிடமும் பகிர முடியாத அத்தியாயம் அது. நறுமுகையிடம் கூட கூற முடியாது. கூறினால், அதை அவள் எவ்வாறு எடுத்துக் கொள்வாளோ தெரியாது. ஆனால் கூறித்தான் ஆக வேண்டும்.

மணமுறிவு ஆனதால் மனமுறிவுக்கு உள்ளாக்கப்பட்டவன் மதுவையும் மாதுவையும் கொண்டுதான் மனதை ஆற்றினான். அதற்காக அவன் அவற்றுக்கு அடிமையானான் என்று சொல்லிட முடியாது. வார இறுதியில் பப்புக்கு சென்று அளவாக மது அருந்துபவன் அங்கே இருக்கும் ஏதாவது ஒரு பெண்ணிடம் பேசி பழகி உறவு கொள்வான். அன்றோடு அந்த பெண்ணின் உறவையும் முறித்துக் கொள்வான். அவன் வாழ்க்கை இவ்வாறு இருந்ததால் திருமணம் என்ற ஒன்றைப் பற்றி அவன் இதுவரை சிந்தித்துப் பார்க்கவே இல்லை.

இதுநாள்வரையில் அவனது வாழ்க்கை எவ்வாறிருந்தது என்பதை மெதுவாக அவளிடம் கூறி, இனி உன் முறை என்று அவள் முகம் பார்த்தான்.

இந்த திருமணத்திற்கு அவனுக்கு முழு சம்மதம். அதனால் தான் ஒளிவு மறைவில்லாமல் எல்லாவற்றையும் ஒப்புவித்தான் என்பது புரிய மென்னகை செய்தாள் நறுமுகை. அக்கணம் அவனை அவளுக்கும் பிடிக்கத்தான் செய்தது. ஆனால் ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை.

இப்படி புன்னகை செய்தால் என்ன அர்த்தம்? என் கேள்விக்கு பதில் கிடைக்குமா? என் மனதில் என்ன இருக்கிறது என்று இவள் புரிந்து கொள்வாளா? அவளையே பார்த்திருந்தான் சசிதரன்.

“நான் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு கல்யாணம் பண்ணிக்க வந்து நின்னா, நீங்க என்ன எப்படி பார்த்திருப்பீங்க” என்று அவனையே கேட்டாள்.

“நிச்சயமாக ஏற்றுக்கொள்வது கஷ்டம் தான். ஆனா என்னைப் போல வெளிநாட்டுல இருக்குற, வாழ்ந்த, வாழ்க்கையை புரிஞ்சிகிட்டு ஒருத்தர் கண்டிப்பா உங்கள புரிஞ்சிப்பாரு” என்றான்.

அவனது பதிலை அவள் ஏற்றுக் கொண்டதாக மென்னகை செய்தவள் “திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டு வேலையை விட்டு இங்கயே இருந்துடுறதாக சுமதி அக்கா சொன்னாங்களே! உண்மையா?”

“இவள் தன்னிடம் என்ன பதில் எதிர் பார்த்து இந்தக் கேள்வியை கேட்டாள்? திருமணத்திற்கு பின்னும் மது, மாது என்று வாழ எண்ணுவதாக தப்பார்த்தம் கொண்டாளோ?” அவள் தன்னை தவறாக எண்ணி விடக் கூடாதே என்று அவன் உள்ளம் அவனையறியாமல் வேண்டலானது.

அவள் கண்களுக்குள் ஊடுருவி பார்வையை படித்தவன் “ஆமாம்” என்று தலையசைத்ததோடு “என்னையே பேச விட்டு வேடிக்கை பார்க்க எண்ணமோ? கீழ வாங்க என்று கூப்பிட முன்னாடி நீ சொல்ல வேண்டியதை சொல்லிடு” என்றான்.

தன் சொந்த விஷயங்களை சட்டென்று யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத நறுமுகை பெண்பார்க்க வந்த அன்றே இவனிடம் கூறுவாளா? நம்பிக்கை என்ற ஒன்றில் தானே திருமணமே நிலைக்கிறது.

“எல்லாமே இன்னைக்கி பேசிட்டா கல்யாணத்துக்கு பிறகு என்ன பேசுறது?” தன்னுடைய சம்மதத்தையும், மனநிலையையும் ஒரே வாக்கியத்தில் நறுமுகை கூற, புன்னகைத்தான் சசிதரன்.

கூடிய விரைவில் இருவரும் திருமணத்தில் இணைய போகிறார்கள். ஆனால் இருவருக்கிடையிலும் காதல் மலருமா? இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் பொழுது காதல் மலர்ந்து விடும்.