வயது – 9
இரவு 10:30 மணி தன் அறையின் பால்கனியில் தீவிர சிந்தனையில் சிகரெட் பிடித்துக்கொண்டு இருந்த செழியனின் கையில் நெருப்பு பட்டவுடன் தான் சுயநினைவுக்கு வந்தான்.
வெளியில் அவர்கள் செய்யும் சோதனைகளை பார்க்கவும் தாங்கவும் முடியாமல் தான் அவன் அறைக்கு வந்தது.ஆனால் அவன் அறையில் செய்திருக்கும் அலங்காரத்தில் அவனுக்கு மூச்சு முட்டிவது போல் இருந்தது.
அதிலும் கல்யாண மண்டபத்திலிருந்து அனுராதாவின் வீட்டிற்கு வந்ததிலிருந்து சொந்தங்களை வைத்து கொண்டு செய்யும் சடங்குகளும்,பேசும் பேச்சும்,கேலியும் என்று தன்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் செய்தவை எல்லாம் அவனை எரிச்சலின் உச்சத்திற்கு அழைத்து சென்றது.
ஹாலில் அவர்களின் கூத்து தாங்க முடியாமல் அறைக்கு கிளம்பியவனை அரவிந்த் தன்னுடைய மாமன்முறை காரர்களிடம் “மாமாக்கு அவசரத்தை பாருங்க” என்று கிண்டல் செய்து சிரிக்க,மேலே ஏறிய அவனின் காதில் விழுந்தது இந்த பேச்சு,சில படிகள் ஏறியவன் திரும்பி தன் நெற்றிக்கண்ணை திறந்து அவனைப் பார்க்க, அந்த முறைப்பில் “அம்மா கூப்புடுறாங்க” என்று மற்றவர்களிடம் சமாளித்து விட்டு அவன் பார்வையிலிருந்து தப்பித்தான்.
அவன் மனதில் கிளர்ந்து எழும் எரிச்சலை விட கையில் சூட்டினால் உண்டான எரிச்சல் பெரிதாக அவனுக்கு தோன்றவில்லை.யார் விட்ட சாபமோ அவன் இன்னும் கடுப்பேற்றும் விதமாக அவன் அலைபேசி பிரகாஷின் அழைப்பை ஏற்றுக்கொண்டு சினுங்கியது.இருக்கும் மனநிலையில் யாருடனும் பேச வேண்டாம் அமைதியாக இருப்பது உசிதம் என்று எண்ணி அவன் போனை அட்டென்ட் செய்யாமல் கட் செய்து விட ,சில நொடிகள் கழித்து மீண்டும் பிரகாஷிடம் இருந்து அழைப்பு வர ஒரு விதமான சலிப்புடன் ஆன் செய்தவன்.
“என்னடா வேணும்” என்றான்.
“ஏன் மாப்பிள…முக்கியமான நேரத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” என்று வேறு விதமாக அவன் கேட்க
அவன் எந்த விதமாக எண்ணி இருப்பான் என்பது செழியனுக்கு அத்துப்படி ஆச்சே “செருப்பு பிஞ்சிடும்” என்று வார்த்தையை கடித்து துப்பினான்.
” சரி நம்ம நண்பனுக்கு வாழ்த்துவோம் கால் பண்ணேன்…உனக்கு என்னோட அட்வைஸ் தேவை இல்லாதது தான்…ஒரு காலத்தில நீயே ஒரு ப்ளேபாய்,காதல் மன்னன்” என்று பேசிய அவனின் குரலை இடை மறித்தது செழியனின் குரல்.
“நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்…போனை வை…நான் செம டென்ஷன்ல இருக்கேன்”
” புரியுதுடா…இந்த சிச்சுவேஷன்ல எல்லாருக்கும் ஒருவிதமான டென்ஷன் இருக்கத்தான் செய்யும்” என்ற பிரகாஷின் பேச்சில் காண்டான செழியன்
“மரியாதையா போன் வைக்கிறியா?! இல்ல நேர்ல வந்து பல்லை ஒடைச்சி கைல கொடுக்கவா”
“ஓகே ஓகே…கூல் டா” என்றவன் “டேய் செழியா…ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்” என்க
“சொல்லி தொலை”
“ஆல் த பெஸ்ட்” என்று கூறிய பிரகாஷை பச்சை பச்சையாக செழியன் திட்ட ஆரம்பிப்பதற்குள் அந்த பக்கம் இணைப்பை துண்டித்து இருந்தான் பிரகாஷ்.
தன் நண்பனின் வாழ்வு இனிமேல் வசந்தமாக மாறிவிடும் என்ற ஆனந்தமும்,தங்களுக்கு பழைய செழியன் கிடைத்து விடுவான் என்ற மகிழ்ச்சியும் சேர்ந்து தன் நண்பனை சீண்டி பார்க்க எண்ணி போன் செய்தான் பிரகாஷ்.
ஆனால் அதற்கு நேர்மாறாக கோபத்தோடு பால்கனியிலிருந்து உள்ளே வந்தவனின் பார்வை மேஜை மேல் இருந்த பத்திரிக்கை மேல் படிந்தது.
அதில் “செழியன் வெட்ஸ் ஆராதனா ” என்று இருக்க “சே!!!” என்று அப்பத்திரிக்கையை விசிறி அடித்தான்.
“எப்படி??? எப்படி சாத்தியமாயிற்று எவரையும் அனுமதிக்காத தன் வாழ்க்கை வட்டத்துக்குள் யாரோ ஒருத்தி வந்துவிட்டாள்” என்று அவன் மனம் உள்ளுக்குள் கத்தியது.அதுவும் அவன் பெயரை தாங்கிகொண்டு வந்துவிட்டாள். எப்பொழுதும் அவள் சொல்வது போல் இப்போது அவன் சொல்லி பார்த்துக்கொண்டான் தங்கள் பெயரை சேர்த்து கொண்டு “ஆராதனா செழியன்”.
திடீர் என்று அவன் மனதில் ஒரு பயம் கவிழ்த்தது. ஓரு வேளை கதைகளில் வருவதுபோல் அவள் குடும்ப பிரச்சனை , பணத்தை பிரச்சனையை மையப்படுத்தி அக்காவோ இல்லை அவளின் குடும்பமோ அவளை திருமணம் செய்ய ஒத்துக்க வைத்தியிருப்பார்களோ என்றது அவனின் ஒரு மனம்.
இன்னோரு மனமோ ” டேய் லூசு !!! ஒவ்வருமுறையும் நீ தான் பலி குடுக்க போற ஆடு
மாதிரி இருந்த அவ நல்லா உன்னை வச்சு செஞ்சா…பதட்டத்துலயும்,பயத்துலயும் ஏன்டா இப்படி கிறுக்கு தனமா யோசிக்கிற ” என்று காரி துப்பி தன் பங்குக்கு அசிங்கப்படுத்தியது.
இனி தான் நடந்தவைகளை யோசிப்பது இறந்தவனுக்கு ஜாதகம் பார்ப்பது போல் அபத்தமாக இருக்கும் என்று நிதர்சனம் புத்தியில் உரைக்க,தன்னுடைய வாழ்க்கை இனிமேல் அவளுடன் எப்படி இருக்கும்?! அனைத்தையும் மறந்து தன்னால் மற்றவர்களை போல் சராசரி குடும்ப வாழ்க்கை வாழ முடியுமா?! என்று பல கேள்விகளுக்கு அவன் சுயஅலசலில் ஈடுப்பட அதற்குள் அவன் யோசனையின் நாயகியே பால் சொம்புடன் வந்துவிட்டாள் அவன் அறைக்கு.
வெண்பட்டு புடவையில் , தலை பின்னி பூ வைத்து , கண்களில் அடர்த்தியாக மையிட்டு , உதட்டில் லேசாக சாயம் பூசி, நெற்றியில் சிறிதாக பொட்டு வைத்து நெற்றி வகிடில் அடர் சிவப்பு குங்குமம் இட்டு,சில நகைகள் மட்டும் அணிந்து இருந்தாள்.எல்லாத்திற்க்கும் சிகரம் வைத்தது போல் அவள் கழுத்தில் அவன் கட்டிய பொன்மஞ்சள் தாலி அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பதாய்.
ஏனோ அவளை பார்த்ததும் தன் முகத்தை திருப்பி கொண்டான்.ஒரு வகையான பதட்டம் அவனை சூழ்ந்து கொண்டது.பின் தலையை அழுத்த கோதி கொண்டு தன்னை சமநிலைக்கு கொண்டுவந்தான்.
அவன் தன்னை நிலைப்படுத்தி கொள்ளுவதற்குள் அவன் அருகில் வந்தவள் பால் சொம்பை
அருகில் இருந்த மேஜை மேல் வைத்து விட்டு திடீரென்று அவன் கால்களில் விழ
அவனோ “ஏய் !!॥எனக்கு இந்த சம்பிரதாயம் எல்லாம் பிடிக்காது ” என்றான் எரிச்சல் மிகுந்த குரலில் .
“ஆங் …பத்திரிக்கை கிழே விழுந்து இருந்தது அதை எடுக்க தான் கீழே குனிஞ்சேன்” என்றாள்
தன் மைஇட்ட கண்களை சுருக்கி வாய் அடைத்து போவது வழக்கம் போல் செழியனின் முறையானது.
நிதானமாக கீழே விழுந்து கிடந்த பத்திரிக்கைகளை மேலே மேஜை மேல் எடுத்து வைத்து,ஒரு சிறு சிரிப்புடன் செழியனை பார்த்து “அப்பறம்?!” என கேட்டாள்.
செழியனோ எதுவும் புரியாமல் அவளை பார்க்க “இல்லை நீங்களே இதான் நடக்கும், இல்ல இதான் நடக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்க உங்க பேச்சிலே தெரியுது…அதான் இப்போ நெஸ்ட் என்ன நினைச்சிங்க கேட்டேன்…இல்லைனா நீங்க நினைச்ச மாதிரியே முதல்ல இருந்து நடந்து வந்து உங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கட்டுமா?!” என்று தனக்குள் எழுந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கி கொண்டு அவனிடம் அப்பாவியாக கேட்டாள் ஆராதனா.
அவனது மனமோ “திமிரு !!! உள்ளக்காலியிருந்து உச்சதலை வரைக்கும் உடம்பு முழுக்க இவளுக்கு திமிரு,ஏகதாளம் தான்” என்று எண்ணியபடி அவளை முறைத்து கொண்டே “என்ன நக்கலா?!” என்றான்.
“சே…சே…சத்தியமா இல்லைங்க” என்று கூறியபடி அவன் ஒருத்தன் இருப்பதை கண்டுகொள்ளாது போல் அவன் கட்டிலின் ஒருபுறம் அமர்ந்து தூங்குவதற்கு ஆயுதமாகி கொண்டிருந்தாள்.
‘அவபாட்டுக்கு வந்தா என்னமோ இது அவ ரூம் மாதிரி அவ வேலையா பார்த்துகிட்டு இருக்கா…இது என் ரூமா இல்ல அவ ரூமா? ‘ அவனின் மனசாட்சியோ “டேய் !!! செழியா அவ உன்னோட பொண்டாட்டி டா…இனிமேல் உனக்கு உரிமை உள்ளத்துல எல்லாம் அவளுக்கும் உரிமை உண்டு” என்றது.
‘நீ மூடு…அவளுக்கு முதல்ல என்கிட்டயும் ,என்னோட சம்பந்தபட்ட எதுலயும் நான் கொடுக்காத வரைக்கும் உரிமை இல்லைனு புரிய வைக்கணும்’ என்று உறுதியாக இருந்தான்.பாவம் சூடு கண்ட பூனை அல்லவா,தன் நிலையை மாற்றுமா என்ன?
அதை இப்போவே செய்து விடுவதற்கு எத்தனித்த வேளையில் “என்னங்க” என்று அவளே அழைத்தாள் .
“இன்னைக்கு காலையில சீக்கிரம் எழுந்தது, மண்டபத்துல வேற ஹோம புகை முன்னாடி இருந்தது ,ரொம்ப நேரம் நின்னது , அலைச்சல் அது இதுனு ரொம்ப டையர்டா இருக்கு…தூக்கம் வேற கண்ண கட்டுது.அதனால நான் தூங்கபோறேன் இந்த லைட்ட ஆஃ ப் பண்ணிடுங்க இல்ல உங்களுக்கு இப்படி லைட்டா போட்டு நிக்கிறது தான் பிடிக்கும்னா ப்ளீஸ் பால்கனி லைட்டா போட்டு நின்னுக்கோங்க”
அவனுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது தன்னிடமா ஒருத்தி இப்படி பேசியது.அதுவும் இன்று காலையில் தான் திருமணம் செய்த கணவனாக இருந்தாலும் இங்கிதம் இல்லாமல் என்று எண்ணினான்.
எண்ணத்திலிருந்து அவன் வெளிவந்து பார்க்கும்போது நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்ற ரீதியில் அவள் தூக்கத்தில் தேவலோகத்தை அடைத்து விட்டாள்.
பின் சிறிது நேரம் நின்று அவளைபார்த்து ஒரு பெருமூச்சை வெளியிட்டு விட்டு அறையின் விளக்கை அணைத்து விட்டு அணைக்க வேண்டிய மனைவியை அணைக்காமல் கட்டிலின் மறுப்புறம் சென்று படுத்தான்.
அவன் மனம் முழுவதும் பழைய கசப்பான நினைவுகளும் இனி தான் வாழ போற வாழ்க்கையின் எண்ணமும் என்று கலந்து கலந்து ஓடிக்கொண்டிருக்க இதற்கு மாறாக தூங்கிவிட்டதாக அவனால் நினைக்க பட்டவளின் மனம் முழுவதும் சுகமான பழைய நினைவுகளே இருந்தது.
இந்த இரண்டு நினைவுகளை அப்பொழுதே பகிர்ந்து கொண்டு இருந்தால் பின்னால்
வர இருக்கும் பல பிரச்சனையை தவிர்த்து இருந்திருக்கலாம்…விதி யாரைவிட்டது!!!
காலை கதிரவன் தன் ஒளியை பரப்பி கொண்டிருந்த வேளையில் பால்கனியில் நின்று ஈரம் சொட்டும் தலைமுடியுடன் அன்று பூத்த மலர் போல் அப்பொழுதை ரசித்து கொண்டிருந்தாள் ஆராதனா.
அவளை ரசிக்க வேண்டியவனோ இரவு தூக்கத்தை காவு கொடுத்துவிட்டு நடுசாமத்தில் தான் உறங்கினான் .பின்னால் திரும்பி பார்த்தவளின் மனமோ “ஐயோ !!! நேத்து இவர முந்திகிட்டு பேசி பிரச்சனை இல்லாம தூங்குறதுகுள்ள உயிரு போச்சு… ஒரு நாளுக்கே இப்படி கண்ண கட்டுதே !!! என்னால இவரை சமாளிக்க முடியுமா?” என்று எண்ணி பெருமூச்சு விட்டாள் .
அவள் விட்ட மூச்சு அவனை திண்டியதோ என்னவோ அவனிடம் அசைவு தெரிய
ஆரம்பித்தது .சட்டென்று ஆராதனா பின் நகர்ந்து உள் அறைக்குள் புகுந்துகொண்டாள். எழிய சந்தனம் கலரில் அடர் பச்சை வண்ண போர்டர் கொண்ட காட்டன் புடவை அணித்து மெல்ல ஒப்பனை செய்து கொண்டு அறையைவிட்டு கீழே வந்தாள்.
ஹாலில் யாரும் இல்லாமல் இருக்க யோசனையுடன் சமையலறை பக்கம் சென்றாள். அவள் பின்புறத்திலிருந்து “ஆரா” என்றஅனுராதாவின் குரல்அவளை நிறுத்தியது .
மங்களகரமான முகத்துடன் அனுராதா அவளை புன்னகையுடன் எதிர்கொண்டாள்.அந்த புன்னகை அவள் முகத்திலும் மெல்லிய புன்னகை கொண்டுவர வைத்தது .
“உங்கள பார்க்க தான் வந்தேன் அண்ணி ” என்று சொல்லி கொண்டே அனுராதா அருகில் சென்றாள்.
“எத்தனை தடவை சொல்லுறது அம்மானு கூப்பிட்டு” என்றார் சிறு கோபத்துடன் அனுராதா .”சாரி அம்மா!!! அம்மானு அவர் முன்னாடி சொல்லமுடியாது ஆனா மத்த நேரத்துல அம்மானே கூப்புடுறேன்” என்றாள்.
அவள் எதற்காக இப்படி சொல்லுகிறாள் என்று அவருக்கு புரிந்தது.எங்கே அம்மா என்று அவள் அழைத்தால் செழியனுக்கு வயது வித்தியாசத்தையோ இல்லை தான் அனிஷாவின் வயதை ஒட்டியவள் என்ற எண்ணத்தையோ கொடுத்தால் அது அவனுக்கு அசவுரியமாக இருக்க கூடும்.மேலும் தங்களுக்குள் அந்த அழைப்பே பெரும் விரிசலாக அமைய கூடுமோ என்ற பயத்தால் அதை தவிர்த்தாள்.
அதை புரிந்து கொண்ட அனுராதா “உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க செழியன் குடுத்து வச்சு இருக்கணும்.ஒரு வேலை இது கடவுள் போட்ட முடிச்சு போல அதான் அவன் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதும் ,நீ என்னை வந்து பார்த்ததும் ஒரே நேரத்துல நடக்கணும்” என்று சொல்லி மெல்ல அவள் கன்னம் பற்றி செல்லமாக தட்டி கொடுத்தார்.
ஆராதனாவிற்கு கண்கள் கலங்கியது “சாரி மா !!! உங்களையும் இந்த பிரச்சனைல சேர்த்துவிட்டுடேன்”
“அப்படி எதுவும் இல்லை ஆரா…ஏன் இப்படி நினைக்கிற?”
“இல்லமா எனக்கு பயமா இருக்கு அவருக்கு தெரிஞ்சா…என்னால எல்லாத்தையும் சரி பண்ணி
மாத்த முடியுமா?”
“எல்லாம் நல்லதுக்குனு நினை அப்படி நினைச்சா எல்லாம் நல்லதா நடக்கும்”
“நாளைக்கே என்ன தேடி …” என்று சொல்லும்போதே அனுராதா அவளின் கையை அழுத்தி பிடிக்க அவளின் பேச்சு நின்றது.
செழியன் தங்களை நோக்கி வருகிறான் என்பதை அவனின் அழுத்தமான காலடியோசையில் கண்டுகொண்டாள்.
வந்தவன் முகத்தில் எப்பொழுதும் தன் தமக்கையை பார்க்கும் போதாவது இருக்கும் சின்ன சிரிப்பு கூட இப்போது இல்லாமல் இருகி போய் பாறையாக இருந்தது.அப்போதுதான் பெண்கள் இருவரின் கண்ணில் பட்டது அவன் அலுவலகம் செல்ல புறப்பட்டு வந்துள்ளான் என்பது.
பின் அனுராதா ஆராதனாவிடம் திரும்பி “செழியனுக்கு காபி போட்டு கொண்டு வா மா” என்றார் பொருள் பொதிந்த பார்வையுடன்.
அதன் அர்த்ததை உணர்த்து கொண்டு தப்பி தவறி கூட செழியனின் பக்கம் பார்வையை கொண்டு செல்லாமல் சமையல் அறைக்கு சென்றாள். பின் அவன் பக்கம் பார்வை செலுத்தினால் அவன் கனல் கக்கும் பார்வைக்கு அவள்தானே இரையாவாள்.
அனு மெல்ல அவன் பக்கம் திரும்பி “செழியா…” என்று ஆரம்பிபதற்குள் “அக்கா ப்ளீஸ் !!! நோ மோர் அட்வைஸ் நோ மோர் ஆர்குமேன்ட்ஸ் ” என்று அவர் தொடங்கும் போதே பேச்சுக்கு அவன் முற்றுபுள்ளி வைத்துவிட்டான் .
“நான் ஆபீஸ் போகனும் இன்னைக்கு இம்போர்டன்ட் மீட்டிங் இருக்குகா அதுக்கு போகனும் “
என்றான் .
அனுராதா அழுத்தமான பார்வையுடன் “இது பெர்மிசன்காக சொல்லுறியா?! இல்ல இன்போர்ம் பண்றியா ?!” என்றார் .
அதற்குள் ஆராதனா காப்பியுடன் செழியனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.செழியனின் பக்கத்தில் வந்து “காபி” என்றாள் மெல்லிய குரலில்.அவனோ அவள் ஒருத்தி இல்லாதது போல்
“லஞ்ச்க்கு வர ட்ரை பண்ணுறேன் கா” என்று சொல்லி அவளை கண்டுகொள்ளாமல் சென்றான்.
அவர் நினைத்தால் அவனை நிறுத்தி ஆராதனாவிடம் சொல்லிவிட்டு செல் என்றோ இல்லை போகாதே என்று அவனை நிறுத்தவோ முடியும்.அவர் அவ்வாறு செய்தால் அவன் கோபத்தை யார் தாங்குவது எப்படியும் தன்னிடம் காட்ட மாட்டான் ஆராதனாவையே அது சென்று தாக்கும்,இருக்கும் நிலைமையில் இது வேறு எதற்கு என்று தான் அவள் அவன் போக்கில் விட்டுவிட்டாள் .ஆராதனாவிற்கு எப்படி அறுதல் சொல்லுவது என்று நினைக்கும் போதே
“அப்பாடா” என்று ஒரு பெருமூச்சுடன் சொல்லி சோபாவில் சாய்ந்தாள் ஆராதனா.
“என்னாச்சு ஆராதனா ” அவன் எதுவும் சொல்லாமல் போனதற்கு கவலை படுவாள் என்று நினைக்க அவளோ அப்பாடா என்று சொல்லுகிறாளே என்னும் குழப்பத்தில் எதுவும் புரியாமல்
“ஏற்கனவே அவரு என்மேல கொலைவெறியில இருக்காரு…இதுல நான் போட்ட காபி குடிச்சி இன்னும் கடுப்பாகி என்னை டிவோர்ஸ் பண்ணிட்டா…அப்புறம் என்னோட நிலைமை” என்றாள் குரலில் சோகத்தை பூசிக்கொண்டு முகத்தில் குறும்பு புன்னகையுடன்.
முறைக்க நினைத்தும் சிரிப்பு தான் வந்தது அனுராதாவிற்கு அவள் காதை செல்லமாக திருகி “உன்னை…அவன் கோபம்மா போறனேன்னு வருத்தபடாமா அப்பாடான்னா சொல்லுற இரு என் தம்பி வரட்டும்…அவன் கிட்டயே சொல்லுறேன்…இப்போ புரியுது நீங்க எவ்ளோ எதிர்
துருவங்களா இருக்கீங்கன்னு”
“ஐயோ வலிக்குது விடுங்கமா… சொல்லி இருங்காங்க ” என்றாள் ஆராதனா பெருமையுடன்.
இந்த ஃபிசிக்ஸ் விதிமுறை ஆராதனா – செழியனின் கெம்மிஸ்ட்ரிக்கு பொருந்துமா?!
அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த செழியனின் நினைவுகள் பல திசைகளை நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்போது அவனின் நினைவுகளை கலைக்க என்று அவனின் போனிற்கு அழைப்பு வந்தது .
மொபைலை காதில் வைத்தவுடனே “டேய்!!! எங்கடா இருக்க…இப்ப தான் அக்கா சொன்னாங்க நீ இன்னைக்கும் ஆபீஸ் கிளம்பிட்டியாமே …ஏன்டா உன்னை எல்லாம்” என்று பிரகாஷ் பல்லை கடிக்கும்போதே
செழியன் குறிக்கிட்டு “எனக்கு இப்ப பேச டைம் இல்ல இன்னும் 2௦ மினிட்ஸ்ல நீயும் ஆபீஸ்க்கு வர காட் இட்” என்றான் .
‘நீயும் மனைவி,குழந்தைகுட்டினு சந்தோசமா இருக்க மாட்ட உனக்கு வாக்குபட்ட பாவத்துக்கு என்னையும் இருக்க விட மாட்ட ‘ என்று பிரகாஷ் மனதில் நினைத்து கொண்டு இருக்கும் போதே செழியன் “என்ன பேச்சு மூச்சே இல்ல எதை பத்தி யோசிச்சிகிட்டு இருக்க ” என்றான்.
“இல்ல ஆல்ரெடி பிளான் பண்ண மீட்டிங்னா எதை பத்தி பேசணும் என்ன தீம் ப்ரொமோட் பண்ண போறோம்னு பிரெப்பர் பண்ணுவேன்…ஆனா இந்த மீட்டிங் நீ வீட்டுலிருந்து தப்பிக்க நீயே செட் பண்ணாதா அதான் எதை பத்தி இருக்கும்னு யோசிச்சுட்டு இருக்கேன்” என்றான் சற்று நக்கலுடன் .
ஆனால் இதற்கெல்லாம் செழியன் பதில் சொல்வானா என்ன?! அவன் தான் போனை கட் செய்து பல நிமிடகள் ஆகி விட்டதே .
அலுவலகத்துக்குள் நுழைந்து பணியாளரிடம் காரை பார்க் பண்ண சொல்லி விட்டு சென்றான். இன்னும் 9 மணி ஆகவில்லை என்பதால் சில பேர் மட்டுமே வந்து இருந்தனர் அவர்கள் தங்கள் முதலாளியை பார்த்து சற்று குழம்பி பின் எழுந்து காலை வணக்கம் தெரிவித்தனர்.ஆனால் அதை எல்லாம் கண்டுக்காமல் தன் அறையை நோக்கி சென்றான் செழியன்.
அதன் பின் சரியாக 9:30 மணிக்கு செழியனின் முன் கோப பார்வையை வீசி கொண்டு இருந்தான் பிரகாஷ்.ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவன் தன் மடிக்கணினியை நொண்டி கொண்டிருந்தான்.
பின் பிரகாஷே “செழியா !!! அக்கா ரொம்ப கவலை படுறாங்கடா” என்றான்.
“இது அவங்களே தேடிகிட்டது நான் ஒன்னும் பண்ண முடியாது ” என்றான் பார்வையை லேப்டாப்பில் இருந்து திருப்பாமலே
“இந்த திமிரு தான் உன்கிட்ட இருந்து பிடிக்காதது “
இப்போது பார்வையை பிரகாஷுக்கு நேராக திருப்பி “இது திமிரு இல்ல நான் வாழ்க்கை பட்ட அடியோட அனுபவம்” என்றான் இறுகி போன குரலில்.பிரகாஷால் அதன் பிறகு பேசமுடியவில்லை தன் அறையை நோக்கி சென்று விட்டான்.
நேரம் 1௦ மணியை நெருங்கவே மீட்டிங் செல்வதற்காக தன் அறையை விட்டு வெளியே
வந்தவனின் காதுகளில் அந்த பேச்சு குரல் கேட்டது .
“நம்ம பாஸ் பார்த்தியா கல்யாண ஆனா அடுத்த நாளே ஆபீஸ் வந்துடாரு” என்றான் அவர்களின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவன்.
“வீட்டுல எதாவது பிரச்சனையா இருக்கும் அதான் வந்துட்டார் போல” என்றான் மற்றோருவன்.
“இவருக்கும்,அந்த பொண்ணுக்கும் 17 வருஷம் வயசு வித்தியாசமா நேத்து சில பேர பேசிகிட்டாங்க “
“ஆமா நானும் கேள்வி பட்டேன்…அவருக்கு அதிர்ஷ்டம் இருக்கு அதான் இப்படி ரொம்ப அழகான மனைவி இந்த வயசுலையும் கிடைச்சு இருக்கு”
“நீ வேற உனக்கு தெரியாதா இந்த மாதிரி பணக்கார வீட்டுக்குள்ள பல கசமுசங்கள் இருக்கும்…யாரு எப்படி சொல்ல முடியாது…ஒன்னு பணத்துக்கு ஆசைப்பட்டு இருக்கணும் இல்ல கேரக்டர் தப்பா இருக்கணும்…ஆனாலும் இவருக்கு அதிர்ஷ்டம் தான்…கொடுத்து வச்சவன்”
“எனக்கும் நீ சொன்னது தான் இருக்கும்னு தோணுது…பாப்போம் என்ன தான் நடக்குதுன்னு”
“சரி வா மீட்டிங் நடக்க போகுது போலாம்” என்று புறம் பேசிவிட்டு அவர்கள் கிளம்ப
இந்த பேச்சையெல்லாம் கேட்டு கொண்டிருந்த செழியனின் கோபம் அனைத்தும் அந்த காட்சியிலே இல்லாத ஆராதனாவை தான் சென்று அடைந்தது.
ஆத்திரக்காரனின் புத்தி தான் சாத்தானின் இருப்பிடம்.அது போல் ஆரம்பத்தில் இருந்தே தெளிவில்லாமல் இருந்த அவன் மனதில் யாரோ ஏற்றி வைத்த தீ நன்றாக கொழுந்து விட்டு எரிந்தது.அதன் பலன் தன் காரை அசுர வேகத்தில் இயக்கினான் இறுதியில் அது தன் வேகத்தை நிறுத்தி கொண்ட இடம் அனுராதாவின் வீடு .
அனுராதா கோவிலுக்கு சென்று விட்டு வருவதாக சொல்லி சென்றதால் யாராக இருக்கும் என்று வெளியே வந்துஆராதனா பார்க்க அது செழியனின் கார் ஆக இருந்தது.
‘இப்ப தானா ஆபீஸ் போனாரு அதுக்குள்ள வந்துட்டாரு’ என்று அவள் யோசிக்கும் பொழுதே உள்ளே நுழைந்தவன் அவள் கையை இறுக்கமாக பிடித்து தர தர மேலே அவனின் அறைக்கு அழைத்து சென்றான்.
அவளோ அவனின் கையின் பிடியினாலும்,வேகத்தினாலும் குழம்பி கொண்டு அவனுடன் மேல் ஏறினாள் .
அவளுடன் தன் அறைக்கு சென்று அவளை தன் கண் முன் நிறுத்தி “சொல்லுடி உனக்கு என்ன வேணும்… எதுக்காக என்னோட வாழ்க்கைல வந்து என்னோட உயிரை வாங்குற…நான் கேட்டனா என்ன கல்யாணம் பண்ணிக்கனு…உன்னால என்னோட நிம்மதியே போச்சு …எவன் எவனோ என்னை பத்தி விமர்சிக்கிறான் சை…” என்றான் கோபத்துடனும் வெறுப்புடனும்.
ஆனால் அவனின் கோபத்திற்கு மாறாய் தன் கைகளை கட்டி கொண்டு தலையை லேசாய் சாய்த்து அவனை நிதானமாக பார்த்து கொண்டிருந்தாள் அவனின் மனைவி.அதை கண்டு அவனின் கோபம் எல்லையை தாண்டி போக “என்ன திமிருடி உனக்கு” என்று அவன் அவளை நோக்கி முன்னேறி கையை கொண்டுவர ஒரு நிமிடங்கள் கூட தாமதிக்காமல் தன் இருகைகளாலும் அவனை இறுக்கி அணைத்து அவன் நெஞ்சில் தன் முகத்தை சாய்ந்தாள் ஆராதனா.
சிறை பிடிப்பாளா?! இல்லை சிக்குண்டு தவிப்பாளா?!
” நான் காதல் உற்ற போது நீயுமில்லை
ஒற்றைக் கேள்வி உன்னைக்கேட்கிறேன்
இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா
ஹார்மோன்களின் சத்தம் கேட்குதே
உன் காதிலே
என்று கேட்கும் இந்த சத்தம்
உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே
நீ கேட்கையில் சொல்லவே இல்லையே
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே “