“வெற்றி வெற்றி வெற்றி நான் ஜெயிச்சிட்டேன்” அந்த வீடே அதிரும்படி கத்தலானார் பூபதி பாண்டியன் தி கிரேட் நியுரோலொஜிஸ்ட்.
பூபதி பாண்டியன் இளமை துடிப்போடு இருந்தாலும் எதிலும் திருப்தியடையாதவர். புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற மனப்பாங்கை கொண்டவர். திறமை கொட்டிக் கிடந்தாலும் சக மருத்துவர்களின் மத்தியில் சைக்கோ என்று பெயர் பெற்றவர். அதற்கு காரணம் தனது கண்டுபிடிப்பில் வெறியாக இருப்பது தான்.
திருமணமாகி ஐந்தாண்டுகளாக குழந்தைகள் இல்லை என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாது தனது கண்டுபிடிப்புதான் முக்கியம் என்று நகரத்துக்கு ஒதுக்குபுறமாக ஒரு பங்களாவை வாங்கி அதை ஆராய்ச்சி கூடமாகவும் மாற்றி தனது வேலைதான் முக்கியம் என்று இருந்தவர்.
மனைவி லதா பிறந்த வீட்டில் அழுத அழுகைக்கு பலன் பூபதியின் தந்தை செல்வபாண்டியன் குடும்ப சொத்தும், ஆராய்ச்சிக்கு பணமும் தருவதாக இல்லை என்று சொன்னதுதான் பூபதியை நிலைகுலைய செய்தது.
அட குடும்ப சொத்து இல்லை என்பதை விட ஆராய்ச்சிக்கு பணம் கிடைக்காது என்பதுதான் பூபதிக்கு இருக்கும் பெரிய கவலை என்பது அவரை தவிர யாராலையும் புரிந்துக்கொள்ள முடியாது.
ஊரில் பெரிய குடும்பத்தில் கடைக்குட்டியாக பிறந்தவர் தான் பூபதிபாண்டியன். அண்ணன்கள் விவசாயம் பார்த்துதான் இவரை படிக்க வைத்திருந்தனர். அவர்களை பொறுத்தவரையில் குடும்பத் தொழிலை விட்டு விட்டு தம்பி வீண் வேலை செய்கிறான் என்ற எண்ணம்.
ஆனால் பூபதி பாண்டியனின் தேடலும், தேவையும் வேறு. படிக்கும் காலத்திலும் படிப்பு மட்டும்தான் ஒரே குறி. எதையும் வித்தியாசமாக, வித்தியாசமான கோணத்தில் யோசிக்கக் கூடியவர். இருதய மாற்று சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, ஈரல். கல்லீரல் என்று எல்லாம் மாற்று சிகிச்சை செய்கிறோம் ஏன் மூளையை செய்யக் கூடாது? எனபதுதான் அவரது கேள்வி.
மருத்துவத்தில் நரம்பியலை தேர்வு செய்தது மட்டுமல்லாது, மூளையை பற்றி ஆராய்ச்சியிலும் இறங்க, பணம் தேவைப்பட்டது. தான் வாங்கும் சம்பளத்தில் பாதியை தந்தைக்கு அனுப்ப வேண்டும் என்பது தந்தையின் கட்டளை. ஆராய்ச்சிக்கும் அவரிடம்தான் போய் நிற்க வேண்டிய நிலை. போய் நின்றார். தந்தையிடம் போய் நிற்பதில் மானம், மரியாதை போய் விடாதே.
“இவன் படிப்புக்கே ஏகப்பட்ட பணம் செலவு பண்ணியாச்சு. ஊருல ஒரு கிளினிக்க தொறந்து, நாலு காசு பாக்குறத விட்டுட்டு எதுக்கு இந்த வெட்டி வேல?” மூத்த அண்ணன் கோபத்தில் காச் மூச் என்று சத்தம்போட ஆரம்பித்தான்.
கல்யாணமாகி குழந்தைகளையும் பெற்று ஓய்வில்லாமல் இன்னும் தம்பிக்காக உழைக்க வேண்டுமா? என்ற கோபத்தின் வெளிப்பாடுதான் அது.
அவனை பொறுத்தவரையில் மருத்துவன் என்பவன் கைநிறைய சம்பாதிப்பவன். தம்பியை படிக்க வைத்தால் பண மழையே கொட்டும் என்ற கனவில் மிதக்க, தம்பி அவன் கனவில் அலாரம் வைத்து எழுப்பி இருந்தான். பணம் சம்பாதிப்பதை விட்டு விட்டு ஏதோ ஆராய்ச்சி செய்கின்றானாம். கோபம் வருமா? வராதா?
“இது சரிப்பட்டு வராதுப்பா… சொத்தை பிரிச்சு கொடுங்க நாங்க எங்க குடும்பத்தை பாத்துகிறோம். இன்னும் எத்தன காலத்துக்கு நாங்க இவனுக்காக உழைக்க வேண்டி இருக்கும்?” சின்ன அண்ணனும் வழி மொழியலானான்.
இதுதான் சந்தர்ப்பம். இப்பொழுது சொத்தை பிரிக்க முடியவில்லை என்றால் இனி பிரிக்க முடியாது என்று அறிந்திருந்தவனோ தந்தையை வற்புறுத்தலானான்.
தான் இருக்கும் பொழுதே இப்படி என்றால்? இல்லாத காலத்தில் தன்னுடைய பிள்ளைகள் சொத்துக்காக அடித்துக்கொள்ளவும் கூடும் என்று உணர்ந்து கொண்ட செல்வபாண்டியன் சொத்தை பிரிக்க ஏற்பாடு பண்ணியதோடு பூபதி பாண்டியனை பார்த்து “ஆராய்ச்சிக்காக என்ன வேணுமோ ஏற்பாடு பண்ணித் தருவேன் ஆனால் அதற்கு முன் நான் சொல்கிற பெண்ணை நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என்று நிபந்தனையிட, தனக்கு ஆராய்ச்சிதான் முக்கியம் என்பதினால் பூபதி பாண்டியன் தந்தையின் நிபந்தனைக்கு அடிபணிந்தார்.
பூபதி போன்ற ஆத்மாக்கள் பூமியில் பிறப்பதே மனித குலத்துக்கு உதவுவதற்காக, அவர்களை புரிந்துக் கொண்டு அவர்களின் போக்கில் விட்டு விட வேண்டும். அவர்களை எதற்கும் நிர்பந்திக்கக் கூடாது. அதன் விளைவு மிக மோசமாக இருக்கும் என்பதற்கு பூபதி பாண்டியனின் திருமணமே சாட்ச்சி.
தந்தை சொன்ன பெண்ணான லதாவை திருமணம் செய்ததோடு ஆராய்ச்சிக்காக தந்தை கொடுத்த பணத்தில் நகரத்துக்கு ஒதுக்கு புறத்தில் ஒரு பங்களாவையும் வாங்கி குடிபுகுந்தார்.
ஒரே வீட்டில் இருப்பதாகத்தான் பேச்சு ஆனால் இருவருக்கிடையில் எந்த பேச்சு வார்த்தையும் இருப்பதில்லை. பூபதிபாண்டியன் அவர் உலகில் இருக்க, பாழடைந்த பங்களாவில் இருப்பது போல் உணரலானாள் லதா.
வீட்டு வேலைக்கு, தோட்ட வேலைக்கு என்று ஆட்கள் இருந்தாலும் பேச்சுத் துணைக்கு கூட யாரும் இல்லாமல், கட்டிய கணவனின் புறக்கணிப்பையும் தாங்க முடியமால் மனதளவில் ரொம்பவே துவண்டு போகலானாள் அந்த கிராமத்துப் பெண்.
திருமணமாகும் பொழுது மாமனார் சொன்னதுதான் “என் மகன் ஏதோ ஆராய்ச்சி செய்கிறான். அவனை புரிந்துகொண்ட நீதான் அவனுக்கு துணை நிற்க வேணும் என்று”
அதற்காக ஐந்து வருடகாலமாக ஒருவன் மனைவியை கண்டுகொள்ளாமல் அந்த பூட்டிய அறையில் அப்படி என்னதான் செய்கின்றானாம்?
பண்டிகை, திருவிழா என்று எதற்கும் ஊருக்கு வருவதில்லை. பிறந்தநாள், கல்யாணநாள் என்று எதையும் கொண்டாடுவதில்லை. குடும்பத்தில் நடக்கும் ஒரு நல்லது கெட்டதுக்கும் போவதில்லை. தான் மட்டும் சென்றால் சொந்தபந்தமும் ஊரும் பேசும் பேச்சுக்களை காதுகொடுத்து கேட்க இயலாது என்று லதாவும் செல்வதில்லை.
ஐந்து வருடங்களாக தன்னை தமைப்படுத்திக் கொண்டு பொறுமையாக இருந்தவள் பொங்கி எழுந்து விட்டாள்.
கணவனிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று தெரியும். பேசவும் அவன் அந்த அறையை விட்டு வெளியே வர வேண்டும் அல்லவா. பேசினால்தான் ஒரு முடிவுக்கு வரலாம். இங்கே பேசவே பஞ்சம். மாமனாரிடம் பேச தயக்கம். நேராக அவளது வீட்டுக்கு வண்டியை விட சொன்னாள்.
வேடிக்கை என்னவென்றால் மனைவி வீட்டை விட்டு சென்று விட்டாள் என்பது கூட பூபதி பாண்டியனுக்கு தெரியவில்லை. அவரோ ஆராய்ச்சி கூடமே கதி என்று இருந்துகொண்டிருந்தார்.
லதா வீட்டுக்கு ஒரே பெண். தனது செல்லமகளின் நிலையை எண்ணி கலங்கிப் போனார் தர்மதுரை. அவருடைய சொந்தபந்தங்களும் “பெண் இன்னும் உண்டாகள போலயே” சாடைமாடையாக பேசுவது அவரது காதுக்கும் வரும் செய்தி தானே.
குழந்தை வரம் கடவுள் கொடுப்பது அதற்கு நேரம் காலம் வர வேண்டாமா? என்று கடவுளை வேண்டலானார். ஆனால் இங்கே கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி தடை செய்வது போல கோளாறு மருமகனிடம் அல்லவா இருக்கிறது.
“உங்க பொண்ணு, என் மருமக நல்லா வாழ்வா” என்றவாரோ மகனை இறுக்க ஆராய்ச்சிக்கு பணம் கொடுப்பது நிறுத்தினார்.
தந்தையிடமிருந்து பணம் வருவது தடைப்பட்டதும் பதறிய பூபதி பாண்டியன் தந்தையை காண சென்றால் அவர் மனைவி அங்கே இருப்பதைக் கண்டு புரியாது முழிக்கலானார்.
யார் இந்த பெண் என்று யோசிக்காது லதா அவர் மனைவி என்று நியாபகம் இருந்தது மகிழ்ச்சியே.
“நீ குடும்பம் நடாத்தும் லட்சணம் புரிகிறது. எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு முதலில் எனக்கு பேரக்குழந்தைகளை பெற்றுக்கொடுக்கும் வழியை பாரு” செல்வபாண்டியன் கர்சிக்கலானார்.
“ஒரு பெண்ணால் என் ஆராய்ச்சி கெடுவதா? அதுவும் அற்ப அவளது உடல் தேவைக்காக சீ..” என்று மனைவியை முறைத்தார் பூபதி.
ஆனால் பூபதி பாண்டியனுக்கு பெண்ணான லதாவின் மனஉணர்வுகளை புரிந்துகொள்ள இயலவில்லை. முயற்சிக்கவுமில்லை. லதா உடல் தேவைக்காகவா கணவனை தேடினாள்? இந்த ஐந்தாண்டு காலமாக பொறுமையாக இருந்தவள் கொதிக்க காரணம் என்ன? ஏன் அவன் மட்டும்தான் ஆண் மகனா? ஒரு பெண் நினைத்தால் எதையும் செய்யக் கூடிய நேரத்தில் லதாவால் இன்னொரு ஆணிடம் உடல் சுகத்தை தேடிக்கொள்ள முடியாதா?
“இன்னும் குழந்தை உண்டாக்கவில்லையா?” என்று உறவினர்களும், ஊராரும் கேட்க்கும் பொழுதெல்லாம் அவள் மனம் படும் ரணவேதனையை பகிர்ந்துகொள்ள அவன் துணை தேவை. அவளுக்கு தேவைப்பட்டது எல்லாம் கணவனின் காதலும் அரவணைப்பும், அன்பான பேச்சும்தான். அதை புரிந்துகொள்ள பூபதி தயாராக இல்ல.
செல்வபாண்டியனின் மிரட்டலினால் கொஞ்சம் வழிக்கு வந்த பூபதி தந்தையிடம் கெஞ்சிக் கூத்தாடி ஆராய்ச்சியை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு மனைவிக்கு பிள்ளை கொடுக்கும் வேலையில் இறங்கினார்.
ஆம் கடனே என்று கடமையாகத்தான் தாம்பத்தியத்தில் ஈடுபடலானார்.
எந்த வேலை செய்தாலும் எண்ணமும் சிந்தனையும் தூமையாக இருக்க வேண்டும் என்பது நம் முன்னோர்களின் கருத்து.
பூபதியின் சிந்தனை முழுக்க தனது ஆராய்ச்சியில் மட்டுமே இருந்தது. சுண்டெலியின் மூளையை அறுவை சிகிச்சை செய்த்து பொருத்திப் பார்த்தாயிற்று எந்த பலனும் இல்லை. பூனை, முயல் என்று எல்லாம் பார்த்தாயிற்று எங்கே தவறு நடந்திருக்கிறது என்று கண்டுகொள்ள முடியவில்லையே” இதுதான் சதா அவர் சிந்தனையில் ஓடிக்கொண்டிருக்க, மனைவியை அணுகும் பொழுதும் அவளுக்கு வலிக்குமா? அன்பாக இரண்டு வார்த்தை பேச வேண்டும், ஆசையாக கொஞ்ச வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே இல்லை.
பூபதி தன்னை நெருங்கும் பொழுதெல்லாம் லதா மிரண்டு போகலானாள். ஒரு இயந்திர மனிதன் கூட இப்படி இருப்பானா? என்று தெரியவில்லை. அதற்கும் மேல் இருந்தார் பூபதி. அவள் முகம் கூட பார்ப்பதில்லை சிந்தனை எங்கோ இருக்க அறைக்கு வந்த வேலை முடிந்த உடன் எழுந்து சென்று விடுவார். விசும்பும் மனைவியின் குரல் கூட அவர் காதில் எட்டுவதில்லை.
இதுதான் தன்னுடைய விதி என்று லதா உணர்ந்து கொண்டு வாழ பழகிக் கொண்ட போது கர்ப்பமானாள். அவள் எதிர்பார்த்து கார்த்திருந்த நாள் இது. ஆனால் மனதில் அவ்வளவு உவகை இல்ல. உவகை கொள்ளவும் முடியவில்லை. எதிர்காலத்தை நினைக்கையில் ஒருவித அச்சம் அவள் மனதில் பரவ ஆரம்பித்திருந்தது.
அன்றிரவு கணவன் அறைக்கு வந்ததும் அவனை தடுத்து தான் கர்ப்பமாக இருப்பதை லதா கூற, “நிஜமாவா? அப்போ நான் தினம் தினம் உன் அறைக்கு வர வேண்டிய தேவை இல்லையே, ஆர் யு ஹாப்பி நவ்” என்று கேட்டு விட்டு சென்ற பூபதிதான் ஆறு மாதங்களாக அந்த ஆராய்ச்சி கூடத்தை விட்டு வரவே இல்லை.
எப்பொழுது சாப்பிடுகிறான். எப்பொழுது தூங்குகின்றான். எந்த நேரத்தில் என்ன செய்கின்றான் யாருக்கும் தெரியாது.
இப்படியும் ஒரு மனிதனால் இருக்க முடியுமா? தனது குழந்தைகளை ஒருத்தி சுமக்கின்றாள். ஆம் லதா சுமப்பது இரட்டை குழந்தைகளை. அவள் மீது கொஞ்சம் கூட பாசம் இல்லை. அவளை விடட்டும். தனது இரத்தம், தனது உயிர்கள் அவர்கள் மீதுமா பாசம் இருக்காது? என்ன மனிதன் இவன்? மனதளவில் ஒடிந்து போன லதா மனச்சோர்வுக்கு ஆளானாள்.
என்னதான் மாத்திரை மருந்து என்று உட்கொண்டாலும், உடல் எடை குறைந்தது. அவளை பரிசோதித்த மருத்துவரோ சத்தான ஆகாரம் உட்கொள்ள வேண்டும் இப்படியே போனால் தாய்க்கும், சேய்க்கும் ஆபத்து என்று எச்சரிக்கை செய்ய, குழந்தைகளுக்காக உண்ண ஆரம்பித்தாள். ஆனால் மனதுக்கு மருந்திட முடியாதே. அவள் மருந்தே கணவனானவனாகிப் போக அவனோ தன்னையே பூட்டிக்கொண்டல்லவா இருக்கின்றான்.
இருந்த மனஉளைச்சலில் லதாவுக்கு தான் கர்ப்பம் தரித்ததை வீட்டாருக்கு சொல்ல வேண்டும் என்று கூட தோன்ற வில்லை. சதா கண்ணீர் சிந்தியவாறு நாட்களை கடத்தியவள் வாழ்க்கையை வெறுக்கலானாள்.
பிரசவநாள் நெருங்க நெருங்க பிள்ளைகள் பிறந்தால் கணவன் அவர்களை கவனித்துக்கொள்ள மாட்டான் என்ற எண்ணம் மட்டும்தான் லதாவின் மனதில் பூதாகரமாக உருமாறி இருந்தது.
கணவனின் அன்பு தனக்கு இல்லை. பிள்ளைகளுக்கும் கிடைக்காது என்று தெரிந்த பின்னும் இந்த வீட்டில் இருக்க வேண்டுமா? என்ற கேள்வி அடிக்கடி மனதில் எழ குழம்பித் தவிக்கலானாள்.
இப்படியே சில நாட்கள் நகர ஒருநாள் தூங்கிக் கொண்டிருந்தவளுக்கு அடி வயிற்றில் சுளீரென வலி எடுக்க திடுக்கிட்டு எழுந்து சிரமப்பட்டு அமர்ந்தாள்.
“ஒன்னும் இல்ல. ஒன்னும் இல்ல. எல்லாம் சரியாகும்” வயிற்றின் மீது கை வைத்து கூறிக்கொண்டவள் மெதுவாக தடவி கொடுக்க, விட்டு விட்டு வலிக்கவே தனக்கு பிரசவ வலி ஆரம்பித்து விட்டதை உணர்ந்துகொண்டாள்.
மெதுவாக நடந்து சென்று கணவனின் ஆராய்ச்சி கூடத்தின் கதவை தட்டினால் கதவை திறந்தவனோ! “வெற்றி வெற்றி வெற்றி” என்று கத்திக் கூப்பாடு போட்டது மட்டுமல்லாது வலியில் துடித்துக் கொண்டிருந்தவளை சட்டென்று பின்புறம் திருப்பி தட்டாமாலையும் சுற்ற லதாவுக்கு மயக்கமே வந்தது.
உதடு கடித்து விசும்பியவள் கணவன் தன்னை விடும்வரை காத்திருந்து அலைபேசியின் அருகில் சென்று தந்தைக்கு அழைத்தாள். “அப்பா என்னால ரொம்ப முடியல. இப்போவோ அப்பாவோ என்று இருக்கு பிரசவம் ஆக, நான் உசுரோட இருப்பேனா தெரியல” என்றவாறே மயக்கத்துக்கு செல்ல அப்பொழுதுதான் பூபதி பாண்டியன் மனைவியை கவனித்தான்.
அவன் தட்டாமாலை சுற்றியதினாலையோ அவளது பனிக்குடம் உடைந்து அந்த இடமே நீரில் நனைந்து இருக்க, பாண்டியன் பயந்து போனான். நரம்பியல் மருத்துவனுக்கு பிரசவம் பார்க்கத் தெரியுமா என்ன? இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியாமல் தடுமாறியவன் உடனே மருத்துவமனைக்கு செல்ல முடிவெடுத்தான்.
மனைவியை சுமந்துகொண்டு வண்டியின் அருகில் வந்து காவலாளியை கத்தி அழைக்க, திடுக்கிட்டு விழித்தவர் ஓடி வந்து கதவை திறந்து விட்டிருந்தார்.
லதாவை உள்ளே அமர்த்தி வண்டியை இயக்க நகரத்துக்கு வெளியே உள்ள பாதை என்பதனால் கொஞ்சம் கரடு முரடாக காணப்பட வண்டி குழியில் விழுந்து எழ லதாவுக்கு மயக்கம் தெளிந்து வலியில் துடிக்க ஆரம்பித்தாள்.
அவளின் கதறல் சத்தம் அந்த நடுநிசியை கிழித்துக்கொண்டு ஆளில்லா வீதியை நிரப்ப, வண்டிக்குள் இருந்த பூபதியின் மனதுக்குள் கூட அச்சம் பரவத்தான் செய்தது. பிரதான வீதியை அடைந்த பின்னும் வாகனங்கள் இல்லாததால் வண்டியை சீராகவும், வேகமாகவும் செலுத்தி மருத்துவமனையை அடைய லதா உடனடியாக பிரசவ அறைக்கு கொண்டு சொல்லப்பட்டாள்.
வலியில் கதறித் துடித்து, கத்திக் கூப்பாடு போட்டு ஒருவழியாக இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த லதா மயக்கத்துக்கு சென்றிருக்க, குழந்தைகளை தாதிகள் பூபதி பாண்டியனின் கையில் கொடுத்திருந்தனர்.
திருமண வாழ்க்கையில் ஈடுபாடில்லாமல் இருந்த பூபதி அந்த பிஞ்சுகளை தொட்டதும் மனம் கணிந்தார். தான் எப்படிப்பட்ட சொர்க்கத்தை இழக்க பார்த்திருக்கின்றோம் என்பதை புரிந்துக் கொண்டார்.
எவ்வளவு நேரம் குழந்தைகளை கொஞ்சிக் கொண்டிருந்தாரோ தாதி வந்து பாலூட்ட வேண்டும் அன்னை கண்விழித்து விட்டாள் என்று வாங்கிக் கொண்டு செல்லும் பொழுதுதான் மனைவியின் நியாபகம் வந்தது.
“லதா அருமையான பெண்” புன்னகைத்தவர் தாதி வந்து அழைக்கும்வரை அமர்ந்திருந்ததோடு செல்வபாண்டியனுக்கும் தகவல் கூறி இருந்தார்.
மனைவியை சென்று பார்த்தவருக்கு அவளின் பிடிகொடுக்கா பேச்சோ, முகத்திருப்பாளோ கண்களுக்கு தென்படவில்லை. அசதியில் இருக்கின்றாள் என்று எண்ணி குழந்தைகளோடு ஐக்கியமானார்.
தர்மதுரை வந்த்து மகளை பார்த்ததோடு மருத்துமனையிலிருந்து அவரது வீட்டுக்கு அழைத்து சென்றிருந்தார்.
வீட்டுக்கு சென்று வந்த பூபதி மனைவியையும் குழந்தைகளையும் காணாது விசாரிக்க, மாமனார் பலவந்தமாக டிஸ்டராஜ் செய்து அழைத்து சென்றதாக கூறிக்கொண்டிருக்கும் பொழுதே செல்வபாண்டியனும் வந்து சேர்ந்தார்.
மகனை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பியவர் தர்மதுரையின் வண்டியை மடக்கிப் பேச “என் மக முடிவுதான் என் முடிவு” என்று விட்டார் அவர்.
பூபதியை லதாவிடம் பேச சொல்லி செல்வபாண்டியன் கூற, “லதா நான் இப்படித்தான். எனக்கு குடும்ப வாழ்க்கைனா என்ன என்று தெரியாது. அம்மா இல்லாம வளர்ந்தவன் நான். என் இஷ்டப்படிதான் என் வாழ்க்கை இருக்கணும் என்று நினைப்பேன். என்னதான் அப்பா சொன்ன பெண்ணா இருந்தாலும், உன் பேரும், உன் முகம் என் நியாபகத்துல இருக்கு எனக்கு உன்ன பிடிக்காம இல்ல லதா. ஆனா எனக்கு என் ஆராய்ச்சி ரொம்ப முக்கியம். நாம சேர்ந்து வாழறது நம்ம குழந்தைகளுக்கும் ரொம்ப முக்கியம். சேர்ந்து வாழ்ந்தாலும் நம்ம வாழ்க முன்ன மாதிரிதான் இருக்கும். நீதான் என்ன புரிஞ்சிக்கணும்” யதார்த்தத்தை எடுத்துக் கூறி இருக்க, லதா அவரை புரிந்துக் கொள்ள முயற்சி செய்ய வில்லை.
“எனக்கு இவர் வேண்டாம். வேண்டவே வேண்டாம். நான் இவரோடு வாழ விரும்பல. என்ன உங்க கூடவே கூட்டிட்டு போய்டுங்க அப்பா…” என்று தந்தையிடம் ஓடி வந்திருந்தாள்.
“மருமகளே! என்னம்மா இப்படி பேசினா எப்படி?” செல்வபாண்டியன் பேச ஆரம்பிக்கவும்
“எனக்கு விவாகரத்துதான் வேணும். குழந்தையை காரணம் காட்டி என்ன இங்க தங்க வைக்கவும், உங்க மகன் கூடவும் வாழ வைக்கவும் முயற்ச்சி செஞ்சீங்கன்னா… இதோ உங்க மகனுக்கு பிறந்த குழந்தைகள்ல ஒன்ன நீங்களே வச்சிக்கோங்க. எனக்கு ஒரு குழந்தை போதும்” என்றவள் எந்த அன்னையும் செய்ய துணியாத காரியத்தை செய்தாள்.
ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து செல்வபாண்டியனின் கையில் கொடுத்து விட்டு வண்டியில் ஏற “அப்பா என்ன மாதிரிஎன் பையன் அம்மா இல்லாம வளர வேணாம் அவன் அவங்கம்மா கிட்டயே இருக்கட்டும்” என்றார் பூபதி.
“எதுக்கு குழந்தைகளை பார்க்க வரேன் என்ற சாக்குல சமரசம் பேச வர்றதுக்கா? ஒன்னும் வேணாம்” என்றவள் வண்டியின் கதவு அடித்து சாத்தி விட்டு சென்று விட்டாள்.
கோட்டில் விவாகரத்து வாங்கிய அன்று அவளை பார்த்ததுதான். அதன் பின் மருத்துவமனையில்தான் பூபதி மனைவியை சந்தித்தார்.
இரட்டை குழந்தைகளை பெத்து இன்று ஒரு மகனை இழந்து மீளா துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றனர் இருவரும்.
மணிமாறனின் மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் அவன் நலமாக உள்ளதாக கூறப்பட்டாலும் இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் அவன் கண்விழிக்காதது லதாவை கவலைகொள்ள செய்திருந்தது,
மகனை கழுவுவது துடைப்பது என்று எல்லாம் செய்தாலும், கண்களில் பெருகும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. மகனின் முன் அழுது விடக் கூடாது என்று பிடிவாதமாக விசும்பலைக் கூட அடக்கியவாறு எல்லா வேலைகளையும் பார்த்தவாறு இருப்பவளை சமாதானப்படுத்தக் கூட முடியாமல் இருந்தார் பூபதி.
தூக்கத்தில் ஆழ்ந்தவன் ஒருநாள் கண் விழித்து தானே ஆக வேண்டும். மணிமாறனும் கண்விழித்தான். லதா குளிக்க சென்ற நேரம் பார்த்து கண்விழித்தான்.
தலை வின் வின் என்று வலித்தது. அறையின் இருட்டுக்கு கூட அவனுக்கு பிடிக்கவில்லை. மெதுவாக எழுத்து திரையை விலக்க மாலை வெயில் முகத்தில் அடித்தது. அவனுக்கு காலையா? மாலையா? எங்கே இருக்கின்றோம் என்று கூட தெரியவில்லை.
தலை அதிகமாக வலிக்கவே மீண்டும் கட்டிலில் அமர்ந்தவன் சுற்றிலும் ஆராயலானான். மருத்துவமனை என்று புரிந்தது. வலது பக்கத்தில் இருந்த அந்த பிளாட்டினம் பிரேஸ்லட்டை பார்த்தவன் அதை எடுத்து அணிந்து கொண்டான்.
தான் மேல் சட்டை இல்லாமல் இருப்பது கண்ணாடியில் தெரியவே “ஊர்ல இருக்குற எல்லா பொண்ணுக கண்ணும் என் மேல என்று அம்மா திட்டுவாங்க, இங்க அழகான நர்ஸ் எல்லாம் இருப்பாங்க சைட் அடிச்சிருப்பாளுங்களே ஐயோ என்ன பண்ணுறது? அம்மா பார்த்தா நா காலி” தனக்குள் புன்னகைத்தவன் அங்கிருந்த கப்போர்டை திறந்து சட்டையை தேட, குளித்து விட்டு வந்த லதா மகனைக் கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள்.
“மாறா…. கண்ணு முழிச்சிட்டியா?” என்று கத்தியவாறே வந்தவள் அவனை கட்டிக்கொண்டு அழ,
“எனக்கு ஒன்னும் இல்லமா… சின்ன ஆக்சிடன்ட் தான்” என்றவன் யோசனையாக “ஆமா… வெற்றி… வெற்றி எங்க?” என்று கேட்டான்.
லதா கதறிக் கதறி அழ “என்னம்மா? ஆச்சு?” என்றவனுக்கு அவளால் பதில் சொல்லவே முடியவில்லை.
நல்லவேளை பூபதி மகனை பரிசோதிக்க உள்ளே வர மணிமாறன் எழுந்து நிற்பதைக் கண்டு ஓடிவந்தவர் “மாறா… எப்படிப்பா… இருக்கு உடம்புக்கு? தலை ரொம்ப வலிக்குதா?” என்று கேட்க,
“இல்ல டாக்டர். ஐம் பெர்பெக்ட்லி ஆல் ரைட்” என்று புன்னகைக்க,
“மாறா அப்பாடா…”அதிர்ந்த லதா அழுகையை நிறுத்தி விட்டு கூற, புருவம் நீவியவாறே “சாரி டாட்” என்றான் மாறன்.
“இட்ஸ் ஓகே வெற்றி” என்றார் பூபதி.
“என்னங்க வெற்றி இல்ல மாறன்” லதா கணவனுக்கு மகனை அறிமுகப்படுத்த
கவலையாக “வெற்றியும் அப்படித்தான் சொல்லுவான் அந்த நியாபகத்துல…” பூபதி சோகமாக
“ஐ கென் அண்டெஸ்டண்ட் டேட்” என்ற மாறன் தந்தையை கட்டிக்க கொண்டான்.
இயல்பிலே மாறன் துடுக்கானவன். உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவன். உடலும் மனமும் சுத்தமாகவும், திடமாகவும் இருந்தால் உடல்நிலையும் சீக்கிரம் குணமடைந்து விடும்.
மாறனும் மருத்துமனை விட்டு சீக்கிரம் வெளியேறி இருந்தான். ஆனால் பூபதி அவனுக்கு தலை வலித்தால் போட்டுக்கொள்ள மட்டும் மாத்திரை வழங்கி இருந்தார்.
“என்ன டேட் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாம மாத்திரை கொடுக்குறீங்க? உங்கள தூக்கி உள்ள வைக்கிற எல்லா ரைட்ஸும் எனக்கு இருக்கு” என்று சிரிக்க
“இது ஹெவி டோஸ் பார்மஸில கேட்டாலும் கொடுக்க மாட்டாங்க. தலைவலிக்கும் போது மட்டும் போடு. முடியிறப்போ சொல்லு. நானே கொண்டு வந்து தரேன்”
“ஓகே” என்று அவன் வாய் சொன்னாலும் இந்த மாத்திரை தேவை படாது என்றுதான் அவன் உள்ளுணர்வு சொன்னது. ஆனால் தலை வலிக்க ஆரம்பிக்கும் பொழுது அவனே அதை போடுவான் என்று அவனுக்கே தெரியவில்லை.