“மணி. நான் சீரியஸா சொல்றேன். என்னோட இருந்தா உனக்கு என்ன கிடைச்சுடும்? டீ கடை எல்லாம் ஒரு தொழிலா நம்ம ஆளுங்க பார்க்கிறதில்லை. உனக்கும் வயசு ஆகுது. கல்யாணம் காட்சின்னு”

“ண்ணா. டீ கடையிலே லட்சம் சம்பாதிக்கிறவங்க எல்லாம் இருக்காங்க”

“டேய் நம்ம ஆளுங்களுக்கு அதெல்லாம் தெரியாது. நீ நான் சொல்றதை கேளு. கிளம்பு”

“ஏன் என்னை துரத்திட்டு நீ மட்டும் ஆளாக பார்க்கிறியா?”

செல்வம் தம்பியை முறைக்க,  “ண்ணா. நான் ஒன்னும் உன்மேல இருக்கிற பாசத்துல உன்கூட இல்லை. உன்னை விட்டா வேற யாரும் என்னை சேர்த்துக்க மாட்டாங்க. அவ்வளவு தான்”   என்றான் தம்பி.

“டேய் புரிஞ்சுக்க மாட்டியா நீ?”

“ண்ணா. என்னால  வெளிநாட்டுக்கு எல்லாம் போக முடியாது. எனக்கு இங்க தான் இருக்கணும்.”

“என்னமோ பண்ணு” என்று விட்டுவிட்டான் அண்ணன்.

நாட்கள் தான் சென்றது. செல்வத்திடம் எந்த மாற்றமும் இல்லை. இடையில் ஒரு முறை கோர்ட்டுக்கு சென்று வந்தான்.

லாயர் இவனை வெளியே எடுக்க முயன்று கொண்டிருக்கிறார் என்பதை கண்டு கொள்ள முடிந்தது.

வழக்கம் போல அன்று அண்ணாச்சியுடன் பஞ்சாயத்து முடித்து கடைக்கு வந்தான் செல்வம். வானம் இருட்டி கொண்டு வர, சூடான டீயுடன் அமர்ந்தான்.

மணி மொபைல் பார்த்து கொண்டிருக்க, “மழை நல்லா வரும் போல. எல்லாத்தையும் ஓரங்கட்டுடா” என, மணி அந்த வேலையை பார்த்தான்.

சேர், பெஞ்ச் எல்லாம் உள்ளே வர, மழையும் பிடித்து கொண்டது.

அந்த  மழையில் உள்ள கொதிப்போடு நடந்து வந்து கொண்டிருந்தாள்  நாச்சி. ஏதோ பூஜை.  வந்தே ஆக வேண்டும் என்று ஊருக்கு வர வைத்தார்கள்.

முத்து நாச்சியும் வந்திருக்க, கோவிலில் வைத்து பெண் பார்க்கும் நிகழ்வு.

அவ்வளவுதான் பெண் அங்கு நிற்கவில்லை. வாசலோடே கிளம்பிவிட்டாள். “கார் ஸ்டார்ட் ஆகலை. கொஞ்ச நேரம் இரு நாச்சி” என்ற ரவியின் குரலை எல்லாம் மதிக்கவில்லை.

வேக நடையுடன் வந்தவளை டீ கடையில் அமர்ந்திருந்த மணி பார்த்தான்.

“ண்ணே அது அண்ணி தானே?” என்று அண்ணனிடம் கேட்க, அண்ணனோ நிமிர்ந்து பார்த்துவிட்டு தன் போக்கில் டீ குடித்தான்.

மணி குடையுடன் அவளின் முன் நிற்க, நாச்சி அப்போது தான் இருக்குமிடம் உணர்ந்தாள். “குடை பிடிங்கண்ணி” என்றான் மணி.

நாச்சி கண்கள் அவனுக்கு பின்னால் செல்வத்தை தேடி  கடையில் வைத்து கண்டு கொண்டது. சில துளி கண்ணீரும் மழையோடு கரைந்து காணாமல் போனது.

“அங்க. கடைக்கு வரீங்களா அண்ணி?” மணி கேட்க, நாச்சி நொடி யோசித்து தலையசைத்தாள்.

முழுதும் நனைந்திருந்தவளின் நடை தடுமாறி, மெல்ல வந்தாள். சில அடி இடைவெளியில் செல்வத்தின் முகம் தெளிவாக தெரிய, கடைக்குள் நுழைந்தாள்.

மணி அவளுக்கு சேர் எடுத்து போட, மறுத்து கை கட்டி நின்று கொண்டாள். மூவர் மட்டுமே அங்கு. மணி இதோ வரேன் என்று உள்ளே சென்றுவிட்டான்.

இருவர் மட்டுமே இருக்க, பெண்ணுக்குள் என்னென்னமோ எதிர்பார்ப்பு. இத்தனை நாட்கள் கழித்து அவனுக்கு அருகில் நிற்கிறாள்.  அப்பா, அவரின் மிரட்டல் எல்லாம் பின்னுக்கு சென்றுவிட்டது.

செல்வம் மட்டுமே நினைவில் இருக்க, கட்டிப்பிடிச்சு அழுதுடுவோமா? என்று ஏங்க ஆரம்பித்தாள்.

திரும்ப துளிர்த்த கண்ணீர் துளிகள் அவளின் ஏக்கத்தை வெளிப்படையாக காட்டியது.

செல்வமோ அவளை பார்க்காமலே பக்கத்தில் இருந்த அவனின் துண்டை தூக்கி நாச்சி மேல் போட்டான். அதிர்ந்து போன பெண், அவனை பார்த்தாள்.

மிகவும் சாதாரணமாக டீயை காலி செய்து கொண்டிருந்தான். இவள் பக்கமே திரும்ப மறுக்கும் உடல் பாவனை. இத்தனை நாட்கள் கட்டி காத்த அவளின் கட்டுப்பாடு, உறுதி எல்லாம் அவன் முன் சிதற ஆரம்பித்தது.

என்னை பார்க்க கூட மாட்டாராமா? என்ற இவளின்  ஏக்கம் கோவமாக உருமாற, துண்டை திரும்பவும் அவன் மேலே எறிந்தாள்.

முகத்தில் விழுந்த துண்டை எடுத்த செல்வம் புதிதாக பார்ப்பவன் போல,  “யாருடா மணி இந்த பிகர்” என்று இல்லாத தம்பியிடம்  கேட்டான்.

பெண்ணின் பார்வை தீவிர முறைப்புக்கு போக, “மழையில நனைஞ்சதுல கொஞ்சம் அழகா தெரியறாங்களோ?” என்று அவளை மேலும் கீழும் பார்த்து கேட்டான்.

நாச்சி கோபத்துடன் அங்கிருந்த டம்ளரை எடுத்து அவன் மேல் எரிய,  கேட்ச் பிடித்து கொண்ட செல்வம், “டீ வேணும்ன்னா கேட்க சொல்லுடா” என்று டீ போட சென்றான்.

காற்றின் வேகம் வேறு அதிகரிக்க, நாச்சிக்கு நன்றாகவே குளிர செய்தது. கைகளை இறுக்கமாக கட்டிக்கொள்ள, செல்வம் கவனித்தவன் துண்டை திரும்ப அவள் மேல் போட்டான்.

பெண் அதை எடுக்க போக, “தூக்கி போட்டா துண்டுக்கு பதில் நான் வந்து மேல விழுவேன்னு சொல்லுடா” என்றான்.

“ஆஹ்ன்”

“இதுக்காகவே தூக்கி போடலாம்ன்னு நினைப்பாங்க, ஆனா துண்டா நான் இருந்தா சேலை மேல இருக்காது பார்த்துக்க சொல்லு” என்றான்.

முத்து பெண்ணுக்கோ இவரா இது என்ற சந்தேகம் வந்துவிட்டது.

“டீ குடிக்க சொல்லுடா” என்று அவள் முன் நீட்டினான்.

இவள் வாங்காமல் போக, “செல்வம் கையால டீ குடிக்கிற பாக்கியம் எல்லாருக்கும் கிடைச்சுடாது மணி” என்று புருவம் தூக்க,

“துண்டுக்கு பதில் டீ மேல விழுந்தா பரவாயில்லையா மணி?” என்று இவளும் கேட்டாள்.

“பரவாயில்லை மணி. அதான் நனைஞ்ச கோழி ஒன்னு இருக்கே. அப்படியே அமுக்கி சூடேத்திக்கிறேன்”

“உங்களை” என்று நாச்சி அவன் நெஞ்சில் அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

செல்வம் கண்களை மூடி அவளின் தொடுகையை உணர்ந்தான். நாச்சியிடம் அப்படி ஒரு விம்மல்.

அடிகள் வலுவிழக்க, கண்ணீர் கணம் கண்டது. அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள வர, செல்வம் தள்ளி நின்று கொண்டான்.

முத்து பெண் ஏன் என்று பார்க்க, செல்வம் டீயை அவள் முன் வைத்து அவளை தீர்க்கமாக பார்த்திருந்தவன், “எப்படி நான் வெளியே வந்தேன்?” என்று கேட்டான்.

இதுவரை யாரிடமும் கேட்காத கேள்வி. உடையவளிடம் மட்டுமே கேட்க நினைத்திருந்த கேள்வி.

கேட்டுவிட்டான். பதில் சொல்ல வேண்டியவள் இப்போது தன் பார்வையை மாற்றினாள்.

செல்வம் உள்ளங்கையால் அவளின் கன்னத்தை பிடித்து தன்னை பார்க்க வைத்தவன், “பதில் வேணும்” என்றான்.

நாச்சி, ‘இப்போ ஏன்? விட்டுடடேன்’ என்பதாய் பார்த்தாள்.

“நீ என்னை பார்க்க வராததுலே எனக்கு பதில் தெரிஞ்சு போச்சு. இருந்தாலும் நீ சொல்லு” என்றான் அவன்.

நாச்சி அவன் கையை விலக்கி தள்ளி போக முயல, செல்வம் அவளின் இடையை வளைத்து தன்னோடு நிற்க வைத்தான்.

முத்து நாச்சி கண்கள் விரிந்து போக, அவளின் ஈர உடல் அவனோடு உரசி நின்றது.

“என்ன உனக்கு நான் வேணாம்ன்னு சொன்னாரா? இனி உனக்கும் எனக்கும் சம்மதம் இல்லன்னு சொன்னாரா?”

பெண்ணுக்கு கண்கள் கலங்கி கொண்டு வர, செல்வத்திற்கு பதில் உறுதியாக தெரிந்து போனது.

செல்வம் அவளின் இடையில் இருந்து கையை விலக்கி கொண்டு தள்ளி சென்றான். முத்து நாச்சி விலகியவனை நெருங்கினாள். அவனை அணைக்க முயன்றாள்.

செல்வம் அவளின் கைக்குள் வராமல் போக, “ப்ளீஸ். ஒருமுறை உங்க நெஞ்சுல சாய்ஞ்சுக்க விடுங்களேன்” என்று கேட்டுவிட்டாள்.

“கட்டிப்பிடிச்சு கழட்டி விட போறியா?” அவனின் கேள்வி பாய்ந்து வந்தது.

பெண்ணுக்கும் கோவம் வர, “ஏன் கழட்டி விட்டா கட்டிப்பிடிக்க விட மாட்டிங்களா?” என்றாள்.

செல்வம் அவளை அழுத்தமாக பார்த்தவன், “எனக்கு கட்டிபிடிக்கிறது மட்டும் போதாதுன்னா சொன்னா” என்று கேட்க, பெண் தானே தள்ளி சென்றுவிட்டாள்.

“வேறென்ன வேணும்ன்னு கேட்க மாட்டியா?”

“வேறென்னவா இருந்தாலும் நடக்காது” என்றாள் இவள் தெளிந்து.

‘உன்னால தான் அவர் இவ்வளவு தூரம் பட்டதே, திரும்ப என்ன முதல்ல இருந்து ஆரம்பிக்க பார்க்கிற?’ என்று அவளின் மனசாட்சியே கேள்வி கேட்டு  அவளை வதைத்தது.

வேணும். ஆனா வேணாம் என்ற ஆட்டத்தில் சோர்த்து போனவளாக நின்றாள் முத்து நாச்சி.

“சோ திரும்ப என்கிட்ட வர மாட்டீங்க. நான் வேண்டாம். அப்படி தானே” செல்வம் கேட்க, நாச்சி அவனை மறுத்து நேராக நின்று கொண்டாள்.

செல்வம் அவளை உறுத்து பார்த்தபடி நிற்க, சர்ரென கார்கள் அடுத்தடுத்து அவர்கள் கடை முன் வந்து நின்றது.

மணி அந்த சத்தத்தில் வெளியே வர, நாராயணன் மழையிலே இறங்கி ஒடி வந்தார்.

அவருக்கு பின்னால் அவரின் குடும்பமும், வேறு ஒரு குடும்பமும். ரவிக்கு தங்கையை அங்கு பார்க்கவும், தலை வலி வந்துவிட்டது.