நாராயணன் என்ன செய்தாரோ, யாரிடம் பேசினாரோ செல்வம் வெளியே வந்துவிட்டான்.
அதுவும் உடனே நடந்துவிடவில்லை. மேலும் சில வாரங்கள் சென்றுதான்.
இனி செல்வத்துக்கும் அவளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று நாச்சி சொன்னவுடன், நாராயணன் களத்தில் இறங்கினார்.
நேரே அண்ணாச்சியை சென்று பார்த்தார். “நினைச்சதை சாதிச்சுட்ட போல” என்றார் அண்ணாச்சி.
“எடுத்ததும் எல்லாம் என் வழிக்கு வரலை அண்ணாச்சி. இப்போ தான், இனி அவங்களால முடியவே முடியாதுன்னு தான் நம்மகிட்ட வந்திருக்காங்க” என்றார் நாராயணன்.
“இந்த நேரமும் நமக்கு தேவைப்பட்டது தானே நாராயணா? நாமளும் எடுத்ததும் செஞ்சிருக்க முடியாது. விஷயத்தை ஆற போட்டு தானே செல்வத்துகிட்டவே போக முடியும்”
“அது என்னமோ உண்மை அண்ணாச்சி. ஆனா இந்த செல்வம் இத்தனை நாள் தாக்கு பிடிப்பான்னு நானும் நினைக்கலை”
“நான் சொன்னப்போ நீ நம்பலை. அதெல்லாம் சரியா கணிச்சு தானே அவனை உள்ள இறக்கினேன். வேறு யாரும் இருந்தா ஒன்னு நம்மளை மாட்டி விடுவாங்க இல்லை சொத்தை ஆட்டைய போட பார்த்திருப்பாங்க. இவன் தான் நல்லவன் ஆச்சே”
“நீங்க சொன்னா சரிதான். இப்போ இவனை வெளியே எடுக்க என்ன பண்ணலாம்?”
“தலைவர்கிட்ட பேசணும். அவனுக்கு ஆதரவா எல்லாம் தயார் பண்ணனும். நேரம் எடுக்கும்” என்றவர், மறுநாள் அந்த அமைச்சரிடம் சென்றார்.
“நல்ல பையனை தான் பிடிச்சு இருக்க. எடுத்துடலாம். கவலையை விடு” என்ற அந்த அமைச்சரும் அவரின் பணம், பதவி மூலம் செல்வத்திற்கு பெயில் எடுத்தனர்.
அப்பொழுதும் பெயில் தான். அவன் மீதான குற்றங்கள் அப்படியே தான் இருந்தது.
கடுமையான நாட்களை கடந்து வெளி உலகத்தினை கண்டான் செல்வம்.
ரவி, சுப்பிரமணி இருவரும் அவனை அழைத்து கொண்டு வந்தனர். காரில் யாருக்கும், யாரிடமும் பேச தோன்றவில்லை. ஊருக்கு வரும் வரை மௌனமே நிலைத்தது.
செல்வம் முதலில் சென்று குளித்து வந்தவன், தானே டீ போட்டு கொண்டு அமர்ந்தான்.
ரவிக்கு சுப்பிரமணி போட்டு கொடுத்தவன், கடையையும் மூடிவிட்டான். “மாப்பிள்ளை நீ ஓகேவா?” ரவி கேட்க,
“ஓகே” என்பதாய் தலையசைப்பு.
ரவிக்கும் அடுத்து என்ன பேச என்று தெரியவில்லை. “வெளியூர் போக முடியாது மாப்பிள்ளை. அவங்க கூப்பிடும் போது திரும்ப போகணும்” என்றான்.
செல்வம் கேட்டு கொண்டவன், திரும்ப ஒரு டீ போட்டு குடித்துவிட்டு தூங்க போய்விட்டான்.
அப்படி ஒரு தூக்கம். ரவி காத்திருந்து கிளம்பிவிட்டான்.
தண்டபாணி மகனை பார்க்க வந்திருந்தார். செல்வம் இன்னும் தூக்கத்திலே இருக்க நள்ளிரவு வரை காத்திருந்து அவரும் கிளம்பிவிட்டார்.
மறுநாள் பத்து மணி போலே செல்வம் எழுந்தான். சுப்பிரமணி அண்ணனுக்கு டீ எடுத்து வர, குடித்தவன் குளித்து வந்து கடையில் அமர்ந்தான்.
ஊர் ஆட்கள், தெரிந்தவர்கள் அவனிடம் வந்து பேசினர். செல்வமும் பேசினான். ஆனால் வார்த்தைகள் சரளமாக இல்லை.
நேரம் எடுத்தே பேசினான். கொஞ்சம் தடுமாறினான். சாப்பிட விருப்பம் காட்டவில்லை.
தண்டபாணி திரும்ப வர, மகன் அவரிடம் முகம் எல்லாம் காட்டவில்லை. “நான் வரணும்ன்னா உன் அண்ணன் விடலை. அவனுக்கு எதாவது பிரச்சனை வரும்ன்னு பயம்” என்றார் தந்தை.
“திரும்ப கூப்பிடுவாங்களா? என்ன சொன்னாங்க?” என்று கேட்டார் தந்தை. சுப்பிரமணி அதற்கு பதில் சொன்னான்.
தண்டபாணி அதிக நேரம் இருந்து கிளம்பினார். அதுவரை செல்வம் அவருக்கு டீ போட்டு கொடுக்கவில்லை. மணி கொடுத்த டீயை தண்டபாணியும் குடிக்கவில்லை.
மகனின் ஒதுக்கம் அந்த ஒற்றை டீயிலே தெரிந்துவிட, துக்கம் தொண்டையை அடைத்தது மனிதருக்கு.
‘நான் என்ன செய்ய முடியும்? இவன் சேர கூடாத இடம் சேர்ந்துட்டு’ என்று மகனை திட்டி தன்னை தானே சமாதானமும் செய்து கொண்டார்.
அண்ணாச்சிக்காக இவன் ஏதோ செய்து மாட்டிக்கொண்டான் என்பது தான் எல்லோரின் அனுமானமும். செல்வத்திற்கு நாச்சியை பேசிய விஷயம் யாருக்கும் தெரியாதே.
கேட்பவர்களுக்கும் அதை தான் சொன்னான் சுப்பிரமணி. உண்மையை சொல்ல அவனுக்கு அனுமதி யும் இல்லை.
செல்வம் ஊருக்கு வந்து ஒரு வாரம் ஆன பின், அண்ணாச்சி அவனை வர சொன்னார்.
சுப்பிரமணி தான் கொதித்து போனான். “அதெல்லாம் போக வேண்டாம்ண்ணா. அவரை நம்பின பாவத்துக்கு எவ்வளவு தூரம் பண்ணிட்டார்” என்றான்.
“போலாம் மணி” என்றான் அண்ணன்.
“நான் வரலை. நீயும் போக கூடாதுண்ணா”
“சரி நீ இரு. நான் போய் பார்த்துட்டு வந்துடறேன்” என்று செல்வம் தனியே கிளம்ப, மணி வேறு வழி இல்லாமல் அவனுக்காக உடன் சென்றான்.
அங்கு நாராயணனும் இருக்க, சுப்பிரமணி தன் கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் வெளியே வந்துவிட, செல்வமமோ சாதாரணமாகேவ அவர்களை எதிர் கொண்டான்.
“உட்காரு செல்வா” என்ற அண்ணாச்சி சொல் ஏற்று அமர்ந்து கொண்டவனுக்கு குடிக்க கொடுத்தனர்.
செல்வா அமைதியாக குடிக்க, நாராயணன் அவனை உன்னிப்பாக பார்த்திருந்தார்.
எதுவும் நடக்காதது போல அவன் இருப்பதில் அண்ணாச்சிக்கு கொஞ்சம் உறுத்தல் தான்.
“தலைவர்கிட்ட பேசிட்டேன் செல்வா. அவர் சீக்கிரம் இந்த கேஸ் எல்லாம் ஒன்னுமில்லாம பண்ணிடுறேன்னு சொல்லியிருக்கார்” என்றார் அண்ணாச்சி.
“சரி அண்ணாச்சி” என்றான் செல்வம்.
“உனக்கு எதாவது செய்யணும்ன்னு தலைவர் விருப்பப் படுறார். சொல்லு செல்வா உனக்கென்ன வேணும்? பணம், வேலை, தொழில் போல”