பின் காலையிலே எல்லாம் முடிந்தது. மணியை போக சொல்லிவிட்டான்.
இவனுக்கு நாச்சியை சென்று பார்க்கலாமா என்று ஒரு எண்ணம்!
காலையில நல்ல முறையில கிளம்பி போயிருக்கலாம். இப்போ அவ எப்படி இருக்களோன்னு குறுகுறுன்னு இருக்கு.
அவ தான் உனக்குன்னு முடிவு பண்ணிட்ட இல்லை. இன்னும் என்ன யோசனை?
அவ வீட்டுக்கும் தெரியும். அப்பறம் என்ன? பைக்கிலே கிளம்பிவிட்டான். அவன் ஊர் வேலூர். நாச்சி பணியில் இருப்பது கிருஷ்ணகிரி.
அவளின் அலுவலக முகவரி மட்டும் கூகிளில் தேடி எடுத்து கொண்டான்.
இடையில் நிற்காமல் பயணித்து நாச்சி இருக்கும் இடத்திற்கும் வந்துவிட்டான். பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது அந்த ரெஜிஸ்டர் அலுவலகம்.
முத்து நாச்சி அங்கு தான் சப் ரெஜிஸ்டரராக உள்ளாள்.
அவளின் பதவிக்கு சட்டென போய் முன்னால் நின்று தொந்தரவு கொடுப்பது நன்றாக இருக்காதே.
போனில் அழைக்காமல் என்றால் அவளின் எண்ணை வாங்கி வைக்கவில்லை. ரவிக்கு கூப்பிடுவோமா? வேணாம். கண்டிப்பா கொடுக்க மாட்டான்.
சுப்புகிட்ட கேட்போம் என்று போன் எடுக்க, ரவியிடம் இருந்து எக்கச்சக்க மிஸ்ட் கால் இருந்தது.
ஒருவேளை நான் இங்க வந்தது தெரிஞ்சிருக்கோமோ? தெரிஞ்சா இப்போ என்ன? எப்படியும் அவங்க அப்பா சவால் பத்தி எல்லாம் சொல்லாமலா இருக்க போறார்?
உனக்கு என் தங்கச்சி வேணாம்ன்னு ஆரம்பிப்பான். கேட்டு டென்ஷன் ஆகும். எதுக்கு தொல்லை என்று தம்பிக்கு அழைத்தான்.
சுப்பு எடுத்ததும், “எங்கண்ணா இருக்க?” என்று கேட்டான்.
“நீ நாச்சி நம்பர் வாங்கி கொடு” என்றான் செல்வம்.
“ண்ணா அண்ணிகிட்ட பேச போறியா. சூப்பர்ண்ணா. இப்போ அனுப்புறேன். முன்னாடியே வாங்கி வைச்சுட்டேன்” என்றவன் உடனே அனுப்பியதுடன்,
“ண்ணா ரவி மச்சான் உங்களை எங்கன்னு கேட்டு என் உயிரை வாங்கிட்டார். ஒருவேளை அவர் சொத்து உங்களுக்கு வந்துருச்சுன்னு கோவமோ என்னமோ? உன்கிட்ட கண்டிப்பா பேசியே ஆகணும்ன்னு சொன்னார். நீ எதுக்கும் அவர்கிட்ட பேசிடு” என்று வைத்தான்.
செல்வம் நொடி யோசித்து ரவிக்கு அழைக்க, அவன் எடுத்ததும், “டேய் எங்கடா இருக்க” என்று கத்தினான்.
“உன் தங்கச்சியை பார்க்க வந்திருக்கேன்” எனக்கென்ன பயமா என்பது போல் சொன்னான் இவன்.
“அங்க ஏண்டா?” அலறிவிட்டவன், “நீ உடனே நான் சொல்ற இடத்துக்கு போ” என்றான்.
“அங்க ஏன்? என்ன மச்சான்”
“டேய். முதல்ல நான் சொல்றதை செய். நான் அங்க தான் வந்திட்டிருக்கேன்” என்று அழுத்தி சொல்லி வைக்க, செல்வா போனையே பார்த்திருந்தான்.
இவன்கிட்ட பேசியிருக்க கூடாது. ரொம்ப பண்றான். போடா!
செல்வா தலையை கோதி கொண்டபடி அவளுக்கு அழைக்க, ஒரு ரிங்கிலே எடுத்தாள் பெண்.
“போன் நம்பர் வைச்சுக்கிட்டு ஏன் எனக்கு கூப்பிட்டு பேசலை?”
“ஹான்”
“நீ கிளம்பி வந்ததில இருந்து கொஞ்சம் டென்க்ஷன். சரி வெளியே வரியா. நான் இங்க தான் இருக்கேன்”
“உண்மையாவா?” குரலிலே ஆரவாரம்.
ஆனால் பத்திரப்பதிவு ஒன்றுக்காக எல்லாம் காத்திருக்க, இவளால் உடனே அங்கிருந்து நகர முடியாதே?
“அது. கொஞ்ச நேரம். ரெஜிஸ்ட்ரேஷன் ஒன்னு. அது முடிஞ்சதும் அவ்வளவு தான்” என்றாள்.
“ஒன்னும் பிரச்சனையில்லை. நான் பக்கத்துல இருக்கேன். நீ வா” என்று அமைதியான இடம் சொல்லி வைத்தான்.
நாச்சி அவள் வேலை முடிந்ததும் பிரேக் எடுத்து கொண்டு கிளம்பினாள். சில நிமிடங்களில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர்.
“வேலை நேரத்தில தொந்தரவு பண்ணிட்டேனா?” செல்வம் கேட்க,
“இல்லை. இல்லை. நீங்க காருக்குள்ள வரீங்களா?” என்று கேட்டாள்.
பைக்கிலே வந்திருந்த களைப்பு அவனிடம் நன்றாகவே தெரிந்தது. செல்வம் ஹெல்மெட்டை பைக்கில் வைத்தவன், “தண்ணீ வைச்சிருக்கியா” என்று கேட்டான்.
“இதோ” என்று வேகமாக காரில் இருந்து எடுத்து கொடுத்தாள்.
செல்வம் குடித்து, முகத்திற்கு தண்ணீர் ஊற்றினான். வெயிலில் வந்ததால் உடல் நன்றாக சூடேறி போயிருந்தது.
நாச்சி தன் காரில் இருந்து சிறு டவலை எடுத்து அவனிடம் நீட்டினாள். செல்வம் மறுக்காமல் வாங்கி துடைத்து கொள்ள, நாச்சி முகம் மின்னியது.
“புரிஞ்சிடுச்சோ” செல்வம் டவலை அவளிடம் தூக்கி போட்டான்.
நாச்சி பிடித்து கொண்டவள், “என்ன புரிஞ்சது? ஒன்னும் இல்லையே” என்றாள் குறும்பான புன்னகையுடன்.
செல்வம் அவளை முறைக்க முயன்று கொண்டிருக்க, “இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க. ஏதாவது வேலையா?” என்று மேலும் கேட்டாள்.
“ஆமா வேலை தான். ஒரு பொண்ணை தட்டி தூக்கிட்டு போகணும்” என்றான் செல்வமும் அவளின் குறும்பு புரிந்து.
“பைக்கிலேவா? முடியுமா?” அவள் புருவம் ஏற்றி இறக்கி கேட்க,
“ஏன் நீ உன் கார் கொடுக்க மாட்டியா?” என்றான் அவன்.
“காருக்காக தான் வந்திருக்கீங்களா?”
“அதான் சொன்னேனே. பொண்ணுக்காக வந்திருக்கேன்னு” என்றவன் அவளை நெருங்கி வந்தான்.
“என். என்ன”
“தூக்கிடலாமா?” என்றவன் அவளை தூக்குவது போல போக,
“நான் ரெடி. தூக்கிடுங்க” என்று இரு கையையும் உயர்த்தினாள் அவள்.
செல்வம் நொடி அதிர்ந்து சிரித்துவிட்டவன், “கொஞ்சமாவது பயப்படுங்க மேடம்” என்றான் அவள் தலையில் தட்டி.
“அப்போ இல்லையா?” அவள் உதடு சுளித்து கைகளை இறக்க, செல்வம் இறக்கிய கைகளை தன் இரு கைகளாலும் கோர்த்து கொண்டான்.
நாச்சி கண்கள் விரித்து அவனை பார்க்க, “பின்னாடி பீல் பண்ணிட மாட்டியே?” என்று கேட்டான்.
“எதுக்கு?” அவளுக்கு புரியவில்லை.
“இவனை போய் ஏன்?”
நாச்சி கோவமாக அவள் கைகளை விலக்க பார்க்க, “ஷ்ஷ்ஷ், இரு” என்றான்.
“ஏன் எப்போவும் என்னை அழ வைச்சுட்டே இருக்கணுமா உங்களுக்கு?” மூக்கு விடைத்தது அவளுக்கு.
“இதான். இதை தான் பண்ணாதன்னு சொல்றேன். இதனால தான் ஓடி வந்திருக்கேன்” என்று அவளின் விடைத்த மூக்கை பிடித்து ஆட்டினான்.
“எனக்காக அழுதது என் அம்மா மட்டும் தான், இப்போ நீ. ஆனா இது பிடிக்கலை. ரொம்பவே வருத்தமா இருக்கு. இனி தயவு செஞ்சு எப்போவும் மூக்கு விடைச்சிடாத” என்றான்.
“நீங்களும் இப்படி பேசாதீங்க. இத்தனை வருஷம் மாறாதது எல்லாம் இனியும் மாறிடாது” என்றாள் பெண் தெளிவாக.
“புரிஞ்சு தான் வந்திருக்கேன். ஆனாலும். ச்சு விடு” என்றவன், அவளின் காருக்குள் அவளை அமர சொல்லி தானும் அமர்ந்து கொண்டான்.
“இன்னும் என்னவாம் உங்களுக்கு?”
“டக்கு டக்குன்னு நடக்குது எல்லாம். உன்னை பீல் பண்ணவாவது எனக்கு டைம் வேணாமா?”
“பீல் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க. அதனால நீங்க இங்க. என் முன்னாடி” என்றாள் அவள் கலங்கிவிட்ட கண்களுடன்.
“இப்போ தானே சொன்னேன்” அவன் அரட்ட,
“வருது நான் என்ன செய்யட்டும்” அதிலும் எகிறினாள்.
“இத்தனை வருஷம் வெய்ட் பண்ண வைச்சிட்டு, திடீர்ன்னு என் முன்னாடி வந்து நின்னா அழுகை வராதா?”
“இவ்வளவு பெரிய பதவியில இருந்துட்டு இதென்ன சின்ன பிள்ளை போல” என்று கண்டித்தவன், “சரி. போதும். துடை” என்று அவளின் டவலையே கொடுத்தான்.
“அந்த பதவியும் எனக்கு பிடிச்சது தான், நீங்களும் எனக்கு பிடிச்சவர் தான். எமோஷன்ஸ் எல்லோருக்கும் சமம்” என்றவள், “உங்களை கட்டிபிடிச்சுட்டு அழணும் போல இருக்கு” என்றாள் உணர்ச்சிவசபட்டவளாக.
“கட்டிபிடிச்சு அழணுமா? அதெல்லாம் வேணாம். போதும், முதல்ல கண்ணை துடை” என்றவன் தானே துடைத்தும் விட்டான்.
“இப்போதான் இன்னும் அழுகை வருது” என்றாள் மூக்கை உறிஞ்சியபடி.
“முத்து பொண்ணே! நான் என்னதான் செய்யட்டும்”
“உங்க நெஞ்சை கொஞ்சம் கொடுங்க”
“அதான் ஆல்ரெடி கொடுத்திட்டேனே”
“ஆமாவா” அழுகையிலும் சிரித்தாள் அவள்.
“என்னை லூசாக்கிடுவ நீ”
“சாய்ஞ்சு அழ தான் கேட்டேன். பரவாயில்லை. லூசா இருங்க” என்றாள் அவள் விடாமல்.
செல்வம் அவள் தலை பிடித்து ஆட்டியவன், “உன் அப்பா ஏதும் சொன்னாரா?” என்று கேட்டான்.
“அவர் தான் என்கிட்ட பேசறதே இல்லையே”
“ம்ஹ்ம். ரவி?
“அவன் கூட நான் பேசறதில்லை. என்னை ரொம்ப திட்டிட்டான். அவன் நம்பரை கூட பிளாக் பண்ணிட்டேன்”
“அவ்வளவு ரோஷமா உனக்கு?”
“அவ்வளவு பாசம். என்னை புரிஞ்சுக்கலை தானே அவன்”
“இதுக்கு பதில் சொன்னா நீ என்னையும் பிளாக் பண்ணிடுவ” என்றான் செல்வம் சிரித்து.
“நீங்களும் அவனை மாதிரி தானே பேசுவீங்க. தெரியும். காலையில கூட”
“காலையில பேச்சை விடு, அதான் உன்கிட்ட ஓடி வந்தாச்சே”
“ம்ஹ்ம். இது ஓகே. என்ன திடீர் மாற்றம்? நான் ரொம்ப படுத்துறேன்னு சொன்னீங்க?”
“இப்போவும் முத்து பொண்ணு என்னை படுத்துறா தான்”
“எப்போவும் படுத்துவேன். கேட்டதுக்கு பதில் சொல்லுங்க”
“அது” என்றவன் என்ன சொல்ல என்று யோசித்தான்.
அவனின் போன் ஒலிக்க, ரவி தான் எடுத்ததும், “டேய் நீ இன்னும் அங்க போகலையா?” என்று கேட்டான்.
“இல்லை. நான் இங்க நாச்சியோட”
“நாச்சி உன்கூட இருக்காளா? லூசாடா நீ? முதல்ல அவளை விட்டு கிளம்பு”
“எனக்கும் தெரியலை. ரவி நீ உன் அப்பாகிட்ட பேசு. அவர் ஓகே சொல்லி தான்”
“டேய் ப்ளீஸ்டா. நான் சொல்றதை கொஞ்சம் கேளு. அங்கிருந்து கிளம்பு. உன்னை யார் அந்த சொத்தை? ம்ப்ச். அவளுக்கும் பிரச்சனை வரும்டா. ட்ரேஸ் பண்றாங்க. புரியுதா உனக்கு?” ரவியின் குரலில் அவ்வளவு பதட்டம், கெஞ்சல்.
“அவளுக்கென்ன?” செல்வம் கேட்டபடி காரை விட்டு இறங்கியும் கொண்டான். அந்த சொத்து என்றதும் ஏதோ புரிந்தது அவனுக்கு.
“தள்ளி வந்துட்டியா? நான் ஊருக்கு தான் வந்திட்டிருக்கேன். நீ அவகிட்ட போகாத, அவளையும் உன்கிட்ட நிறுத்தாத. நான். நான் பார்த்துகிறேன் உன்னை” என்று சொல்லி கொண்டிருக்க,
செல்வத்திற்கு அவன் சொல்ல வருவது புரியவில்லை. ஆனால் நாச்சியை விட்டு தள்ளி செல்ல வேண்டும் என்பது மட்டும் தோன்ற, அவளின் காரை விட்டு அவனின் பைக்குக்கு அருகில் வந்துவிட்டான்.
நாச்சியும் அவன் பின்னே வர, “நீ. நீ அங்கேயே இரு. இல்லை கிளம்பிடு. போ” என்றான் செல்வம்.
நாச்சிக்கு குழப்பமே. “ஏன் போக சொல்றீங்க?” என்று அவனை நெருங்க பார்க்க, வேகமாக போலீஸ் வாகனம் வந்து நின்றது.
“செல்வா” அவர்கள் கேட்க,
“ஆமா” என்று தலையாட்டிய நொடி இவனை கைது செய்தார்கள்.