செல்வம் அமைதியாக நிற்க, அண்ணாச்சி மேலும் பேசினார். “முன்ன நாம பேசி வைச்சது தான் அதுவரைக்கும் இந்த விஷயம் வெளிய தெரியாம பார்த்துக்கலாம்” என்றார்.

“என்ன தான் நாராயணன் எனக்கு பங்காளியா இருந்தாலும், நீயும் என் தங்கச்சி மகன் தான் செல்வம். அவன் உன்னை இப்படி பேசினத்துக்காகவே நாம இதை எடுத்து செய்யலாம். அப்புறம் இவனை பார்த்துக்கலாம்” என்றார்.

செல்வத்திற்கு முன்பே ஒப்பவில்லை. இப்போது இன்னும் சுத்தம். இந்த மனுஷன் கொடுத்து நான் பொழைக்கணுமா? என்றே நினைத்தான்.

ஆனாலும் மனதின் ஓரம் நாச்சி அவனை குடைந்தாள். வலுவாக அவன் மறுக்க முடியாமல் இம்சித்தாள்.

நானா? அவளா? என்றால் நிச்சயம் நான் தான். ஆனாலும். ம்ப்ச். என்ன என்னை இப்படி பண்ணிட்டா?

செல்வம் அங்கிருந்து கிளம்ப முடிவெடுத்தான். “செல்வா. நைட்டெல்லாம் கூட யோசி. ஆனா இது தான் சரி. உன்னை காலையில ரெஜிஸ்டர் ஆபிஸ்ல எதிர்பார்ப்பேன்” என்று அண்ணாச்சி சொல்லி அனுப்பினார்.

செல்வம் தம்பியுடன் அவன் இடத்திற்கு வந்துவிட்டான். ஊரே அடங்கியிருந்தது. சுப்பிரமணிக்கு எதுவும் சொல்லவும் அச்சம்.

“ண்ணா. அவர் பேசினது தப்பு. ஆனா உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும். அதுக்காக வேண்டி யோசிண்ணா” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டு தூங்க சென்றுவிட்டான்.

செல்வம் இருளில், கடை பெஞ்சிலே அமர்ந்து கொண்டான். தலை வெடித்தது.

என்ன யோசித்தாலும், எப்படி யோசித்தாலும் இதற்கு அவன் மனம் ஒப்பவில்லை. முழுமையாக அவனை முன்னிறுத்தினான், ஒரு சதவீத தடுமாற்றம் மட்டுமே!

அந்த ஒரு சதவீதம். அவள் தான் அவனை ஒரு வழி செய்கிறாள்.

தொண்ணூற்றி ஒன்பது சதவீதத்தை, ஒரு சதவீதம் பந்தாடியது!

நூறு சதவீதமாக முழுமடைய விடவில்லை அவள். ஒரு நாளைக்கே குடைகிறாள்.

இல்லை அவளின் அந்த காதல். அவன் உணர்ந்தானே அந்த காதல், அது தான் அவனை தடுமாற வைக்கிறது.

அப்படியே அந்த பெஞ்சிலே படுத்தவன், ஒரு கட்டத்தில் தூங்கியும் போனான். ஒரு நேரமாக ஏதோ ஒரு உந்துதலில் கண் விழித்து பார்க்க, அவளே தான்.

முத்து நாச்சி அவனுக்கு முன் நின்றிருந்தாள்.

கனவோ? கசக்கி எழுந்தமர, நிஜமாய் அவள் தான்.

“ஹேய். நீ எங்க இங்க” கரகரத்த குரலில் கேட்டான்.

முத்து நாச்சி, “உட்கார்ந்துக்குவா?” என்று கேட்டபடி அவன் பக்கத்தில் அமர, செல்வம் சென்று முகம் கழுவி வந்தான்.

தெளிவாக, நேரம் பார்க்க அதுவோ அதிகாலை நான்கு என்றது. “இந்த நேரத்துல எதுக்கு வந்த?” என்று கேட்டான்.

“வேலைக்கு கிளம்புறேன்” என்றாள் அவள்.

“ஓஹ் இன்று திங்கள் கிழமையா. இவள் வெளியூரில் தானே வேலை பார்ப்பது” தனக்குள் சொல்லி கொண்டவன் கண்கள் அவளை அளவெடுத்தது.

குளித்து நீட்டான சுடியில் ப்ரெஷாக வந்திருந்தாள். “எப்படி வந்த?” என்று சுற்றி பார்க்க, அவளின் கார் நின்றிருந்தது.

“என்ன விஷயம்?” என்று கேட்டான் செல்வம்.

“நீங்க தான் சொல்லணும்” என்றாள் அவள்.

என்ன சொல்லணுமாம்? சொத்து பத்தி ஏதும்? ம்ஹூம் வாய்ப்பில்லையே. இவர்களின் பேச்சை ரவியிடம் கூட சொல்ல வேண்டாம் என்றல்லவா அண்ணாச்சி கேட்டு கொண்டிருந்தார்.

செல்வம் அவளையே பார்த்து யோசிக்க, “உட்காருங்க” என்று இடம் காட்டினாள்.

“இந்த நேரத்துக்கு வந்திருக்க”

“முதல்ல உங்களுக்கு என்னை தெரியாது. தள்ளி இருந்து பார்த்துட்டு போயிடுவேன். இனி அப்படி என்ன? கிட்டக்க பார்த்துட்டு பேசிட்டு, முடிஞ்சா ஒரு டீ குடிச்சுட்டு போலாம்ன்னு”

“ம்ப்ச். நீ கிளம்பு” என்றுவிட்டான்.

முத்து நாச்சி அவனையே உர்ரென்று பார்த்திருக்க, “நாம தனியா இருக்கிறது சரின்னு நினைக்கிறியா? கிளம்பு முதல்ல. நமக்குள்ள எதுவும் நடக்கலைன்னா உனக்கு கஷ்டம். தேவையில்லாத பேச்சு வேண்டாம்” என்றான்.

“அப்போ உங்களுக்கு நான் ஓகே இல்லை” முத்து நாச்சி கேட்டாள்.

“உனக்கு தான் நான் ஓகே இல்லை, புரிஞ்சுக்கோ”

“நான் சொன்னேனா”

“ஊரே சொல்லணுமா உனக்கு?”

“ஊர் தான் உங்களை காதலிக்குதா?”

“யம்மா பரதேவதை. ஊர்ல தான் நாம இருக்கோம். அப்படி எல்லாம் எதையும் கண்டுக்காம வாழ்ந்திட முடியாது”

“அப்போ என்னை கண்டுக்காம வாழ முடியும் இல்லை”

“முத்து நாச்சி தாயே என் தலையில இருந்து கொஞ்சம் இறங்கு. என்னால முடியலை” என்றான் செல்வம்.

பெண் அமைதியாக அவனை பார்த்திருக்க, “உனக்கு மட்டுமில்லை, எனக்குமே என்னால புரிய வைக்க முடியலை. நொந்து போய் தான் இருக்கேன் நான்” என்றான் சோர்ந்து போய். .

“என்னாச்சி? ஏதும் பிரச்சினையா” முத்து நாச்சி கவலையாக கேட்க,

“தெரியலை” என்றபடி அவள் பக்கத்தில் அமர்ந்து தலை பிடித்து கொண்டான்.

பெண் அவன் தோளை தொட போய் கையை பின்னிழுத்து கொண்டாள். எல்லோரையும் நான் நோக வைக்கிறனா?

அப்பா, அம்மா, அண்ணா, இவர் யாருக்குமே பிடிக்காத ஒன்னை நான் மட்டும் ஏன் இழுத்து பிடிக்கிறேன்?

இவர்களை எல்லாம் மீறியா என் காதல்?

நேற்றிரவு ரவிக்கும், இவளுக்கும் அதிகமான வாக்குவாதம்.

இறுதிவரை அண்ணன்காரன் ஒத்துக்கொள்ளவே இல்லை. இவளும் விட்டு கொடுக்கவில்லை. ஆனாலும் சோர்ந்து போய் ஆறுதலுக்காக தான் இவனிடம் வந்தாள். இவனுமே வாடி போய் இருக்க, உள்ளம் கலங்கி போனது.

“என்னை இப்படியே விட்டா கூட சந்தோஷமா இருந்துக்குவேன். ஆனா அப்பா வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க சொல்லும் போது எனக்கு முடியலை” என்றாள் கமறிய குரலில்.

செல்வம் அவளை பார்க்க, கண்கள் கலங்கி போய் இருந்தது. கட்டுப்படுத்தி கொண்டவள், “அப்பா என்கிட்ட பேசறதே இல்லை” என்றாள்.

“வருஷ கணக்கா எனக்குள்ளே நான் உங்களை நினைக்கும் போது கூட இவ்வளவு வலிக்கலை. வெளியே சொல்லி உங்களுக்கு என் மனசை சொல்லி நீங்க எல்லாம் என்னை..” நிறுத்திக்கொண்டாள்.

அவ்வளவு சீக்கிரம் உடைந்து போக கூடாது. வைராக்கியமாக பார்வையை மாற்றினாள், தனக்குள்ளே எண்ண ஆரம்பித்தாள்.

செல்வம் அவளையே பார்த்திருந்தவன், “நான் படிச்சிருந்திருக்கலாம்” என்றான்.

நாச்சி அவன் பக்கம் திரும்ப, “இப்போவரை இப்படி தோணினதில்லை. ஆனா இப்போ ரொம்ப அதிகமா தோணுது” என்றான்.

“லைப் டர்னிங் பாயிண்ட் எல்லோருக்கும், எப்போவும் கிடைச்சிடாது. எனக்கு கிடைக்குது, ஆனா ஏத்துகிற நிலையில தான் நான் இல்லையே” என்றான்.

“நல்லது கெட்டது எடுத்து சொல்லவும் யாரும் இல்லை, நாமளா துணிச்சு முடிவெடுக்கவும் முடியலை”

“எல்லாம் இருந்தும் தனியா நிற்கிற வலி இன்னைக்கு அதிகமா இருக்கு” என்றான்.

நாச்சி தாள முடியாமல்  அவனை நெருங்கி கை கோர்த்து கொள்ள, செல்வத்திற்கு அதை ஏற்றுக்கொள்ள தான் இயலவில்லை.

“என் கண்ட்ரோல் விட்டு என்னை வெளியே வர வைக்காதயேன் ப்ளீஸ்” என்றான்.

“கண்ரோல்ல இருந்து என்ன சாதிக்க போறீங்க. அதுவும் என்கிட்ட கண்ட்ரோலா இருக்கிறதும் வேஸ்ட் தான்” என்றாள் பெண்.

“எங்க  எனக்கு பிடிக்காததை  செய்ய வைச்சிடுவியோன்னு பயமா இருக்கு”

“செய்யாதீங்க”

“அப்புறம் நீ, நான் எப்படி”

“என்னாச்சி? யார் என்ன செய்ய வைக்கிறா? நானா?”

“நீ தான், ஆனா நீ இல்லை”

“தெளிவா சொல்லுங்க”

“நேரம் ஆச்சு பாரு. நீ கிளம்பு” என்று அவள் கையை விலக்கி விட்டு தள்ளி வந்தான்.

“நீங்க சொல்றது எனக்கு புரியலை. ஆனா உங்களுக்கு பிடிக்காததை எல்லாம் செய்யணும்ன்னு அவசியம் இல்லை. அது நானா இருந்தாலும் சரி தான்” என்று அவன் கண்களுக்குள் பார்த்து சொன்னாள்.

செல்வம் தலையை கோதி கொண்டவன், “நான் பிடிக்காதது சொன்னது நீ இல்லை. ஸ்ஸ். இதை விடு” என்றான்.

இருவரும் தத்தளித்தனர். முழுதாக ஒன்ற முடியாமல், மனம் விட்டு பேச முடியாமல் பெரிய இடைவெளி.

முத்து நாச்சிக்கு எங்கே அவனை கட்டிபிடித்து நீ வேணும் என்று அழுது விடுவோமோ என்று பயம் வந்துவிட்டது.

பிடித்தவர்கள் முன் தைரியம், தன்னம்பிக்கை எல்லாம் எங்கு தான் சென்று ஒளிந்து கொள்ளுமோ?

கண்கள் சிவந்து, மூக்கு விடைத்து வெடிக்க ஆரம்பிக்க, அங்கும், இங்கும் பார்த்து தன்னை சமாளிக்க முயன்றாள். செல்வத்திற்கு அவள் பாடு நன்றாகவே உணர முடிந்தது.

நொடியே அதிக கணம் கண்டது. இனியும் அவன் முன் இருக்க கூடாது என்று திடமாக தோன்றிவிட்டது.

வலிக்கும் போது புன்னகையை இதழில் சுமப்பது பெரும் பாரம்!

அவன் கை பிடித்து கொண்டவள், “உங்களை நான் ரொம்ப படுத்துறேனா. எனக்கு தெரியலை. நீங்க.. நான். வேண்டாம்ன்னா விட்டுடுங்க. ஒன்னும் பிரச்சனையில்லை. ஐ கேன் மேனேஜ்” என்றவள், அவனின் கைக்கு சிறு அழுத்தம் கொடுத்து, கிளம்பினாள்.