கண்ணே முத்து பெண்ணே 5

அண்ணாச்சி பரபரப்பாக சாலையையவே பார்த்திருந்தார். நேரம் நெருங்கிவிட்டது. செல்வம் இன்னும் வரவில்லை.

“அவன் வர மாட்டான்” என்றார் நாராயணன்.

“அவன் வரலைன்னா ஆப்பு நமக்கு தான். மறந்துட்டியா நாராயணா” அண்ணாச்சி கேட்க,

“எல்லாம் தெரிஞ்சு தானே இறங்கினோம், பார்த்துக்கலாம்” என்றார் அவர்.

“உனக்கு உன் பொண்ணு பைத்தியம் பிடிச்சுடுச்சு. அவளை காப்பாத்துறேன்னு நாம தான் மாட்டிக்க போறோம்” அண்ணாச்சி கோவமாக பேசினார்.

“நான் மாட்டினா மாட்டிகிட்டு போறேன். ஆனா இவனுக்கு என் பொண்ணை  கண்டிப்பா கொடுக்க மாட்டேன்”

“அதான் முடிச்சு விட்டுட்டுடியே. நிம்மதியா இரு. ஆனா எங்க பேர் மட்டும் வெளியே வர கூடாது தெரியுமில்ல”

“தெரியாம தான் உன்னோட சேர்ந்தனா? உயிரே போனாலும் வாய் திறக்க மாட்டேன். போதுமா?”

“நாராயணா உன்னை நாங்க அப்படி எல்லாம் விட்டுடவும் மாட்டோம்”

“விட என் மகனும் உங்களை விடமாட்டான்” என்றார் நாராயணன் பெருமையாக.

“ம்ப்ச். அதுவரைக்கும் ஏன் போகணும்ன்னு தான் நாம செல்வத்தை பிடிச்சோம். உன்னோட கோவத்துல அதையும் முடிச்சுவிட்டுட்ட”

“எனக்கு என் பொண்ணு வாழ்க்கை தான் முக்கியம்”

“ஆமா.. ஆமா தான்” நாராயணன் கடுப்பாக தலையாட்டி கொண்டிருக்க, அங்கு சுப்பிரமணி அவன் அண்ணன் முகத்தையே பார்த்திருந்தான்.

நேரம் போய் கொண்டிருந்தது, செல்வமோ டீக்கு மேல் டீ அடித்து கொண்டிருந்தான்.

என்ன முடிவெடுத்திருக்கிறான் என்று புரியவில்லை. “ண்ணா” என்று அழைத்தவன், “நாம அங்க போகலையாண்ணா?” என்று கேட்டான்.

“போறோம்” என்றான் செல்வம்.

“ண்ணா” தம்பி மகிழ்ந்து போனான்.

செல்வத்திற்கு இது போல் அவளும் மகிழ்வாளா? என்று யோசனை அவளிடம் சென்றது.

சந்தோஷ படுவா. கண்டிப்பா சிரிப்பா. இனி ஒரு நாள் இந்த மாதிரி அவ போக கூடாது!

எவ்வளவு சூப்பரா வந்தவ கிளம்பும் போது எப்படி ஆயிட்டா. கண் எல்லாம் சிவந்து போய், அப்படியென்ன?

என்னை எல்லாம் போய் லவ் பண்ணிட்டு இந்த கஷ்டம் படணுமா? அந்தளவுக்கு நான் ஒர்த் இல்லை. அவ காதலும் தான்.

ஆனாலும் அவளுக்காக இது பண்ணனும். எனக்குமே அவளை பிடிக்க தானே செய்யுது. செஞ்சா தான் என்ன?

இப்போ என்ன அவளோட அப்பா தானே? போய் தொலையட்டும்.

ஒருவாறு நாச்சி என்ற பெண்ணுக்காக தன்னை சமாதானம் செய்து கொண்டான்.

வாழ்ந்திடுவேன். நானும் வாழ்ந்திடுவேன். நானும், அவளுமா சூப்பராவே இருப்போம்.

இது தான், அவள் தான் என்று முடிவெடுத்துவிட்டான். பார்த்துக்கலாம்!

ரவிகிட்ட, அப்பாகிட்ட பேசினா கொஞ்சம் நல்லா இருக்கும். ஆனா அவங்க வேணாம்ன்னு கேட்டுக்கிட்டாங்களே?

‘அட்லீஸ்ட் இவரை பார்த்துட்டாவாவது போலாம்ன்னா இந்த மனுஷன் இன்னும் வரலை’ அவன் அப்பாவை எதிர்பார்த்தான்.

மேலும் சில நிமிடம் சென்றே தண்டபாணி வந்தார். செல்வம் அதற்குள் தயாராகி இருக்க, தானே அவருக்கு டீ போட்டான்.

“என்ன சுப்பு? எங்க காலையிலே ஜோரா கிளம்பி நிக்கிறீங்க” என்று கேட்டபடி டீ வாங்கிக்கொண்டார்.

“கிளம்பும் போதே கேட்கலாமா பெரியப்பா?” சுப்பு சொல்ல,

“ஆமா கோடி ரூபாய் சொத்து டீல் பேச போறீங்க. கேட்டா நடக்காது தான். போங்கடா வெட்டி பயலுகளா?” என்று டீ குடித்தார் அவர்.

சுப்பிரமணி அவரை உர்ரென்று பார்க்க, “இன்னைக்கும் டீ சுமார் தான்” என்றார் அவர் மொத்தமாக குடித்து.

“சுமாரான டீயையவே இந்த குடி குடிக்கிறார்” செல்வம் கேலியாக கேட்டபடி அவர் முன் இன்னொரு டீ, பிஸ்கெட் வைத்தான்.

தண்டபாணி பிஸ்கெட் எடுத்து டீயில் தொட்டு கொண்டவர், “டேய் சுப்பு. என்னமோ இரண்டு மூணு நாளா அவனோட அம்மா கனவுல வரா. அவனை கொஞ்சம் பார்த்து இருக்க சொல்லு” என்றார் மனிதர்.

“அப்போ கூட என் கனவுல வரமாட்டாங்க அவங்க” செல்வம் கேட்க,

தண்டபாணி பொறுமையாக சாப்பிட்டு முடித்தவர், “எப்போ நீ அவ எதிர்பார்க்கிற மாதிரி பொழைக்கிறியோ அன்னைக்கு கண்டிப்பா வருவா” என்று நேரடியாக சொன்னவர், கிளம்பிவிட்டார்.

செல்வம் அமைதியாக நிற்க, “ண்ணா உங்களுக்கு ஒரு நல்லது நடக்குதுன்னு கூட பெரியம்மா வந்திருக்கலாம். அவருக்கு சொல்ல தெரியலை” என்றான் சுப்பிரமணி.

செல்வம் தனக்குள் சிரித்து கொண்டவன், தம்பியுடன் கிளம்பினான்.

“அண்ணாச்சி. அண்ணாச்சி” என்று ஓடி வந்தான் ஒருவன்.

“என்னடா” அவர் எரிச்சலில் எரிந்து விழ,

“செல்.. செல்வம் வந்திட்டிருக்கான் அண்ணாச்சி” என்றான் அவன்.

“என். என்ன உண்மையாவா?” அண்ணாச்சி மகிழ்ந்து போனவராக முன்னால் பார்க்க, பைக் உள்ளே வந்தது.

சுப்ரமணியுடன் வந்தவனை நாராயணன் கலவையான மனதுடன் பார்த்திருந்தார். அவர் பெண்ணுக்கு இவனை பிடித்தது தெரிந்ததில் இருந்து இவருக்கு அவனை பிடிக்காமல் போய்விட்டது.

அவன் மேல் தனிப்பட்ட கோவம், வெறுப்பு எல்லாம் இல்லை. என் பெண் இவனை விட்டால் போதும் என்ற அப்பாவின் தீர்மானம் மட்டுமே இது.

ஆனாலும் இப்போது, இந்த நொடி ஏனோ அவருக்கு மனது உறுத்த தான் செய்தது. அவன் வராதது ஒருவகையில் நிம்மதியை கொடுத்திருக்க, ‘இப்போ ஏன் வந்தான்?’ என்ற கேள்வியுடன் நின்றவர் முன் வந்தான் செல்வம்.

“ஏன் லேட் செல்வா? சரி ஆரம்பிக்கலாமா?” என்று தன் ஆர்பரிப்பை கட்டுப்படுத்தியே கேட்டார் அண்ணாச்சி.

செல்வம், “சரி அண்ணாச்சி” என்றான்.

நாராயணன் அவனை ஒருமாதிரி பார்த்து நடக்க, செல்வம் மூச்சை இழுத்துவிட்டபடி அவர்களுடன் சென்றான்.

ரெஜிஸ்ட்ரேஷனுக்கு எல்லாம் தயாராக இருக்க, அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிட்டது.

செல்வம் சில கோடிகளுக்கு அதிபதியாகிவிட்டான்.

அண்ணாச்சி அவனை கட்டிபிடித்து வாழ்த்து சொல்ல, நாராயணன் தள்ளி சென்றுவிட்டார்.

“நாம அப்புறம் போய் அந்த சொத்தை பார்க்கலாம் செல்வா. அதுல என்ன செய்றதுன்னு யோசிக்கலாம். இப்போ வீட்டுக்கு போ” என்று எல்லாம் உடனே கிளம்பிவிட்டனர்.

செல்வம் அங்கேயே அமர்ந்து கொள்ள, “ண்ணா” என்றான் சுப்பிரமணி. ஒருமாதிரி மிரண்டு போய் இருந்தான் அவன்.

“அந்த சொத்து. அவங்க எழுதினது, அது. அதுண்ணா” என்று திக்க,

“என்ன சுப்பு? தெளிவா சொல்லு” என்றான் செல்வம்.

“ண்ணா உங்களுக்கு அது எந்த சொத்துன்னு தெரியலையா? அதான் நம்ம மெயின் ரோட்ல பெரிய கட்டிடம், பின்னாடி கூட ஏக்கர் கணக்குல இடம் இருக்குமே. அந்த சொத்துண்ணா” என்றான்.

செல்வமுமே கண்டு கொண்டான். உடன் வேறு சில கேள்விகளும்.

இவ்வளவு குறுகிய நாட்களில் ரெஜிஸ்டர் செய்ய முடியும் என்றால், யாரோ ஒரு பெரிய ஆளின் கை இருக்கிறது.

உடன் ரெஜிஸ்ட்ரேஷனுக்கு தேவையான எதுவும் அவன் இவர்களுக்கு கொடுக்கவில்லை. ஆனால் எல்லாம் தயாராக இருந்தது. சாட்சி கையெழுத்து போட்ட சுப்ரமணியும் சேர்த்து தான்.

செல்வம் எழுதும் முன் பத்திரம் வாங்கி படித்து பார்க்க, சொத்தும் நாராயணன் பேரில் இருந்து இவனுக்கு எழுதப்படவில்லை. வேறு யாரோ ஒருவர்.

அண்ணாச்சி இவனின் கேள்வியான பார்வையில், “கணக்கு பிரச்சனை வரும் செல்வா அதான்” என்றவர், அடுத்து வேகமாக எல்லாம் முடித்துவிட்டார்.

செல்வம் நினைத்திருந்தால் அங்கேயே மறுத்து கிளம்பியிருக்கலாம். ஆனாலும் நின்றான்.

சுப்பிரமணிக்கு படபடப்பு இன்னும் அடங்கவில்லை. “ண்ணா இது வேற எதுவுமோ?” என்று பயத்துடனே குரலை தாழ்த்தி கேட்டான்.

இவ்வளவு பெரிய சொத்தை தூக்கி கொடுப்பார்களா என்று அச்சம்.

“அண்ணாச்சி காலையில ஆறு மணிக்கே பேசினார் மணி, உனக்கு அது வேண்டாம்ன்னா பிரச்சனையில்லை. அதுல வருமானம் வந்ததும் சொத்தை நாராயணனுக்கே திருப்பி கொடுத்திடலாம்ன்னு சொன்னார்” என்றான் செல்வம்.

“சரி சரிண்ணா” என்றான் மணி.

அவனுக்காக மட்டுமே அந்த சமாதானம். ஆனால் செல்வத்திற்கு நிச்சயம் புரிய தான் செய்தது. இது ஏதோ வில்லங்கம் என்று.

சவாலுக்காக மட்டுமே என் பேர்க்கு சொத்து எழுதனும்ன்னு என்ன இருக்கு? செல்வம் தனக்குள் எழுந்த கேள்வியை தன்னுள்ளே அழுத்தி கொண்டான்.

அவனுக்குள்ளும் அனுமானங்களும் நிறையவே இருந்தது. அண்ணாச்சி, நாராயணன் பற்றி ஒன்றும் தெரியாதவன் இல்லையே இவன்?

ஆனால் நான் ஏன்? கை நீட்டினா நிறைய பேர் வருவாங்களே? அவனுக்கு அது தான் புரியவில்லை.