கண்ணே முத்து பெண்ணே 4

செல்வாவிற்கு ரெஜிஸ்டர் ஆபிஸ் ஏன் என்ற கேள்வி?

அதை கேட்கவும் செய்ய, “நீ முதல்ல வந்து இப்படி உட்காரு” என்று திரும்ப தன் பக்கத்தில் அமர வைத்து கொண்டார் அண்ணாச்சி.

அவனுக்கு குடிக்க டீ கொண்டு வர சொல்ல, “இருக்கட்டும் அண்ணாச்சி” என்று மறுத்துவிட்டான்.

“அது செல்வா. நாராயணனுக்கு அவ ஒரே பொண்ணு. பாசம் ஜாஸ்தி. அதான்” என்றார்.

“பாசம் ஜாஸ்திக்கும் இதுக்கு என்ன சம்மந்தம்” செல்வம் கேள்வியாக பார்க்க,

“க்கும். அதான் செல்வா அவன் பொண்ணுக்கு அவர் செய்ய பார்க்கிறார்”

“அண்ணாச்சி. ப்ளீஸ் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க”

“உன்பேர்ல சொத்து ஒன்னு எழுத போறோம்” என்றார் நாராயணன்.

“எனக்கெதுக்கு சொத்து?” செல்வா எழுந்து கொண்டான்.

“உனக்குன்னா உனக்காக இல்லை. அவர் பெண்ணுக்காக செல்வா” அண்ணாச்சி சொல்ல,

“அதை அவர் பொண்ணுக்கே எழுத சொல்லுங்க அண்ணாச்சி. என்பேர்ல எதுக்கு?” என்றான் செல்வா.

“அவ பேர்ல எழுத எனக்கு தெரியும். இது உனக்கு தான்” நாராயணன் சொல்ல,

“என்ன அண்ணாச்சி இது?” செல்வமிற்கு கோவத்தோடு புதிராகவும் இருந்தது.

“செல்வா. நான் சொல்றேன். நீ கொஞ்சம் பொறுமையா உட்காரு” என்று அவன் கை பிடித்து திரும்ப அமர வைத்த அண்ணாச்சி,

“இப்போ நான் சொல்றதை நீ சரியா புரிஞ்சுக்கணும் செல்வா” என்றார்.

“உன்கிட்ட குறைன்னு ஒன்னும் கிடையாது. ஆனா சொல்லிக்கிற அளவு அடையாளமும் இல்லை. இரு செல்வா. நான் பேசி முடிச்சிடுறேன். உங்க இரண்டு பேர் பொருத்தம் யார் கண்ணுக்கும் உறுத்த கூடாது”

“நாளைபின்ன யாரும் அவ மேல, நீ கீழன்னு  பேசினா அது நாராயணனுக்கும் வருத்தம் தான். படிப்பு, வேலைன்னு இனி எதையும் மாத்த முடியாது. அதுக்கு பதில் உனக்குன்னு ஒரு கௌரவமான தொழில்”

“அண்ணாச்சி. இதோட போதும், நீங்க சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை” என்று செல்வா ஒரேடியா முடித்தான்.

“அட இரு செல்வா. நான் பேசி முடிக்கிற வரைக்கும் கூட பொறுக்க மாட்டேன்னா என்ன பண்றது? நாராயணன் கொடுக்கிற சொத்தும் உனக்கான ஒரு ஆரம்பம் போல தான்”

“அண்ணாச்சி. அவர் கொடுத்து நான் ஆரம்பிக்க வேணாம். விட்டுடுங்களேன்” என்று செல்வா கிளம்ப போனான்.

“ஏன் உனக்கே  உன் மேல நம்பிக்கை இல்லையா? உன்னால எதையும் சாதிக்க முடியாதுன்னு சொல்றியா?” என்று கேட்டார் நாராயணன்.

செல்வா நின்று அவரை பார்க்க, “என்ன அப்படி தானே? உனக்காக என் பொண்ணு அவ படிப்பு, அடையாளத்தை எல்லாம் கணக்கில வைக்காம இறங்கி வரா. ஆனா நீ பயந்து ஓடுறதிலே குறியா நிக்கிற. உன்னை போய் என் பொண்ணுக்கு எப்படி பிடிச்சு தொலைச்சுதுன்னு எனக்கு இப்போ வரை புரியலை” என்றார் அவர்.

“பார்த்து பேசுங்க” செல்வா எச்சரிக்க,

“இல்லாததை எதையும் நான் பேசலை. என் பொண்ணை கட்டிக்க போறவன் அவளை விட உயரமா இருக்கலைன்னா கூட போகுது. சரி சமமா கூட இல்லைன்னா எப்படி?” கொஞ்சம் நக்கலாகவே கேட்டார்.

‘உங்க பொண்ணு தான் வேணும்ன்னு நான் வந்து நிக்கலையே?’ செல்வாவிற்கு வாய் வரை வார்த்தைகள் வந்துவிட்டது. ஆனால் நாச்சி எனும் பெண்ணுக்காக கட்டுப்படுத்தி கொண்டான். அவளின் விருப்பத்தை கீழிறக்க அவனுக்கு மனம் ஒப்பு கொள்ளவில்லை.

கோவத்தில் சிவந்துவிட்ட அவன் முகத்தில் அண்ணாச்சி சுதாரித்து கொண்டவர், “இரு நாராயணா. அதிகமா பேசாத. செல்வா சொன்னா புரிஞ்சுக்க கூடியவன் தான்” என்றவர்,

“இங்க பாரு செல்வா. அவர் உனக்கு கொடுக்க கூடிய சொத்து ஒரு பழைய கட்டிடமும், கொஞ்சம் இடமும் தான்.  உன் உழைப்புல அதுல வருமானம் வரதுக்கு வழி பண்ணனும்” என்றார்.

“இது எனக்கு வைக்கிற பரீட்சையா  அண்ணாச்சி?” செல்வா கேட்க,

“அப்படியும் வைச்சுக்கலாம். ஏன் உன்னால முடியாதா? வாழ்க்கையில கொஞ்சம் கூட குறிக்கோள் இல்லாம, வளர்ச்சி இல்லாம, ஏதோன்னு போற போக்குல இருக்கிறவனுக்கு நான் என்  பொண்ணை தூக்கி கொடுக்கணுமா?” என்று நாராயணன் கோவமாக கேட்டார்.

“சரி எனக்கு கொடுக்கவே வேணாம். நீங்களே உங்க பொண்ணை வைச்சுக்கோங்க” என்றுவிட்டான் செல்வம்.

“அதானே உன்கிட்ட போய் வேறென்ன எதிர்பார்க்க முடியும். என் பொண்ணுக்கு இருக்கிற அந்த போராடுற குணம் கூட உன்கிட்ட இல்லை. ஒரு சின்ன சவாலையும் கூட ஏத்துக்க முடியாத நீ எல்லாம் என்ன ஆம்பிளை?” வேண்டுமென்றே தான் தடித்த வார்த்தையை விட்டார்.

“ஏய்” என்று செல்வம் கர்ஜித்தபடி பாய்ந்து  அவர் சட்டையை பிடிக்க போய்விட்டவன், ஒரு அடி இடைவெளியில் நின்றுவிட்டான்.

அண்ணாச்சி, சுப்பிரமணி வேகமாக அவனை தடுக்க வர, செல்வம் கோவத்தை அடக்க முடியாமல் அங்கிருந்த சேரை தூக்கி அடித்த வேகத்தில் சேர் சில்லு சில்லாக நொறுங்கி போனது.

நாராயணன் அவன் கோவத்தில் மிரண்டு போக, அண்ணாச்சிக்கு புதிய செல்வமாக தெரிந்தான். இவன் எப்படி இந்த வேலைக்கு? அவருள் ஒரு அச்சமும் முளைத்தது.

செல்வம் இன்னும் கோவம் அடங்காதவனாக நிற்க, “ண்ணா” என்று சுப்பிரமணி நெருங்கி அவன் கையை கெட்டியாக பிடித்து கொண்டான்.

“என்.. என்ன நாராயணா இது? அதிகமா பேசாத. செல்வா. க்கும். நீ இப்படி வாப்பா. மணி அவனுக்கு கொஞ்சம் தண்ணீர் கொடு” என்று அண்ணாச்சி சமாளிக்க பார்க்க,

செல்வம் நகரவே இல்லை. நாராயணனை பார்த்தபடியே நின்றான். சுப்பிரமணி, “அண்ணா. வாங்க உட்காருங்க” என்று அவனை இழுத்து அமர வைக்க முயற்சிக்க, அவனை நகர்த்த தான் முடியவில்லை.

நாராயணன் அவனை தூண்டிவிடவே அப்படி பேசினார். உடன் அவன்மேல் இருந்த கோவமும் தான். ஆனாலும் அதற்காக இவன்  என் சட்டையையவே பிடிக்க வருவானா? அவன் மேல் ஓர் வஞ்சமும் ஒட்டி கொண்டது.

“செல்வா. என்னை பாருப்பா. அவன் பேசினது தப்பு. விட்டுடு” என்றார் அண்ணாச்சி.

“என்ன என்ன தப்பு? நான் கேட்டதுல என்ன தப்பு இருக்கு? சொத்து நான் கொடுக்கிறேன். வருமானத்தை நீ கொண்டு வான்னு சொன்னேன். அதுல என்ன தப்பு இருக்கு?” நாராயணன் பேசினார்.

“நாராயணா.  அமைதியா இரு”

“நான் ஏன் அமைதியா இருக்கணும், இவன். இவன் என் சட்டையை பிடிக்க வருவானா? ஒரு சவாலை துணிஞ்சு ஏத்துக்க முடியாதவன் என் சட்டையை பிடிக்க வருவானா?”

” சட்டையை பிடிக்கலை இல்லை” என்றான் செல்வா அழுத்தமாக.

“எங்க நீ பிடிச்சு தான் பாரேன்” நாராயணன் எகிறினார்.

“இப்படியே போச்சு, நடக்க தான் செய்யும் அண்ணாச்சி”

“நடக்குமா. அதையும் பார்த்துடலாம். உன்னை எப்படி செய்யணும்ன்னு எனக்கு தெரியும்”

“கொடுக்கிற சொத்தும் என்னை செய்றதுக்கு தானா?” செல்வம் கூர்மையாக கேட்க,

“செல்வா. செல்வா அப்படி எல்லாம் எதுவும் இல்லை. முதல்ல நீங்க இரண்டு பேரும் நிதானம் ஆகுங்க. அவர் பொண்ணு கொடுக்கிறது, கொடுக்காம போறது எல்லாம் அப்பாற்பட்ட பிரச்சனை செல்வா. ஆனா நீ இவ்வளவு நேரா நின்னா பொழைக்க முடியாது, பார்த்துக்கோ” என்றார் அண்ணாச்சி.

“இவர் கொடுக்கிற சொத்தை வைச்சு நான் பொழைச்சிப்பேனா அண்ணாச்சி”

“கண். கண்டிப்பா”

“அப்போ அந்த சொத்துக்கே அவர் பொண்ணை கட்டி வைக்க சொல்லுங்க. பொழைச்சிக்குவா” என்றான் கேலியாக.

நாராயணன் பல்லை கடிக்க, “என்ன செல்வா? நீ இந்த சம்மந்த பேச்சை விட்டு, உனக்காகவே கூட இந்த சவாலை ஏத்துக்கலாம்” என்றார் அண்ணாச்சி.

“என் பெத்தவருக்கே நான் என்னை நிரூபிக்கணும்ன்னு நினைச்சதில்லை அண்ணாச்சி. இவர் யார் எனக்கு?” என்றான் செல்வா.

“சரி இவருக்கு வேணாம். உன்னை தான் கட்டுவேன்னு நிக்கற பொண்ணை யோசிக்கலாம் இல்லை” என்றார் மெல்ல.

செல்வத்திற்கு சட்டென வார்த்தைகள் வரவில்லை. மறுக்க முடியவில்லை. கண்டுகொண்டார் அண்ணாச்சி.

“யோசிச்சு பாரு செல்வா. இதை முதலீடா எடுத்துக்கோ. நீ சம்பாதிச்சு சொத்துக்கான பணத்தை செட்டில் பண்ணிட்டு, அப்பறம் நாம கல்யாணத்தை வைச்சுக்கலாம்”

“அதுவரைக்கும் அண்ணாச்சி. ரொம்ப நாள் ஆகுமே” என்றான் சுப்பிரமணி இடையிட்டு.

“இல்லை. ஆகாது. செல்வம் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அவன் வருமானம் சீக்கிரம் பார்த்துடுவான்”