“அவனை வெளிநாடு போக சொன்னப்போ முடியாதுன்னு உன்கூடவே இருந்துட்டான். பணம் கையில வைச்சிருந்தாலும், அவனுக்குன்னு தனியா பொழைப்பு வேணாமா? நாளைபின்ன பொண்ணு பார்க்க போனா இதெல்லாம் கேட்க மாட்டாங்களா? பார்த்து ஏதாவது செஞ்சி விடு” என்று பேசியிருந்தார் மனிதர்.

சித்தப்பா சொன்னதில் இருந்த உண்மை செல்வத்திற்கும் புரிந்தது.

செல்வத்தின் டீ கடை இப்போது ஒரு பிராண்டாக பல நகரங்களில் இடம் பெற்றிருந்தது. அதில் மணியும் பங்குதாரர் என்றாலும், அவனுக்காக யோசித்து தனியே உணவகத்தை திறந்துவிட்டான்.

முதலில் டீ கடை, அடுத்த மாதத்தில் இருந்து உணவகமாக இயங்கும். இரண்டு மாடி கட்டிடம். உரிமை எல்லாம் மணிக்கே தான்.

“இந்த இடத்தையும் மணி அவர் பேர்ல எழுத்திட்டிருந்தா நிறைவா இருந்திருக்கும்” முத்து பெண் கணவனிடம் சொல்ல,

“முடியவே முடியாதுன்னு நின்னுட்டான். என்ன பண்ண? விடு பின்னாடி பார்த்துக்கலாம்” என்று செல்வம் சொன்னான்.

தண்டபாணி மகனுக்கு கொடுத்திருந்த பங்கு அது. நெடுஞ்சாலை வந்ததில் ஏகத்திற்கும் மதிப்பு கூடி போக, அதிலே மணிக்கான உணவகம்.

சூரியன் உதித்து வெளிச்சத்தை பரப்ப, விருந்தினர்கள் வர ஆரம்பித்தனர்.

“கடை திறக்க எங்களை எல்லாம் கூப்பிடலை. நீங்களே திறந்துகிட்டீங்க போல” என்று உறவுகள் பேச, செல்வம் யாருக்கும் பதில் சொல்லவில்லை.

பத்திரிக்கை அடிக்கலாம், பெருசா செய்யலாம் என்று ரவி முதலிலே சொன்ன பொழுது, “தேவையில்லை” என்று மறுத்துவிட்டான் செல்வம்.

“நான் கஷ்டப்பட்டபோ யார் என்கூட இருந்தாங்களோ, அவங்க தான் இப்போவும், எப்போவும் என்னோட இருக்கணும். வேற யாரும் தேவையில்லை” என்று முடித்திருந்தான்.

அதன்படி வீட்டினர்களை கூட அழைக்கவில்லை. செல்வத்திற்குள்  இப்படி ஒரு வைராக்கியமா என்று தான் ரவிக்குமே நினைக்க தோன்றியது.

“நல்லவனா இருக்கிறதுக்கு அர்த்தம் முட்டாளா இருக்கிறது இல்லை. நான் முட்டாள் இல்லை” என்று செயலில் காட்டி கொண்டிருக்கிறான்.

அண்ணாச்சி அதை தினம் தினம் உணர்ந்து கொண்டிருக்கிறார். இப்போது அவர் பதவியில் கூட இல்லை. நாராயணனிடம் இருந்த அத்தனை சொத்துக்களும் இப்போது அவர் தலையில் ஏறியிருந்தது.

அதில் வரும் வருமானமும் செல்வத்தின் கைகளுக்கு சென்றுவிட வேண்டும். அவன் பார்த்து கொடுக்கும் பணம் தான் அவருக்கு.

ஆனாலும் கெத்தை விட்டுவிட கூடாது என்று நான்கு ஆட்களை வைத்து சுற்றி கொண்டிருக்கிறார். இன்றும் செல்வம் அழைக்காமலே ஆட்களுடன் வந்திறங்கினார்.

அதே டீ கடையில் அவருக்கான ஆகோ, ஓஹோ பந்தா இல்லை. அமைதியாக வந்து டீ குடித்தவர், பரிசை கொடுக்க, மணியிடம்  கொடுக்க சொல்லி கை காட்டினான் செல்வம்.

நாராயணனும் வந்திருக்க, பங்காளிகள் இன்னமும் அதே பகையில், மற்றவரிடம் பேசி கொள்ளவில்லை.

‘உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டேன்’ என்ற நிலை தான் இருவருக்கும்.

அண்ணாச்சி மணிக்கு பரிசை கொடுத்து கிளம்ப, நாராயணன் சகல மரியாதையுடன் தான் இருந்தார். ஆனால் அவருக்கு அதில் மகிழ்ச்சி இல்லை.

மருமகன் அவரை வெகு தொலைவில் நிறுத்திருந்தான். மாமனாரை ‘வாங்க’ என்று அழைப்பதே அவனின் முத்து பெண்ணுக்காக மட்டும் தான். இந்த மரியாதையும் அவளால் தான்.

இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் அவன் அவர் வீட்டில் தண்ணீர் கூட குடிக்க மாட்டான், மாற மாட்டான் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டுவிட்டார்.

இப்போதும் மகள் தான் வந்து அவரை சாப்பிட அழைத்து சென்றாள். பேத்தியுடன் சாப்பிட அமர்ந்தவரை,  மணி உபசரித்தான்.

தண்டபாணி, கணேசனுடன் வந்தார். மணியின் பெற்றவர்கள் உணவகத்தை சுற்றி பார்த்து அண்ணனிடம் பூரித்து கொண்டனர். “எப்படியோ இருப்பாங்கன்னு நினைச்சோம். ஆனா இப்படின்னு நினைச்சதில்லை. எல்லாம் செல்வத்தால தான்ண்ணா” என்று தண்டபாணிக்கு சொன்னார் தம்பி.

தண்டபாணிக்கும் மகனின் வளர்ச்சியில் அவ்வளவு ஆனந்தம். “மருமகளால தான் இதெல்லாம். இல்லைன்னா இந்த பையன் இப்படி இருந்திருப்பான்னு நினைக்கிற” என்று கணேசனிடம் சொல்லி கொண்டார் தந்தை.

மருமகள் அவர்களுக்கு பார்த்து பரிமாற, மனதோடு வயிறும் நிறைந்து கிளம்பினர்.

முத்து பெண் அவளின் அம்மாவிடம், “நேத்து நைட் அண்ணிக்கு சூட்டு வலி வந்துடுச்சுன்னு அண்ணா சொன்னான். காலையில சரி ஆகிடுச்சாம். பார்க்க போறீங்களா” என்று விசாரித்தாள்.

ரவியின் மனைவி பிரசவத்திற்கு சென்றிருக்க, “ஆமா. இப்படியே அங்க தான் போறோம்” என்ற கமலா, செல்வத்திடம் சொல்லி கொண்டார்.

பெற்றவர்கள் கிளம்ப முத்து நாச்சி அவர்களை வழியனுப்பினாள். விருந்தினர்களும் சென்றிருக்க, இவர்கள் மட்டும் இருந்தனர்.

“மாப்பிள்ளை. உன் ஸ்பெஷல் டீ” என்றான் ரவி.

செல்வம் எல்லோருக்கும் போட்டவன், மனைவிக்கு மட்டும் தானே கொடுத்தான்.

“எங்களுக்கெல்லாம் கொடுக்க மாட்டியா?” என்று அகிலன் கேட்க,

“டீயே கிடையாது உனக்கு” என்றான் செல்வம்.

“சும்மா தமாசு. இதை போய்” என்று வேகமாக அவர்களே எடுத்து கொள்ள, முத்து பெண்ணுடன் ரூபியும் சிரித்தாள்.

“உன் மருமக அப்படியே அப்பனை மாதிரி இருக்காடா” என்று அகிலன் ரூபியின் கன்னத்தில் லேசாக கிள்ள, அவளோ பெருங்குரலெடுத்து அழுது வைத்தாள்.

“என்னடா பண்ண?” என்ற செல்வம் அகிலனின் முதுகில் ஒன்று வைத்தான்.

“லேசா கிள்ளினது வலிச்சிருச்சா உனக்கு. விஷம், விஷம். குடும்பமே விஷம். எப்பிடிடா சமாளிக்கிற?” என்று ரவியிடம் நலம் விசாரித்தான் அகிலன்.

“இதே மாதிரி தான். என்கிட்ட இருக்கும் போது மாமா, மாமான்னு உருகிட்டு, அப்பனை பார்த்ததும் அப்படியே தவ்விடுவா” என்று ரவியும் நொந்து கொண்டான்.

 “இதுவே இப்படின்னா அடுத்து வரதை நினைச்சு பாரு” என்று முத்து பெண்ணின் ஏழு மாத வயிற்றை பார்த்து கொண்டனர்.

செல்வம் “என்னங்கடா” என்று அருகில் வர,

“நாங்க கிளம்பிட்டோம்” என்றனர் நண்பர்கள் கோரஸாக.

மணியை வாழ்த்தி, முத்து நாச்சிக்கு சொல்லி கொண்டு, ரூபியை கிச்சு கிச்சு மூட்டி விட்டனர்.

செல்வம் இருவரையும் அணைத்து விடை கொடுக்க, மூவரிடமும் ஓர் நிறைவு, மகிழ்ச்சி.

செல்வத்துக்காக ரவி, ரவிக்காக அகிலன் என்று இப்போது மூவரும் ஒரு முக்கோணமாக, ஒருவருக்கு ஒருவர் பாலமாக, பலமாக இருந்தனர்.

“அண்ணி நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க. பாப்பாவும் சோர்ந்துட்டா” என்று ரூபியை தோளில் தட்டி கொடுத்தபடி சொன்னான் மணி.

டீ கடை இரவு வரைக்கும் இயங்கும் என்பதோடு, உதவிக்கு ஆட்களும் இருந்தனர்.

“சரிடா. நீ பாரு. நான் இவங்களை விட்டுட்டு வரேன்” என்று செல்வம் சொல்ல,

“ண்ணா. நீங்களும் ரெஸ்ட் எடுங்க. நான் பார்த்துகிறேன்” என்றான் தம்பி.

செல்வம் அவன் தோளில் தட்டி, மனைவி மகளுடன் வீடு சென்றான்.

புது வீடு. சென்ற மாதம் தான் குடி வந்திருந்தனர். ரூபி தூங்கியிருக்க, அவளை கட்டிலில் வசதியாக படுக்க வைத்தவன், ஆசையில் மகளின் நெற்றியில் முத்தம் வைத்திருந்தான்.

“என்னங்க” என்று மனைவி கண்டிக்க,

“சரி கொடுக்கலை. நீ வாங்கிக்கோ” என்று மனைவியை பொறுமையாக இழுத்து அவளின் உதட்டில் கொடுத்தான்.

“ம்ப்ச். இது ஒரு சாக்கு உங்களுக்கு” என்று முத்து பெண் உதட்டை துடைத்து கொள்ள.

“பார்றா. இது எப்போலிருந்து” என்றவன், அவள் துடைக்க நேரமே கொடுக்காமல் முத்தமிட்டு சிவக்கவிட்டான்.

“போதுங்க. தெரியாம துடைச்சுட்டேன்” என்று மனைவி சரணடைந்தே பின்னே உதட்டை விட்டவன், அப்போதும் அவளை விடவில்லை.

“புடவை கசகசன்னு இருக்கு. ட்ரெஸ் மாத்தி ப்ரீயாகிடுறேனே” என்று மனைவி கேட்க,

“ப்ரீ தானே. நான் பண்ணிவிடுறேன்” என்று புடவையில் கை வைத்தான் கள்ளன்.

“உங்களை” என்று கையிலே ஒன்று வைத்தவள், “இப்படியே இருக்கேன்” என்றுவிட்டாள்.

செல்வம் வாகாக அவளை தன் கால்களுக்கு இடையில் அமர வைத்து, அவளின் கால்களை நீட்டி விட்டவன், மனைவியின் இடையை பிடித்துவிட ஆரம்பித்தான்.

முத்து பெண்ணுக்கு சுகமாக இருக்க, அவன் நெஞ்சில் இடம் பிடித்து கொண்டாள்.

முதுகு, கை, கழுத்து என்று வலம் வந்தவன், “அத்தை என்கிட்ட பேசினாங்க. ஏழு மாசத்துக்கு உன்னை அங்க அனுப்ப கேட்கிறாங்க” என்றான்.

“இல்லை நான் போகலை” என்றாள் பெண் நொடியும் இல்லாமல்.

“பாப்பாவையும் வைச்சுட்டு தனியே கஷ்டப்படுற”

“நீங்க தானே பார்த்துகிறீங்க. எனக்கென்ன கஷ்டம். வீட்டு வேலைக்கும் ஆள் வைச்சுட்டீங்க. மாமாவும் காலையில வந்து நைட்டு தான் போறாரு. அப்பறமென்ன” என்றாள்.

“எனக்காக தானே” செல்வம் அவள் காதில் முத்தம் வைத்து கேட்க,

“இல்லை எனக்காக” என்றாள் மனைவி. “செல்வம் டீ கடை கணக்கு எல்லாம் நான் தான் பார்க்கிறேன். அங்கு போனா சரி வராது” என்றாள்.

செல்வம் முகம் முன்ன, அவளின் கழுத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.

அவனின் முத்து பெண் காதலை ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கிறானே. இதோ இதிலும் அவள் காதல் தான்.

நாராயணன் வீட்டிற்கு செல்வம் போவதில்லை. மகள் பிறந்த நேரமும் இருவரும் மற்றவரை தேடி ஏங்கி போய்விட்டனர்.

அதோடு செல்வம் தனியே இருப்பதில் மனைவியும் மூன்று மாதத்தில் கணவனை தேடி வந்துவிட்டாள்.

இப்போதும் அப்படி எல்லாம் முடியாது. அம்மாவை என்கூட இங்கேயே இருக்க சொல்லணும். என்று மனதில் நினைத்து கொண்டாள் அவன் மனைவி. அதையும் வாய் திறந்து சொல்ல மாட்டாள்.

இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட, அவனை வா என்று நாராயணன் வீட்டிற்கு அழைத்ததில்லை. நாராயணன் விஷயத்தில் அவன் எப்படி இருந்தாலும் அதை கேட்கவும் மாட்டாள்.

ரவிகூட சில நேரம் கோவம் கொள்வான். அவன் மனைவி வாய்ப்பே இல்லை.

கணவன் பட்ட கஷ்டத்தை அவளும் மறக்கவில்லை. துரோகத்தை  நியாயப்படுத்தும் ஆளும் அவள் இல்லை.

அப்பா பாசம் வேறு, கணவன் வேறு என்பதில் தெளிவாக இருந்தாள் பெண்.

இருவரின் உடலும், மனதும் கலந்தது என்பதை விட, இவன் மனதாக அவள் இருக்கிறாள்!

செல்வத்தால் ‘ஐ லவ் யூ’ என்று சொல்லி அவனை முழுவதுமாக வெளிப்படுத்திட முடியாது.

அழுத்தமான முத்தம் மட்டுமே அவனின் ஆழமான காதலை மனைவிக்கு உரக்க சொல்லும்.

இந்த நொடியும் சொல்லி கொண்டிருக்கிறான். முத்து பெண்ணும் அதை உணர்கிறாள் என்பதாக, கணவனின் நெஞ்சில் சில்லென்ற முத்தத்தை பதித்தாள்.

செல்வம் கண்களை மூடி அதை ரசிக்க, முத்து பெண் இன்னும் இன்னும் கொடுத்தாள்.

“முத்து மாலை எடுப்போமா?” செல்வம் மனைவியை சீண்டினான்.

“முடியாது” உடனே கோவம். மகள் பிறப்பதற்குள் அந்த மாலையை பல முறை உதிர்த்துவிட்டான்.

செல்வம் இன்னும் அவளை தனக்குள் நெருக்கியவன், “புதுசா வாங்கி தரேண்டி. அதையே பிடிச்சு தொங்குற” என்றான்.

“எனக்கு அது தான் வேணும். வேற வேண்டாம்” முத்து பெண் அதிலே நிற்க,

“இப்போ தான் அதை பிச்சுப்போட கை பரப்பரங்குது” என்றான் செல்வம் குறும்பாக.

மனைவி அவன் நெஞ்சில் ஒன்று வைக்க, “ஸ்ஸ். அநியாயம்டி. சில்லுண்ணும் வைக்கிற, சுள்ளுன்னும் வைக்கிற” என்றான் கணவன்.

“என்னது தானே. எப்படியும் நான் வைப்பேன்” என்று மனைவி அவன் நெஞ்சுக்கு உரிமை எடுத்து நின்றாள்.

“உன்னது தான். வைச்சுக்கோ. அப்படியே எனக்கும் எனக்கானதை கொடுத்துடு” என்று கண்ணடித்தான் கணவன்.

முத்து பெண் சிவந்துவிட்டவள், “உங்களை” என்று சிணுங்கி அவன் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாள்.

செல்வம் பெரிய மனதுடன் அவளின் இடத்தை அவளுக்காகவே கொடுத்துவிட்டவன், மனைவியை முழுதும் தான் எடுத்து கொண்டான்.

தன் வாழ்க்கையில் அவளை முற்றும் முழுதாக நிரப்பி கொண்டான்.

அவனை பொறுத்தவரை செல்வத்தின் ஜொலிப்பே அவள் தான்!

போராட்டங்கள் அவளால் என்றாலும், வெற்றி அவனுடையதாகி! அவளே அவனுடையவளானாள்!

பொருந்தா காதல் என்று சொல்லில் இருந்து, இவர்களை விட பொருத்தமா என்ற நிதர்சனத்தில் நின்றனர் இருவரும்.

செல்வத்தின் கஜானாவில் முத்தும், ரூபியும் இணைந்திருக்க, அடுத்த ஒரு வைரமும் வரவில் இருந்தது.

முத்து பெண்ணால் கஜானா என்றும் ஜொலித்து கொண்டு தான் இருக்கும். அதில் குறைவே இல்லாத அளவு செல்வம், அவர்களுக்கு நிறை செல்வமாகவே என்றும் இருப்பான்!