“சரியா நடக்கும்ப்பா. நீங்க டென்ஷன் ஆகாம இருங்க” என்ற ரவி, தன் மாப்பிள்ளையிடம் வந்தான்.
“அடுத்த டோக்கன் நாம தான்” என்று செல்வத்திடம் சொல்ல,
“எங்களோடது தானே தம்பி” என்று வந்தார் தண்டபாணி.
“ஆமா மாமா. கணேசன் அங்கிள் எங்க? அவர் தானே சாட்சி?” என்று கேட்டான் ரவி.
“அதோ அங்க இருக்கான். அப்புறம் இது எப்படி” என்று அவர்களுக்குள் பேசி கொள்ள, செல்வம் அமைதியாக இருந்தான்.
“என்னாச்சு. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க” என்று முத்து பெண் கவலையாக கேட்க,
செல்வம் “அப்படி எல்லாம் இல்லை” என்று தலையசைத்தான்.
சில நிமிடம் சென்று இவர்களை அழைக்க, உள்ளே சென்றனர். தண்டபாணி மகனுக்கு சேர வேண்டிய சொத்தை மருமகளுக்கு எழுதி கொடுத்தார். ஆம். செல்வத்தின் விருப்பம் அது.
முத்து பெண்ணின் மறுப்பு எல்லாம் கணவனின் முடிவின் முன் நிற்கவில்லை. “நானே சம்பாதிச்சு சொத்து வாங்கினாலும் உன் மேல தான். எல்லா நேரமும் இப்படி வேணாம் சொல்லி என்னை டென்சன் பண்ண கூடாது” என்றிருந்தான்.
அதுவே அவளுக்கு கனம் என்றால், நாராயணனும் மகள் பங்கை பிரித்து கொடுத்தார்.
ரவிக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று ஆரம்பித்த நேரமே, மகளுக்கான உரிமையை அவளிடம் கொடுத்துவிட்டார்.
நகை, பணம் போக, சொத்தாகவும் வந்தது. ரவி அதில் எல்லாம் தலையிடவில்லை. கமலா பேச்சை நாராயணன் கேட்கவும் மாட்டார். ‘நீ உன் மகனுக்கு தான் சொல்வ’ என்றும் பேச,
கடுப்பாகி போன கமலா, “ஆமா நான்தான் பொண்ணு ஆசைப்பட்டான்னு ஆகாத, போகாத வேலை எல்லாம் பார்த்து வைச்சேன். ஒத்தை மருமகன் வீடு வாசல்படி ஏறாத அளவு பாசத்தை வைச்சேன்” என்று கேலியாக கேட்டு வைத்தார்.
“அவன், க்கும், அவர் வரலைன்னா நான் என்ன பண்ணுவேன். கூப்பிட்டுட்டே தான் இருக்கேன். வர மாட்டேன்னு நின்னா கை, காலை கட்டியா தூக்கிட்டு வர முடியும்” என்று ஆற்றாமையில் பொங்கினார்.
இதுவரை தண்ணீர் கூட அவர் வீட்டில் செல்வம் குடித்ததில்லை. நல்ல நாளில் கூட மகள் மட்டும் தனியே வந்து செல்லும் ஆதங்கம் தந்தைக்கு.
எங்கு இவர் மேல் இருக்கும் கோவத்தில் சொத்து வேண்டாம் என்று சொல்லிவிடுவானோ என்று பயந்திருக்க, செல்வம் அப்படி எல்லாம் சொல்லவில்லை.
உடன் அவன் சொத்தையும் மனைவி பெயரில் தான் எழுதினான். அதில் நாராயணனுக்கு பெருமையும் கூட. சிறுமையும் கூட.
இதோ இரண்டு பத்திர பதிவு முடியவும், முத்து பெண் சில, பல லட்சங்களுக்கு அதிபதியாகிவிட்டாள்.
தண்டபாணி மகிழ்ச்சியுடன் அவர் வீடு கிளம்ப, “எங்களோட வந்துடுங்க மாமா” என்றழைத்தாள் மருமகள்.
அங்கு சூழ்நிலை எப்படி இருக்கும், இவர் மேல் கோவத்தை காட்டுவார்களோ என்று யோசனை.
தண்டபாணி மருமகளை புரிந்து, “கண்டிப்பா வரேன்மா. அங்க எல்லாம் சரியா போச்சு. செல்வம் அவன் அக்காவுக்கு வீட்டு இடம் கொடுக்க சொன்னதுல அவங்க சந்தோஷமாகிட்டாங்க. பிரச்சனையில்லை” என்றவர், செல்வம் வாங்கி கொடுத்த புது வண்டியில் ஜோராக சென்றார்.
செல்வம் அவர் மறையும் வரை பார்த்திருக்க, “சாதிச்சுட்ட மாப்பிள்ளை. ரொம்ப சந்தோசம்டா” என்றார் கணேசன் மாமா.
செல்வம் உள்ளார்ந்த அன்புடன், அவரை அணைத்து கொள்ள, தோள் தட்டி கிளம்பினார் அவர்.
நாராயணன் மருமகனிடம் வந்தவர், “பணம், நகை கொடுக்கணும்” என்றார்.
“கொடுங்க” என்று முத்து பெண்ணை கை காட்ட,
“இல்லை வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, வாங்கிட்டு போகணும்” என.
“அவ வருவா” என்று முடித்து கொண்டவன், மனைவி, தம்பியுடன் கிளம்பினான்.
நேரே வீட்டுக்கு வர, செல்வம் அவனின் முத்து பெண்ணை இறுக்கமாக அணைத்து கொண்டான்.
உணர்ச்சி வச பட்டிருந்தவனை வருடி, முத்தம் வைத்து ஆறுதல் சொன்னாள் மனைவி.
“பர்ஸ்ட் டைம் அந்த ரெஜிஸ்ட்ரேஷன் ஆபிஸ் என்னை சந்தோஷ பட வைச்சிருக்கு” என்றான் மனைவியிடம்.
“இனி எல்லா முறையும் கூட அப்படி தான்” என்று முத்து பெண் நம்பிக்கையாக சொல்ல,
“தெரியும்” என்றவன் அவளின் இதழ்களில் தன் மகிழ்ச்சியை பகிர்ந்தான்.
சில வருடங்களுக்கு பிறகு.
புதிதான கட்டிடம் விளக்குகளால் ஜொலிக்க, செல்வம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று மீண்டும் ஒரு முறை ஆராய்ந்தான்.
“எத்தனை முறை பார்த்தாலும் அதே தான்டா” என்று வந்தான் ரவி.
ரவி, அகிலனுக்கு திருமணம் முடிந்திருக்க, மணிக்கு பெண் உறுதியாகியிருந்தது.
“அடடே வாங்க. சீப் கெஸ்ட் வந்துட்டிங்களா? பன்னீர் கூட தெளிக்கலையே. கொஞ்சம் இப்படி வரீங்களா, தெளிச்சு விடுறேன்” என்று செல்வம் ஓரமாக அழைக்க,
“இல்லை. வேணாம் மாப்பிள்ளை. நமக்குள்ள என்ன” என்றுவிட்ட ரவி, “இவருக்கு வேணா தெளிங்களேன்” என்று அகிலனை கை காட்டினான்.
“டேய் நான் சீக்கிரமே கிளம்பிட்டேன். இவன்தான் பொண்டாட்டிக்கு பேசுறேன்னு போன் எடுத்தவன் அரை மணி நேரம் கழிச்சு தான் வைச்சான்” என்றான் அகிலன் கைகளை தூக்கி.
செல்வம் புருவங்களை நெறிக்க, “ண்ணா. நான் ரெடி” என்று மணி வந்தான்.
“ரொம்பபப நல்ல மாப்பிள்ளை” என்றான் ரவியும் ராகத்தோடு.
“என்ன சொன்னீங்க எனக்கு கேட்கல” என்று செல்வம் அருகில் வர,
“நாங்க இல்லை” என்று இருவரும் ஓடிவிட்டனர்.
மணி சிரித்தபடி “அண்ணி வந்துட்டாங்க” என்றான்.
செல்வம் அவன் சொல்வதற்கு முன் மனைவியின் காருக்கு சென்றிருந்தவன், மகளை கையில் ஏந்தி கொண்டான். பட்டு பாவாடை சட்டையில் மகள் மனதை கொள்ளை கொள்ள, “தங்கக்குட்டி” கன்னத்து முத்தம் ஒன்று வைத்தான்.
மகளும், அவன் கழுத்தை கட்டி கொண்டபடி அப்பாவுக்கு எச்சில் முத்தம் வைக்க, “சாரிங்க லேட் ஆகிடுச்சு” முத்து பெண் அவசரத்துடன் இறங்கினாள்.
“ஹேய் மெல்லடி. ஒன்னும் லேட் ஆகிடலை. நீ பொறுமையா வா” என்று மனைவியின் கை பிடித்து நிதானமாக வர,
“ஆமாமா லேட் எல்லாம் ஆகலை. நீங்க மெல்லவே வாங்க” என்று அகிலன் அவர்களை வம்பிழுத்தான்.
“ரூபி குட்டி. அழகா இருக்கடா” என்று ரவி தங்கை மகளிடம் செல்ல,
செல்வத்தின் மூன்று வயது மகளும், “மாமா” என்று அவனிடம் தாவினாள்.
“யார் இந்த தேவதை?” என்று அகிலன் அவளின் குட்டி முடியில் தொங்கும் பூ பிடித்து விளையாட, ரூபி வெட்கத்துடன் மாமனின் தோள் சாய்ந்து கொண்டாள்.
“அண்ணி எல்லாம் ரெடியா இருக்கு. நீங்க ரிப்பன் கட் பண்ணி விளக்கேத்துங்க” என்று மணி சொல்ல,
“நீங்களும் வாங்கடா” என்று செல்வம் அவர்களையும் தங்களுடன் நிற்க வைத்தான்.
ஏழு பேராக ரிப்பன் வெட்டி, விளக்கேற்ற செல்வத்தின் முகத்தில் குறையாத தேஜஸ்.
அவனின் முத்து பெண் விளக்கேற்றும் நேரம், முதன் முறையாக அவள் சார்பில் இவன் ஏற்றிய விளக்கு நினைவிற்கு வந்தது.
இடையில் எவ்வளவு மாற்றங்கள்!
மிகவும் எளிமையாக கடை திறப்பு முடிய, “மாப்பிள்ளை, உன் ஸ்பெஷல் டீ” என்றான் ரவி.
“மணி போய் போடு” செல்வம் சொல்ல,
“ண்ணா, நானா? விளையாடாதீங்க. பர்ஸ்ட் டைம் செய்றது. நீங்க போடுங்க” தம்பி உடனடியாக மறுத்தான்.
“டேய். போன்னு சொன்னா போகணும். ம்ம். அடுப்பை பத்த வை” என்று அண்ணனாக உத்தரவிட, மணி கடவுளை வேண்டி பாய்லரை அடுப்பில் ஏற்றினான்.
அவன் கையால் எல்லோருக்கும் அருமையான டீ வர, செல்வத்திற்கு கூடுதலாக ருசித்தது.
இன்று வரை தன்னுடனே சுற்றும் தம்பியை உவகையுடன் பார்த்திருந்தான். இது அவனுக்கான உணவகம். முதலாளியாக அவனை பார்க்கும் நேரம், தந்தைக்குள் சுரக்கும் பெருமை.
சில மாதங்களுக்கு முன்பு, “தனியா தொழில் வைச்சு தரேன். உனக்கு என்ன வேணும் கேளு” என்று செல்வம் அவனை அழைத்து கேட்க.
“தனியா தொழிலா? எதுக்கு” தம்பியிடம் கோவம்.
“பின்ன எத்தனை நாளைக்கு என்னோட சுத்த போற? முதலாளியா உட்கார பாரு” என்று அண்ணன் கண்டிக்க, மணி மறுத்துவிட்டான்.
செல்வம் போராடி தான் அவனை ஒத்துக்கொள்ள வைக்க, மணி அப்போதும் டீ கடை தான் கேட்டான். அதுவும் செல்வத்தின் கூட்டாக.
“எனக்கு அதை விட்டா வேற தெரியாது. பிடிச்சதும் கூட. அதையே வைக்கலாம். ஆனா சேர்ந்து தான்” என்று பிடிவாதமாக நின்றுவிட்டான்.
செல்வத்திற்கும் தம்பியை தனியே அனுப்பும் உத்தேசம் இல்லை. ஆனால் மணியின் அப்பா, மகன் தனியே இயங்க கேட்டிருந்தார். சொல்ல போனால் சண்டையே போட்டார்.