கண்ணே முத்து பெண்ணே 19 9122 கண்ணே முத்து பெண்ணே 19 செல்வத்திற்கு அடுத்து என்ன என்ற கேள்வி? நாராயணன் அவரின் மகளிடம் எல்லாம் சொல்லிவிட்டார். அவனின் முத்து பெண் இவனை தான் பார்த்திருக்கிறாள். ‘இவர் சொல்றது உண்மையா?’ என்று கண்களால் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறாள். செல்வம் அவளின் பார்வையை எதிர்கொண்டானே தவிர, பதில் அளிக்கவில்லை. “நாச்சி. அப்பா சொல்றது உண்மை நாச்சி. பாரு அங்க அந்த பெட்டி இருக்கு. நம்மகிட்ட இருந்த பொறுப்பு தான் அது. அதோ, அங்க பாரு நாச்சி” என்று மகளின் பார்வையை பெட்டி இருந்த பக்கம் திருப்பிவிட்டார். நாச்சியோ அதை பார்க்க கூட மறுத்து, கணவனை தான் கண்டிருந்தாள். ‘ஏதா இருந்தாலும் நீ சொல்லு‘ என்பதாய் தான் இருந்தாள். “நாச்சி, இது வேண்டாம்மா. நீயே சொல்லு, உனக்கு தெரியும் இல்லை. இதனால எவ்வளவு பிரச்சனைன்னு“ “ப்பா. போதும்ப்பா. நீங்க சொன்னதே போதும். நிறுத்துங்க” என்றான் ரவி கோவமாகவே. “நீ அமைதியா இருடா. நீங்க எல்லாம் கூட்டு களவாணிங்க. எல்லாம் சேர்ந்து என் பொண்ணு வாழ்க்கையில விளையாட பார்க்கிறீங்க“ “ஆமா. நாங்க அப்படி தான், நீங்க இதுக்கு மேல பேசாதீங்க” அகிலன் இடையிட்டு அவரை பேச, முத்து நாச்சி தன் கவனத்தை அவன் மேல் கொண்டு வந்தவள், “அப்பாகிட்ட இந்த டோன்ல ஏன் பேசுறீங்க?” என்று கேட்டாள். “பேசாம. பெரிய மனுஷன் பண்ற வேலையா அவர் பண்ணிட்டிருக்கார். இப்போ இது எல்லாம் பேசியே ஆகணுமா?” “பேசித்தான் ஆகணும். இது என் பொண்ணு வாழ்க்கை” நாராயணன் எகிற, “பொண்ணு வாழ்க்கைக்கு பேசுறீங்கன்னு சொன்னா கிறுக்கன் கூட நம்ப மாட்டான். அவளுக்காக பண்றேன்னு உங்களுக்காக பண்ணிக்க பார்க்கிறீங்க. செல்வத்துக்கிட்ட இந்த பொறுப்பு வந்தது உங்களுக்கு பிடிக்கலை. உங்களை மிஞ்சிட்டான்னு தானே இவ்வளுவும்“ “அகில், அப்படி இல்லை. நீ விடு” ரவி அவனை அதட்ட, “நீ அமைதியா இருடா. இத்தனை வயசுக்கு மேல உன் மேல கை நீட்டுறாரு. மருமகன் மேல பொறாமை படுறார். இவர் சரியா இருந்தா இதெல்லாம் நடந்தே இருக்காது. அண்ணாச்சி மேல இருக்குற கோவத்தை காட்டுறேன்னு மகளை சிக்க வைச்சு, மருமகனையும் சிக்க வைச்சுட்டார். இவர் பேசுறார். நாம கேட்டுட்டு இருக்கணுமா?” என்று அகிலனே கடுப்பாகி பொங்கிவிட்டான். முத்து பெண்ணுக்கு ஏதோ புரிவது போல் இருக்க, கண்கள் விரிந்தது. ‘என்னை விடுறதுக்கா? என்னாலவா?’ ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் கணவனின் பதிலுக்காக காத்திருக்க, அவனோ அசையாமல் நிற்கிறான். நாராயணனுக்குமே கூட அப்போது தான் உறைத்தது. என் பொண்ணை விடவா இது? கால்கள் நடுங்க, தடுமாறி அமர்ந்து கொண்டார் மனிதர். சுப்பிரமணி அண்ணனின் பதிலுக்காக, “என்னண்ணா, என்னென்னமோ சொல்றாங்க. நீ சொல்லுண்ணா. இதெல்லாம் உண்மையா?” என்று செல்வத்தின் கை பிடித்து கேட்டான். பொய் சொல்ல முடியாது. உண்மையை ஒப்பு கொள்ளவும் முடியாது. இவனின் வார்த்தையில் தானே அவனின் மனைவி நிற்பாள். “ண்ணா. என்னண்ணா. உன்கிட்ட தானே கேட்கிறேன். சொல்லுண்ணா” சுப்பிரமணி மீண்டும் கேட்க, ரவி, அகிலன் அவனை தான் வருத்தத்துடன் பார்த்தனர். ‘ஒருநாள் தான் ஆச்சு. அதுக்குள்ள சங்கு ஊதிட்டார் மனுஷன்‘ அகிலன் உச்சகட்ட கடுப்புடன் நாராயணனை வெறித்தான். செல்வம் வாய் திறக்க போவதில்லை என்று உணர்ந்து கொண்ட அவனின் மனைவி, அமைதியாக மேலேறினாள். செல்வம் அங்கேயே நிற்க, “இப்போ உங்களுக்கு சந்தோஷமாப்பா?” என்று ரவி அவனின் தந்தை முன் நின்றான். “அவகிட்ட சொல்லி என்ன சாதிச்சீங்க. சொல்லுங்க“ “ரவி நான். இப்படின்னு எனக்கு தெரியாதுடா“ “தெரிஞ்சுக்கணும். எப்போவும் உங்க அவசரத்துல அவன்தான் பாதிக்கப்படுறான். அப்படி என்னப்பா அவன் உங்களுக்கு பண்ணிட்டான்?” என்று செல்வத்தை கை காட்டி கேட்டான். “எனக்கு உண்மையிலே நம்மாலன்னு தெரியாதுடா. அந்த ஆள் வந்து உங்க மருமகன் தான்னு சொல்லவும், இவனா ஆசைப்பட்டு தலை கொடுத்துட்டானோன்னு தான்“ “தயவு செஞ்சு ஏதும் சொல்லாதீங்கப்பா. உங்க பொண்ணை பத்தி உங்களுக்கு தெரியாதா? அவ கஷ்டப்பட்டு வாங்கின வேலையை கூட இவனுக்காக ஒரு நிமிஷத்துல தூக்கி எறிஞ்சவ அவ. என்ன மறந்துட்டீங்களா?” “என்ன மச்சான் சொல்றீங்க? அண்ணனுக்காகவா அண்ணி வேலையை விட்டாங்க. ஏன் என்னாச்சு?” சுப்பிரமணி புரியாமல் கேட்டான். “இந்த சொத்தை இவன் பேர்ல எழுதிறதுக்கு, இங்கிருக்கிற சப் ரெஜிஸ்டர்கிட்ட அவளை விட்டு பேச வைச்சாங்க. அவளும் ஏதோ ஒரு சொத்துன்னு நினைச்சு அவர்கிட்ட பேசிட்டா. அப்புறம் தான் தெரிஞ்சு, நாங்க என்ன சொல்லியும் கேட்காம எனக்கு இந்த வேலையே வேணாம்ன்னு விட்டுட்டா. உண்மைக்கும் அவ பேசலைன்னா கூட அமைச்சர் பவர்ல நடந்தது தான். ஆனாலும் அவளுக்கு அதை ஏத்துக்க முடியலை” என்றான் ரவி. செல்வம் நெற்றியை நீவி விட்டு கொள்ள, “இப்போ இதுவும் அவளுக்காகன்னு தெரிஞ்சா, கண்டிப்பா விட மாட்டா” என்றான் அண்ணன் மேலும். நாராயணனுக்கு மகன் சொல்லவும் தான் அதுவும் புரிய, தப்பு பண்ணிட்டேன் என்று தவித்தார். மருமகன் முகத்தை பார்க்கவும் தைரியமில்லை. என்னமோ திடீரென தான் தாழ்ந்துவிட்டது போல் உணர்ந்தார். “எல்லாம் இவர் பண்ணிட்டு, செல்வத்துக்கிட்ட வந்து குதிக்கிறது தான் கடுப்பா இருக்கு. ஏதோ ஒரு முறைன்னா பரவாயில்லை எல்லா நேரமுமா?” அகிலன் சொல்ல, சுப்பிரமணி அண்ணனை தான் கவலையாக பார்த்தான். நாராயணன் கோவமாக வரவும், ஆட்களை வெளியே அனுப்பி, கடையையும் மூடியிருந்தான் சுப்ரமணி. இவர்களை தொந்தரவு செய்ய யார் இல்லாமல் போக, அங்கங்கு அமர்ந்து கொண்டனர். நொடிகளே மிகவும் கடினமாக நகர, மனைவியை தனியே விட முடியாமல், அவனின் முத்து பெண்ணை தேடி சென்றான் செல்வம். படுக்கையில் அமர்ந்திருந்தாள். அழக்கூடாது என்ற வைராக்கியம் போல். உதடுகளை கடித்து கொண்டிருக்க, செல்வம் அவள் முன் நின்று விரலால் அதை விடுவித்தான். முத்து பெண் மறுத்து, திரும்ப வலுவாக கடித்து கொண்டாள். “புண்ணாகிடும்டி” செல்வம் சொல்லி அதை விடுவிக்க முயல, இன்னும் அழுத்தம் கொண்டது அவளின் உதடுகள். விட்டுவிட்டவன், அவளை தன் வயிற்றோடு அணைத்து கொள்ள, முத்து பெண் மறுத்து அவனையே கேள்வியாக பார்த்தாள். ‘நீ சொல்லு, ஏதா இருந்தாலும் நீயே சொல்லு’ என்றவளின் பார்வையில் சிறிதும் மாற்றமில்லை. “நான் சொல்றேன். ஆனா நீ எனக்கு சத்தியம் பண்ணு” என்று கை நீட்டினான். என்ன சத்தியம் என்று கூட அவள் கேட்கவில்லை. இவனே, “என்னை கேட்காம எதுவும் பண்ண மாட்டேன்னு” என, முத்து பெண், சத்தியம் பண்ண மாட்டேன் என்பதாய் உறுதியாக தலையசைத்தாள். “சத்தியம் பண்ண மாட்டியா?” செல்வம் புரிந்து கேட்க, “மாப்பிள்ளை” என்று கமலாவின் குரல். செல்வம், “வாங்க. வாங்க அத்தை” என்று வெளியே வந்து அவரை வரவேற்க, “வரேன் மாப்பிள்ளை. எங்க நாச்சி?” என்று மகளை தேட, “உள்ள” என்று அறையை காட்டினான். “வீடு போட்டது போட்ட படியே இருக்கு. இன்னமும் உள்ள என்ன பண்றா?” என்று கமலா மகளை கடிந்தபடியே அவளை வெளியே அழைத்து வந்தார். “பூஜை ரூம்ல விளக்காவாது ஏத்துனியா?” என்று பார்த்து, இல்லை என்றதும் மகளை அதற்கும் கடிந்தார். நாச்சி காலையில் குளித்து விளக்கேத்த சென்று கணவன் இல்லாமல் விட்டுவிட்டாள். இருவரும் சேர்ந்து நிற்க வேண்டும் என்றே. இப்போது அவளின் பார்வையில் செல்வம் தானே அவளுடன் சென்று நிற்க, முத்து பெண் விளக்கேற்றி வழிபட்டாள். அடுத்து உணவுண்ண இருவரையும் அமர சொல்ல, செல்வம் அமர்ந்து கொண்டான். ஆனால் அவனின் மனைவி இல்லை. “உட்காரு நாச்சி. மாப்பிள்ளை பக்கத்துல உட்காரு” என்று கமலா உணவை எடுக்க, மகள் அமைதியாக அவரிடம் இருந்து பெற்று கொண்டு தானே கணவனுக்கு உணவு பரிமாறினாள். “நீயும் வா. சேர்ந்து சாப்பிடலாம்” செல்வம் அழைக்க, மனைவி அவனை உண்ண சொல்லி தலையசைத்தாள். சரி பரிமாறுறா, சாப்பிடலாம் என்று செல்வம் உண்டு முடிக்க, மகளை அமர சொன்னார் கமலா. அவளோ அறைக்குள் சென்றாள். “என்ன வாயே திறக்க மாட்டேங்கிறா. நாச்சி வா, வந்து சாப்பிடு” என்று கமலா மகள் பின்னே சென்றவர், நிமிடங்கள் கடந்து தனியே தான் வந்தார். “என்னாச்சு மாப்பிள்ளை? ஏதும் பிரச்சனையா?” கமலா கவலையாக மாப்பிள்ளையிடம் விசாரிக்க, அவனோ அவளின் இந்த செயலில் ஆட்டம் காண ஆரம்பித்தான். “அவ இப்படி வாயே திறக்காம இருந்தா ஏதோ மனசுல வைச்சுட்டான்னு அர்த்தம் மாப்பிள்ளை. இப்போ என்னன்னு தெரியலையே” மாமியார் தன் போக்கில் புலம்பி கணவன், மகனை தேடி கீழே சென்றார். புது தம்பதிகள் மட்டும் இருக்க, “சாப்பிடாம கோவங்காட்டாத. சாப்பிடு” என்று செல்வம் மனைவிக்கான உணவுடன் அவள் முன் நின்றான். ‘நீ பதில் சொல்லு நான் சாப்பிடுறேன்‘ மனைவியின் முடிவு அது. “சாப்பிடாத போ” செல்வம் விட்டுவிட்டான். மதியமும் உண்ணவில்லை. இரவும் மறுக்க, அவளின் வயிறாக இவனின் வயிறும் வாடியது. தண்ணீர் கூட குடிக்க மாட்டேன் என்றவளின் பிடிவாதம் முன் செல்வம் தளர்ந்து விட்டான். “ஆமா. நான் தான் இப்போ அடுத்த நாராயணன். உன் அப்பா சொன்னது உண்மை” என்றான் தானே மனைவியிடம். “என்னாலவா?” என்ற முத்து பெண் கேள்வி தொண்டை வரண்டு, கமறி வந்தது. தானே அவளுக்கு தண்ணீர் புகட்டி, தானும் குடித்து தொண்டையை நனைத்தவன், “உன்னால எல்லாம் இல்லை. எனக்காக தான்” என்றான். “நானும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்க, அதான்” என்று மேலும் சொல்ல, அவனின் மனைவியோ போன் எடுத்து அண்ணனுக்கு அழைத்தாள். “நாளைக்கு சென்னை போகணும். ஆபிஸ்ல வர சொல்லியிருக்காங்க” என்று வைத்தாள். “என்னை விட்டு போக போறியா?” செல்வத்திடம் கோவம். “எனக்கு தெரியும் நீ இதை தான் பண்ணுவன்னு. அதான் வாயே திறக்காம இருந்தேன், இப்போ என்னை வைச்சு என் கிட்னியைவே உருவ பார்க்கிற இல்லை” என்று அவளின் கன்னத்தை அழுத்தி பிடித்தான். முத்து பெண் அவனை பார்த்தே இருக்க, நெருங்கி அமர்ந்தான். அவளின் இடையை வளைத்தான். அணைத்தான். இறுக்கமாக தன்னுடன் பிணைத்து, கட்டிலில் சரிந்தான். முத்தமிட்டான். வேக வேகமாக அவளின் எல்லா இடமும் முத்தமிட்டான். கடித்தும் வைத்தான். எதற்கும் அவளிடம் இருந்து சிறு எதிர் வினையும் இல்லை. கல்லாக இருந்தவளை விட்டு, இவன் தான் விலகினான். நேற்றிரவில் கலைந்த படுக்கை, இப்போது திரும்ப புதிதாக மாறிவிட்டது, இவனை போல. மறுநாள் அதிகாலையில் முத்து நாச்சி அவனின் அண்ணாவுடன் கிளம்பிவிட்டாள். ‘இனி என்கிட்ட வர மாட்டாளா? அவ்வளவு தானா?’ செல்வம் அந்த அதிகாலையில் மனைவி சென்ற பாதையில் தனியே நின்றான். அவளை கட்டுப்படுத்தி, கோவப்பட்டு, சண்டையிட்டு என்று எதையும் அவன் செய்யவில்லை. அவனால் அது முடியவும் முடியாது. அவளுக்கான வழி விட்டு நின்றான். தற்காலிகமாக தான். ஆனாலும் பொங்கி வரும் விரக்தியை என்ன செய்வது? சுப்பிரமணி கடைய பார்த்து, அண்ணனையும் கவனித்து கொள்ள முயன்றான். டீ மட்டுமே உணவாக இருப்பவனை அவனும் என்ன தான் செய்ய? அன்றிரவு ரவி கார் வந்தது. என் பொண்டாட்டியை விட்டுட்டு வரான். என்னமோ மச்சான் மேல் கோவம். அவனையே முறைத்திருக்க, மறுபக்கம் கதவை திறந்து முத்து நாச்சி இறங்கி வந்தாள். செல்வம் எழுந்து வேகமாக வாசலுக்கு வர, பெட்டிகளும் இறங்கியது. “மொத்தமா காலி பண்ணியாச்சு” என்றான் மாப்பிள்ளையின் காதில் ரவி மகிழ்ச்சியாகவே. செல்வத்தின் முகத்திலும் மின்னல் வெட்ட, அவனின் மனைவியோ அவனை கண்டு கொள்ளாமல் மாடிக்கு ஏறிவிட்டாள். அத்தனை பெட்டிகளையும் விட்டு தான். மாப்பிள்ளையும், மச்சானும் சந்தோஷமாகவே அதை சுமந்து வந்து அவளிடம் சேர்த்தனர். அதுவரையும் இருந்த அவ்வளவு விரக்தியும் மனைவியின் வரவில், கரைந்து காணாமலே போய்விட்டது. ரவிக்கு தன் கையாலே டீ வைத்து கொடுத்து, தானும் இரண்டு, மூன்று டீ குடித்தான். இரவு மனைவியை பார்த்தபடி தானும் நிம்மதியுடன் தூங்கினான். மறுநாள் அவனுக்கு முன் மனைவி எழுந்திருந்தாள். “எங்க போயிட்டா?” வீடெல்லாம் தேடி கீழே வர, அவனின் இடத்தில் முதலாளியாக அமர்ந்திருந்தாள் அவனின் முத்து பெண்.