கண்ணே முத்து பெண்ணே 17

மிகவும் எளிய வகையில் அவர்களின் திருமணம் நடைபெற்றிருந்தது. கோவிலில் வைத்து எண்ணிவிடும் ஆட்களின் முன், அவனின் முத்து பெண்ணுக்கு மாங்கல்யம் சூட்டினான் செல்வம்.

தம்பதி சகிதமாக இருவரும் நின்றதே, மணமக்களுக்கு நிறைவை தந்துவிட்டது.

செல்வம் குறைந்த நேரத்தில் தேடி பிடித்த முகூர்த்த புடவையில் முத்து பெண் மிளிர்ந்தாள். தங்க நகைகள் பெரிதாக அணியவில்லை.

செல்வம் அவளுக்காக வாங்கி வந்திருந்த ஒற்றை முத்து மாலை எல்லாவற்றையும் சரிகட்டியது. அவளை தூக்கியும் காட்டியது.

செல்வத்தின் மனைவி அவனின் ஓயாத பார்வையில், “என்ன?” என்று புருவம் தூக்கினாள்.

“ரொம்ப அழகா இருக்க” என்றான் அவளின் மாலையை சரி செய்தபடி.

பெண்ணுக்கு சட்டென ஒரு கூச்சம். குளிர்ந்த விரல்கள் அவளின் வெற்று தோளை உரசி சென்றது.

மாங்கல்யம் சூட்டும் போதும் இமை கூட சிமிட்டாமல், அவளையே  பார்த்தபடி தான் மூன்று முடிச்சிட்டான்.

முத்து பெண் கை கூப்பி அவ்வளவு வேண்டுதல். அவனின் உறவை சொல்லி நெஞ்சத்தில் விழுந்த மாங்கல்யத்தில், கண்ணோரம் சிறிது கண்ணீரும் தேங்கிவிட்டது.

செல்வம் ஒற்றை விரலால் அதை துடைக்க, “இவ்வளவு சீக்கிரம் நடக்குன்னும் நினைக்கலை” என்றாள்.

அடுத்து குங்குமம் வைத்து, சுற்றி வந்தனர். நாராயணன் மிக அமைதியாகவே இருந்தார். கணேசன் மாமா, சுப்ரமணியால் அங்கு பேச்சு சத்தம் கேட்டது.

செல்வத்தின் தந்தை தண்டபாணி தானே சென்று மருமகளிடம் பேசினார். “என் மகனை சந்தோஷமா வைச்சுக்கோமா. அவனோட அம்மா கூடவே அவனுக்கான பாசமும் முடிஞ்சு போச்சு. என்னால அவனை சேர்த்து பிடிக்க முடியலை. விட்டுட்டேன். நீ கெட்டியா பிடிச்சுக்கோமா” என்றார் மனிதர் உணர்ச்சி வசப்பட்டு.

பெண்ணுக்கு உடனே வார்த்தைகள் வரவில்லை. “மாமா. கண்டிப்பா மாமா” என்றாள்.

உணவு அவர்களின் கடையில் ஏற்பாடுகியிருக்க, எல்லோரும் அங்கு சென்றனர். கமலா முன் நின்று எல்லோரையும் கவனித்தார். ரவி, மணி இருவரும் பரிமாறினர்.

வீட்டு ஆட்களை விட கடை ஆட்கள் கூட. அதில் நாராயணனுக்கு அளவில்லா வருத்தம். ‘என் ஒரு பொண்ணு கல்யாணம் இப்படியா நடக்கணும்?’ என்று தனக்குள் மறுகி கொண்டார்.

“என்னங்க பெரியவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கணும்” முத்து பெண் கணவனிடத்தில் மெல்ல சொன்னாள்.

அவனுக்கும் அது தெரியும். ஆனாலும் அமைதியாக இருக்க, “மாமா” என்று அவனின் அப்பாவை அழைத்துவிட்டாள்.

தண்டபாணி என்னம்மா என்று வர, கணவன் கை பிடித்து அவரின் காலில் விழுந்தாள்.

“நல்லா இருங்க. நல்லா இருங்க” மனிதர் இருவரின் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தார்.

அடுத்து கணேசன் தம்பதிகள், சுப்ரமணியின் பெற்றோர் காலிலும் விழுந்தார்கள்.

நாராயணன் தள்ளி நின்றிருக்க, பெண் கணவனை எதிர்பார்ப்பாக பார்த்தாள்.

முதல் நாளே அவளை வருந்த வைக்க செல்வத்திற்கு மனதில்லை. “மாமா, அத்தை வாங்க” என்று தானே அழைத்திருந்தான்.

நாராயணன் நொடி திகைத்தே மனைவியுடன் வந்து நிற்க, மணமக்கள் அவர்களிடமும் ஆசி பெற்று கொண்டனர். மகளின் மீது வைத்த அன்பு அவரை தடுமாற வைத்தது.

ரவி, மணி இருவரும் செல்வத்தை அணைத்து கொண்டனர். ரவியின் தங்கை  அண்ணனின் தோள் சாய்ந்து கொண்டாள்.

“வாழ்த்துக்கள் அண்ணி. இனி நீங்க தான் எங்களை மேய்க்க போறீங்க” என்றான் மணி சிரிப்புடன்.

முத்து பெண்ணுக்கு அவனை முதலில் இருந்தே பிடிக்கும். செல்வத்துடன் துணை நிற்கிறானே!

எல்லோரும் உணவருந்தி முடிக்க, அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்தது. முதலில் மணமக்கள் வசிக்க இருப்பிடம் வேண்டும்.

“நாம இங்கேயே இருந்துக்கலாமா?” என்று தனியே அவனின் மனைவியிடம் கேட்டான்.

செல்வத்துக்குள் நிறைய நிறைய ஓடிக்கொண்டிருந்தது. வார்த்தைகளாக கூட அதை சொல்ல முடியாது. தொண்டைக்குள் நின்றதை நெஞ்சுக்குள் தள்ளினான்.

“இருந்துக்கலாமே. இங்க என்ன குறை?” முத்து பெண் நொடியும் யோசிக்காமல் சொன்னாள்.

அவனுக்காக எல்லாவற்றையும் இவள் ஏற்பாள்! தெரியுமே அவனுக்கு.

“இருக்க பொருள் மட்டும் இன்னைக்கு வாங்கிடுறேன்” என்றான்.

“அவசரம் இல்லை. பொறுமையா வாங்குங்க. அத்தியாவசியம் மட்டும் போதும்” என்றாள் பொறுப்பான மனைவியாக.

அவளிடமே வேண்டிய அளவு பணம் உண்டு. கடைக்கு போக கூட வேண்டாம். வரவைத்து விட முடியும். ஆனால் கணவனின் பொறுப்பில் எல்லாம் விட்டாள்.

ரவி கொஞ்சம் தயங்கியே இவர்களிடம் வந்தான். “மாப்பிள்ளை. அது, பாப்பாக்கு சீர் கொடுக்கணும்” என்று ஆரம்பித்தான்.

“அவளே எனக்கான சீர் தான்” என்று செல்வம் முடித்துவிட்டான்.

ரவி அவனின் தந்தையை பார்த்து, “இல்லை மாப்பிள்ளை. அது முறைன்னு”

“எனக்கு அவர்கிட்ட இருந்து இவ மட்டும் தான் வேணும் மச்சான். புரிஞ்சுக்கோ” என்று செல்வம் செல்ல,

“எல்லாம் அப்பாவால. எனக்கு தெரியும் அவன் இப்படி தான் சொல்வான்னு” என்றான் ரவி தங்கையிடம்.

“அவர் இடத்துல இது தான் சரிண்ணா. அப்பா அவருக்கு பண்ணதுக்கு எந்த நியாயமும் செஞ்சிட முடியாது” என்றாள் முத்து பெண்.

நாராயணன் இவர்களிடம் வந்தவர், “என்ன சொன்னான்?” என்று கேட்டார்.

“வேணாம்ன்னு சொல்லிட்டான்” என்றான் ரவி.

“என்ன நாச்சி இது? நீயாவது சொல்ல கூடாதா? என் பொண்ணுக்கு நான் செய்யாம வேற யார் செய்வா? என்னோட உரிமை இது. நீ சொல்லு” என்று மகளிடம் கேட்க,

“ப்பா எனக்கு நீங்க செய்ங்க. நான் கேட்கிறதை கொடுங்க” என்றாள் மகள்.

“என்ன வேணும் கேளு நாச்சி, இப்போ, இப்போவே கொண்டு வந்து இறக்கிடுறேன்” தந்தை பரபரக்க,

“அவருக்கான மரியாதைப்பா” என்றாள் பெண்.

நாராயணன் திகைக்க, “இந்த ஜென்மத்துல உங்களோட ஒரு மருமகன் அவர் மட்டும் தான். அவருக்கான மரியாதை தான் நீங்க எனக்கு கொடுக்கிற சீர்” என்றுவிட்டாள் மகள்.

“நாச்சி” என்ற தந்தைக்கு மேற்கொண்டு வார்த்தைகள் வரவில்லை.

“எனக்காக உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கினாருப்பா. எனக்காகன்னு இன்னும் நிறைய செஞ்சிருக்கார். உங்களுக்கும் அது தெரியும். அவருக்குன்னு நான் இப்போதைக்கு செய்ய கூடியது,  அவருக்குண்டான மரியாதையை வாங்கி தர்றது. சரிதானேப்பா?” என்று முத்து பெண் அவரிடமே கேட்க,

நாராயணன் தலை மட்டும் ஆட்டிவைத்தவர், “அது, அது நான் இனி. அதை விட்டு வேற ஏதாவது, பொண்ணுக்கு நான் செய்ற சீர்”

“அவரோட விருப்பம் இல்லாம வேண்டாம்ப்பா. சீர் செஞ்சு தான்னு இல்லை. என் அப்பா, என் அம்மா வீடு எனக்கு எப்போவும் நிக்கும்ன்னு எனக்கு தெரியும். அதுவே போதும்ப்பா” என்று மகள் முடித்துவிட, தந்தை வேறென்ன சொல்ல முடியும்?

கமலா கேட்டிருந்தவர், மகளை அணைத்து கொண்டார். இவர்கள் வாழ்ந்துவிடுவார்கள் என்று நம்பிக்கையும் மனதை நிறைத்தது.

செல்வத்தின் வீட்டினர் விடைபெற, முத்து பெண் மருமகளாக நின்று அவர்களை வழியனுப்பினாள்.

“உங்களுக்கு தோணுறப்போ எங்களோட வந்துடுங்க மாமா” என்று மாமனாரிடமும் சொன்னாள்.

செல்வம் தம்பியுடன் கடைக்கு சென்றிருக்க, கமலா மகள் குடித்தனம் நடத்த தேவையானதை தயார் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

பொருட்களும் வந்திறங்க, அன்று மாலைக்குள் அது வீடாக மாறிவிட்டது. முத்து பெண் விளக்கேற்றி, ஒளியை எங்கும் பரப்பினாள். செல்வத்தின் முகத்தில் புதிதான தேஜஸ்.

இரவு உணவும் வெளியில் இருந்து வந்துவிட்டது. நாராயணன் உணவை மறுத்து கிளம்பினார். “ப்பா, ஏன்ப்பா? சாப்பிட்டு போங்க” மகள் அவரின் கையை பிடித்து கொண்டாள்.

“இல்லைம்மா. நான் கிளம்புறேன்” என்றவருக்கு மகளின் பிரிவு அதிகமே வாட்டியது.

நல்ல முறையில், அப்பாவாக எல்லாம் செய்திருந்தால் கூட இந்தளவு உடைய மாட்டார். என் பொண்ணுக்கு என்னால எதையும் செய்ய முடியலையே? அவளுக்காகன்னு நான் செஞ்சது எல்லாமே தப்பா போயிடுச்சே?

“ப்பா. ப்பா” என்று மகள் அவரை அழைக்க, கடகடவென்று கண்ணீர் இறங்கிவிட்டது. செல்வம் சட்டென அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

அவரின் மகளும் தந்தையின் கண்ணீரில் கரைந்தாள். இருவரை பார்த்து கமலா, ரவியும் கூட.

சில நிமிட பாச போராட்டத்தில் நாராயணன் விடைபெற, கமலா சூழ்நிலையை சமாளித்தார்.

எல்லோரையும் ஒன்றாக அமர வைத்து உணவு பரிமாறினார். மணி ஏதோ பேச, ரவி பதில் சொல்ல என்று சகஜ நிலைக்கு வந்தனர்.

“மாப்பிள்ளை கையால ஒரு டீ கிடைச்சா பைனல் டச் கிடைச்சுடும்” என்று ரவி மெல்ல பிட்டு போட,

“மச்சான் தான் மாப்பிள்ளைக்கு செய் முறை செய்யணும். செய்டா, போடா” என்று செல்வம் அவனை விரட்டிவிட்டான்.

“கல்யாண மாப்பிள்ளைன்னு பார்க்கிறேன். மணி வா, நாமளே டீ போட்டு ஜம்முனு குடிப்போம்” என்று அவனுடன் கீழிறங்கிவிட்டான்.

கமலா மகளை தனியே அழைத்து சென்றவர், “விளக்கேத்த குளிச்சிட்ட. இப்போ குளிக்கணும்ன்னு இல்லை. பார்த்துக்கோ நாச்சி. அம்மா காலையில வரேன். நீ எதுவும் செய்ய வேணாம்” என்றவர், மருமகனிடம் சொல்லி கொண்டு கிளம்பினார்.

மணமக்கள் மட்டும் இருக்க, முத்து பெண்ணுக்கு திணறல்.

செல்வம் கதவை மூடி அறைக்குள் வந்தவன், “பால் இருக்கு இல்லை” என்று கேட்டான்.

“ம்ம். இருக்கு” பெண் சொல்ல,

“எடுத்துட்டு வரலாமே” என்றான் கணவன்.

“இப்போவேவா”

“ஏன் பால் குடிக்க நல்ல நேரம் பார்க்கணுமா?”

“அது. அது. எனக்கு தெரியலை”

“எனக்கு தெரியுமே” என்றபடி அவளை நெருங்கினான்.

முத்து பெண் கண்களை விரித்து அவனை பார்க்க, “எங்க அந்த மாலை?” என்று கேட்டான்.

“உள். உள்ள”

செல்வம் சென்று எடுத்து வந்தவன், தானே அவளின் கழுத்தில் முத்து மாலையை அணிவித்தான். விலகிவிடுவான் என்று பெண் நினைக்க, இன்னும் நெருங்கி அவளை மூச்சடைக்க வைத்தான்.

“கட்டிப்பிடிக்க கூட நல்ல நேரம் பார்க்கணுமா?” அவன் கிசுகிசுக்க,

“ஹான்” என்று அவனின் புது மனைவி முழித்தாள். காதில் விழுந்தால் தானே எதுவும்.

“கட்டி பிடிடி” என்றான் கணவன்.

பெண் அவனின் கைகளை பார்த்து, “நீ. நீங்க?” என்று கேட்க,

“நீ முதல்ல. உனக்கு தானே முதல்ல காதல் வந்துச்சு” என்று புது நியாயம் கேட்டான்.

“ஆமால்ல” பெண்ணுக்கும் நொடி தோன்றி, கைகளை கொண்டு சென்றுவிட்டவள், பின் நிறுத்தி, “இப்போ இதெல்லாம் செல்லாது” என்றாள்.

“நாம சரிசமம் ஆகிட்டோம்” என்றாள்.  அவனின் மனைவி ஆயிற்றே. புது வாதம் வைத்தாள்.

“கரெக்ட் தான். சரி ஒரே நேரத்துல கட்டி பிடிக்கிறோம்” கணவன் சொல்லி, “ஒன், டூ, த்ரீ” என்று கவுண்ட் டவுன் வேறு.

முத்து பெண்ணுக்கு சிரிப்பே. மூன்று சொல்லி முடிக்கவும் கட்டி பிடித்தும் கொண்டனர். “முத்தம் வைக்கவும் இதெல்லாம் செய்யணுமா?” செல்வம் குறும்பாக கேட்க,

“வைச்சா எனக்கு ஓகே தான்” என்றாள் அவள் தோள் குலுக்கி.

“இதுக்கே விடிஞ்சிடும்டி. எண்ணி எண்ணி செய்ய, இதென்ன கணக்கா? காதல்டி!” என்றவன், முதல் முத்தத்தை உச்சியில் வைத்து, அவளின் பாதத்தில் முடித்தான்.

முத்து மாலை இறுதி வரை அவளின் கழுத்தை விட்டு நீங்கவே இல்லை. பூப்போல் தாங்கினான் அவளை. அவனின் மென்மையே பெண்ணை அதிகம் திணற வைத்துவிட்டது.

இதற்கு வன்மையே சாலசிறந்தது என்று புரிய வைத்துவிட்டான் கணவன்.

அவனுக்கான பெண்ணை கொண்டாடி, நிறைவான தாம்பத்தியத்தை பெற்றான்.

அந்த மகிழ்ச்சி வெளிப்படையாக அவனிடம் தெரிய, முத்து பெண்ணுக்கு அவனை பார்க்க இன்னும் காதல் பெருகியது.

“என்ன ஒரே பார்வையா இருக்கு?” என்று கணவன் கேட்க,

“உங்களுக்கு ரொம்ப முன்னாடியே வாங்கி வைச்ச கிப்ட் ஒன்னு இருக்கு. கொடுக்கவா?” என்று கேட்டாள்.

“கொடு” செல்வம் கை நீட்ட, பெண் அவளோடே வைத்திருந்ததை எடுத்து வந்து அவனின் கழுத்தில் அணிவித்தாள்.

“செயின். செமயா இருக்கு. இதென்ன எனக்கான தாலியா?” அவன் அதை வருடி கொண்டே சீண்ட,

“ஏன் இருந்தா போட்டுக்க மாட்டிங்களா என்ன?” என்று முத்து பெண் புருவத்தை ஏற்றி இறக்கினாள்.

செல்வம் கண்ணடித்து, அந்த செயினுக்கு முத்தம் வைக்க, பெண்ணுக்கு புதுவிதமான உணர்வு.

கணவன் அவளை இழுத்து தன் நெஞ்சில் போட்டவன், “நீயும் முத்தம் கொடு” என்று வம்படித்து செயினுக்கும், அவனுக்கும் சேர்த்து பெற்று கொண்டான்.