முத்து பெண் அவனை கண்களை சுருக்கி முறைக்க, “கோவில் தான் இப்போதைக்கு” என்றான்.

“முகூர்த்தம் நாளைக்கு” என்றான் தொடர்ந்து.

“ம்ப்ச். ஏன் இவ்வளவு அவசரம்?” என்று கேட்டபடி அவனிடம் இருந்து விலக பார்க்க,

விடாமல் தன்னுடனே சேர்த்தணைத்து கொண்டவன், “இதுவே லேட் தான்” என்றான்.

“நாம இப்படி கல்யாணம் பண்ணிக்க, இத்தனை மாசம் வெய்ட் பண்ணியிருக்கணும்ன்னு இல்லை”

“உங்க அப்பா உனக்கு வேணும், அப்படி தானே?” செல்வமின் கோவம் உடைய நேரம் பார்த்தது.

“அப்பாவும் வேணும். நம்மளோட பேமிலி எல்லாமும் வேணும்” என்று பெண் பொறுமையாகவே சொன்னாள்.

“எனக்கு அவங்க யாரும் வேணாம்” செல்வம் தெளிந்துவிட்டான்.

“நீங்க இப்போ எமோஷனலா இருக்கீங்க. அதான் ரொம்ப அவசரப்படுறீங்க. அப்பாவுக்கும், அமைச்சருக்கும் என்ன பிரச்சனை தெரியலை. ஆனா அப்பா கண்டிப்பா அதை சமாளிச்சிடுவார். திரும்ப யாரும் என்னை இப்படி பண்ண மாட்டாங்க. கூட நீங்களும் இருக்கீங்க. வேறென்ன வேணும். கொஞ்ச நாள் இருங்க. நாம இரண்டு வீட்ல பேசி”

“நமக்காக வாழணும்ன்னு ஆசையா இருக்கு. சரி சொல்லு”  என்று இடையிட்டு கேட்டான் செல்வம்.

“நாளைக்கு இருப்போம், இல்லாம போவோம். அதுல இவங்களை எல்லாம் கட்டி மேய்க்க முடியாது.  நீ மட்டும் வேணும். உன்னோட சம்மதம் மட்டும் வேணும். பதில் சொல்லு. திரும்ப எல்லாம் கேட்க மாட்டேன்” என்றான் அழுத்தமாகவே.

“ஏன், ஏன் இப்படி? இல்லாம எங்க போக போறோம்? நல்லது பேசும் போது, இந்த மாதிரி பேச கூடாது. விட்டேன்னு சொல்லுங்க. மூணு முறை சொல்லுங்க”

“விட்டேன்னு எதை சொல்ல சொல்ற? கல்யாணத்துக்கு கேட்டதையுமா?”

“என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி?” பெண்ணுக்கு கண்கள் கலங்கிவிட்டது. அவனின் நெஞ்சிலே முகம் வைத்து கொண்டாள்.

செல்வத்திற்கு இந்த நொடி, தான் வாழ்ந்தால் போதும் என்ற மனநிலை மட்டுமே. இதன் பெயர் சுயநலம் என்றால், அது பற்றி அவனுக்கு கவலை இல்லை.

“பதில் சொல்லு. அப்புறம் என் சட்டையை ஈரம் பண்ணு” என்றான்.

“வேற ஏதாவது பிரச்சனையா?” பெண் அங்கேயே முகம் துடைத்து கேட்க, செல்வம் கல்லாய் நின்றான்.

“செல்வா” என்ற ரவியின் குரலில், இருவரும் பிரிந்து நின்றனர்.

ரவியை தொடர்ந்து அவளின் அப்பாவும், அம்மாவும் வந்தவர்கள்,  மகளை அணைத்து கொண்டனர்.

“என்னால தான் நாச்சி இதெல்லாம். ரொம்ப கஷ்ட படுத்திட்டாங்களா?” என்று நாராயணன் மகளின் உச்சி வருடி கேட்டார்.

“இல்லைப்பா. நான் நம்ம கார்ல தான் இருந்தேன், அவங்க முன்னாடி, பின்னாடி தான் இருந்தாங்க” என்று மகள் சொல்ல, நாராயணன் ஆசுவாசம் கொண்டார்.

“சரிம்மா கிளம்புவோம். வா போலாம். ரவி கார் எடு போ” என்று நாராயணன் மகளை அங்கிருந்து அழைத்து செல்ல பார்த்தார்.

“இருங்க” என்று செல்வம் அவர்களுக்கு முன் நின்றான்.

“நாளைக்கு காலையில எங்களுக்கு முகூர்த்தம்” என்றான் தகவலாக.

நாராயணனுக்கு அப்படி ஒரு கோவம். “நீ சொன்னா, நீ சொன்னா ஆயிடுமா?” என்று குதித்தார்.

“உங்களை பத்தி எனக்கு தெரியும். எப்போவும் உங்க சத்தியத்தை நீங்க காப்பாத்திறதில்லை” என்றான் செல்வம் குத்தலாகவே.

“முன்ன கடையில வருமானம் வரணும், இப்போ இவளை கூட்டிட்டு வரணும். இரண்டையும் நான் செஞ்சுட்டேன்”

நாச்சிக்கு அதிர்ச்சி. இவரா என்னை கூட்டிட்டு வந்தது? அப்பாவை கேள்வியாக பார்த்தாள்.

“அது, அது ஏதோ அந்த நேரத்துக்கு. அதுக்காக அதையே பிடிச்சுட்டு தொங்குவியா?”

“உங்களை மாதிரி நேரத்துக்கு ஒரு பொழைப்பு பொழைக்க எனக்கு தெரியாது” என்றுவிட்டான்.

“டேய் என்ன” என்று நாராயணன் அவன் மேல் ஏறி போக பார்க்க,

“ப்பா. என்ன செய்றீங்க?” என்று பிள்ளைகள் அவரை தடுத்தனர்.

“அவன் என்னை என்ன கேட்டான்னு பார்த்தீங்க இல்லை. அவனுக்காக போய் என்னை நிறுத்தறீங்க?” நாராயணன் பிள்ளைகளிடம் கத்தி கொண்டிருக்க,

கமலாவோ, “முகூர்த்த புடவை எடுக்க எங்க போலாம்?” என்று கேட்டு வைத்தார்.

செல்வம் அவரை சந்தேகமாக பார்க்க, மகள் கண்களை விரித்தாள்.

“நாளைக்குன்னா நாள் பார்க்கணும். புடவை, தாலி இதுக்கு மேல வாங்குறது கஷ்டம். கொஞ்சம் யோசிங்க. இந்த வாரத்துக்குள்ளன்னா ஓகே” என்று மேலும் சொல்ல,

“கமலா என்கிட்ட வாங்கி கட்டிக்காத. வாயை மூடிட்டு கிளம்பு. நாச்சி வா போலாம். டேய் நீ என்ன மரம் மாதிரி நிக்கிற. கார் எடு போ” என்று நாராயணன் கத்தினார்.

“இல்லைங்க. நாளைக்கு நாள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. புடவை, தாலி என் பொறுப்பு. நேரத்துக்கு வந்திடும்” என்று செல்வம் சொல்ல,

“மொட்டையா பேசணும்ன்னு இல்லை மாப்பிள்ளை. அத்தை சொல்லுங்க. அப்படியே பூவும் கொஞ்சம் வாங்கிடுங்க” என்றார் கமலா.

“நான் என்ன கத்திட்டிருக்கேன். நீங்க என்ன பேசுறீங்க. ஒழுங்கு மரியாதையா என்னோட கிளம்புங்க எல்லாம்”

“ரவி. மாப்பிள்ளையோட போ. எல்லாம் பார்த்து வாங்கு. பணம் அவர் தான் கொடுக்கணும். நீ நாச்சிக்கு தேவையானதை லிஸ்ட் வாங்கிட்டு வந்திடு” என்றவர்,

“நாங்க வீட்டுக்கு போய்ட்டு வரதா? இல்லை இங்கேயே தங்கிறதா?” என்று மருமகனிடம் கேட்டார்.

“இங்க தான். கொஞ்ச நேரம். நான் ஆள் விட்டு உடனே சுத்த படுத்திடுறேன்” என்ற செல்வம் வேலையை பார்க்க போய்விட்டான்.

நாராயணன் அதற்கு மேல் இன்னும் இன்னும் குதிக்க, கமலா அவரை சுத்தமாகவே கண்டுகொள்ள வில்லை. சுப்பிரமணியுடன் வந்த ஆட்களை வைத்து சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டார். ரவி வேகமாக செல்வம் பின் சென்றான்.

நாச்சி தான் அப்பாவை சமாதானம் செய்ய, அவர் மலையிறங்குவேனா என்று ஆட்டம் காட்டினார்.

மகள் சோர்வடைய, “நாச்சி நீ வந்து தூங்கி ரெஸ்ட் எடு. அப்போ தான் காலையில முகம் நல்லா இருக்கும். ஏங்க போய் எங்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்துடுங்க” என்று கணவருக்கு வேலை சொல்லி மகளை உள்ளறைக்கு அழைத்து கொண்டு சென்றுவிட்டார்.

“ம்மா. என்னம்மா? அப்பா முன்னாடி இப்படி, உங்களுக்கு பயமா இல்லையா?” நாச்சி அம்மாவிடம் மெல்லிய குரலில் கேட்க,

“பயம் எல்லாம் இருக்கு. ஆனா அதை பார்த்தா என் பொண்ணு வாழ்க்கை? நீ சாப்பிட்டு தூங்குற வழியை பாரு” என்றுவிட்டார் கமலா.

நாராயணன் எதிர்ப்பு காட்ட ஆள் இல்லாமல் அமைதியாகிவிட்டார். மகளின் கை பிடித்தால் மகள் அவர் பக்கம்  நின்றுவிடுவாள் தான். ஆனால் என்னமோ மனிதர் செய்யவில்லை. விட்டுவிட்டார்.

இங்கு ரவி தனியாக செல்வத்தை பிடிக்க முயன்று கொண்டிருந்தான். மறுநாள்க்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய செல்வம் ஓடி கொண்டிருக்க, “ண்ணா. நம்ம ஆளுங்களுக்கு ஒரு வார்த்தை?” என்று கேட்டு நிறுத்தினான் சுப்பிரமணி.

“இல்லை தேவையில்லை சுப்பு”

“பெரியப்பாக்கு மட்டும். அவர் உனக்கு கல்யாணம் பண்ணனும்ன்னு ஆசைப்பட்டார். நடக்கும் போதாவது வரட்டுமே”

“அவருக்கு நான் சொல்லிட்டேன். சித்தப்பா, சித்திக்கும் தான். நம்ம கடை ஆளுங்க. கணேசன் மாமா. அவ்வளவு தான்.  மீதி யாரும் தேவையில்லை” என்று கிளம்பிவிட்டான் செல்வம்.

ரவி அவனுடன் பைக்கில் ஏறிக்கொண்டவன், “ஒரு நிமிஷம் நிறுத்துடா. உன்கிட்ட ஒன்னு கேட்கணும்” என்றான்.

“அகிலன்  போன் பண்ணானா?” செல்வம் நிறுத்தாமல் கேட்க,

“பண்ணான். ஆனா விஷயம் சொல்லலை. உன்னை முக்கியமா கேட்டுக்க சொன்னான்” என்றான் ரவி.

“அவனுக்கென்ன அவ்வளவு இது. இப்படி எங்களுக்கு கல்யாணம்ன்னு சொன்னதும், அதை உன்கிட்ட சொல்லியே ஆகனும்ன்னு நிக்கிறான்”

“எதை, முதல்ல சொல்லு”

“அடுத்த நாராயணன் நான் தான்றதையா?”

“டேய் நீ எந்த அர்த்தத்துல சொல்ற?” ரவியிடம் அச்சம்.

“எது இருக்க கூடாதுன்னு நீ நினைக்கிறியோ, அது தான்” என்றான் செல்வம்.

“மாப்பிள்ளை. டேய். நீ, நீ. அதனால தான் நாச்சியை விட்டாங்களா? நிறுத்துடா. பைக்கை நிறுத்தி தொலைடா”

“நிறுத்திட்டேன் இப்போ சொல்லு”

ரவி இறங்கி அவன் முன் நின்றவன், “ஏண்டா மாப்பிள்ளை இப்படி பண்ண? அது, அது ரொம்ப ரிஸ்க்டா” என்றான் வேதனையாக.

“இருந்துட்டு போகட்டும். நீ ஏறு. நேரம் ஆச்சு”

“இது நாச்சிக்கு தெரிஞ்சா போதும், அவளே கல்யாணத்தை நிறுத்திடுவா”

“ஏன் ரிஸ்க்ல இருக்கிற என்னை வேணாம்னு சொல்லிடுவாளா?” என்று செல்வம் சிரிப்புடன் கேட்டான்.

“கொன்னுடுவேன் உன்னை. அவ வேலையை விட்டதே உனக்காக தான். உனக்கு ஒரு கெட்டதுன்னா அவ அதை ஏத்துக்கவே மாட்டா. இப்போ அவளால தான் இதெல்லாம்ன்னு தெரிஞ்சா, சொல்லவே வேணாம். நிறுத்திட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பா” என்றான் தங்கையை அறிந்தவனாக.

“தெரியும்டா. முதல்ல கல்யாணம் முடியட்டும் பார்த்துக்கலாம்”

“எப்போ தெரிஞ்சாலும் அவ விட மாட்டா, சாதாரணமா அவளை நினைக்காத” ரவி நண்பனை எச்சரித்தான்.

“சரி அதுவரைக்கும் நான் அவளோட வாழ்ந்துட்டு போறேன். போதும்” என்று முடித்து கொண்டான் செல்வம்.

ரவியின் பேச்சு எதுவும் அவன் காதில் ஏறவில்லை. நாராயணன் மறுப்பும் தான்.

மறுநாள் அவன் நினைத்தது போல் அவனுக்கும், அவனின் முத்து பெண்ணுக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

முத்து பெண் அவனின் கஜானாவில் வந்து சேர்ந்தாள்!