கண்ணே முத்து பெண்ணே 16

மகளை எதிர்பார்த்து நாராயணன் வாசலையே பார்த்திருக்க, மகன் தான் வந்தான்.

“எங்கடா பாப்பா?” என்று அவனுக்கு பின்னால் தேடி போய் பார்த்து வந்தார் தந்தை.

“அவ செல்வத்தோட வரா” ரவி சொல்ல,

“ஏன் நீ கூட்டிட்டு வர வேண்டியது தானே? அவனோட எதுக்கு அவளை விட்ட? வர வர உனக்கு புத்தி மழுங்கி போச்சு. அறிவுகெட்டவனே. மூளையை அடகு வைச்சுத்திட்டு சுத்துறான்” என்று வழக்கத்திற்கு மாறாக ரவியை அதிகம் பேசினார் மனிதர்.

“ப்பா” என்ற மகனுக்கு கடுப்பே.

“என்னடா நொப்பா. அவளை கூட்டிட்டு வரதை விட உனக்கு என்ன கழட்டுற வேலை?”

“நீங்க ஏன் அவளை கூட்டிட்டு வர போகலை?” அவரின் மனைவி கமலா வாய் திறந்தார்.

“என்ன மகனை பேசினதும் வாய் திறக்கிற? மகளை பத்தி கொஞ்சமாவாவது உனக்கு அக்கறை இருக்கா?”

“இருக்க போய் தான் உங்களை கேட்கிறேன்” என்றார் கமலா.

“அவனை இத்தனை கேள்வி கேட்டீங்க? நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். நம்ம வீட்ல இவ்வளவு பெரிய விஷயம் நடந்து போச்சே, உங்களுக்கு யார் வந்து நின்னா?”

“என்ன? என்ன வாய் நீளுது?” நாராயணனுக்கு மனைவியின் புதிதான பேச்சில் கோவத்துடன், திகைப்பும்.

இத்தனை வருடங்கள் தான் என்ன செய்தாலும் அமைதியாக துணை நின்றவள், இன்று என்னை கேள்வி கேட்கிறாளா?

உண்மையில் கமலா அப்படி தான் இருந்தார். நாராயணன் செய்வதை சரி என்று அப்படியே ஏற்று கொள்வார். காரணம் குடும்பத்திற்காக அவர் செய்தது மிக பெரிது.

ஒரு கட்டத்தில் தொழிலில் ஏகப்பட்ட அடி. உதவ ஒருவரும் முன் வரவில்லை. அப்போது தான் அண்ணாச்சி வந்தார். பினாமி பற்றி சொன்னார்.

கமலா பயந்து மறுக்க, நாராயணன் குடும்பத்திற்காகவே அதை ஏற்றார். “என் பொண்டாட்டி, பிள்ளைங்க இப்போ இருக்கிற போலவே இருக்கணும். எங்கேயும் யார்கிட்டேயும் நீங்க குறைஞ்சு போயிட கூடாது. அதுக்காக இதை நான் பண்ணுவேன்” என்று நின்றார் மனிதர்.

இத்தனை வருடமும் அப்படி தான் இருந்தார். நாராயணனுக்கு தன் குடும்பம் முக்கியம். பொண்டாட்டி, பிள்ளைங்க முக்கியம். செல்வமும் அதனாலே சிக்க வைக்கப்பட்டவன்.

ஆனால் இன்று அதே மகளுக்கு ஒரு ஆபத்து எனும் போது, செல்வம் தானே வந்தான். “நான் இருக்கேன். நான் அமைச்சர்கிட்ட பேசுறேன்” என்று செல்வம் சொன்ன நொடி, கமலாவிற்கு கண்ணீர் நிரம்பிவிட்டது.

மகளின் ஆசையை விட, கணவரின் பேச்சை மதித்தவர், இன்று செல்வத்திற்காகவே பேசும் நிலைக்கு தள்ளப்பட்டார். கணவனை கேள்வி கேட்கவும் ஆரம்பித்துவிட்டார்.

நாராயணன் மனைவியை கோவமாக பார்க்க, “நான் இருக்கிறதை கேட்கிறேன். அன்னைக்கு எங்களுக்காகன்னு அதுல போய் தலை கொடுத்தீங்க. இன்னைக்கு அதனாலே நம்ம பொண்ணு ஆபத்துல மாட்டி வெளியே வந்திருக்கா. நமக்காகன்னு ஒருத்தரும் இல்லை. யார் வந்தா நமக்காக?” என்று கேட்டார்.

“எனக்கு யாரும் தேவையில்லை. எவனை நம்பியும் நான் இல்லை”

“உங்களை நம்பி நாங்க இருந்தோமே. எங்களுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?” மனைவியின் கேள்வியில் நாராயணன் வார்த்தைகளின்றி நின்றுவிட்டார்.

ரவிக்கு அம்மாவை அணைத்து கொள்ளும் ஆர்வம். கட்டுப்படுத்தி கொண்டான்.

“உங்க பொண்ணு ஆசைப்பட்டாங்கிற ஒரு காரணத்துக்காக அந்த தம்பிக்கு அவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தீங்களே? ஆசைப்பட்ட உங்க பொண்ணுக்கு என்ன தண்டனை கொடுத்தீங்க? இல்லை அவர் பட்ட கஷ்டத்துக்கு என்ன பதில் தான் சொல்ல போறீங்க?

“இது தான் கர்மாங்கிறது. அன்னைக்கு அவருக்கு. இன்னைக்கு நமக்கு”

“அன்னைக்கு அந்த தம்பியோட யாரும் இல்லை. இன்னைக்கு நம்மளோடவும் யாரும் இல்லை”

“இப்போ, இப்போ எதுக்கு இப்படி மூச்சு பிடிச்சுட்டு கேள்வி கேட்கிற?” என்றபடி அமர்ந்து கொண்டார். ஏனோ மனிதருக்கு நிற்கும் தெம்பு இல்லை.

“உங்ககிட்ட பதில் இருக்காதுன்னு தெரியும். நான் கேட்டதும் இத்தனை நாள் இருந்த மாதிரி இனியும் நான் இருக்க மாட்டேன்னு உங்களுக்கு சொல்ல தான்”

“ஏன்? ஏன் பண்ண போற?” நாராயணனுக்கு லேசான பயம்.

“அந்த தம்பிக்கு. இல்லை என் மருமகனுக்கு நியாயம் செய்ய போறேன்” என்றார் உறுதியாக.

“எப்படி?” அவர் சந்தேகத்துடன் கேட்க,

“அவருக்கு கல்யாணம் பண்ணி வைச்சு! ரவி அவங்க எங்க இருக்காங்கன்னு கேளு” என்றார் மகனிடம்.

“இதோம்மா” ரவி மறைக்க முடியா உற்சாகத்துடன் நண்பனுக்கு அழைத்தான்.

“என்னடா சொல்ற?” ரவி அதிர்ச்சியுடன் போனை வைத்தான்.

“என்னவாம்டா? பாப்பா எப்படி இருக்கா?” நாராயணன் பதட்டத்துடன் கேட்டார்.

“அவனோட கூட்டிட்டு போயிட்டானாம். இனி அங்க தான் இருப்பாளாம்” என்றான்.

“அதெப்படி என் மகளை அவன் கூட்டிட்டு போகலாம். வண்டியை எடு. இன்னைக்கு அவனை ரெண்டுல ஒண்ணு பார்த்துடுறேன்” நாராயணன் வேட்டிய வரிந்து கட்டி கொள்ள,

“இதே மாதிரி அமைச்சர்கிட்ட போக வேண்டியது தானே?” என்று கேட்டுவைத்தார் கமலா.

“ம்மா” ரவிக்கு சிரிப்பு வேற வந்து தொலைத்தது.

“என்னடி வாய் நீளுது? நான் போறேன்னு தான் சொன்னேன். நீதான், வேணாங்கன்னு ஓடி வந்து கை பிடிச்சுக்கிட்டு கண்ணீர் விட்ட?” என்று எகிறினார் கணவர்.

“இப்போவும் நான் தான் சொல்றேன். நாம அங்க போலாம். ரவி கார் எடு” என்று முன்னால் சென்றார்.

கணவர் செய்த பாவத்துக்கு, தன்னால் முடிந்த பிராய்சித்தத்தை செய்ய தயாராகிவிட்டார் கமலா. இன்று ஒரு நாள் அவர் பட்ட பாடமே போதும்.

இக்கட்டு என்று வந்தால் ஒருவரும் தங்களுடன் நிற்க மாட்டார்கள். ஒருவனை தவிர. அவன் தான் அவரின் மருமகன் செல்வம்.

அதோடு மகளின் வாழ்வும் அவனுடன் தான் என்பதும் உறுதியாகிவிட்டது. இனியும் கணவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அம்மாவாக தான் தோற்றுவிட கூடாது என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார்.

“என்னடா ஆச்சு உன் அம்மாக்கு? திடீர்ன்னு இந்த போடு போடுறா?” நாராயணன் மகனிடம் விசாரிக்க,

“என்னவா இருந்தா என்னப்பா, இது நல்லா இருக்கு” என்று ரவி கார் எடுக்க சென்றான்.

நாராயணன் வேறு வழி இல்லாமல் அவர்களை பின் தொடர்ந்தார்.

செல்வத்தின் புது கடையில் தான் இருவரும் இருந்தனர். சுப்பிரமணி ஜோடியாக வந்தவர்களை ஆரவாரமாக வரவேற்றுவிட்டான்.

கடை நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இருந்தது. “நாம மேல போயிடலாம்” என்று மேல் மாடிக்கு வந்தனர்.

“என்ன விஷயம்ன்னு தெரியலைண்ணா. ஆனா உங்களை இப்படி ஒண்ணா பார்க்க ரொம்ப நல்லா இருக்கு” என்றான் அண்ணனிடம்.

“நான் உங்களுக்கு சாப்பிட, குடிக்க எடுத்துட்டு வரேண்ணா?” என்ன சொல்லி, கீழே சென்றுவிட்டான்.

முத்து பெண்ணுக்கு முகமே சரியில்லை. இப்படி அதிரடியா தன்னை அவனுடன் அழைத்து கொண்டு வந்துவிடுவான் என்று எதிர்பார்க்கவில்லை.

தந்தை தொழில் நடக்கும் இடத்தில் வந்து ஏதும் பிரச்சனை செய்து விடுவாரோ என்று கவலை கொண்டாள்.

“சாரி இங்க ஏதும் சரியா இல்லை” என்றபடி செல்வம் அவள் அமர இருக்கை எடுத்து வந்தான்.

“ம்ப்ச். சாரி வேற. நீங்க உட்காருங்க” என்றாள்.

“அப்போ என் மடியில உட்கார்ந்துக்கிறியா?” என்று சிரிப்புடன் கேட்க,

“என்ன சிரிப்பு? கண்டிப்பா நான் உங்க மடியில் உட்கார தான் செய்வேன். ஆனா இப்போ இல்லை” என்றாள் முத்து பெண்.

“ஒரே நாள்ல நிறைய நடந்துடுச்சு. அந்த டென்ஷனே எனக்கு இன்னும் குறையலை. அதுக்குள்ள நீங்க புதுசா ஒன்னு சேர்க்கிறீங்க. நான் பாவம் இல்லையா?”

செல்வம் அவளை நெருங்கி நின்று கைகளை கோர்த்து கொண்டவன், “என்னோட இருக்கிறது மேடம்க்கு டென்க்ஷனா?” என்று கேட்டான்.

“உங்களோட இருக்கிறது என்னோட ஏக்கம், ஆசை, விருப்பம் எல்லாம்” என்றாள் அவனின் நெஞ்சில் முட்டி.

செல்வம் கண்களை மூடி கொண்டான். ‘எனக்காக அமைச்சர் இவளை விடுவார்ன்னு நினைச்சேன். ஆனா அவர் எனக்கு பெரிய ஆப்பா வைச்சுட்டார், எப்படி சமாளிக்க போறேன்?’ தெரியவில்லை.

முத்து பெண் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்னாச்சு?” என்று பதட்டம் கொண்டாள். அவன் முகத்தில் அவ்வளவு சுருக்கம், சோர்வு.

“ஒண்ணுமில்லை” என்றவன், அவளை நெஞ்சோடு அணைத்து கொண்டான் அவனுக்கான ஆறுதல் தேடி. முத்து பெண் அவனின் முதுகை வருடி விட்டாள், தட்டி கொடுத்தாள்.

“பயந்துட்டீங்களா? என்னை விட உங்களுக்கு எல்லாம் ரொம்ப பதட்டமா இருந்திருக்கும் இல்லை” என்று அவன் முகம் பார்த்து கேட்க, செல்வம் தலையசைத்தான்.

“என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியே இருக்கீங்க?”

“ஒன்னுமில்லை. வேற டென்ஷன். நீ சொல்லு எங்க நம்ம கல்யாணத்தை வைச்சுக்கலாம்” என்றான் தன்னை மாற்றி.