கண்ணே முத்து பெண்ணே 14

அதிகாலையில் எப்போதும் போல் சென்னைக்கு கிளம்பிய முத்து நாச்சியை காணவில்லை என்று ஓடி வந்தான் ரவி.

செல்வம் புது கடையிலே இருந்தான். இரவு நாச்சியிடம் பேசி முடித்தபின் அவனின் தந்தை அழைத்திருந்தார்.

‘என்ன இந்த மனுஷன் புதுசா போன் எல்லாம் பண்றார்? அதுவும் இந்த நேரத்துல?’ செல்வம் நினைத்தபடி எடுக்க, “முக்கியமான விஷயம் பேசணும்” என்றார் தண்டபாணி.

ஆட்கள் எல்லாம் கடை அடைத்து கிளம்பி கொண்டிருக்க, சுப்பிரமணி மட்டும் இவனுக்காக காத்திருந்தவன், என்னவாம்ண்ணா? என்று இவனிடம் சைகையில் கேட்க, போனின் ஸ்பீக்கரை ஆன் செய்தான்.

“அது உங்க அக்கா வந்திருந்தா?” என்றார் தண்டபாணி.

“அவளுக்கு சொத்து வேணுமாம்”

“கொடுங்க” என்றான் செல்வம்.

“கொடுங்கவா? கிறுக்கு பிடிச்சிருச்சா உனக்கு? அவளுக்கு நாம முன்னமே நகையா, பணமா கொடுத்திட்டோமே. திரும்ப சொத்துன்னு வந்தா?”

“சட்டம் சொத்து கொடுக்க சொல்லி தான் இருக்கு”

“அப்போ உன் பங்கை கொடுத்திடுறேன்” என்றார் தண்டபாணி.

“பெரியப்பா. என்ன இது?” என்று சுப்பிரமணி தான் கோவத்துடன் கேட்டான்.

“என்னடா, என்னை ஏன் கேட்கிற? அவனை கேளு. அவன்தானே கொடுக்க சொல்றான். அவ கேட்கிறதும் இவன் சொத்தை தான் கேட்கிறா?” தந்தையும் கோபத்துடன் தான் சொன்னார்.

செல்வம் புருவம் சுருக்க, “அக்கா என்ன லூசா? அண்ணா சொத்தை ஏன் கேட்கிறாங்க” மணி கேட்க,

“அது எனக்கு தெரியாது. ஆனா பெரியவனும், அவளும் கலந்து பேசுறாங்கன்னு தோணுது. இவன் பங்கு குறைஞ்சிட கூடாதுன்னு செல்வம் சொத்துல கை வைக்கிறான் போல” என்றார் தண்டபாணி அனுமானத்துடன்.

“நீங்க முடியாதுன்னு சொல்லுங்க பெரியப்பா”

“நான் ஏண்டா சொல்லணும். உன் அண்ணனுக்கு வாய் இல்லையா? அவன் வந்து பேச மாட்டானா?”

“அவங்க உங்களை விட்டுடுவாங்கன்னு உங்களுக்கு பயம். அதான் பேச மாட்டேங்கிறீங்க” என்று மணி சொல்லிவிட, பளிச்சென அவன் முதுகில் அடி விழுந்தது.

அங்கு தண்டபாணி தளர்ந்து போனார். உடன் கோவமும். “நான் அவங்களை அண்டி பிழைக்கிறேன்னு சொல்றியாடா?” என்று குரல் உயர்த்தினார்.

“ண்ணா நீங்க என்னை அடிச்சாலும் நான் பேசுவேன்” என்று செல்வத்திடம் எகிறிய மணி, “அப்படி இல்லைன்னா ஏன் அண்ணனை பார்க்க வரல. அவனுக்கு ஏன் நீங்க முன்ன வந்து நிக்கலை” என்று பெரியப்பாவிடம் கேட்டான் மணி.

“அவன் சேரக்கூடாத இடம் சேர்ந்துட்டு உள்ள போவான். நான் வந்து அவனுக்கு பெயில் எடுக்கணுமா?”

“எடுக்காதீங்க. அதை நாங்க பார்த்துகிறோம், அதே மாதிரி அவர் சொத்திலும் யாரும் கை வைக்க கூடாது. வைச்சீங்க மொத்த சொத்து மேலயும் நான் கேஸ் போடுவேன்” என்றான் மணி.

“போடு. இருக்கிற கொஞ்சநஞ்ச மரியாதையும் காத்துல போகட்டும். அவனுக்கு தம்பி தானே நீ, இப்படி தான் இருப்ப?” என்று தண்டபாணி கொதித்தார்.

“ஆமா நாங்க அப்படி தான். உங்க எல்லார் மாதிரியும் இல்லயில்லை. அக்கா கேட்கிறதுக்கு உங்க பதில் என்னன்னு மட்டும் சொல்லுங்க, வக்கீலை பார்க்க போகணும்” என்றான் மணி மிரட்டலாக.

செல்வம், ஏண்டா இப்படி என்று தம்பியை பார்க்க, அவன் வீரப்பாக நின்றான். “எனக்கு கொடுக்க இஷ்டமில்லைன்னு தான் போன் பண்ணி சொல்றேன். சீக்கிரம் அவனை வந்து சொத்தை வாங்கிக்க சொல்லு” என்று  வைத்தார் தண்டபாணி.

“ண்ணா கேட்டிங்க இல்லை. சீக்கிரம் பத்திர பதிவுக்கு ரெடி பண்ணுங்க” என்றான் மணி.

“ஆமா போனவுடனே தூக்கி கொடுத்திடுவாங்க. வேலையை பாருடா. போ” என்ற செல்வம் போனை பார்த்திருந்தான்.

“ண்ணா. ச்சு. போனை அப்பறம் பாருங்க. எனக்கு பதில் சொல்லுங்க” என்று அவன் போனை பறித்தான்.

“டேய் என்னடா உனக்கு இப்போ?” செல்வம் கோபம்கொண்டு மணியிடம் இருந்து போனை பிடுங்கி கொண்டான்.

“ண்ணா” மணி குரல் உள்ளே சென்றுவிட்டது.

செல்வம் மூச்சிழுத்து தன்னை சமன் செய்தவன், “சுப்பு. அவர் சும்மா எல்லாம் சொல்லமாட்டார். கண்டிப்பா அண்ணனும், அக்காவும் கலந்து பேசி தான் பண்றாங்க. நாம போய் கேட்டாலும் பிரச்சனை தான் பண்ணுவாங்க” என்றான்.

“பண்ணா நாமளும் பண்ணுவோம்”

“மணி நான் முதல்லே சொல்லியிருக்கேன். அந்த சொத்து எனக்கு வேண்டாம். உங்க பெரியப்பா பேர்ல இருக்கிறது அது மட்டும் தான். அதுக்காகவாவது அவரை பார்த்துகிறாங்க. இப்போ சொத்தும் போச்சுன்னா அந்த மனுஷனுக்கு ரொம்ப கஷ்டம்”

“நாம எதுக்கு இருக்கோம். அவரை பார்த்துக்கலாம்”

“முன்ன நாம அதை நினைக்கலை. அவரும் வரமாட்டார். இப்போ நாம நினைச்சாலும் முடியாது. நான். ம்ப்ச். வேணாம்டா” என்றான் செல்வம்.

“அந்த கேஸ்க்காக யோசிக்கிறியா? அதான் அமைச்சர் இருக்கார் இல்லை. அவர் பார்த்துப்பார்”

“இல்லைடா. அது சரிப்பட்டு வராது. நீ கிளம்பு. போ” என்று தம்பியை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பிவிட்டான்.

கடையையும் இழுத்து மூடியவன், வேகமாக அகிலனுக்கு அழைத்தான். “என்னடா இது?” என்றான் பரபரப்பாக.

“என்னன்னா? அவர் பண்ண வேலை அப்படி. நாராயணன் நாமத்தை அமைச்சருக்கு போட பார்த்தார். அதான் தூக்க சொல்லிட்டாங்க” என்றான்.

“ரவிக்கு தெரியுமா?”

“தெரியாது. என்ன சொல்லி நான் அதை நிறுத்த. இந்த மனுஷன் சும்மா இல்லாம பினாமி சொத்தை போய் ஓரங்கட்ட பார்த்திருக்கார். விலை பேச பார்த்திருக்கார்” என்றான் அகிலன் கடுப்பாக.

“அண்ணாச்சி மேல இருக்கிற கோவத்துலயா?” செல்வம் யோசித்து கேட்க,

“அதே தான். அவரை மிரட்டணும்ன்னு, இவர் ஆப்புல போய் உட்கார்ந்துட்டார். அமைச்சரோட ஆளுங்க எல்லா இடத்திலும் இருப்பாங்கன்னு இவருக்கு தெரியாதா? இன்னைக்கு ஈவினிங் தான் ஆரம்பிச்சார். உடனே மாட்டிகிட்டார்” என்ற அகிலன், யாரோ அழைக்க போனை வைத்துவிட்டான்.

இதற்கு மேல் அவனிடம் பேசமுடியாது. நாராயணன் மாட்டுவதில் செல்வத்திற்கு ஒன்றுமில்லை, ஆனால் அவரின் பிள்ளைகள். முத்து பெண்ணை விட ரவி.

செல்வம் அவனுக்காகவே அழைத்தான். ரவி போன் எடுக்கவில்லை. தூங்கியிருந்தான். “எழுந்ததும் எனக்கு கூப்பிடு” என்று மெசேஜை தட்டிவிட்டான்.

ஆனால் மறுநாள் காலையில் அவன் நேரிலே வந்து நின்றான். “நாச்சியை காணோம்டா” என்றான்  வேர்த்துப்போய்.

செல்வம் திகைத்து நிற்க, “போன் பண்ணா ஸ்விட்ச் ஆப்ன்னு வருது” என்றான்.

“சார்ஜ் இல்லாம இருக்கும்டா” என்ற செல்வத்தின் புருவங்கள் அதிகமே சுருங்கி கொண்டது.

“இல்லைடா. புல்லா இருந்துச்சு. நாங்களும் செக் பண்ணி தான் அனுப்புவோம். தனியா  போறதால”

“ஏன் நீ கூட போகலையா?”

“இல்லைடா. அப்பா ஏதோ முக்கியமா பேசணும்ன்னு சொல்லி, அதோட நாச்சி அப்பா கார்ல தான் போயிருக்கா. அவ கார் ஸ்டார்ட் ஆகலைன்னு”

“சரி டென்சன் ஆகாத. பிடிச்சிடலாம் இரு” என்று செல்வம் போன் எடுக்க,

“நீ வா என்னோட. கிளம்பு. சீக்கிரம்டா” என்று அவன் கை பிடித்து காருக்கு இழுத்து வந்தவன், வேகமாக பறந்தான்.

“ரவி இவ்வளவு வேகம் ஏண்டா? நீ நிறுத்து. நான் கார் எடுக்கிறேன்” செல்வம் அவனை கட்டுப்படுத்த முயன்றான்.

“டேய். இப்போ இதுவா முக்கியம். நீ நான் சொல்ற நம்பருக்கு கூப்பிடு” என்று போனில் அழைக்க வைத்தவன், “அங்கிள் நான்தான் ரவி. நாச்சி கார் கிராஸ் ஆச்சா?” என்று கேட்டான்.

அந்த பக்கம், “இப்போ தான் தம்பி. பாப்பா கார் கூட, வேற இரண்டு கார் போகுது. ஏதோ சரியில்லை” என்றார் அவர்.

“நான் அங்க தான் வந்திட்டிருக்கேன்” என்ற ரவி, நெடுஞ்சாலையில் ஒரு கடையின் முன் காரை நிறுத்தினான்.

நண்பர்கள் இருவரும் அங்கிருந்த சிசிடிவியை பார்த்து, அவர் சொன்னதை உறுதி செய்து கொண்டனர். “பாப்பா காருக்கு முன்னாடி பின்னாடியே போறாங்க தம்பி. அடைக்கட்டி கூட்டிட்டு போறது போல” என்றார் கடைக்காரர்.

“இதை மட்டும் எனக்கு அனுப்புங்க அங்கிள்” என்று காருக்கு வர, செல்வம் அவனை நிறுத்தி தானே கார் எடுத்தான்.

நாராயணன் அவனுக்கு அழைத்து கொண்டே இருக்க, “இப்போதான் பார்த்தேன்ப்பா” என்று தகவல் சொன்னான்.

அங்கு நாராயணனுக்கு அடைத்த நெஞ்சு, நின்றுவிட்டது போலானது. “என்னால. நான் தான் காரணம்” என்று அரற்றினார் மனிதர்.

அவரின் மனைவி அவருக்கு தண்ணீர் கொடுத்து சமாதானம் செய்ய, “நான் வரேன். நீங்க டென்சன் ஆகாதீங்கப்பா. பார்த்துக்கலாம். நம்மால சமாளிக்க முடியும். மனசு விடாதீங்கப்பா. ம்மா அவரை பார்த்துக்கோங்க” என்று வைத்தான் ரவி.

சூரியன் உதிக்க ஆரம்பித்தார். நண்பர்கள் அவரவர் எண்ணங்களுடனே நாராயணன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

ரவி வேகமாக இறங்கி உள்ளே செல்ல, செல்வம் காரிலே இருந்தான். போன வேகத்திலே திரும்பி வந்த ரவி, “உள்ளே வாடா” என்றான் செல்வத்திடம்.

“நான் வரலை” செல்வம் சொல்ல,

“நீயும் என்னை சாகடிக்காத. தயவு செஞ்சு உள்ள வா” என்று அவன் கைபிடித்திழுத்து அழைத்து சென்றான்.

நாராயணன் மூச்சு கூட விடுகிறாரா என்பது போல அமர்ந்திருக்க, அவரின் மனைவி கண்ணீருடன் மகனை பார்த்தார். “அடுத்து என்ன பண்றதுப்பா?” என்று தந்தையிடம் கேட்டான் ரவி.

நாராயணன் மெல்ல மகனை பார்க்க, செல்வம் அவரின் பார்வை வட்டத்தில் விழுந்தான். விலுக்கென நிமிர்ந்த மனிதர், “இவன் ஏண்டா?” என்றார் கத்தலாக.

செல்வம் அவரை கோவமாக பார்க்க, “வேற யாரை கூப்பிட சொல்றீங்க? யார் வருவாங்க இப்போ?  சொல்லுங்க” என்றான் மகன்.

“அதுக்காக இவன்?” அவருக்கு அந்த நிலையிலும் செல்வத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“முதல்ல நீங்க நாச்சியை பாருங்கப்பா. அவ எங்க இருக்கா, யார் அவளை கடத்தினதுன்னு”

“டேய்” என்று தந்தை அதட்ட,

“கடத்திட்டாங்களா? ஐயோ என் மகளே” என்று அம்மா கதறினார்.

“ஏய் மனுசியா நீ, சத்தத்தை குறை. நீயே ஊருக்கெல்லாம் சொல்வ போல” என்று மனைவியை கண்டித்த நாராயணன், “கடத்திட்டாங்கன்னு எல்லாம் ஏன் சொல்ற?” என்று மகனை அதட்டினார்.

“வேறென்ன சொல்ல சொல்றீங்க? பார்க்க அப்படி தான் இருந்துச்சு. போன் சுவிட்ச் ஆப். அவகிட்ட பேசவும் முடியலை. போலீஸ்கிட்ட போலாம்ன்னு வேணாம்ன்னு சொல்றீங்க, அந்த அகிலன் வேற போனை எடுத்து தொலைய மாட்டேங்கிறான். நீங்களும் அண்ணாச்சி, அமைச்சர்கிட்ட பேச மாட்டேங்கிறீங்க” என்ற ரவி பொறுமை எல்லாம் பறந்து போனது.

“ரவி. என்னால அவங்ககிட்ட போக முடியாது, எனக்கு என்னமோ. அவங்க, நான், என்னைன்னு பாப்பாவை”

“ப்பா. தெளிவா சொல்லுங்க. நீங்க எங்ககிட்ட எதையோ மறைக்கிறீங்க”

“அது. அமைச்சர் தான் நாச்சியை?” என்றவர் செல்வத்தை பார்த்து மேலும் சொல்ல முடியாமல் நிறுத்தியவர், “நாம உள்ள போய் பேசலாம்” என்றார் மகனிடம்.

“ப்பா. என்னை கோவப்படுத்தாதீங்க”

“நீ வெளியில இரு” என்று செல்வத்திடம் சொன்னார் நாராயணன்.

“ப்பா” என்று ரவி கத்த, செல்வமோ அது வரை நின்றிருந்தவன், மிகவும் சாவகாசமாக, உரிமையாக அவரின் முன் உள்ள இருக்கையில் அமர்ந்தான்.

நாராயணன் அவனை முறைக்க, ரவி இவங்களுக்கு இதுதான் நேரமா என்று கடுப்பானவன், “நீங்க விஷயத்தை சொல்லுங்கபா” என்றான்.

“அது. அது ரவி”

“நான் சொல்றேன். அமைச்சர் சொத்தை வியாபாரம் காமிச்சிருக்கார் உங்கப்பா” என்றான் செல்வம்.

நாராயணன், அதிர்ந்து போக, ரவிக்கோ மொத்தமும் வேர்த்து போனது. “ப்பா உண்மையா? அவன் சொல்றது உண்மையா?”

“உனக்கு எப்படி தெரியும்?” நாராயணன் மருமகனிடம் பாய்ந்தார்.

ரவிக்கு அதிலே புரிந்து போக, “என்னப்பா பண்ணி வைச்சிருக்கீங்க?” என்று கத்திவிட்டான்.

“இப்போ எப்படி நாச்சியை வெளியே கொண்டு வரது? யார் போய் அவர்கிட்ட பேச? ஏன்ப்பா இப்படி பண்ணீங்க? நான் தான் பொறுங்க. பார்த்து சொல்றேன்னு சொல்லியிருந்தேன் இல்லை” ரவி குமுறலாக கேட்டான்.

“டேய் நானும் பெருசா எல்லாம் பண்ணலை, சும்மா ஒரு ஆள்கிட்ட தான். அதுவும் என்ன விலை போகும், மார்க்கெட் ரேட் எவ்வளவுன்னு?”

“அதுவே போதும்ப்பா. விலை எல்லாம் கேட்டா விட்டுடுவாங்களா?”

“அவன் அண்ணாச்சி ஆளு ரவி, அதான் சும்மா அவரை பயங்ககாட்டலாம்ன்னு”

செல்வம் முகத்தில் சிவப்பு ஏற, கண்கள் இடுங்கி கொண்டது.

“பயங்காட்டவா? நல்லது. ரொம்ப நல்லது. இப்போ எல்லாருமா சேர்ந்து நமக்கு பயம் காட்டுறாங்க. என்ன பண்ண போறீங்க? சொல்லுங்க, எனக்கு என் தங்கச்சி வரணும். இப்போவே. என்ன வழி இருக்கு சொல்லுங்க” என்று நின்றான் மகன்.

தந்தைக்கு தொண்டை உளறியது. மகன் கேட்பது விட, மகளின் நிலை தான் அவரை ஆட்டம் காண வைத்தது. அவரின் சந்தேகம் உண்மையாகி போனது.

“நான் அவங்ககிட்ட சரணடைஞ்சுட்டா நாச்சியை விட்டுடுவாங்க. நான் போறேன்” என்று எழுந்தார் மனிதர்.

“ப்பா. திரும்ப திரும்ப எதாவது பண்ணிட்டே இருப்பீங்களா? நீங்க போனா உங்களை சும்மா விடுவாங்களா?” என்று மகன் அச்சம் கொண்டான்.

“விடலைன்னா என்ன, எனக்கு என் மக வந்தா போதும்” நாராயணன் முடிவெடுத்துவிட்டார்.

“ஏங்க வேணாம்ங்க. நீங்க போகாம ஏதாவது வழி இருக்கான்னு பாருங்க” என்று மனைவி அவர் கை பிடித்து கொண்டார்.

“அவங்ககிட்ட நமக்காக பேச யாரும் இல்லை. நான் தான் போகணும்” என்றார் நாராயணன்.

“இல்லைப்பா. பொறுங்க. யாரையாவது பிடிக்கலாம்” ரவி சொல்ல,

“இல்லை ரவி. யாரும் வர மாட்டாங்க” என்றார் நாராயணன் உறுதியாக.

“நான் இருக்கேன்” என்றான் செல்வம்.

“நான் போய் அமைச்சர்கிட்ட பேசுறேன்”

“நீயா?” வீட்டினர்கள் அதிர்ந்தனர். உடன் ரவிக்கு சிறிது நம்பிக்கையும் வந்தது. எனக்கு இது தோணவே இல்லையே? “மாப்பிள்ளை” என்று பாய்ந்து அவனை கட்டிக்கொண்டான்.

“பொறு மச்சான்” என்று அவனை விலக்கியவன், “ஆனா அதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு” என்றான் செல்வம்.

நாராயணன் அவனை கூர்மையாக பார்க்க, “அதான். அதுவே தான். முத்து பொண்ணு எனக்கு வேணும். அவளை எனக்கு கொடுத்திடுங்க” என்றான்.

நாராயணன் முகம் மாற, இதுவாடா நேரம் என்று ரவிக்கு எக்கச்சக்க கடுப்பு. செல்வம் அவர்களை கண்டுகொண்டால் தானே!

“இதுக்கு நாங்க ஒத்துக்கலைன்னா?” நாராயணன் கேட்க,

“நான் முடிவெடுத்துட்டேன். காப்பாத்துற எனக்கு தான் பொண்ணு” என்றான் மருமகன் உறுதியாக.