கண்ணே முத்து பெண்ணே 13

இன்னமும் அவர்கள் முத்து பெண் வைத்து பேசியது செல்வத்துக்கு பிடிக்கவில்லை. அப்பாவா இருந்தா என்ன? யாரா இருந்தா என்ன?

அவங்க எப்படி இவளை இழுக்கலாம்? அதனாலே நாள் பார்க்க அவளிடம் கேட்டான் செல்வம்.

நாள் குறிக்கணுமா? திடீரென ஏன் இப்படி கேட்கிறார் என்று புரியாமல் செல்வத்தை பார்த்தவள், “ஏன் இப்போ இந்த பேச்சு? அங்க, அவங்க ஏதும் பேசிட்டாங்களா?” என்று  கேட்டாள்.

ரவி இரண்டு டீயுடன் வந்தவன், செல்வத்திற்கு நீட்டினான். “எனக்கு வேணாம்” செல்வம் மறுக்க,

“அதுக்குள்ள என்ன ஆச்சு?” என்று தங்கையை பார்த்தான்.

என்ன சொல்வாள்? மௌனம் காக்க, “நாள் பார்க்கலாமான்னு கேட்டேன்” என்றான் செல்வம் தானே.

“எதுக்கு நாள் பார்க்கணும்? மேல கடைங்களுக்கா? அது இன்னும் ரெடி ஆகலையே?” ரவியின் சிந்தனை இப்படி தான் போனது.

செல்வம் இடையில் கை வைத்து நண்பனை முறைக்க, முத்து பெண் சிரிக்கவே செய்தாள்.

“என்னடா? சொல்லு”

“நான் எங்களுக்கு நாள் பார்க்க கேட்டேன்” என்றான் செல்வம்,

ரவிக்கு குடித்த டீ எல்லாம் வெளியே வந்துவிட்டது. “டேய் இங்க என்ன போயிட்டிருக்கு நீ என்னடா கேட்கிற?”

“என்ன தப்பா கேட்டேன்? எப்போ கேட்டாலும் எதாவது சொல்றீங்க? அந்த மனுஷன் இவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கிற வரை நான் காத்திட்டு இருக்கணுமா?” என்று சத்தமிட்டான்.

“இப்போ என்ன நடந்து போச்சுன்னு குதிக்கிற நீ? பொறுமையா இருடா பேசலாம்”

“பொறுமையா இருந்தது எல்லாம் போதும். எனக்கு இன்னைக்கு பதில் தெரிஞ்சாகணும்”

“அது நடக்காது செல்வா. நீ வெய்ட் பண்ணி தான் ஆகணும்” என்றான் ரவி உறுதியாகவே. அங்கு வெப்பம் பரவ ஆரம்பித்தது.

“நீ சொல்லு” என்று அவளிடம் கேட்டான் இவன்.

“அவ சொன்னா? ஆஹ்ன் அவ சொன்னா நாள் பார்த்திடுவியா நீ” ரவி கோவமாக அவனின் தோளை தட்டினான்.

“ண்ணா. ப்ளீஸ் ண்ணா” நாச்சி வேகமாக எழுந்து வந்து இருவருக்கும் இடையில் நின்றாள்.

செல்வமோ, “உன்னை கேட்டேன், என்ன சொல்ற நீ?” என்று இவளிடமே திரும்ப கேட்டான்.

“கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. ப்ளீஸ். நாம பேசலாம்” என்று நாச்சி அவனை சமாதானம் செய்ய,

“டேய் என்னடா, என்ன பிடிச்சு ஆட்டுது உன்னை? ஏன் இப்படி நிக்கிற?” என்று ரவி தங்கையை தள்ளி வைத்து அவன் முன் நின்றான்.

“உங்களுக்கு சொன்னா புரியாது, ஏன் எனக்காக இதை பண்ண மாட்டிங்களா?” செல்வம் அவன் பிடியிலே கேட்டான்.

“என்ன பண்ணனும்ன்னு சொல்ற? இப்போவே அவளை உன் கையில பிடிச்சு கொடுத்துட்டு போகணுமா”

“கொடுத்திடு. அது தான் எங்களுக்கு நல்லது” என்றான் செல்வம்.

“உனக்காக தான் அவளை கொடுக்கணும்ன்னு நினைச்சேன், ஆனா நீ இப்போவே கொடுன்னு நிக்கிற. உன்னால அவளை கௌரவமா கட்டிட்டு போக முடியாதா? இருட்டுல, ஆளை மறைச்சு தான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?” என்று ரவி கேட்டுவிட்டான்.

செல்வம் அவனை கோவமாக பார்க்க, “ண்ணா. ப்ளீஸ், அவர் ஏதோ டென்சன்ல இருக்கார் போல” என்று பெண் சொல்ல,

“டென்ஷன்ல இருந்தா இவன் சொல்றதை நாம கேட்டுடணுமா? நம்மளை சுத்தி என்னென்னமோ நடக்குது. பொறுடா பார்த்துக்கலாம்ன்னா நிலையா நிக்கிறான்”

“நீ கிளம்பு முதல்ல. நான் கார் எடுத்துட்டு வரேன்” என்று நண்பனை முறைத்து சென்றான் ரவி.

செல்வத்தை அப்படியே விட்டு  போக முடியாமல், அவனின் கைகளை பிடித்து கொண்டவள், “என்னமோ இருக்கு, சொல்ல மாட்டேங்கிறீங்க. இவ்வளவு கோவம் வேண்டாம். எங்ககிட்ட சொல்லுங்க, எல்லாம் சேர்த்து என்ன பண்றதுன்னு பார்க்கலாம்” என்றாள்.

அவனுக்குமே தெரியவில்லை, ஆனால் அண்ணாச்சியின் பேச்சு, இருவருக்கும் நடந்த வாக்குவாதம். இவளின் பேர் இழுப்படுவது என்று எதுவும் அவனுக்கு ஒப்பவில்லை.

“நீ என்கிட்ட வந்துட்டா நான் ரிலாக்ஸ் ஆகிடுவேன்” என்றான் செல்வம்.

ரவி கார் எடுத்து வந்து ஹார்ன் அடிக்க, முத்து பெண்ணுக்கு செல்வத்தின் வார்த்தைகளை முழுதாக உள்வாங்க முடியவில்லை.

“நான் கிளம்புறேன், பேசலாம். போன்ல சொல்லுங்க, அண்ணாகிட்ட கோவப்படாதீங்க ப்ளீஸ்” என்று அவனை பார்த்தபடியே கிளம்பினாள்.

செல்வம் அங்கேயே நின்றான். இவனின் கடை ஆட்களும் வந்துவிட, “ண்ணா கடையிலே தங்கிட்டியா? நினைச்சேன்” என்ற சுப்பிரமணி அன்றாட பணிகளை மேற்கொண்டான்.

செல்வத்திற்கு தனிமை தேவைப்பட, “நீ பார்த்துக்கோ, வந்துடுறேன்” என்று கிளம்பினான்.

ஏதோ பேச ஆரம்பித்து, எப்படியோ முடிந்துவிட்டது.

வழி முழுதும் ரவி தங்கையை பேச விடவில்லை. “எனக்கு அவனை தெரியும். நீ எனக்கு சொல்லாத” என்றான்.

“அவன் மனசுல என்னமோ இருக்குன்னு எனக்கும் தெரியுது, அதை சொன்னா தான் என்ன? நைட் மூணு பேருக்குள்ள என்னமோ நடந்திருக்கு. கேட்டா சொல்ல மாட்டாங்க. ஆனா நாம மட்டும் அவங்க சொல்றதை உடனே கேட்கணும்?”

“இதுல அப்பா வேற அந்த சொத்தை எல்லாம் எதாவது பண்ணனும்ன்னு நிக்கிறார். அமைச்சரை மறந்துட்டாரா இவர்? அண்ணாச்சிக்கு ஆப்பு அடிக்கிறேன்னு, இவருக்கு வைச்சுக்க போறார். அது மட்டும் நல்லா தெரியுது” என்றான் மேலும்.

நாச்சிக்கு இது புதிது என்பதால், “என்னண்ணா செய்றது?” என்று கேட்டாள்.

“அவங்க வாயை திறக்காத வரைக்கும் நாம என்ன பண்றது?”

“இவர்கிட்ட பொறுமையா பேசி பாருங்கண்ணா” என்றாள் தங்கை.

“இவன்கிட்டேயே நில்லு நீ. அவனுக்காக தானே அவ்வளவு நல்ல வேலையையும் விட்ட, எவ்ளவு அடிச்சுக்கிட்டேன். என் பேச்சை கொஞ்சம் கூட வைக்கலை”

“ண்ணா, அதை ஏன் திரும்ப ஆரம்பிக்கிற?”

“அதானே எல்லாம் ஒரே மாதிரி இருங்க, இடையில நான்தான் இளிச்சவாயன்” என்று கடித்தவனை அகிலன் அழைத்தான்.

“அடுத்து நீயாடா, சொல்லு” என்றான் ரவி அழைப்பை ஏற்று.

“அங்க என்ன நடக்குது? நைட் ஏதோ சண்டையாமே?” என்று கேட்க,

“நேர்ல வந்தேன் கழுத்தை கடிச்சு வைச்சிடுவேன். ஒழுங்கு மரியாதையா போனை வைச்சிடு” ரவி காண்டாகிவிட்டான்.

“டேய் நீ அம்பிடா, சோம்பி இல்லை”

“அதை நேர்ல பார்த்து சொல்லு. அங்க தான் வரேன்”

“டேய் ஹலோ, ஹலோ, டவர் கிடைக்கலைன்னு நினைக்கிறேன் ” என்று அகிலன் வைத்துவிட்டான்.

தனிமையை தேடி சென்ற செல்வத்துக்கு இதை எப்படி கையாள்வது என்ற தீவிர சிந்தனை. அவனின் அனுமானங்களை மற்றவர்களிடம் உறுதியாக சொல்ல முடியாது. தவறாக கூட இருக்கலாம்.

அதற்காக அதை ஒதுக்கி தள்ளவும் முடியாது. என்ன செய்யலாம் என்று யோசித்தவனுக்கு, சட்டென ஒரு எண்ணம். அமைச்சரை சந்தித்து பேச வேண்டும்.

“என் மேல தப்பு இல்லைன்னு அவருக்கு சொல்லணும்” என்று அகிலனை அழைத்து சொன்னான்.

“நல்லது தான். உன்னை பத்தி என்ன நினைக்கிறார்ன்னு தெரியலை. ஆனா அண்ணாச்சி மேல கொலை காண்டுல இருக்கார்” என்றான் அகிலன்.

“சரி. நான் நாளைக்கு வரேன்” என்றவன், அமைச்சரை நேரில் சென்றும் பார்த்தான்.

அண்ணாச்சி வராதது, இவன் வந்து நிற்பது என்று அங்குள்ளவர்களுக்கு செல்வம் மேலாக தெரிந்தான்.

“இப்படி ஆகும்ன்னு எனக்கு தெரியாது தலைவரே. இல்லைன்னா நிச்சயம் நான் செஞ்சிருப்பேன்” என்றான் செல்வம்.

“ஏன் அண்ணாச்சி சொன்னார் இல்லை. செய்ய வேண்டியது தானே செல்வா” அவரின் வலது கை கேட்டார்.

“ண்ணா. தலைவருக்கு செய்யாம நான் வேற யாருக்கு செய்ய போறேன். இதுவரைக்கும் கட்சி விஷயத்தில நான் தலையிட்டதே இல்லை. திடீர்ன்னு அவ்வளவு பெரிய பொறுப்பை தூக்கி கொடுத்து நான் சொதப்பிட்டா தப்பாயிடுமே. அதான் நீங்களே பண்ணுங்கன்னு அண்ணாச்சிகிட்ட சொல்லிட்டு ஒதுங்கிட்டேன்” என்றான் செல்வம்.

“ஆமா தலைவரே. முன்னாடி நாள் நைட்டே அவர் கூப்பிட்டு இவன் போகலை. மறுநாளும் உடனே மறுத்து கிளம்பிட்டிருக்கான். அண்ணாச்சி தான் அசால்ட்டா விட்டு தூங்க போயாச்சு” அவரின் காதில் சொன்னார் ஒருவர்.

தைரியமாக தன் முன் வந்து நின்று விளக்கம் கொடுக்கிறான். அமைச்சர் செல்வத்தை எடை போட்டபடி, “விடு செல்வா. முடிஞ்சு போச்சு. பார்த்துக்கலாம்” என்றார்.

செல்வம் சரியென்று உடனே கிளம்பாமல், அந்த நாள் முழுதும் அவருடனே இருந்தான்.  அகிலனிடம் இருந்து தள்ளி நின்றான். அவருக்கு இவர்களின் நட்பு தெரிவதில் உடன்பாடு இல்லை.

விஷயம் கேள்விப்பட்ட அண்ணாச்சிக்கு தான் பக்கென்றிருந்தது. இவன் ஏன் அங்க போனான்?

“நானே தலைவரை பார்க்க போகலை. இவன் ஏண்டா போனான்? என்ன நினைச்சு பண்றான்?” என்று தன் ஆட்களிடம் கேட்டார்.

“நாம எதுக்கும் உஷாரா இருக்கனும் அண்ணாச்சி. செல்வம் ஏதோ பிளான் போடுறான்” என்று அவரை இன்னும் ஏற்றிவிட்டனர்.

நாட்கள் அப்படியே சென்றது. இவர்கள் மூவரும் சந்தித்து பேசி கொள்ளவில்லை.

அண்ணாச்சி எந்த பஞ்சாயத்துக்கும் செல்வத்தை அழைக்கவில்லை. நாமளே அவனை பெரியாள் ஆக்குறோமோ? மனிதர் சிந்தித்து உஷாரானார்.

ஆனால் அதற்கான அவரின் நேரம் தான் கடந்துவிட்டிருந்தது.

நாராயணன் வெகு தீவிரமாக மகளின் திருமண விஷயத்தை கையில் எடுத்தார். முன்பு பெண் பார்த்துவிட்டு சென்றவர்களிடம் மூன்றாம் ஆளை வைத்து பேசினார்.

“மாப்பிள்ளைக்கு இஷ்டம் தான். ஆனா பொண்ணுக்கு இஷ்டம் இருக்கிற மாதிரி தெரியலை” என்றனர் அவர்கள்.

“எங்க பிள்ளை போன் பண்ணா சரியா பேச மாட்டேங்குது. நேர்ல பார்க்கவும் நேரம் இல்லைன்னு சொல்றாளாம். பிடிக்காத பொண்ணை கட்டிக்கிட்டு நான் என்ன பண்றதுன்னு எங்க மகன் கேட்கிறான்” என்று மாப்பிள்ளையின் அம்மா கேட்டார்.

நாராயணன்க்கு மகளின் மேல் நிச்சயம் கோவம். அண்ணாச்சி, செல்வம் என்று அவருக்கு பல காரணங்கள். அவசரமே. அந்த மாதம் முடியும் நேரம், மகளை வீட்டிற்கு வர சொன்னார்.

“ஏன் மாப்பிள்ளைகிட்ட பேசலை?” என்று மகளிடம் கேட்கவும் செய்ய,

“ப்பா. எனக்கு டைம் வேணும்” என்றாள் அவள்.

ஒரேடியாக மறுக்காமல், நேரம் கேட்பவளிடம் நாராயணன் எப்படி கோவம் காட்ட?

“அவனை மனசுல வைச்சு ஏதும்”

“ப்பா. கண்டிப்பா எனக்கு டைம் வேணும். அவ்வளவு தான் விஷயம்” என்றாள் முத்து நாச்சி.

அப்பாவை பகைத்து கொண்டோ, எதிர்த்தோ மகளுக்கு எதுவும் செய்ய வேண்டாம். நேரம் வேண்டும். அவரை சமாதானம் செய்ய, செல்வத்திற்கு சரி என்று சொல்ல வைக்க. அந்த கேசில் இருந்து செல்வத்தை வெளியே கொண்டு வர என்று எல்லாவற்றுக்கும் அவகாசம் தேவை.

அதற்கு கொஞ்சமேனும் செல்வத்தின் ஒத்துழைப்பு வேண்டும். அன்றிரவு அவனுக்கு அழைத்தாள் பெண்.

“என்ன அதிசயம் போன் எல்லாம் பண்ற?” என்று அவன் எடுக்க,

“அப்பா திரும்ப கல்யாண பேச்சை ஆரம்பிக்கிறார்” என்றாள் இவள்.

செல்வம் இதை எதிர்பார்த்தே இருந்தான். இன்னமும் பங்காளிகளுக்குள் எதுவும் சரியாகவில்லை. நாராயணன் முதலில் இவளை தான் வழியிலிருந்து எடுக்க நினைப்பார் என்று மாமனாரை நன்றாகவே புரிந்து வைத்திருந்தான் மருமகன்.

“நீங்க கொஞ்சம் குளோசா அந்த கேஸ் பாலோ பண்ணுங்க. எப்போ அதில் இருந்து நீங்க வெளியே வர முடியும்ன்னு தெரிஞ்சா, நாம அப்பாகிட்ட பேசலாம்”

“ஏன் அவர் திரும்ப என்னை தூக்கி உள்ள வைக்கவா?” என்று செல்வம் பட்டென கேட்டான்.

முத்து பெண்ணுக்கு வார்த்தைகள் வரவில்லை. செல்வம் கேட்டது அவளை வலிக்க வைத்துவிட்டது.

“நான் அதுல இருந்து வெளியவே வர கூடாதுன்னு தான் அவர் நினைக்கிறார். இதுல நான் அவர்கிட்டேயே போய் என்னன்னு பேச?” செல்வம் சலித்துகொண்டான்.

“அவர்கிட்ட பேசாம நாம எப்படி? நான் உங்களுக்கு எப்படி?”

“ஓஹ் உன் அப்பா சம்மதம் இல்லாம நீ எனக்கு இல்லைங்கிற” அவன்  கோவமாக கேட்க,

முத்து பெண் நிமிடம் எடுத்து, “நாம மட்டுமே கல்யாணம் பண்ணிக்க முடியாது இல்லை. நம்மகிட்ட தப்பும் இல்லையே. அப்புறம் ஏன்னு தான்?” என்று தயங்கி சொன்னாள்.

“முதல் விஷயம் நான் இந்த கேஸ்ல இருந்து வெளியே வர, இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. அடுத்து உன் அப்பா நான் தலைகீழா நின்னாலும் உன்னை எனக்கு கொடுக்க மாட்டார்” என்றான் உறுதியாகவே.

“நல்லதா ஒன்னு கூடவா சொல்ல மாட்டிங்க” பெண்ணுக்கு சுணக்கம்.

“இருக்கிறதை தான் சொல்றேன். என்னோட அனுபவம் அப்படி” என்றான் செல்வம்.

“ம்ப்ச் போங்க”

“வாங்கன்னு சொல்லு, இப்போவே வந்து உன்னை தூக்கிட்டு வந்துடுறேன்” என்றான் செல்வம்.

“ஆசை தான்”

” ஏன் உனக்கு இல்லையா? எனக்கு நிறையவே இருக்கு. ஒரு சின்ன பையன் மனசை கெடுத்துட்டு ஆயிரம் காரணம் சொல்லிட்டு இருக்க நீ” என்றான் குறையாக.

“நீங்க தான் என் மனசை கெடுத்தீங்க. அதுவும் சின்ன பிள்ளையிலே. உங்களால தான் நான் இன்னும் சிங்கிளா இருக்கேன்”

“சிங்கிளா? நாம மிங்கிளாச்சே மேடம்” என்றான் செல்வம் உல்லாசமாக.

“ஒரு நிமிஷத்துக்குள்ள ஓராயிரம் பீல் கொடுக்கிறீங்க” என்றாள் முத்து பெண்.

“ஹாஹா” செல்வம் சிரித்தவன், “உன் அண்ணன் என்ன சொல்றான். அவன் ஐடியா மணி. அவன்கிட்ட வேணும்ன்னா கேட்டு பாரேன்” என்றான் மச்சானை வம்பிழுத்து.

“அவருக்கு ஒரு ஐடியா மட்டும் தான் இருக்காம். உங்களை நாடு கடத்துறது” என்று முத்து பெண் சிரித்தாள்.

“உன்னையும் என்னோட சேர்த்து கடத்திட சொல்லு. அவனுக்கு புண்ணியமா போகும்” என்ற செல்வம், “இந்த பக்கமே வர மாட்டேங்கிறான். திரும்ப உன்னை கேட்டுடுவேன்னு பயம் போல. நேர்ல வரட்டும் பேசிக்கிறேன்” என்று சொன்னான்.

அவன் எந்த நேரத்தில் சொன்னானோ, மறுநாள் காலையிலே இவனிடம் ஓடி வந்தான் ரவி.

“முத்து நாச்சியை காணலை என்று”