கண்ணே முத்து பெண்ணே 12

அண்ணாச்சி சொல்ல வரும் விளக்கத்தை எல்லாம் அமைச்சர் கேட்கும் நிலையிலே இல்லை.

கட்சி பெயர் மீடியாவில் கிழிந்து கொண்டிருக்க, அவரின் மேலிடம் அமைச்சரை காய்ச்சிவிட்டது.

அந்த நிரூபர் மிக தெளிவாக கட்சியின் பெயரில் இவர்கள் செய்த சம்பவத்தை வெளியிட்டிருந்தான்.

“உன் தொகுதியில நடந்த வேலை இது. நீ தான் இதுக்கு பொறுப்பெடுக்கணும். மேலிடத்துக்கு பதிலும் சொல்லணும். கிளம்பி கட்சி ஆபிசுக்கு வா. உடனே” என்ற உத்தரவு.

அமைச்சர் கடுங்கோபத்துடன் தான் அண்ணாச்சிக்கு அழைத்தார். “நான் செல்வாவை பார்க்க சொன்னேன் தலைவரே” என்ற அண்ணாச்சியின் பதில் அவரை மேலும் தான் ஏற்றிவிட்டது.

“செல்வம் தான் அங்க தலைவரா? அவன் தான் பார்க்கணுமா? அப்போ நீ என்ன இதுக்கு அங்க இருக்க” என்று கேள்விகள் பாய்ந்து வந்தது.

“செல்வத்துக்கு அந்த வேலை கொடுத்தேன் தலைவரே. அவன் இப்படி காலை வாருவான்னு”

“அவன் உன் காலை கவுத்திவிட்டது இருக்கட்டும். நீ எனக்கு என்ன பண்ணி வைச்சிருக்க தெரியுமா? கட்சி ஆபிஸ் வந்திடுச்சு. வந்து உன்னை வைச்சுகிறேன். இரு” என்று போனை வைத்து உள்ளே சென்றார்.

சில பல மணி நேரங்கள் சென்று வெளியே வந்தவரின் நிலையே உள்ளே அவருக்கு நடந்ததை சொன்னது.

ஒரு பாட்டில் தண்ணீரை முழுதும் காலி செய்து தான் அவரால் மூச்சே விட முடிந்தது.

அகிலன் அவருக்கு டீ வாங்கி கொடுத்தவன், “நம்ம ஆளுங்க ஓரளவுக்கு மீடியால பேசி அதை கவர் பண்ணிட்டாங்க. இரண்டு, மூணு நாள்ல தானே செட்டில் ஆகிடும்” என்றான்.

அமைச்சர் அமைதியாக இருக்க, “அண்ணாச்சியை கவனிக்கணும் தலைவரே” என்றனர் அவரின் ஆட்கள்.

“இல்லை. இப்போ இல்லை.” என்றார் அமைச்சர். அவரின் தொனியே பெரிதாக ஏதோ செய்ய காத்திருக்கிறார் என்பதை காட்டியது.

அங்கே அண்ணாச்சி இவரின் அழைப்புக்காக காத்திருந்தார். அவ்வளவு பயம். உள்ளே தடக் தடக்கென்றிருந்தது.

“பேசாம நேர்ல போய் பார்த்துடலாமா?” என்று நாராயணன் கேட்க,

“இருக்கிற கோவத்துக்கு நேர்ல சிக்கினா கொலையே பண்ணிடுவார்” என்றார் அண்ணாச்சி.

“ஆள் அமைதியா வீட்ல இருக்காராம். அதான் கொஞ்சம் பயமா இருக்கு” அண்ணாச்சி யோசித்து சொல்லி கொண்டிருக்க, செல்வம் வந்தான்.

கட்சி ஆட்கள் எல்லோரின் பார்வையும் அவன் மேல் இருந்ததுடன், “என்ன இப்போ வந்திருக்கான்?” என்று தங்களுக்குள் பேசி கொண்டனர்.

சில நாட்களாவது இந்த பக்கம் வரமாட்டான் என்று தான் அனைவரும் நினைத்திருந்தனர். செய்திருந்த வேலை அப்படி!

ஆனால் அவனோ மிகவும் சாதாரணமாக வந்திறங்க, அண்ணாச்சிக்கு பற்றி கொண்டு வந்தது.

“என்ன பண்ணி வைச்சிருக்க நீ” என்று அவன் மேல் பாயவும் செய்தார்.

நாராயணனுக்கோ அவனின் தைரியத்தில் திகைப்பே!

அமைச்சரை நேரில் போய் பார்க்க சொன்னால் பயப்படும் அண்ணாச்சி, இவன் அழைக்காமலே வந்து நிற்கிறான்.

இவனை நாம தான் சரியா கணிக்கலையா? அவருக்கு புரியவில்லை.

கட்சி, சொத்து எல்லாம் மகளின் முன் அவருக்கு ஒன்றுமே இல்லை.

செல்வம் இப்படி இருந்தால்,  நான் எப்படி அவனை கண்ட்ரோல் பண்றது? பண்ண முடியுமா?

ம்ஹூம். இது சரிப்பட்டு வராது. அவளுக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணிடணும். நொடிகளில் யோசித்து  முடிவெடுத்து கொண்டார்.

அவரின் யோசனையை கலைப்பது போல, “நான் என்ன பண்ணுனேன் அண்ணாச்சி?” என்று செல்வம் கேட்டு கொண்டிருந்தான்.

“நான் முதல்லே உங்ககிட்டேயும் முடியாதுன்னு சொல்லிட்டேன். நீங்க கிளம்பி போனபின்னாடி கட்சி ஆளுங்ககிட்டேயும் சொல்லிட்டேன். அப்புறம் ஏன் நானே பண்ணனும்ன்னு நினைக்கிறீங்க? எனக்கு புரியலை?” என்று செல்வம் அவரிடம் கேள்வியும் கேட்டான்.

“ஏன்? ஏன் பண்ணா என்ன? கட்சிக்கு செய்ய வேண்டியது நம்ம கடமை”

“நான் தான் கட்சியிலே இல்லையே? அப்புறம் ஏன் நான்னு கேட்கிறேன்?” செல்வம் நிதானமாக கேட்க,

“கட்சியில இல்லைன்னா, அதான் அந்த சொத்து இருக்கே, அதுக்காக”

“அண்ணாச்சி என்ன பேசிட்டிருக்கீங்க” நாராயணன் சுற்றி ஆட்கள் இருக்க அவரை அடக்கினார்.

“என்ன சொத்து? செல்வம் உள்ள போய்ட்டு வந்த சொத்தா?” ஆட்களிடம் இருந்து கேள்விகள் சட்டென வந்தது.

“அது வேற. இப்போ பேச்சு நம்ம கட்சிக்கு இவனால கெட்ட பேர் வந்துடுச்சுன்னு தான்” என்று சுதாரித்து கட்சி பக்கம் திருப்பினார் அண்ணாச்சி.

அங்கிருந்த மூத்த உறுப்பினரோ, “திரும்ப திரும்ப ஏன் செல்வத்தையே சொல்லிட்டிருக்க? அமைச்சர் நம்மகிட்ட இதை முன்னாடியே சொல்லிட்டார். நாம பண்ணலை. அவ்வளவு தான் விஷயம்” என்றார்.

இதென்ன புதுசா அவன் பக்கம் பேசுறாங்க? அதிர்ந்த அண்ணாச்சி, “செல்வம் பண்ணட்டும்ன்னு”

“ஏன் நாங்க எல்லாம் கட்சியில ஆள் இல்லையா? செல்வத்தை ஏன் பிடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க?” வேறொரு பக்கம் இருந்து கேள்வி வந்தது.

இதற்கு என்ன பதில் சொல்ல? அண்ணாச்சி பேச்சில்லாமல் நிற்க, “முதல்ல அமைச்சர் பேசட்டும். அடுத்து என்ன செய்றதுன்னு பார்ப்போம்” என்ற ஆட்கள் கலைந்து வெளியே செல்ல, இவர்கள் மூவர் மட்டும் நின்றனர்.

பங்காளிகள் இருவரும் அவனை முறைத்து பார்க்க, செல்வமோ அவனின் தோரணையில்  பார்த்தான்.

“நான் முதல்லே இவனை நம்பாதன்னு சொன்னேன். எங்க கேட்ட என் பேச்சை? பாரு உனக்கே ரிவீட் அடிச்சிட்டான்” நாராயணன் சொன்னது ஒன்று தான்,

“நீ பேசாத உன்னாலதான் எனக்கு இதெல்லாம்” என்று அவரிடம் பாய்ந்தார் அண்ணாச்சி.

“நீ சொல்லி,  உன் பொண்ணுக்காகன்னு இறங்கி இப்போ நான் மாட்டிட்டு இருக்கேன்” அண்ணாச்சி வார்த்தையை விட, செல்வத்தின் முகம் இப்போது மாறியது.

நாராயணனுக்கோ மகளின் பேச்சு வரவும் நிதானம் தப்பிவிட்டார். “என் பொண்ணுக்காகவா? இதென்ன கதையா இருக்கு? நான் அவனை தனியா பார்த்துகிறேன்னு தான் சொன்னேன். நீ தான் அவனை அந்த சொத்து விஷயத்துல சிக்க வைச்சது. சொல்ல போனா நீ தான் என் பொண்ணை வைச்சு அவனை பயன்படுத்திகிட்ட. அதுக்கு தான் இப்போ அனுபவிக்கிற” என்றுவிட்டவருக்கு கட்டுப்பாடு இல்லாமல்  வார்த்தைகள் தானே வந்து விழுந்தது.

“நாராயணா பார்த்து பேசு”

“முடியாது. என் பொண்ணை பேச்சை எதுக்கு இங்க எடுக்கிற?” அவரிடம் அவ்வளவு கோவம்.  அப்பாவிற்கு தாங்க முடியவில்லை.

“நீ எகிறினா மட்டும் உன் பொண்ணுக்காகன்னு பண்ணினது மாறிடுமா?”

“திரும்ப திரும்ப அதையே சொல்லாத. நீ தான் என் பொண்ணு விஷயத்தை பயன்படுத்கிட்ட. அந்த பையனை இதுல சிக்க வைச்ச? இப்போ அவனே உனக்கு ஆப்பு வைக்கிறான்”

“அவன் எனக்கு ஆப்பு வைப்பானா, உனக்கு வைப்பானான்னு பார்க்கலாம். எதுக்கும் நீ உன் பொண்ணை பத்திரமா பார்த்துக்கோ”

“என்ன பண்ணிடுவீங்க?” செல்வத்திடம் இருந்து கேள்வி அதிவேகமாக வந்து விழுந்ததுடன், அண்ணாச்சியை நோக்கி ஓர் அடியும் எடுத்து வைத்துவிட்டான் அவன்.

அண்ணாச்சி மேல் ஏறிச்சென்றுவிட்ட நாராயண், “என்ன மிரட்டுறியா நீ. என் பொண்ணுகிட்ட எவன் வரான்னு நானும் பார்க்கிறேன். உன்கூட சேர்ந்த பாரு. என்னை உதைக்கணும்.  நான் பண்ண தப்பு உன் பேச்சை கேட்டது தான். அந்த சொத்து விஷயத்தை சமாளிக்க முடியாம என் பொண்ணு பின்னாடி ஒளிஞ்சவன் தானே நீ” என்றுவிட்டார் நாராயணன்.

“டேய்” என்று அண்ணாச்சி அவரின் சட்டையை பிடிக்க, நாராயணனும் மாற்றி பிடிக்க, செல்வம் இருவரையும் நெருங்கவில்லை. அவனுக்குள் வேறெதுவோ தீவிரமாக ஓடி கொண்டிருந்தது.

சத்தம் கேட்டு வந்து ஆட்கள் தான் இருவரையும் விலக்கிவிட்டனர். இவங்களுக்குள்ள சண்டையா? பெரிதான ஆச்சரியம். “என்னப்பா இது?” என்று கேட்க, பங்காளிகள் வாய் திறக்காமல் போக, செல்வம் அவர்களை கண்டு கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பினான்.

நேரே கடைக்கு வர, சுப்பிரமணி மூடிவிட்டு சென்றிருந்தான். இரவு பத்து மணிக்கு மேல் ஆகியிருக்க, தன்னிடம் உள்ள சாவியில் கடையை திறந்தான்.

நிறைய யோசனை, அதிகமாய் கோவம்.

இவங்களோட கெட்ட எண்ணத்துக்கு அவளை ஏன் இழுக்கிறாங்க? அண்ணாச்சியின் மிரட்டல் வேறு அவனை மிகவும் தொந்தரவு செய்தது.

உன் பொண்ணை பத்திரமா பார்த்துக்கோன்னா என்ன பண்ணிடுவாராம்?

பொம்பிளை பிள்ளையை வைச்சு, அதுவும் அவளோட காதலை வைச்சு கேம் விளையாடிட்டு இப்போ என்னமோ உத்தமனுங்க மாதிரி பேசிட்டு இருக்காங்க.

அவர் மட்டும் இவளோட அப்பாவா இல்லாம இருந்திருக்கணும். கச்சேரி நடந்திருக்கும். டேபிளில் தட்டியவன், பொறுத்து கொள்ள முடியாமல் ரவிக்கு அழைத்துவிட்டான்.

அவன் அங்கு குழப்பத்தில் நடந்து கொண்டிருந்தான். அப்போது தான் வீட்டுக்கு வந்த நாராயணன் மகனை அழைத்து,  “என் பேர்ல இருக்கிற சொத்தை எல்லாம் எதாவது பண்ண முடியுமா?” என்று கேட்டார்.

ரவிக்கு புரியவில்லை. “எந்த சொத்தைப்பா?” என,

“டேய் என் பேர்ல எந்த சொத்து இருக்கு. எல்லாம் அந்த பினாமி சொத்துங்க தான்”

“அது அமைச்சரோடது ஆச்சே”

“இருக்கட்டும். என் பேர்ல இருக்கிறது மட்டுமில்லை, என் கட்டுப்பாட்டுல இருக்கிற மத்த சொத்தையும் பண்ணனும். எதாவது வழி இருக்கா?” என்று நின்றார்.

அவர் நிதானத்திலே இல்லை. சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார் என்று புரிந்து கொண்ட ரவி, “எனக்கு டைம் கொடுங்கப்பா. நான் பார்த்துட்டு சொல்றேன்” என்றான் அவரின் வழியிலே.

“சீக்கிரம் பார்த்து சொல்லு. அந்த அண்ணாச்சியை எதாவது பண்ணியே ஆகணும்” என்று போக, ரவிக்கு இதென்ன புது பிரச்சனை என்று குழப்பம்.