கண்ணே முத்து பெண்ணே 11

அகிலனுக்கு அழைத்த செல்வம், அவன் எடுக்காமல் போக புருவத்தை சுருக்கினான்.

அமைச்சர் சொன்னாரா என்று நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்! அதற்கு அகிலன் மட்டுமே ஒரே வழி.

இப்போது அவனும் அழைப்பை ஏற்கவில்லை எனும் போது எப்படி தெரிந்து கொள்ள? வேகமாக யோசித்தான்.

அண்ணாச்சியின் திட்டபடி தான் நடந்தது. ஆனால் முன்பிருந்த செல்வம் இவன் இல்லையே?

ரவிக்கு அழைத்தவன், “அகிலன்கிட்ட பேச அவன் போன் நம்பர் இல்லாம வேற வழி இருக்கா?” என்று கேட்டான்.

ஒரு விருந்திற்காக சென்று ரவியும், நாச்சியும் மட்டும் வீடு திரும்பி கொண்டிருந்தவர்கள், இவனின் கேள்வியில் தெரிந்த அவசரத்தில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, “ஏன் என்னாச்சு?” என்று கேட்க,

“டேய் நான் கேட்டதுக்கு பதில் சொல்லு” என்றான் செல்வம்.

“பைக்ல போய்ட்டு இருக்கீங்களா?” நாச்சி கேட்க, செல்வம் அவளின் குரலை உள்வாங்கியதில் பைக்கின் வேகத்தை குறைத்தான்.

“பைக்கை நிறுத்திட்டு பேசுங்க. வண்டி ஓட்டிட்டு ஏன் போன் பேசுறீங்க?” முத்து பெண் அறிவுறுத்தினாள்.

செல்வமோ, “டேய் நான் கேட்டது என்னாச்சு?” என்று நண்பனிடம் சத்தமிட்டான்.

“இருடா அதை தான் பார்த்திட்டு இருக்கேன். நீ விஷயத்தை சொல்லாம குதிச்சா நான் என்ன பண்ணட்டும்? இப்போ எந்த வம்புல போய் மாட்டியிருக்க?” என்று ரவி போனை ஆராய்ந்தபடி கேட்டான்.

எதிர்புறம் பதிலே இல்லை. ரவிக்கு அந்த நேரம் வேறொரு கால் வர, புருவம் சுருங்க டக்கென அதை எடுத்தான்.

செல்வத்தின் போன் நிறுத்தி வைக்கப்பட, அவனுக்கு உச்சகட்ட கடுப்பு.

புதிதாக போன் செய்தவன், விஷயத்தை சொல்லி வைக்க அண்ணனும், தங்கையும் அதிர்ந்து போயினர். உடனே செல்வத்தின் காலை இணைத்தவர்கள், “டேய் என்னடா இது? அவர் சொன்னா நீ ஏன் கிளம்பி போற? ஒழுங்கா கடைக்கு போய் சேர்” என்று ரவி கத்தினான்.

“அண்ணாச்சிக்கே ஸ்பை வச்சிருக்கியா? எல்லாம் கேடிங்க தான்” என்றான் செல்வம் புரிந்து.

“நீங்க ப்ளீஸ் முதல்ல ரிட்டர்ன் வாங்க. அந்த ரிப்போர்ட்டர் எங்களுக்கு தெரியும். ரொம்ப மோசமான ஆள். அவர்கிட்ட துப்பாக்கி எல்லாம் இருக்கும்” என்றாள் நாச்சி.

“ஓஹ் மொத்தமா போட்டு தள்ள பிளான் பண்ணிட்டீங்க போல”

“டேய். உன்னை நானே முடிச்சிடுவேன். இரு முதல்ல அகிலனை பிடிக்க பார்க்கிறேன். நீ அதுவரைக்கும் அந்த இடத்துக்கு போகாத” என்ற ரவி போனுடன் காரை விட்டு இறங்கி நின்றான்.

நாச்சி அவளின் எண்ணில் இருந்து அவனுக்கு அழைக்க, “பிளாக்கை எடுத்துட்ட போல” என்றபடி எடுத்தான் செல்வம்.

“எங்க இருக்கீங்க? இடத்தை சொல்லுங்க” என்று கேட்டாள்.

“நீ ஏன் முதல்ல என்னை பிளாக் பண்ணி வைச்ச?”

“நான் கேட்டேனே?”

“அப்படியா உனக்கு போன் பண்ணி தொந்தரவு கொடுத்தேன். பிளாக் பண்ணி வைக்கிற”

“அச்சோ தெரியாம பண்ணிட்டேன். இனிமே பண்ண மாட்டேன். இப்போ எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க”

“யாரை கேட்டு எனக்கு கேபின் செட் பண்ண? நான் கேட்டேனா உன்கிட்ட?”

“நான் யாரை கேட்கணும்?”

“ஓஹ் அவ்வளவு உரிமை? அதனால தான் என் முன்னாடியே வைச்சு மாப்பிள்ளை பார்த்தாங்களா?” செல்வத்தின் மனப்புழுக்கம் வெளிப்பட்டது.

“அவங்க எனக்கு தெரியாது. ஆனா நான் பல வருஷமா மாப்பிள்ளையை பார்த்திட்டு தான் இருக்கேன். இனியும் பார்ப்பேன். நீங்க டாபிக் மாத்தாம நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க”

“எனக்கு இது தான் முக்கியம்? திரும்ப எப்போ நான் உன்கிட்ட பேச? இதை எல்லாம் கேட்க?”

“சென்னை வந்தப்போ கேட்க வேண்டியது தானே? அப்போ பத்திரிக்கை மட்டும் காமிச்சுட்டு கிளம்பிட்டீங்க. பேருக்கு கூட என்னை வான்னு கூப்பிடலை?” முத்து பெண்ணின் ஆதங்கமும் வெளிவந்தது.

“உன் கடைக்கு நான் கூப்பிடணுமா? உரிமை எல்லாம் உனக்கு மட்டும் தானா? எனக்கு இல்லையோ?”

“சரி உங்களுக்கும் தான். தெரியாம கேட்டேன். அண்ணா விசாரிச்சுட்டு இருக்கான். நீங்க அதுவரைக்கும் மெல்லவே போங்க”

“ஆளுங்களும் என் பின்னாடியே ஊர்வலம் வந்திட்டிருக்காங்க. மேடம் மட்டும் கூட இருந்திருந்தா கல்யாண ஊர்வலமா இருந்திருக்கும்” என்றான் குறும்பாக. அதில் ஏக்கமும் நிறைத்திருந்தது.

“ஊரே நம்ம கூட ஊர்வலம் வரும். அப்படி போலாம். சும்மா ஜோரா, கெத்தா, சூப்பரா” என்றாள் பெண் அவனை புரிந்து.

“அப்படிங்கிற. உன் அப்பா தான் நம்ம கண் திருஷ்டி. முசுட்டு முகத்தோடு முன்னால் போகட்டும். செம ஐடியா இல்லை” என்று வருங்கால மாமனாரை வம்பிழுத்தான்.

“உங்களை” மகளுக்கு கோவம் பொத்து கொண்டு வந்தது.

“கடைக்கு வந்திருக்கலாம் இல்லை. வாசலோட கிளம்பி போறீங்க மேடம்” செல்வம் மனத்தாங்கலாக கேட்டான்.

“அப்பா ஆளுங்க பார்த்தா வம்பு. ஏற்கனவே நான் ஊருக்கு வரதே அவங்களுக்கு பிடிக்கலை. நெருங்கின சொந்தத்தோட விருந்து, எல்லாம் கேட்பாங்கன்னு வர விட்டார்” என்றாள் பெண்ணும் வருத்தமாக.

“எனக்காக பார்த்து உன்னை வர வேணாம்ன்னு சொல்வாங்களா? என்ன பொண்ணு பாசமோ”

“அவங்க என்னை அங்க வந்து பார்த்திட்டு தான் இருக்காங்க. வேற ஒருத்தர் பார்த்திட கூடாதுன்னு தான்”

“பார்க்கவே இப்படியா? பின்னாடி இந்த முத்து பொண்ணு எனக்கே எனக்குன்னு ஆகும் போது என்ன பண்ணுவாங்களாம்?”

“ம்ப்ச், அங்க அண்ணா உங்களுக்காக போராடிட்டு இருக்கான். நீங்க இதை பேசுறீங்க. அங்க போயிடலை இல்லை”

“போகலை. போகலை. உன்னை பார்க்கணும் போல இருக்கு” என்றான் செல்வம் ஏக்கத்துடன்.

“நிஜமாவே அண்ணாச்சி உங்களுக்கு அந்த வேலை கொடுத்தாரா? நீங்க என்ன ஜாலியா பேசிட்டு இருக்கீங்க?” பெண் சந்தேகமாக கேட்டாள்.

“உன்னை பார்க்கலைன்னு ஏங்கி போய் கேட்கிறது உனக்கு ஜாலியா பேசுறதா?” அவன் கோவம் கொண்டான்.

“தெரியாம சொல்லிட்டேன். நான் ஊருக்கு போறதுக்குள்ள நாம மீட் பண்ணலாம்”

“உண்மையா? ஆசை காமிச்சு ஏமாத்திட மாட்டியே?” செல்வம் கேட்டுவிட, பெண்ணுக்கு ஆழமாகவே குத்திவிட்டது.

அவர் பேசாம இருந்தார். என் மனசை சொல்லி, அவருக்கு ஆசை கொடுத்து, இப்போ என்னால தான் இந்த ஓட்டம், கஷ்டம் எல்லாம்.

“என்ன பதில் இல்லை”

“உங்ககிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. வேறென்ன பண்ணட்டும் நீங்களே சொல்லுங்க” என்று கேட்டாள் முத்து பெண்.

“எதுக்கு மன்னிப்பு முதல்ல? என்ன யோசிச்சு குழப்பிக்கிற? நான் உன்னை பார்க்க தான் கேட்டேன். வேணாம்ன்னு விடு”

உடைய ஆரம்பித்தாள் பெண். அவளின் நம்பிக்கை, தைரியம் எல்லாம் எங்கு போனதோ எனுமளவு பலவீனமாக உணர்ந்தாள்.

இப்போவும் ஓடிட்டு இருக்கார். என்னால் தான். இவ்வளவு பண்ணியும் திரும்ப விடாம துரத்துறாங்க. இன்னும் என்னதான் வேணுமாம் அவங்களுக்கு?

வாய் திறந்தால் விம்மிவிடுவோமா? உதடுகளை அழுந்த கடித்து இறுக்கமாக மூடி கொண்டாள்.

இங்கு ரவியோ அவனுக்காக படாத பாடுபட்டு அகிலனை பிடித்துவிட்டான். செல்வதை அழைக்க, அதுவோ வெயிட்டிங் போனது.

திரும்ப அழைத்து, கடுப்பாக நெற்றி தேய்த்தவன் கண்ணில் தங்கை போன் பேசுவது விழுந்தது.

கார் கதவை திறந்தவன், “அவன்கிட்ட தான் பேசுறியா. ஒழுங்கா அவனை என் லைனுக்கு வர சொல்லு” என்றான்.

“எப்போவும் நான் உன் லைன் மட்டும் தான்னு அவனுக்கு சொல்லு” என்று செல்வம் சொல்ல,

“ப்ளீஸ் நீங்க அண்ணா போன் எடுங்க” என்று அண்ணனின் முறைப்பில் பெண் வைத்துவிட்டாள்.

மூவரும் பேசினார்கள். அகிலன் விஷயத்தை கேட்டு கொண்டு, “என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க பாஸ்” என்று கேட்டான் செல்வத்திடம்.

“ம்ம். உங்க கட்சிக்காக துப்பாக்கிக்கு குண்டை நெஞ்சுல வாங்கலாம்ன்னு இருக்கேன்” என்றான் செல்வம்.

“சூப்பர் பாஸ். வாங்குங்க. வாங்குங்க. என்ன ஒண்ணு உங்களுக்காக துப்பாக்கி வெடிச்சு மரியாதை செய்ய முடியாது. அது ஒன்னு தான் குறை” என்றான் அகிலன்.

“அது எதுக்கு? அதான் ஆல்ரெடி நெஞ்சுல இருக்குதே. அதுவே போதும்”

“டேய் என்னங்கடா பேசுறீங்க” ரவி தான் காண்டாகி போனான்.

“இவன் ஒருத்தன் ரத்த கொதிப்புக்காரன்” அகிலன் சொன்னவன், “பாஸ். அமைச்சர் உங்களை செய்ய சொல்லி சொல்லலை. இவங்களே தான்” என்றான்.

“அப்போ செல்வாவை கேட்க மாட்டார்” ரவி ஆசுவாசம் கொண்டான்.

அகிலன் ஏதோ யோசிக்க, “அந்த ரிப்போர்ட்டர்கிட்ட இருக்கிறது பெரிய விஷயமா?” என்று செல்வம் கேட்க,

“பெருசுன்னு இல்லை. ஆனா வெளியே வந்தா கொஞ்சம் சிக்கல் தான்” அகிலன் சொன்னான்.

இங்கு அண்ணாச்சி விடாமல் செல்வத்திற்கு அழைக்க ஆரம்பித்துவிட்டார். நேரம் ஆக அந்த நிரூபர் கோவம் கொண்டு இவரை நச்சரிக்க செய்தான்.

“சமாளிக்க முடியும்ன்னா அண்ணாச்சி பேஸ் பண்ணட்டும்” என்றான் செல்வம்.

“சரி நீ திரும்பிடு” ரவி சொல்ல,

“நான் எப்போ போனேன்” என்றான் செல்வம்.

இருவரும் திகைக்க, “அண்ணாச்சிகிட்டே நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். அவர் என்னமோ உத்தரவு போட்டுட்டு நிக்காம ஓடிட்டார்” என்றான் சாதாரணமாக.

அண்ணாச்சி இவனுக்கு சொல்லிவிட்டு ஓடிவிட, செல்வமோ உடனே கிளம்பாமல் அங்கிருந்த மூத்த உறுப்பினரிடம் பேசினான்.

“நான் போகலைங்கய்யா. உங்களுக்கு என்னை தெரியும். நான் இதெல்லாம் பண்றது இல்லை. கட்சி விஷயத்துல நான் என்னைக்கு தலையிட்டு இருக்கேன்? அவரே போகட்டும்.  நீங்க அண்ணாச்சிகிட்ட சொல்லிடுங்க” என்றான்.

அவருக்கும், அங்கிருந்த வேறு சிலருக்கும் செல்வம் பற்றி தெரியும் என்பதால், “செல்வா சொல்றது சரி. கட்சிக்கும் செல்வத்துக்கும் தான் சம்மதம் இல்லையே. நாங்க அண்ணாச்சிகிட்ட சொல்லிடுறோம். நீ கிளம்புப்பா” என்றுவிட்டனர்.

அவர்களும் உடனே அண்ணாச்சிக்கு தொடர்பு கொள்ள, அவரோ செல்வத்திற்காக பேசுவார்களோ என்ற எண்ணத்தில் எடுக்கவில்லை. நன்றாக சாப்பிட்டு தூங்கவும் போயாச்சு.

ரவி போனில் வந்த தகவலில், “ஆளுங்க.. ஆளுங்க உன் பின்னாடி தான் வந்திட்டிருக்காங்கன்னு சொன்னாங்க” என்று கேட்க,

“அது எனக்கு தெரியாது. என்னை கார்ல ஏற சொல்லி அலப்பறை கொடுத்தானுங்க. போங்கடான்னு பைக் எடுத்துட்டு வந்துட்டேன். அண்ணாச்சிக்கு பார்த்து என் பின்னாடி வரானுங்க போல. நானும் அவங்களோட ஜாலியா ஊர்வலம் போய்ட்டு  இருக்கேன்” என்றான்.

“பாஸ் நீங்க சரியான கில்லாடி” அகிலன் வாய் பிளந்தான்.

“அந்த நிரூபர் நிச்சயம் கிளம்பியிருப்பான்” நேரத்தை பார்த்து சொன்னான்.

“அவர் வைச்ச ஆப்பை அவருக்கே திருப்பி விட்டீங்க போல”

“நான் சொன்னேன். அவர் கேட்கலை. அங்கிருந்த மூத்த உறுப்பினர் அய்யாகிட்ட சொல்லிட்டு வந்துட்டேன். அவர் அண்ணாச்சிகிட்ட இப்போதான் பேசியிருப்பார் போல. அதான் விடாம போன் வருது” என்றான்.

ஆட்கள் நேரே அண்ணாச்சி வீட்டிற்கு சென்று அவரை எழுப்பி சொல்ல, அண்ணாச்சிக்கு மொத்தமும் வேர்த்து போனது.

அமைச்சருக்காக போயிருப்பான் என்ற அவரின் எண்ணத்தில் லாரி மண்ணை கொட்டியிருந்தான் செல்வம்.

அந்த நிரூபரும் இவர்கள் வர வைத்து ஏமாற்றிவிட்டார்கள் என்ற கடுப்பில் உடனே அந்த விஷயத்தை வெளியிட்டுவிட்டான்.

சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட, அமைச்சர் போன் அண்ணாச்சிக்கு வந்தது.