அத்தியாயம் 3
“என்னது நானா..? ஐயோ எத்தனை கிலோ அரிசி பொங்க..?” என்று நினைத்தவுடனே நிலாவிற்கு மயக்கம் வரும்போல் இருந்தது, அவளின் பக்கத்தில் அமர்ந்திருந்த அன்னம்மா, அன்பு சொல்லி சென்றதை கேட்டவுடன், நிலாவின் முகத்தை பார்த்தே அவளின் மயக்கத்தை புரிந்து மறுபடியுமா..? என்று நொந்து போனவர்,
“நிலா நிலா..” என்று அவளின் கையை பிடித்து அழுத்தி அவளின் மயக்கத்தை தள்ளி வைத்தவர், “தம்பி சும்மா சொல்லிட்டு போகுது, நீ பயப்படாத..” என்று அவசரமாக ஆறுதல் சொன்னார்,
அவர் சொல்வதை நம்பாமல் மலங்க மலங்க விழித்த நிலா, “உண்மையாவே சும்மாதான் சொன்னாரா பாட்டி ..?” என்று பலமுறை கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னே ஆசுவாசமடைந்தாள்.
ஆண்கள் சாப்பிட்டு செல்லவும், பெண்கள் எல்லோரும் சாப்பிட அமர, ராஜியின் பக்கத்தில் அமர்ந்த மோகனா தயக்கத்துடன், “அண்ணி.. நிலா சில சமயத்துல கொஞ்சம் சின்ன பிள்ளை போல நடந்துக்குவா, நீங்க கொஞ்சம் பார்த்து…” என்று அதற்கும் மேல் சொல்ல முடியாமல் தடுமாறினார்,
அவர் சொல்ல வருவதை புரிந்து கொண்ட ராஜி, “மோகனா.. இனி நிலா என் மருமக, அவளை எப்படி என்னன்னு நான் பார்த்துகிறேன்..” என்று சுருக்கமாக முடித்துவிட்டார்.
அவரின் பதிலில் சஞ்சலமடைந்த மோகனா, சின்ன அண்ணியை பார்க்க, அவர் நான் பார்த்துகிறேன் என்று கண் மூடி ஆறுதல் சொல்லவும் தான் சிறிது நிம்மதியானார்.
“அதான் நான் வந்துட்டேன் இல்லை, இன்னும் ஏன் நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட பேசமாட்டேங்கிறீங்க..?” என்று ஹரிணி, கோகுலிடம் சண்டை போட்ட நிலாவை பார்த்த ஹரிணி,
“இப்போ வந்துட்ட தான், ஆனா அப்போ நாங்க போகாதன்னு கெஞ்சி கேட்டப்போ முடியாதுன்னு முறுக்கிட்டு போனதானே..” என்று கோபத்துடன் கேட்டாள்,
“ஓய் நான் ஒன்னும் முறுக்கிட்டு போகல, பயத்துலதான் போனேன்”,
“அப்படியென்ன பயம் உனக்கு..? எங்க அண்ணன் என்ன சிங்கம் புலியா..? ரொம்பத்தான்”, என்று கோகுலும் அண்ணனுக்காக சண்டையிட,
“ஓஹ் நீங்க எல்லாம் உங்க அண்ணன் பக்கமா..?”
“ஏன் இருக்க கூடாதா..? எங்க அண்ணனுக்கு என்ன குறைச்சல்..?” என்று ஹரிணி கேட்டாள்,
“உங்க அண்ணனுக்கு குறை இருக்குன்னு கண்ணு தெரியாத கிழவி கூட சொல்லமாட்டா, எல்லாம் நிறையதான் இருக்கு..” என்று உதட்டை சுழித்து நக்கலாக சொன்னாள்,
“ஏய் என்ன கிண்டலா..?” என்று ஹரிணி எகிற,
“பின்ன என்னடி..? தங்கபலி மாதிரி இருக்கிற உங்க அண்ணனுக்கு எல்லாம் நமீதா, அனுஷ்கா மாதிரி ஆளுங்கதான் கரெக்ட்டா இருப்பாங்க, அதை விட்டு ஆலியாபட் மாதிரி இருக்கிற அவருக்கு நான் ஜோடியா..?” என்று சொல்லவும், கொந்தளித்த ஹரிணியும், கோகுலும்
“எங்க அண்னனை தங்கபலி சொன்னதை கூட பொருத்துக்குவோம், ஆனா சைக்கிள் கேப்ல நீ ஆலியாபட் சொன்ன பார்த்தியா அதை மட்டும் மன்னிக்கவே முடியாது”, என்று பொங்கி சண்டையிட, அந்த சண்டையின் முடிவில் அப்படியே பழையபடி ஒரே கூட்டணியாகவும் மாறினர்.
காலை உணவு முடிந்தவுடனே வெளியே சென்றிருந்த அன்பு மதிய உணவிற்கு வரவும், நிலாவை தேடினால் அவள் எங்கும் இல்லை, தேடி பார்த்ததில் ஹரிணியின் ரூமில் மறைந்திருந்தாள், அவளின் ஒளிதலில் கடுப்பான பாட்டியும், மோகனாவும், அங்கு சென்று சாப்பிட கூப்பிட,
“இல்லை பாட்டி.. எனக்கு இப்போ சுத்தமா பசிக்கவே இல்லை, நான் அப்பறமா சாப்பிட்டுக்குறேன்..” என்று அன்புவின் முன் வர மறுத்தாள்.
“நிலா.. என்ன இது..? முதல்ல ஒழுங்கா எழுந்து வா, அன்பு அங்க சாப்பிடாம காத்திருக்கான் பாரு..” என்று மோகனா கோவமாக அதட்டினார்,
“ம்மா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்ம்மா..” என்று மோகனவிடமும் அவள் கேட்டு கொண்டிருக்கும் போதே, அங்கு வேகமாக வந்தான் அன்பு, அவன் திடீர் வருகையை எதிர்பார்க்காத நிலா, அவசரமாக எழுந்து நின்றாள்,
உள்ளே வந்த அன்பு நேரே நிலாவின் அருகில் சென்றவன், எதுவும் பேசாமல் அவளின் கையை பற்றி இழுத்து கொண்டு சென்றான், அவன் அப்படி செய்வான் என்று எதிர்பார்க்காத யாரும், “அன்பு, தம்பி..” என்று கூப்பிட்டவாறே பதட்டத்துடன் அவனின் பின்னே வந்தனர்,
யார் கூப்பிட்டும் கண்டுகொள்ளாமல் நேரே சாப்பிடும் இடத்திற்கு நிலாவை கூட்டி கொண்டு வந்தவன், நிலாவின் கையை விட்டு சாப்பிட அமர்ந்தவாறே, “ம்ம்.. எனக்கு சாப்பாடு போடு..” என்றான்.
அன்புவின் திடீர் செயலில் அதிர்ந்து நின்றிருந்த நிலா, சிலை போலே நிற்க, “என்ன நிக்கிற.. சாப்பாடு போடு..” என்று கொஞ்சம் சத்தமாக அதட்டவே செய்தான்.
அவனின் அதட்டலில் தூக்கி போட்ட மகளை பார்த்த மோகனா “அன்பு..” என்று கூப்பிடவும், அவரை திரும்பி பார்த்த அன்பு,
“அத்தை.. அவ என் பொண்டாட்டியா மாறணுமா..? இல்லை உங்க பொண்ணாவே இருக்கணுமா..?” என்று கூர்மையாக கேட்டான், அவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும்..? அதனாலே அமைதியாகவே நின்ற மோகனாவை மட்டுமில்லை, எல்லோரையும் பார்த்தவன்,
“நாங்க தனியாவே சாப்பிட்டுக்குறோம், நீங்க எல்லாம் அப்பறமா சாப்புட்டுக்கோங்க..”, என்று குறிப்பாக அன்னம்மாவை பார்த்தான், அவனின் பார்வையை புரிந்து கொண்ட அன்னம்மா,
“சரி சரி, அது அவங்க புருஷன், பொன்டாட்டி விஷயம், நமக்கு இங்க என்ன வேலை..? வாங்க போலாம்..” என்று எல்லோரையும் அழைத்து கொண்டு வந்துவிட்டார், எல்லோரும் செல்லவும் இன்னும் நடுங்கி போன நிலாவை பார்த்த அன்பு,
“நிலா..” என்று மிக அழுத்தமாக கூப்பிட்டான், அவனின் அழுத்தத்தில் கலக்கத்துடன் அவனின் முகத்தை பார்த்த மனைவியிடம்,
“சாப்பாடு போடு..” என்று தட்டை காட்ட,
“ம்ம்ம்..” என்று வேகமாக தலையை ஆட்டியவள், தொலைவில் நின்றுகொண்டு நடுங்கிய கையில் சாதத்தை பரிமாற, அது மேலும் கீழும் சிந்தவே செய்தது. அதில் பதறிப்போன நிலா, பயத்துடன் அன்புவை பார்க்க, அவன் அமைதியாக சிந்திய சாதத்தை தள்ளி வைத்து கொண்டிருந்தான்.
அடுத்து சாம்பாரை பரிமாற அதுவும் சிந்தியதோடு, அன்புவின் கையிலும் லேசாக கொட்டிவிட்டது, அவ்வளுதான் பயத்தில் நிலாவிற்கு அழுகையே வந்துவிட்டது,
“நான்.. நான்..” என்று அழுகுரலில் திக்க, அவளின் அழுகையை நிமிர்ந்து பார்த்தவன், எதுவும் சொல்லாமல், தள்ளி நின்றிருந்தவளின் கையை பிடித்து தனக்கு அருகில் நிறுத்தி, அவளின் சேலையவே உரிமையாய் எடுத்து கையை துடைத்து கொண்டவன்,
“பொரியல் போடு..” என்று சாதாரணமாக சொன்னான், அவனின் செயலில் இன்னும் பீதியான நிலா, பொங்கும் கண்ணீரை துடைத்தபடி பரிமாற போக,
“ம்ஹூம்..” என்று தலையை மறுப்பாக ஆட்டியவன், சாப்பிடாமல் கையை கட்டிக்கொண்டு அமர்ந்துவிட்டான், அவன் சாப்பிடாமல் இருக்க, ஏன் என்று புரியாமல் தடுமாறிய நிலாவை பார்த்தவன்,
“முதல்ல அழுகையை நிறுத்திட்டு முகத்தை கழுவிட்டு வா..” என்று சொன்னான். அன்புவின் பேச்சை தட்ட முடியாமல் பொங்கும் கண்ணீரை துடைத்தவாறே சென்று முகம் கழுவி வந்தவளின் முகத்தை பார்த்தவன்,
“இப்போ பரிமாறு..” என்று தேவையானதை தானே கேட்டு வாங்கி சாப்பிட்டான். அப்படியும் பயம் தெளியாமல் அடுத்து அடுத்து அவன் கேட்டதை நடுக்கத்தோடுதான் பரிமாறினாள்.
அவள் சிறிது சிறிதாக பரிமாறி முடிக்கும் வரை, எதுவும் பேசாமல் அமைதியாகவே சாப்பிட்ட அன்பு, எழுந்து செல்லுமுன், “இனிமே இதெல்லாம் எனக்கு நீயே தான் செய்யணும்..” என்று சொல்லிவிட்டு சென்றான்.
“தம்பி.. நீ எப்பவும் போல இன்னிக்கு சாயந்திரமும் நம்ம தோப்புக்கு போயிராத, சீக்கிரமே வீட்டுக்கு வந்துரு..” என்று அன்பு மதிய உணவு முடித்து கிளம்பும் போது அன்னம்மா சொன்னார்.
“ஏன்..?” புரியாமல் கேட்டான் அன்பு,
“அது.. அது வந்துப்பா..” என்று பேரனிடம் இன்று உனக்கும், நிலாவிற்கும் முதலிரவு என்று சொல்ல முடியாமல் இழுத்தார்.
“என்ன பாட்டி சீக்கிரம் சொல்லு, அங்க ஆளுங்க கரும்பு வெட்டிட்டு இருக்காங்க, நான் கிளம்பனும்..” என்று அன்பு அவசரமாக சொன்னான்,
“அது.. அது அப்படித்தான் நீ வந்துரு அவ்வளவுதான்”, என்று அன்னம்மா சொல்லாமல் விட,
“பாட்டி..” என்று அழுத்தமாக கூப்பிட்ட அன்பு, “இப்போ நீ சொல்ல போறியா இல்லையா..?” என்று கடுப்பாக கேட்டான், எல்லோரும் உள்ளே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க, நிலா கீழே அன்னம்மாவின் ரூமில் இருந்ததால், அவளால் அவர்கள் பேசுவதை நன்றாக கேட்க முடிந்தது.
“அது.. இன்னிக்கு உனக்கும் நிலாப்பொண்ணுக்கும் நைட் நல்ல நேரம் பார்த்து குறிச்சிருக்கு, அதான்..” என்று அன்னம்மா சொல்லவும், உள்ளே இருந்த நிலாவிற்கு பயத்தில் ஜன்னியே வந்துவிடும் போல் இருந்தது,
அன்னம்மா சொன்னதை கேட்டவுடன் நெற்றியில் அடித்து கொண்டவன், “உங்களுக்கு கொஞ்சமாவது ஏதாவது இருக்கா..?” என்று கோவமாக கத்தவும்,
“ஏன்ப்பா..?” என்று அன்னம்மா அவனின் கோவத்தில் புரியாமல் கேட்டார்.
“என்ன ஏன்ப்பா..? வயாச்சே தவிர உனக்கு கொஞ்சமாவது கூறு இருக்கா, வாய் மட்டும் எட்டூருக்கு கிழியுதே தவிர வேறொன்னும் உன்கிட்ட உருப்படியா இல்லை”, என்று திட்டவே செய்தான், அன்பு திடிரென்று திட்டவும், தானும் கோவம் கொண்ட அன்னம்மா,
“ஏண்டா இப்படி திட்டுற..? நான் என்ன செஞ்சேன்..? இது உலக வழக்கம் தானே, அப்பறம் என்ன..?”
“அப்பறம் என்னவாம்..? உன்னை..?” என்று பல்லை கடித்தவன்,
“அவ என்னை பத்தடி தூரத்துல நின்னு பார்த்தாலே பயத்துல நடுங்கி சாகுறா, இதுல அவளை என்னோட தனியா ஒரே ரூம்ல விட்டா அவ்வளவுதான், அவளுக்கு அட்டாக்கே வந்தாலும் ஆச்சரியபடறதுக்கில்லை”,
“இதுதானா..?” என்று ஈசியாக சொன்னவர், “அதெல்லாம் காலகாலத்துல நடக்க வேண்டியது நடந்தா பயம் எல்லாம் தானா விட்டு போயிரும், ஏன் நானும் கல்யாணமான புதுசுல உங்க தாத்தாவை பார்த்து அப்படி நடுங்குவேன், ஆனா அப்பறம் எல்லாம் பயம் தன்னாலே விட்டு போச்சு, அதே மாதிரி..” என்று அன்னம்மா சொல்லிக்கொண்டிருக்க, ஆத்திரமாக இடையிட்ட அன்பு,
“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின, உன்னை தூக்கி தொங்க விட்டுருவேன் கிழவி, நீயும் உன் புருஷனும் மாத்தி மாத்தி எங்க வாழ்க்கையில கபடி விளையாடினது போதும், இதுக்கு மேல எங்க வாழ்க்கையை நாங்களே பாத்துகிறோம்..”
“நல்லா பார்ப்பீங்க..? நீயும் உன் பொண்டாட்டியும் அம்புட்டு அருமையா உங்க வாழ்க்கையை பார்த்துப்பீங்க, அதிலயும் உன் பொண்டாட்டி இருக்காளா சும்மா சூப்பரா பார்த்துப்பா..” என்று நக்கலாக ராகம் இழுத்தார்.
“அவ பார்க்காட்டி என்ன..? நான் இருக்கேன்ல, நான் பார்த்துகிறேன், அதனால இதுக்கு மேலயும் எங்க விஷயத்துல நீ தலையிட்ட கிழவி தாத்தா பக்கத்துல பெட் ரேடி செஞ்சுருவேன் பார்த்துக்கோ”, என்று அன்பு மிரட்டலாக சொன்னான்,
அப்படியும் விடாத பாட்டி, “அப்போ இன்னிக்கு..?” என்று ஆற்றாமையுடன் இழுத்தார். அவருக்கு எங்கே இருவரும் இப்படியே இருந்து விடுவார்காளோ..? என்ற கவலை.
“அடங்கமாட்டியா நீ..? நாந்தான் நான் பார்த்துகிறேன்ன்னு சொல்லிட்டேன் இல்லை, இப்போதைக்கு அவ உன் ரூமில் உன்கூடவே தங்கிக்கட்டும், இல்லை ஹரிணி ரூம்ல இருந்துக்கட்டும்”,
“இனிமேல் இது சம்மந்தமா நீ எப்பவும் என்கிட்ட பேசவே கூடாது, நான் இவ்வளவு சொன்னதுக்கு அப்பறமும் என் பேச்சையும் மீறி இன்னிக்கு நைட் ஏதாவது ஏற்பாடு செஞ்சிருந்த, கிழவி தாத்தா பக்கத்துல பெட்டு பெட் தான் உனக்கு”, என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு சென்றான்.
அன்பு பேசி சென்றதை கேட்டிருந்த நிலா நம்ப முடியாமல் பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்து இருந்தாள், “வேண்டாம் சொல்லிட்டாரா..? எப்படி..? என்னோட பயத்தை நல்லா தெரிஞ்சு வச்சிருக்காரே, அவர் பேச்சில எவ்வளவு கோவம்”,
“பாட்டியை கூட நல்லா வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாரே, நான் கூட இன்னிக்கு அவர் என்கிட்ட நடந்துகிட்டத்தை பார்த்து இன்னும் பயந்து போயிருந்தேன். பரவாயில்லை, ஆளுதான் பயங்கரமா தெரிஞ்சாலும் குணம் ஓகே போலத்தான்”, என்று முதல் முறையாக அன்புவை பற்றி பாசிட்டிவாக யோசித்தாள்.
அன்பு உறுதியாக சொல்லி சென்றதை அன்னம்மா வீட்டு பெண்களிடம் சொல்லவும், மோகனாவிற்கு அளவில்லா நிம்மதி உண்டானது,
“என்னதான் மகள் கணவனுடன் வாழவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அவளின் பயம் தெளியாமல், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் எப்படி..?” என்று கவலை பட்டு கொண்டிருந்தவருக்கு, அன்புவின் மறுப்பில், மகள் கண்டிப்பாக நன்றாக வாழ்வாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வந்தது.
இரவு உணவு முடித்து எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது தான் அன்பு வந்தான், வந்தவன் நேரே மேலே சென்று குளித்து உணவிற்கு வரவும், ராஜி முதல் ஆளாக பரிமாற செல்ல, நிலா நிம்மதியுடன் தூணிற்கு பின் மறைந்தும் மறையாமல் எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தாள்.
“ம்மா.. அவ எங்க..?” என்று பார்வையால் நிலாவை தேடியபடி உணவுண்ண அமர்ந்தவன், தூணிற்கு பின்னிருக்கும் நிலாவை கண்டு கொண்டான், மகனின் கேள்வியில் மெலிதான ஆதங்கம் கொண்ட ராஜி,
“ஏன் நான் பரிமாறுன ஆகாதா..?” என்று கேட்டார்.
“ம்மா.. உன்னை பரிமாற வேணாம்ன்னு நான் சொல்லலையே, அவ எங்கேன்னு தானே கேட்டேன்..?” என்று சொல்லவும், மலர்ந்த முகத்துடன் மகனுக்கு வேகமாக சாப்பாடு வைத்தார் ராஜி.
சாப்பிட்டவாறே, “நிலா..” என்று சத்தமாக அழைத்தான் அன்பு,
“அவளை ஏண்டா கூப்பிடுற..?” என்று ராஜி புரியாமல் கேட்க,
“சும்மாதான்ம்மா, நீங்க கொஞ்சம் குருமா வைங்க..” என்று சொன்னவன், அவள் வாராமல் இருக்கவும், மறுப்படியும் “நிலா..” என்று சத்தமாக கூப்பிட்டான்.
அவன் தொடர்ந்து கூப்பிடவும் எல்லோரும் பேசுவதை விட்டு இவளையே பார்க்க, அதற்கு மேல் போகாமல் இருக்க முடியாது என்று புரிந்து கொண்ட நிலா, தயக்கத்துடன் குனிந்தவாறே சென்று கணவனின் பக்கத்தில் அதாவது ஒரு பத்தடி தள்ளி நின்றாள்.
தனக்கும் அவளுக்கும் உள்ள தூரத்தை பார்த்தவன், மதியம் போலே எட்டி அவளின் கையை பிடித்து இழுத்து தனக்கு வெகு பக்கத்தில் உரிமையாய் நிற்க வைத்து கொண்டான்,
அன்புவின் செயலில் ஒருமாதிரி சங்கடம் கொண்ட ராஜி, அதற்கு மேல் பரிமாற முடியாமல் சிறிது தடுமாறவே செய்தார். அவரின் தடுமாற்றம் புரிந்து உள்ளுக்குள் சிரித்த அன்பு,
“நிலா.. அந்த தண்ணி எடு..” என்று அவளிடம் கேட்டு நீர் பருகியவன், மேலே சிந்திய தண்ணியை அவளின் முந்தி சேலையை எடுத்து துடைக்க, அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாத ராஜி,
“நான் இதோ வந்துடறேன், நீ.. நீ.. பாத்துக்கோ” என்று மருமகளிடம் சொல்லியவர், அங்கிருந்து ஓடியே போனார், அவர் ஓடவும் மவுனமாக சிரித்த அன்பு மனைவியிடம்,
“ நான் மதியம் உன்கிட்ட என்ன சொல்லியிருந்தேன், இனி நீதான் எனக்கு இதெல்லாம் செய்யணும்ன்னு சொன்னேன் இல்லை, அப்பறம் என்ன..? அங்க ஒளிஞ்சி அத்தான்கிட்ட கண்ணாமூச்சி விளையாண்டுட்டு இருக்க”, என்று கண்ணில் சிரிப்பு மின்ன கேட்டான்.
“அது.. அத்தை அதான்” என்று இழுக்க,
“நம்பிட்டேன்”, என்று சொல்லியவன், “சப்பாத்தி போடு..” என்று தனக்கு தேவையானதை தானே கேட்டு வாங்கி சாப்பிட்டான். நிலா முடிந்தவரை அவனின் முகம் பார்ப்பதை தவிர்த்தபடி தான் பரிமாறினாள்,
என்ன ஒரே முன்னேற்றம், மதியம் போல் எதுவும் சிந்தவில்லை, அன்புவின் மேல் புதிதாக உண்டாகியிருந்த நல்லெண்ணம் அவளின் பயத்தை சிறிது போக்கியிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதுதானே அன்புவிற்கும் வேண்டும்,
சாப்பிட்டு முடித்த அன்பு, எல்லோரும் அமர்ந்து பேசும் இடம் வந்தான், அவன் செல்லவும் நிலா விட்டால் போதுமென அவசாரமாக ஹரிணியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.