அத்தியாயம் 2

 

“நிலாம்மா..  முதல்ல நாங்க சொல்றதை  கொஞ்சம் காது கொடுத்து கேளு, நாலு நாளா நாங்க என்ன சொல்ல வரோம்ன்னு கூட கேட்காம இப்படி கோவப்பட்டா எப்படி..? உன் நல்லதுக்கு தானே எல்லோரும்  சொல்றோம்” என்று அன்புவின் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மகளிடம்  மோகனா  வேண்டுதலாக கேட்டார்.

 

“யாரு நல்லதுக்கு சொல்றீங்க..?  என் நல்லதுக்கா இல்லை உன் அண்ணன் மகன் அந்த தங்கபலி நல்லதுக்கா..?” என்று நிலா கோவமாக கேட்டாள்.

 

“தங்கபலியா..? அது யாருடி தங்கபலி..?” என்று மோகனா புரியாமல் கேட்டார்.

 

“ம்ம்.. உன் அண்ணன் மகன் தான் வேற யாரு..?”  என்று நொடித்த மகளிடம்,

 

“அவன் பேரு அன்புதானே, நீ என்னடி புது பேரா சொல்ற”,

 

“அந்த பேரை விட இந்த பேரு தான்  உன் அண்ணன் மகனுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு”, என்று நிலா சொல்லவும்,

 

“நிலா ஒழுங்கா புரியும்படி பேசு..” என்று மோகனா மகளை அதட்டினார்,

 

“ம்மா..  அவ அன்பு மாமாவை தான் தங்கபலி சொல்றா, நாம கூட இந்த சென்னை எக்ஸ்பிரஸ் படம் பாத்தோமோ,  அதுல வில்லன் வருவாரே பயங்கர பெருசா,  அவரோட பேருதான் தங்கபலி..” என்று நிலாவின் தம்பி, ஹரிஷ் விளக்கமாக சொன்னான்.

 

“அடிங்க.. என் அண்ணன் மகனையா அப்படி சொன்ன..? என்ன தைரியம் உனக்கு..?” என்று அண்ணன் மகனுக்காக வக்காலத்து வாங்கினார் மோகனா.

 

“ம்ம்.. பிரமாண்டமா இருந்தா அப்படித்தானே சொல்ல முடியும், ஏன் உன் அண்ணன் மகன் அப்படி இல்லையாக்கும்..?” என்று நிலா விடாமல் வழக்கடித்தாள்.

 

“நிலா இப்படி பேசத்தான்னு நானும் முதலிலிருந்து சொல்றேன், அன்பு என் அண்ணன் மகன் மட்டுமில்லை, இப்போ உன் புருஷனும் கூட, அதனால இனியாவது  அன்புவை மரியாதையா பேச கத்துக்கோ..” என்று கண்டிப்புடன் மிரட்டியவர்,

 

“இங்க பாரு நிலா, நானும் அப்பாவும் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவெடுத்தோம், இதுதான் உனக்கு நல்லதும் கூட, அன்பு உண்மையிலே ரொம்ப நல்ல பையன், நான் கண்ணாரா பார்த்து வளர்ந்த புள்ளை, அவன்கிட்ட குறை சொல்லும்படி ஒண்ணும் இல்லை, நீதான் தேவையில்லாம பிடிவாதம் பிடிச்சிட்டு உட்காந்திருக்க..” என்று சலிப்புடன் சொன்னார்.

 

நீ அன்பு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொன்ன நாளிலிருந்து அங்கு போகவே மாட்டேனென்று அடமாக இருக்கும் மகளுக்கு எப்படி புரிய வைப்பதென்று இந்த நாலு நாட்களாக போராடி களைத்து தான் போனார் மோகனா.

 

அதுவரை எதுவும் பேசாமல் இருந்த பாலா,  “நிலா.. உனக்கு உண்மையிலே அன்புவோட வாழறதுல என்ன பிரச்சனை..? அப்பாகிட்ட சொல்லு”, என்று அமைதியாகவே கேட்டார். தந்தை பொறுமையாக பேசவும், தானும் தன் கோவத்தை குறைத்து,

 

“இல்லப்பா.. அவரு, அவரு பார்க்கவே ரொம்ப, எப்படியோ இருக்காருப்பா, நான் அவரு பக்கத்துல நின்னா எதோ ஆலமரத்துக்கு பக்கத்துல குட்டி செடி வச்சாப்புல இருக்கேன்”,

 

“அதுவும் அவரோட குரல், சொல்லவே வேணாம், ஸ்பீக்கர் பிரீ தொண்டை, அதுல சும்மா பேசினாலே நான் தாங்க மாட்டேன், இதுல அவரு கோவப்பட்டு பேசினா அவ்வளவுதான்,  நான் வைபிரேஷன் இல்லாமலே உதற ஆரம்பிச்சிடுறேன்”, என்று கண்ணை உருட்டி பயத்துடன் சொன்னாள்,

 

மகளின் பயத்தில் பாலாவுக்கு சிரிப்புதான் வந்தது, ஆனாலும் அதை காட்டி கொள்ளாமல், “இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா நிலா, அன்புவை பார்த்து நீ இந்தளவுக்கு பயப்பட என்ன இருக்கு..?”,

 

“அவன் கொஞ்சம் உங்க தாத்தா மாதிரி, நல்லா வாட்டசாட்டமா இருக்கான், அவ்வளவுதான், இதுல நீ இந்தளவுக்கு பயப்பட ஒண்ணுமில்லை, அதுவும் இல்லாம என் நிலா தான் ரொம்ப தைரியமான பொண்ணாச்சே..”, என்று பாலா சமாதானமாக  சொன்னார்.

 

“ப்பா.. நான் கொஞ்சம்  தைரியமான பொண்ணுதான்,  இல்லைங்கில, ஆனா அவருன்னு வரும்போது மட்டும்  என் தைரியம் எல்லாம் எங்கபோயி ஒளிஞ்சிக்கிதுன்னு தான் எனக்கும் தெரியல”,

 

“அதனாலே எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்லருந்து  தப்பித்தவறி கூட அவருமுன்னாடி நான் போயிரமாட்டேன், இதுல ஒரே வீட்ல அவரோட பொண்டாட்டியா இருக்கிறது எல்லாம்.. ம்ஹூம் வாய்ப்பே இல்லப்பா”, என்று தலையை உலுக்கி கொண்டாள்.

 

“என்னடி வாய்ப்பே இல்லை..? இதெல்லாம் ஒரு காரணமா உனக்கு..? வந்துட்டா பெருசா சப்பை கட்டு கட்டிக்கிட்டு, நல்ல குணமான பிள்ளை அன்பு, அவன்கூட வாழ உனக்கு கசக்குதா”,  என்று மோகனா தன் பொறுமையை விட்டு கோவத்தோடு கேட்டார்.

 

“ஆமாக்கா.. அன்பு மாமா ரொம்ப நல்லவர் தான், நீ ஏன் இப்படி பயப்படறேன்னு எனக்கும் தெரியல..?” என்று ஹரிஷும் புரியாமல் கேட்டான்.

 

“டேய் உன்னை கேட்டாங்களா..? போடா முதல்ல, வந்துட்டான் மாமாக்கு சொம்பு தூக்கிட்டு..” என்று தன் கோவத்தை தம்பியிடம் காட்டினாள் நிலா.

 

“நிலா.. அவங்களை எல்லாம் விடு, முதல்ல நான் சொல்றதை  புரிஞ்சிக்க முயற்சி செய், இன்னும் நீ சின்ன பொண்ணு இல்லை, BE முடிச்சிட்டு வேலைக்கு போயிட்டிருக்கிற,  நல்லது எது கேட்டது எதுன்னு  உனக்குமே நல்லா புரியற வயசுதான்”.

 

“அன்புவோட உருவத்தை, குரலை, அவனோட கோவத்தை மட்டுமே காரணமா வச்சிக்கிட்டு நீ இப்படி பேசுறது தப்புன்னு தான் சொல்லுவேன், அது அவனோட ஜீன், அதுக்காக எல்லாம் அவன் கூட வாழமாட்டேன்னு சொல்றது உண்மையிலே ரொம்ப சில்லியா தான் இருக்கு”,

 

“ஏன் நீ ஓடி ஓடி பாக்கிற எத்தனை ஹீரோஸ் சிக்ஸ் பேக், எய்ட் பேக்ன்னு வச்சிருக்காங்க, அது எல்லாம் உனக்கு ஒரு கிரேஸா தானே இருக்கு, அதே மாதிரிதான் அன்புவும் இருக்கான், ஆனா அவன்னு வரும்போது மட்டும் நீ இப்படி பேசுறது சரியா சொல்லு..?” என்று பொறுமையாக கேட்டார் பாலா.

 

தந்தை கேட்பதில் எந்த தவறும் இல்லை தான், அது நிலாவிற்கு நன்கு புரியத்தான் செய்தது. ஆனாலும் அன்பு..? நினைத்தாலே பயம் தோன்றாமல் இல்லை, அதை அவள் முகமே காட்டி கொடுக்க, புரிந்து கொண்ட பாலா, மகளின் கையை பிடித்து தட்டி கொடுத்தவர்,

 

“நிலா.. நாங்களே உனக்கு மாப்பிள்ளை பார்த்து இருந்தாலும் அன்பு மாதிரி ஒரு மாப்பிள்ளையா கண்டிப்பா பார்த்திருப்போமான்னு தெரியாது, அன்புவை பத்தி இன் அண்ட் அவுட் நமக்கு எல்லாம் தெரியும், எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன்”,

 

“நீ உன் பயத்தை எல்லாம் தள்ளி வைச்சிட்டு அவனோட வாழ்ந்துதான் பாரேன், உனக்கும் கண்டிப்பா அவனை பிடிக்கும்”,

 

“இல்லை அப்படியும் உன்னால ஒரு அளவுக்கு மேல முடியலன்னு தோணிச்சுன்னா அப்பாகிட்ட சொல்லு, நான் கண்டிப்பா உனக்கு சப்போர்ட்டா நிப்பேன் சரியா..? மகளுக்கு நம்பிக்கை கொடுத்தார் தந்தை.

“என்னால முடியலைன்னா உண்மையிலே எனக்கு சப்போர்ட் செய்வீங்களாப்பா..?” என்று நிலா சந்தேகமாக கேட்க, அவளின்  தலையில் கொட்டிய மோகனா,

 

“என்னடி சந்தேகமா கேட்கிற..? ஏன் உனக்கும் அன்புக்கும் கல்யாணமான ரெண்டாவது நாள்லே, அன்புவோட கோவத்துல பயந்துகிட்டு நீ அங்க இருக்கவே மாட்டேன்னு ஜுரத்துல விழுந்தப்போ, என் அம்மா வீட்ல  எல்லோரும் எவ்ளோ சமாதானம் சொல்ல சொல்ல நானும் அப்பாவும் அன்னிக்கே உன்னை எங்க கையோடு கூட்டிட்டு வந்துரல”,

 

“அப்படி அன்னிக்கு உனக்கு சப்போர்ட் செய்ய போயிதான் இன்னைக்கு வரைக்கும் என் அண்ணன் குடும்பத்துல இருந்து யாரும் நம்ம கிட்ட பேசுறதுல”. என்று கலங்கிய குரலில் சொன்ன மோகனா,

 

“அப்படியிருந்தும் எங்களை பார்த்து இந்த கேள்வி கேட்குற..?” என்று ஆத்திரத்தோடு மீண்டும் மகளின் தலையில் கொட்டினார்.

 

“ம்ம்மா.. வலிக்குது”, என்று தலையை தேய்த்து கொண்ட நிலாவின் தலையை தடவிய பாலா,

 

“அம்மா கோவப்படறதுல தப்பு இல்லை நிலா, உனக்காக தானே அவ அவங்க அம்மா வீட்டு சொந்தத்தை விட்டுட்டு வந்தா, இத்தனைக்கும் அன்னிக்கு அன்பு மேல பெரிய தப்பு எதுவுமே இல்லை, இருந்தாலும் உன் பயத்துக்காக மட்டுமே நாங்க உன்னை கூட்டிட்டு வந்தோம்”,

 

“ஆனா அன்னிக்கு நாம நடந்துக்கிட்டது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா..? அவங்களை எல்லாம் எப்படி சமாதான படுத்தன்னு தெரியல”, என்று பெருமூச்சுவிட்டார் பாலா.

 

ஏன் நிலாவுக்குமே இத்தனை நாட்களாக அன்று தான் நடந்து கொண்டது சிறுபிள்ளை தனமாக உறுத்தலாக தான் இருந்தது, அன்றிலிருந்து அன்புவின்  சித்தப்பாவின் மகன்  கோகுல், தங்கை ஹரிணி யாருமே அவளுடன் பேசுவதில்லை,

 

அன்பு அவனின் அண்ணன் பிரகாஷ்  தவிர மற்ற எல்லோரும் ஒரு வருட, இரு வருட இடைவெளியில் தான் இருப்பர், அதனாலே எல்லோரும் ஒரே கூட்டணியாகத்தான் இருப்பார்கள்,

 

அதை எல்லாம் நினைத்து தானும் வருந்திய நிலாவிடம், “நிலா.. இப்போ ஹரிணிக்கு வேற வரன் கூடி வந்திருக்கு, இந்த டைம்ல அந்த வீட்டு மருமகளா, ஹரிணிக்கு அண்ணியா நீதான் எல்லாம் செய்யணும்”

 

“அதுமட்டுமில்லாம  நீ இங்க வந்த கொஞ்ச நாள்லே உன்னை கூட்டிட்டு போக அன்பு வந்திருந்தாரு, நாந்தான் இன்னும் கொஞ்ச நாள்லே நானே கொண்டு வந்து விடறேன்னு கேட்டிருந்தேன்”,

 

“என்னோட வார்த்தைக்கு  மதிப்பு கொடுத்து இப்போவாரைக்கும் அன்பு உன்னை தொந்தரவு செய்யவே இல்லை, அதை நாம மதிக்கிறது தான் சரி நிலா,  அதனால  இதுக்கு மேலயும் வீணா பிடிவாதம் பிடிக்காம கிளம்ப பாரு அவ்வளுதான்”,  என்று நிலா எவ்வளவு மறுத்தும் உறுதியாக முடித்து விட்டார் பாலா.

 

அங்கு அன்புவின் வீட்டிலும் அன்னம்மா எல்லாரும் அமர்ந்து உணவு உண்ணும் போது, “நிலா பொண்ணு இந்த வாரம் நம்ம வீட்டுக்கு வர்றா பெரியவனே..” என்று உற்சாகமாக சொன்னார்.

 

அவரின் உற்சாகத்தில் அன்பு உட்பட யாரும் கலந்து கொள்ளாமல் அமைதியாக சாப்பிட, ராஜி மட்டும்,  “இந்த முறை எத்தனை நாளைக்கு வர்றா உங்க பேத்தி..?”  என்று நக்கலாக கேட்டார்.  மருமகளின் நக்கலில் பல்லை கடித்த மாமியார்,

 

“ம்ம்.. என் பேத்தியா மட்டும் இல்லாம இந்த வீட்டு மருமகளாவும் நிரந்தரமா வர்றா நிலா”, என்று  சொல்லவும், அவரின்  உறுதியான பேச்சில்

 

“உண்மையாவாம்மா..?”  என்று நம்பிக்கை இல்லாமல் ஆச்சரியத்துடன் கேட்டார் அண்ணாமலை,

 

“நிஜம்டா பெரியவனே, மோகனா இப்போதான் போன் பண்ணி உறுதியா சொன்னா”,

 

“அப்படி வந்தா சந்தோசம் தான்ம்மா, என்னதான் அன்னிக்கு அவங்க நடந்துக்கிட்டதுல  கோவம் இருந்தாலும், நம்ம வீட்டு மருமக இப்படி  இருக்கிறது உள்ளுக்குள்ள வருத்தமா தான் இருந்துச்சு”,

 

“ஆனா இப்போ  நம்ம பொண்ணுக்கு கல்யாணம் கூடி வர்ற நேரத்துல, மருமக இங்க வர்றது ரொம்ப நிம்மதியா இருக்கு”, என்று அண்ணமாலை சொல்லவும்,

 

“ஆமாண்ணா.. எனக்கும் இப்போதான் நிம்மதியாச்சு, எப்படியோ இனிமேலாவது எல்லாம் நல்ல படியா நடந்தா சந்தோசம் தான்”, என்று தானும் சொன்னார்  ஆனந்தன்.

 

“ராஜி.. மருமக வர்றதுக்கு எல்லா ஏற்பாட்டையும் செஞ்சுடு, முன்னதான் அவங்க கல்யாணத்துக்கு எந்த சம்பிரதாயமும் செய்ய முடியாம போச்சு”,

 

“அப்போ எதோ கெட்ட நேரம் போல, எல்லாம் தப்பு தப்பாவே முடிஞ்சிருச்சு, இனியாவது எல்லாம் நல்ல படியா நடக்கட்டும்..”, என்று மனைவியிடம் என்ன என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு உணவு முடித்து ஆண்கள் எழுந்து சென்றனர்.

 

“முதல்ல வரட்டும், அப்பறம் செஞ்சுக்கலாம் எல்லா வரவேற்பு ஏற்பாடும்..!!!”   என்று ராஜி சத்தமாக முணுமுணுக்க,

 

“அதெல்லாம் என் பேத்தி வந்துருவா, நீ என் மகன் சொன்ன மாதிரி எல்லா ஏற்பாடும் செய் போ..” என்று தன் மாமியார் அதிகாரத்தை காட்டினார் அன்னம்மா,

 

“பாட்டி நிலா நிஜமாத்தான் வராளா..? இல்லை நீயே கதை அடிக்கிறியா..?” என்று ஹரிணி சந்தேகத்தோடு கேட்டாள்,

 

“ஆமாக்கா.. எனக்கு என்னமோ நிலா வருவான்னு நம்பிக்கையே இல்லை”, என்று கோகுலும் சொன்னான்,

 

“அட யாருடா நீங்க, என் பேத்தி உண்மையாத்தான் வர்றா..”, என்று பெருமையாக கை வீசிக்கொண்டு சென்றார் அன்னம்மா.

 

சொன்னது போல் அந்த வாரம் நல்ல நாள் பார்த்து நிலாவுடன் மோகனாவின் குடும்பம் கிருஷ்ணகிரி வந்தனர். அவர்கள் வரவும் அண்ணாமலையின் குடும்பமும் முறையாகவே நின்று வரவேற்க செய்தனர்.

 

அன்னம்மா முதல்லே மகன்களிடம் மோகனா மேலும் அவளின் குடும்பத்தின் மேலும் கோவம் காட்ட வேண்டாம் என கேட்டிருக்க, மகன்களும்,

 

“என்னம்மா இது மோகனா எங்க சம்மந்தி மட்டுமில்லை, தங்கச்சியும் கூட, விடுங்கம்மா..” என்று சொல்லிருந்தனர். நிலா வரவும் வரவேற்று  வீட்டிற்குள் செல்லுமுன் வாசலில் வைத்து ஆரத்தி எடுக்க போக,

 

“அன்பு எங்க..? அவனும் கூட நிக்கனுமில்லை..?” என்று அண்ணாமலை ராஜியிடம் மெலிதான கோபத்துடன் கேட்டார்,

 

“தம்பி வெளியே போயிருக்கு..” என்று ராஜி சங்கடத்துடன் சொல்லவும் மனைவியை முறைத்தார். அவரும் நேற்றே அன்புவிடம் மறுநாள் நிலா வருவதால் வெளியே செல்ல வேண்டாம் என்று சொல்லியிருக்க, அதையும் மீறி அவன் சென்றிருப்பது அவருக்கு கோவத்தையே கொடுத்தது.

 

“போன் பண்ணி அவனை உடனே வீட்டுக்கு வரச்சொல்லு..” என்று மனைவியிடம் சொன்னவர், வாசலிலே நிற்கும் மருமகள், பாலா, மோகனவிடமும்,

 

“தம்பி எதோ அவசர வேலையா கொஞ்சம் பக்கத்துல போயிருக்கு, இப்போ வந்துடுவான், அவன் வந்தபின்னாடியே ஜோடியாவே ஆரத்தி வீட்டுக்குள்ள போகட்டும், இனிமேலாவது எல்லாம் நல்ல படியா நடக்கணும் இல்லை அதான்..”  என்று தர்மசங்கடத்துடன் விளக்கம் சொன்னார்.

 

“அதுக்கென்ன பரவாயில்லை நீங்க சொன்னபடியே அன்பு வரட்டும்”, என்று தங்கள் மேல் எந்த வருத்தமும் காண்பிக்காத மச்சான்களிடம் பாலாவும் அனுசரணையாக சொல்லவும், வெளியேவே சேர் போட்டு எல்லோரும் அமர்ந்து கொண்டனர்.

 

நிலாவிற்கு தான் தன் மாமா மீது எக்கச்சக்க எரிச்சல் பொங்கியது, “நானே அவரு இல்லன்னு நிம்மதியா இருக்கேன், அது பொறுக்காதா இவருக்கு,  இந்த ஆர்த்தி சடங்கு எல்லாம் இப்போ  ரொம்ப முக்கியம் பாரு..” என்று மனதுள் பொரிந்து கொண்டிருந்தாள்.

 

“பிரகாஷ் பேமிலி எப்படி இருக்காங்க..?” என்று அண்ணாமலையின் மூத்த மகன் பற்றி கேட்டார் பாலா.

 

“நல்லாயிருக்காங்க, அவங்க இன்னிக்கு இங்க வரத்தான் பார்த்தாங்க, ஆனா லீவ் தான் கிடைக்கல..” என்று சொன்னார் அண்ணாமலை. பிரகாஷ் பேங்களூரில் ஒரு MNC கம்பெனியில் வேலை பார்க்கிறான், அவனின் மனைவி சுதா, ஒரு மகள் இருக்கிறாள்.

 

அவர்கள் பொதுவாக பேசிக்கொண்டிருக்கும் போதே விரைவில் அன்பு வந்துவிட, “இதோ அன்பு வந்துட்டான்..” என்று ஆனந்தன் சொல்லவும், நிலா படக்கென தலையை குனிந்தவள் தான் அதற்கு பிறகு தலையை நிமிர்த்தவே இல்லை.

 

“அவனை பார்த்தால் தானே பிரச்சனை, பார்க்காவிட்டால்..!!!?” என்று இத்தனை நாட்களாக தீவிரமாக யோசித்து மிகுந்த அறிவாளித்தனமாக முடிவெடுத்து இருந்தாள் நிலா, அதையே இப்போது கடைபிடிக்கராளாம்.. {க்கும்..  விளங்கிடும்..}

 

அன்பு உள்ளே வரவும், “எங்க போன அன்பு..? நான்தான் நேத்தே உன்னை வெளியே போகாதான்னு சொன்னேன் இல்லை..” என்று அண்ணாமலை கேட்கவும்,

 

“என்னை பார்த்து பயந்து திரும்பி உங்க மருமக ஓடிட கூடாது இல்லை அதான், வெளியே போனேன்..” என்று அவனுடைய ஸ்பீக்கர் குரலில் கிண்டலாக சொன்னான். அவன் அப்படி சொல்லவும், பாலா, மோகனா சங்கடபட,

 

“அதான் தெரியுதில்லை அப்பறம் ஏன் வந்தாராம்..?”  என்று நினைத்தபடி நிலா  இன்னும்  இன்னும் தலையை குனிந்து நின்று கொண்டாள். அன்புவின் பதிலில் கடுப்படைந்த அண்ணாமலை,

 

“போய் மருமக பக்கத்துல ஜோடியா நில்லு..” என்று  முறைப்புடன் சொல்லவும், அன்பு எதுவும் பேசாமல் நிலாவின் பக்கத்தில் சென்று நின்றான், பக்கத்தில் நின்ற அன்புவின் சட்டை அவளின் சேலையை உரச, பதறி போன நிலா அவசரமாக ஐந்தடி தள்ளி நின்றாள்.

 

அவள் அப்படி செய்யவும், திரும்பி பார்த்த அன்புவின் இதழ் நக்கலாக வளைந்தது. ஆர்த்தி எடுத்து முடிக்கவும், பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டனர், அடுத்து அவர்களை அமரவைத்து பாலும் பழமும் கொடுத்தனர்,

 

அன்புவின் பக்கத்தில் நெளிந்தபடி அமர்ந்திருந்த நிலா, அன்பு பாலையும், பழத்தையும் வாய் வைத்து சாப்பிடுகிறேனா என்று ஓரக்கன்னால் பார்க்க முயன்றாள். எங்கே அவள் பார்வை அவனின் மார்புவரை மட்டுமே சென்றது,

 

அதற்கு மேல் பார்க்க முடியாமல் போக இன்னும் நன்றாக நிமிர்ந்து அமர்ந்து பார்க்க, அப்போதும் அவளின் ஓரக்கண் பார்வை அவனின் மார்பிற்கு மேல் பார்வை செல்லவில்லை.

 

“ச்சு.. போ..” என்று சலித்து கொண்டவள், அன்பு  குடித்துவிட்டு தந்த பாலையும், சாப்பிட்டு தந்த பழத்தையும், மெலிதான நடுக்கத்துடனே வாங்கி வேகமாக உண்டு முடித்தாள்.

 

“மச்சான் சாப்பிட்டிரலாமா..?” என்று அண்ணாமலை பாலாவிடம் கேட்டபடி எல்லோரையும் உணவுண்ணும் இடத்திற்கு அழைத்து செல்ல, முதலில் நிலவிற்கும், அன்புவிற்கும் ஜோடியாக அமரவைக்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டது,

 

முதலில் வைத்த ஒரு கரண்டி கேசரியை அன்பு   ஒரே கையால் அள்ளி போட்டுக்கொள்ள, பக்கத்தில் மிகவும் ஒடுங்கி  அமர்ந்து  சாப்பிட்டுக்கொண்டிருந்த நிலா, கேசரியை சிறிதாக எடுத்து சாப்பிட்டபடி ஓரக்கண்ணால் பார்க்க, நொடியில் அவனின் இலையில் காணாமல் போயிருந்த கேசரியை கண்டு அதிர்ந்துதான் போனாள்,

 

“என்னடா நடந்தது இங்க..? அதுக்குள்ள எப்படி சாப்பிட்டார்..? ஒருவேளை அவருக்கு கேசரியே வைக்கலியோ..?” என்று யோசித்தபடி அவனின் இலையை ஆரய்ச்சியாக பார்க்க, அங்கு கேசரி வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரிந்தது,

 

அதுதான் அப்படி என்றால், அடுத்து பரிமாறப்பட்ட பொங்கல், இட்லி, தோசை, வடை  எல்லாம் மின்னல் வேகத்தில் காலியானது, அவள் ஒரு இட்லியை ஒரு பக்கமாக  கிள்ளி சாப்பிட்டால் என்றால் அவன் மொத்தமாய் அள்ளி சாப்பிட்டான்,

 

இவள் ஒரு இட்லி காலிசெய்வற்குள் அவன் சில பல இட்லிகளை உள்ளே தள்ளியிருந்தான், அவன் சாப்பிடுவதை பார்க்கும் போது, அவளின் மனதில் ஓடிய பாட்டு “கல்யாண சமையல் சாதம் தான்..”,

 

“ஆத்தி என்ன இது..?” என்று  ஒரு கட்டத்தில் தான் சாப்பிடுவதையே நிறுத்தி அவன் கை  வாய்க்கு சென்று வரும் வேகத்தையே பார்த்து கொண்டிருந்தாள், அன்பு சாப்பிட்டு முடித்தவன், கை கழுவ எழுந்து  செல்லும் போது, குனிந்து மனைவியின் காதுக்கருகில்,

 

“நான் சாப்பிட்டதை உத்து உத்து பார்த்துகிட்ட இல்லை, இனிமே அதுக்கேத்த மாதிரி  நீதான் எனக்கு சமைக்கிற”, என்று அதிகாரமாக சொல்லிவிட்டு சென்றான்,