அத்தியாயம் -11(2)

“இங்க வர வச்சி தினம் கஷ்ட படுத்துறேனா அனு?” என கவலையாக கேட்டான் அசோக்.

“நடந்தா வர்றேன், பஸ்லதானே வர்றேன்? காலைல பஸ் ஸ்டாப் வந்து கூப்பிட்டுக்கிறீங்க, ஈவ்னிங் நீங்களே பஸ் ஏத்தி விடுறீங்க? அவ்ளோ கஷ்டமா இல்லை” என சமாதானமாக சொன்னாள் அனன்யா.

ஆனாலும் அசோக்கிற்கு கவலைதான். தினம் மூன்று மணி நேரம் பேருந்து பிரயாணத்திலேயே கழித்தாள். பெண்ணை நினைத்து பாக்யாவும் கவலை அடைந்தார்.

“அனன்யா மேல உனக்கு என்ன கோவம் அசோக்? எதுக்கு அவளை இப்படி அலைய வைக்கிற?” என ஸ்ருதியும் கோவப்பட்டாள்.

“அவளை எப்பவும் விட மாட்டேன்னு அப்பாக்கு எப்படி புரிய வைக்கன்னு தெரியலை ஸ்ருதி, கொஞ்ச நாள் போகட்டும்,வேற என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன்” என சொன்னானே தவிர, என்ன செய்வது என எந்த வழியும் அவனுக்கு பிடி பட மாட்டேன் என்றது.

புகழேந்தி இல்லாத இந்த ஒரு வாரத்தில் ஓரளவு வேலை பயின்றிருந்தாள் அனன்யா. ஓட்டுநர், நடத்துனர் மற்றும் உதவியாளர்களுக்கான பணி விவர பட்டியலை அவள்தான் தயார் செய்ய ஆரம்பித்திருந்தாள்.

வெளியூர் வேலைகள் முடித்து வந்த புகழேந்திக்கு அன்று அனன்யாவை பார்க்க நேரிடுமே என எரிச்சலாக இருந்தது. உடல் சோர்வு என காரணம் சொல்லி வீட்டிலேயே இருந்து கொண்டார்.

அடுத்த நாள் கூட அலுத்துக் கொண்டேதான் அலுவலகம் சென்றார். அனன்யா அவள் பாட்டுக்கும் வேலை செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு அருகிலேயே அசோக் இருந்தாலும் இருவரும் பணிகளில் பட்டுமே கவனமாக இருந்தனர். மற்றவர்களின் கவனத்தை கவரும் விதமாகவோ அல்லது விளையாட்டுத்தனமாகவோ எந்த செயல்களும் அவர்களிடம் இல்லை.

‘அப்பாடா இந்த வகையிலாவது பையன் ஒழுங்கா இருக்கானே’ என நினைத்துக் கொண்டார் புகழேந்தி.

மாலையில் அனன்யாவை தன் மகனே பைக்கில் அழைத்துச் செல்வதை கண்டதும் புசு புசுவென கோவம் வந்ததுதான். அரை மணி நேரம் சென்று மகன் திரும்ப வந்ததும், “இதெல்லாம் நல்லா இல்லடா” என கண்டிப்போடு சொன்னார்.

எதை சொல்கிறார் என்பதை புரிந்து கொண்டவன், “ஏற்கனவே அவளுக்கு நல்ல அலைச்சல், இது கூட செய்யக் கூடாதுன்னா எப்படி ப்பா? காலையில கூட நான்தான் போய் அழைச்சிட்டு வர்றேன்” என்றான்.

“அறிவு இருக்காடா உனக்கு? ஏற்கனவே எவனும் உனக்கு பொண்ணு தர மாட்டேங்குறான், இப்படி தினம் அவ கூட சுத்துவியா நீ” என எரிச்சலாக கேட்டார்.

“எங்கப்பா போய் சுத்தினேன் நான்?” எனக் கேட்டவன் தொழில் சம்பந்தமாக வேறு ஏதோ பேச ஆரம்பித்தான்.

“டேய் பொண்ணு தர மாட்டேங்குறானுங்கன்னு சொன்னதை பத்தி ஏதும் சொல்லாம பேச்சை மாத்தாத” என்றார்.

அப்பாவை அழுத்தமாக பார்த்தவன், “பேச்சை மாத்தலப்பா, அத பத்தி சொல்றதுக்கு எதுவும் இல்லை, சொல்ல வேண்டியதெல்லாம் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லியாச்சு, இனிமே நீங்கதான் சொல்லணும்” என சொல்லி அவரிடமிருந்து சென்று விட்டான்.

தோளுக்கு மீறி வளர்ந்து விட்ட பிள்ளையை மீறி எதுவும் செய்ய முடியவில்லை, என்னை விட்டு போக சொல்லி விடலாமா எனவும் கற்பனையாக கூட நினைக்க முடியவில்லை.

நாட்கள் இப்படித்தான் ஓடிக் கொண்டிருந்தன.

அன்று மாலையில் அனன்யாவை பேருந்து நிறுத்தம் அழைத்து சென்ற அசோக் அங்கு இறக்கி விடாமல் பைக்கை செலுத்திக் கொண்டே இருந்தான்.

“என்னங்க எங்க அழைச்சிட்டு போறீங்க?” என சாதாரண குரலில் கேட்டாள்.

“அப்படியே போக போறோம், எங்க இடம் கிடைக்குதோ அங்கேயே செட்டில் ஆகி குடும்பம் நடத்த ஆரம்பிச்சிடுவோம்” என அவனும் சாதாரண குரலில் சொன்னான்.

“எங்க கூட்டிட்டு போறீங்கன்னு சொல்ல போறீங்களா இல்லயா?” என அதட்டல் போட்டாள்.

“நாம தனியா இருக்க எங்க இடம் கிடைக்குதோ அப்படி எங்கேயாவது போகலாம்” என்றான்.

“அசோக்!”

“என்ன என்கூட வர மாட்டியா? எதுவும் பண்ணிடுவேன்னு பயமா இருக்கா?”

“என்ன பயம்? அப்படி என்ன பண்ணிடுவீங்களாம்?”

ஆளில்லாத சாலையில் வண்டியை மித வேகத்தில் செலுத்திக் கொண்டே பின்னால் திரும்பி அவளை கிண்டலாக பார்த்தவன், “நீயே சொல்லேன், அப்படி தனிமை கிடைச்சா நான் என்ன பண்ண வாய்ப்பிருக்கு?” எனக் கேட்டான்.

“நிஜத்தை சொல்லவா?”

“ம்ம்ம்…”

“அப்படி இப்படி ஏதாவது விளையாடுவீங்க, ஆனா வேற எதுவும் செய்ய மாட்டீங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றாள்.

அசோக்கிடம் நிறைவான புன்னகை.

“எனக்கு உம்மேல ஆசை இல்லை, அதான் அப்படி சும்மா விட்ருவேன் உன்னை, என்ன?” எனக் கேட்டவனின் தோளில் அடித்தாள்.

“எப்பவும் அந்த கேள்விய மட்டும் கேட்ரக் கூடாதுன்னு நல்லா புரிஞ்சுக்கிட்டேன்” என்றவளுக்கு முன்னொரு நாளில் ஸ்ருதியின் வீட்டில் இவனுடன் ஏற்பட்ட நெருக்கத்தை நினைத்து முகம் சிவந்தது.

கண்ணாடி வழியே அவளின் வெட்க முகத்தை கண்டவன் பைக்கை இன்னும் வேகம் குறைத்து ஓட்டினான்.

“என்ன வண்டி ஸ்லோ ஆகுது?”

“நீதான் ஸ்பீட் பிரேக் போட்ட இப்போ” என ரசனையாக சொன்னான்.

மெல்லிய தூறல் விழ ஆரம்பிக்கவும் பைக்கை நிறுத்த போனான். வேண்டாம் என இவள் மறுக்கவும் முகத்தை நனைத்த குளிர் சாரலை அனுபவித்துக் கொண்டே பயணிக்க ஆரம்பித்தனர். பைக்கை பிடித்திருந்த அவளின் கை, தயக்கத்தோடு அவனது இடுப்பை சுற்றிக் கொண்டது.

அவளின் கையில் அழுத்தம் கொடுத்து தன்னை நன்றாக பிடித்துக்கொள்ள வைத்தவன், “இன்னும் கூட நெருங்கி உட்கார்ந்துக்கலாம் அனு” என்றான்.

“போதும் போதும் இந்த நெருக்கம்” என கண்டிப்போடு சொல்லி விட்டாள்.

“ரொம்ப நொந்து போறேன் அனு, எப்படி நாம புருஷன் பொண்டாட்டி ஆகுறது?” என அசோக் கேட்டதில் நிறைய வருத்தம் தெரிந்தது.

“இப்படி லவ் பண்றதை என்ஜாய் பண்ண சான்ஸ் கிடைச்சதா நினைச்சுக்கோங்க” என சமாதானம் சொன்னாள்.

“உனக்கு சொன்னா புரியாது, எனக்கு இதெல்லாம் பத்தாது” என்றான்.

“நான் என்ன பண்ண?”

“ம்ம்ம்… என்ன பண்ணுவ நீ? இப்போதைக்கு ரெண்டு கையாலேயும் என்னை இறுக்கமா பிடிச்சுக்க” என அவன் கேட்க, இன்னொரு கையையும் அவனது இடுப்பில் சுற்றி பிணைத்துக் கொண்டாள்.

மழை கொஞ்சம் கனமாக பெய்ய துவங்க, ஒதுங்க இடம் தேடி பைக்கை கொஞ்சம் வேகப் படுத்தினான்.

“மெதுவா போங்க” என எச்சரிக்கை செய்தாள்.

“ஆளே இல்லாத ரோட் அனு, பக்கத்துல ஒரு பஸ் ஸ்டாப் வரும். மழை விடற வரை அங்க நிக்கலாம்” என சொல்லிக் கொண்டே இவன் பைக்கை விரட்ட, குறுக்கே ஓடி வந்தது ஒரு நாய்.

நல்ல வேளையாக விபத்து எதுவும் நிகழாமல் சமாளித்து விட்டான். அனன்யா பயந்து விட்டதால் பைக்கை ஓரமாக நிறுத்தினான். அவள் ஆசுவாசம் அடையட்டும் என ஏதோ இவன் பேசிக் கொண்டிருக்க, அதற்குள் நல்ல மழையாகி விட்டது.

இருவரும் நன்றாக நனைந்து போனார்கள். நனைந்திருக்கா விட்டால் எங்கேயாவது நின்று விட்டு மழை விட்ட பின்னரே அழைத்து சென்றிருப்பான்.

“முழுசா நனைஞ்சாச்சு, போயிடலாமா அனு? அப்போதான் இருட்டும் முன்ன வீட்டுக்கு போலாம். வரும் போதும் மழைன்னா சமர் வீட்ல தங்கிட்டு காலைல திரும்ப வந்துக்குவேன்” என்றான்.

பைக்கை மெதுவாகத்தான் ஓட்ட வேண்டும் என எச்சரிக்கையாக சொல்லி விட்டே செல்லலாம் என்றாள்.

இவர்கள் திண்டுக்கல் வரும் போது மணி ஏழாகி விட்டது. அனன்யாவின் பெரியப்பா கண்ணப்பன் அவரது மனைவியோடு அவளது வீட்டுக்கு வந்திருந்தார். அவர்களின் பெண்ணுக்கு வரன் ஒன்று அமைவது போலிருந்தது. அது விஷயமாக சொல்ல வந்திருந்தனர்.

அசோக் அனன்யாவை விரும்புவதும் புகழேந்தியின் சம்மதத்திற்காக அவர்கள் காத்திருப்பதும் அவர்களுக்கு தெரியும். மதுரைக்கு வேலைக்கு செல்வதில் கண்ணப்பனுக்கு அத்தனை விருப்பமில்லை, சொல்லவும் செய்தார். பாக்யாதான் செல்லட்டும் அசோக் பார்த்துக் கொள்வான் என கூறியிருந்தார்.

மழையாக இருக்கிறது, எங்கு வருகிறாள் என கேளு என கண்ணப்பன் சொல்லவும், “எப்பவும் இந்த நேரம் ஆகிடும் வீடு வர, இன்னிக்கு மழை பெய்யறதால லேட் ஆகுது போல” என்றார் பாக்யா.

“சரி இருக்கட்டுமே, பொம்பளை புள்ளய கண்ணும் கருத்துமாதான் பார்த்துக்கணும். காலம் அப்படி கெடக்கு” என கண்ணப்பனின் மனைவி சொல்லவும், பாக்யாவும் மகளுக்கு அழைத்தார்.

வீட்டை நெருங்கி விட்டதால் மழையில் கைப்பேசி எடுத்து பேசாமல் விட்டு விட்டாள் அனன்யா.

“பஸ்ல கூட்டமோ என்னமோ, எடுக்கல அவ” என்றார் பாக்யா.

“அதென்ன பொறுப்பில்லாம போன் கூட அட்டெண்ட் பண்ண மாட்டேங்குறா. வசதி இல்லாட்டாலும் பொறுப்பா நல்ல விதமா வளர்த்திருக்கோம் எங்க பொண்ணை. இங்க ஒன்னும் சரியில்லை” என நொடிப்பாக சொன்னார் கண்ணப்பனின் மனைவி.

தன் மகளை இப்படி சொல்லவும் பாக்யாவுக்கு கோவம் வந்து விட்டது.

“கொஞ்சம் துடுக்கா பேசுவாங்கிறதுக்காக இப்படியெல்லாம் பேசாதீங்கக்கா. நாளைக்கு வேற வீட்ல வாழப் போற பொண்ணு அவ” என்றார் பாக்யா. பதிலுக்கு அவரது ஓரகத்தியும் அனன்யாவை தாக்கி பேசினார்.

கண்ணப்பன் அவர்களின் பேச்சை தடுக்க பார்த்தும் அவரால் முடியவில்லை. அந்த நேரம் பார்த்து ஈர உடையோடு அனன்யாவும் அவளை தொடர்ந்து அசோக்கும் உள்ளே வந்தனர்.

எதிர்பாராத நேரத்தில் சந்தித்த நபர்களை போல அனைவரும் ஒரு நொடி திகைத்து பின் மீண்டனர்.

கண்ணப்பனின் மனைவி பாக்யாவை ஏளனமாக பார்த்து நக்கலாக சிரித்தார். கண்ணப்பன் கூட எதுவும் வாயால் சொல்லா விட்டாலும் கண்டனமாக பார்த்தார்.

“பஸ் கூட்டமா இருந்ததால நானே கூட்டிட்டு வந்தேன் அத்தை, வழில மழை அத்தை” என சங்கடமாக சொன்னான் அசோக்.

“யார் எப்படி போனாலும் எங்களுக்கு கவலையில்லை, ஆனா பேசுறவங்க கண்ணப்பனோட தம்பி பொண்ணு இப்படியாமே அப்படியாமேன்னு இவர் பேரை சொல்லித்தான் பேசுவாங்க. எங்க பொண்ணு வாழ்க்கை நல்லா அமையுற வரைக்குமாவது அடக்கி வாசிக்க சொல்லு உன் அருமையான பொண்ணை. நாங்க கிளம்பறோம்” என இடக்காக சொல்லி, கணவரை கையோடு கூட்டி கொண்டு சென்று விட்டார் அனன்யாவின் பெரியம்மா.

என்ன சொல்லி செல்கிறார் இவர் என அசோக் குழப்பமாக நிற்க, மகளின் கன்னத்தில் அடித்து விட்டார் பாக்யா.

“அத்தை!” திடுக்கிட்ட அழைப்போடு ஸ்தம்பித்தான் அசோக்.