அத்தியாயம் -1(2)

அசோக்கிடம் கார் இருந்தாலும் பைக் பிரயாணம் அவனுக்கு பிடிக்கும் என்பதால் அதிகமாக பைக்தான் உபயோகிப்பான். ஸ்ருதிக்காக மிகவும் நிதானமாகவே வண்டியை செலுத்தினான்.

காலனி ஒன்றில் இருந்தது பாக்யாவின் வீடு. அறிமுகம் இல்லாத புதியவன் ஒருவனோடு ஸ்ருதி வந்திருக்கவும் யோசனையாக பார்த்தாலும் வரவேற்கவே செய்தார் பாக்யா.

தனது பாட்டியின் சாயலில் தெரிந்த அத்தையை கண்டதும் அசோக்கிற்கு சொல்லத் தெரியாத உணர்வுகள்.

ஒற்றை படுக்கையறை கொண்ட சிறிய வீடு. ஸ்ருதி கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்த பாக்யா மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார். அவரது பெரிய மகள் அவந்திகா வீட்டில் இருக்க அவளை அழைத்தார்.

ஒடிசலான தேகத்துடன் பயந்த பார்வை பார்த்துக் கொண்டே வந்த அவந்திகா “வாங்க” என மெல்லிய குரலில் அழைத்தாள். மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள் என்பது பார்த்த உடனே புரிந்தது.

ஸ்ருதிதான் நகை மீட்பதற்கும் தன் அம்மா மயக்கம் அடைந்த போதும் உதவியது என்பதற்காக நன்றிகள் சொன்னவள் உடனே சமையலறை சென்று விட்டாள்.

“இவளுக்குத்தான் கல்யாணத்துக்கு பார்த்திட்டு இருக்கேன் மா. செல் கடைல வேலை பார்த்திட்டு இருந்தா, ஒல்லியா இருக்கான்னு வர்ற வரன் எல்லாம் தட்டிப் போகுது, அதான் நல்லா சாப்பிட்டு கொண்டு இருக்கட்டும்னு வீட்ல இருக்க சொல்லிட்டேன்” என்றார் பாக்யா.

மெல்ல அசோக் யார் என்பதை ஸ்ருதி சொல்லவும் பாக்யாவின் கண்கள் கலங்கிப் போய் விட்டன. அண்ணன் மகனை பாசமாக பார்த்தார்.

அசோக்கிற்குத்தான் பேச்சு வரவில்லை, அவரது நிலை அவனை கொஞ்சம் கலங்க வைத்திருந்தது.

கட்டுப்பாடுகள் அதிகம் கொண்ட குடும்பத்தில் பிறந்த பாக்யாவிற்கு கல்லூரியில் ஒன்றாக படித்தவருடன் காதல் ஏற்பட்டது. படிப்பு முடியும் தருவாயில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். துணிந்து தன் காதல் பற்றி சொன்ன பாக்யாவிற்கு அடி உதைதான் பரிசாக கிடைத்தது.

என்ன போராடியும் பாக்யாவின் காதலுக்கு வீட்டில் சம்மதிக்காமல் போக யாருக்கும் தெரியாமல் காதலனோடு சென்று விட்டார். திருமண விவரம் அறிந்து பாக்யாவை மட்டும் அழைத்து செல்ல முயன்றனர்தான், ஆனால் காதல் தம்பதிகள் காவல்நிலையம் சென்று விட்டனர்.

இனி உன் உறவே வேண்டாம் என சொல்லி சென்று விட்டனர் அவரது பிறந்த வீட்டினர். பாக்யாவின் கணவர் தயாநிதி பட்டப் படிப்பை மட்டும் முடித்திருந்தார், கையில் வேலை இல்லை. குடும்பத்தின் வறுமை நிலை தெரியாமல் திருமணம் முடித்துக் கொண்டாயா என அவரது வீட்டிலும் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

நண்பன் உதவியால் பிழைப்பு தேடி நாகர்கோயில் சென்று விட்டனர். இருவரும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் வேலை பார்த்து ஓரளவு நன்றாகவே குடும்பத்தை ஓட்டி வந்தனர்.

வீட்டு வாடகை, இரு பெண் குழந்தைகளின் படிப்பு என வருகிற வருமானம் சரியாக இருந்தது. அவந்திகா பிறந்த சமயத்தில் பாக்யாவின் அப்பாவுக்கு செய்தி சொன்னார்தான் தயாநிதி.

“என்னடா மெல்ல வந்து ஒட்டிக்கலாம்னு பார்க்குறியா?” என கோவமாக கேட்ட பாக்யாவின் அப்பா, இன்னும் கூட தகாத முறையில் பேசி விட்டார். அதன் பின் எந்த வகையிலும் பாக்யாவின் வீட்டினரை தொடர்பு கொள்ள முயலவே இல்லை அவர்கள்.

தயாநிதி வீட்டினர் மட்டும் ஒரு முறை வந்து பார்த்து சென்றனர். ஆனாலும் ஒட்டாத நிலைதான். இவர்களும் அதிகம் உரிமை கொண்டாட நினைக்காமல் ஏதோ இதுவரையில் பேச மட்டுமாவது செய்கிறார்களே என்ற திருப்தியோடு தள்ளியே இருந்து விட்டனர்.

அவர்களின் பத்து வருட திருமண வாழ்க்கை ஒரு நாள் முடிவுக்கும் வந்து விட்டது.

 கருந்தேள் கடித்து விஷமேறி சிகிச்சை பலன் தராமல் அகால மரணமடைந்து விட்டார் தயாநிதி.

“இப்படி தேள் வந்து என் வாழ்க்கைய பறிச்சிட்டு போகும்னு கனவுல கூட நினைக்கல நான்” குரல் கமற சொன்ன அத்தையின் கையை பிடித்துக்கொண்டான் அசோக்.

ஸ்ருதி தன்னை நிலைப் படுத்திக் கொள்வதற்காக எழுந்து வெளியே சென்றாள்.

தேநீர் கொண்டு வந்து கொடுத்த அவந்திகா, ஸ்ருதியிடம் வந்து அவளுக்கும் வழங்கினாள். அவள் எங்கு படித்தாள், என்ன பிடிக்கும் என சாதாரணமாக அவளுடன் பேசிக் கொண்டே தேநீர் பருகினாள் ஸ்ருதி.

பல வருட காலத்திற்கு பின் தன் இரத்த சொந்தத்தில் ஒருவனை கண்டதும் உணர்ச்சி வசப் பட்டிருந்த பாக்யாவும் இப்போது நிதானத்திற்கு வந்திருந்தார். அவர் திருமணம் செய்த போது நிரஞ்சனா பத்து மாதக் குழந்தை. அசோக்கும் விவரம் இல்லாத சின்ன பையன்.

தன் அண்ணன் குடும்பம் பற்றி விசாரித்தார் பாக்யா. அவனும் சொல்லிக் கொண்டிருந்தான்.

“நான் வந்தப்போ ஸ்ருதி பொறக்கவே இல்லை, அப்படி பொறந்திருந்தா கூட இவ்ளோ வருஷம் கழிச்சு அடையாளம் தெரிஞ்சிருக்கவா போகுது? நீ வந்ததுல ரொம்ப சந்தோசம் அசோக்” என மனதிலிருந்து சொன்னார் பாக்யா.

“மாமா இறந்தப்பவே அங்க வந்திருக்கலாமே அத்தை?” எனக் கேட்டான் அசோக்.

“என் அண்ணனை பத்தி எனக்கு தெரியும் அசோக்” என மட்டும் சொல்லி புன்னகை செய்தார்.

அத்தை வந்திருந்தாலும் தன் தந்தை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார் என்பது அசோக்கிற்கும் புரியத்தான் செய்தது.

“அவர் போனதும் அங்க தனியா இருக்க பயமா இருந்தது. பணம் கொடுத்து உதவ யாரும் வேணும்னு நினைக்கல நான், ஆனா ரெண்டு பொம்பளை புள்ளைங்களோட அங்க எப்படி இருப்பேன், அதான் இந்த ஊருக்கு வந்திட்டேன். அவந்திகாவோட பெரியப்பா நல்ல மனுஷன்தான், அவருக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு, பாவம் அதை பார்க்கவே சிரம படுறார். அவந்திகாவுக்கு ஒரு அத்தையும் இருக்காங்க, அவங்களும் ஓஹோன்னு ஒன்னும் வாழல. ஆனாலும் ஏதாவது ஒன்னுன்னா வந்து போக இருக்காங்க. அது போதும் எனக்கு” என நிதானமாக பேசினார் பாக்யா.

வீட்டின் வெளியில் சல சலப்பு சத்தம் கேட்கவும் எட்டிப் பார்த்தான் அசோக். ஸ்ருதி, அவந்திகா ஆகியோருடன் மூன்றாவதாக யாரோ ஒரு பெண் நின்றிருந்தாள். அவளது முதுகுப் பக்கம்தான் இவனுக்கு தெரிந்தது. அவள்தான் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

“அவதான் என் ரெண்டாவது பொண்ணு அனன்யா. பெரியவளுக்கு நேர்மாறு, அதிகப் பிரசங்கி, லீவ் அன்னிக்கு கூட காலேஜ் போவேன்னு மல்லுகட்டி போனா. ஏதோ போராட்டமாம், கண்டிச்சு வளக்க அப்பா இல்லைனு ஓவர் ஆட்டம்” என புலம்பலாக பாக்யா சொல்லிக் கொண்டிருக்க, திரும்பிய அனன்யாவின் முகத்தை பார்த்தவனுக்கு ஜெர்க் ஆனது.

கல்லூரி வாசலில் அவன் பார்த்த பெண்தான் இவள்.

உள்ளே வந்தவள் அசோக்கை எடை போடுவது போல பார்த்தாள். ஸ்ருதி யாரென அவந்திகா மூலமும் உள்ளே இருப்பவன் யாரென அவர்கள் இருவரின் மூலமாகவும் தெரிந்துதான் இருந்தாள்.

ஸ்ருதிக்கு நன்றிகள் சொல்லி நட்போடு பேச முடிந்தவளால் மாமா மகனிடம் எளிதாக பேச முடியவில்லை. வெட்கம், தயக்கம் எல்லாம் கிடையாது. அம்மாவின் பிறந்த வீட்டினர் மீதுள்ள கோவம் அப்படியே இவன் மீதும் படிந்த காரணத்தால் இவனது வரவை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

பூசினார் போன்ற உடல் வாகுடன் உருண்டை முகமும் வெளுத்த நிறமும் மேற்தட்டு மக்களின் பாவனையோடு இருந்தவனை சொந்தமாக பார்க்க முடியாமல் அந்நியனாகத்தான் உணர்ந்தாள். அவளது புரிதலில் அவனோடு ‘கனெக்ட்’ செய்து கொள்ள முடியவில்லை.

“என்னடி அப்படியே நிக்குற, உன் மாமா பையன் டி, வாங்கன்னு சொல்லு” என பல்லை கடித்துக் கொண்டே மகளிடம் சொன்னார் பாக்யா.

அம்மாவை சின்னதாக முறைத்தவள் அந்த முறைப்பு மாறாமலேயே அவனை பார்த்து “வாங்க” என்றாள்.

தலையாட்டிக் கொண்டவன், ஏதோ பேச வேண்டுமே என நினைத்து “என்ன படிக்கிறீங்க?” என விசாரித்தான்.

“ஏன் அம்மா சொல்லலையா?” எனக் கேட்டவளை கண்டனமாக பார்த்த பாக்யா, “கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறா ப்பா, லாஸ்ட் வருஷம்” என்றார்.

அடுத்து என்ன பேச என தெரியாமல் அமைதியாகி விட்டான் அசோக். ஸ்ருதி உள்ளே வரவும் அவளை பார்த்து மலர்ந்து சிரித்த அனன்யா, “உட்காருங்க க்கா” என சொல்லி நாற்காலியை இழுத்து போட்டாள்.

தன் மீதுதான் கோவம் போல, ஆனால் ஏன் என மனதிற்குள் எண்ணிக் கொண்டான் அசோக்.

அசோக்கிற்கு அவனது அலுவலகத்திலிருந்து ஏதோ அழைப்பு வரவும் எழுந்து வெளியில் சென்று விட்டான். பேசி விட்டு உள்ளே வந்தவன் இப்போது கிளம்பினால்தான் ஸ்ருதியை வீட்டில் விட்டு அவனும் மதுரை செல்ல சரியாக இருக்கும் என சொன்னான்.

ஸ்ருதி எழுந்து கொள்ள, அடிக்கடி வரும் படி சொன்னார் பாக்யா. தலையாட்டிக் கொண்டவனுக்கு அத்தைக்கு உதவதான் எண்ணம். அத்தை கவுரவம் பார்ப்பவர் என்பதை இந்த முதல் சந்திப்பிலேயே அறிந்திருந்தவன் இப்போது எதுவும் கேட்க வேண்டாம், பின் தனியாக இருக்கும் போது பேசலாம் என நினைத்து வேறு பேசவில்லை.

பாக்யாவும் அவரது மகள்களும் வீட்டிற்கு வெளியில் வந்து அவர்களை வழியனுப்பி வைத்தனர். அனன்யா இவனை கண்டு கொள்ளாமல் இருக்க “வர்றேங்க” என அவந்திகாவிடம் சொல்லிக் கொண்டவன் அவளிடமும் சொல்லிக் கொண்டான்.

தலையாட்டிக் கொண்டவள் முறைப்பது போலவே இருந்தது. என்னவோ ‘அவளிடம் அதிகம் வைத்துக்கொள்ளாதே!’ என அவனது உள்ளுணர்வு சொல்ல பைக்கை எடுத்து விட்டான்.

“உன்னை வேணாம்னு சொன்னவங்க வீட்லேருந்து வர்றவங்களை ஏன் சேர்க்கிற?” என அம்மாவிடம் கோவமாக கேட்டாள் அனன்யா.

“எனக்கு மாமியார் இல்லாத குறைக்கு வந்து வாச்சிருக்க, உள்ள வா” என அலுப்பாக சொல்லிக் கொண்டே பெரிய மகளோடு வீட்டுக்குள் சென்றார் பாக்யா.

“எதுவும் காரணம் இல்லாம தேடி வந்திருக்க மாட்டான் உன் அண்ணன் பையன், எதுக்கும் ஜாக்கிரதையா இரு” என எச்சரிக்கை சொல்லிக் கொண்டே அனன்யாவும் உள்ளே சென்றாள்.