அத்தியாயம் -9(2)

பதில் எதுவும் சொல்லாமல் இருந்த அம்மாவிடம், “அப்பாவை நினைச்சு சைலன்ட் ஆகிட்டியா ம்மா?” எனக் கேட்டான்.

“அவரை எப்படி நீ சமாளிப்பேன்னு யோசனையா இருக்கு” என விஜயா சொல்ல, அம்மாவை தோளோடு அணைத்துக் கொண்டவன், “நீ சம்மதிச்சதுக்கு தேங்க்ஸ் மா” என்றான்.

ஸ்ருதி மூலமாக செல்வராஜ் வீட்டிலும் அனைவருக்கும் தெரிந்து போனது. ‘செய்யலாமே’ எனதான் அவருக்கு தோன்றியது.

லதாதான் தன் மகளிடம், “அதிகம் தலையிட்டு புகழேந்தி அண்ணனோட கோவத்துக்கு ஆளாகாதே, அப்பா மகன் கோவித்துக் கொண்டாலும் பின்னால் சேர்ந்து கொள்வார்கள், நீ நிரந்தர எதிரி ஆகி விடாதே” என எச்சரிக்கை செய்தார்.

இப்போதும் தன்னிடம் முன்னரே சொல்லவில்லை என நண்பனிடம் கோவம் கொண்டு பின் மெதுவாகத்தான் சமாதானம் ஆனான் விதுரன்.

அண்ணனுக்கு ஒரு பெண்ணிடம் விருப்பம் வந்திருக்கிறது என நினைத்து மகிழ்வதா, அப்பா சம்மதிக்க மாட்டாரே என எண்ணி வருந்துவதா என குழம்பினாள் நிரஞ்சனா.

யாரிடம் மனம் திறந்து பேசுவார் பாக்யா? ஆகவே பெரிய பெண்ணிடம் சொல்லி விட்டார். அவந்திகாவுக்கு அவளது அம்மாவை போல கவலைகள் எல்லாம் கிடையாது, அவளுக்கு மகிழ்ச்சிதான். இந்த திருமணம் நடக்க நம்மால் முடிந்ததை செய்யலாம் என சொல்லி விட்டான் மணிகண்டன்.

இப்படியாக புகழேந்தி ஒருவரை தவிர அனைவருக்கும் அசோக், அனன்யா காதல் தெரிந்து விட்டது.

‘அசோக்கிடம் வேண்டாம் என சொல்லி விடு’ என மகளிடம் சொல்லிப் பார்த்தார் பாக்யா.

“உனக்கு தெரியாதும்மா, நான் மாட்டேன் முடியாதுன்னு சொன்னா அவர் காயப்பட்டு போவார். அவரை போலவே எனக்கும் தாங்க முடியாத வருத்தமாகி போகும். எங்களை புரிஞ்சுக்க முயற்சி பண்ணும்மா, இப்படி சொல்லாதம்மா” குரல் உயர்த்தி பேசா விட்டாலும் தான் உறுதியாக இருக்கிறேன் என அழுத்தமாக சொல்லி விட்டாள் அனன்யா.

மகளின் ஆசைக்கு குறுக்கே நிற்க விருப்பமில்லை என்ற போதும் எப்படி நடக்கும் இது என உழன்று கொண்டிருந்தார் பாக்யா. மகளிடம் சரியாக பேசுவதில்லை. ஏட்டிக்கு போட்டி என நிற்கும் தன் குணத்தை விட்டு அம்மா புரிந்து சம்மதம் சொல்ல வேண்டும் என அமைதி காத்தாள் அனன்யா.

அசோக்கின் அழைப்புக்கு பின்னர் பேசுகிறேன் என செய்திதான் அனுப்பி வைத்தாள். என்னவோ அவனிடம் பேசும் மன நிலையே இல்லை. காதல் இத்தனை குறுகிய காலத்திற்குள் இப்படி பாடாய் படுத்தும் என அறிந்திருக்கவில்லை. இயல்பை தொலைத்து காணப் பட்டாள்.

ஞாயிறு அன்று விடுமுறை. பிறந்த வீடு வந்திருந்தாள் அவந்திகா. மனைவியை விட்டு விட்டு காலை சாப்பாடு மட்டும் முடித்துக் கொண்ட மணிகண்டன் ‘அழைக்க இரவில் வருகிறேன்’ என சொல்லி கிளம்பி விட்டான்.

மகள் மற்றும் மருமகனிடம் காணப் பட்ட அன்னியோன்யமும் மகளின் முகத்தில் காணப் பட்ட மலர்ச்சியும் பாக்யாவின் மனதில் இதம் சேர்த்தது.

அவந்திகாவின் வரவு கடந்த சில தினங்களாக அந்த வீட்டில் நிலவி வந்த இறுக்கத்தை சற்றே தளரச் செய்தது. மதிய உணவுக்கு பின் அம்மாவின் இரு பக்கமும் இரு பெண்கள் படுத்திருந்தனர். டிவியில் மெல்லிய சத்தத்தில் பாடல் ஏதோ ஓடிக் கொண்டிருந்தது.

தன் புகுந்த வீடு பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள் அவந்திகா.

“எனக்கு எந்த கஷ்டமும் தராம பதுவிசா இருந்த நீ, உன் அப்பாவும் தெய்வமா இருந்து உனக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுத்திட்டார்” என்ற பாக்யா உடனே குரலின் தொனியை மாற்றிக் கொண்டு, “நல்லதுக்கு சொல்றோம்னு தெரியாம ஆட்டம் போட்டா படாத பாடு படணும்னு தெரிய மாட்டேங்குது உன் தங்கச்சிக்கு” என்றார்.

வேகமாக எழுந்த அனன்யா பின் பக்கம் போய் அமர்ந்து கொண்டாள்.

அவந்திகா தன் அம்மாவை கடிந்து கொள்ள, “நீயும் அவளுக்கு சப்போர்ட் பண்றியா? அன்னிக்கு என் அண்ணன் பேசினதை சொன்னேன்தானே? என்னை விட அவதான் கோவப்பட்டு பேசிட்டு வந்தா. இப்பவும் என் அண்ணன் உறவு இருந்தா நல்லா இருக்கும்ங்கிற எண்ணம் இல்லாம இல்லை, ஆனா இப்படி இவ அந்த வீட்டுக்கு மருமகளா போயி உறவை வளர்க்கிறதுல எனக்கு விருப்பமில்லை” என்றார்.

“லவ் மேரேஜ் பண்ணிக்கிட்ட உனக்குதானேம்மா என்னை விட அதிகமா அவளை புரிஞ்சுக்க முடியும்? அசோக்கை விரும்பிட்டு வேற ஒருத்தரை கட்டிகிட்டு எப்படி நல்லா வாழ்வா அவ?” என பெரிய மகள் கேள்வி கேட்கவும் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்.

“புகுந்த வீட்ல போய் ஏச்சையும் பேச்சையும் வாங்கிக்கிட்டு கஷ்ட பட இவ ஒன்னும் வாயில்லாத பூச்சி இல்லை. அசோக் மாதிரி நல்ல பையன் அவளுக்கு அமைஞ்சதுக்கு சந்தோஷ படும்மா” அம்மாவின் மோவாய் பிடித்துக்கொண்டு தன்மையாக சொன்னவள் இன்னும் கூட அவரது மனம் மாறி விட வேண்டும் என பேசினாள்.

பாக்யா பதிலேதும் சொல்லவில்லை. ஆனால் சின்ன மகளை அதிகம் வருத்துகிறோமோ என கவலையாக வந்தது. தன் மனம் குழம்பி போயிருக்கிறது, சில நாட்கள் ஆறப் போட்டு யோசிப்போம் என நினைத்துக் கொண்டார்.

அசோக் அனன்யாவுக்கு ‘ஹாய்’ என போட்டு செய்தி அனுப்பினான். இத்தனை நாட்கள் பேசாமல் தவிர்த்து வந்தவளுக்கு இப்போது அவனிடம் பேச வேண்டும் போலிருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தாள். அம்மாவும் அக்காவும் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, அசோக்கிற்கு அழைத்து விட்டாள்.

“மதுரைல மழை ஊத்துது, என்னன்னு பார்த்தா திண்டுக்கல்ல மேகம் கறுத்திருக்கு” என கிண்டலாக பேச்சை ஆரம்பித்தான் அசோக்.

“வந்து பாருங்க, கண்ணீர் கடல்ல தத்தளிக்குது உங்க அத்தை வீடு” என்றாள்.

“என்ன அனு?”

“ப்ச், உங்கத்தை என்னை திட்டுறாங்க. அது கூட பரவாயில்லை, நிறைய கவலை படுறாங்க, எனக்கு அவங்கள சமாளிக்க தெரியலை” என்றாள்.

என்ன நடந்தது என்பதை தெளிவாக கேட்டுக் கொண்டான்.

“இவ்ளோதானே, அத்தையை நான் சரி பண்றேன்” என தீர்மானமாக சொன்னான்.

“எப்படி?”

“எப்படியோ, உனக்கு வேலை பத்தி சொல்லியிருந்தீல?”

“இல்லைங்க, மதுரைல வேணாம். இங்கேயே பார்த்துக்கிறேன்”

“அடடா சொல்லி முடிக்கும் முன்னாடி ஏன் அவசர படுற? நீ எங்கேயும் வேலைக்கு போக வேணாம். கல்யாணம் வரை ரெஸ்ட் எடு, அப்புறம் என் கூட டிராவல்ஸ் ஆஃபீஸ் வந்திடு, எனக்கு ஹெல்ப் பண்ணு” என்றான்.

“போங்க நீங்க, கல்யாணமே எப்படி நடக்கும்னு தெரியலை, நீங்க எங்கேயோ போயிட்டீங்க” என சலித்தாள்.

“ஏன் உனக்கு இவ்ளோ சந்தேகம் அனு?” எனக் கேட்டவன் அழைப்பை துண்டித்து விட்டு காணொளி அழைப்பில் வந்தான். அவனது அறையில்தான் இருந்தான்.

கலைந்திருந்த தலை முடியை ஒற்றைக் கையால் ஒதுக்கி விட்டுக் கொண்டே, “ஹேய் அனு, இதான் நம்ம ரூம் நல்லாருக்கா?” எனக் கேட்டான்.

அவள் எதுவும் சொல்லாமல் ஆயாசமாக பார்க்க, கப்போர்ட் திறந்து காட்டியவன், “தேவையில்லாத ட்ரெஸ் எல்லாம் ரிமூவ் பண்ணிட்டேன். உன் ட்ரெஸ் வைக்க இடம் வேணுமில்ல?” என்றான்.

அவள் முறைக்க முயன்று முடியாமல், எழுந்த சிரிப்பையும் அடக்க, அறையின் மூலையில் இருந்த ட்ரெட் மில் இயந்திரத்தை காட்டினான்.

“யூஸ் பண்ணாம கிடந்ததை தூசு தட்டி ஒரு வாரமா யூஸ் பண்ணிட்டு இருக்கேன். உன் பக்கத்துல நான் நிக்கும் போது பொருத்தமா இருக்கணும்ல?” எனக் கேட்டான்.

“உங்களுக்கென்ன நல்லா இருக்கீங்க? ஸ்ட்ரைன் பண்ணி எதுவும் செய்யாதீங்க” என்றாள்.

“ஆமாம் அனு, இதெல்லாம் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. நீ நல்லா சாப்பிட்டு கொஞ்சம் பப்ளி ஆகேன்” என்றான்.

“நாம நல்லா பொருத்தமாதான் இருக்கோம் ப்பா” என்றாள்.

“அப்போ திரும்ப மெஷினை தூசு படிய விட்ரலாம் சொல்றியா?” எனக் கேட்டுக் கொண்டே ஒரு துணியை எடுத்துப் போட்டு இயந்திரத்தை மூடினான்.

அவள் சிரிக்க, நடந்து கொண்டே பால்கனி சென்றவன் தரையில் அமர்ந்து கைப்பேசியை சுவற்றில் சாய்த்து வைத்து அவளை நன்றாக பார்த்தான்.

சிரிப்பை நிறுத்தியவள், “என்ன?” என்றாள்.

“என்ன என்ன?”

“இப்படி பார்க்குறீங்களேன்னு கேட்டேன்?”

“எப்படியும் பார்ப்பேன், என்னை யார் கேட்பா?”

“ஓவரா போறீங்க, கல்யாணம் ஆனாதான் அந்த உரிமை எல்லாம்” உள்ளே யாருக்கும் காதில் விழுந்து விடக்கூடாது என ரகசியக் குரலில் சொன்னாள்.

“நிச்சயம் ஆனா பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரிதான்” தன் விரலில் இருந்த மோதிரத்தை காட்டி கூறினான்.

“ஊரை கூட்டி நடந்தாதான் நிச்சயம்” என சிலிர்த்துக் கொண்டாள்.

“பார்டா, ஹ்ம்ம்… ஒரு வாரமா வாய மூடிக் கிடந்தவ திடீர்னு வக்கீல் ஆகாத. எங்க என் கண்ணை பார்த்து சொல்லு நமக்குள்ள நடந்தது நிச்சயம் இல்லைனு” என அவன் கேட்க, இல்லை என சொல்ல முடியாமல் சிறு சிரிப்பை அதரங்களில் தேக்கி பார்த்திருந்தாள்.

“ம்ம்ம்… அது!” என தோரணையாக சொன்னவன், மீண்டும் அவளை பார்த்தான்.

“போதும்ங்க!” என வெட்கம் இழைந்தோட சொன்னாள்.

“எப்ப வருவ இங்க?” என நேசம் நிறைந்த குரலில் மென்மையாக கேட்டான்.

தலையை ஆட்டி என்ன என அவள் கேட்க, “இங்க என் ரூம்ல என் பக்கத்துல எப்ப வருவ அனு?” என மென்மை மாறாமல் கேட்டான்.

“நீங்க சொல்லுங்க, எப்ப உங்கப்பாவோட பொண்ணு கேட்டு வருவீங்க இங்க?” என பதில் கேள்வி கேட்டாள்.

அவன் புன்னகையை பதிலாக தர, “இதென்ன மழுப்பலா ஒரு சிரிப்பு. வாய தொறந்து சொல்லுங்க” என்றாள்.

“நீ ஆசை பட்ட மாதிரி வரதான் ட்ரை பண்றேன்”

“ஒரு வேளை முடியலைன்னா?” என்றவளின் முகம் சோர்ந்தது.

இப்போதும் புன்னகைதான் அவனது பதில். ஆனால் அதில் ஏதோ தீவிரம் மறைந்திருந்தது.

“என்ன நினைக்குறீங்க?” எனக் கேட்டவளுக்கு ஒன்றுமில்லை என்பதாக தோள்கள் குலுக்கினான்.

“அசோக்!” கண்டிப்போடு அழைத்தாள்.

தொலைவில் உள்ளதை தேடிப் பார்ப்பது போல கண்களுக்கு மேலே கையை வைத்து பார்த்தவன், “நீ இங்க என்கிட்ட வரப் போற நாள் ரொம்ப தூரத்துல இல்லை, பக்கத்துலதான் இருக்கு” என்றான்.

அதிரடியான அனன்யா திகைப்பும் குழப்பமுமாக அவனை பார்க்க, அமைதியான சுபாவம் உள்ள அசோக் “சண்டை போட்டாவது உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்” என விளையாட்டு போல என்றாலும் உறுதியாக சொன்னான்.