என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -9
அத்தியாயம் -9(1)
அனன்யா தேநீர் போட்டு முடித்திருக்க பாக்யாவும் எழுந்து கொண்டார். எங்கே அம்மா தான் விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி ஏதேனும் கேட்டு வைப்பாரோ என அவளுக்கு ஒரே பதட்டம். கேட்டால் என்ன சொல்ல என எந்த யோசனையும் வர மாட்டேன் என்றது.
மகள் தேநீர் குவளையை கொடுக்கும் போதே மோதிரத்தை கவனத்து விட்டு, “அழகா இருக்கே, எங்கடி வாங்குன?” எனக் கேட்டார் பாக்யா.
அனன்யாவை பார்த்து விட்டு ‘மாட்டிக் கொண்டாளே!’ என விழித்தான் அசோக்.
தோழி கொடுத்தது என சொல்லி விடலாம் என்ற எண்ணம் அவளுக்கு உதித்ததுதான். இருப்பினும் இத்தனை பெரிய விஷயத்தை அம்மாவிடம் மறைத்து, பொய் கூற மனமில்லாமல் அமைதியாக அசோக்கிற்கும் தேநீர் வழங்கி விட்டு சமையலறை சென்று விட்டாள்.
“ஏன் அசோக், என் ஸ்கூலுக்கே வேலைக்கு போக சொல்லி இவளை ஹார்ஷா பேசிட்டியா என்ன? வாயே தொறக்காம முறுக்கிட்டு போறா?” என மருமகனிடம் கேட்டார் பாக்யா.
அனன்யாவை போலவே அவனுக்கும் அத்தையிடம் பொய் சொல்ல மனம் வரவில்லை, உண்மை சொல்லவும் தயக்கமாக இருந்தது. ஆகவே சிரித்து மழுப்பினான்.
“என்னதான் சொன்னா வேலைக்கு வர்றது பத்தி?” எனக் கேட்டார்.
“ம்மா! அங்க வேணாம்னா விடேன். நான் எதிர்பார்க்கிற சேலரி அங்க கிடைக்காது, வேற வேலை தேடிக்குவேன்னு அவர்கிட்ட சொல்லிட்டேன்” என உள்ளே இருந்து குரல் கொடுத்தாள் அனன்யா.
“ஆமாம் அத்தை, அங்க வேணாம். மதுரைல வேலைக்கு ஏற்பாடு பண்ணட்டா? அங்கன்னா அவ எக்ஸ்பெக்ட் பண்ற சேலரி கிடைக்கும்” என மனதில் எதையோ யோசித்துக் கொண்டே கேட்டான்.
தினமும் மதுரைக்கு சென்று வர முடியுமா என பாக்யா யோசனையாக, நீங்களும் அங்கேயே வந்து விடலாமே என தீர்வு சொன்னான். தங்களின் திருமணத்திற்கு பின் அத்தை தனியாக இருக்க வேண்டாம் என நினைத்து கேட்டு பார்த்தான்.
அன்னயாவுக்கும் அவனது யோசனை புரிய, அம்மாவின் பதிலுக்காக காத்திருந்தாள். பல வருடங்களாக வேலை பார்த்து வரும் பள்ளி, அவருக்கு மாறிக் கொள்ள விருப்பமில்லை. ஆகவே சரி வராது என சொல்லி விட்டார். மகளின் வேலை சம்பந்தமாக அவள் என்ன முடிவெடுத்தாலும் சரிதான் என சொல்லி விட்டார்.
அனன்யாவுக்கு ஏற்றது போல என்ன வேலை என மனதுள் முடிவு செய்து விட்டாலும் இப்போதைக்கு ‘பார்த்து சொல்கிறேன்’ என மட்டும் சொன்னான். கவனமாக தன் கை விரல் மோதிரத்தை அத்தையின் கவனித்தில் பதியாமல் பார்த்துக் கொண்டான்.
அசோக் கிளம்பவும்தான் அனன்யாவிற்கு ஸ்ருதியின் ஆபரணம் பற்றிய நினைவு வந்தது. அவன் வண்டியில் ஏறிய பிறகு வேகமாக வெளியில் ஓடி வந்தவளை கண்டு விட்டு வண்டியை எடுக்காமல் காத்திருந்தான்.
“அக்காவோட மாலை எங்க?” என மூச்சிரைக்க கேட்டாள்.
“வரும் போதே அவகிட்ட கொடுத்திட்டுதான் வந்தேன்” என்றவனை முறைத்தாள்
“இனிமே உங்கிட்ட கேட்க மாட்டா” என சிறு சிரிப்புடன் கண்கள் சிமிட்டி சொல்லி புறப்பட்டு விட்டான்.
அடுத்த நாள் பகல் வேளையில் அசோக்கிற்கு அழைத்தாள் அனன்யா. அம்மாவிடம் இதை சொல்லாமல் இருப்பது குற்ற உணர்வை தருவதாக சொன்னவள் ‘சொல்லி விடவா?’ எனக் கேட்டாள்.
“ஏன் அவசர படுற அனு, நானே அத்தைகிட்ட சொல்றேன்” என சொல்லி அவளை அப்போதைக்கு சொல்ல விடாமல் செய்திருந்தான். அவள் சொல்வதை காட்டிலும் அவனாக தெரியப்படுத்தினால் அத்தை ஏற்றுக்கொண்டு விடுவார் என்ற எண்ணம் அவனுக்கு.
ஆனால் அம்மாவிடம் சொல்லாமல் இருப்பது அனன்யாவின் நெஞ்சை அறுப்பது போலிருந்தது. ஸ்ருதியை பார்க்க செல்லவும் அவளுக்கு ஏதோ தயக்கம். சுமூகமாகி விட்டோம் என ஏற்கனவே அசோக் ஸ்ருதியிடம் சொல்லியிருக்க, அனன்யாவின் மன நிலை புரிந்தவளாக ஸ்ருதியும் அவளை அழைக்கவில்லை.
நான்கு நாட்கள் கடந்த நிலையில் காலை உணவின் போது மகளின் கை விரல் மோதிரம் பற்றி விசாரித்தார் பாக்யா. மகள் என்ன சொல்லியிருந்தாலும் நம்பியிருப்பார், ஆனால் அவளின் அமைதி கலவர படுத்தியது.
“ஸ்கூல் போயிட்டு வாம்மா, ஈவ்னிங் சொல்றேன்” என்றாள் அனன்யா.
சாப்பாட்டுத் தட்டை தள்ளி வைத்தவர், ஒரு வித பயத்தோடு மகளை பார்த்தார். அவளால் அம்மாவை அப்படி காண முடியவில்லை. அருகில் அமர்ந்து கொண்டவள் அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு, “அசோக் போட்டு விட்டார் மா” என்றாள்.
அவ்வளவுதான், நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து விட்டார் பாக்யா. பள்ளி செல்ல நேரமானாலும் அவருக்கு எழக் கூட தோன்றவில்லை. அண்ணன் ஒத்துக் கொள்ளவே மாட்டார் என்பதை விட, மகளை வைத்து அவரது மகனை வளைத்து விட்டேன் என்றல்லவா பேசுவார்?
தன் மகளுக்கு அசோக்குடன் நல்ல படியாக திருமணம் நடந்தேறும் என்ற நம்பிக்கை அவரிடம் இல்லை. விஷயம் வெளியில் தெரிந்து இவளுக்கு திருமணம் நடப்பதிலேயே சிக்கல் ஏற்படுமோ என்றெல்லாம் பயமாக வந்தது.
கண்களை இருள் சூழ அப்படியே படுத்து விட்டார். பயந்து போன அனன்யா அம்மாவை எழுப்பி பார்த்தாள். அவருக்கும் மகளின் குரல் எங்கிருந்தோ கேட்பது போலிருந்தது. ம் என்றவர் ஏதேதோ அனத்தினார், அரை மயக்க நிலை. ஸ்ருதிக்கு அழைத்து விட்டாள் அனன்யா.
பணிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த சமரன் உடனே வந்து விட்டான். மருத்துவமனைக்கு அழைத்து சென்றான். இரத்த அழுத்தம் கூட அந்த அளவு உயர்ந்தோ குறைந்தோ விடவில்லை. மன அதிர்ச்சி என காரணம் கூறி ஒரு மணி நேரம் கணகாணிப்பில் வைத்திருந்து கிளம்ப சொல்லி விட்டனர்.
மருத்துவமனையில் வைத்தே அம்மாவுக்கு ஏன் மயக்கம் வந்தது என காரணத்தை சமரனிடம் கூறியிருந்தாள் அனன்யா.
“இதுக்கு ஏன் மயக்கம் போடுறாங்க, அசோக்கை அவங்களுக்கு பிடிக்கும்தானே?” எனக் கேட்டான் சமரன்.
அம்மா பயப்படுகிறார் என்பது அன்னயாவுக்கு தெரியும். விளக்கமாக அவனிடம் சொல்லும் மனநிலையில் இல்லை அவள். தன்னால் அம்மாவுக்கு இப்படி ஆனது என்ற குற்ற உணர்வும், அவரின் பயத்தில் இருந்த உண்மையும் நியாயமும், அதை விட அம்மாவுக்கு வேறு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயமும் சேர்ந்து அவளை அச்சுறுத்தின.
அவர்களை வீட்டில் விட்டு கிளம்பிய சமரன் தன் மனைவிக்கு அழைத்து பயப்பட ஒன்றுமில்லை என மட்டும் சொன்னான். மாலையில் சென்று பார்க்கலாம் என நினைத்திருந்தாள் ஸ்ருதி.
அசோக்கிடமும் சமரன் சொல்லி விட அவன் உடனே அனன்யாவுக்கு அழைத்தான். பின்னர் பேசுவதாக செய்தி அனுப்பி விட்டு அம்மாவுடனே அமர்ந்து கொண்டாள் அவள்.
பேசும் சக்தி இழந்தது போன்று இருந்த பாக்யாவால் மகளிடம் எதுவும் பேச முடியவில்லை. ஆனால் பார்வையாலேயே குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்.
“எதுவும் யோசிக்காம தூங்கும்மா, உன்னை மீறி என்ன நடக்க போகுது? தூங்கு” என மகள் சொல்லவும் கண்களை மூடிக் கொண்டார்.
மாலை போல ஸ்ருதி வந்தாள். அவள் சாதாரணமாக அக்கறையாக பேசிக் கொண்டிருக்க அசோக் வந்து விட்டான். அவனை அனன்யா கவலையாக பார்க்க, பாக்யா கலங்கிப் போன விழிகளுடன்தான் ஏறிட்டார்.
இவருக்கு விஷயம் தெரியும் போலும் என கணித்துக் கொண்டாள் ஸ்ருதி.
அத்தையின் அருகில் வந்தமர்ந்தவன், “ஏன் அத்தை அவ்ளோ மோசமானவனா நான்?” எனக் கேட்டான்.
“உன் அப்பா பத்தி தெரிஞ்சும் என்கிட்ட இந்த கேள்வி நீ கேட்கலாமா?” என்றவர் அழத் தயாரானார்.
“அப்புறம் பேசலாமே அசோக்” என ஸ்ருதி சொல்லவும், எழுந்து தள்ளியிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
கடினமான அமைதி சூழ்ந்து கொண்டது. வெகு நேரம் சென்று ஸ்ருதியின் மடியிலிருந்த குழந்தை அழ ஆரம்பிக்கவும் அவள் அறைக்கு சென்று விட்டாள்.
“என்ன பயம் அத்தை? இப்ப ஆசை காட்டி அப்புறமா அம்போன்னு விட்டுட்டு போயிடுவேன்னு சந்தேக படுறீங்களா என்னை?” என கேள்வி எழுப்பினான் அசோக்.
“நீங்க ரெண்டு பேருமே ஏமாந்திட கூடாதுப்பா” என்றார்.
“கண்டிப்பா அனன்யாவை கல்யாணம் பண்ணிப்பேன் அத்தை” என்றான்.
“வேணாம் அசோக், நான் ஒருத்தி குடும்பம் இல்லாம தனியா இருக்கிறதே போதும்” என தளர்ந்து போன குரலில் சொன்னார் பாக்யா.
“நீங்க பயப்படுறது எதுவும் நடக்காது. நாங்கதான் கல்யாணம் பண்ணிப்போம். அப்பா சம்மதிக்கிறது அடுத்து, நீங்களே இப்படி செய்யலாமா? சந்தோஷ பட வேணாமா?” எனக் கேட்டான்.
அறையில் இருந்தாலும் இவர்கள் பேசிக் கொள்வது ஸ்ருதியின் காதிலும் விழுந்தது.
தன் மனதில் உள்ளதை எல்லாம் அசோக்கிடம் சொன்னார் பாக்யா. வேடிக்கை பார்த்து நின்றிருந்தாள் அனன்யா.
“எங்க கல்யாணம் எல்லார் சம்மதத்தோட நடக்க, முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணுவேன் அத்தை. உங்களை எல்லாம் அப்பா எதுவும் பேசிட மாட்டார், நான் பொறுப்பு” என்றான்.
“கேட்க நல்லாருக்கு அசோக், அன்னிக்குத்தான் என் அண்ணனை நேர்ல பார்த்தேனே. அவந்திகா கல்யாணத்துக்கு வாங்கன்னு கூப்பிட வந்ததுக்கே ஏதேதோ பேசினார். ப்ச்… இவளுக்கும் ஒரு அமைதியான வாழ்க்கை அமையனும்னுதான் ஆசை படுறேன். உனக்கும் நல்ல வாழ்க்கை அமையும். என்னை நீ சங்கட படுத்தக் கூடாது” என்றவர் அதற்கு மேல் பேச தெம்பில்லை என்பது போல படுத்து விட்டார்.
அசோக் ஏதோ பேசப் போக, “அசோக் ப்ளீஸ்…” என்றாள் அனன்யா.
அத்தையையும் அவளையும் கவலையாக பார்த்தவன், “உடம்பை பார்த்துக்கோங்க அத்தை, நான் வர்றேன்” என சொல்லி வெளியே சென்றான்.
அவன் நினைத்தது போலவே அனன்யாவும் வெளியில் வந்தாள்.
“கொஞ்சம் கொஞ்சமாதான் அம்மாக்கு புரிய வைக்க முடியும். உங்களை பிடிக்காம இப்படி பேசல அம்மா, அவங்க பயமெல்லாம் உங்கப்பாதான்” என்றாள்.
புரிந்தது என்பது போல தலையாட்டியவன், “அத்தையை பார்த்துக்க, சீக்கிரம் பொண்ணு கேட்டு வருவேன்” என்றான்.
“கொஞ்சம் பொறுமையா செய்யலாமே” என்றாள்.
“அத்தைக்கு உடம்பு சுக கேடு இல்லை அனு, மனசுக்குத்தான் நோய், நம்ம கல்யாணம் நல்ல படியா நடந்தா சரியாகிடுவாங்கதானே? அப்போ ஏன் பொறுமையா செய்யணும், சீக்கிரமாதான் செய்யணும். எனக்கு அவசரமா கிளம்பணும், ஸ்ருதிகிட்ட சொல்லிடு” என சொல்லி புறப்பட்டு விட்டான்.
பாக்யா கண்களை மூடி படுத்திருக்க கலக்கமாக தெரிந்த அனன்யாவிடம், “நீ ரொம்ப தைரியம்னு சமர் சொல்வான். என் அம்மா பத்தி உன் கணிப்பு என்ன, ரொம்ப ஸ்வீட்’ன்னுதானே? அவங்களே என் லவ் தெரிஞ்சப்போ ஒத்துக்கல, ஆனா நான் கல்யாணம் பண்ணினதும் அப்பாக்கு முன்னாடி அவங்கதான் சமாதானம் ஆனாங்க. கவலை படாம இரு” என ஆறுதல் சொல்லி கிளம்பினாள் ஸ்ருதி.
எதையும் ஆற அமர செய்யும் பொறுமை இல்லை அசோக்கிடம், அதைவிட அதற்கு அவசியமில்லை என கருதினான். ஆகவே இரவே தன் அம்மாவிடம் சொல்லி விட்டான். கணவரின் கோவத்தை நினைத்துதான் பயந்தார் விஜயா, மற்றபடி அனன்யாவை அவருக்கு பிடிக்கவே செய்தது.
மகனுக்கு எப்படியாவது திருமணத்தை நடத்தி விட வேண்டும் என முயன்று கொண்டிருந்தவருக்கு அவனே ஒரு பெண்ணை விரும்புகிறேன் என சொல்லவும் மறுப்பு சொல்ல தோன்றவே இல்லை.