அத்தியாயம் 6

இரண்டு மாதங்கள் எப்படி சென்றதென்றே தெரியாமல் பரீட்ச்சையும் முடிவடைந்திருந்தது. இனி பாடசாலை வாழ்க்கையினுள் மீண்டும் போக முடியாது. மீண்டும் சீருடை போட முடியாது. சிறு பெண் என்ற கூட்டுப்புழுவிலுருந்து சிறகை விரிக்க நேரம் வந்து விட்டது.

பாடசாலை செல்லும் போதும் வரும் போதும் ரஹ்மான் வண்டியில் நிற்பதை கவனித்தவள் முதலில் பயந்து நடுங்க, அவன் பேச முயற்சி செய்யாததால் அச்சம் நீங்கி தன் பாட்டுக்கு தன் வேலையை செய்யலானாள். தினமும் அவன் நிற்பதும் சிரிப்பதும் எரிச்சலை மூட்ட அவன் இருக்கும் திசைப் பக்கம் கண்களை திருப்பினாலில்லை.

ரஹ்மானும் அவளை தூரத்திலிருந்து வழமை போல் சைட் அடித்தானே ஒழிய பரிட்சைக்கு படிப்பவளை தொந்தரவு செய்யாமல் ஒதுங்கியே இருந்தான். பானு தன்னை திரும்பியும் பார்ப்பதில்லை என்பது மனதை வாட்டினாலும் அவன் அதை அச்சம் கொள்கிறாள். நாணமாக இருக்கும் என்றுதான் எண்ணினான். துளியேனும் அவளுக்கு தன்னை பிடிக்கவில்லை என்று எண்ண தோன்றவே இல்லை. அதை அவள் அவளின் வாயால் கூறி அவன் காதால் கேட்க நேரிடும் பொழுது அவன் காதல் மனம் சுக்கு நூறாக உடைவது உறுதி.

பரீட்ச்சையை நல்ல முறையில் எழுதிய ஷஹீ  பெறுபேர்கள் வரும்வரை தையல் வகுப்பில் சேரலாம் என்று முடிவெடுத்தவள் அன்னையிடம் அதை பற்றி கேட்க பேகமோ தையல் வகுப்போடு ஏதாவது சமையல் வகுப்பு இருந்தால் அதிலும் சேர்ந்துகொள்ள நாளை திருமணமாகப் போகும் பெண் வாழ போகும் வீட்டில் போய் சமைக்க தெரியாதுன்னு சொன்னால் நல்லா இருக்காது என்றாள்.

தனக்கு சமையல் தெரியுமே என்று ஷஹீ சொல்ல, “சோத்த ஆக்கினோமா, கறிய குழம்பு வச்சோமா, காய கூட்டு வச்சோமா அத்தோடு முடியுது நம்ம சமையல் உன் புருஷனுக்கு வித விதமா செஞ்சு கொடுக்க பழகு. ரஹ்மான் வேற நல்ல சாப்பிடுற பையன்” என்று சொல்ல

“அந்த மூஞ்சிக்கு கறி சோறே போதும்” என்று முணுமுணுத்தவள் அன்னையிடம் எதுவும் சொல்லாமல் அறையினுள் புகுந்து கொண்டாள்.

“ரெண்டு மாசமா யாரும் அவனை பத்தி எந்த பேச்சையும் எடுக்களையே! கல்யாண பேச்சு கேன்சள்னு நினச்சேன். இன்னும் இருக்கா… யா அல்லாஹ் இந்த கல்யாணம் நடக்க கூடாது நடக்கவே கூடாது” உடனடி துஆ  செய்தவள் வகுப்பில் சேருவதை பற்றி பேச ஹிதாயாவோடு பேச வேண்டும் என்று முபாரக்கிடம் அலைபேசியை கேட்டு வாங்கினாள். அலைபேசியை கொடுத்தவனும் அசையாது அங்கேதான் நின்றிருந்தான்.

அவளின் அச்சமெல்லாம் எங்கே அவளின் படிப்பை நிறுத்தி விட்டு கல்யாணம் செய்து வைத்து விடுவார்களோ என்று இருக்க, கல்யாண பேச்சை எடுத்தாலே எரிச்சலாக இருந்தது. படித்துக் கொண்டிருந்த தன்னை வலுக்கட்டாயமாக கல்யாண பந்தத்தில் இணைத்தது ரஹ்மான். அவன் மட்டும் தன் வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருந்தால் எந்த பிரச்சினையும் இருந்திருக்காது என்று ஷஹீராவின் மனதில் வேரூண்டி போய் இருந்தது. அதனாலயே அவளுக்கு ரஹ்மானை பிடிக்காமல் போனது.

ஆனால் பேகம் ஷஹீராவின் திருமணத்துக்கான ஏற்பாடுகளை ஆரம்பித்து விட்டாள் என்பதை அறியவில்லை. நகைகளை செய்ய ஆடர் கொடுத்திருந்தாள். துணிமணிகளை அந்த நேரத்தில் வாங்கலாம் என்று முடிவெடுத்திருந்தாள். அவள் எதிர்பார்ப்பெல்லாம் ரஹ்மான் வீட்டிலிருந்து வரும் அழைப்புக்காகத்தான்.

அவள் துஆ வீண் போகவில்லை. அலைபேசி அடிக்க ரஸீனா பேசி பெண் பார்க்க வருவதாக கூறி இருந்தாள். அதுவும் குடும்பம் மொத்தமும் வருகிறார்களாம். ரசீனாவின் தங்கையின் பிள்ளைகளுக்கும் ஷஹீராவை பார்க்க ஆசையாம். நவ்பர் பாயின் ஒரே அக்காவும் பெண்ணை பார்க்க வேண்டும் என்றாராம். எப்படியும் இருப்பது, இருபத்தி ஐந்து பேர் வருவார்கள் போலும்.

இரண்டு மாதமாக பொறுமை காத்ததே பெரிய விஷயம். பெண்ணை பார்க்க அனைவரும் ஆவலாக இருப்பதாக ரஸீனா கூற பேகத்துக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அவளுக்கு இருக்கும் ஒரே சொந்தம் மஸீஹா. அவளை அழைத்து விஷயத்தை சொல்ல இந்த திருமணத்தை நிறுத்துவது எப்படி என்று யோசிக்கலானாள் அவள்.

ரஹ்மான் தன்னை பற்றி கூறும் போது தப்பெருமை பேசுகிறான் என்று கேட்டுக்கொண்டிருந்தவள் அவனை பற்றி விசாரித்து விட்டு வந்த அக்பர் திருப்தியாக சொன்னவைகள் ஷஹீராவுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா என்று ஆச்சரியப்பட வைக்க ரஹ்மான் வேறு அவளை காதலிப்பதால் அவர்களுக்குள் சண்டையே வராது. வாழ்க்கை நல்லாத்தான் இருக்கும் என்று பொறாமை கொண்டு கல்யாணத்தை நிறுத்த எண்ணினாள். அதற்கு மஸீஹா குறித்த நாள் பெண் பார்க்க வரும் நாள்.  

பெண் பார்க்கும் நாளும் வந்தது. அன்று போல் ஷஹீராவுக்கு சொல்லாமல் விடவில்லை பேகம். வருவது ரஹ்மானின் வீட்டார் என்று தெரியும். அவர்கள் பெரிய குடும்பம். அனைவருக்கும் ஷஹீயை பார்க்க ஆசைதான். ஆனாலும் கொஞ்சம் பேரை அழைத்து வருவதாக கூறி இருக்க, அந்த கொஞ்சம் பேரே இருபத்தி ஐந்து. 

இதை பற்றி ஷஹீயிடம் கூற அவளுக்கு கோபம்தான் வந்தது. நான் என்ன பொம்மையா? வருகின்றவர்களுக்கு காட்ச்சி பொருளாக. கல்யாணம் செய்ய போகும் மாப்பிளை பார்த்தால் போதாதா? அவள் மனம் நினைக்கையில் மூளையோ இடை மறித்து அவன் தான் நாள் தோறும் ரோட்டுல நின்னு பாக்குறானே! இன்னும் என்ன பார்க்க வேண்டி இருக்கு? என்று ஞாபகமூட்ட, மனம் அதானே என்றது.

அவன் குடும்பம் பார்த்தால் போதாதா?   மொத்தமா எல்லாரும் வரணுமா? அறிவில்லையா அவங்களுக்கு? இவ்வாறுதான் ஷஹீக்கு எண்ண தோன்றியது.

மாலை நேரம் ஒரு லெஹெகா அணிந்து மிதமான ஒப்பனையில் அன்றுபோல் தனதறையில் அமர்ந்திருந்தாள் ஷஹீரா. அன்று போல் அழுது கரையவில்லை. மாறாக வெறுப்பில் அமர்ந்திருந்தாள். அந்த வெறுப்பும் ரஹ்மானின் மேல் மட்டும் மொத்தமாக கொட்ட காத்திருந்தது.

சொன்ன நேரத்துக்கு மாப்பிளை வீட்டிலிருந்து அனைவரும் வருகை தர வாசலில் அனைவரும் அமரவும் இடம் பத்தவில்லை. ஆண்கள் வாசலில் அமர்ந்துகொள்ள பெண்கள் கொஞ்சம் பேர் முபாரக்கின் அறையிலும், கொஞ்சம் பேர் ஷஹீயின் அறையிலும் அமர்ந்து கொண்டனர்.

ஜமீலாவுக்கு ஷஹீயை பார்க்க திருப்தியாக இருந்தது. இருவரின் ஜோடி பொருத்தமும் நன்றாகவே இருப்பதாக தோண ஷஹீயின் அருகிலையே அமர்ந்து கொண்டாள்.

“அஸ்ஸலாமு அலைக்கும். என் பேர் ஜமீலா நான் ரஹ்மான்ட அக்கா. உன் பேர்…”

“ஷஹீரா…”

“இல்லையே ரஹ்மான் வேற பேர் சொன்னானே…. பானு… ஆ.. பானுதான்”

“முழு பேர் ஷஹீரா பானு”

“ஓஹ்.. ஆனா அவன் உன்ன பானுனுதான் கூப்டுறான்”

“அதான் தெரியுமே ஹாஸ்பிடல்ல என் பானு, என் பானுனு ஏலம் போட்டத” உள்ளுக்குள் வெறுப்பாய் நினைத்து வெளியே சிரிக்க

“நீ ரொம்ப அழகா இருக்க, ரஹ்மானுக்கு  பொருத்தமாக இருக்க, அவனை கட்டிக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்” என்ற ஜமீலா “உன்ன கட்டிக்க அவனும் கொடுத்து வச்சிருக்கணும்” என்று சொல்ல வருவத்துக்குள் உள்ளே குளிர்பான குவளைகளோடு வந்த மஸீஹா இடை மறித்து

“அதென்னெங்க உங்க பையன கட்டிக்க எங்க பொண்ணு கொடுத்து வச்சிருக்கணும்னு தாழ்த்தி சொல்லுறீங்க ஏன் உங்க பையன் கொடுத்து வைக்கலயா? எதுக்கு எங்க பொண்ணு பின்னாடி அலஞ்சாராம்” குத்தலாக ஆரம்பிக்க ஜமீலா முகம் மாறினாள்.

“உங்க வீட்டு பொண்ணு எங்க வீட்டுக்கு வர நாங்கதான் மா கொடுத்து வச்சிருக்கணும்” என்றவாறே உள்ளே நுழைந்த வயதான பெண்மணி ஷஹீயின் அருகில் அமர்ந்து கொண்டு அவளை கட்டித்தழுவி உச்சிமுகர்ந்தவர்

“என் பேரனை நல்லா பார்த்துக்கோமா” என்று சொல்ல ஜமீலா அது தன் உம்மம்மா என்று ஷஹீக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் ஜமீலா.

ஷஹீரா சிறு பெண் உம்மாவின் செல்லம். வீட்டு வேலைகள் எதுவும் தெரியாது. செய்யவும் மாட்டாள். படிப்பு படிப்பு என்றே இருப்பவள் என்று மஸீஹா சொல்ல அதனாலென்ன நாங்க சொல்லி கொடுப்போம் என்றவாறு அய்நாவும், ஷம்ஷாதும் உள்ளே வந்தனர். தனது திட்டம் தவிடு பொடியாக வெளியேறினாள் மஸீஹா.

ரஹ்மானின் சாச்சியின் இரண்டு பெண்களும் வந்திருக்க பேகம் மட்டும் தட்டுகளோடு தடுமாறுவதைக் கண்டு தாங்களே முன் நின்று  உதவி செய்யலாயினர்.

ஷம்ஷாத், அய்நா, குல்தூம் என்று அனைவரும் மாறி மாறி ஷஹீயிடம் பேச்சுக் கொடுக்க வந்திருப்பவர்கள் பாதி பேரை அறிமுகப்படுத்தி இருந்தாலும் இவ்வளவு பெரிய குடும்பத்து உறவுகளை ஞாபகத்தில் வைத்திருக்கவே ஷஹீ திண்டாடினாள்.

“பாவம் புள்ளய போட்டு வதைக்காம ஓரமா போங்க… கல்யாணம் பண்ணி வந்த பிறகு பேசி பழகும் போது ஞாபத்துல இருக்கும்” ஷம்ஷாத் சொல்ல அதை ஆமோதித்த ரஹ்மானின் உம்மம்மா அந்த கால கதைகளை சிலவற்றி கூற ஷஹீயும் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தாள்.

ஷஹீக்கு தந்தையின் உறவுகள் தந்தையோடு காணாமல் போக, அன்னையின் உறவென்று மாமா அக்பர் மட்டும்தான். இவ்வளவு பெரிய குடும்பம், நிறைய சொந்த பந்தங்கள்  பழக நல்லவர்களாகத்தான் தெரிந்தார்கள். யாரும் அவளிடம் எடக்கு மடக்கா எந்த கேள்வியும் கேட்கவில்லை. ஆனாலும் ரஹ்மானின் புகழ் பாடி அவளின் வயித்தெரிச்சலை மட்டும் கொட்டிக்கொண்டனர். ஆக மொத்தத்தில் ஷஹீராவுக்கு ரஹ்மானை தவிர மொத்த குடும்பத்தையும் பிடித்திருந்தது.

அவள் படிக்கும் பாடசாலையில் ரஹ்மானின் சில உறவுக்கார பிள்ளைகளும் படிக்க, அவளை நன்றாக தெரியும் என்பதால் அவளோடு ஒட்டிக்கொண்டே இருந்தனர். அதில் ஒருத்தி ருகையாவின் தோழியும் அடங்கும்.

அப்படி, இப்படி என ஷஹீராவை அனைவருக்கும் பிடித்திருக்க கல்யாண பேச்சை ஆரம்பித்தார் நவ்பர் பாய்.

“எங்க குடும்பம் பெரிய குடும்பம். கல்யாணம் விமர்சையா செய்யணும். பையன் படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் இருக்கு முடிஞ்ச உடனே வச்சிக்கலாம்”  

“நீங்க என்ன எதிர்பாக்குறீங்கன்னு சொன்னா  கல்யாணமன்னைக்கு செய்ய இலகுவாக இருக்கும்” அக்பர் கேட்க

வீட்டில் சீதனத்தை பற்றி எந்த பேச்சும் பேசி இருக்கவில்லை. நவ்பர் பாய் ரஹ்மானை அழைத்து விஷயத்தை சொல்ல முகம் மாறியவன்

“வாப்பா சீதனம் எடுத்துதான் கல்யாணம் செய்யணும்னு நீங்க நினைக்கிறீங்களா?”

“அப்படி இல்ல உன் உம்மா என்ன நினைக்கிறானு தெரியல”

“நான் உம்மா கிட்ட பேசிக்கிறேன்” என்றவன் “அக்பர் சாச்சா உங்க பொண்ணுக்கு என்ன செய்ய விருப்ப படுறீங்களோ செய்ங்க. அதுக்காக கடன் பட்டு செய்யணும்னு அவசியமில்லை. மஹர்கு நகை தான் போடணும்னு நினைக்கிறேன். அதுவும் என் சொந்த சம்பாத்தியத்தில். இவ்வளவு வேணும்னு கேக்குற உரிமை மணமகளுக்கு இருக்கும் போது நீங்க சீதனத்தை பத்தி பேசுறீங்களே! முறை படி நான் தான் கொடுக்கணும்” என்றவன் புன்னகைத்தான்.

{மஹ்ர்:- திருமணத்தின் போது மணமகளுக்கு மணமகன் பணம் அல்லது பொருளாக கொடுக்கும் அன்பளிப்பு}

ஒரு வருடம் கழித்து திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று பேசி முடிவாக ரஹ்மானுக்கு பானுவை பார்க்கணும் போல் இருக்கவே யாரிடம் கேட்பது என்று கண்களை சுழல விட ஜமீலா பானுவின் அறையிலிருந்து வரவும் எழுந்து அக்காவின் அருகில் சென்றவன் ரகசியம் பேச ஜமீலாவும் சிரித்தவாறே தலையாட்டி விட்டு நகர்ந்தாள்.

இளசுகள் பட்டாளம் முற்றத்தில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருக்க முபாரக் மற்றும் ரஹ்மான் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டிருந்தனர்.

“என் மேல இருக்குற பகை காரணமாகத்தான் நீ என் தங்கச்சிய லவ் பண்ணுறேன்னு கல்யாணம் பண்ண போற? உனக்கு ஒரு தம்பி இருக்குற தைரியம் இல்ல. உனக்கொரு தங்கச்சி இருந்திருக்கணும் அவளை லவ் பண்ணி இழுத்துக்கொண்டு போய் இருப்பேன். அப்போ தெரியும் உனக்கு என் வலி” முபாரக் பொரிய

“ஏன் டா… சின்ன வயசுல சண்டை போட்டதெல்லாமா டா இன்னும் நினைச்சி கிட்டு இருக்க” ரஹ்மான் கடிய

அஸ்ரபோடு பேசிக்கொண்டிருந்த பாஷித் எந்த நேரமானாலும் கலவரம் வெடிக்கலாம் என்பதால் அண்ணனின் மேல் கண்ணை வைத்திருக்க அஸ்ரப், மற்றும் பாஷித் காதிலும் இவர்கள் பேசியது விழுந்திருந்தது.   

குளிர்பான குவளைகளோடு அங்கே வந்த ரஹ்மானின் சாச்சியின் மகள்கள் இதை கேட்டு திகைத்து நிற்க அவர்களைக் கண்டு திகைத்த முபாரக் மௌனமானான்.

“யார் சொன்னா தங்கச்சி இல்லனு ஒண்ணுக்கு ரெண்டு இருக்கு. கூட பொறந்தா தான் தங்கச்சியா? சாச்சியின் பொண்ணுங்களும் தங்கச்சிக தான். இதோ அவங்களே வந்துட்டாங்க. முபாரக் நல்லா பார்த்துக்க, இவ மூத்தவ ஹனா நம்ம தங்கச்சி ஷஹீரா வயசுதான். இவ இளையவ இவளை விட ஒரு வருஷம் சின்னவ பேரு ஹாஜரா. ரெண்டுல எதுனாலும் ஓகே. ரெண்டும் சிங்கள் தான் இன்னும் மின்கள் ஆகல” என்ற அஸ்ரப் குளிர்பான குவளையை எடுத்து ரஹ்மானுக்கும் முபாரக்குக்கும் கொடுக்க பாஷித் சிரிப்பை அடக்கியவாறு இருக்க, பெண்கள் இருவரும் ஆண்களை முறைத்தவாறு அகன்றனர்.

முபாரக் எதோ கோபத்தில் சொல்ல அது அந்த இரு பெண்கள் காதிலும் விழுந்து தொலைத்திருக்க அது அவனுக்கு மானப் பிரச்சினையாகிற்று. தந்தை செய்த காரியத்தால் பெண்களிடம் ஒதுங்கி இருந்தவன் குடும்ப பெண்களை தவிர வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். இதில் கோபத்தில் உனக்கொரு தங்கை இருந்தால் காதலிப்பேன் என்று பொருக்கி போல் கூற ஒன்றுக்கு ரெண்டு பெண்கள் அவன் முன்னால் வந்து நிற்பார்கள் என்று அவன் என்ன கனவா கண்டான். இருவரும் முறைத்த முறைப்பில் அவனை பொருக்கி என்ற முத்திரையை குத்தி விட்டு சென்றார்கள் என்று நன்றாக புரிந்தது. எல்லாம் இவனால். கிண்டல் செய்த அஸ்ரப்பை விட்டு விட்டு அதற்கும் ரஹ்மான் மேல் கோபப்பட்டான் முபாரக்.

முபாரக் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு மூச்சுக்களை இழுத்து விட்டவாறு தன்னை கட்டுக்குள் கொண்டு வர அவனை பாத்திருந்த அஸ்ரப் பாஷித்திடம்

“என்ன டா… இவன் கொம்பு வச்ச ஜல்லிகட்டு காளை மாடு மாதிரியே கோபப்படுறான். விட்டா குத்தி குடலை உருவி நமக்கே குடலை மாலை போட்டு சந்தாக்குள {பாடை} அனுப்பி வச்சிடுவான் போல இருக்கே! இது சரியில்லையே! இவன் வாழ்க்கைல ஒரு பொண்ணு வந்தா தான் சரி படுவான் போல இருக்கு. ரஹ்மான் கல்யாணம் முடியட்டும் சீக்கிரம் இவனுக்கு பொண்ணு பார்க்க சொல்லணும்”

“நல்லவேளை நான் பொண்ணா பொறக்கல. பாவம் அந்த பொண்ணு, இவன் கிட்ட மாட்டி கிட்டு என்ன பாடுபட போகுதோ” பாஷித் முபாரக்கை பார்த்தவாறே சொல்ல அஸ்ரப்பும் யோசனைக்குள்ளானான்.

ரஹ்மானுக்கு முபாரக்கை பார்க்க பாவமாக இருந்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. “பாத்து மச்சான் பானு மாதிரி அப்பாவி பெண் இல்ல என் தங்கச்சிங்க உன் பெண்ட்ட நிமித்திடுவாங்க தனியா மாட்டிடாத” என்றவன் ஜமீலா கண்களால் அழைக்கவும் சிரித்தவாறே பானுவை காண சென்றான். போகும் ரஹ்மானை முறைத்த முபாரக்  ஒருத்தி அவனை வச்சி செய்ய குறிவைத்து விட்டாள் என்பதை அறியவில்லை.

“ப்ளீஸ் கா எப்படியாச்சும் பானு கூட பேச வையேன். அவ என் கூட பேசவே மாட்டேங்குறா… ப்ளீஸ்.. ப்ளஸ்” என்று அக்காவிடம் கெஞ்ச ஜமீலாவும் இந்த கூட்டத்தின் மத்தியில் அவர்களை பேச வைப்பது எப்படி என்று யோசித்தவள் மஸீஹாவின் வீட்டை பார்க்க வேண்டும் என்று அவளை அழைத்துக் பேசி அனைவரையும் மாடி வீட்டுக்கு அவளோடு கிளப்பி விட்டிருக்க, அய்னாவின் காதில் மட்டும்  விஷயத்தை சொல்ல தான் பார்த்துக்கொள்வதாக அய்நா சிரித்தவாறே கூறினாள்.

மாடியேறிய மஸீஹா அங்கும் தன் வேலையை காட்டலானாள். வேண்டுமென்றே ஷஹீரா தந்தை இல்லாமல் வளர்ந்தவள் என்ற பேச்சை எடுக்க யாராவது என்ன எதுன்னு கேக்க மாட்டார்களா என்று ஆவலாக இருந்தவளிடம் சிக்கினார் ரஹ்மானின் உம்மம்மா.

அவரோ வயதானவர். ரஹ்மானின் குடும்பத்தின் மூத்த உறுப்பினர். அவரின் தலையை கழுவினால் {பிரைன் வாஷ்} அவரே கல்யாணத்தை நிறுத்தி விடுவார். அவர் இந்த திருமணம் நடக்க கூடாதென்று திடமாக கூறினால் ரஹ்மானால் கூட ஒன்றும் செய்து விட முடியாது. அவரும் பாவம் மஸீஹாவின் நோக்கம் புரியாமல் என்ன எதுன்னு கேட்டு விட தன் வேலையை காட்ட ஆரம்பித்தாள் மஸீஹா.

“அத ஏன் மாமி கேக்குறீங்க. பேகம் மைனி வேணாம்னு வேறொரு பொம்பளைய வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டாராம். ரெண்டு பொம்பிளைகளும் தலைமுடியை பிச்சிகிட்டு அடிச்சிகிட்டாங்களாம். ஷஹீயோட வாப்பா பேகம் மைனிய அடிச்சி அந்த பொம்பளதான் வேணும்னு வீட்டை விட்டு போய்ட்டாராம். என்ன பொண்ணு பார்க்க வந்தப்போ கூட இவரும் இன்னொரு பொம்பள கூட போவாருனு சொல்லி நிறைய பேர் கல்யாணத்த நிறுத்த பார்த்தாங்க. நானும் வேணாம்னு சொன்னேன். என் வாப்பா தான் பேகத்தோட புள்ளைங்க வேணா அதுங்களோட வாப்பா மாதிரி பண்ணலாம். உன்ன கட்டிக்க போறவரு அப்படி பண்ண மாட்டாருனு என்ன இவருக்கு நிகாஹ் பண்ணி வச்சிட்டாரு. எந்த புத்துல எந்த பாம்பிருக்கோ தெரியல. படிக்கிறேன் படிக்கிறேன்னு ஷஹீ வீட்டு வேல ஒன்னும் பண்ணுறதில்ல. சின்ன பொண்ணுனுனு மைனியும் ஒரு வேல வாங்குறதில்ல. மினிக்கிகிட்டு திரியிறா… இல்லனா உங்க பேரன் அவ பின்னாடி அலைஞ்சிருப்பானா? சொல்லுங்க. இன்னொரு எடதத்துக்கு வாழ போற பொண்ணுன்னு பேகம் மைனியும் நினைக்கிறதில்ல, இந்த புள்ளையும் யோசிக்கிறதில்ல. இப்படி இருந்தா போற இடத்துல எப்படி நல்ல பேர் வாங்குவா? அந்த குடும்பத்துக்கும் தலவலிதான் மிஞ்சும். இறுக்கி பிடிச்சி சரி பண்ணிடலாம்னு நினச்சா அவங்க வாப்பா மாதிரி வேறொருத்தனோடு பறந்துடுவா” மெதுவான குரலில் சொல்ல மஸீஹாவின் குணத்தை புரிந்து கொண்ட அனுபவம் மிக்க அந்த முதிய பெண்மணி அவள் பேசும் வரை காத்திருந்தார்.

பேசி முடித்து விட்டு உம்மம்மாவின் பதிலை ஆவலாக எதிர்பார்த்த மஸீஹாவுக்கு பெரிய பல்பை கொடுத்தார் அவர்.

“ஏன் மா… நான் வயசானவ… இப்படி மெதுவா பேசினா காது கேக்குமா? நீ பாட்டுக்கு ஏதேதோ முணுமுணுக்குற ஒன்னும் காதுல விழுல. என்ன சொன்னாலும் கொஞ்சம் சத்தமா சொல்லு. தொண்டையெல்லாம் காஞ்சி போச்சு குடிக்க ஏதாச்சும் கொண்டுவா குடிச்சிகிட்டே உன் கதையை கேக்குறேன்” என்று விட்டு அவளின் முகத்தையே பாத்திருக்க

“மூச்சு விடாம இவ்வளவு நேரம் பேசினது இந்த கிழவி காதுல கொஞ்சமாலும் விலலயா? காது கேக்கலைனா ஒரு செவிட்டு மெசினை வாங்கி மாட்ட வேண்டியது தானே! யார் காதுலயாவது விழும்னு பயந்துகிட்டு மூச்சு விடாம மெதுவா இவ்வளவு நேரமும் பேசினது வேஸ்ட்டாக்கிருச்சு. கத்தி பேசவும் முடியாது. திரும்ப பேச இவ பண்ண அலும்புல ரெத்தம் சூடாக்கி கோர்வையா வராதே!” பெருமூசசு விட்டவள் “உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்” என்று கத்தி சொல்ல

“ம்ம்..” என்றவர் “சக்கர கொஞ்சம் தூக்கலா போடு என் பேரனுக்கு கல்யாணமாக போகுதில்ல சந்தோசத்தை கொண்டாடணும். கெட்ட மனசுள்ளவங்க கண்ணு பட்டா அந்த புள்ளைங்க வாழ்க நல்லா இருக்காது. ரஸீனா கிட்ட கண்ணூர் கழிக்க சொல்லணும்” மாஸீஹாவை உறுத்து விளித்தவாறே சொல்ல அவரை சந்தேகமாக பார்த்தவள் நகர்ந்தாள்.

அறையில் ஷஹீரா மட்டும் இருப்பதை உறுதி செய்த ஜமீலா ரஹ்மானை கண்களாளேயே அழைக்க அவனும் மெதுவாக எழுந்து சென்றவன் அக்காவோடு அறையில் நுழைந்தான்.

ஜமீலா உள்ளே வரவும் புன்னகைத்த ஷஹீரா பின்னால் வந்த ரஹ்மானை கண்டதும் அதிர்ச்சியடைந்து எழுந்து நின்று கொண்டவள் உடல் உதற என்ன செய்வதென்று தடுமாறலானாள்.

ஜமீலா வெளியே செல்லவும் அவள் கையை பிடித்து தடுத்த ஷஹீ போக வேண்டாம் என்று தடுக்க, புன்னகைத்த ஜமீலா அவள் முகவாயை தடவியவாறே

“பேசுமா… கல்யாணம் பண்ணிக்க போறவங்க தானே! மனம் விட்டு பேசுறதுல ஒன்னும் தப்பில்ல. உனக்கு என்ன சொல்லணுமோ தயங்காம, பயப்படாம சொல்லு. மிரட்டினா என் கிட்ட சொல்லு இவன நான் பாத்துக்கிறேன்” ஷஹீராவிடம் கூறியவள் ரஹ்மானின் புறம் திரும்பி

“அஞ்சு நிமிஷம் தான் தம்பி என்ன பேசணுமோ சீக்கிரம் பேசிட்டு வந்துடு சரியா” கண்சிமிட்டியவாறே கதவை சாத்திக்கொண்டு வெளியேறியவள் அங்கேயே சோபாவில் அமர்ந்துகொண்டிருந்த வஸீமின் அருகில் சென்று தம்பிக்கு காவலாக நின்று கொண்டவள் யாரும் அறையினுள் நுழையாததவாறு பார்த்துக்கொண்டாள்.

உள்ளே வந்த ரஹ்மானோ! ஆசையாக அவன் பானுவை பார்க்க அவள் தடுமாற்றமும், மருண்ட விழிகளும், அவனுக்கு வேறு அர்த்தங்களை தான் சொன்னது.

அன்று புடவையில் ஜொலித்தவன் இன்று லெஹாகாவில் மிளிர்ந்தாள். மணப்பெண் போல் தான் அமர்ந்திருந்தாள். கைக்கு மருதாணி கூட வைத்திருந்தாள். அழகுனா அழகு அப்படி ஒரு அழகு அவன் பானு. அவனுக்கு மட்டும் சொந்தமானவள்.

எத்தனை வருட காதல். அதை அவளிடம் சொல்லவே முடியாமல் போய் விடுமோ! சொன்னால் ஏற்றுக்கொள்ளவாளோ!  என்றெல்லாம் உள்ளம் கதறிக்கொண்டிருந்த காலம் போய் காதல் கைகூடும் நேரம் நெருங்கி விட்டது.

தூரத்தே இருந்து பார்த்து ரசித்த மதி முகம் இன்று கை தொடும் தூரத்தில். அவளோடு பேசி சிரிக்க வேண்டும் என்று ஏங்கிய மனதுக்கு இன்று சாப விமோச்சனம் கிடைக்க போகிறது. அவள் குரல் எப்படி இருக்கும்? அழகாக பேசுவாளா? அன்பாக பேசுவாளா? ஏக்கங்கள் தலைதூக்க ஆசையாக பானுவை பாத்திருந்தான் ரஹ்மான்.

ஆனால் அவன் மனதில் தனக்கான காதலை உணராமல், புரிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ள முயற்சியும் செய்யாமல் தன் மனதில் வெறுப்பை மட்டும் வளர்த்துக் கொண்டவளோ! அவனை வெறுப்பாகவும், கோபமாகவும் பாத்திருந்தாள்.

மனம் முழுக்க சந்தோசத்துடன் வந்தவனை முகத்தில் அடித்தது போல் பானு ரஹ்மானை பிடிக்கவில்லை என்று சொல்ல அறையை விட்டு வெளியேறியவன் வாசலுக்கு வந்து கல்யாணத்தை நிறுத்துமாறு கூற அனைவரும் அதிர்ச்சியடைய அதற்கு அவன் சொன்ன காரணத்தால் அவன் மேல் பாய்ந்திருந்தான் முபாரக்.