அத்தியாயம் 4

காலையிலிருந்தே ஷஹீரா குட்டி போட்ட பூனை போல் அன்னையின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தாள். பேகம் பெண் பார்க்க வரும் விடயத்தை மகளிடம் சொல்லாமல் வருபவர்களுக்கு சிற்றுண்டி தயாரித்துக்கொண்டிருந்தாள்.

இன்று பாடசாலை விடுமுறை என்பதால் பாடசாலை செல்வதாக கூட கூற முடியாது. அன்னை பெண் பார்க்க வருவதை பற்றி கூறினால் மறுத்து பேசலாம். ஆனால் அவள் தான் அதை பற்றி பேசவே இல்லையே!

அன்னை வீட்டை சுத்தம் செய்யுமாறு கட்டளையிடவும் வேறு வழியில்லாது சுத்தம் செய்யலானாள் ஷஹீ. வீட்டில் உள்ள எல்லா திரைசீலைகளையும் மாற்ற சொன்னவள் ஷஹீயின் அறையின் கட்டில் படுக்கை விரிப்பு, தலையணை உறைகள் என எல்லாம் மாற்ற சொன்னாள். ஆனால் காரணம் மட்டும் சொல்லவில்லை.

ஷஹீராவும் அமைதியாக எல்லாவற்றையும் செய்தவள் அன்னையின் முகம் பார்த்து நிற்க, காலை ஒன்பது மணியளவில் போய் குளித்து விட்டு வரும் படி கூறினாள் பேகம். அன்னை கூறிய படி மறுக்காமல் செய்தவள் குளிக்கும் பொழுது அழுது தீர்த்து விட்டாள்.

மஸீஹா வந்து கதவை தட்டவும் வெளியே வந்தவளை புடவை கட்ட சொல்ல திகைத்தாள் ஷஹீரா. வாழ்க்கையில் புடவை என்பதை ஆசைக்காக கூட கட்டிப் பார்த்ததில்லை. அவள் எப்படி புடவை கட்டுவாள். தெரியாது என்றவளை தான் கட்டி விடுவதாக மஸீஹாவே! கட்டி விட கூச்சத்தில் நெளிந்தாள் ஷஹீரா.

கொஞ்சம் ஒப்பனையும் செய்த மஸீஹா ஷஹீராவை அறையிலையே அமர்ந்திருக்கும் படி கூறி விட்டு திருப்தியாக வெளியேறினாள். அவள் எண்ணமெல்லாம் புடவையில் ஷஹீ இன்னும் பெரிய பெண்ணாக தெரிவாள் ஒப்பனையில் அழகாக மிளிர்வாள் கண்டிப்பாக காதர் மறுக்க மாட்டான் என்பதில் இருந்தது.

மாப்பிள்ளை வீட்டார்கள் வந்து விட்டதாக ருகையா ஓடி வந்து சொல்லவும் ஷஹீயின் மனம் கலங்க ஆரம்பித்தது. புடவை கட்டி விடும் போது மஸீஹா மாமி கூட ஒரு வார்த்தை கூறவில்லை. அவள் என்ன அவ்வளவு பாரமாகிவிட்டாளா? யாரோ செய்த தப்புக்கு அவசர அவசரமாக அவளுக்கு ஏன் திருமணம் செய்ய வேண்டும் ஷஹீக்கு ஒன்றும் புரியவில்லை.

வெளியே மாப்பிள்ளை பேசுவதும், அவரின் அன்னை பேசுவதும் காதில் விழ உடல் உதற ஆரம்பித்து. கண்கள் கலங்க ஆரம்பித்திருந்தன. ஏற்கனவே இரவு அழுததில் இமைகள் தடித்திருக்க, முகம் கொஞ்சம் வீங்கி இருந்தது.

மஸீஹா காதரையும் அவனுடைய அன்னையையும் அழைத்து வரும் சத்தம் காதில் விழ கையை பிசைந்தவாறு எழுந்து நின்றாள் ஷஹீ. நெஞ்சம் பதைபதைக்க கண்கள் கலங்குவதை கட்டுப்படுத்த முடியாமல் தலை குனிந்தது நின்றாள் அப்பாவிப் பெண்.

அன்னையின் பின்னால் நுழைந்த காதரின் பார்வை வட்டத்துக்குள் முதலில் விழுந்தது புத்தகங்களே! காலேஜ் செல்வதாக எண்ணியவன் ஷஹீராவை ஏறிட, பார்த்த பார்வையிலையே காதருக்கு ஷஹீராவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது புரிந்தது.

அறை சுத்தமாக நேர்த்தியாக இருந்தது. வலது பக்க சுவரோடு சேர்த்து கட்டிலும் இடது பக்கத்தில் அலுமாரியும், டிரஸ்ஸிங் டேபிளும் கதவும் இருக்க, ஒரு பக்கத்தில் மேசையும் புத்தகங்களும், இரண்டு கதிரையும் போடப்பட்டிருந்தது. ஷஹீரா புடவைக்கட்டி இருந்தாள்.

அவள் உயரமும், புடவையில் அவள் தோற்றமும் முதிர்ச்சியை காட்டி இருக்க, காலேஜ் மாணவி என்றும், படிப்பை நிறுத்தி திருமணம் செய்து வைக்க போகிறார்கள் என்று நினைத்தவன் அவளை கூர்ந்து பார்க்க, இமைகளும் தடித்து, கண்களும் சிவந்திருக்க, விடிய விடிய அழுதிருக்கிறாள் என்று கண்டு கொண்டான்.

அன்னையிடம் திரும்பியவன் “உம்மா இவங்க கிட்ட நான் தனியா கொஞ்சம் பேசணும். பேசிட்டு உங்கள கூப்பிடுறேன்”

காதரின் அன்னைக்கும் எதுவோ சரியில்லை என்று புரிந்தது. “சரி” என்றவள் மஸீஹாவுடன் வெளியேற மஸீஹாவுக்குத்தான் பதட்டம் தொற்றிக்கொண்டது.

நேற்று வரைக்கும்

இங்கிருந்தேன் இன்று என்னை

காணவில்லை வெயில் இல்லை

மழை இல்லை பார்த்தேனே

வானவில்லை

என் நெஞ்சோடு

ரசித்தேன் கொல்லாமல்

கொல்கின்ற அழகை உயிரில்

ஓர் வண்ணம் குழைத்து

வரைந்தேன் அவளை

காதல் காதல்

காதலில் நெஞ்சம்

கண்ணாமூச்சி ஆடுதடா

தேடும் கண்ணில் பட

படவென்று பட்டாம்பூச்சி

ஓடுதடா

  

எங்கேயோ

எங்கேயோ இவனை

இவனே தேடுகிறான்

தாய் மொழி எல்லாம்

மறந்து விட்டு தனக்குள்

தானே பேசுகிறான்

காதல் மட்டும்

புரிவதில்லை காற்றா

நெருப்பா தெரிவதில்லை

காதல் தந்த மூர்ச்சை நிலை

நான் கண்கள் திறந்தும்

தெளியவில்லை

யுவன் சங்கர் ராஜாவின் காதல் கீதங்கள் ஒலித்திக்கொண்டிருக்க, குளித்து விட்டு வந்த ரஹ்மான் துண்டோடு சீப்பை பிடித்துக்கொண்டு ஆடியவாறு பாடிக்கொண்டிருந்தான். அவன் மனம் முழுக்க பானுவின் நினைவுகள் நேற்று அவளின் பூமுகம், திருமுகம் பார்த்த திருப்தி நெஞ்சம் நிறைத்திருக்க, ஆடல் பாடலோடு அன்றைய  நாளை ஆரம்பித்தான்.

அலைபேசி அடிக்கவே பாட்டு சத்தத்தை குறைத்தவன் திரையை நோக்க பவாஸ் என்று மின்னி மின்னி மறைய “இவன் எதுக்கு காலையிலையே! அழைக்கிறான்” என்ற எண்ணத்தோடு இயக்கி காதில் வைக்க

“ரஹ்மான் நான் சொல்லுறத கவனமா கேளு முபாரக் தங்கச்சிய பார்க்க இன்னைக்கு மாப்பிள வீட்டுல இருந்து வரங்களாம். மாப்புளைக்கு ஏற்கனவே கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்கு” பவாஸ் சீரியஸாக சொல்ல சத்தமாக சிரித்தான் ரஹ்மான்.

“ஏன்டா அந்த அஸ்ரப் இப்படியெல்லாம் பேச சொல்லி கொடுத்தானா? இத்துனை வருஷமா மனசுக்குள்ள பூட்டி வச்ச காதல் ஒரே நாள்ல ஊருக்கே தெரிஞ்சி போச்சு. அஸ்ரப் பய என்ன வெறுப்பேத்த, கடுப்பேத்த என்ன வேலைனாலும் பார்ப்பான்.  விட்டா ஊருக்கே டெலிகாஸ்ட் பண்ணி இருப்பான். அவன் வேல மிச்சமில்லை அதான் புதுசா ட்ரை பண்ணுறான். சொல்லி வை அவன் கிட்ட ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இந்த ரஹ்மான் இருக்க மாட்டேன்” ரஹ்மான் சிரித்துக் கொண்டே கூற பவாஸ் என்ன சொல்வதென்று முழிக்கலானான்.

சற்று நேரம் மௌனம். ரஹ்மான் அலைபேசியை அணைக்க முற்படுகையில் மீண்டும் பேசினான் பவாஸ் “ரஹ்மான் உன் விசயத்துல நான் விளையாட மாட்டேன். அது உனக்கே நல்ல தெரியும். வாப்பா மௌத்தாகி ரெண்டு அக்காவை எப்படி கரை சேக்குறதுன்னு யோசிச்சு கிட்டு இருக்கும் போது ஷெட்ட வச்சி கொடுத்து மொதலே போடாத என்ன பார்ட்னராக சேர்த்துக்கிட்டவன் நீ. கல்லால காசு எடுக்க மட்டும் வரான்னு உன்ன கலாய்ச்சாலும், நீ தினமும் என்ன பார்க்க வரதும், என் நலன் விசாரிக்கிறதும், குறைகளை அலசுரதும் எனக்கு புரியாமலில்லை. செஞ்சிட்டு சொல்லி காட்டுற நண்பர்களின் மத்தியில் தோள் கொடுக்குற நண்பன் நீ. உனக்காக என்னவேனாலும் செய்வேன் டா… உன் லவ் மேட்டர் ஊருக்கே தெரியும். கூட இருக்குற எனக்கு தெரியாது என்கிற கோபம் இருந்தாலும், அது உன் பெர்சனல். அதுல தலையிட என்னால முடியாது. ஆனா இப்போ உன் லவ்க்கே பிரச்சினைனா, அது உன் லைப்புக்கே பிரச்சினை. அதான் சொல்லுறேன். நான் சொன்னது எல்லாம் உண்மை” மூச்சு விடாமல் பவாஸ் பேச அதிர்ச்சிக்குள்ளானான் ரஹ்மான்

“டேய் என்னடா… என்னென்னமோ சொல்லுற? நேத்து கூட அவளை பார்த்தேனே! நல்லாதானே இருந்தா… கல்யாணமாக போற கவலை கொஞ்சம் கூட இருக்களையே!” ரஹ்மான் குழம்பிப் போய் பேச

“அந்த புள்ளைக்கு தெரியுமோ! சொன்னாங்களோ! இல்லையோ! மாப்புள எங்க சொந்தம்தான் டா… நல்ல பையன் தான். அதுக்காக ஸ்கூல் போற பொண்ண ரெண்டு குழந்தை இருக்குறவனுக்கு அவசர அவசரமாக கல்யாணம் பண்ணி கொடுக்க போறாங்களே!” பவாஸ் ஆதங்கமாக பேச

“நீ போன வை நான் நேர்ல போய் பேசிக்கிறேன்”

“டேய் அவசரப்பட்டு முபாரக்கோடு சண்டை போடாத வீண்…” பவாஸ் முடிக்க முன் அலைபேசி துண்டிக்கப்பட்டிருக்க அஷ்ரப்பை அழைக்கலானான் பவாஸ்.

அவசர அவசரமாக கையில் கிடைத்ததை அணிந்துக்கொண்டு ரஹ்மான் வீட்டிலிருந்து வெளியேற அன்னை ரஸீனா சாப்பிட்டு விட்டு போகும் படி கூறியது கூட காதில் விழவில்லை.

வண்டியை இயக்க வாசலில் ஒரு வண்டி வந்து நிற்கவும் அதிலிருந்து அக்கா ஜமீலா மற்றும், மச்சான் வசீம் வந்திறங்க அவர்களையும் கண்டு கொள்ளாது செல்ல, அக்கா ஜமீலா கத்த, வசீம் அவளை சமாதானப்படுத்தியவாறு உள்ளே அழைத்து சென்றான்.

“உக்காருங்க ஏன் நின்னு கிட்டே நிக்குறீங்க?” கதிரையில் அமர்ந்தவாறு காதர் சாதாரணமாக பேச்சு கொடுக்க நடுங்கியவாறு அமர்ந்தாள் ஷஹீரா.

“பி கம்பார்டபள். காலேஜ் போற பொண்ணு இப்படி பயப்படுறீங்க?” அவளை பேச வைக்க முயன்றான் காதர்.

“இல்ல…” ஷஹீரா வாயை திறந்து பேச காற்றுதான் வந்தது.

“என்ன சொன்னீங்க?”

“காலேஜ் போகல” சிரமப்பட்டு வார்த்தைகளை கோர்த்து சொல்ல

“அப்போ இந்த புக்ஸ் யாருடையது” யோசனையாக கேட்டான் காதர்.

ஷஹீராவால் பதில் சொல்ல முடியவில்லை கண்களில் நீர் நிறைந்து நெஞ்சம் அடைத்துக்கொள்ள வார்த்தை வராததால் கையை நெஞ்சில் வைத்து என்னுடையதுதான் என்று தலையசைத்து கூற “என்ன படிக்கிறீங்க?” சந்தேகமாக கேட்டான் காதர்

“ஸ்கூல் போறேன்”

அவள் பதிலில் இரத்தம் கொதித்தது. ஒரு சிறு பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கே அமர்த்தி வைத்திருக்க அவள் மனநிலையை உணர்ந்தவன்

“நான் உங்கள கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். நீங்க முதல்ல ஸ்கூல் போய் படிங்க” அவன் வார்த்தைகள் திடமாக வர, தலையை உயர்த்தி அவனை நேராக பார்த்தவள் “நிஜமாவா?” என்று கண்களாளேயே கேட்டாள்.

அவள் குழந்தை தனம் முகத்தில் தெரிய சிரிப்பு வந்தாலும்  நிஜம் உரைத்தது. அவன் மறுத்தாலும் வேறு எங்காவது திருமணம் செய்து கொடுப்பார்கள் ஆனால் அவசரமாக திருமணம் செய்ய காரணம் இருக்க வேண்டும் என்பதால் அதை சொல்லி அவளை பயமுறுத்தாமல் 

“உண்மைதான். இந்த காலத்துல வேலைக்கு போகலைனாலும் பொம்பள புள்ளைங்க படிச்சி இருக்குறது முக்கியம். நீங்க ஸ்கூல் முடிக்கலையே! உங்கள எப்படி கல்யாணம் பண்ணுறது” படிக்காதது பெரிய குறை போல் கூறியவன் அவள் முகம் வாடுவதை கண்டு “ஆமா ஏன் ஸ்கூல் போகாம வீட்டோட இருக்கீங்க?”

அவள் என்னவென்று சொல்ல. அவள் மேல் தப்பே இல்லையென்றாலும் ரஹ்மானை பற்றி கூறினால் காதர் என்ன நினைப்பான் என்ற அச்சம் தோன்ற பதில் சொல்லாது மெளனமாக

“யாரையாவது லவ் பண்ணுறீங்களா?” ஏனோ அங்கிருந்த காத்தாடியை பார்த்ததும் காதருக்கு அந்த கேள்வியை கேட்க தோன்றியது.

இல்லையென்று  தலையசைத்தவள் ஒருவன் வழி மறித்து  காதலை சொன்னதாகவும் அது வீட்டுக்கு தெரிந்து பிரச்சினை பெரிதாகி படிப்பை நிறுத்தி விட்டதாக மட்டும் கூறினாள்.

காதருக்கு ஷஹீராவை பார்க்க பாவமாக இருந்தது. இதுவே வேறு ஒருவனாக இருந்தாள் விசாரிக்காமல் அவளை திருமணம் செய்ய சம்மதித்து இருப்பான். அவள் ஆசைகளும் ஒடுங்கிப் போய் இருக்கும். அவளுக்காக அவள் வீட்டி பேச அவனுக்கு எந்த உரிமையும் இல்லை. காலேஜ் செல்லும் பெண்ணாக இருந்தாள் திருமணத்துக்கு பின் படிக்க வைக்கலாம். ஆனாலும் வயதில் சிறியவள் படிக்க வைக்கிறதுக்காக அவளை திருமணமும் செய்ய முடியாது. எனக்கென்ன என்று ஒதுங்கவும் காதரின் மனம் இடமளிக்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசிக்க புயல் போல் உள்ளே நுழைந்த ரஹ்மான் கதவை தாளிட்டு விட்டு காதரை முறைக்கலானான்.

ஷஹீராவின் வீட்டின் முன் வண்டியை நிறுத்திய ரஹ்மான் உள்ளே செல்வதா? வேண்டாமா? என்று யோசிக்கவே இல்லை. அவன் பானுவுக்கு அவசர திருமணம் அதுவும் இரண்டு குழந்தைகளின் தந்தையோடு. இதெல்லாம் தன்னால் வந்தது என்று சற்றும் யோசிக்காமல் இன்னொரு பூகம்பத்தை கிளப்ப உள்ளே நுழைய, அந்த நேரம் பார்த்து முபாரக் கழிவறைக்கு சென்றிருப்பான் போலும் அக்பர் அதிர்ச்சியடைய ரஹ்மானின் கண்கள் மாப்பிள்ளையைத்தான் தேடியது. காதர் மட்டும் கண்களில் சிக்கி இருந்தால் அடித்து தும்சம் பண்ணி இருப்பான்.

அக்பர் அவன் அருகில் வரும் முன் பேகத்திடம் சென்று பானுவின் அறை எது என்று கேட்க அதிர்ச்சியிலிருந்தவளின் கை தானாக ஷஹீராவின் அறையை காட்ட அறைக்குள் நுழைந்தவன் தாப்பாளிட அதிர்ச்சியடைந்த ஷஹீ எழுந்து நின்று விட்டாள்.

காதரை அடிக்கும் வேகத்தில் உள்ளே நுழைந்த ரஹ்மான் ஷஹீராவை புடவையில் முதன் முதலாக பார்த்ததில் அந்நியனாக இருந்தவன் ரெமோ மூடுக்கு மாறி இருந்தான்.

அவன் மொத்த கோபமும் சலவை செய்து கறை காணாமல் போன துணி போல் எங்கு சென்றதென்றே தெரியாமல் கோபமாக உள்ளே வந்தவனின் கண்களிலும், முகத்திலும் நொடியில் அப்படியொரு மாற்றம். காதலால் வந்த மாற்றம். அவன் காதல் தேவதையை கண்டதால் வந்த மாற்றம்.

பௌர்ணமி நிலவை

மிக அருகினில் பார்த்தேன்

பரவச கடலில்

நான் படகாய் ஆனேன்

தேவதை கண்ணில்

இரு தூண்டிலை பார்த்தேன்

மாட்டிய மீனாய்

ஆனேன் ஆனேன்

பல்லவன் உளிகள் கூடி

செதுக்கிய சிலை தானா

பிரம்மன் சிலையை பார்த்து

ஜீவனை கொடுத்தானா

தீண்டாமல் திருடசொன்னானா

என்னை இன்று

இதயத்தை காணவில்லை

அது தொலைந்தும் நான் தேடவில்லை

ஷஹீயின் அதிர்ச்சியடைந்த முகபாவத்தை பார்த்தவாறு எழுந்த காதரும் ரஹ்மானை யோசனையாக ஏறிட்டு

“யாரு தம்பி நீங்க” என்று விசாரித்தான்.

பெண் பார்க்க வந்த இடத்தில் ஒருவன் கதவை தட்டி அனுமதி இல்லாமல் அறைக்குள் வந்ததுமில்லாது தாப்பாளும் இடுகிறான் என்றால் அவன் ஷஹீராவுக்கு நன்கு பழக்கமானவனாக இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் காதர் கேட்க ரஹ்மான் சொன்ன பதிலில் மற்ற இருவருமே அதிர்ந்தனர்.

“இவளை கல்யாணம் பண்ணிக்க போறவன். கிட்ட தட்ட பத்து வருஷத்துக்கு மேலா லவ் பண்ணுறேன். முந்தா…நாள்தான் லவ் பண்ணுறதயே சொன்னேன். அவ பதில் சொல்லுறதுக்குள்ள ஊருக்கே விஷயம் தெரிஞ்சிருச்சு. இதோ நேத்து நான் வாங்கிக் கொடுத்த காத்தாடி இன்னும் அவ ரூம்ல இருக்கே! எங்க ரெண்டு பேரோட முதல் எழுத்தோட. அவ பதில் எனக்கு தெரிஞ்சிருச்சு. நீங்க யாரு? மனசுல சுமக்குறவ மனைவினா… என் மனைவியோட ரூம்ல உங்களுக்கென்ன வேல?” கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு திமிராக பேசுபவனை ஆழ்ந்து பார்த்த காதருக்கு புன்னகை மலர கதவும் பட படவென தட்டுப்பட பல்லைக் கடித்தான் ரஹ்மான்.

“ஒரு நிமிஷம்” என்ற காதர் கதவை திறக்க முபாரக் திமிறிக்கொண்டு உள்ளே வர முனைய “நான் தான் அவரை வரச்சொன்னேன்” என்ற காதர் கதவை மூடி தாப்பாளிட்டான்.

ஷஹீரா அங்கே என்ன நடக்கிறது என்று அதிர்ச்சியாக வாய் பிளந்து பார்த்திருக்க, காதரை ஆச்சரியமாக பாத்திருந்தான் ரஹ்மான்.  

ரஹ்மானை சந்தித்த அன்றிலிருந்து அவளுக்கு அதிர்ச்சியை தவிர அவன் வேறு ஒன்றையும்  கொடுக்கவே இல்லை. முதல் சந்திப்பிலையே! காதலை சொல்லி அதிர்ச்சி கொடுத்தான் என்றால் மருத்துவமனைக்கு வந்து சுயநினைவே இல்லாத நேரம் தனியாக இருக்கும் பொழுது அறையில் நுழைந்து அதிர்ச்சி கொடுத்தான். {தொட்டுப் பேசியதுதான் அவளுக்கு தெரியாதே!} ஏன் நேற்று கூட வீட்டின் அருகில் நின்று என்னமோ பலகாலம் பழகிய காதலர்கள் விடைபெறுவது போல் கையசைத்தான். இன்று என்னவென்றால் வீட்டுக்குள்ளேயே வந்து அவளும் அவனை காதலிப்பதாக  சொல்லிக்கொண்டு இருக்கிறான். காத்தாடி இவன் வாங்கிக் கொடுத்ததா? ஹஸன் சொல்லவே இல்ல” அவள் பார்வை காத்தாடியின் புறம் செல்ல ஆங்கில எழுத்துக்கள் அவளை பார்த்து சிரித்தன.      

“உக்காருங்க தம்பி” என்றவாறு காதர் அமர்ந்துகொள்ள ரஹ்மானும் அமர்ந்துகொண்டான் ஷஹீரா நின்றவாறு இருக்க

“நீ போய் கட்டில்ல உக்காருமா” என்று ஷஹீராவை பார்க்கமாலையே சொன்ன காதர் ரஹ்மான் யார்? என்ன என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று விசாரிக்க ஆரம்பித்தான்.

ஷஹீரா கட்டிலில் அமர்ந்திருக்க, இருவருக்குமே பக்கவாட்டு தோற்றம்தான். ரஹ்மான் கடைக்கண் பார்வையால் சைட் அடித்தவன் நேரடியாக அவளை பார்க்க வேண்டுமானால் கழுத்தை திருப்பி பார்க்க வேண்டி இருந்தது. காதரின் முன் காதல் பார்வை வீச அவன் மனம் விரும்ப வில்லை. வீசினாலும் அதை ஏற்க அவள் அவனை பார்க்க வேண்டுமே! அவள் தான் தலைகுனிந்து அமர்ந்திருந்தாளே!

காதரோடு பேசிக்கொண்டிருந்தவன் காதர் அப்பப்போது யோசனையில் விழ கண்களை சுழற்றி அவன் பானுவை புடவையில் இருக்கும் அழகை ரசிக்கவும் மறக்கவில்லை. பாடசாலை சீருடையிலையே அவன் கண்களுக்கு தேவதையாக தெரிபவள். இன்று புடவையில் மிதமான ஒப்பனையில், அளவான நகைகளோடு பேரழகியாக இருந்தால் அவன் மனதை அடக்கத்தான் முடியுமா? கண்களும் அவன் சொற்பேச்சு கேளாமல் அடிக்கடி காதரை ஏமாற்றி விட்டதாக கள்ள பார்வை பார்த்து வைக்க உள்ளுக்குள் சிரித்த காதரும் ரஹ்மான் மனதில் பானு என்பவள் எந்த அளவுக்கு பதிந்து போய் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு கண்டும் காணாதது போல் இருந்தான்.

ரஹ்மானின் பார்வையோ! அவள் மருதாணி வைத்திருந்தாள் நன்றாக இருந்திருக்கும், இந்த நிறத்தில் புடவை கட்டி இருந்தால் எடுப்பாக இருக்கும், என்ன நகை போட்டிருக்கிறாள் எல்லாம் பழைய டிசைன் புதுசா வாங்கணும் என்றெல்லாம் அவளை அளவிட்டு கண்களில் நிரப்பிக்கொண்டிருந்தான்.

“காலேஜ் படிக்கீறீங்க.. வயசு கோளாறு லவ் பண்ணிடீங்கனு நினச்சேன். இன்னும் ஒரு வருஷம் உங்க படிப்பு இருக்கு. இந்த பொண்ணு படிச்சு கிட்டு இருக்கா.. இவங்க வீட்டுல சம்மதிக்க மாட்டாங்கன்னு தோணுது”

“என்ன ஒதிங்கிக்கனு சொல்லுறீங்களா?” ரஹ்மான் காதரை முறைக்க

சிரித்தவாறே “உங்களுக்காக நானும் பேசிப் பாக்குறேன்” ஷஹீரா கூறியது உண்மையாக இருந்தாலும் அவள் அறையில் காத்தாடியை கண்ட பின் அது ரஹ்மான் தான் கொடுத்தான் என்பதை அவள் மறுக்கவுமில்லை என்பதால் அவளும் ரஹ்மானை விரும்புவதாக நினைத்தான் காதர்.

இருவரும் பேசி முடித்த பின் “என்ன தம்பி உங்க வருங்கால மனைவி கிட்ட தனியா ஏதாவது பேசணுமா?” காதர் கிண்டலாகவே கேட்க

“வெளிய என் வில்லன் இருக்கான். தனியா பேசினா பிரச்சினை பண்ணுவான். முதல்ல பேசி ஒரு முடிவுக்கு வருவோம்” என்றவன் ஷஹீராவை காதல் பார்வை பார்க்க அவள் அவனை தலை உயர்த்தி பார்க்கவே இல்லை. வெக்கப்பட்டு தலை குனிந்து இருக்கிறாள் என்றெண்ணி அறையை விட்டு காதரோடு வெளியேறினான் ரஹ்மான்.

ரஹ்மானின் தோளில் கைபோட்டவாறு வெளியே வரும் காதரை வெறுப்போடு பார்த்தான் முபாரக். அனனைவரும் அவர்களை அதிர்ச்சியாகவும், ஆச்சயரியமாகவும் பார்த்திருக்க, காதர் பேசினான்

“இங்க பாருங்க அக்பர் சாச்சா இந்த பையன் உங்க வீட்டு பொண்ண விரும்புறதுக்காக அவளுக்கு அவசர கல்யாணம் ஏற்பாடு பண்ணுறீங்க. இந்த பையன் கிட்ட என்ன குறைய கண்டீங்க?” காதர் அக்பரிடம் நேரடியாக பேச முபாரக் பதில் சொன்னான்

“உங்களுக்கு பொண்ண பிடிக்கலைன்னா எந்திரிச்சு வெளிய போங்க அத விட்டுட்டு இவனுக்காக பேசாதீங்க”

“தம்பி பெரியவர் கிட்ட பேசி கிட்டு இருக்கேன்ல நடுவுல பேசாத. அப்பொறம் ஸ்கூல் போற பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாத்தீங்கன்னு நான்தான் கோபப்பட வேண்டிய இடத்துல கோபப்படணும்” என்றவன் மஸீஹாவையும் ஒரு பார்வை பார்த்து வைத்தான்.

என்னதான் பெண்களின் திருமண வயதை நாட்டோட சட்டம் தீர்மானித்தாலும் இவ்வாறான திருமணங்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. மஸீஹா எச்சிலை மென்று விழுங்க முபாரக் ரஹ்மானை முறைத்தவாறு கைகளைக் கட்டிக்கொண்டான்.

ரஹ்மான் யாரையும் பொருட்படுத்தாது அக்பரிடம் நேரடியாகப் பேசினான். தான் என்ன படிக்கிறான் தற்போது என்னென்ன தொழில் பார்க்கிறான் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதுவரை கூறியவன் வெளியே விசாரிக்கும் படியும் சொல்ல அக்பருக்கே அவன் மேல் மரியாதை வந்தது.

தந்தையின் காசில் வண்டியை வாங்கி பெண்களின் பின்னால் சுற்றும் இளசுகளுக்கு மத்தியில் கையிலிருக்கும் காசை முதலீடாகக் கொண்டு பணத்தை சம்பாதிப்பது எப்படி என்று யோசிப்பவன் கண்டிப்பாக ஒரு நாள் நல்ல நிலைமைக்கு வருவான் என்று தோன்ற பேகத்தின் முகத்தை பார்த்து சம்மதமா என்று கேட்க அவளும் தலையசைக்க

“சரிப்பா…. உங்க வீட்டுல பேசி பொண்ணு கேட்டு வாங்க” அக்பர் ஒரே போடாக போட ரஹ்மானுக்கு சந்தோசம் தாளவில்லை.

“வீட்டுல பேசுறேன் பொண்ணு பார்க்கணும்னா கூட்டிட்டு வரேன். ஆனா இப்போதைக்கு நிகாஹ் பண்ணுற எண்ணம் இல்ல” ரஹ்மான் தெளிவாக சொல்ல

“என்ன சொல்லுறான் இவன்” என்று முபாரக் யோசனைக்குள்ளாக

“பானு ஸ்கூல் போறா.. காலேஜ் முடிக்கட்டும் அதுக்கு பிறகு கல்யாணத்த பத்தி பேசுவோம்”

“அது சரிப்பட்டு வராது தம்பி” அக்பர் தீர்மானமாக சொல்ல

“என்ன பிரச்சினை” கேட்டது காதர்

“அது வந்து…” என்று அக்பர் இழுக்க

“இவன் பண்ண ரகலைல ஊர் பூரா விஷயம் தெரிஞ்சிருச்சு. அதான் மாமா யோசிக்கிறார்”

“பொண்ணு கல்யாணம் பண்ணி காலேஜ் போறது பரவால்ல ஸ்கூல் போறதுதான் வேடிக்கையா இருக்கும். எக்ஸாமுக்கு இன்னும் ரெண்டு மாசம் தானே ஸ்கூல் போகட்டும் அதுக்கு பிறகு ரெண்டு குடும்பமும் உக்காந்து பேசுங்களேன்” காதர் சொல்ல அக்பர் பேகத்தைத்தான் ஏறிட்டான்

ரஹ்மானை பார்த்து “அவ ஸ்கூல் முடிச்ச பிறகு குடும்பத்தோட வாங்க மகன்” என்றாள் பேகம்

ரஹ்மான் சந்தோச வானில் பறந்தவாறு வீடு நோக்கி செல்ல அவன் பானு விடம் கல்யாணம் பண்ணிக்க சம்மதமா என்று வீட்டார் கேட்காமல் விட்ட அதே தப்பை செய்தான். உள்ளே இருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ஷஹீரா தன்னிலையை நினைத்து அழுது கரையலானாள்.

தன் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவு தனக்கில்லையா? என்ன வாழ்க்கை இது? ஆளாளுக்கு தான் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை எடுக்கிறார்கள். ஒரு வார்த்தை ஒரே வார்த்தையாவது தன்னிடம் கேட்க வேண்டும் என்று எண்ணம் யாருக்குமே வராதா? நான் என்ன பொம்மையா? கல்லா? மண்ணா?

ஆனால் முபாரக் வேறு சொன்னால் தன் மேல் இருக்கும் பகையை மனதில் வைத்துக்கொண்டு ரஹ்மான் பானுவின் வாழ்வில் விளையாடப் பார்ப்பதாகவும். நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்துவதே அவனது நோக்கம். அது நின்றும் விட்டது. இனி அவன் திருமண பேச்சை எடுக்க மாட்டான். அல்லது திருமணம் பேசி வைத்து விட்டு காரணம் சொல்லி நாள் கடத்துவான் என்றான்.

அக்பரோ ரஹ்மான் பொய் சொல்வதாக தெரியவில்லை. எதற்கும் வெளியில் விசாரிக்கிறேன். நவ்பர் பாய் கோபத்தில் பேசினாலும் அவருடைய குடும்பம் நல்ல குடும்பம் என்றார்.