தேனிலவை முடித்துக்கொண்ட புதுமண தம்பதியினர் ஊர் திரும்பி மூன்று நாட்களாகி இருந்தனர்.
ஊர் திரும்பிய ரஹ்மானுக்கு ஹாஜராவிடமிருந்து கல்யாணத்துக்கு சம்மதம் என்று செய்தி கிட்டும் முன்பாகவே முபாரக் அலைபேசியில் அழைத்து ஹாஜரா சம்மதம் சொன்னதை சந்தோசமாக பகிர்ந்திருந்தான்.
ஹஜாராவை அழைத்த ரஹ்மான் “முபாரக் கிட்ட என்ன சொன்ன?” என்று விசாரித்தான்.
“என்ன சொன்னேன்” பதட்ட மடைந்தாள் ஹாஜரா.
எங்கே ரஹ்மானிடம் முபாரக் தான் போட்ட கண்டிஷனை கூறிவிட்டானா? என்று ஒரு கணம் நடுநடுங்கி நின்றவள் அவனே அதை பற்றி முழுசாக காது கொடுத்து கேட்கவில்லை. அதனால் நாநாவிடம் கூறி இருக்க முடியாது என்று நொடியில் உணர்ந்தவள் முகத்தை சாதாரனனமாக வைத்துக்கொண்டு மீண்டும்
“என்ன சொன்னேன்” என்று ரஹ்மானிடமே கேட்டாள்.
“இந்த பொம்பள புள்ளைங்க எல்லாமே ஒரே மாதிரி தான் இருக்காளுங்க. நாம என்ன கேக்குறோம்னு நல்ல தெரிஞ்சும் எங்க வாயாலேயே அது என்னனு தெரியாத மாதிரி கேப்பாளுங்க” முணுமுணுத்தவன்
“ஆமாம்” என்று தலையசைத்த ஹாஜரா “நீங்க தானே என் கிட்ட வந்து பேச பெர்மிஷன் கொடுத்ததா சொன்னான். வந்து பேசினான். ஆ.. கைய புடிச்சி இழுத்துட்டு காபி ஷாப் போய் உக்கார வச்சி பேசினான்” வேண்டுமென்றே சொல்ல ரஹ்மான் அவளை முறைத்துப் பார்க்க
நாநா மேல் குற்றம் சாட்ட முனைந்தவள் அவன் முறைத்ததில் தன் குட்டு வெளிப்பட்டு விடும் என்று சுதாரித்து “பேசினத்துல நான் பண்ணது தப்புனு புரிஞ்சிக்கிட்டேன். அதான் கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன்”
ஹாஜராவின் கோபம் இவ்வளவு சீக்கிரத்தில் அடங்கியத்தில் சந்தேகம் கொண்டு “ரொம்ப பாஸ்ட்டா சொல்லிட்டியே” தாடையை தடவி யோசிக்க,
தடுமாறியவள் சமாளித்து “சரி அப்போ இன்னும் மூணு மாசம் கழிச்சு சொல்லுறேன்” என்று இடத்தை விட்டு நகர அவள் செயல் ரஹ்மானாவுக்கு சிரிப்பை மூட்ட செல்லமாக அவள் தலையில் கொட்டியவன்
“சம்மதம் சொல்லுறது மட்டும் தான் என் கைல இருக்கு மத்ததெல்லாம் உங்க இஷ்டப்படி பார்த்து பண்ணுங்க” “உங்க” என்று குடும்பத்தாரை குறித்தவள் தலை குனிந்து அடக்க ஒடுக்கமாக பதில் சொல்லி நடிக்க ரஹ்மானால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
அவன் வாய்விட்டு சிரிக்கவும் பாஷித் மற்றும் பானு அங்கே ஆஜராக நடந்ததை கூறி ரஹ்மான் சிரிக்க, பாஷித்தும் ஹாஜராவின் முடியை இழுத்து தலையில் கொட்ட ஷஹீ அவளை தன் புறம் இழுத்து
“இனி என் மைனி மேல யாராச்சும் கை வைங்க பார்க்கலாம். அப்பொறம் இருக்கு நாநாகும் தம்பிக்கும்” என்று மிரட்ட
“அட சப்போர்ட்டுக்கு ஆள புடிச்சிட்டா டா” என்று பாஷித் சிரிக்க
“அவ கல்யாணமாகி உன் நாநா கூட போய்டுவா? உன்ன எங்க கிட்ட இருந்து யாரு காப்பாத்துறது” என்று ரஹ்மான் தம்பிக்கு ஹை பை கொடுக்க முழித்தாள் ஷஹீ.
அவள் கண்ணழகில் விழுந்தவன் கண்ஜாடை செய்து அறைக்குள் வரும்படி சொல்ல கணவனை முறைத்தவள் அவனுக்கு கண்ணாமூச்சி காட்டலானாள்.
ஹாஜரா கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்ததை வீட்டில் சொல்லிய ரஹ்மான் அய்நா சாச்சியையும் அழைத்து பேச ஹனாவின் கல்யாணத்தோடு சேர்த்து பண்ணலாமா என்று ஹனாவின் மாப்பிள்ளை வீட்டாரிடமும், முபாரக்கின் வீட்டாரிடமும் கேட்டுப் பார்க்கலாம் என்று கூற ரஹ்மானும் சரி என்று விட்டான்.
ஷஹீயும் காலேஜ் செல்ல ஆரம்பித்திருந்தாள். விடுபட்ட பாடங்களை தொடர்வதோடு ரஹ்மானிடம் காதல் பாடங்களையும் மறக்காமல் படிக்கலானாள் அவள்.
ரஹ்மான் பானுவின் வாழ்க்கை படகு அழகா நகர்ந்து கொண்டிருக்க, முபாரக் ஹாஜராவின் வாழ்க்கை கீறல் விழுந்த சீடி போல் நகர்ந்து கொண்டிருந்தது.
ஹாஜரா அவனோடு அலைபேசியில் ஒழுங்காக பேசுவதும் இல்லை. “படிக்க வேண்டும் இப்பொழுதே எல்லாம் பேசினால் கல்யாணத்துக்கு பிறகு என்ன பேசுவது” என்று மறுக்க, “சரி. கல்யாணத்துக்கு இன்னும் ஐந்து மாதங்கள் தானே” என்று விட்டான் முபாரக்.
வாரம் ஒரு நாள் ஷஹீயை பார்க்கும் சாக்கில் ஹஜாராவை பார்க்க ரஹ்மானின் வீட்டுக்கு வந்தால் ஹாஜரா சமையலறையை விட்டு வெளியவே வரமாட்டாள். அவன் வருவது ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவன் வரும் நேரத்தை கணித்து தூங்கி விடுவாள்.
இவ்வாறு முபாரக்கை ஹாஜரா தவிர்க்க முபாரக்குக்கு எதோ புரிவது போல் இருக்க ரஹ்மானிடம் சென்று நின்றவன்
“என்ன உன் தங்கச்சிய கண்ணுலயே காட்ட மாட்டேங்குற? நான் அவளை பார்க்க இங்க வரேன்னு தெரிஞ்சே அவளை வேற எங்கயாச்சும் அனுப்பி வைக்கிறியா?” கடுப்பாகவே கேட்டான்.
முபாரக் வரும் பொழுதெல்லாம் ரஹ்மான் வீட்டில் இல்லை. கடை வேலையாக கடந்த ஒரு சில வாரங்களாக அலைந்து கொண்டிருக்கிறான்.
“என்ன சொல்லுற?” ரஹ்மானும் புரியாமல் தான் கேட்டான்.
ரஹ்மான் கேட்ட விதத்திலையே சுதாரித்த முபாரக் “உன் தங்கச்சியோட கோபத்தை பத்தி தெரியாதாடா. கிண்டல் பண்ணேன் முகத்தை தூக்கி வச்சி கிட்டு இருக்கா. பேச மாட்டேங்குறா. எப்படியாச்சும் பேச வைடா” என்று கெஞ்ச
“நீ அடங்க மாட்ட” என்றவன் “சரி வா” என்று அவனை வீட்டுக்கு அழைத்து செல்ல அன்று ஹாஜரா பானுவோடு அவர்களின் அறையில் தான் பேசிக்கொண்டிருந்தாள்.
ரஹ்மானோடு உள்ளே வந்தவனை கண்டு திகைத்தவளை ஆராய்ச்சி பார்வை பார்த்த ரஹ்மானுக்கு முபாரக் சொன்னது உண்மை என்பது போல் தான் தோன்றியது. முபாரக் தங்களுடைய பிரச்சினையை தாங்களே பேசி தீர்த்து கொள்ளலாம் என்று கூறாமல் இருந்ததால் ரஹ்மானால் ஒன்றும் கணிக்க முடியவில்லை. இல்லையாயின் அன்றே அவளோடு பேசி இருப்பான்.
ஹாஜராவல் எழுந்து செல்லவும் முடியவில்லை. அருந்த ஏதாவது எடுத்து வருகிறேன் என்று நழுவ பார்த்தவளை “வெளியே அருந்தி விட்டுத்தான் வந்தோம்” என்று கூறி ரஹ்மான் அங்கேயே அவளை பிடித்து அமர்த்தி விட்டான்.
பானுவிடம் எதையோ எடுத்து வரும் படி பணித்த ரஹ்மான் அவள் வெளியேறியதும் “மச்சான் இன்னும் கல்யாணம் ஆகல பேச மட்டும் தான்” என்று முபாரக்கை பார்த்து கூறியவன் “ஹாஜி பொம்பள புள்ள உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது. பேசி தீர்த்துக்க” என்றவன் கதவை சாத்திக்கொண்டு வெளியேறினான்.
இப்படி கோர்த்து விட்டுட்டு போறானே என்று ரஹ்மானின் முதுகை முறைத்தவள் முபாரக்கை முறைத்து “என்ன” என்று கேட்க
“ஏன் ஹாஜி பேச மாட்டேங்குற? கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னியே! இன்னும் கோபம் போகலையா?” ஆசையாக அவன் பார்வை அவள் மீது படிவத்தை கஷ்டப்படுத்தி நிலை நிறுத்தி நேரடியாகவே விசயத்துக்கு வந்தான் முபாரக்
“நான் சம்மதம் சொல்லலைனா நீ பின்னாடி வரதையும், தூது விடுறதையும் நிறுத்தி இருப்பியா?”
“நிச்சயமா இல்ல” விரிந்த புன்னகையிலையே பதில் சொன்னான்.
“அதான்”
“அன்னைக்கி ஏதோ கண்டிஷன்னு சொன்னியே”
அன்று இரவு ஹாஜரா கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன சந்தோசத்தில் மிதந்தவனுக்கு அவள் என்ன சொன்னாலும் சரி என்றுதான் சொல்ல தோன்றியதே தவிர மறுக்க தோன்ற வில்லை. ஆனால் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன பின்னாலும் பழையபடி சிரித்து பேசா விட்டாலும் அவனோடு பேச ஆர்வம் காட்டாததும், அவன் அழைப்புகளை ஏற்காததும், அவனை சந்திக்க மறுப்பதும் கண்டிஷனில் அடங்குபவைகளோ! என்று அச்சம் கொண்டவன் அவளோடு நேரடியாக பேச வேண்டும் என்று முடிவு செய்தான்.
ஹாஜராவுக்காக காலேஜ் வாசலில் தவமாய் தவம் இருந்தாலும் அவள் கண்ணில் தட்டுப்படவே இல்லை. பாஷித் அழைத்து செல்ல வருவதும் அவன் கூட ஹாஜியை தேடி அலைவதும் அவள் வீட்டுக்கு வந்து விட்டேன் என்று அலைபேசியில் சொல்வதும். எல்லாம் தான் காலேஜ் வாசலில் நிற்பதால் தான் என்று ஊகித்தவன் அவள் பாதுகாப்பை ஒட்டி அவளை சந்திப்பதை தவிர்த்தான்.
ஆனால் கல்யாணம் நடந்தால் வாழ்க்கை என்னவாகும் என்ற அச்சம் தலை தூக்க அவளோடு பேசி ஆகணும் என்றுதான் ரஹ்மானிடம் கேட்டான். ஆனால் அவனுக்கும் ஒன்றும் தெரியாது என்று புரிய அவளிடமே பேசலாம் என்று முடிவு செய்து மறைத்தும் விட்டான்.
முபாரக் நேரடியாக கண்டிஷனை பற்றி கேட்பான் என்று நினைக்காத ஹாஜரா “அதான் அன்று சம்மதம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தியே! இன்னும் என்ன?” என்று முறைக்க
“ஒரு ஒப்பந்தம் போட்டா அது வாய் வார்த்தையா இருக்க கூடாது. அது செல்லாதுன்னு அல்லாஹ்வே சொல்லி இருக்கான். அது என்னென்ன கண்டிஷன்னு எழுதி கொடு சைன் பண்ணி கொடுக்குறேன்” என்றான் மர்மப்புன்னகையோடு
“அட தானா வந்து சிக்குறானே” மனதுக்குள் குதூகலித்தவள் மண்டையை ஆட்டுவித்து “கல்யாணம் அண்டைக்கு நைட் எழுதி எடுத்து வரேன்” என்றாள்.
“அடிப்பாவி. அப்போ இப்போ பேசாம இருக்கிறது, பார்க்காம இருக்கிறது எல்லாம் கண்டிஷன்ல இல்ல. பழிவாங்குற. அப்போ நான் நெனச்சா மாதிரிதான் கண்டிஷன் போட்டிருக்க போல. இருக்கு டி உனக்கு. உன்னையும் சைன் பண்ண விட மாட்டேன். நானும் சைன் பண்ண மாட்டேன். இப்போ கேட்டா கல்யாணத்த நிறுத்திடுவீயே! முதல்ல கல்யாணம் நடக்கட்டும். எழுதி எடுத்துட்டு வா. உன் கையாலையே கிழிச்சு எரிஞ்சிட வைக்கிறேன்” மனதுக்குள் சொல்லியவன் அவளை பார்த்து புன்னகை மட்டும் சிந்தினான்.
“உனக்கு இருக்கு” மனதுக்குள் பொறுமியவள் அவனை பார்த்து புன்னகைக்க ரஹ்மானும் பானுவும் உள்ளே நுழைந்தனர்.
“என்ன ரெண்டு பேரும் பேசி ரசியாகிட்டீங்க போல” கேட்டவாறு ஒரு தலையணையை எடுத்து முதுகுக்கு கொடுத்த ரஹ்மான் அமர்ந்து கொள்ள முபாரக்குக்கு டீயை கொடுத்தாள் பானு.
புன்னகைத்தவாறே அதை பெற்றுக்கொண்டவன் ரஹ்மானுக்கு பதில் ஏதும் சொல்லாது அமைதி காத்தான்.
“கடை வேல ஏகப்பட்டது இருக்கு, கொஞ்சம் கூடமாட வந்து உதவி செய்ங்க மச்சான்” ரஹ்மான் கிண்டல் செய்வது போல் கூற
“கண்டிப்பா வரேன்” ஒற்றை பதில் சொன்னவனின் மூளைக்குள் ஹஜாராவை எப்படி மடக்குவது என்று ஓடிக்கொண்டு இருக்க
“ஆமா உங்க கடைய டெவலப் பண்ண எந்த ஐடியாவும் இல்லையா?” மீண்டும் முபாரக்கை கேட்டான் ரஹ்மான்.
ஆண்கள் இருவரும் தொழில் சம்பந்தமாக பேச ஆரம்பிக்கவும் பெண்கள் இருவரும் வெளியேறி இருந்தனர்.
சில்லறை கடைல என்னடா டெவலப் பண்ண இருக்கு?
“நெறய இருக்கு. உங்க கடைல மாடில இடம் வேற இருக்கு இன்னொரு மாடி கூட கட்டலாம். சொந்த கடை வேற. கிட்சன் ஐட்டம்ஸ், பழங்கள், காய் கரி, ஜூஸ் பாட்டில்ஸ் இப்படி எவ்வளவோ இருக்கே” ரஹ்மான் சொல்லிக்கொண்டே போக
“இதெல்லாம் எனக்கு தோணவே இல்லையே” என்றான் முபாரக்.
ஹஸன் வேற வளருற பையன். அவனுக்கும் கடைல பங்கு இருக்கில்ல. ஸ்கூல் விட்ட கொஞ்சம் கூட மாட ஒத்தாசைக்கு வச்சுக்கோ. அப்போதான் வேல பழகுவான்”
பேசும் ரஹ்மானை வியந்து நோக்கிக் கொண்டிருந்தான் முபாரக்.
நாளை விடிந்தால் ரஹ்மானின் கடை திறப்பு விழா. மூணு மாடிகளை கொண்டு கட்டப்பட்டிருந்த கடையில் முதல் மாடியில் தான் அலைபேசிகள் காட்ச்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
மூன்றாம் மாடியில் அலைபேசிகள் பழுது பார்க்கும் வேலைகள் நடைபெறுவதோடு இரண்டாம் மாடியில் அதற்குரிய பொருள்களும், மிகைப்படியான பொருட்களும், ஒரு கழிவறை கட்டப்பட்டதோடு மறு பக்கத்தில் உணவுண்ணவும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரஹ்மான் கடையை வாங்கும் பொழுது வாடகைக்கு பேசி இருந்தான். ஆனால் அவனுக்கு மூன்று மாடிகளாக கடை வேண்டும். கடையும் அமைந்திரும் ஏரியா ஜனக்கூட்டம் வந்து செல்லும் இடம் என்று எல்லாவற்றையும் கணித்தவன் அவரோடு பேச கடையை இடித்து கட்ட அவர் விருப்பம் தெரிவிக்கவில்லை.
சரி இப்பொழுதைக்கு சிறிதாக ஆரம்பிக்கலாம் பிறகு வேறு இடம் பார்க்கலாம் என்று வேலைகளை ஆரம்பிக்கும் பொழுதுதான் அவரே வந்து கடையை வாங்கிக் கொள்கிறீர்களா? என்று கேட்டிருந்தார்.
அஷ்ரப்பிடம் பேசியவன் நவ்பர் பாயிடமும் பேசி அவர்களின் ஒரு இடத்தை விற்றுத்தான் கடையை வாங்கி இருந்தான். இதெல்லாம் கல்யாணம் நடக்க முன் நடந்தவை. அதன் பின் கடையை மூன்று மாடிகளாக கட்டும் வேலையில் இறங்கி இருந்தவன் கல்யாணமும் செய்து கொண்டு வேலை பார்கலானான்.
ஒருவாறு கடை கட்டி முடிக்கப்பட்டு நாளை திறப்பு விழா என்று ஓடிக்கொண்டிருப்பவனுக்கு பானுவோடு சரியாக அமர்ந்து பேச கூட நேரம் கிடைக்கவில்லை. கடையில் எந்த பொருளை எங்கே வைப்பது. எந்த பொருளை கஸ்டமர் அதிகம் கேட்பார்கள் என்றெல்லாம் திட்ட மிட்டு அடிக்கி வைப்பது முதல் எல்லாம் திட்ட மிட்டு இரவு பகல் என்று பாராமல் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
மும்முரமாக எழுதிக்கொண்டிருந்தவளும் சோர்வான கணவனின் முகம் கண்டு புன்னகைத்தவாறே அதை மூடி வைத்து விட்டு “வாங்க சார் இதுதான் வீட்டுக்கு வர லட்சணமா? பொண்டாட்டி என்கிற ஒருத்தி வீட்டுல இருக்கிறதையே மறந்திட்டீங்க போல” என்றவள் துண்டை எடுத்து கொடுக்க
அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன் “ரொம்ப பசிக்குது டி. பகல் கூட ஒழுங்கா சாப்பிடல”
எவ்வளவுதான் வெளியே வேலை இருந்தாலும் பகல் சாப்பாட்டை வீட்டில் சாப்பிடுபவன் இப்பொழுதெல்லாம் வருவதில்லை என்றால் அவனின் வேலை பளு எவ்வாறென்று புரிந்து கொண்டவள்
“நானும் இன்னும் சாப்பிடல சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க, எனக்கும் பசிக்குது” என்று அவனை குளியலறை புறம் தள்ள பதில் பேசாது குளித்து விட்டு வந்தவன் மனைவி எடுத்து வைத்திருந்த உணவின் முன் அமர்ந்திருந்தான்.
தட்டில் உணவை பரிமாறியவள் பிசைந்து கணவனுக்கு ஊட்டி விட அதை வாங்கிக் கொண்டவன் அவளையும் சாப்பிடும்படி தலைசாய்த்தவாறே சாப்பிட வேக வேகமாக அவன் முழங்குவதை கண்டு அவனின் பசியின் அளவை கண்டு கொண்டவள்
“நேரத்துக்கு சாப்பிடாம இப்படியா வேல பாப்பீங்க?” என்று குறை பட
“என்ன செய்ய பானு. எப்பயோ வேல முடிஞ்சிருக்கணும் சின்ன சின்ன பிரச்சினை தலை தூக்குது. மழைனு வேல தள்ளி போகுது. அதான் கிட்ட இருந்தே எல்லா வேலையையும் பாக்குறேன். சரியா திட்டமிட்டு வேல செய்யலைன்னா கஷ்டம்” உணர்ந்து சொன்னான் ரஹ்மான்.
அவனின் திட்டமிடலை பற்றி நன்கு அறிந்தவள் தானே அவள். மறுவீட்டுக்கு மூன்று நாட்கள் தங்க செல்ல துணியை எவ்வாறு அடுக்கினான் என்று கண்கூடாக கண்டவள் தானே அவள். பக்கத்தில் தன் இருக்கிறோம் என்று எதையும் விட்டு செல்லவில்லையே. அவள் அணியும் துணிக்கு நகையிலிருந்து, ஒப்பனை பொருட்கள் வரை அனைத்தையும் எடுத்து வந்தவன் தானே அவள் கணவன். அவன் ஒரு வேலை செய்தால் அதில் எந்த குறையும் இருக்காது. ஆனால் தன்னை சிரமப்படுத்திக்கொள்கிறானே என்ற வருத்தம் பானுவுக்கு வந்தது.
“சரி முதல்ல சாப்பிடுங்க. சாப்பாட்டை வாயில வச்சிக்கிட்டு பேசாதீங்க” செல்லமாக முறைத்தவள் அவனுக்கு ஊட்டி விட்டு தானும் உண்டவள் எல்லாவற்றையும் எடுத்து வைக்க ரஹ்மானும் அவளுக்கு உதவலானான்.
“நீங்க போய் தூங்குங்க நான் எடுத்து வைக்கிறேன்” களைப்பின் மிகுதில் வீடு வந்தவன் தூங்கட்டும் என்று சொல்ல
“உனக்கு எக்ஸாம்ன்னு நீ வேற எதோ எழுதி கிட்டு இருந்தியே! இரு நான் ஹெல்ப் பண்ணுறேன்”
கணவனின் புரிதலை கண்டு மெய் சிலிர்த்தவள் காதலாக அவனை பார்த்து தலையசைத்து புன்னகைக்க
“என்ன பானு குட்டி ரொமான்ஸ் லுக்கு விடுற?” மனைவியின் அருகாமையும், அந்த இரவின் தனிமையும் அவள் காதல் பார்வையும் மெய்தீண்ட ரஹ்மானின் பார்வையும் அவள் மீது ஆசையாக படிந்தது.
“இப்போ எல்லாம் நீங்க என்ன கண்டுகிறதே இல்ல. என் மேல லவ்வே இல்ல” அவன் தோளில் சாய்ந்தவாறு குறைபட சமயலறையிலையே அவளை கைகளில் ஏந்திக்கொண்டவன் அறைக்கு தூக்கிக்கொண்டு நடக்கலானான்.
“என்ன பண்ணுறீங்க? மாமி எந்திரிச்சு வர போறாங்க” மெதுவான குரலில் கணவனை மிரட்டினாலும் பலநாட்களுக்கு பிறகு கிடைத்த நெருக்கத்தை விட மனம் இல்லாமல் கைகளை மாலையாக கணவன் கழுத்தில் கோர்த்திருந்தாள் ஷஹீ.
“நான் வீட்டுக்கு வராம அவங்க தூங்க மாட்டாங்க. கதவை திறந்தது அவங்கதான். சாப்பாடு போடவான்னு கேட்டாங்க என் பொண்டாட்டி போடுவா நீங்க போய் தூங்குங்கன்னு சொல்லி அனுப்பி வச்சேன்” என்று கண் சிமிட்டியவன் கட்டிலில் அவளை கிடத்தி தானும் அருகில் படுத்துக்கொள்ள கணவனை கட்டிக் கொண்ட ஷஹீ கடை வேலைகளை பற்றி விசாரித்தாள்.
“நாளைக்கு காலைல வந்து பார்க்கத்தானே போற. வந்து பாரு. இப்போ தூங்க போறியா? எழுத போறியா? ரோமன்ஸ் பண்ண போரியான்னு டக்குனு முடிவு பண்ணிக்க?” என்றவன் அவள் புறம் திரும்பி படுத்துக்கொண்டு அவள் முகம் நோக்கி நின்றான்.
“தூக்கம் வரல. எழுதுற வேல இருக்கு. ஆனாலும் என் புருஷன் ரொம்ப நாள் கழிச்சி என்ன நெருங்கி வந்திருக்கிறார் ரோமன்ஸ் பண்ணலாம் பா…” என்று நகைக்க ரஹ்மானுக்கு சோர்வு பறந்தோடி இருந்தது.
“ஓ… பண்ணலாமே! என் பொண்டாட்டி ஆசையாக கேட்டு நா இல்லனு சொல்லி இருக்கேனா” கண்சிமிட்டி புன்னகைத்த ரஹ்மான் பானுவின் இடையில் கைபோட்டு தன் புறம் இழுத்திருந்தான்.
சோர்வில் வீடுவந்தவன் வளமை போல் சாப்பிட்ட உடன் தூங்கி விடுவான் என்று நினைத்து பானு கிண்டலாகத்தான் ரொமான்ஸ் பண்ணலாம் என்று கூறி இருந்தாள். ஆனால் அவள் கணவன் இடையில் கை போட்டு இழுப்பான் என்று சற்றும் எதிர்பார்க்காதவள் அவன் நெஞ்சோடு மோதி நிற்க
“என்ன பானு குட்டி ரொமான்ஸ் பண்ணலாம்னு சொல்லிட்டு இப்படி தள்ளி நின்னா நல்லாவா இருக்கு? சொன்னா மட்டும் போதாது சட்டு புட்டுன்னு வேலைய ஆரம்பிக்கணும். எங்க அன்னைக்கி கொடுத்தா மாதிரி ஒரு கிஸ் கொடு பார்க்கலாம்”
அவன் தொடுகை என்றுமே ஒரு சிலிர்ப்பை கொடுக்கும். நீண்ட நாட்களுக்கு பின் ஆசையாக அணுகியதில் நெஞ்சம் படபடக்க நின்றவள் அவன் கேட்டதில் வெக்கம் பிடுங்கித்தின்ன அவன் நெஞ்சிலையே முகம் புதைக்கலானாள்.
சில நேரம் அவனை ஆளுபவள், சில நேரம் வெக்கம் கொண்டு முகம் சிவக்கும் பொழுது ரஹ்மானின் காதல் கொண்ட மனதில் ஊரும் பரவசத்திற்கு அளவே இல்லை. அந்த நேரம் அவள் முகம் மட்டும் பாத்திருந்தால் போதும் ஜென்மம் தீரும் என்றே நினைப்பான்.
மெதுவாக அவள் முகத்தை நிமிர்த்தியவன் நெற்றியில் முத்தமிட ஒற்றைக் கண்ணை திறந்து பார்த்தவள் மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு நின்றிருக்க, அவள் இதழோடு இதழ் பொருத்தியவன் செயற்கை சுவாசம் கொடுக்கலானான்.
காதல் கலந்த அவர்களின் வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் புரிந்து விட்டுக்கொடுத்து போவதால் எந்த பிரச்சினையும் இல்லாமல் அவர்களுடைய நாட்கள் அழகாக நகர்ந்து கொண்டிருக்க கடை திறப்பு விழாவுக்கான நாளும் அழகாக விடிந்தது.
நகரத்தின் மத்தியிலையே வீற்றிருந்தது அந்த கட்டிடம். ஆண்களுக்கு மட்டும் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் குடும்பத்து பெண்களும் கலந்து கொண்டிருந்தனர்.
பள்ளியில் இருந்து வருகை தந்திருந்த இமாம் அவர்களும், ஹஸரத் அவர்களும் துஆ ஓதி பிரத்தினை செய்ய அனைவரும் ஆமீன் சொன்னார்கள். அத்தோடு கடை திறப்பு விழா இனிதே நடந்தேறியது.
அதன் பின் காலை உணவு பரிமாறப்பட்டது. பால்சோறு, இடியாப்பம், புட்டு என்று மூன்று வகையான உணவுகளும், இறைச்சி கறி, கோழி கறி, பருப்பு கறி, அவிச்ச முட்ட, தேங்கா சம்பல், என கறிவகைகளும். இனிப்புக்காக சவ்வரிசி கஞ்சியும் வைக்கப்பட்டிருந்தன.
இரண்டாம் மாடியில் உணவுண்ண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் ஆண்கள் வந்து பரிமாறிக்கொண்டு உண்டு விட்டு செல்லும்வரை பெண்கள் மூன்றாம் மாடியில் தாங்கிக்கொள்ள வெளியாட்கள் சென்ற பின்னர் பெண்களும் வந்து உணவுண்டனர்.
ஷஹீ ரஹ்மானைதான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனின் விடாமுயற்சியும், உழைப்பும் கடை கட்டிடத்திலையே தெரிய, கண்டிப்பாக கொஞ்சம் நாட்களிலையே அசுரர் வளர்ச்சியடையும் என்று எண்ணினாள்.
மனைவியை கண்களால் அலசியவன் தன்னை காதல் பார்வை பார்த்துக்கொண்டிருப்பவளின் அருகில் போய் அமர்ந்து கொண்டான்.
“என்ன பொண்டாட்டி அத்தனை பேர் இருக்கும் போதே இப்படி லுக்கு விடுற?” அவள் புறம் குனிந்து மெதுவாக கூற
“என் புருஷன நான் அப்படிதான் சைட் அடிப்பேங்க” ஷஹீயும் விடாமல் வாயாட
“சபைல இருந்த ரொம்பதான் தைரியம். தனியா இருக்கும் போது பேசேன். பேசுற வாய கடிச்சி வைக்கிறேன்”
“என்ன புருஷனும் பொண்டாட்டியும் ஒரு ஓரமா ஒதுங்கிடீங்க” என்றவாறே முபாரக் வந்தமர
“அதான் நீ வந்தியே டிஸ்டர்ப் பண்ண” ரஹ்மான் முறைக்க ஷஹீ அவன் கையில் பட்டென்று அடித்தாள்.
அவர்களின் அந்நியோன்யத்தை பார்த்து புன்னகைத்தவன் ஹஜாராவை போனவாரம் சந்தித்து பேசியதோடு சரி அவளை சந்திக்கவோ! அலைபேசியில் பேசவோ! முபாரக் முயற்சி செய்யவில்லை.
இன்று பேகத்தோடு செல்லம் கொஞ்சிக் கொண்டிருப்பவளை தூரத்திலிருந்து ரசித்தானே தவிர அருகில் செல்ல எண்ணவில்லை. அவனை கண்டாலே அவள் விழிகள் இடுங்குவதும், முகத்தை சுருக்கி முறைப்பதுமாக இருக்க, கல்யாணம் நடக்கட்டும் உன்னை பார்த்துக்கொள்கின்றேன் என்று கருவிக்கொண்டான்.
“கல்யாணத்துக்கு இன்னும் மூணு மாசம் இருக்கே! நாட்களும் வேகமாக ஓடிடும்” என்று சாதாரணமாக கூறியவன் ஷஹீயோடம் அவளின் பரீட்சையை பற்றி விசாரிக்கலானான்.
முபாரக் ரஹ்மானோடு பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு ரஹ்மானின் உம்மம்மா வந்து அவனருகில் அமர்ந்து பேச ஆரம்பிக்க குடும்பத்து வரப்போகும் புதிய மருமகனைக் கண்டு கொள்ள பெண்கள் கூட்டம் கூட திண்டாடினான் முபாரக்.
ஆளாளுக்கு அவனை கேள்வி கேக்க அவன் ஷஹீயின் முகத்தை பார்த்து முழிக்க, அவள் சிரித்தவாறு பதில் சொல்லலானாள்.
“அது சரி ஹாஜிய சமாளிக்கிறதே கஷ்டம். இதுல எல்லா பொம்பளைங்களும் கேள்வி கேட்டா கல்யாணமே வேணாம்னு ஓட போறான்” அங்கே வந்த பாஷித் சத்தமாக சொல்லி சிரிக்க
வீட்டுக்கு வரப்போகும் மாப்பிளையை மரியாதையாக பேசுமாறு பெண்கள் எகிற அடக்கினான் பாஷித். அங்கே நடப்பதை கை கட்டி அமர்ந்தவாறே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் முபாரக்.