ஷஹீ சென்ற பிறகு வீடே வெறிச்சோடி போய் கிடந்தது. முபாரக் சதா விட்டத்தை பார்த்து சிந்தித்துக் கொண்டிருந்தான். பேகம் தொழுகை பாயே கதி என்று இருக்கலானாள்.
எங்கே தான் கண்ட கனவு பலித்து விடுமோ என்ற பயம் முபாரக்கை ஆட்டுவிக்க துவங்க ரஹ்மானோடு பேசியதில் கொஞ்சம் நிம்மதியடைந்தான். ஆனாலும் எல்லாம் சுமூகமாக நடக்க வேண்டும் என்ற எண்ணம் நெஞ்சில் பதட்டமாக உருமாறி அன்னை அழைப்பது கூட கவனிக்கும் நிலையில் இல்லாமல் இருந்தான் முபாரக்.
“என்ன முபாரக் ஏதாவது பிரச்சினையா? ரெண்டு நாளா நானும் பாத்து கொண்டுதான் இருக்கேன் ஒரு மாதிரியா இருக்க” மகனின் அருகில் அமர்ந்தவள் தலையை தடவியவாறே வினவளானாள்.
“உம்மா நான் உங்களுக்கு எப்படி பட்ட மகன்? நல்ல மகனா என் கடமைகளை சரி வர செய்றேனா?”
“என்றைக்குமே இல்லாம இன்னைக்கி எதுக்கு இப்படியொரு கேள்வியை கேக்குற முபாரக்? வாப்பா இல்லாம உங்க ரெண்டு பேரையும் யார் கிட்டயும் எந்த பேச்சும் கேக்க கூடாதுனு சொல்லி சொல்லித்தான் வளத்தேன் அதே போலத்தானே இருக்கீங்க”
“அது வெளியாட்களுக்கு உம்மா. உங்களுக்கு? ரஹ்மான் இங்க வந்து தங்கின மூணு நாளும் அவன் உங்க கிட்ட நடந்து கொண்ட முறையை பார்த்து நா பிரம்மிச்சுட்டேன். இந்த வீட்டுல ஷஹீ போன பிறகு இருக்கிறதே நாங்க ரெண்டு பேர்தான் நான் பாட்டுக்கு வந்து போட்டு திண்டுட்டு போய்டுவேன். நீங்க திண்டா இல்லையானு கூட கேக்க மாட்டேன். ஷஹீ இருக்குற வரைக்கும் மூணு பேரும் ஒண்ணா தான் சாப்பிட்டோம். நீங்க தனியா வேலை செயிரீங்கனு சில வேலைகளை நான் செஞ்சு கொடுக்குறேன் அத சொல்லல. ஆனா ரஹ்மான் எல்லா வேலைகளிலும் கவனமா இருக்கான். அவனை பாத்து கத்துக்க வேண்டியது நெறய இருக்கு”
“ஒவ்வொருத்தருடைய வீட்டு சூழ் நிலையும் அவங்க வளர்ற விதமும் தான் பா அதற்கு காரணம். உன் கோபத்தை குறைச்சிட்டா உன்ன போல தங்கமான புள்ளய இந்த ஊர்லயே தேட முடியாது” மகனின் கன்னத்தை தடவியவள் செல்லம் கொஞ்ச அன்னையின் மடியில் படுத்து கொண்டான் முபாரக்.
தோளுக்கு மேல் வளர்ந்த பின் அருகில் கூட வர மாட்டான். இன்று மடியில் படுத்துக்கொள்ளவும் தாயுள்ளம் கனிய கையோ தானாக தலை கோத ஆரம்பித்திருந்தது.
“உம்மா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். அய்நா மாமியோட மகளை பத்தி என்ன நினைக்கிறீங்க?” பேகத்திடம் கூறுமாறு ரஹ்மான் கூறி இருக்க எப்படி கூறுவதென்ற தயக்கம் எல்லாம் முபாரக்குக்கு இல்லை மொட்டையாகவே ஆரம்பித்து விட்டான்.
பேகத்துக்கும் மகன் கேட்பது புரியவில்லை. அய்னாவுக்கு இரண்டு பெண்கள் பொதுவாகவே பதில் சொல்லலானாள். “ஆமாம் முபாரக் தங்கமான புள்ளைங்க ரெண்டும். வந்தா சொந்த வீடு மாதிரி எல்லா வேலையும் இழுத்து போட்டு பாக்குதுங்க. மூத்த மகளுக்கு கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்களாம். மாப்புள வெளிநாட்டுல வேலை செய்றாராம் இன்னும் ஆறு மாசத்துல கல்யாணத்த வச்சிக்கலாம்னு சொல்லி இருக்காங்களாம். சின்ன மகளும் அழகானவதான். கொஞ்சம் வாயாடி போற இடத்துல பொழச்சிக்குவா”
நினைவு தெரிந்த நாளிலிருந்து அக்பரோடு கடைக்கு செல்லும் முபாரக் நண்பன் என்று யாரையும் வீட்டுக்கு அழைத்து வந்ததும் இல்லை. தேவைக்கு அதிகமாக அன்னை, தங்கையோடு வளவளத்ததும் இல்லை. இன்று அவன் கேட்ட ஒரு கேள்விக்கு மனம் திறந்து அன்னை பதில் சொல்லிக் கொண்டிருக்க குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டிருந்தான் முபாரக்.
“பொம்பள புள்ளைங்க வாழ்க நல்லவன் ஒருத்தன் கைல போய் சேர்ந்தா போதும் யா அல்லாஹ்” துவாவோடு மகனின் கேள்விக்கு பதில் கூறியவள் அமைதியாக முபாரக் தொடர்ந்தான்.
“அந்த நல்லவன் வல்லவன் உங்க மகனா இருக்க கூடாதா?” பட்டென்று கேட்டவன் அன்னையின் முகம் பார்த்து நிற்க தலை கோதிக் கொண்டிருந்த பேகத்தின் கை வேலை நிறுத்தம் செய்திருந்தது.
“டேய் என்ன சொல்லுற?” பதட்டமாக கேட்டாலும் சந்தோசம் பேகத்தின் குரலில் இழையோடியது. ரஹ்மானுக்கு முபாரக்குக்கும் ஒரே வயது “தான் மகனுக்கும் கல்யாண வயது தானே! ஏன் இதை நான் சிந்திக்கவில்லை. ஷஹீயை பற்றியே சிந்தித்து கொண்டிருந்ததால் முபாரக்கை மறந்து விட்டேன்” பேகத்தின் மனம் நொடியில் குற்றம் சாட்ட “மன்னிச்சிடுடா முபா… உனக்கும் மாப்பிள்ளைக்கும் ஒரே வயது உம்மா கொஞ்சம் யோசிச்சிருந்தா பொண்ணு பார்த்து ஷஹீ கல்யாணத்தோடே உன் கல்யாணத்தையும் செஞ்சிருப்பேன்” மனமுருகும் பொழுதுதான் பேகத்தின் வாயிலிருந்து முபா என்று வரும்.
எழுந்தமர்ந்த முபாரக் அன்னையின் கைகளை பிடித்துக்கொண்டு “உங்க அருமை மாப்புளத்தான் மறுவீட்டு விருந்து முடிச்சிட்டு போகும் பொழுது அந்த வாயாடி தங்கச்சிய கட்டிகிரியான்னு கேட்டான். உம்மாட்ட கேட்டு சொல்லுறேன்னு சொன்னேன்” என்றான் முபாரக்.
பேகத்திடம் அவ்வாறு கூறுமாறு ரஹ்மான் தான் கூறி இருந்தான் “டேய் மச்சான் நான் லவ் பண்ணதுக்கே வீட்டுல ஆயிரத்து எட்டு பிரச்சினை. இதுல நீ லவ் பண்ணுறானு சொன்னினு வை பேகம் மாமிக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும் டா” என்றவன் இவ்வாறு கூறுமாறு கூறி தான் முன் நின்று கல்யாணத்தை பேசி முடிப்பதாக உறுதியளித்து விட்டு சென்றிருந்தான்.
ஷஹீயால் நம்பவே முடியவில்லை. காண்பது கனவா? நனவா? என்று சந்தேகமாக தன்னை கிள்ளிப் பார்த்துக்கொண்டவள் ஹஜாராவையும் தன்னை கிள்ளுமாறு கூறலானாள்.
“என்ன மைனி இது? இந்த குப்பைங்கள கண்டு எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுறீங்க?” ஹாஜரா புரியாமல் கேக்க
அவள் கையில் இருந்த பெட்டியை மூடி வைத்த ஷஹீ “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. போய் படிக்கிற வேலை இருந்தா பாரு” என்று அவளை அறையை விட்டு விரட்டியடிப்பதில் குறியாகவே இருந்தாள்.
“அட இதோடா.. கழுதைக்கு வேணா கற்பூர வாசனை என்னானு தெரியாம இருக்கலாம் ஆனா உங்க முகத்துல எரியுற பல்ப பாத்தா எதோ விஷயம் இருக்கும்னு புரியுது” என்றவள் மற்றுமொரு பெட்டியை திறக்க அதில் விதவிதமான கிரீட்டிங் காட்ஸ் இருந்தன.
பர்த்டே கார்ட்ஸ், நியூ இயர் கார்ட்ஸ், ஈத் காட்ஸ், வேலண்டைன்ஸ்டே காட்ஸ் என ஒவ்வொரு வருடங்களாக வாங்கிய அழகான பூக்கள் பதிந்த வாழ்த்து அட்டைகள் ஷஹீயை வந்து சேராமலையே அந்த பெட்டி நிரம்பி ரஹ்மானின் காதல் வாசம் வீசிக்கொண்டிருந்தது.
அவற்றை பார்த்ததும் ஷஹீயின் கண்களில் மளுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்த்து இவ்வளவு நாளும் நெஞ்சம் அடைத்துக் கொண்டிருந்த காதலை சொல்ல வில்லை என்ற வலி கேவலாக வெளிப்பட அவளை அனைத்து ஆறுதல் படுத்தலானாள் ஹாஜரா.
அவளுக்கு தேவை தனிமை என்றதும் ஹாஜரா அறையை விட்டு வெளியேற இரவு உணவை கூட அறைக்கே கொண்டு வந்து கொடுத்த ஹாஜரா வலுக்கட்டாயமாக ஷஹீயை உண்ண வைத்தாள். அப்பொழுதும் கையில் அந்த வாழ்த்து அட்டைகளை வைத்துக்கொண்டு கலங்கி நின்றவள் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. ஹாஜராவும் எதுவும் கேளாது ரஹ்மான் வந்து பேசினால் எல்லாம் சரியாகும் என்று மௌனமாகவே அறையை விட்டு வெளியேறினாள்.
தன்னிடம் ரஹ்மான் காதலை சொன்ன போது அவனை அவளுக்கு அறிமுகமற்றவன் என்ற அடியாளப்படுத்தினால் கூட தவறில்லை. அன்று முதல் அவன் மட்டும் தான் அவள் வாழ்வில் முக்கியமானவன் என்றானான்.
காலேஜ் செல்ல ஆரம்பித்த பொழுது ரஹ்மான் பின் தொடர்வது எரிச்சலை மூட்டி இருந்தாலும் அவனை தன்னுடைய காலேஜில் படிக்கும் ஒரு மாணவனாக பார்த்ததும், முதல்வரின் அறையில் தங்களுக்கு திருமணமாகப்போகும் விடயத்தை கூறிய பின் காலேஜ் முழுவதும் அவள் ரஹ்மானின் ஆள் என்று அடையாளப் படுத்தப்பட்டிருந்தாள்.
அவளிடம் கேலி கிண்டல் செய்தவர்கள் கூட ஒதுங்கிப் போக ஆரம்பித்திருக்க, யாரும் வம்பு செய்யவும் முனைய வில்லை. அன்றிலிருந்தான் இந்த பரவசம் நெஞ்சில் ஏறி அமர்ந்திருக்க வேண்டும். அந்த உணர்வு பிடித்திருக்க அது அவளை ரஹ்மானின் புறம் தள்ளி இருக்க வேண்டும். அதனால் தான் அவனை காணாவிட்டால் தன்னை அறியாமல் அவனை தேடித்தவிக்கலானாள். என்றெண்ணியவள் அதற்குமேல் சிந்திக்க மறந்தாள்.
கல்யாணம் ஆனதும் தான் அவனை அருகில் மிக அருகில் பார்க்கவும், நெருங்கிப் பழகும், பேசவும் ஆரம்பித்த பின் மூளையும் விழித்துக்கொண்டது. “காதலிக்கிறேன் என்றுதானே அங்கும் இங்கும் நின்று பார்த்தன் அப்படியாயின் ஏன் காதலை சொல்லாமல் மறைத்தான்?” என்ற கேள்வி அவள் மனதை பெரிதும் ஆட்டிப்படைக்க கோபமாக அதை அவன் மேல் காட்டலானாள்.
தான் அவன் மீது கொண்டிருக்கும் காதல் அதை உணரும் பக்குவம் ஷஹீ இன்னும் அடையவில்லை. தன்னை அறியாமலே கணவனின் புறம் சாயும் மனதை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல், அவன் அருகில் எல்லாவற்றையும் மறந்து அவனோடு இழைவதும் அதன் பின் கோபம் கொள்வதும் என்றிருந்தவள் காதலை சொல்லாமல் இருப்பதன் காரணம் தெரியாமல் அழுதாள். பின் காதல் இல்லையோ! என்று குழம்பினாள்.
அன்னை கேட்ட பொழுதும் கூட படிப்பை காரணம் காட்டி சமாளித்திருப்பாள் கணவன் காப்பாற்றுவதாக முத்தமிட்டதும் பேசிய கொஞ்சல் மொழிகள் அனைத்தும் நடிப்பு என்றதும் கோபம்தான் வந்தது.
ஆனால் இங்கே அவன் காதலுக்கு சாட்ச்சியாக எத்தனை பொருட்களைத்தான் அவள் கண்முன் வைத்திருக்கிறான். எத்தனை வருட காதல் ஏன் சொல்லாமல் இருக்கிறான் ஷஹீயால் புரிந்துகொள்ளத்தான் முடியவில்லை.
எவ்வளவு ஆசைகளை மனதில் பூட்டி வைத்திருப்பான். சொல்லாமல் இருக்கிறான் என்றால்? சொல்ல முடியால் தடுப்பதுதான் என்ன?
“இல்லை அவன் நெருங்கி வரத்தான் முயற்சி செய்கிறான். நான் தான் நான்தான் தடுத்துக் கொண்டிருக்கிறேன்.
பெண் பார்க்க வந்த பொழுது கடுமையான சொற்களால் அவன் மனதை உடைத்தேன். கல்யாணம் பண்ணிக்கலாமா என்று நானே போய் கேட்டு நானே பழிவாங்கவா கல்யாணம் செய்கிறாய் என்று கேட்டால்? எவ்வாறு மனம் திறப்பான்?
முத்த மிட்ட பொழுது அழுது கரைந்ததும் அமைதியானவன் அதன் பின் நெருங்க முயற்சி செய்யவே இல்லை. நீதான் தடையாக இருக்கிறாய் ஷஹீ” அவள் மனம் இடித்துரைக்க அழுது கரையலானாள்.
அன்று காதலை சொல்ல வில்லை என்று அழுது கரைந்தவள் இன்று அவன் கரை காணாத காதலைக் கண்டு அழுது கரையலானாள். ரஹ்மான் மட்டும் வீட்டில் இருந்திருந்தால் முத்த மழையால் நனையவைத்திருப்பாளோ! அழுதவாறு மன்னிப்பு கேட்டிருப்பாளோ! அவனுக்கு அலைபேசி அழைப்பு ஏற்படுத்த ரிங் போனதே தவிர அழைப்பு ஏற்படுத்தப்படவில்லை. அதற்கும் ஏங்கி ஏங்கி அழுதாள்.
சீக்கிரம் வீட்டுக்கு வருமாறு கூறி குறுஞ்ந்செய்தியை அனுப்பியவள் அழுதவாறே தூங்கியும் போனாள்.
நண்பன் ஒருவனின் திருமணத்துக்கு சென்றிருந்த ரஹ்மான் வீடு வரவே இரவு பதினோரு மணி தாண்டியிருந்தது. வீட்டில் அனைவரும் தூங்கி இருப்பார்கள் என்று தெரியும் அதனால் பாஷிதை அலைபேசியில் அழைத்தவன் கதவை திறக்குமாறு கூறி இருந்தான்.
பாஷித் கதவை திறந்து விட்டதும் வாசல் கதவை பூட்டியவன் சத்தம் செய்யாது அறைக்கதவை திறந்து இரவு விளக்கொளியை போட பானு கட்டிலில் தூங்குவது வரிவடிவமாக தெரிந்தது.
அணிந்திருந்த பேண்ட், ஷர்ட்டை கழட்டி லுங்கிக்கு மாறியவன் துண்டோடு குளியலறைக்குள் நுழைந்து குளித்து விட்டு வெளியே வந்து மின் விளக்கையும் அனைத்து விட்டு கட்டிலில் ஏறியவன் தூங்கும் முன் மனைவிக்கும் வளமை போல் முத்தம் வைக்க, அவ்வளவு நேரமும் அழுததில் கன்னத்தில் ரஹ்மான் முத்தமிட்டதும் சூடான கண்ணீரும் குளிர்ந்த அவள் கன்னங்களையும் தான் அவனால் உணர முடிந்தது.
பதறியடித்து மின்குமிழை போட கணவனின் தொடுகையில் ஷஹீயும் எழுந்தமர்ந்திருந்தாள். கணவனை கண்டதும் தாவி வந்து அவனை கட்டிக்கொண்டு ஓவென அழ ஆரம்பிக்க ரஹ்மானுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடந்ததென்று கேட்கவும் பயமாக இருந்தது.
அவளின் முதுகை நீவி விட்டவன் அழுகை கொஞ்சம் மட்டு பட்டதும், தண்ணீர் புகட்டி மெதுவாக என்னவென விசாரிக்க பீரோவை திறந்தவள் பெட்டிகளை காட்டலானாள்.
புன்னகைத்த ரஹ்மான் “ஓ.. என்னோட காதல் சின்னங்களை கண்டு பிடிச்சிட்டியா?”
“ஏன் சொல்லல, என்ன இவ்வளவு லவ் பண்ணுறீங்கல்ல ஏன் சொல்லல? வாய தொறந்து சொன்னா கொறஞ்சா போய்டும்” கணவனை முறைக்கவும் முடியாமல் அவனை கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சலானாள் ஷஹீ.
“சொன்னாலும் நீ நம்ப மாட்டியோன்னு பயம் தான். வார்த்தைக்கு வார்த்த நாநாவ பழிவாங்கதான் கல்யாணம் பண்ணீகலானு கேக்குற? உன்கிட்ட எப்படி சொல்லுறது? அதான் சொல்லாமலையே செய்கையால் செஞ்சே காட்டலாம்னு நெனச்சேன். ஆனா நான் என்ன செஞ்சாலும் தப்பாவே முடியுது” பெருமூச்சு விட்டவன்
“ஆமா மேடம் ஒரு நாளும் இல்லாம இன்னைக்குனு பார்த்து பீரோவை திறந்து பார்த்திருக்கீங்க என்ன விஷயம்” ரஹ்மான் தன்னுடைய பொக்கிஷங்களை மனைவி எப்படி கண்டு பிடித்தாள் என்பதை அறியும் ஆவலில் கேட்க
நவ்பர் பாய் கோப்பை கேட்டதிலிருந்து தன்னுடைய புத்தகங்களை அடுக்க முற்பட்டதுவரை கூறியவள் “பெட்டியை திறந்து பார்த்ததும் என்ன இது ஒரே குப்பையா சேமிச்சு வச்சிருக்கீங்கன்னுதான் யோசிச்சேன்.
ஹிதாயாவோட மாமி ஒருத்தங்க சவூதி போனப்போ கொண்டு வந்தாங்கனு ஒரு கைகுட்டையும், பென்சில், பேனா, இரேசர் கொண்டு வந்து கொடுத்தா. ஒருநாள் எதுக்கோ என் விரல் வெட்டு பட்டு இரத்தம் கொட்டிச்சு அப்போ வேறு வழியில்லாம அந்த கைகுட்டையைத்தான் விரல்ல சுத்தி கிட்டேன்.
கை ரொம்ப வலிச்சதால மரத்து போன மாதிரி இருந்திருச்சு. ஸ்கூல் விட்டு வரும் போது கைக்குட்டை விழுந்திருக்கும் போல எங்க விழுந்ததுன்னே தெரியல. இதோ இந்த பெட்டில அந்த கை குட்டைய காஞ்சு போன ரத்த கரையோட பார்த்ததும் அதிர்ச்சியாகிட்டேன். கொஞ்சம் யோசிச்சு பார்த்தா ஒம்பதாம் வகுப்புல படிக்கும் பொழுதுதான் அந்த சம்பவம் நடந்தது. நீங்க பெட்டில குறிப்பிட்டிருந்த வருஷமும் அதுதான். அந்த கைக்குட்டையை என்னால மறக்கவே முடியல.
கொஞ்சம் கவனிச்சு எல்லா பெட்டியையும் பார்த்தத்துலதான் புரிஞ்சது எல்லாமே நான் ஆசையா சாப்பிட்ட பொருட்களோடு கவர்ஸ்னு. ஸ்கூல் போற டைம்ல சாப்பிட்டு போட்டதெல்லாம் எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா காலேஜ் போனப்போ நா சாப்பிட்டது ஒரே ப்ராண்ட் சாக்லட் அதனால பெட்டில இருந்த கவர்ச பார்த்ததும் புரிஞ்சிக்கிட்டேன்.
சின்ன வயசுல காணாம போன என்னோட ஹேர் க்ளிப்ஸ், ஹேர் பேண்ட் கூட இருக்கு. அதெல்லாம் எப்படி உங்க கிட்ட? ஆ… உடைஞ்ச வளையல் கூட இருக்குதுங்க” அதிர்ச்சி கலந்த சந்தோசமான குரலில் பேசிக்கொண்டே போனாள் ஷஹீ.
ஒருநாளும் இல்லாமல் குதூகலமாக பேசும் மனைவி தன் காதலை புரிந்து கொண்டுவிட்டாள். இனி தங்களுக்குள் எந்த பிரச்சினையும் வராது என்ற நிம்மதியில் அவளை ரசித்தித்துக்கொண்டிருந்த ரஹ்மான் அவள் கேட்ட கேள்வியில் “நீயே கண்டு பிடி” என்று சொல்ல
ஒருவிரலால் தலையை தட்டி யோசித்தவள் தெரியாது எனும் விதமாக தலையசைத்து “ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லுங்களேன்” என்று கெஞ்சலானாள்.
“சரி சொன்னா எனக்கு என்ன கொடுப்ப?” காரியத்தில் கண்ணாக சாதாரணமாகவே முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான் ரஹ்மான்.
கணவனின் சூழ்ச்சி அறியாத ஷஹீயோ “பெருசா என்ன கேட்டுட போகிறான்” என்று “என்ன கேட்டாலும் ஓகே. இப்போ சொல்லுங்க” என்றவள் அவனை நச்சரிக்க ஆரம்பித்தாள்.
வாய் மூடி சிரித்தவன் “இப்போ இப்படி சொல்லுடி அப்பொறம் பேச்சு மாற கூடாது சரியா”
மனைவியின் அச்சம் கலந்த முகபாவனையை கண்டு சிரிப்பு எட்டிப்பார்க்க “பெருசா இவன் என்ன கேக்க போறான்னு இப்படி எதுவானாலும் ஓகேனு சொல்ல கூடாது. அப்பொறம் இப்போவே பர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு பண்ணிடுவேன்” மிரட்டுவது போல் கூறினாலும் சிரமப்பட்டு சிரிப்பை அடக்கலானான் ரஹ்மான்.
கணவன் சொன்னதை கேட்டதும் கன்னங்கள் சிவக்க நாணத்தை மறைக்க வழி தெரியாமல் அவன் நெஞ்சிலையே முகம் புதைத்து தோளில் அடிக்கலானாள் ஷஹீ.
“அல்லாஹ் காப்பாத்துங்க காப்பாத்துங்க நடு ராத்திரில தூங்க விடாம கேள்வி கேட்டதுமில்லாம அடிச்சே கொல்ல பாக்குறா” மெதுவாகத்தான் குரல் கொடுத்தான் ஆனாலும் அது தூங்கிக் கொண்டிருக்கும் வீட்டாருக்கு கேட்டு விடுமோ என்று அவன் வாயை ஷஹீ பொத்த அவள் கைக்கு முத்தம் வைத்தான் ரஹ்மான்.
“என்ன பண்ணுறீங்க” என்றவள் கையை விலக்க
“சரி பதில் சொல்லவா வேணாமா?” என்றவன் அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தான்.
“சொல்லுங்க”
“அப்போ ஒரு கிஸ் கொடு சொல்லுறேன்”
ஷஹீயும் மறுக்காமல் கன்னத்தில் முத்தம் வைக்க
“உன்ன… நீ என்ன ஜெசி பாப்பாவா கன்னத்துல கிஸ் பண்ண. என் பொண்டாட்டி டி உன் இடம் இங்க டி” என்று உதட்டை குவித்து காண்பிக்க
அதிச்சியாக கணவனை பார்த்தவள் “அல்லாஹ் மாட்டேன் மாட்டேன்” உடனே மறுத்தவள் தலை கவிழ
“சரி ஓகே நீ கொடுக்காத நான் கொடுக்குறேன்” என்றவன் அவளை தன் முகம் நோக்கி இழுத்திருந்தான்.
முத்த யுத்தம் எவ்வளவு நேரம் நீண்டதோ ரஹ்மானே அவளை விட்டு விலகும் வரை ஷஹீ அவனை விட்டு விலக எண்ணவில்லை.
“இன்னைக்கும் ஓவென்று அழுவியோன்னு நெனச்சேன்” அன்று ஆற்றங்கரையில் நடந்த சம்பவத்தை ஞாபகப்படுத்த அவன் நெஞ்சில் முகம் புதைத்திருந்தாள் ஷஹீ.
அவளுக்கே அவளை நினைத்து சிரிப்பாக இருந்தது. அன்று காதலை சொல்லவில்லை என்று அழுதாள். இன்று அவன் தன் மேல் வைத்திருக்கும் அளவில்லா காதலைக் கண்டு அழுதாள். அழுததில் அவள் மன பாரமெல்லாம் கரைந்தோடி இருந்தது. இவ்வளவு காதலையும் மனதில் வைத்திருப்பதால் தானோ அவ்வளவு பொறுமையாக இருந்தான். தன்னால் சத்தியமாக இவ்வளவு பொறுமையாக இருக்கமுடியாது என்றெண்ணியவாறே கணவனின் முகத்தி நிமிர்ந்து பார்க்க
“என்ன பானு குட்டி எதோ சொல்லணும்னு நினைக்கிறீங்க, சொல்ல முடியாம தவிக்கிறீங்க என்ன விஷயம்”
“இல்ல நீங்க என்ன இவ்வளவு லவ் பண்ணுறீங்களே! நான் உங்கள லவ் பண்ணுவேனான்னு தெரியல, எனக்கு உங்க மேல எப்போ லவ் வரும்?” தன் மனதில் அவன் என்றோ நுழைந்து விட்டான் என்று அறியாமலே கணவனிடம் கேட்டாள் ஷஹீ.
“ஆ.. இது ஒரு பெரிய பிரச்சினைதான். லவ் வராமதான் நான் கிஸ் பண்ணும் போது நல்ல கோப்ரேட் பண்ணீங்களா?” கொஞ்சம் சத்தமாகவே சிரிக்க அவன் தோளிலையே அடித்தாள் ஷஹீ.
“அது நீங்க என் ஹஸ்பண்ட் அதனால”
“ஒஹ்.. ஓஹ்… அப்போ ஹஸ்பண்ட் என்ன பண்ணாலும் பிடிக்கலைனாலும் சகிச்சுக்கிட்டு இருந்துடுவீங்க, முடியாதில்ல மனசுல விருப்பம் இருந்தா தானே ஒத்துழைப்பீங்க. யோசீங்க. பொண்டாட்டி யோசீங்க அந்த விருப்பத்து பெயரென்னனு யோசீங்க”
ரஹ்மான் சொன்ன பின்புதான் ஷஹீக்கு ஒரு உண்மை புரிந்தது. நாநாவின் எதிரியாக இருப்பான் என்ற கண்ணோட்டத்தில் அவனை பார்த்தாளேயன்றி அவனை வெறுக்கவேயில்லை. அவன் அருகாமையை ரசித்தாள். முத்தம் கொடுத்த போது கூட அருவருப்போ, அந்நியன் என்றோ எண்ண தோன்றவில்லை. காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை என்றுதான் அழுதாள். அப்படியென்றால் அவள் மனம் எதிர்பார்த்தது அவன் காதலை தன்னிடம் முதலில் சொல்ல வேண்டும் என்பதையே! தானும் அவனை காதலிக்கிறேனா? விடை தெரியவில்லை. தன்னவன் என்று மனம் ஏற்று கொண்டதை உணர்ந்து விட்டாள் ஷஹீ.
கணவனை கட்டிக்கொண்டவள் அதற்கு மேல் யோசிக்க பிடிக்காமல் “ஆமா நான் ஒரு கேள்வி கேட்டேனே அதுக்கு பதில் சொல்லுங்க” பதில் சொல்லியே ஆகா வேண்டும் என்று பிடிவாதமாகவே நின்றாள் ரஹ்மானின் பானு.
“என் ஸ்கூல் விட்டதும் சைக்கிள்ல எடுத்துட்டு பறந்து உன் ஸ்கூலுக்கு வந்துடுவேன். உன் பின்னாடியே உன் வீடு வரைக்கும் வருவேன். அப்படி வரும் போது கலெக்ட் பண்ணதுதான் இதெல்லாம்” ரஹ்மான் பெருமையாக சொல்ல
அதான் மாசா மாசம் ஏதாவதொன்னு நடாத்துவங்களே! கலசரல் ப்ரக்ராம், ஸ்போர்ட்மீட், இங்லிஷ் டே, இஸ்லாமிக் டே, அது இதுனு. அப்போ எங்க ஸ்கூல்ல இருந்து உன் ஸ்கூலை வந்த போ சுட்டது ஏராளம். நீ எங்க ஸ்கூலுக்கு வந்தப்போ சுட்டதும் ஏராளம். உடைஞ்சிருச்சுனு நீ தூக்கி போட்டதையும் விட என் மனசு இடம் கொடுக்கல பத்திரமா எடுத்துகொண்டு வந்து இங்க வச்சிட்டேன்”
நகைத்தவள் “ஹாஜி இதெல்லாம் பார்த்துட்டு சிரி சிரினு சிரிச்சா தெரியுமா? எனக்கு ஒரே வெக்கமா போயிருச்சு”
“அவளும் கூட இருந்தானு சொன்னியே! என்ன சொன்னா?”
“எப்படியெல்லாம் லவ் பண்ணுவாங்கனு பாத்திருக்கேன். இப்படியும் லவ் பண்ணுறாங்கனு இன்னைக்கி தெரிஞ்சிகிட்டேன். இதெல்லாம் மியூசியத்துல வைங்க நாளைக்கு உங்களுக்கு கொழந்த பொறந்தா அவங்களும் பார்க்கட்டும்னு கிண்டல் பண்ணா”
“அவ கெடக்குறா பொறாமை புடிச்சவ”
“சே அப்படி சொல்லாதீங்க”
“மைனி மேல அவ்வளவு பாசமா?” ரஹ்மான் உள்ளர்த்ததோடு கூற ஷஹீக்கு அது புரியவில்லை.
“அத விடுங்க அந்த மூணு வார்த்தையை எப்போ சொல்ல போறீங்க?”
“எந்த மூணு வார்த்த மேடம்” அவள் எதை சொல்கிறாள் என்று புரிந்துகொண்டவன் வேண்டுமென்றே அவள் மூக்கை பிடித்து ஆட்டியவாறு கேட்க
“லவ் பண்ணுறீங்கல்ல அப்போ அந்த மூணு வார்த்தையை சொல்லணுமில்ல. நீங்க ஒரு தடவ கூட சொல்லனதே இல்ல” குறைப்பட்டாள் ரஹ்மானின் மனையாள்
“என் பொண்டாட்டி எப்போ எண்ண லவ் பண்ண ஆரம்பிச்சு அந்த மூணு வார்த்தையை சொல்லுறாளோ அப்போதான் நானும் சொல்வேன்” ரஹ்மானும் சொல்லாமல் மழுப்ப முகத்தை சுருக்கினாள் பானு.