அத்தியாயம் 20

மெதுவாக பூனை நடை போட்டு முபாரக்கின் அறையினுள் நுழைந்திருந்தான் ரஹ்மான். அறை இருட்டாக இருந்தாலும் பௌர்ணமி நிலாவின் தயவால் அவன் அறையில் வெளிச்சம் போதுமான அளவுக்கு இருக்க ரஹ்மானால் எந்த பொருளின் மேலும் மோதாமல் அறையினுள் நடமாட முடிந்தது. இந்த உலகத்தையே மறந்து இனிமையான கனவு கண்டவாறு தூங்கிக் கொண்டிருந்தான் முபாரக்.

முகத்தில் அப்படி ஒரு புன்னகை. கண்டிப்பாக கனவில் ஹாஜரா தான் தரிசனம் கொடுத்திருப்பாள். இல்லாவிட்டால் எந்த நேரமும் முகத்தை “உர்” என்று வைத்திருப்பவனின் முகத்தில் இப்படி ஒரு காதல் வழியும் புன்னகை மலர்ந்திருக்காது.

அறையினுள் நுழைந்த ரஹ்மான் முபாரக்கின் அலைபேசி எங்கே என்று தேடலானான். மேசையிலும் இல்லை. கட்டிலின் அருகிலும் இல்லை.

எங்கே வைத்திருப்பான் என்று தலை கோதி யோசிக்க, தன் நெஞ்சோடு அணைத்தவாறு தூங்கிப் போய் இருந்தான் முபாரக்.

“அடப்பாவி” என்ற ரஹ்மான் அலைபேசியை எவ்வாறு கைப்பற்றுவதென்று யோசித்து மெதுவாக அவனருகில் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

“பானு போல் அசந்து தூங்குவான் என்றால் பிரச்சினை இல்லை அலைபேசியை எடுத்து அங்கேயே அமர்ந்து பார்க்கலாம். விழித்து கொண்டால் பிரச்சினை. அலைபேசியை பிடித்திருக்கும் விதம் வேறு இழுத்தால் கையேடு வந்து விடாது”

அலைபேசியையே பாத்திருந்த ரஹ்மான் என்ன செய்வதென்று யோசித்தவன் சுற்றும் முற்றும் பார்க்க மேசையில் ஒரு சில வாழ்த்து அட்டைகள் இருக்கவே அவற்றை மடித்து முபாரக்கின் அலைபேசியின் கணத்துக்கு வந்ததும் மேசை ட்ரோவரில் இருந்த செலோடேப்பை சுத்தியவன் மீண்டும் முபாரக்கின் அருகில் நின்றிருந்தான்.

வரும் போதே தேவை படும் என்று கொண்டு வந்த பானுவின் சேப்டி பின்னை எடுத்து முபாரக்கின் நெற்றியில் குத்த கொசுதான் கடித்தது என்று அலைபேசியை விட்டவன் நெற்றியில் பட்டென்று அடிக்க முன் ரஹ்மான் கையை விலக்கி  மறுகையால் அலைபேசியை கைப்பற்றி இருந்தான்.

கொசுவை அடித்த முபாரக் ஏதோ உளறிவிட்டு தூக்கத்தில் அலைபேசியை கையால் துளாவ “படு உசார் தான்” என்று முணுமுணுத்த ரஹ்மான் தயார் செய்த அட்டை அலைபேசியை கையில் கொடுக்க அதை நெஞ்சோடு அனைத்து கொண்ட முபாரக் தூங்கலானான்.  

தனதறைக்கு வந்த ரஹ்மான் “இதோட பாஸ்வர்ட் என்னவா இருக்கும்” யோசித்தவாறே பெருவிரலால் தள்ள திறந்து கொண்டது.

“ஆ.. என்னடா.. இது உலக அதிசயமா இருக்கு” என்றவாறே முபாரக்கின் அலைபேசியை அலச ஹாஜராவோடு முபாரக் பேசிய வாட்ஸ்ஆப் மெசேஜ் எல்லாவற்றையும் பார்த்தவன் கொதித்தான்.

கோபமாக மீண்டும் முபாரக்கின் அறையினுள் நுழைந்த ரஹ்மான் “முபாரக் எழுந்திருடா” ரஹ்மான் கத்த அவன் குரல் முபாரக்குக்கு கிணற்றுக்குள் ஒலிப்பது போல் கேட்டது. ஆனால் கண்களை திறக்கத்தான் முடியவில்லை.

“பண்ணுறதையும் பண்ணிட்டு தூங்குறத பாரு தடிமாடு. எந்திரிடா” அவனை உலுக்க அப்பொழுதும் முபாரக்கால் எந்திருக்க முடியவில்லை. அவனோ! ஹாஜராவோடு டூயட் பாடிக்கொண்டிருந்தான்.

“தூங்குற மாதிரி நடிக்கிறியா? உன்ன…” என்ற  ரஹ்மான் முபாரக்கின் கழுத்தை நெறிக்க மூச்சு விட சிரமப்பட்டவன் அவன் கைகளை தடுக்க ஷஹீ ஓடி வந்து ரஹ்மானை தடுக்கலானாள்.

“என்ன பண்ணுறீங்க?”

“என்ன பண்ணுறேனா? உன் நாநா பெரிய நல்லவன் வல்லவன். உத்தமன்னு பீத்திக்கிற பாரு அவன் செஞ்சிருக்கிற வேலையை” என்று முபாரக்கின் அலைபேசியை ஷஹீயின் கையில் கொடுக்க இருமியவாறே எழுந்தமர்ந்தான் முபாரக்.

“என்ன நாநா இதெல்லாம்” ஷஹீ அதிர்ச்சியடைய அங்கே என்ன நடக்கிறது என்று புரியவே முபார்க்குக்கு சற்று நேரம் எடுத்தது. தனது அலைபேசி ஷஹீயின் கையில் இருக்கவும் நொடியில் என்ன நடந்திருக்கும் என்று ஊகித்தான்.

“நல்லா கேளு. நான் உன்ன லவ் பண்ணதுக்கு என்ன அடிச்சான். நான் உன் கூட கண்ட இடத்துல நின்னு பேசி இருப்பேனா? சாரை பாத்தியா என்னமா கொஞ்சி இருக்குறாரு? சொன்ன மாதிரியே பழிவாங்க என் தங்கச்சிய மடக்கிட்டான்” ரஹ்மான் மீண்டும் முபாரக்கின் கழுத்தை இறுக்க, இருமியவாறே இல்லை என்று தலையசைக்கலானான் முபாரக்.

“எனக்கும் இவருக்கும் கல்யாணம் பேசின பிறகு நான் இவரை போய் பார்த்து பேசியதும் என்ன அந்த அடி அடிச்சியே! நீயா இப்படி ஒரு பொண்ணு கூட சி.. நினைக்கவே அருவருப்பா இருக்கு” ஷஹீ முகம் சுளிக்க

“நினைக்கிறது என்ன அதான் கண்ணால பாத்துகிட்டு இருக்கோமே! என்ன சொல்லி மயக்கினானு தெரியலையே! பிளையிங் கிஸ் வேற கொடுக்கிறான் பாவி.. நானே இத்துணை வருசமா லவ் பண்ணி பானுவை தப்பா பாக்கல. இவன் பழிவாங்கதான் எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கான். இவனுக்கு நான் உன்ன கல்யாணம் பண்ணது பிடிக்கல. அதன் பிளான் பண்ணி என் தங்கச்சிய மடக்கிட்டான். பழிவாங்கறதா இருந்தா என்ன பழிவாங்க வேண்டியதுதானே! எதுக்கு ஒன்னும் தெரியாத என் தங்கச்சிய இதுல உள்ள இழுத்த?” முபாரக்கை கன்னம் கன்னமாக அறையலானான்  ரஹ்மான்.

முபாரக் எது நடக்க கூடாதென்று நினைத்தானோ அதுவே நடந்து கொண்டிருக்கிறது. அவனோடு பேசியது ஹாஜரா என்று தெரிந்தா? அவன் பேசினான். யாரென்றே தெரியாத பெண்ணின் மீதல்லவா அவன் காதல்வயப்பட்டான். அன்று கோபத்தில் வார்த்தை விட்டானே தவிர திட்டம் போட்டு அவனாக எதுவும் செய்யவில்லையே! அவனுக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது. காதலிக்கிறான். அது ஹாஜரா என்றாகிப் போனதுதான் குத்தமா?

தான் ரஹ்மான் விஷயத்தில் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டோம் என்று நன்றாக உணர்ந்து கொண்ட முபாரக் அவனை தடுக்காது அமைதியாக அமர்ந்திருக்க, சத்தம் கேட்டு ஓடி வந்த பேகம் ரஹ்மான் தனது ஒரே மகனை அடிப்பதைக் கண்டு அவனை தடுத்தவாறு என்ன? ஏது? என்று அழுதவாறே விசாரிக்கலானாள்.

மகனின் குணம் நன்கு அறிந்தவள் பேகம். அவன் மெளனமாக இருப்பதன் ஒரே அர்த்தம் ரஹ்மான் இந்த வீட்டு மாப்பிள்ளை என்ற ஒரே காரணம் என்று எண்ணினாளே ஒழிய மகன் தப்பு பண்ணி இருப்பான் என்று சிறிதேனும் சந்தேகம் கொள்ளவில்லை.

“மகன் எதுவானாலும் அமைதியா பேசி தீர்த்துக்கலாம். இப்படி பொறுமை இழந்து பேசுறதால என்ன கிடைக்க போகுது” பேகம் கெஞ்ச

பேகத்தின் முகத்துக்காக ரஹ்மான் அமைதியானாலும் “அடிவாங்கினது நான் உம்மா. வலிச்சது எனக்கு. இதோ! இந்த இரும்பு கையாலதான் சுவத்துல என் தலையை முட்டினான். நெத்தி வெடிச்சு ரெத்தம் கொட்டிச்சே. அப்போ மட்டும் வாய மூடிக்கிட்டு நின்னிங்க. மகனுக்கு ஒன்னுனா மட்டும் அப்படியே துடிக்கிறீங்க. இப்போ அவர் செஞ்சிருக்கும் காரியத்துக்கு அந்த செவத்துலயே தலையை மோத சொல்லுங்க பார்க்கலாம்” ஷஹீ எகிறினாள்.

மனைவியின் வலியை பொறுத்துக்கொள்ள முடியாமல் ரஹ்மான் “மாமி உங்களுக்காகத்தான் நான் அமைதியாக இருக்கேன். ஆனா இந்த விசயத்த இப்படியே விட முடியாது. இது என் தங்கச்சியோட வாழ்க பிரச்சினை. சொந்த தங்கச்சியையே இப்படி அடிச்சி கொடும பண்ணுறவன் கட்டின பொண்டாட்டிய எப்படியெல்லாம் கொடும பண்ணுவான்? இவனுக்கு எங்க வீட்டுல யாரும் பொண்ணு கொடுக்க மாட்டாங்க. நான் கொடுக்கவும் விடமாட்டேன்” ரஹ்மான் கோபமாக சொல்ல அது முபாரக்கை சீண்டியது.

“இப்போ யாருடா பழிவாங்க பாக்குறது. நீ என்ன எனக்கு பொண்ணு கொடுக்குறது. தூக்கிட்டு போவேண்டா.. போய் கல்யாணம் பண்ணுவேன். அவ எனக்குதான்” கட்டிலில் இருந்து குதித்த முபாரக் லுங்கியை கட்டியவாறு எகிற

அவன் தோளில் அடித்த பேகம் அடங்குமாறு சொல்லிக்கொண்டிருக்க

“பாத்தீங்களா எப்படி பேசுறான்னு. இதுக்கு இன்னைக்கே முடிவு கட்டணும்” என்ற ரஹ்மான் தனது அலைபேசியை எடுத்து பாஷிதை அழைத்து வீட்டுக்கு தகவல் சொல்லி அனைவரையும் உடனே வருமாறு சொல்லி இருந்தான்.

அந்த அதிகாலை பொழுதில் என்ன ஏதோ என்று அனைவரும் பதறியடித்துக் கொண்டு வர, பேகமும், ஷஹீயும் ஒரு பக்கம் அழுதவாறு இருக்க, விஷயத்தை போட்டுடைத்தான் ரஹ்மான்.

ஆளாளுக்கு முபாரக்கின் மேல் பாய்ந்திருக்க ஹாஜரா அவனை அடிக்க வேண்டாம் என்று அனைவரின் முன்னிலையிலும் அவனைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடிக்க, அவள் மீதும் சில அடிகள் விழுந்தன.

அவளை காக்க முபாரக் போராடுவதும், அவனை காக்க ஹாஜரா போராடுவதும் குடும்பம் மொத்தமும் இருவரையும் தாக்குவதுமாக யுத்த பூமியாக மாறி இருந்தது முபாரக்கின் வீடு.

ஹாஜராவின் கையை பிடித்து இழுத்த ரஹ்மான் அவள் கன்னத்தில் “பளார்” என்று ஒரு அரை வைக்க எங்கிருந்துதான் முபாரக்குக்கு அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை. ரஹ்மானை எட்டி உதைத்தான்.

ரஹ்மான் கீழே விழ ஷஹீ அவனை பிடிக்க பாஷித் முபாரக்கை அடிக்க முபாரக்கின் அலைபேசியின் அலாரமும் அடிக்க சிரமப்பட்டு கண்களை திறந்தான் முபாரக்.

அலாரத்தை நிறுத்தியவனின் தலை வின் வின் என்று வலித்தது. கண்டது கனவா? என்று ஊகிக்கவே அவனுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது. காட்ச்சிகள் யாவும் அப்படியே நடக்க போவதை முன் கூட்டியே கனவில் காண்பித்து எச்சரிக்கை செய்வது போல் தோன்ற மேசையின் மீதிருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று அருந்தலானான்.

“முதல்ல இந்த போன்கு ஒரு பாஸ்வர்ட் போடணும்” என்றவன் உடனடியாக அதை செய்தான். சற்று ஆசுவாசமடைந்தவன் கனவில் கண்ட காட்ச்சிகளை வரிசைப்படுத்தினான்.  

ரஹ்மானை தான் எவ்வாறு தாக்கினேனோ அவ்வாறே ரஹ்மான் கனவில் தன்னை தாக்கி இருந்தான். ஆக மொத்தத்தில் பழிக்கு பழி வாங்கி விட்டான். ஒரே ஒரு வித்தியாசம். ரஹ்மானை அடிக்கும் பொழுது ஷஹீ குறுக்கே வரவில்லை. ஹாஜரா அவனுக்காக வந்தாள். கனவில் வந்தவள் நிஜத்தில் சத்தியமாக வரமாட்டாள். அவளும் சேர்ந்து கட்டையால் மண்டையை பிளப்பாள்” ஹாஜரா கட்டையோடு நிற்கும் தோற்றம் கண்ணில் வர குபீரென்று சிரிப்பு வர அந்த அதிகாலை பொழுதிலும் சத்தமாகவே சிரித்து விட்டான் முபாரக்.

“ஆமா அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும்னு சொல்வாங்களே! அப்போ இந்த கனவு பலிச்சிடுமா? ஹாஜரா எனக்காக வந்து நிப்பாளா?”

“அடேய் வீட்டுல ரணகளம், ரத்தக்களமா அடிதடி. வெக்கமே இல்லாம ஹாஜரா உனக்காக வருவாளான்னு கேக்குற? சண்டை வந்தா அவளும் வர மாட்டா பொண்ணும் தர மாட்டாங்க” மனசாட்ச்சி காரி துப்ப

“இது கெட்ட கனவு. இது பலிக்க கூடாது யா அல்லாஹ்” என்றவன் சுபஹ் தொழுகைக்கு அதான் சொல்லவே பள்ளிக்கு செல்ல தயாரானான்.

சுபாஹு தொழுகைக்கு பள்ளி செல்ல தன்னையும் எழுப்புமாறு ரஹ்மான் கூறி இருந்தும் முபாரக் இருந்த மனநிலையில் அவனை அழைக்காமையே பள்ளிக்கு நடந்து சென்றான்.

செல்லும் வழியெல்லாம் அவன் சிந்தனையில் விளையாட்டு மைதானத்தில் நடந்த சம்பவத்தை ரஹ்மான் புரிந்து கொண்டான். இப்பொழுது தங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லையென்று சொன்னாலும் ஷஹீயை அடித்ததையும், அவனை அடித்ததையும் மனதில் வைத்துக்கொண்டு ஹஜாராவை கல்யாணம் பண்ணித்த தர சம்மதிக்கவில்லையென்றால் என்ன செய்வது?

முதலில் முறைத்துக் கொண்டு நிற்கும் ஹாஜரா தன்னை விரும்புகிறாளா? என்று அறிய வேண்டுமே! பேச ஆரம்பிக்கும் பொழுது விரும்புகிறேன் என்றவள் அதன் பின் அதை பற்றி ஒரு வார்த்தை பேச வில்லை. ஏன்? என்ன காரணம்?

சம்பந்தேமே இல்லாமல் திடீரென்று எதற்கு இப்படியொரு கனவு வரவேண்டும். அதுவும் தத்ரூபமாக நடக்க போவதை முன் அறிவிப்பு செய்வது போல்? இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? தனது மனதில் உள்ள அச்சம் தான் இந்த கனவு தோன்ற காரணமா? முற்றாக குழம்பி நின்ற முபாரக் மஸ்ஜிதுக்குள் நுழைந்தான்.

தொழுது விட்டு வரும் பொழுது நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ் நல்ல வழியை காட்டி கொடுப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

முபாரக்கின் விடியல் கனவோடு விடிய, ஷஹீ ரஹ்மானின் விடியல் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதைதான்.

ரஹ்மான் அலைபேசியில் உரையாடி பேகத்திடமிருந்து ஷஹீயை காப்பாற்றியதாக நினைக்க அவனை திட்டியவள் முறைத்தவாறே வந்து தூங்க, அவன் பேச முயற்சி செய்தும் பேச வில்லை.

ஷஹீயோடு ரஹ்மான் அலைபேசியில் பேசியதை கேட்ட பேகம் இருவருக்கிடையில் எந்த மனக்கசப்பும் இல்லை. அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் தான் தான் குழம்பிப்போய் இருப்பதாக எண்ணலானாள். அதனாலே அவர்களை கண்காணிப்பதையும், ஆராய்ச்சி பார்வை பார்ப்பதையும் விட்டுவிட்டாள்.    

பேகத்தின் முன்னிலையில் ரஹ்மானோடு நல்ல விதமாக பேசும் ஷஹீ அறைக்குள் அவனை முறைத்துக்கொண்டு தான் திரிந்தாள். அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் மீண்டும் குழம்பி அவளிடமிருந்து ஒதுங்கலானான் ரஹ்மான்.

மாலைதான் இருவரும் கிளம்பி ரஹ்மானின் வீட்டுக்கு சென்றனர். அதிலும் இருவருக்கும் கருத்து வேறுபாடு. நடந்தே போகக்கூடிய தூரம்தான். சூட்கேஸ் இருப்பதால் வாடகை காரை வரவழைத்திருந்தான் ரஹ்மான்.

“எதுக்கு இந்த ஆடம்பர செலவு? இல்ஹாமின் ஆட்டோவில் சென்றிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது ஆட்டோவில் சென்றிருக்கலாம். புத்தகங்களை கூட நாநா பிறகு கொண்டு வந்து கொடுத்திருப்பார்” என்று ஷஹீ கணவனை முறைக்க,

“என் பொண்டாட்டிய வசதியா கூட்டிட்டு போகணும்னு நினைக்கிறேன் டி, என்னால செலவு பண்ண முடியுது அதுல என்ன தப்பு” என்று ரஹ்மான் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்தான்.

மறுவீட்டு விருந்துக்கு வரும் பொழுதும் ஷஹீயின் மனதில் என்ன குழப்பம் என்று அறியாமளையே வந்த ரஹ்மான் போகும் பொழுதும் அந்த குழப்பம் தீராமலையே வண்டியில் ஏறி மனைவியோடு வீட்டுக்கு கிளம்பி சென்றிருந்தான்.

பானுவுக்கு ரஹ்மான் மேல் அப்படி என்ன கோபம்? அவன் அவளுக்காக எது செய்தாலும் ஏன் தப்பாகவே போய் முடிகிறது. முத்தமிட்ட போது எதற்கு அப்படியொரு அழுகை. ஒன்றுமே நடக்காதது போல் மீண்டும் சகஜமாக கணவனோடு பேசிப்பழகுவதும் அவன் உதவி செய்தால் மட்டும் ஏன் இவ்வளவு கோபம்.

மேலோட்டமாக பார்த்தால் அவள் பிரச்சினை புரியவில்லை. ஆராய்ந்து பார்த்தால் அவள் பிரச்சினை காதல் தான். அது ரஹ்மான் அவளை காதலிப்பதாக சொன்னதில் ஆரம்பித்திருந்தது.

ஸ்கூல் போகும் பொழுது காதலை சொல்ல வந்தான். சொல்லி பிரச்சினையும் ஆகி, கல்யாணமும் நடந்திருச்சு. நாநாவை பழிவாங்கத்தான் இந்த கல்யாணம் என்ற குழப்பமும் தீர்ந்து போயாச்சு. ஆனாலும் அவன் காதலிப்பதாக இன்று வரை அவளிடம் சொல்லவில்லை. 

“ஐ லவ் யு. மூணே மூன்று வார்த்தை அதை ஏன் சொல்லாமல் இருக்கிறான் ஷஹீக்கு புரியவில்லை. சும்மா கண்ட இடத்திலிருந்து பார்த்தான் கல்யாணம் பண்ணிகிட்டான். காதலிப்பதாக இருந்தால் சொல்லனுமா? வேண்டாமா? இதுதான் ஷஹீயின் இப்போதைய பிரச்சினை.

அந்த மூன்று வார்த்தையை நெஞ்சுருகி ரஹ்மான் சொல்லி விட்டால் ஷஹீயின் மனக்குறை தீர்ந்துவிடும். அதை நினைத்துதான் குழம்பிப்போய் இருக்கிறாள் பேதை பெண். ரஹ்மானின் நடவடிக்கையிலும், பார்வையிலும் காதல் நிறைந்திருந்தாலும் வார்த்தைக்கொண்டு தேனொழுக பேசுவதில்லை. அன்பே ஆருயிரே என்று கொஞ்சுவதில்லை. அப்படியாயின் அவன் தன்னை காதலிப்பது என்று சொன்னது பொய்யா? 

இதுதான் அவள் மனக்குழப்பம். அன்று முத்தமிட்ட போது இசைந்து கொடுத்தவளுக்கு சட்டென்று இது ஞாபகம் வரவே அழுது கரைந்தாள். அக்கணம் ரஹ்மானிடம் கேட்டிருந்தால் கூட மனம் திறந்திருப்பான். கேட்டு பொய்யாக ஆமாம் என்று கூறி விடுவானோ என்ற அச்சம் வேறு தோன்ற அதை நினைத்து மேலும் அழுதவள் தானாகவே சமாதானமடைந்தாள். ரஹ்மானை நெருங்கவும் முடியாமல், அவனை விட்டு விலகவும் முடியாமல் மனதோடு போராடிக்கொண்டிருக்கிறாள் ஷஹீ. ரஹ்மான் தனது காதலை வாயால் மொழியாமல் இதற்க்கு தீர்வே இல்லையா?

ஆனால் ரஹ்மான் நினைப்பது என்னவென்றால், மூன்று வார்த்தையில் சொல்லி முடிப்பதல்ல காதல். அது ஒரு உணர்ச்சி. ஒருவர் மற்றவரை சரியாக புரிந்து அன்பு செலுத்த வேண்டும்.

ஒருவரின் நிறையை போலவே குறைகளும் ஏராளம் இருக்கலாம். சேர்ந்து வாழும் பொழுதுதான் கண்களுக்கு தெரியும், பிரச்சினையாக உருவாகும். அவைகளை பொறுத்து, புரிந்து கொண்டு வாழ்வதே உண்மையான காதல்.

பதின் வயதில் ஒரு சாக்லட், ஒரு கிரீட்டிங் கார்ட் போதும் காதலை சொல்ல, அதுவே கல்யாணத்துக்கு பிறகு ஆயுள்காலமும் போதாது காதலை நிரூபிக்க. வாயால் மொழிவதல்ல காதல். செயலால் உணர்த்துவதே காதல்.

ரஹ்மானை பொறுத்தவரையில் அவன் அவனுடைய நிலையில் சரியாகத்தான் இருக்கின்றான். ஆனால் ஷஹீதான் புரிந்துகொள்ள மறுக்கிறாள். அல்லது அந்த பக்குவம் அவளிடம் இல்லை.

ரஹ்மானை அவள் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவும் இல்லை. அவனை புரிந்துகொண்டால்தானே அவன் காதலை புரிந்துகொள்ள முடியும். புரிந்துகொண்டால்தான் உண்மையான காதலின் ஆழத்தை உணரமுடியும். ரஹ்மான் தன்னை உணர்த்துவதில் எங்கே  தவறு செய்தான். ஷஹீயின் மக்குறை தீராமல் அவர்களின் வாழ்க்கையில் சந்தோசம் நிலைக்குமா? 

“பானு… பானு… இங்க கொஞ்சம் வாமா…” நவ்பர் பாய் அழைக்கவும்

“இதோ வாரேன் மாமா” என்றவள் தலையில்  துப்பட்டாவை சரி செய்துகொண்டு மரியாதையாக அவர் முன் சென்று நிற்க

“உங்க ரூம்ல இருக்குற இரும்பு பீரோல பச்சை நிறத்துல ஒரு பைல் இருக்கும். அத கொஞ்சம் கொண்டு வந்து கொடுமா” என்று சொல்ல தலையை ஆட்டியவள் தரைக்கும் வலிக்காத அளவுக்கு மெதுவாக நடந்து அறைக்குள் நுழைந்தாள்.

அவள் அந்த வீட்டுக்கு வந்த அன்றிலிருந்து அந்த அறையில் தான் இருக்கிறாள். அந்த இரும்பு பீரோவும் அங்கே தான் இருக்கிறது. அதில் என்ன இருக்கிறது என்று இதுவரை திறந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததில்லை.

ரஹ்மான் அந்த பீரோவிலிருந்து கோப்புக்களை எடுப்பதையும், வைப்பதையும், கண்டிருக்கிறாள். அந்த பீரோ முற்றாக திறந்த நிலையில் அதில் என்ன இருக்கு என்று இதுவரை அவள் பார்த்ததில்லை.

பீரோவை திறக்க போக அது பூட்டியே இருந்தது. சாவி எங்கே இருக்கும் என்று யோசித்தவள் பீரோவின் மேல் கையை விட்டு தேட சாவி கிடைக்கவும் பீரோவை திறந்தாள்.

நான்கு தட்டுகளை மாத்திரம் கொண்ட இரும்பு பீரோ. இரண்டாவது தட்டில் கோப்புகள் நேர்த்தியாக ஒவ்வொரு வண்ணங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, பச்சை நிற கோப்பை தேடியெடுப்பது ஷஹீக்கு சிரமமாக இருக்க வில்லை.

மற்ற மூன்று தட்டுகளில் பெட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பெட்டியிலும் வருடங்கள் குறிக்கப்பட்டிருக்க, சில பெட்டிகளில் வருடத்தோடு மாதமும் குறிக்கப் பட்டிருந்தது. விஷேட திகதியும் கூட இருக்கவே யோசனையாக பார்த்தவள் நவ்பர் பாய் கோப்பை எதிர்பார்த்து காத்திருப்பார் என்று ஞாபகம் வரவே பீரோவை பூட்டியவள் கோப்போடு வெளியேறினாள்.

கோப்பை நவ்பர் பையிடம் கொடுக்க அவரோ அதில் உள்ள விவரங்களை அவளிடமே கேட்கலானார்.

கோப்பிலிருந்ததை படித்தவளுக்கே ஆயிரம் சந்தேகங்கள் முளைத்தன. ஒவ்வொரு மாதமும் கடைக்கு ஆடு மற்றும் கோழி எங்கிருந்து எவ்வளவு வாங்கப்பட்டது, எதற்காக வாங்கப்பட்டது என்ற விவரங்கள் அதில் இருந்தன.

ரமழான் மாதமும், துல் ஹஜ் மாதமும் தான் அதிகமான ஆடுகள் வாங்கப்பட்டிருந்தன. நவ்பர் பாய்க்கு வேண்டிய தகவல்களை சொன்னவள் அவர் கோப்பை தரவும் அதை பெற்றுக்கொண்டு திரும்ப, ஹாஜராவும் அருந்த டீயோடு வரவே அவளையும் அழைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள் ஷஹீ.

ஆடென்றாலே அவளுக்கே தெரிந்தது வெள்ளாடு, செம்மறியாடு மட்டுமே! ஆனால் கோப்பில் வித விதமான பேரோடு, வயதும் குறிப்பிடப்பட்டிருக்க அவளுக்கு அது விநோதமாகவே இருந்தது.

“என்ன மைனி ஆடு ஆராய்ச்சியில் இறங்கிட்டீங்க போல இருக்கு” ஹாஜரா டீயை பருகியவாறே கேட்க

“இல்ல மாமா கறி கடை வச்சிருக்குறது தெரியும். வாங்குற ஆட்டுக்கெல்லாம் இவ்வளவு டீடைல் வச்சிருக்காருனு தெரியல” கோப்பை பார்த்தவாறே ஷஹீ ஆச்சரியமாக கூறினாள். 

“அது சரி உங்க புருஷன் என்ன வேல பாக்குறாருனு தெரியுமா? இல்ல அது கூட தெரியாதா?”

“அவரு கடைக்கு போறாரு, ஆட்டோ ஓட்டுறாரு” வேலை தேடிக்கொண்டிருப்பதாக கூறாமல் இவ்வாறு கூறி சமாளித்தாள் ஷஹீ.

“ஆமா லவ் பண்ணும் போது என்னத்த பேசுனீங்க?” ஹாஜரா ஷஹீயை முறைக்க

அவளின் வாயை மூடியவள் “நான் அவரை லவ் பண்ணல, நாம பண்ணது அரேஞ் மேரேஜ்”

“அப்போ கல்யாணம் பண்ணி இத்துணை நாளா என்ன பேசினீங்க? நாநா என்ன தொழில் பண்ணுறான்னு கேக்க மாட்டீங்களா? பொண்டாட்டின்னா இதெல்லாம் கேட்டு தெரிஞ்சி வச்சுக்கணும்”

“சரிங்க பெரிய மனிசி இன்னைக்கி அவர் வந்தா கேக்குறேன். ஆனா உனக்கு வரப்போகும் புருஷன் நிலைமையை நினைச்சாதான் பாவமா இருக்கு. இந்த போடு போடுற” ஷஹீ சொல்லும் பொழுதே முபாரக்கின் முகம்தான் ஹாஜராவின் கண்ணில் வந்து போனது.

தலையை உலுக்கிக் கொண்டவள் “எவ்வளவு திமிரு புடிச்சவனா இருந்தாலும் அடக்கி என் காலுக்கு கீழதான் வச்சிருப்பேன்” திமிராகவே பதில் சொன்னவளின் மனதுக்குள் ஷஹீயை பெண் பார்க்க சென்ற பொழுது முபாரக் பேசியதுதான் ஞாபகத்தில் வந்தது.

தன் மனதை நிலைப்படுத்த பார்வையை சுழல விட்ட ஹாஜராவின் கண்களுக்கு ஷஹீ வீட்டிலிருந்து வரும் பொழுது கொண்டு வந்திருந்த அவளுடைய புத்தகப்பை கண்ணில் படவே!

“ஆமா மைனி காலேஜ் தானே போறீங்க என்ன இவ்வளவு புக்ஸ்?”

“இங்கிலிஷ் லிட்ரேசேர் இல்லையா அதான் நிறைய வாசிக்க வேண்டி இருக்கு” என்று கண்சிமிட்டினாள் ஷஹீ.

“சரி இதெல்லாம் இப்படியே! இங்கயே போட்டு வைக்கவே போறீங்க? மேசைல அடுக்கினா உங்களுக்கு எழுத கூட இடம் பத்தாதே!” ஹாஜரா யோசனையாக கூற

அதைத்தான் நானும் யோசிக்கிறேன் ஹாஜி. அலுமாரிக்கு மேலையும் வைக்க முடியாது. அடிக்கடி தேவைப்படும். என்ன செய்வதென்று தெரியாது” என்றவள் பார்வை இரும்பு பீரோவின் பக்கம் விழவே ஹாஜராவும் ஷஹீயின் பார்வை சென்ற திசையில் இருந்த இரும்பு பீரோவை பார்த்தாள். 

“அட இதோ இருக்கே! எதுக்குடா இந்த அறைக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாம ஒரு இரும்பு பீரோனு நானே அடிக்கடி யோசிச்சி இருப்பேன். ஆனா பாருங்க இன்னைக்குத்தான் எதுக்கு இருக்குனு புரிஞ்சது. வாங்க நான் ஹெல்ப் பண்ணுறேன்” ஹாஜரா எழுந்து கொள்ள ஷஹீயும் கோப்போடு பிரோவின் பக்கம் நகர்ந்தாள்.

ஷஹீக்கு இரண்டு தட்டுகளாவது தேவைப்படும் ஆதலால் அந்த பெட்டிகளை அலுமாரியில் மேல் வைக்கலாம் என்று ஹாஜரா கூற ஒருவேளை அதில் மிக முக்கியமாக பொருட்கள் அல்லது உடையும் பொருட்கள் இருக்கலாம் அதனால் கவனமாக எடுத்து வைக்கலாம் என்று ஒவ்வொன்றாக திறந்து பார்க்க அனைத்திலும், சாக்லட் கவரும், சாப்பிட்டு வீசிய குச்சி மிட்டாயின் குச்சிகளும், இருக்கவே! ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்ட இரு பெண்களும் இன்னொரு பெட்டியை திறக்க அதிர்ச்சியடைந்தாள் ஷஹீ.