வீட்டினர் கிளம்பி சென்றும் வாசலிலையே அமர்ந்திருந்தான் ரஹ்மான். ஷஹீயின் அறைக்கு இரண்டு தடவை சென்றிருக்கிறான். ஒருதடவை அதிரடியாக நுழைந்தான். மற்றுமொருமுறை ஆசையாக சென்று மனம் நோக வெளியேறினான். இன்று மனைவியின் அனுமதி இல்லாமல் உள்ளே செல்ல கூடாதென்ற பிடிவாதத்தோடுதான் அமர்ந்திருக்கிறான்.
முபாரக்கும் உள்ளே சென்று கொஞ்ச நேரம் தூங்கலாமே என்று கூறி பார்க்க, பரவாயில்லை என்று அஸ்ரப், பவாஸோடு கதையடித்துக் கொண்டிருந்தவன் அவர்கள் கிளம்பி சென்றதும் அலைபேசியோடு அமர்ந்து விட்டான்.
பேகம் வந்து “உள்ள போங்க மகன்” என்று கூறியும் தலையசைத்து சரி என்றவன் அசையாது அங்கேயே அமர்ந்திருக்க, ஷஹீயை அழைத்த பேகம் ரஹ்மானை அறைக்கு அழைத்து செல்லும்படி கூறினாள்.
நீண்ட நாட்களுக்கு பின் வீடு வந்தது போல் ருகையாவோடு அன்னையின் அறையில் கதையடித்துக் கொண்டிருந்தவள் முகம்கொள்ளா புன்னகையினூடாகவே வந்து கணவனை அறைக்கு வரும்படி அழைக்க மறு பேச்சின்றி உள்ளே நுழைந்தான் ரஹ்மான்.
அன்றிருந்தது போல் இல்லாமல் அறையில் சில மாற்றங்கள் செய்திருந்தார்கள். கட்டில். மேசை, அலுமாரி என அனைத்தையும் மாற்றி போட்டு அறை இளநீல நிறத்தில் நிறப்பூச்சும் பூசப்பட்டிருக்க, அழகாகத்தான் இருந்தது.
“பானு நான் ட்ரெஸ் மாத்தணும், பாடி வாஷ் பண்ணா நல்லா இருக்கும் வாஷ் ரூம் எங்க இருக்கு” அவன் என்னமோ சாதாரணமாகத்தான் கேட்டான்.
“பின்னாடிதான் இருக்கு வாங்க நான் கூட்டிட்டுப் போறேன்” என்றவள் அத்தோடு நிறுத்தி இருக்கலாம் “உங்க வீட்டுல மாதிரி எங்க வீட்டுல அட்டேச்சு பாத்ரூம் எல்லாம் இல்ல” என்று விட்டு கணவனை பார்க்க
“அது ஒன்னும் பெரிய பிரச்சினை இல்லையே! எங்க வீட்டுலையும் பின்னாடிதான் இருக்கு. அட்டாச்சு பாத்ரூம் கல்யாணத்துக்கு கட்டியது. அது எனக்காக கட்டப்பட்டதில்ல உனக்காக கட்டப்பட்டது. நா இன்னும் வெளியதான்மா குளிக்கிறேன். எனக்கு உள்ள அடஞ்சிகிட்டு குளிக்க பிடிக்கல” சிரித்தவாறே சொன்ன ரஹ்மான் அணிந்திருந்த ஷார்ட் பட்டன்களை கழட்டி இருந்தான்.
“அட ஆமா புதுசா கட்டினதாகத்தான் ஹாஜரா சொன்னா அப்போ எனக்காகவா?” மீண்டும் கணவனை பார்க்க கையில்லாத உல் பனியன் அணிந்திருந்தவன் லுங்கியை அணிந்து காற்சட்டையை கழட்டிக்கொண்டிருக்க
“கொஞ்சம் இருங்க நா வெளிய போனதும் மாத்துங்க” கண்களுக்கு மேல் கையை வைத்தவாறு வெளியே செல்ல போக அவள் மறுகையை பற்றி தடுத்தவன்
“நான் உன் ரூம்ல இருக்குறது உனக்கு ஒன்னும் கஷ்டமா இல்லல?”
“என்ன கேள்வி இது? உங்க ரூம்ல நான் இருந்தேன். என் ரூம்ல நீங்க இருக்க முடியாதா? கல்யாணம் ஆனா பின்னாடி அது என்ன உன் ரூம், என் ரூம்னு பிரிச்சி பேசுறீங்க நம்ம ரூம் இல்லையா? அப்போ அது என் வீடு, நம்ம ரூம் இல்லையா? கணவனை முறைத்தவாறே சிலிர்த்தெழுந்தாள் ஷஹீ.
“ஆஹா நான் ஒன்னு நெனச்சி பேசினா இவ ஒன்னு சொல்லுறாளே! பழசெல்லாம் எப்பயோ மறந்துட்டா போல இருக்கே! நான் தான் தானா யோசிச்சு வீணா குழம்பிட்டேன் போல இருக்கு. முதலுக்கே மோசம் வந்துடும் போல இருக்கே ரஹ்மான் ரூட்டை மாத்து” மனம் கூவ காற்சட்டையை ஹாங்கரில் மாட்டியவன் லுங்கியை அணிந்துகொண்டான்.
“என்ன நீ நா ஒன்னு சொன்னா நீ ஒன்னு சொல்லுற? உன் ரூம்னு சொன்னது தப்புதான். ஏதோ வாயில வந்திருச்சு. தப்புதான் பானுமா. தப்புதான்” தன் வாயில் ரெண்டு அடியையும் வைக்க முறைப்பதை நிறுத்தவில்லை அவன் மனையாள்.
“டேய் ஏதாவது சொல்லி சமாளிக்கல அப்பொறம் ரொமேன்ஸ் எல்லாம் கட்டாகிடும். மூஞ்ச தூக்கி வச்சிப்பா ஏதாவது சொல்லி சமாளி” மீண்டும் மனம் ஞாபகப் படுத்த என்ன சொல்வதென்று யோசித்தவனின் பார்வை அறைக்குள் சுழல கட்டிலின் மேல் வந்து நிற்கவும்
“இல்ல பானு குட்டி அங்க நம்ம கட்டில் அவ்வளவு பெருசா இருக்கும் போதே ஒட்டிக்கிட்டு, கட்டிக்கிட்டுதான் தூங்குவ, இங்க பாரு கொஞ்சம் சின்னதாதான் இருக்கு. கட்டிக்கிட்டு தூங்குறதெல்லாம் ஓகே. இறங்க, ஏற ஒருவழிப்பாதை பானு. எந்த பக்கம் நீ தூங்கினாலும் உனக்கு கஷ்டமா இருக்கும். அதான் சொன்னேன்” அந்த கஷ்டத்தில் அழுத்தத்தை கூட்டியே சொன்னான் ரஹ்மான்.
கட்டில் சுவரோடு போடப்பட்டிருக்க, ஒரு பக்கமாகத்தான் இறங்க முடியும் சுவர் புறம் தூங்கினால் அவன் மேல் உருண்டுதான் இறங்க வேண்டி இருக்கும். இந்த பக்கம் தூங்கினால் அவன் வேண்டுமென்றே அவள் மேல் உருண்டு இறங்குவான். கால் பக்கம் பலகை மெத்தையிலிருந்து ஒரு அடி உயரமாக இருக்க அந்த பக்கம் இறங்க முடியாது.
கணவன் சொல்ல விளைவதை புரிந்து கொண்டவள் முறைப்பதைக் கைவிட்டு விட்டு முகத்தில் வந்த வெக்கத்தை மறைக்க திரும்பி நின்றவாறே “அத தூங்கும் போது பார்த்துக் கொள்ளலாம். இப்போ வாங்க வாஷ் ரூம் எங்க இருக்குனு காட்டுறேன்” என்று முன்னால் நடக்க டவலை கையில் எடுத்த ரஹ்மான் விசிலடித்து சிரித்தவாறே அவள் பின்னால் சென்றான்.
தண்ணீர் ஜில்லென்று இருக்கவும் ஒரு குளியலை போட்ட ரஹ்மான் ஷஹீ ஏதாவது அருந்த வேண்டுமா எனக் கேட்டதற்கு மறுத்து விட்டான்.
பேகம் ஷஹீயை அழைத்து மாப்பிளைக்கு இரவு உணவுக்கு என்ன செய்யட்டும் என்று கேட்டிருக்க, புகுந்த வீட்டில் எல்லாம் ரஸீனாவின் முடிவென்பதால் அவன் விருப்பம் கூட அவளுக்கு தெரியவில்லை.
அவனிடமே சென்று கேட்க “எதுவானாலும் பரவால்ல, எனக்காக சிரமப்பட்டு எதுவும் செய்ய வேண்டாம்” என்று கூறலானான். அதை அப்படியே பேகத்திடம் ஒப்பித்த ஷஹீ ருகையாவோடு மொட்டை மாடியில் ஐக்கியமாகி இருந்தாள்.
முபாரக்கோடு பள்ளிக்கு சென்று வந்த ரஹ்மான் அவனோடு அமர்ந்து சாப்பிட பேகத்தையும், ஷஹீயையும் கூடவே அமர வைத்துக்கொண்டான்.
முபாரக்கும் அவனை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். மாப்பிள்ளை என்ற எந்த அலட்டலும் இல்லை. அவன் வீடு போல் சாதாரணமாக இருக்கிறான். அன்னையிடமும் அன்பாக நடந்து கொள்கின்றான்.
தான் இத்தனை நாள் இருந்தும் அன்னை சாப்பிட்டாளா என்று விசாரித்ததில்லை. வந்த அன்றே ரஹ்மான் பேகத்தை வற்புறுத்தி தங்களோடு சாப்பிட அமர வைத்துக் கொண்டது அவன் மனதுக்கு ரொம்பவே பிடித்திருக்க, தானும் ரொம்ப மாற வேண்டி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டான் முபாரக்.
“மச்சான் ஹனிமூன் எங்க போக பிளான் பண்ணி இருக்க?” வாசலில் அமர்ந்து கதையடித்துக் கொண்டிருக்கும் பொழுது முபாரக் சட்டென்று கேட்டு விட
“இப்போதைக்கு எங்கும் போக ஐடியா இல்ல மச்சான். உன் தங்கச்சி படிப்பு முடிய இன்னும் டைம் இருக்கே. முடியட்டும் பிறகு பார்க்கலாம்” ரஹ்மானும் சாதாரணமாகவே சொல்ல சமையலறையிலிருந்து இரு பெண்களின் காதுகளிலும் இவர்கள் பேசுவது விழுந்தது.
அந்த நேரத்தில் பேகம் அதை சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டாள். ஷஹீக்குத்தான் முகம் சுருங்கியது. காலேஜுக்கு லீவு போட்டதில் மூன்று நாட்களாவது வெளியே எங்கயாவது சென்று விட்டு வரலாம் என்று நினைத்திருக்க, அது நடக்க போவதில்லை என்றதும், மனதில் பெரியதொரு ஏமாற்றம். அன்னை தன்னை கவனிக்கிறாளா என்று மெதுவாக பார்த்தவள் அன்னை வேலையில் மும்முரமாக இருப்பதைக் கண்டதும் நிம்மதியடைந்தாள்.
முபாரக்கோடு நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்தான் ரஹ்மான். சமாதானமான பின் கூட அவனோடு சரியாக பேச முடியவில்லை. பல வருடக் கதைகளையும் ஒரே இரவில் பேசி முடிக்கலாம் என்று நினைத்து பேச ஆரம்பித்தார்களோ! என்னவோ முடிந்த பாடில்லை. ஷஹீ அறைக்குள் நுழைந்திருக்க, பேகமும் தூங்குவதற்காக ஆயத்தமானாள்.
“என்னத்தான் கதைக்கிறாங்களோ தெரியல, ஷஹீ மாப்பிளையை கூட்டிகிட்டு உள்ள போகாம அவ பாட்டுக்கு போய்ட்டா, இந்த முபாரக்குக்கு அறிவென்றதே கொஞ்சம் கூட இல்ல” முணுமுணுத்த பேகம் முபாரக்கை சத்தமாக அழைக்க அவனும் எழுந்து வந்து அன்னையிடம் என்னவென்று வினவ
“மாப்பிளையை போய் தூங்க சொல்லு, ஷஹீ பாத்திட்டு இருப்பா” நாசூக்காக சொல்ல அது முபாரக்குக்கு புரியவில்லை ஆனாலும் சுப்ஹு தொழுகைக்கு எழுந்துகொள்ள வேண்டும் என்பது ஞாகத்தில் இருந்ததால் அன்னையிடம் சரியென்றவன் ரஹ்மானையும் தூங்கும்படி கூறியவாறு தனதறைக்குள் புகுந்துகொண்டான்.
அவன் சிந்தனையில் அவனின் பாடும் குயிலின் நினைவுகள். எதுக்கு அவள் தன்னிடம் பேசாமல் இருக்கிறாள் என்பதில் ஆரம்பிக்க “வீட்டுக்கு தெரிஞ்சதால பேசாம இருக்கிறாளோ” என்று கூட எண்ணியவன் “இருக்காது. தெரிஞ்சிருந்தா ரஹ்மானே என்னிடம் கேட்டிருப்பான். என்ன காரணமா இருக்கும். அட சே அவளை கண்டு பிடிச்ச சந்தோஷத்துல என்னென்னமோ பேசிட்டேன் ஒழிய எதுக்கு அவ என் கிட்ட பேசாம இருக்கானு கேட்க முடியல. நாளைக்கே ரஹ்மான் கிட்ட ஹாஜி குட்டி பத்தி பேசணும். கடைசில என் குடும்பத்து பொண்ணையே லவ் பண்ணிட்டியே மாச்சான் சட்டையை புடிக்க போறான்” ஷஹீயை பெண் பார்க்க வந்த அன்று முபாரக் பேசியது ஞாபகத்தில் வரவே தனக்குள் பேசியவாறு உறங்க
இங்கே ஹாஜராவும் அவனை பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தாள். “அக்காவை சைட் அடிச்சி கிட்டு இருந்தான் மொட்டை மாடிக்கு வந்ததும் அப்படியே அந்தர் பல்டியடிச்சு லவ் பண்ணலாமான்னு கேக்குறான் லூசு பய. நல்லவனா? கெட்டவனானே தெரியல. போன லாக் பண்ணாம வச்சிருக்கான். கேட்டா லாக் பண்ணி வைக்கும் அளவுக்கு அதுல ஒன்னும் இல்லனு சொல்லுறான். டேய் முபாரக் நீ நல்லவனா? கெட்டவனா? அவன் நினைவுகளிலையே உறங்கியும் போனாள்.
ரஹ்மான் அறைக்குள் வரும் பொழுது ஷஹீ சுவர் புறமாகத்தான் தூங்கிக்கொண்டிருந்தாள் அதுவும் சுவர் புறத்தை பார்த்தவாறு
“சரியான கும்பகரணி. தலையை வச்சதும் தூங்கிடுறா. உஷாரா சுவரோட ஒட்டிக்கிட்டு தூங்குறதா நினைப்பு” உள்ளுக்குள் சிரித்தவன் ஸ்விட்ச்சை அனைத்து விட்டு வந்து கட்டில் படுத்து கொள்ள அவன் வாசனையை நுகர்ந்தவளாக அவன் புறம் திரும்பிய ஷஹீ அவனை அணைத்துக்கொண்டு தூக்கத்தை தொடரலானாள்.
அவள் புறம் திரும்பி அணைத்துக் கொண்டு “எதுக்கு டி அழுத? சொல்லவே மாட்டேங்குற, கேட்கவும் பயமா இருக்கு டி. பார்க்க சாதாரணமாத்தான் நடத்துகிற, சிரிச்சு பேசுற, ஆனா உன் மனசுல என்ன இருக்கு, நீ என்ன நினைக்கிற? என்னால புரிஞ்சிக்க முடியல. எனக்கு பயமா இருக்கு. என்னால உன் மனசு கஷ்ட படுமோனு பயமா இருக்கு. அதனாலதான் அமைதியா இருக்கேன். எதுவானாலும் என் கிட்ட பேசலாம்ல. இப்படி மனசுக்குள்ளேயே வச்சிக்கிட்டு இருந்தா என்னடி அர்த்தம்” அவள் தலை கோதியவாறே தூங்கும் மனைவியோடு நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தான் ரஹ்மான்.
இந்த மூன்று நாளும் ரஹ்மானுக்கு மூணு வேலையும் விருந்துதான். பேகம் வித விதமாக சமைத்து கொடுத்தாள் என்றால் மஸீஹா இனிப்பு வகைகளை செய்து கொண்டுவந்து கொடுப்பாள்.
மஸீஹாவும் நிறைய மாறி இருந்தாள். அது ருகையா வயதுக்கு வந்த பின்னால் தான் நிகழ்ந்தது. தன் மகள் என்று வரும் பொழுது கொஞ்சம் யோசித்து பார்த்திருப்பாள் போலும் அதனாலயே ஷஹீயின் கல்யாணத்திலும் சரி அதற்கு பின்னும் சரி நாவை அடக்கித்தான் இருந்தாள். பிறவி குணத்தை மாற்றுவது கொஞ்சம் கடினம் தான். இருந்தாலும் அவள் மாற்றம் குடும்பத்துக்கு நன்மையை விளைவிக்கவே செய்திருக்க இனி நல்லதே நடக்கும்.
ரஹ்மான் மூன்று நாட்களும் அஷ்ராப்போடு காலையில் வெளியே சென்று வந்தானே ஒழிய மற்ற எல்லா நேரமும் வீட்டில் தான் இருந்தான். முபாரக்கும் கடைக்கு சென்று விடுகிறான். பேச கூட ஆளில்லாமல் வெளியே கிளம்புகிறான் என்று பேகம் நினைத்திருக்க. தாய் அறியாத சூலா?
பேகம் கொஞ்சம் கவனித்து பார்த்ததில் ஷஹீயும், ரஹ்மானுக்கும் இடையே எந்த ஒரு கொஞ்சல் மொழிகளும் இல்லை. எல்லாம் சாதாரண பேச்சு வார்த்தைகள் தான். அதுவும் ரஹ்மான் ஏதாவது கேட்டால் ஷஹீ பதில் சொல்வாள். அவளாக எதுவும் கேட்பதாகவும் தெரியவில்லை. இருவரும் சிரித்து பேசியும் பேகம் இதுவரை பார்க்கவில்லை.
பகல் பொழுதும், சரி, மாலை வேலையும் சரி இருவரும் அறைக்குள் ஒன்றாக இருந்ததே இல்லை. ஷஹீ ருகையாவோடு இருப்பாள். ரஹ்மான் ஹஸனோடு இருப்பான். அல்லது நால்வரும் வாசலில் ஏதாவது கேம்ஸ் விளையாடுவார்கள்.
வெளியே செல்லும் பொழுது ஏதாவது வாங்கிட்டு வரணுமா என்று ரஹ்மான் கேட்பதும், ஒன்றுமில்லை என்று ஷஹீ சொல்வதும். அவளுக்கு ஏதாவது தேவையென்றால் முபாரக்கை அழைத்து சொல்வதும். ரஹ்மான் சம்பந்தமே இல்லாமல் பொருட்களை வாங்கி வருவதும். ஏற்கனவே வீட்டில் இருக்கும் பொருட்கள் என்பதால் பேகத்துக்கு புரிந்தது விட்டது மகள் குடும்பம் நடாத்தும் லட்சணம்.
ரஹ்மான் ஷஹீயை விரும்பி திருமணம் செய்தான். அவன் அவளோடு நடந்துகொள்ளும் முறையிலும் சரி, வீட்டாரோடு நடந்து கொள்ளும் முறையிலும் சரி எந்த குறையையும் காண முடியாது. ஷஹீதான் அவனோடு ஒட்டாமல் விலகி இருக்கிறாள். அப்படியென்றால் அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையா?
தனக்கு அமைந்ததை போல இல்லாமல் மனைவியை உண்மையாக நேசிக்கும் நல்ல கணவன் ஷஹீக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான் தனது ஒரே ஆசை. அன்றாடம் அல்லாஹ் விடம் கேட்கும் துஆவும் அதுதான். ரஹ்மான் நடந்துகொண்ட விதம் மற்றவர் கண்களுக்கு எப்படியோ பேகத்தின் கண்களுக்கு அவன் ஷஹீ மீது வைத்த உண்மையான காதல் நன்றாகவே புரிந்ததால்தான் கல்யாணத்துக்கு மனதார சம்மதித்தாள். ஆனால் ஷஹீக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லையோ என்ற எண்ணம் தோன்ற அவளோடு பேச வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள் பேகம்.
“என்ன மச்சான் நீ மூணு நாள் தான் தங்கணுமா? இன்னும் ரெண்டு நாள் எக்ஸ்டரா தங்க கூடாதா?” முபாரக் முறைத்தவாறே கேக்க
“மருந்தும், விருந்தும் மூணு நாளைக்கு தான் மச்சான் அதுக்கு மேல் கூடாது”
பௌர்ணமி இரவு. வானமும் தெளிவாக இருப்பதால் மொட்டை மாடியில் இன்றிரவு உணவு உண்ணலாம் என்று ரஹ்மான் ஆலோசனை கூற அதை ஆமோதித்த முபாரக் ஹஸனையும் அழைத்துக் கொண்டு சமைத்த உணவு பதார்த்தங்களை மொட்டை மாடிக்கு கொண்டு வந்தவர்கள் பாயை விரித்தவாறே பேச ஆரம்பித்திருக்க, பின்னால் வந்த ஷஹீயின் காதிலும் இவர்கள் பேச்சு விழவே
“அதென்ன விருந்தும், மருந்தும்னு சொல்லுறீங்க? அப்போ நீங்க இந்த வீட்டு விருந்தினரா? என்னையும் உங்க வீட்டு விருந்தினராதான் பாக்குறீங்களா?” முறைக்க ஆரம்பித்தாள் ஷஹீ.
“நா எது சொன்னாலும் ஏடா கூடமாகவே யோசிக்கிறது வேலையா வச்சிருக்க என் பொண்டாட்டி” மனதுக்குள் அவளை செல்லமாக முறைத்தவன்
“நா எங்க விருந்தாளினு சொன்னேன் நீங்க தான் விருந்தாளியை கவனிக்கிறது போல மூணு வேலையும் வித, விதமா சமைச்சி போடுறீங்க? மஸீஹா மாமி எனக்கு சாப்பிட ஏதாவது கொடுத்தா அதுல கொஞ்சத்தை உன் நாநாகு கொடுக்கிறியா? இல்லையே! எல்லாம் எனக்கே வைக்கிற. கோழி ஆக்கினா எனக்கு மட்டும் எண்ணையில் வறுத்து ரெண்டு துண்டு இருக்கும். உன் நாநாகு இல்ல. எங்க வீட்டுல உனக்குன்னு ஏதாவது தனியா சமைச்சி கொடுத்திருக்கங்களா? இல்ல உனக்கு கொடுக்காம ஏதாவது சாப்பிட்டு இருக்கோமா? இப்போ சொல்லு யாரு யாரை விருந்தாளியா கவனிக்கிறாங்கனு” ரஹ்மான் மூச்சு விடாம பேச
“அது… அது வந்து வீட்டு மாப்புள வந்தா அப்படிதான் ஸ்பெஷலா கவனிப்போம். அத நீங்க எப்படி தப்புனு சொல்லலாம்” அதற்கும் ஷஹீ ரஹ்மானோடு மல்லுக்கு நிற்க அக்பர் குடும்பத்தோடு பேகமும் படியேறி வரவே அமைதியானார்கள்.
அதன் பின் மொட்டை மாடி நிலவொளியில் நெய் ரொட்டியும், இறைச்சி வருவலோடு, பருப்பு கறியும் உண்டவாறே முபாரக், ஷஹீயின் குழந்தை பருவ கதைகளை கேட்டு மகிழ்ந்தான் ரஹ்மான்.
“முபாரக் ரொம்ப அப்பாவி மாப்புள இந்த ஷஹீ இருக்காளே ரொம்ப சேட்டை புடிச்சவ, ஒரு இடத்துல இருக்கவே மாட்டா. வீட்டை சுத்தி ஓடிக்கிட்டே இருப்பா. எப்போ பார்த்தாலும் ஏதாவது ஒண்ண பண்ணிகிட்டே இருப்பா. பேச்சும் அப்படிதான். தெரிஞ்சவங்க, தெரியாதவங்கனு இல்ல யார் கூடவேணாலும் பேசுவா. சரியான வாயாடி” அக்பர் சொல்லி சிரிக்க
“தூங்கும் போது கூட ஒரு இடத்துல தூங்க மாட்டா. எத்துணை தடவ கால தூக்கி என் கழுத்துல போட்டு என்ன கொல்ல பாத்திருப்பா” முபாரக் தங்கையின் முடியை இழுத்தவாறே கூற
“அதான் தெரிஞ்ச விசயமாச்சே கால எங்க போடுவா? கைய எங்க போடுவா? தூக்கத்துல என்னெல்லாம் பண்ணுவா?” முபாரக்கிடமிருந்து முடியை விடுவிப்பது போல் ஷஹீயின் புறம் குனிந்து சொல்ல கணவனை முறைத்தாள் ஷஹீ.
இப்படியே பேச்சும் நீண்டு பேசி சிரித்தவாறே உணவும் உண்டு முடிய, “நாங்களே எல்லாவற்றையும் கொண்டு சென்று கழுவி வைக்கிறோம்” என்று முபாரக்கும் ரஹ்மானும் கூற பேகம் மறுத்தாள்.
அவளை வற்புறுத்தி சம்மதிக்க வைத்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கீழே செல்ல ஹஸன் தூக்கம் வருகிறது என்று சொல்லவும் மஸீஹா அவனை தூங்க வைக்க செல்ல, ருகையாவும் பாடசாலை ப்ரொஜெக்ட் வேலைக்கு உதவி செய்யுமாறு அக்பரை இழுத்து செல்ல ஷஹீயும் பேகமும் மாத்திரம் மொட்டை மாடியில் இருந்தனர்.
ஷஹீயும் கீழே செல்லலாம் என்று இறங்க முட்படுகையில் “ஷஹீ நில்லு நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” பேகமின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது.
அன்னையை யோசனையாக திரும்பி பார்த்தவள் எதுவும் கேளாமல் அன்னை அமரவும் அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
சில நிமிட மௌனம் எப்படி ஆரம்பிப்பதென்று பேகம் யோசித்திருப்பாள் போலும். ஷஹீயும் உம்மாவே பேசட்டும் என்று அமைதியாகவே இருந்தாள்.
உம்மாவின் முகத்தை பார்த்தவள் ஆமாம் எனும் விதமாக தலையசைக்க, தன் மகளை பற்றி பேகத்துக்கு தெரியாதா? தலையசைப்பிளையே அவள் மனதை கண்டு கொண்டவள்
“ஷஹீ மா… உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை என்று சொல்லி இருந்தால் கண்டிப்பாக இந்த கல்யாணத்தை நடத்தி இருக்க மாட்டேன். ரஹ்மான் உன்ன நேசிச்சதாலதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். உனக்கும் ரஹ்மான் மேல இஷ்டம் இருக்கும்னு நம்பினேன். ஆனா உங்க ரெண்டு பேர் நடவடிக்கையும் பார்க்கும் பொழுது அப்படி இல்லைனு தெளிவா தோணுது”
பேகம் பேசிக்கொண்டே போக ஷஹீ சட்டென்று புரிந்துகொண்டாள். ஒரு வாரம் ரஹ்மான் வீட்டில் அத்தனை ஆட்கள் நிறைந்திருந்தும் கண்டுகொள்ள முடியாததை மூன்றே நாளில் யாருமில்லாத வீட்டில் உம்மா கண்டு கொண்டு விட்டாள். அது பெண்ணை பெற்ற அன்னையின் மனத்துடிப்பு.
உம்மாவிடம் பொய் கூறவும் முடியாது. அதே சமயம் உண்மையை கூறி அவளை மனக்கஷ்டத்துக்கு ஆளாக்கவும் கூடாது. சட்டென்று யோசித்தவள்
“உம்மா நீங்க ஏதேதோ யோசிச்சு மனச போட்டு குழப்பிக்கிட்டு இருக்கீங்க. என் படிப்பு இன்னும் முடியல இல்ல. அவசரமா கல்யாணம் நடந்ததால ரெண்டு பேருமே கொஞ்சம் குழம்பி போய் இருந்தோம். அப்பொறம் ரெண்டு பேரும் பேசி படிப்பு முடிஞ்சா பிறகு வாழ்க்கையை தொடங்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம். நாங்க தெளிவாத்தான் இருக்கோம்” ஷஹீ புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து பேச
“அவ்வளவு புருஷன புரிஞ்சிகிட்டவதான் உன் தேவைக்கு கூட போன் போட்டு நாநா கிட்ட தான் அத கொண்டுவா இத கொண்டுவான்னு சொல்வியா? புருஷன் கிட்ட உரிமையா கேக்க மாட்டியா? இதுக்கு என்ன சொல்ல போற?” பேகத்தின் வார்த்தைகள் அழுத்தமாக வர
அன்னை இவ்வளவுதூரம் கவனித்திக்கும் அளவுக்கா நடந்து கிட்டோம் என்று நொந்து கொண்டவள்.
“ஏன் என் நாநா கிட்ட நான் கேக்க கூடாதா? கல்யாணம் ஆகி போனா உரிமை இல்லாமல் போக்கிடுமா? அவருக்கு கல்யாணம் ஆனா மைனி வந்தா இந்த மாதிரி கேக்கத்தான் முடியுமா?” ஷஹீ அப்படியே திருப்பிக் கேக்க
அவளை யோசனையாக பார்த்த பேகம் “நல்லா பேச கத்துக்கிட்ட டி. எனக்கு தெரிய வேண்டியது ஒண்ணே ஒன்னு” பேகம் ஆரம்பிக்கும் பொழுது ஷஹீயின் அலைபேசி அடித்தது.
திரையில் ரஹ்மானின் எண்ணோடு பெயரும் வரவே அதை கண்டு பேகம் “பேசு” என்று செய்கை செய்ய ஷஹீ இயக்கி காதில் வைக்க முத்த சத்தம் பேகத்துக்கும் கேக்க அன்னையை திகைத்து பார்த்தாள் ஷஹீ.
ஷஹீயின் எண்ணமெல்லாம் “என்ன ஒருநாளும் இல்லாம இப்படி பண்ணுறான் என்றதில் இருக்க”
“ஒய்.. பொண்டாட்டி எங்க டி.. இருக்க? வீடு முழுக்க உன்ன தேடிட்டேன் உன்ன காணோம். ஏன் டி பகல்லதான் கிட்ட வரக்கக்கூடாது, கிஸ் பண்ண கூடாதுனு ரூல்ஸ் போட்டிருக்க, நைட்டுல அந்த ரூல்ஸ் எல்லாம் இல்லையே! சீக்கிரம் ரூமுக்கு வந்தா தானே பாக்க வேண்டிய வேலைய பார்த்துட்டு தூங்கலாம். சீக்கிரம் வாடி. எங்க இருக்கானு சொல்லு நானே வரேன்” கொஞ்சலாக பேச ஆரம்பித்தவன் மிரட்டலானான்.
ரஹ்மான் அலைபேசியில் முத்தம் வைத்ததே அதிர்ச்சி என்றால் அவன் பேச்சு பேரதிர்ச்சி. கண்களை அகல விரித்தவாறே அன்னையை பார்க்க இதழோரம் மலர்ந்த புன்னகையில் படிகளில் இறங்கலானாள் பேகம்.
அன்னை கீழே சென்று விட்டாள் என்று உறுதி செய்து கொண்ட ஷஹீ “என்ன லூசு மாதிரி உளறி கிட்டு இருக்கீங்க” என்று கணவனை வசை பாட ஆரம்பிக்க
“நா அப்படி பேசலைனா தான் பிரச்சினை. நல்ல வேல போன் வந்ததுன்னு முபாரக் கூட போகாம போன் பேச மொட்டை மாடிக்கு படியேறினேன். பாஷித்தான் பேசினான். நாளைக்கு வீட்டு வாரீங்களானு கேக்கத்தான் போன் பண்ணாணாம்னு வச்சிட்டான். அதுல நீயும் மாமியும் பேசினது காதுல விழுந்தது. இப்போ சொல்லு நான் போன் பண்ணி உன்ன காப்பாத்தி விட்டேனா? இல்லையா?” மனைவியின் பதிலுக்கு ஆவலாக ரஹ்மான் காத்திருக்க
கணவன் காப்பாத்தி விட்டேன் என்றதும் கண்களில் நீர் நிறைய “போடா…” என்றவள் அலைபேசியை அனைத்திருந்தாள்.