திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் கடந்திருக்க, ரஹ்மானின் வீட்டு பழக்க வழக்கங்களை ஓரளவு புரிந்துகொள்ளலானாள் ஷஹீரா. அனைவருமே ஸுப்ஹுத் தொழுகைக்கு முன் எழுந்து விடுவார்கள். ஆண்கள் பள்ளிக்கு சென்று விட பெண்கள் வீட்டில் தொழுகையை முடித்துக்கொண்டு அன்றைய வேலைகளை ஆரம்பித்து விடுவார்கள்.
நவ்பர் பாய் பள்ளியிலிருந்து திரும்பும் பொழுதே கடையிலிருந்து பன், லெவரியா, ஹெலப என்று ஏதாவது டீயோடு சாப்பிட வாங்கிக்கொண்டு வருவார். அதை சாப்பிட்டு விட்டு டீ சாப்பிட்டால், காலை உணவு உண்பதற்கு எட்டு மணி தாண்டும்.
நவ்பர் பாய் பள்ளியிலிருந்து வந்த உடன் கடைக்கு சென்று விடுவார். பாஷித் காலேஜ் முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறான். சில சமயம் நவ்பர் பாய்யோடு கடைக்கு கிளம்பி விடுவான். சில நேரம் வீட்டில் தான்.
ரஹ்மான் மட்டும்தான் எங்கு செல்கிறான் என்று அவளுக்கு தெரியவில்லை. அவளிடம் சொல்லி விட்டு செல்கிறான் என்று வீட்டார் நினைக்க, அவளிடமும் சொல்லிக் கொள்வதில்லை. எங்கே செல்கிறேன் என்று கூறாமல் “போய்ட்டு வரேன்” என்பதோடு கிளம்பி விடுவான்.
ஹாஜரா காலேஜ் சென்று விடுவதால் ஹனாவோடு ஐக்கியமாகி விடுபவள் சமையல் வேலைகளிலும் ஈடு பட ரஸீனாவோ போய் படிக்கிற வேலை இருந்தால் பார்க்குமாறு ஏவியும் பரவாயில்லை என்று அறைக்குள் செல்வதை தவிர்ப்பதற்காகவே அவர்களோடு கதையடித்தவாறு சமையலுக்கு உதவிக்கொண்டிருப்பாள்.
தான் வீட்டில் இருந்தால் பானு அறைக்குள் வருவதுமில்லை, நிலையில்லாமல் தடுமாறுவதை கண்ட ரஹ்மானும் அவளுக்கு எந்த ஒரு சிரமத்தையும் கொடுக்காது, காலையில் வெளியே கிளம்பிச் சென்று மத்திய உணவுக்கு வருபவன் மீண்டும் சென்று இரவுதான் வீடு வந்தான்.
அவனுக்கு அவன் பானுவின் மேல் எந்த கோபமும் இல்லை. அவள் விஷயத்தில் மட்டும் சூடு சொரணையெல்லாம் மூட்டை கட்டி வைத்து பொறுமையை மட்டும் கையில் வைத்துக்கொண்டு அலைகிறான். அவளோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் அது அவனுக்கு தேவை. அவள் கோபம், முறைப்பு, எல்லாவற்றையும் ரசிக்கலானான்.
ரஹ்மானை முறைத்துக்கொண்டுதான் இருந்தாள் ஷஹீ. அவளுக்கு நல்லது செய்வதாக எது செய்தாலும் தனக்கு கெட்டதாகவே வந்து விடிய, பார்வையாலையே தொடர்பவன் அவளிடமிருந்து ஒதுங்கியே தான் இருந்தான்.
அவன் ஒதுக்கம் கூட ஷஹீராவுக்கு தன்னை உதாசீனப்படுத்துவதாகவே தோன்றியது. காதல் இருந்தால் இப்படி ஒதுங்கி இருப்பானா? அது என்னது கல்யாணமாகி ஒரு வாரம் கூட ஆகவில்லை அப்படி என்ன வெளி வேலை? கல்யாணமான புதிதில் அறையை விட்டுத்தான் கணவனும், மனைவியும் வரமாட்டார்கள் எத்தனை சினிமாவில் பாத்திருக்கிறாள். இங்கே என்னவென்றால் அந்த அறைக்குள் செல்வதென்றால் இருவருக்குமே கசந்தது.
அன்பான பேச்சு வார்த்தைகள் இல்ல. ஆசையான பார்வை கூட இல்லை. ஏதோ கடமைக்காக கல்யாணம் செய்தவன் போல் வருகிறான், போகிறான். மனதில் என்ன நினைக்கிறான் என்று ஒன்றுமே புரியவில்லை.
இரவானதும் அறைக்குள் நுழைபவன் கட்டிலில் ஏறி படுத்துக்கொள்கிறான். கண்ணை மூடி தூங்குபவனை போல் பாசாங்கு செய்பவனிடம் என்னவென்று பேச? சண்டை கூட போட முடியவில்லை. வீட்டில் உள்ளவர்களின் காதில் விழுந்து விட்டால் வீண் பிரச்சினை உருவாகுமே! ஆனால் கட்டிக்கொண்டு தான் தூங்குவது. அவள் கண்விழித்தால் அவனை விட்டு விலகி விடுவாள். இந்த ஐந்து நாட்களும் அவன் முதலில் கண் விழிக்கவே இல்லை.
அப்படித்தான் ஷஹீ நினைத்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் இரண்டு நாள் விழிப்புத்தட்டி மனைவியை ரசித்துக்கொண்டிருந்தவன், அவள் அறியாமல் கன்னத்தில் முத்தமும் வைத்திருக்க, அவள் துயில் களைவது போல் இருக்க தூங்குவது போல் பாசாங்கு செய்யலானான்.
ஷஹீயின் பொறுமை எல்லை மீறிக்கொண்டிருந்தது. பேச்சு வார்த்தைக்கு கூட பஞ்சமானால் கோபம் வராதா? “பானு, பானு” என்று அழைப்பவனின் வாயிலிருந்து தேவைக்கு கூட அவள் பெயர் வரவில்லை. அவள் சமயலறையில் ஹாஜராவோடு இருந்தாலும் ஹாஜராவிடம் டீ அல்லது காபி கேட்டு அருந்துபவன் மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தவாறே அங்கையே அமர்ந்தது டீயை அருந்துவான்.
“ஏன் எனக்கு டீ, காப்பி போட தெரியாதா? எங்க உம்மா சொல்லி கொடுக்கலயா? கணவனை முறைத்தவள் கண்களாளேயே கேட்டு வைக்க அவள் முறைப்பது மட்டும்தான் ரஹ்மானுக்கு புரிந்ததே ஒழிய அவள் கோழி குண்டு கண்களை உருட்டி கேட்கும் கேள்வி புரியவில்லை.
மனைவி வீணாக தன் மேல் கோபம் கொண்டு முறைத்துக்கொண்டு இருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டிருப்பவனும், இன்று மனம் திறப்பாள், நாளை மனம் திறப்பாள் என்று பொறுமையாக காத்துக்கொண்டு இருக்கலானான்.
ஆனால் அவளும் தன்னிலையில் இருந்து இறங்கி வராமல் ரஹ்மான் தன்னை பழிவாங்கத்தான் திருமணம் செய்து கொண்டான் என்ற முடிவுக்கு வந்திருந்தாள். தனியாக இருந்தால் கலங்கும் விழிகளையும், பெருக்கெடுக்கும் கண்ணீரையும் கட்டுப்படுத்த வழி தெரியாது தவிப்பவள் முடியுமான அளவில் ஹனா, ஹாஜராவோடே இருக்கலானாள்.
ரஹ்மான் பானுவை அளவுக்கதிகமாக காதலித்து விட்டதன் விளைவுதான் இந்த ஒதுக்கம். எங்கே தன்னால் அவள் மனம் நொந்து விடுமோ! தன்னுடைய சிறு செயலும் அவளை காயப்படுத்தி விடுமோ! என்ற அச்சம் அவனுள் இருந்து கொண்டே இருக்க அவளை எட்டி நின்றே ரசிக்கலானான்.
“மண்ணை நீயும் பார்க்கும் பொழுது உன்னை நான் பார்க்கின்றேனடி. விண்ணை நான் பார்க்கும் பொழுது என்னை நீ காதலாய் பார்ப்பாயோ!” என்று அவளை பார்த்து மனதுக்குள் கேட்டுக்கொள்வான் ரஹ்மான்.
வீட்டாருக்கும் இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் தெரியவில்லை. கல்யாணவீடு என்பதால் சொந்தபந்தங்கள் வந்து, சென்ற வண்ணம் இருக்க, பக்கத்து விட்டார், ஊர்காரர்கள் என்றும் வருகை தர வீட்டில் சதா ஆட்கள் இருந்தோ கொண்டே தான் இருந்தனர். காதலித்து திருமணம் செய்தவர்களுக்கும் கல்யாணமாகி இரண்டாம் நாளே பிரச்சினை என்றால் யாராவது நம்பவா போறார்கள். சந்தேகம் கூட வரவில்லை.
ஷஹீ படிக்க வேண்டும் அவளை வீட்டு வேலை எல்லாம் செய்ய வைக்கக் கூடாதென்று ரஸீனா விடம் கூறி இருந்தான் ரஹ்மான்.
“ஹாஜராவும் காலேஜ் தான் போறா டா.. அவளும் எல்லா வேலையும் செய்யுறா. உன் பொண்டாட்டியும் அவ வீட்டுல எல்லா வேலையும் பாத்தவ தான். ஓவரா பண்ணாத” என்றவள் சிறு சிறு வேலைகளை ஏவலானாள்.
காலையில் டீ போடும் வேலைகளில் அதுவும் ஒன்று. அன்று எல்லாருக்கும் டீ போட்டவள் ரஹ்மான் தன்னிடம் பேசாமல் இருப்பதால் கோபத்தில் டீயில் உப்பை அள்ளி போட்டுக்கொண்டு போய் கொடுத்தாள்.
நேற்று ஹாஜரா போட்ட டீயில் கலந்தவள்தான் வாசலில் ரஹ்மான் அமர்ந்திருக்க டீயை கொண்டு போய் வைத்ததும் அதை பாஷித் அருந்தி ஹாஜராவுக்கு வசை மழை பொழிய அந்த நேரம் அவள் குளியலறையில் இருந்ததால் பானுவின் குட்டு வெளிப்படவில்லை. ஆனால் ரஹ்மான் மனைவியின் முகத்தை பார்த்ததுமே புரிந்து கொண்டவன் மெல்லியதாக புன்னகைத்து விட்டு எழுந்து சென்று விட்டான்.
இன்று உசாராகவே கணவனின் டீயை அவன் கையிலையே கொடுக்க அதை பெற்றுக்கொண்டவன் அருந்தாமல் மேசையின் மீது வைத்து விட்டு ஏதோ கணக்கு வழக்கு பாத்துக்கொண்டிருந்தான்.
அவனுக்கு தெரியும் இன்றும் உப்பு டீ தான் என்று அதனாலயே ஒன்றும் அறியாதவன் போல் தன் வேலையை செய்ய முபாரக் வந்திருப்பதாக பாஷித் கூற ஷஹீ நாநாவை பார்க்க வாசலுக்கு ஓடி இருந்தாள்.
அவள் பின்னால் வந்த ரஹ்மானோ! கையில் டீ யோடு வந்தமர்ந்து
“பானு நீ போய் இன்னொரு டீ போட்டு கொண்டு வா இத நான் மச்சானுக்கு கொடுக்கேன்” என்று கண்சிமிட்ட, கணவனிடம் தன் குட்டு வெளிப்பட்டதை தெரிந்து கையை பிசைந்தவள்
“இல்ல இத நீங்க குடிங்க, நாநாகு நான் வேற கொண்டுவாறேன்” என்றவள் என்ன செய்வதென்று புரியாமல் முழிக்கலானாள்.
“நாநாகு சக்கர போட்ட டீ. எனக்கு உப்பு டீயா. இந்த சிடு மூஞ்சிக்கு இதுதான் சரி” மனைவிக்கு கண்களாளேயே பதில் சொன்னவன் “ஸ்பெஷல் தான் ஸ்பெஷல் தான் குடிச்சி பாத்தா தானே தெரியும்” என்று வலுக்கட்டாயமாக மச்சான் கையில் டீ கப்பை திணிக்க முபாரக்கும் ஒரு மிடற் குடித்தவன்
“ஏன்டா உங்க வீட்டுல சக்கரையே வாங்க மாட்டீங்களா டா… எப்போ வந்தாலும் உப்பைத்தான் போட்டு கொடுப்பீங்களா??” கடுப்பானவன் ரஹ்மானை முறைக்க டீ கப்பை பெற்றுக்கொண்ட ஷஹீ கணவனை முறைத்தவாறே அகன்றவளின் பார்வை சொன்னது இன்னொரு தடவ மிஸ் ஆகாது என்று.
முபாரக்கு தங்கையின் மேல் சந்தேகம் வரவில்லை. மாறாக சக்கரை டப்பாவும், உப்பு டப்பாவும் அருகில் இருந்திருக்கும் தவறுதலாக மாத்தி போட்டிருப்பாள் என்றே எண்ணினான்.
“காலைலயே இங்க வந்து உப்பு போட்ட டீ சாப்பிடணும்னு என் தலைல எழுதி இருக்கு போல” சிடுசிடுத்தவன் “உப்பு டப்பாகும், சக்கர டப்பாகும் பேர் எழுதி லேபிள் ஒட்டு மச்சான். நான் என்றதால் ஒன்னும் சொல்லல இதுவே வேறுயாராவதாக இருந்தால் என்ன நினைப்பாங்க” கண்களை உருட்டி சீரியஸ்ஸாகவே சொல்ல ரஹ்மானால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
“அப்படியே பானு மாதிரியே பண்ணுறான்” கொஞ்சம் பொறாமை எட்டி பாத்தாலும் “லேபிள் ஒட்டித்தாண்டா வச்சிருக்கோம். சக்கரைக்கு எறும்பு வரும்னு மாத்தி ஒட்டி வச்சிருக்கோம். படிச்சு பாத்து எறும்பு சக்கரன்னு நெனச்சு உப்பு டப்பாக்கு போகுமில்ல. ஆனா பாரேன் வீட்டு பொம்பளைங்கதான் மாட்டிக்கிறாங்க” என்று விட்டு வாய் மூடி சிரிக்க மச்சானின் கேலி புரியாமல் “லூசா நீ” என்று அவனை பார்த்து வைத்தான் முபாரக்.
“இன்னும் மூணு நாள்ல மறு வீட்டு விருந்து, உங்க பக்கம் எத்தனை பேர் வாரங்கனு சொன்னா ஏற்பாடு பண்ண இலகுவாக இருக்கும் அத கேட்டுட்டு போலாம்னுதான் வந்தேன்” சமயலறைக்குள் நுழையும் தங்கையை கண்களால் தொடர்ந்தவாறே சொல்ல சமயலறையில் அங்கும் இங்கும் செல்லும் ஹனா அவன் கண்களில் விழுந்தாள்.
வெளிப்புறத்தில் துணி காயப் போட்டுக்கொண்டிருந்த ஹாஜராவின் காதில் முபாரக் சொல்வது விழுந்ததும் வாய் மூடி சிரித்தவள் சமையலறை பக்கமாக உள்ளே வர அவன் ஹானாவை பார்ப்பதைக்கண்டு அவனை முறைக்க
“ஐயோ மானம் போச்சு இந்த பொண்ணு பாத்துட்டா..” என்று அந்த பக்கம் பார்வையை வீசாமல் இருக்க பெரிதும் பாடுபடலானான்.
“என் அக்காவையா சைட் அடிக்கிற உனக்கு உப்பு டீ பத்தாதே” கருவினாள் ஹாஜரா.
“அத போன்ல கூட சொல்லி இருக்கலாமே! தங்கச்சிய பாக்க வந்தேன்னு சும்மா கெத்தா சொல்லு மச்சான். யாரும் உன்ன ஒன்னும் சொல்ல மாட்டாங்க. நீ எப்போ வேணா இங்க வரலாம்” ரஹ்மான் புன்னகைக்க முபாரக் வாங்கி வந்திருந்த பழங்களையும், இனிப்புவகைகளையும் ஷஹீயின் கையில் கொடுத்தவன் சிறிது நேரம் அவளோடு பேசிக்கொண்டுருந்து விட்டு கிளம்பிச்சென்றான்.
“ஹலோ எக்ஸ்கியூஸ் மீ”
ரஹ்மான் வீட்டு மதில் சுவர் அருகில் வண்டியை நிறுத்தி அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த முபாரக் வண்டியை ஸ்டார் செய்யும் பொழுது யாரோ ஒரு பெண் அழைக்கவும் தலையை திருப்பி தேடலானான்.
“இங்க பாருங்க… இங்க” சுவர் மேலாக ஹாஜராவின் தலை தெரியவே இந்த பெண் எதற்காக தன்னை அழைக்கிறாள் என்று ஒரு கணம் திகைத்தவன் யோசனையாக வண்டியை விட்டு இறங்கி
“என்ன விஷயம்? எதுக்கு இங்க இருந்து பேசுறீங்க? ஏதாவது சொல்லணும்னு இருந்தா உள்ள வந்தப்போவே சொல்லி இருக்க வேண்டியதுதானே!” அவள் அழைப்பது நல்ல நோக்கத்துக்காக அல்ல என்று உள்மனம் சொல்ல சிடுசிடுத்தான்.
அவனின் கோபமாக முகம் கண்டு ஹாஜராவின் கோபமும் எகிறி குதித்தது. “அல்லாஹ் ஆளைப்பாறு இவரு பெரிய மன்மத குஞ்சு இவர் பின்னால் நாங்க அலையிறோமா? வாய்க்குள் திட்ட அவள் வாயையே பாத்திருந்தவன்
“என்ன இப்படி திட்டுறா.. என்ன சொல்லி திட்டுறானு புரியலையே! அந்த பொண்ண பாத்ததுக்கே இவ இந்த திட்டு திட்டுறா. இவள பாத்திருந்தா… காலைல யார் முகத்துல முழிச்சேன்னு தெரியல கூப்பிட்டு வச்சி கழுவி ஊத்தப்போறா”
நொந்தவாறே “இங்க பாரு மா இப்படி ரோட்டுல போறவன நிப்பாட்டி பேசினா உன்னதான் பாக்குறவங்க தப்பா சொல்லுவாங்க புரியுதா?” அவள் பேச ஆரம்பிக்கும் முன் அவளுக்கு அட்வைஸ் மழையை பொழிய ஆரம்பித்தான்.
“சொல்லுவாங்க சொல்லுவாங்க அதென்ன வீட்டுக்குள்ள வந்து பொண்ணுகளை சைட் அடிக்கிற? உன்ன நம்பி வீட்டுக்குள்ள விட்டா இப்படித்தான் பண்ணுவியா?” ஆற்றில் குளித்ததில் சளி பிடித்திருந்தவளின் குரல் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் ஒலித்தது. ஒழுங்காக இருந்திருந்தால் அவனின் பாடும் குயிலை இன்றே கண்டு கொண்டிருப்பான்.
“ஆஹா… பாத்துட்டு முறைக்கும் போதே உஷாராகி இருக்கணும். போன் வந்ததும் இங்க நின்னு பேசியே இருக்க கூடாது. காலம் கடந்து வரும் ஞானோதயம்” மீண்டும் மனதில் நினதத்தவாறே “அவங்க எனக்கு தெரிஞ்ச பொண்ணு மாதிரி இருந்தாங்க அதான் பாத்தேன். அவங்களே ஒன்னும் சொல்லல. நீ என்னமா..” அனைவரிடமும் சண்டைக்கு நிற்பவன் முபாரக் ஏனோ ஹஜாராவிடம் பணிந்து, தாழ்மையாக பேசலானான்.
“உனக்கு உப்பு காப்பி எல்லாம் பத்தாது. விளக்கு மாத்தளையே சாத்தானும்” மனதுக்குள் பொறுமியவள் “எப்படி எப்படி இன்னொருத்தனுக்கு கல்யாணம் பேசி வச்சிருக்கிற பொண்ணு… உனக்கு தெரிஞ்ச பொண்ணா? நல்ல கத? அவ மட்டும் பாத்தா உன்ன உரிச்சு உப்புக் கண்டம் போடப்போறா. போ… போ… போய் வேல இருந்தா பாரு” ஹாஜராவுக்கு அதைத்தான் சொல்ல வேண்டிய தேவை இருந்தது. அது தன் அக்கா ஹனாவுக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டது என்பதே! சொல்லி விட்டாள். இனி முபாரக் அவள் புறம் திரும்புவானா? நிச்சசயமாக மாட்டான்.
தனக்கு அவன் மேல் இருப்பது காதலல்ல வெறும் ஈர்ப்பு என்று என்னும் ஹாஜரா முபாரக் அக்காவை பார்ப்பதால் ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்று உணர மறுத்தாள். அவன் தந்தையினால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளான் என்று அவன் மீது பரிதாபம் தான் இருக்கிறது. வேறொன்றுமில்லை என்று அடிக்கடி தன் மனதோடு சொல்லிக்கொள்வாள்.
ஹாஜரா சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முபாரக் “கல்யாணம் நிச்சயமானதால்தான் தன்னோடு பேசுவதை நிறுத்தி விட்டாள் என்று தவறாக கருதினான்.
ஹானாவை சந்தித்து பேசியே ஆகா வேண்டும் என்ற முடிவோடு முபாரக் வண்டியை எடுக்க, இனி தன் அக்காவின் பக்கம் முபாரக்கின் பார்வை திரும்பாது என்று நிம்மதியாக ஹாஜரா உள்ளே சென்றாள்.
ஷஹீராவுக்கு திருமண பரிசாக ஒரு விலை உயர்ந்த அலைபேசியை பரிசாக கொடுத்திருந்தான் ரஹ்மான். நல்லவேளை ஷஹீ அது முபாரக் வாங்கி கொடுத்ததாக அவனிடம் கேட்டு வைக்கவில்லை. கொடுக்கும் பொழுதே காலேஜ் போகும் பொழுது தேவை படும். நெட்டில் ஏதாவது பார்க்க தேவை படும் என்று சொல்லியே ரஹ்மான் கொடுத்திருக்க ஷஹீயும் மறுக்காமல் வாங்கிக்கொண்டிருந்தாள்.
இத்தனைக்கும் அவளுக்கு என்ன தேவையோ அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து கொண்டுதான் இருக்கின்றான். அன்று அவன் அறையில் நுழையும் பொழுது பேகத்திடம் அவள் பாவிக்கும் சோப் வாங்கி அனுப்பும்படி கூறிக்கொண்டிருந்தாள்.
மணப்பெண்ணின் சூட்கேசில் வைத்ததை காணவில்லையாம். எங்கே வைத்தாள் என்று நினைவில்லையாம். தற்பொழுது பாவிக்கும் சோப்பின் பெயரை சொல்லி குளித்தது போலயே இல்லை என்கிறாள்.
“இன்னும் அவள் மனதில் தான் கணவன் என்ற எண்ணம் வரவில்லை. வந்திருந்தால் உரிமையாக அதை கொண்டு வா… இதை கொண்டு வா என்று கேட்டிருப்பாளே!”
அறையில் நுழையும் பொழுது கதவருகே நின்றவண்ணம் கேட்டுக்கொண்டிருந்தவன் சத்தம் செய்யாது வெளியேறி ஹிதாயாவை அழைத்து பானு பாவிக்கும் சோப், ஷாம்பு உட்பட அனைத்தையும் கேட்டறிந்து கொண்டான்.
அவளும் பானுவிடம் கேட்கலாமே என்று கேட்டதற்கு “கேட்டு அதற்கும் ஏதாவது ஏடா கூடமாக சொல்லிடுவாளோனு பயம் தான்” மனதுக்குள் சொல்லிக்கொண்டவன் “ஒரு சின்ன சப்ரைஸ் கொடுக்க மா” என்றவன் வீட்டுக்கு செல்லும் பொழுது அனைத்தையும் வாங்கிக்கொண்டு சென்று மனைவியின் கையில் கொடுக்க அதற்கும் அவள் அன்னை வாங்கி கொடுத்து அனுப்பினாளா? என்று தான் கேட்டாள்.
வளமை போல் பதில் பேசாது புன்னகைத்த ரஹ்மான் குளியலறைக்குள் புகுந்துகொள்ள பேகத்தை அழைத்தவள் அதைப்பற்றி பேச அவளோ! தான் அனுப்பவில்லை என்றதும் தான் அன்னையோடு பேசியது கணவனுக்கு எப்படி தெரியும்? ஒட்டுக்கேட்டானா? என்று நொடியில் தோன்ற
“சீ… சீ.. இருக்காது. தற்செயலாக காதில் விழுந்திருக்கும். அதனால் வாங்கிக்கொண்டு வந்திருப்பான். பொண்டாட்டிக்கு வாங்கிட்டு வரணும்னு எண்ணம் இருக்கே அது வரைக்கும் சந்தோசம். வாங்கி வந்துட்டு உம்மா தான் வாங்கி கொடுத்தாங்களா என்று கேட்டா இல்லை நான் தான் வாங்கி வந்தேன் என்று வாய் தொறந்து சொல்ல வேண்டியதுதானே! வாயில என்ன புட்டா? பேச முடியாதா? அப்படி என்ன ஈகோ? அவரே சொல்லட்டும் நான் போய் கேட்க மாட்டேன்” முறுக்கிக்கொண்டாள் ஷஹீ.
தான் தான் கொண்டு வந்தேன் என்று சொல்ல நொடி நேரம் ஆகுமா? சொன்னால் அவள் முகம் சுருங்குவதை பார்க்கப் பிடிக்காமல்தான் சொல்லாமல் தவிர்க்கிறான் ரஹ்மான். அது அவன் பானுவுக்கு புரியவில்லை.
பானுவின் மனம் நோகக் கூடாதென்று ரஹ்மான் விலகி இருப்பதும், அதனாலயே ஷஹீ அவனை முறைப்பதும் இந்த ஐந்து நாட்களாக நடந்து கொண்டிருந்தாலும் இருவரும் ஒன்றாக அமர்ந்துதான் உணவுண்டனர். ஊட்டியும் கொண்டனர். அது வீட்டாருக்காக என்று இருவரது பார்வை பரிமாறிக்கொண்டாலும் உள்மனம் ரசிக்கத்தான் செய்தது. மொத்தத்தில் வெளியே ஒருமாதிரியும், உள்ளே ஒருமாதிரியும் இருக்கலாயினர். மனம் விட்டு பேசினாலே எல்லாம் சரியாகிடும். பேசத்தான் ரஹ்மான் தயாராக இல்லை.
தான் எது செய்தாலும் ரஹ்மான் கண்டு கொள்ளாமல் விட்டுக்கொடுத்து போக அவனை சீண்ட ஆரம்பித்திருந்தாள் ஷஹீ. டிவி பார்த்துக்கொண்டிருந்தால் அவள் வந்து வேறேதாவது சேனலை வைத்து பார்க்க ஆரம்பிப்பாள். வெற்றி புன்னகை வீசுபவளை ஓரப்பார்வை பார்ப்பவன் அமைதியாக அவள் வைத்ததியே பார்க்க ஆரம்பிப்பான்.
“ரிமோட்டை புடுங்குவான், சண்டை போடுவான். கத்துவான்னு பாத்தா.. இப்படி அமைதியா இருக்கான்”
ரஹ்மானின் அமைதி அவளை சீண்ட ஏதாவது சில்மிஷங்களை செய்துகொண்டே இருக்க, உள்ளுக்குள் சிரித்தவன் அவளின் ஒவ்வொரு செய்கைகளையும் ரசிக்கலானான்.
அவனின் அமைதி அவளுக்கு பிடிக்கவில்லையென்றுதானே ஏதேதோ செய்கிறாள் எவ்வளவு தூரம் போகிறாள் என்று பார்க்க ரஹ்மானும் அமைதியாகவே இருந்தான். பானுவின் பொறுமையின் எல்லையும் மீறும் நாளும் வந்தது.
காலையில் அனைவருமே கிளம்பி சென்றிருக்க ரஹ்மான் இன்னும் கிளம்பவில்லை. “இன்னைக்கு மிஸ் ஆகவே கூடாது” என்று டீயில் உப்பை கலந்தவள் இன்று உசாராக ரஹ்மான் அறையில் இருக்கும் நேரம் பார்த்தே கொடுத்திருக்க, ஒரு மிடற் குடித்தவன் அவள் முகம் பார்க்க கைகளை கட்டிக்கொண்டு அவன் பதிலுக்காக காத்திருந்தாள் அவள். அவனோ அமைதியாக எதுவும் பேசாமல் அந்த டீயை அருந்த ஷஹீக்கு புசு புசுவென கோபம் வந்தது.
“உப்பிட்டவரை உள்ளளவும் நினை பானு. என்ன செய்ய உப்பு போட்டு கொடுத்து உன்ன மனசுல பதிக்க சொல்லுற. நீ சொன்னா செய்யாம இருக்க முடியுமா? சொல்லு” முறைத்துக் கொண்டிருக்கும் மனைவியை பார்த்து சிரித்தவாறே சொன்னான் ரஹ்மான்.
“எனக்கா? எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே! ஏன் கேக்குற?” யோசனையாகவே மனைவியை ஏறிட
“இங்க பாருங்க என்ன பழிவாங்கதான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னா வாய தொறந்து சொல்லிடுங்க, இப்படி இம்ச பண்ணாதீங்க?”
“நான் என்ன இம்ச பண்ணேன்? நான் பாட்டுக்குத்தானே இருக்கேன். நீதானே டீல உப்பெல்லாம் போட்டு கொடுத்து என்ன கொடும பண்ணுற?” கட்டிலில் சாய்ந்தமர்ந்திருந்தவன் சாதாரணமாகவே பதில் சொல்லானான்.
“அப்போ எதுக்கு என் கிட்ட பேசாம இருக்கிறீங்க உங்கள பேச வைக்கத்தான் இப்படி பண்ணேன். ஆனாலும் அப்படி என்ன பிடிவாதம். அப்படி என்ன என் நாநா மேல உங்களுக்கு பழிவாங்குற அளவுக்கு கோபம்?”
“என்ன பேச வைக்கவா? நான் பேசினாலே ஏதாவது பிரச்சினை தானே வருது? நான் என்ன பண்ணாலும் உன் கண்ணுக்கு தப்பா தான் தெரியுது. உம்மானு நெனச்சிதான் உன் மடில படுத்தேன்னு சொல்லி மன்னிப்பும் கேட்டேன். அஞ்சி நாளா முகத்தை தூக்கி வச்சு கிட்டு இருக்க. பழிவாங்கதான் செய்றியான்னு வேற கேக்குற? நான் என்ன பண்ணட்டும்?
நான் இருந்தா ரூமுக்கே வர மாட்ட. நாளைக்கு வேறு உங்க வீட்டுக்கு போகணும். அங்கேயும் போய் இப்படியே இருக்க முடியுமா? என்ன எதுன்னு உன் உம்மா கேக்க மாட்டாங்களா?
“என் எல்லா வேலைகளையும் உன்ன செய்ய சொல்வாங்க முகம் சுளிக்காம செய்வியா? இல்ல உம்மாவை பிரிஞ்சிருக்கணும்னு அவங்க கூட போய் தூங்குவியா? என்ன பண்ண போற?”
“உன் நாநாவை பழிவாங்க போறேன்னு நான் எப்போ உன் கிட்ட சொன்னேன்? எப்போ அவன் கிட்ட சொன்னேனாம்?” மூச்சு விடாமல் பேசி முடித்தவன், இன்றே இதற்கொரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்து முபாரக்கை அலைபேசியில் அழைத்தான்.
கணவன் பேசியவற்றை கேட்டு “அப்போ நான்தான் தப்பு பண்ணினேன்னு சொல்லுறீங்களா? நான் தான் உங்கள ஒதுக்கி வச்சுருக்கேன்னு சொல்லுறீங்களா?” அவனோடு மல்லு கட்டி நிற்க மறுமுனையில் முபாரக் ஸலாம் சொல்லி நலம் விசாரிப்பது தெளிவாக கேட்டது.