மண்டபத்திலிருந்து வீடு திரும்பிய பின் ஷஹீயின் உடையையும், அலங்காரங்களையும் கலைக்க ஹாஜரா, ஹனா மற்றும் ஜமீலா உதவி செய்து கொண்டிருக்க பாஷித்தின் அறையில் துணி மாற்றிய ரஹ்மான் அஷ்ராப்போடு வெளியே கிளம்பி சென்றிருந்தான்.
பானு குளித்து முடித்து விட்டு ஒரு சாதாரண சுடிதாரை அணிந்து கொண்டு, சாதாரணமாக நகைகளை போட்டுக்கொள்ள, அறையின் உள்ளே வந்த ரஸீனா மறு வீட்டு விருந்து அடுத்த வாரம் அது வரைக்கும், உறவினர்களும், அக்கம், பக்கத்திலுள்ளோரும் புதுப்பெண்ணை பார்க்க வருவார்கள் என்று ஒரு விலை உயர்ந்த சுடிதாரையும், அதற்கு பொருத்தமான நகைகளையும் போட்டுக்கொள்ளும்படி கூறி விட்டு செல்ல அவ்வாறே அணிந்து கொண்டவள் மிதமான ஒப்பனையும் செய்து கொண்டாள்.
முபாரக் அடித்த அடியியில் காலேஜுக்கு ஒரு வாரம் லீவ் போட்டிருந்தவள் கல்யாணம் பிக்ஸ் ஆனால் அதற்கு வேறு லீவ் போட வேண்டி இருக்குமே என்று இரண்டு நாள் காலேஜ் போனவள் கல்யாணத்துக்காக லீவ் போட, அவளுக்கான நோட்ஸ் எல்லாம் எவ்வாறு பெற்றுக்கொள்வது என்ற குழப்பத்தில் இருந்தாள்.
காலேஜில் ஹிதாயாவை தவிர யாருடனும் நெருங்கி பழக வில்லை. அவள் வேறு தமிழ் பிரிவில் இருக்க, யாரிடம் கேட்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது ஹிதாயாதான் ஷஹீயின் வகுப்பு தோழியின் புத்தகங்களை கொண்டு வந்து கொடுந்திருந்தாள்.
மருதாணி போடும் நாளுக்கு முதல் நாள்வரை ஒழுங்காக எழுதி கொண்டாள். நிகாஹ் இருந்தது வெள்ளி, வலீமா சனி நாளை லீவ் நாள். எப்படியும் இன்னும் ஒருவாரம் பத்துநாள் லீவ் போட வேண்டி இருக்கும். ஹிதாயா இங்கே நோட்ஸ் கொண்டு வந்து கொடுக்க மாட்டாள். அவளுக்கு சொல்லி இல்ஹாமிடம் கொடுக்க சொல்லலாம். இங்கே இருந்து எப்படி எழுதுவது? ஏதாவது சொல்லி விடுவார்களோ? என்ற அச்சம் ஒரு புறம் இருக்க, ரஹ்மான் என்ன சொல்வானோ! என்ற பயமும் வந்தது. ஆனால் அவளை யோசிக்க விடாது ரஸீனா அழைக்க அறையிலிருந்து வெளியே வந்தாள் ஷஹீரா.
சொன்னது போலவே அக்கம் பக்கத்திலிருந்து சிலர் குழந்தைகளோடு வந்து புதுமணப் பெண்ணை பார்த்து பேசலாயினர். வருபவர்களுக்கு கொடுக்க பலவகையான இனிப்புக்கள் வீட்டிலையே செய்திருக்க, வந்தவர்கள் ரஹ்மானை காணாது அவளிடம் விசாரிக்க, முழிக்கலானாள் ஷஹீரா.
“போறவன் போகிற இடத்தை சொல்லிவிட்டல்லவா போக வேணும்” கணவனை மனதுக்குள் வசை பாடியவள் அமைதியாக அமர்ந்திருக்க, வந்தவர்கள் புதுமணப் பெண்ணுக்கு வெட்கம் என்று பேசி சிரித்தனர்.
அஷ்ராப்போடு வெளியே போனதாக ஷம்ஷாத் கூறிக்கொண்டிருக்கும் பொழுது கைகளில் இரண்டு பைகளோடு உள்ளே நுழைந்தான் ரஹ்மான். அமர்ந்திருப்பவர்களை வரவேற்கும் விதமாக புன்னகைத்து தலையசைத்தவன் அங்கே பானு என்பவள் அமர்ந்திருப்பதை கண்டும் காணாதது போல் அறையினுள் நுழைந்துகொள்ள, அவள் மனம் சுருங்கி விட்டது.
ரோட்டில் அங்கும் இங்கும் நின்று கொண்டு பார்க்கின்றான் என்று முறைத்தவள் இன்று தன்னை பார்க்கவில்லை என்று முகம் சுருங்குகிறாள். அவளின் மனமாற்றத்தை அவளே அறியவில்லை.
ரஹ்மான் அறையினுள் சென்றதும் தான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் ஷஹீராவுக்கு எழுந்தது. வெளியே சென்ற கணவன் வீடு வந்திருக்கிறான் அவனை கவனிப்பதா? வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினரோடு பேசிக்கொண்டு இருக்க வேண்டுமா? அவள் எங்கே பேசினாள் வந்தவர்கள் சொல்வதற்கெல்லாம் புன்னகைத்து வைக்கிறாள்.
என்ன செய்ய வேண்டும் எனும் விதமாக மெதுவாக ஷம்ஷாத்தை ஏறிட அவளோ! ரஹ்மானிடம் ஏதாவது குடிக்க வேண்டுமா? எனக் கேட்டுக்கொண்டிருந்தாள். அதற்கு அவனும் வெளியே அஸ்ரப் இருப்பதாகவும் அவனுக்கும் சேர்த்தே தயாரிக்கும்படி கூறினான்.
ஷம்ஷாத் சமயலறைக்கு சென்று ஹனாவிடம் தேநீர் தயாரிக்க சொல்வது காதில் விழுந்தது. அறையிலிருந்து வெளியே வந்த ரஹ்மான் மீண்டும் விருந்தினர்களுக்கு புன்னகையை வீசியவாறு வெளியே சென்று நண்பர்களோடு கதையடிக்கலானான்.
இங்கே மனைவி என்ற ஒருத்தி குத்துக் கல்லாட்டம் அமர்ந்திருப்பது அவன் கண்களுக்கு தெரியவில்லையா? அல்லது வேண்டுமென்றே அவளை பார்ப்பதை தவிர்க்கிறானா? என்ன நினைக்கிறான்? வரட்டும் அறையில் வைத்து நன்றாக நாலு கேள்வி கேட்க வேண்டும் என்று கருவிக்கொண்டாள்.
ஆனால் ரஹ்மான் வீட்டுக் நுழையும் பொழுதே அவன் பானுவை கண்களால் பருகிக் கொண்டான். விருந்தினர்கள் வந்திருப்பதைக் கண்டதும் ஜெர்க் ஆனவன் புன்னகைத்து விட்டு அறையினுள் நுழைந்து கொண்டு வந்த இரண்டு பைகளையும் மேசையின் மீது வைத்தான்.
“தூரத்தில் இருக்கும் பொழுது நல்லா சைட் அடிக்க முடிஞ்சது. கல்யாணம் ஆனபிறகு சொந்த மனைவியை பார்க்க முடியல ஒவ்வொருத்தரும் குறுகுறுன்னு பாக்குற மாதிரியே இருக்கு” கையை மடித்து நெற்றியில் அடித்துக்கொள்ள வெளியே ஷம்சாத் பேசவும் பதில் சொன்னவன் அறையை விட்டு வெளியேறி நண்பர்களின் குழுவில் ஐக்கியமானான்.
பாஷித்தின் நண்பர்களும், ரஹ்மானின் நண்பர்களும் வெளியே கேரம் விளையாடிக்கொண்டிருக்க, இஷா வரைக்கும் யாராவது வந்து கொண்டே இருந்தனர். அதன் பின் இரவு உணவும் பரிமாறப்பட்டது. பத்து மணிக்குத்தான் நண்பர்கள் விடைபெற்றனர்.
ஆனால் ரஹ்மான் ஒன்பதுமணிக்கெல்லாம் அறையில் இருந்தான். ஷஹீயோடு உணவுண்டவன் அவளுடனே அறைக்குள் நுழைந்துகொண்டான். மனைவி தன்னை முறைப்பது அறியாமல் மேசையிலிருந்த ஒரு பையை எடுத்து அவள் கையில் கொடுத்தவன்
“இதுல உன் புக்ஸ் இருக்கு. ரெண்டு நாள் நோட்ஸ் எழுத முடியலல, ஹிதாயா இத கொடுத்தா… இத முபாரக் கொடுத்தான்” என்று வீட்டிலிருந்து கொண்டு வந்த அவளுடைய புத்தகங்களையும் கொடுக்க கண்களை விரித்து கணவனை ஒரு நொடி பார்த்தாள் ஷஹீ.
உண்மையில் ரஹ்மான் தான் ஹிதாயாவிடம் பானுவுக்கு யாரிடமாவது நோட்ஸ் எடுத்து கொடுக்கும்படி கூறி இருந்தான். அதனால் திருமணமான பின் ஹிதாயா ரஹ்மானுக்கு அழைத்து ஷஹீக்கு கொடுக்க நோட்ஸ் இருக்கு என்றதும் அவன் ஹிதாயாவின் வீட்டுக்கு சென்று அதை வாங்கிக் கொண்டு, ஷஹீயின் வீட்டுக்கும் சென்று முபாரக்கின் உதவியோடு அவளின் புத்தகங்களையும் தேடி எடுத்தவன் மனைவியின் கையில் கொடுத்து, அதை சுருக்கமாக இவ்வாறு சொல்லி முடிக்க,
“எனக்காக இவன் போய் வாங்கி இருக்க மாட்டான் ஹிதாயா கொடுத்தனுப்பி இருப்பா… நாநாதான் போன் பண்ணி சொல்லி இருப்பான்” தானே முடிவு செய்தவள் நோட்ஸ் எழுதணும் என்ற டென்ஷனில் இருக்க,
தொண்டையை கனைத்தவன் மனைவியை அழைத்து அடுத்த பையை கொடுத்தான். அதை திறந்து பார்த்தவளுக்கு மீண்டும் கண்கள் விரிந்தது. அதில் ஒரு ஹேர் டயர் இருந்தது.
காலேஜ் செல்ல முடியை உலர்த்த அவள் படும் கஷ்டம் அவள் மட்டுமே அறிவாள். சிலநேரம் முடியை குட்டையாக வெட்டலாமா என்றும் யோசித்திருக்கிறாள். வெட்டி விட்டால் இப்படி நீண்டு வளராது என்று தோழிகள் சொல்ல அது வேறு மனதுக்கு கவலையை கொடுத்திருக்க, வெட்டவா? வேண்டாமா? என்ற குழப்பமான நிலைமைதான்.
சந்தோசத்தில் மிதந்தவள் “நாநா வாங்கி கொடுத்தனுப்பினானா?” முபாரக்கிடம் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள் “சரி, சரி” என்று தங்கையிடம் மண்டையை ஆட்டுபவன் கடைக்கு சென்றால் எல்லாவற்றையும் மறந்து விடுவான். மஸீஹா குத்திக்காட்டி பேசுவதால் அக்பரிடம் கூட எதுவும் கேட்க மாட்டாள் எல்லாம் முபாரக்கிடம் தான் அந்த நினைப்பில் கேட்டு விட, ஒரு பெருமூச்சு விட்ட ரஹ்மான் பதில் சொல்லாமல் சென்று கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டான்.
“நேற்று இரவு ஈரக் கூந்தலோடு தூங்கும் பொழுதே தீர்மானித்திருந்ததை காலையிலையே போய் வாங்கி இருப்பான். பாலர் பெண்கள் ஹேர் டயர் கொண்டு வருவார்கள். இன்று ஒருநாள் பிரச்சினை இல்லை. நாளைக்குத்தான் தேவை என்று இன்றே நான் ஆசையாசையாக வாங்கி வந்தால் அவள் நாநா வாங்கிக் கொடுத்தான் என்கிறாள். கண்முன்னே நிற்கும் நான் வாங்கி வந்திருப்பேன் என்று எண்ண தோன்றவே இல்லையா?” என்று எண்ணம் தோன்றினாலும் அவள் மேல் கோபம் வரவில்லை மாறாக முபாரக்கின் மேல் பொறாமைதான் வந்தது.
அவன் தான் அவளுக்கு எல்லாமாக இருக்கிறான் முதலில் அவன் இனி இல்லை. தான் தான் எல்லாமே என்று அவள் உணர வேண்டும். சொல்லி சொல்லி புரிய வைக்க இது என்ன வகுப்பில் நடாத்தும் பாடமா? வாழ்க்கை.
என் கணவன்தான் எனக்காக செய்வான். எனக்காக மட்டும் செய்வான் என்று உணர்ந்தால் போதும். அதனாலயே அமைதியாக சென்று தூங்க முயற்சி செய்ய, தலையை தூக்கி மனைவியை பார்க்க, ஷஹீ நோட்ஸ் எழுதுவதில் மும்முரமாக இருந்தாள்.
தூக்கம் வராமல் அந்த பக்கம் இந்த பக்கம் உருண்டவனின் மனதில் மனைவியை பற்றிய சிந்தனைகளே! வெளியே செல்லவும் முடியாததால் முகநூலில் நுழைந்தவன் கொஞ்சம் நேரம் அதில் லயிக்க அரைமணித்தியாலம் கரைந்திருந்தது.
மீண்டும் மனைவியின் புறம் கண்களை திருப்பியவனுக்கு காணக் கிடைத்தது மேசையில் தலை வைத்து தூங்கும் மனைவியையே!
திறந்த புத்தகத்தில் முகத்தை வைத்து ஒரு கை மடியிலும், மறு கை பேனாவை பிடித்தவாறு மேசையிலும் இருக்க, தூங்கிப்போய் இருந்தாள்.
“நல்ல அழகா படிக்கிறா தூங்கு மூஞ்சி” மனதுக்குள் கொஞ்சியவாறே கட்டிலைவிட்டு எழுந்தவன் மனைவியின் அருகில் சென்று கையிலிருந்த பேனாவை மூடி வைத்து அவளை எழுப்பி கட்டிலில் தூங்க சொல்ல அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டாள் ஷஹீ.
“இவ தெரிஞ்சி பண்ணுறாளா? தெரியாம பண்ணுறாளா? வேணும்னே பண்ணுறாளா? ஒன்னும் புரியல?” முணுமுணுத்தவாறே அவளை தட்டி எழுப்ப அவள் எழுந்த பாடில்லை.
ஒருவாறு அவளை அணைத்தவாறு நகர்த்தியவன் கட்டிலில் தூங்க வைத்து போர்வையையும் போர்த்தி விட்டான்.
பார்க்கத்தான் கொழுகொழுனு இருக்கானு பாத்தா வெயிட்டு வேற என்பது கிலோ தாண்டும் போல இருக்கே! இவளை தூக்கி சுமக்க நாளைல இருந்து ஜிம்முக்கெல்லாம் போக வேண்டி இருக்கும் போலயே!” தனக்குள் முணுமுணுத்தவன் புத்தகங்களை அடுக்கலானான்.
என்னுடைய பானு, என்னுடைய பானுனு சொல்லிக்கொண்டால் மட்டும் சரியா? அவளை பற்றி முழுசாக தெரிந்துகொள்ள வேண்டாமா?
அவன் பானுவின் வீக்னஸ்ஸே தூக்கம்தான். தூங்கினால் இடி விழுந்தாலும் எந்திரிக்க மாட்டாள். சின்ன வயதில் ஒரு இடத்தில் தூங்காமல் உருண்டு புரள்வதாலையே பல தலைகாணியை சுற்றிவர அடுக்கி அணைகட்டி, பாதுகாப்பாய் பேகம் அவளை தூங்க வைத்திருக்க, பெரியவளாகியும் பல தலையணைகளோடு தூங்கும் பழக்கம் நீங்கவில்லை.
காலையிலிருந்து அலைச்சலும், சோர்வும் புத்தகத்தை திறந்த உடன் மூளை வேலை நிறுத்தம் செய்து, தன்னை அறியாமல் தூங்கி இருக்க, கணவன் அழைப்பது கூட தெரியாமல் குழந்தையாக மாறி தூக்கத்தில் அவனை தந்தையென கருதி கட்டிக்கொண்டாள்.
சாதார நேரத்தில் சும்மா கையை பிடித்து இழுத்தாலே காற்றாய் மிதந்து வந்து விடுபவள் தூங்கி விட்டால் கல்லாய் மாறிவிட கணவனால் அவளை அசைக்கக் கூட முடியவில்லை.
தூங்கும் மனைவியையே பாத்திருந்த ரஹ்மான் மெதுவாக அவள் முகம் நோக்கி குனிந்தான்.
சுபாஹு தொழுகைக்கான அதான் சொல்லப்பட்டிருந்தது. இரவில் நன்கு தூங்கியதால் ஷஹீக்கு அதிகாலையிலையிலையே விழிப்பு வந்தது. இன்றும் கணவனை கட்டிக்கொண்டுதான் தூங்கிக் கொண்டிருந்தாள்.
நேற்று போல் நடிக்கிறானா? என்று சந்தேகமாக ரஹ்மானை பார்க்கா சீரான சுவாசம் அவனிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. ஒருவர் தூங்கும் பொழுதுதான் அவரின் உண்மையான குணம் முகத்தில் தெரியுமாம். அந்த நொடி அது ஷஹீயின் மனதில் உதிக்க அவன் முகத்தை உற்று நோக்கலானாள்.
உறங்கிக்கொண்டிருந்தவனின் முகமோ அமைதியை தத்தெடுத்திருக்க, இதழோரம் மெல்லிய புன்னகை. “இவன் எப்பொழும் சிரிச்சுக்கிட்டே தான் இருப்பானா?” என்றுதான் எண்ணத் தோன்றியத்து அவன் மனையாளுக்கு.
மெதுவாக அவன் தலை கோதியவள் அவன் நெற்றியில் முத்த மிட எண்ணம் தோன்ற “கண்ணு முழிச்சானா என்ன நினைப்பான்” தன்னை தானே மனதில் திட்டிக்கொண்டவள் தலையிலும் குட்டிக்கொண்டு அவனை விட்டு விலகிய குளியலறைக்குள் புகுந்திருந்தாள்.
காலை கடன்களை முடித்துக்கொண்டு தொழுவதற்காக, வுழு {கை,கால்.முகம் கழுவுதல்} செய்து கொண்டு வந்தவளுக்கு அப்பொழுதான் மேசையிலையே தூங்கியது ஞாபகத்தில் வந்தது.
“குர்ஆனை, படிக்கும் புத்தகத்தை திறந்தே வைத்தால் சைத்தான் ஒன்னுக்குகடித்து விடுவான் என்றும் அதன் பின் ஓதுவதும், படிப்பதும் மனதில் பதியாதென்றும், அதனால் எந்த நன்மையையும் விளையாதென்றும் அன்னை சிறு வயதில்லையே சொல்லி தந்திருக்க, அவள் கண்கள் புத்தகங்களின் மீதுதான் பாய்ந்தது. அவை ஒழுங்காக அடுக்கப்பட்டு, இருக்க வேண்டிய இடத்தில் இருக்க நிச்சயமாக தூக்க கலக்கத்தில் தான் செய்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ணம் தோன்றவே! தூங்கிக்கொண்டிருக்கும் ரஹ்மானின் மேல் பார்வையை வீசினாள் ஷஹீ.
“இவன் அடுக்கி வைத்திருப்பானா? இருக்காதே! ஆமா நான் மேசையிலையே தூங்கி இருப்பேனே! நா எப்படி கட்டிலுக்கு போனேன்” அதிர்ச்சியாக கணவனை பார்த்தவள், தான் அணிந்திருந்த நகைகளும் கட்டிலின் அருகில் உள்ள மேசையின் மீது இருக்கவே! “இவன் என்ன தூக்கிட்டு போய், படுக்க வச்சி, எல்லா நகையையும் கழட்டி இருக்கான். டிரஸ்” தன்னை பார்த்தவளுக்கு அதே சுடிதாரில் இருக்க “சரக்கடிச்சு மட்டையான மாதிரி அப்படி என்ன தூக்கமோ! என்ன பண்ணி இருந்தாலும் எதுவுமே தெரிந்திருக்காது” தன்னையே திட்டிக்கொண்டாள்.
சுபாஹு தொழுது விட்டே அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு ரஸீனா குர்ஆன் ஓதும் சத்தம் கேட்டது. வாசலில் யாருமில்லை. தானும் ஒரு யாஸீனை எடுத்துக்கொண்டு சோபாவில் சென்று அமர்ந்து கொண்டவள் ஓதலானாள்.
நவ்பர் பாயும், பாஷித்தும், அய்னாவின் குடும்பத்தில் உள்ள ஆண்களும் பள்ளிவாசலுக்கு சென்றிருப்பார்கள் போலும், ரஹ்மான் புது மாப்பிளை என்று அழைத்திருக்கவில்லை. அய்நா, மற்றும் ஹனாவின் குரல் சமயலறையில் கேட்க, தொழுது விட்டு வந்த ஹாஜரா ஷஹீயை கண்டு புன்னகைத்தவாறு சமயலறைக்குள் நுழைந்தாள்.
வாசலில் நான்கு பேர் அமரக்கூடிய சோபாவில்தான் அமர்ந்திருந்தாள் ஷஹீ. இரண்டு கைகளிலும் இரண்டு டீ மைக்கை சுமந்து வந்த ஹாஜரா ஒன்றை ஷஹீக்கு கொடுத்து விட்டு அவளுக்கு எதிர் புறம் இருந்த தனி ஷோபாவில் அமர்ந்து கொண்டாள்.
காலை உணவுக்கு இடியாப்பமும், பாலானமும், தேங்காய் சாம்பலும், இறைச்சி கறியோடு, முட்டையும் அவித்து வைக்கலாம் என்று பேசியவாறு அய்னாவும், ரஸீனாவும் சமையலறை பக்கமாக உள்ள படுக்கையறையிலிருந்து வர ஹனாவும் அவர்கள் கையில் டீயை கொடுத்தவள் தானும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.
சூரியன் இன்னும் விழிக்கவில்லை. கண்களை திறந்த ரஹ்மான் அறையிருட்டிலும் மனைவியை காணாது. கைகளால் துளாவியவன் அவள் கிடைக்காமல் போகவே, தூக்கம் கலையாத நிலையில் எழுந்து வாசலுக்கு வர சோபாவில் அன்னை அமர்ந்திருப்பது மங்கலாக தெரிய, நேராக சென்றவன் அவள் மடியில் படுத்துக்கொண்டு அவள் கையை தேடிப் பிடித்து கன்னத்தில் வைத்துக்கொண்டவன் தூக்கத்தை தொடரலானான்.
ரஹ்மான் சட்டென்று வந்து தன் மடியில் படுத்துக்கொள்வான் என்று எதிர்பார்க்காத ஷஹீயோ திகைத்து நிற்க, அவளுக்கு எதிர்புறம் அமர்ந்திருந்த ஹனாவும், ஹாஜராவும் சிரிக்கலாயினர்.
வாசலுக்கு வந்து கொண்டிருந்த அய்நா மற்றும், ரஸீனாவின் கண்களிலும் இந்த காட்ச்சி பட வாய் மூடி சிரித்தவர்கள் அவர்களை தாண்டிச் சென்று வராந்தாவில் அமர்ந்து கொண்டு டீயை பருக்கலாயினர்.
ஷஹீக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தள்ளி விடலாமா என்று ஒரு நொடி நினைத்தவள் அவ்வாறு செய்தால் ரஹ்மானின் வீட்டார் என்ன நினைப்பார்கள் என்று தவித்தவள் அவன் செய்கையில் இளம்பெண்களின் முன் கூனிக்குறுகி நின்றாள். ஏனோ அவளுக்கு அவன் வேண்டுமென்றே செய்வதாக தோன்ற கணவனை மனதால் வசைபாடலானாள்.
“காலையிலையே நல்ல ரோமன்ஸ் ஸீன்” ஹாஜரா கிண்டலாக சொல்ல
“சினிமால கூட பாத்ததில்லை பா…” ஹனாவும் சேர்ந்துகொள்ள ஷஹீக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
ஷஹீக்கு எங்கே தெரியும் இது அன்றாடம் காலையில் நடக்கும் கூத்து என்று. பள்ளிக்கு சென்று வந்த உடன் அன்னையின் மடியில் தலை வைத்து சிறுது நேரம் செல்லம் கொஞ்சவில்லையாயின் ரஹ்மானுக்கு அந்த நாளே தொடங்காது. இன்று தூக்க கலக்கத்தில் ஆள் மாறாட்டம் தான் நடந்திருக்கிறது. அவன் அவளின் கையை கன்னத்தில் வைத்துக்கொண்டு நிம்மதியாக தூங்குவதை கண்ட உடனையே வீட்டாருக்கு புரிந்து விட்டது. புரிந்து கொள்ள வேண்டியவள் இன்னும் ரஹ்மானை அறிந்து கொள்ள வில்லை என்பதுதான் உண்மை.
ஹனாவும், ஹஜாராவும் கேலி செய்து நாநாவின் தூக்கம் கலையுமென்று மெதுவாக சிரிக்க, அவர்களை அதட்டி அய்நா இருவரையும் சமயலறைக்கு போகும்படி உத்தர விட்டாள். சிரித்தவாறே இருவரும் ஷஹீ அருந்திய டீ மக்கையும் பெற்றுக்கொண்டு உள்ளே செல்ல பள்ளிக்கு சென்ற ஆண்களும் வீடு வந்தனர்.
அந்த பக்கம் பார்க்காம போங்க என்று ரஸீனா சைகையால் சொல்ல புரிந்து கொண்ட விதமாக நவ்பர் பாயும், அய்னாவின் கணவரும் அமைதியாக உள்ளே சென்றிருக்க, பாஷித்தும் ஹாஜராவின், தம்பியும் வேண்டுமென்றே இவர்களை பார்த்து சிரித்தவாறே அறையினுள் நுழைந்தனர்.
ஷஹீக்கு பூமி நழுவி தான் உள்ளே சென்று விட மாட்டோமா என்றிருந்தது. இரண்டு இளம் பெண்கள் அமர்ந்து கொண்டிருப்பதையும் கண்டு கொள்ளாமல் நடு வாசலில் இவ்வாறு அநாகரிகமாக நடுந்து கொள்பவனை என்னவென்று சொல்வது.
பாஷித் வேறு நக்கலாக சிரித்துக்கொண்டு சென்றான். ஹாஜராவின் தம்பி ஆதில் சின்ன பையன் அவன் வேறு யாரிடமாவது போய் சொல்லி விட்டால். மானமே போய் விடும். மனைவியின் தவிப்பையும், மனக்குமுறலையும் அறியாமல் அவள் மடியில் நிம்மதியாக தலை வைத்து உறங்கிக்கொண்டிருந்தான் ரஹ்மான்.
சூரியனும் கண்விழித்து கதிர்களை நன்றாகவே! பரப்பி விட்டிருந்தான். ரஹ்மான் எழுந்து கொள்வது போல் தெரியவில்லை. அவளும் யாஸீனை எத்தனை முறை தான் ஓதுவது? தட்டி எழுப்பலாம் என்று பார்த்தால் அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். கால் வேறு மரத்து, வலிக்க ஆரம்பித்திருந்தது.
வீட்டார்களோ! அங்கும் இங்கும் நடந்தார்களே! ஒழிய இவர்களை கண்டு கொண்டதாக தெரியவில்லை. . ரஹ்மானை எழுப்பு என்றோ அல்லது வேறெதாவதோ! யாரும் ஒன்றும் சொல்வதுமில்லை. கணவனை தட்டி எழுப்பலாமா என்றால் நடு வாசலில் அமர்ந்து கொண்டு என்ன சொல்லி அழைப்பது? ஷஹீக்கு எல்லாமே குழப்பம்தான்.
தண்ணீராவது இருந்தால் முகத்தில் தெளிக்கலாம். பல சிந்தனைகள் மனதில் ஓட, நீண்ட நேரம் ஒரே மாதிரியாக அமர்ந்திருந்ததில் முதுகு கூட வலிப்பது போல் ஒரு பிரம்மை. விட்டால் அழுத்துடுவாள் போல் இருந்தவளின் மனவேதனை ரஹ்மானை எட்டியதோ! எழுந்தமர்ந்தவன் கண்களை திறவாமலையே! சோம்பல் முறிக்க ஷஹீ அறைக்குள் ஓடி இருந்தாள்.
ஷஹீ ஓடுவதைக் கண்ட பின்னால் தான் தான் இவ்வளவு நேரமும் அவள் மடியில் தலை வைத்து உறங்கியதே ரஹ்மானுக்கு புரிந்தது.
“அல்லாஹ்ட காவல் பிரீ ஷோவா எல்லாரும் பாக்குறமாதிரி தூங்கி இருக்கேன் இன்னைக்கி என்ன பாக்குறவங்க எல்லாரும் சிரிக்க போறாங்க. பானு குட்டி என்ன சொல்ல போறாளோ!” தனக்குள் புலம்பியவன் அவள் பின்னாலையே அறைக்குள் நுழைந்திருந்தான்.
ரஹ்மான் அறைக்குள் நுழைய ஷஹீ கட்டில் விரிப்பை சரி செய்து கொண்டிருந்தாள். ரஹ்மானும் அவளை சமாதானப்படுத்தும் விதமாக மறுபுறமாக வந்து அவளை பார்த்தவாறே விரிப்பை சரி செய்ய அவனை கண்டு கொள்ளாது விரிப்பை சரி செய்தவள், ஜன்னல்களை திறந்து விட்டு நோட்ஸையாவது எழுதலாம் என்று மேசையின் அருகில் சென்றிருந்தாள்.
அவள் அருகில் வந்த ரஹ்மான் “சாரி பானு உம்மானு நெனச்சி தான் உன் மடில படுத்துட்டேன். வல்லாஹி நீனு தெரியல, தெரிஞ்சிருந்தா தூங்கி இருக்க மாட்டேன். சாரி” அவள் முகத்தை பார்த்தவாறே கூற
உள்ளுக்குள் கனன்றுக்கொண்டிருந்தவளோ! அவனை ஏறெடுத்தும் பாராது தன் பாட்டுக்கு புத்தங்களை விரித்து வைத்து எழுதலாம் என்று பார்க்க அத்தனை நோட்ஸ்ஸையும் நேற்றிரவே ரஹ்மான் கண்விழித்து அவளுக்காக எழுதி வைத்திருந்தான்.
அவனை பொறுத்தவரையில் அவன் அவளுக்கு செய்தது மா பெரும் உதவி. ஆனால் ஷஹீக்கு அது அவ்வாறில்லை போலும்
“என்ன பண்ணி வச்சிருக்கிறீங்க?” என்றவாறே அவன் எழுதி வைத்ததை காண்பித்தவள் அவனை நன்றாக முறைக்க
“நான் கேட்டேனா? எழுதி கொடுங்கன்னு நான் கேட்டேனா? நானே வாசிச்சு, வாசிச்சு எழுதினா தான் என் மூளைல பதியும். நீங்க எழுதினா என் மூளைல எப்படி பதியும்? அது மட்டுமில்ல நான் எழுதினது வாசிக்கும் பொழுதுதான் நான் படிச்சா மாதிரியே எனக்கு ஒரு பீல் இருக்கும் நீங்க எழுதினது படிச்சா, படிச்சது போலவே இருக்காது. அதிகப்பிரசங்கித்தனமா பண்ணாதீங்க” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பேசியவள்
“அப்படியென்ன உங்களுக்கு தாய்க்கும், தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாம மடில வந்து படுக்குறது? என்ன பழிவாங்கதான் இதெல்லாம் பண்ணுறதா இருந்தா அசிங்கப்படுறது நான் மட்டுமல்ல நீங்களும் தான்” என்றவள் கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டு வாய் மூடி அழ ஆரம்பித்தாள்.
ஒரு நொடி திகைத்து நின்று விட்டான் ரஹ்மான். எழுதி வைத்திருந்தால் காலையில் படிப்பதற்காக இலவுவாக இருக்கும் என்று எண்ணியே அவன் பானுவுக்காக கண்விழித்து எழுதினான்.
அவன் செய்த உதவிக்கு கட்டி அணைப்பாள், முத்தம் கொடுப்பாள் என்றெல்லாம் அவன் நிகைக்கவில்லை. ஒரு சிறு முக மலர்ச்சியோடு வெட்கப்பட்டுக்கொண்டே நன்றி சொல்வாள் என்று மட்டும் தான் எதிர்பார்த்தான். கண்விழித்து எழுதியதில் தூக்கக்கலக்கத்தில் தான் அன்னையென்று நினைத்து உன் மடியில் படுத்துவிட்டேன் என்று சொல்லியும் புரிந்து கொள்ளாமல் இவ்வாறு பேசி விட்டதுமில்லாது அழுது கொண்டிருப்பவளை தேற்ற வழியில்லாது சிலையாய் நின்று விட்டான் ரஹ்மான்.